நண்பர்களுக்கு வணக்கம்! எனது கவிதை நூல்களின் சிறப்பு விலைத் திட்டத்துக்கு இன்றே இறுதி நாள். இதுவரை நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆதரவு காட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! என்றாலும் இதைத் தாண்டியும் உங்கள் பேராதரவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிக்கொள்வதன் மூலமும், வாங்கிப் பரிசளிப்பதன் மூலமும், இந்த சிறப்பு விலைத் திட்டம் குறித்துப் பிறருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டலாம். இன்றைய தினத்துக்குப் பிறகும் இந்த நூல்களைக் கணிசமான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி எப்போதும் மேற்கண்ட என் கவிதைத் தொகுப்புகள் மூன்றும் சேர்த்து 35% சிறப்புவிலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு உட்பட). ஆதரவு தாரீர்!
Thursday, February 29, 2024
Wednesday, February 28, 2024
ஒரு ஸ்கிரீன்ஷாட் போதிமரத்தின் நிழலில்...
ஒரு ஸ்க்ரீன்ஷாட் விடியல்
பக்கத்துக் கடையில்
சூடு அதிலிருந்து
பிரிந்தது
அதிகாலையுடன்
Tuesday, February 27, 2024
இனிமேலும் இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தாதீர்கள்!
கடந்த ஆண்டு திருவாரூரிலோ தஞ்சையிலோ நடந்த இலக்கிய விழாவில் நண்பர் ஒருவர் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வாட்ஸப் செய்தி அனுப்பினேன். அவருக்கு ஏதோ குறுகுறுத்திருக்கும் போலிருக்கிறது, ஏனெனில் அவர் எந்த மெசேஜும் எனக்கு அனுப்பாத, தொடர்பில் இல்லாத நிலையில் போய்விட்டவர், உடனே என்னை அழைத்து “ஆசை நீங்கள் சென்னை இலக்கியத் திருவிழாவில் இருக்கிறீர்கள்” என்றார். ஓஹோ முடிவெடுக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். சென்னை இலக்கியத் திருவிழாவும் வந்து போனது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் வருந்தவில்லை. நான் அதை மறந்துவிட்டேன்.
இந்த ஆண்டு திருவாரூர் இலக்கியத் திருவிழா, காவிரி இலக்கியத் திருவிழா முடிந்தபோது என் ஊர்க்காரர்கள், நண்பர்கள் பலரும் வருத்தப்பட்டார்கள்.
பேசுவதெல்லாம் பெருமாளே! - ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் பதிகம்
1.
உலகெலாம் ஓரோசை
உலகின் பெயராய் அமைந்த
பேரோசை
மனதுக்குள் குமைந்து
வாய்க்குள் சுழன்று
வெளிப்பட மறுக்கின்றது
இறுக ஒட்டிக்கொண்ட வாயைத்
துளைக்கும் வண்டே
வருக
குழலோசை இவ்வுடல்
செய்க
*
Monday, February 26, 2024
4 கவிதை நூல்கள் ஒரு மாதத்துக்குள்
நண்பர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி. இந்த மாதத்தின் நான்காவது கவிதைத் தொகுப்பைத் தற்போது எழுதி முடித்திருக்கிறேன். 'யோனிமேட்டின் பாடல்கள்' என்பது இந்தத் தொகுப்பின் தலைப்பு. இத்தலைப்பு பின்னால் மாறலாம்.
காந்தி கவிதைகள் (62 கவிதைகள்), சக்தி - காளி கவிதைகள் (230), தில்லைக் காளி பதிகங்கள் (56), யோனிமேட்டின் பாடல்கள் (53), பிற கவிதைகள் (25+) என்று இந்த மாதம் இதுவரை மட்டும் 425 கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். ஒரே மாதத்தில் நான்கு கவிதைத் தொகுப்புகளுக்கான கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. தொடர்ந்து ஆதரவும் அன்பும் தெரிவித்து வரும் நண்பர்களுக்கு அன்பும் நன்றி!
