Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

Thursday, September 16, 2021

9-ம் ஆண்டில் ‘இந்து தமிழ் திசை’யுடன் நானும்...

ஆசை

'இந்து தமிழ் திசை’ நாளிதழில் இன்று 9-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த 8 ஆண்டுகால பயணத்தில் ’இந்து தமிழ் திசை’யின் முதல் நாளிலிருந்தே அதனுடன் நான் இருந்துவருகிறேன். இந்தப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. அகராதி, பதிப்புத் துறை போன்றவற்றில் பணியாற்றிய எனக்குப் பத்திரிகை அனுபவம் ஏதும் கிடையாது. எனினும் என் மீது நம்பிக்கை கொண்டு ஆசிரியர் அசோகன் அவர்களும் நடுப்பக்கத்தின் முன்னாள் ஆசிரியர் சமஸும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை விதவிதமான அனுபவங்களுடன் இந்தப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவனும் முதல் தலைமுறைப்  பட்டதாரியுமான எனக்கு ‘தி இந்து’ குழுமத்தில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். கனவு காண்பதற்கும் அதை நிறைவேற்றிக்கொள்வதற்கும் எனக்கும் உரிமை இருக்கிறது என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் இந்த வாய்ப்பு. எனது இந்த வாய்ப்பை நான் முடிந்தவரை ஒரு சமூகக்  கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும். இது எனது கடமை என்றே நினைக்கிறேன். நான் எனது ஊட்டச்சத்தை எங்கே பெற்றேனோ, பெற்றுக்கொண்டிருக்கின்றேனோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது முக்கியம் அல்லவா! இது தவிர, காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, பாரதியார், வ.உ.சி., உள்ளிட்ட ஏராளமான தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் அவர்களை ஒரு பக்க அளவிலோ இரண்டு பக்கங்கள் அளவிலோ சிறப்பித்துவருகிறோம். அதே அளவுக்குத் தலைசிறந்த எழுத்தாளர்களின் பிறந்தநாள், நினைவுநாள், அல்லது அவர்களின் மரணத்தின்போது அவர்களைச் சிறப்பித்துவருகிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தி கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், கீரனூர் ஜாகீர்ராஜா, தமயந்தி, சயந்தன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்கள், அறிஞர்களுக்கு ‘தமிழ் திரு’ விருதை ‘இந்து தமிழ் திசை’ வழங்கியிருக்கிறது. அதிலும் முக்கியப் பங்குவகித்தமை குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி! 

‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) உள்ளிட்ட நாளிதழ்களிலிருந்து மூத்த சகா சாரி அவர்களும் நானும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மனமகிழ்வு! இது ஒரு வகையில் உலகக் காற்று மேலதிகமாக என் சிந்தனையில் படுவதற்கான பயிற்சியாகவும் அமைந்தது. காந்தி, நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றோரின் எழுத்துகளையும் உரைகளையும் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோஜ் ஜிஜெக், ராமச்சந்திர குஹா என்று பல உலக எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகளைச் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு! இதன் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் 2017-ல் ஜனவரி 30 தொடங்கி தினமும் ஒரு அத்தியாயம் என்று ‘என்றும் காந்தி’ தொடரை எழுதும் வாய்ப்பை இணையதள ஆசிரியர் திரு பாரதி தமிழன் வழங்கினார். காந்தி 150-ம் ஆண்டை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்தில் ‘காந்தியைப் பேசுதல்’ என்ற தொடரை ஓராண்டு எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.  இறுதியில் இரண்டு தொடர்களும் ஒன்றிணைக்கப்பட்டு காந்தி 150-ம் ஆண்டிலேயே ‘என்றும் காந்தி’ என்ற நூலாக வெளியிடப்பட்டது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் உலகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்போடு ’மொழியின் பெயர் பெண்’ என்று தொடரை எழுத அந்த இணைப்பிதழின் பொறுப்பாசிரியர் சகோதரி பிருந்தா ஒரு வாய்ப்பை வழங்கினார். 17 அத்தியாயங்கள் எழுதினேன். இடையில் சிறிது காலம் ‘இந்து’ குழுமத்திலிருந்து வெளியாகும் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ தே ஜிங்’ பற்றி ‘தாவோ-பாதை புதிது’ என்ற தொடரும் காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ என்ற தொடரும் எழுத வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞர் பற்றி உருவாக்கிய ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல், அறிஞர் அண்ணா பற்றி உருவாக்கிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பெருநூல் ஆகியவற்றில் நானும் இடம்பெற்றதுதான். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தபோதுதான் அவரைப் பற்றி இளம் வயதிலிருந்து மேம்போக்காக நானும் பலரும் அறிந்துவைத்திருக்கிறோம் என்று தெரிந்தது. அண்ணா என்ற ஆளுமையை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள எனக்குக்  கிடைத்த மகத்தான வாய்ப்பு அது!

மதச்சார்பின்மை, மனிதநேயம், ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா என்ற முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களைக் கூட இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். அவருக்குப் பெரும் நன்றி! 

‘இந்து தமிழ் திசை’யுடனான பயணம் இன்னும் எனக்கு நிறைய கற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அதனுடன் இணைந்து சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்திருக்கும் ஆசிரியர் அசோகன், சமஸ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி! எனது நடுப்பக்க சகாக்கள், இணைப்பிதழ், செய்திப்பிரிவு, இணையதளம், காமதேனு போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் சகாக்களுக்கு நன்றியும் அன்பும்! 

எல்லோருக்குமான மந்திரத் தாயத்து ஒன்றை காந்தி அளித்திருக்கிறார்: "நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவை பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.''

இதழியலிலும் இதை நான் பின்பற்ற வேண்டும் என்று உளமார ஆசைப்படுகிறேன்.

Friday, August 20, 2021

விமானங்களிலிருந்து விழாத கானாங்கோழிகள்

Photo: Jerry Ting


காலிமனையில்
முட்செடிகளின் சிறுவனம்
அதன் விதானத்தில்
எப்போதும் இரண்டு கானாங்கோழிகள்
குழந்தைக்குச் சோறூட்ட
வேடிக்கை

நேற்று அழிக்கப்பட்டது
அவ்வனம்

இன்று அருகிலுள்ள வீட்டின்
வாசலைக் கடந்து
நடந்து சென்றன
அந்தக் கானாங்கோழிகள்
வேறெங்கோ ஒரு சிறுவனம்
விடுத்த அழைப்பின் பாதையில்
அழைத்திருக்கும் என்ற
நம்பிக்கையின் பாதையில்

பதறுவதற்கு ஒன்றுமில்லை
தப்பியோடும்
கானாங்கோழிகள்
விமானங்களில் தொற்றிக்கொள்வதில்லை
விமானங்களிலிருந்து கொத்துக்கொத்தாக
விழுந்து மடிவதில்லை

ஏனெனில்
நடப்பதையே பெரிதும் விரும்பினாலும்
அவற்றுக்குப்
பறக்கவும் தெரியும்

பறக்கத் தெரியாத
கானாங்கோழிகளும் இருக்கின்றன
அவை ஏன்
தரையை விடுத்து
வானைத் தேர்ந்தெடுக்கின்றன
என்பதில் வாழ்தலின்
எந்த சூட்சமம்
அடங்கியிருக்கிறது

ஈர்ப்பு விசையின்
அவலம்தானா
வாழ்க்கை

எங