Sunday, February 25, 2024
யோனிமேட்டின் காதலன் - 12 கவிதைகள்
யோனி மேடுகளின்
இணையற்ற காதலன் நான்
இந்த நற்காலையில்
என் முன்னே வருகிறாள்
ஒரு பெண்
ஒரு இனிய ஏந்தலாய்
யோனி மேடு சுமந்து
ஓடுதளமாகிறது
என் மனம்
ஏறிப் பறக்கிறது
அவ்விமானம்
விமானத்தின்
கால்களைப் பிடித்துத் தொங்குபவனுக்கு
விமானத்தின் அடிவயிறே வானம்
வானமே மழை பொழிக
வாய் திறந்து காத்திருக்கிறேன்
வானமுது நானருந்தியபின்
கைப்பற்றுதல்
தேவையில்லை எனக்கு
*
2.
யோனி மேடு
என்முன்னே நடந்துவருகிறது
கைகுவித்த பக்தன் நோக்கி
கர்ப்பகிரகமே
நடந்துவருதற்போன்று
அதுவரை கைகுவித்த பக்தன்
கண்விரித்து
அடிவயிற்றின்
தீபமாகிறான்
*
Saturday, February 24, 2024
புலிக்குப் பெயர் வைக்கும் கலை
Friday, February 23, 2024
நிலைமத்தின் பாடல்கள்
மோதிய வேகத்தில்
முன் கண்ணாடியை
உடைத்துக்கொண்டு
வெளியே வந்து
விழுந்து கிடக்கிறார்
லாரி ஓட்டுநர்
இப்படித்தான்
எதையாவது
எல்லை தாண்டித்
தொடர்ந்து
போக வைத்துக்கொண்டிருக்கிறது
நிலைமம்
ஒரு தொடரோட்டம் போல
அவரது
பிள்ளைகளுக்கும்
பெண்டாட்டிக்கும்
நிலைமத்தின் மேல்
பழிபோடத் தெரியாது
விபத்தைப் பார்த்த நான்
நேரடியாகப் பழிபோடுவேன்
உலகத்தின்
எல்லா விபத்துகளுக்கும்
காரணம்
ஆனால்
விபத்து நடந்த
இடத்திலிருந்து
நழுவிச் செல்லும்
முதல் ஆள்
நிலைமத்தின்
இந்தப் பொறுப்பற்றதனத்தை
யாராவது ஒருவர்
தட்டிக்கேட்கத்தானே வேண்டும்
*
2. நிலைமத்தின் மறுமொழி
**
தொடங்கும் போதே
உருவாகிவிடுகிறது
போய்ச்சேரும் வரையிலான
உன் வழி
இருக்கும் வரை
இருக்கிறது
நீ தொடர்ந்து
இருப்பதற்கான
உன் இடம்
நீயே குறுக்கீடாய் மாறிவிட
குறுக்கீடு
உனையெட்டிப்
பார்த்துவிட
நிகழ்கிறது
ஆங்கோர் பெருவிபத்து
அண்டம் குலைய
ஆகாசம் சிதற
இரண்டு தனி வழி
ஒன்றையொன்று
எட்டிப்பார்க்கும்
ஆவலில்
ஊடுருவிக்கொண்டால்
உயிர்போனதென்றால்
விழுகிறது
என் மேல் பழி
*
3. நிலைகுத்திய விழிகள்
**
விபத்தில் உயிரிழந்த
ஓட்டுநர் குடும்பத்தைப்
பார்க்கப் போயிருந்தேன்
இன்று
நிலைகுத்திப் போயிருந்தன
ஓட்டுநர் மனைவியின்
விழிகள்
ஓடியாடிய
குழந்தைகள் விழிகளும்
அப்படியே
அவற்றிலிருந்து
ஒரு காட்சி
நிரந்தரமாய்
நீக்கப்பட்டுவிட்டது
நீக்கப்பட்டு
நிலைகுத்தியதன் பெயரும்
நிலைமமே
என்று சொன்னால்
உன் கருமாந்திரம்
எனக்குத் தேவையே இல்லை
*
4. உண்ட களைப்பு
**
அசைந்தாலும்
அசையாமல் இருந்தாலும்
ஆடாமல் அசையாமல்
உயிரை
அசைபோட்டுக்கொண்டிருப்பது
நிலைமம்
முழுவதும்
உண்ட களைப்பில்
அது உறங்கிக் கிடக்கும்போதே
கண்ணுக்குள் வந்து
நிலைகுத்திப் போகும்
*
**
என்றுமுள்ள
நிலைமத்தைத் தேடி
எல்லா உயிர்களும்
உடலிழுத்துச் செல்கின்றன
கண்டடையும்போது
உடலைத் தவிக்க விட்டுவிட்டு
உயிர் போகின்றது
நன்றிகெட்ட
உயிரை
ஏதும் செய்ய முடியாத
வேதனையில்
உடல் இங்கேயே கிடந்து
அழுகிச் சாகின்றது
*
6. நிலைமத்தின் வீணை
**
நிலைமத்தை
முடுக்கேற்றியது யாரோ
நிலைமத்தை
உசுப்பேற்றியது யாரோ
உசுப்பேறித்
தலைதெறிக்க
மோதிச் சிதறும்போது
அதை வீணையாய்
மாற்றி மீட்டியது யாரோ
அதைக் கேட்கும்
செவிகளை
எங்கும்
இறைத்தது யாரோ
பின் நாதம் முடிந்ததும்
அதையெல்லாம்
கூட்டிப்பெருக்கி
ஒன்றுமற்ற
குப்பைக் கூடையில்
போடுவதும் யாரோ
*
7. பெருநிலைமம்
**
சிறுநிலைமமெல்லாம்
ஆடை அணிந்திருக்கிறது
ஓட்டை அணிந்திருக்கிறது
கூட்டை அணிந்திருக்கிறது
தோலை அணிந்திருக்கிறது
மயிர்கள் அணிந்திருக்கிறது
பெருநிலைமம்
கண்டதும்
மோதித் துகிலுரிந்து
ஒன்றாய்க் கலக்கிறது
போன உயிர்
கவலையில்லை
இருக்கும் மயிர்
வலிக்கின்றது
*
8. நிலையாமையின் தலைவிதி
நிலையாய் இருந்தால்
நிலைமம்
நிலையாய் சென்றால்
நிலைமம்
நிலையாமைக்கும்
இவ்விதி என்பதால்
நிலையற்ற
வாழ்வதற்கு
முடுக்கும் கணம்
விழிக்கும்
விழிப்பில் நிலைத்தால்
இறக்கும்
Thursday, February 22, 2024
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
இன்று கஸ்தூர்பா காந்தியின் 80வது நினைவுநாள். இந்த நாளை முன்னிட்டு 'சர்வோதயம் மலர்கிறது' இதழில் என்னுடைய 'பாவென்று அழையுங்களேன் பாபுஜி' கவிதை வெளியாகியிருக்கிறது. இக்கவிதையை வெளியிட்ட காந்தியத் தம்பதியினர் பிரேமா அண்ணாமலை அவர்களுக்கும், அண்ணாமலை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
கவிதை
**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
**
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
- ஆசை
கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:
Wednesday, February 21, 2024
குங்கும அந்தாதி
1.
Tuesday, February 20, 2024
தில்லைக் காளி பதிகம்! நவீனத் தமிழ் கவிதையில் பதிக முயற்சி!
கடந்த ஞாயிறு (18-02-24) தில்லைக் காளியைச் சென்று பார்த்தேன். அங்கே அரை மணிநேரத்தில் பதிகம் எழுதிவிட்டேன் (பத்துப் பாடல்கள்). தில்லைக் காளி பதிகம்! நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியில் என்றாலும் அவர்களுக்கு தூரத்தில் கூட நாம் நிற்க முடியாது. ஆயினும் அவர்களுக்கும் நமக்கும் பொதுவாய்த் தமிழ் இருக்கிறாள். அவளின் தன்னம்பிக்கைதான் இம்முயற்சிக்கும் காரணம். அநேகமாக நவீனத் தமிழ் இலக்கியத்தில் திருத்தலம் சென்று பதிகம் இயற்றுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடர்ந்து எல்லா மதத் திருத்தலங்களிலும் பதிகம் பாடவிருக்கிறேன். சர்வமதப் பதிகங்கள் என்பதால் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்றாக இந்த முயற்சி இருக்கும்!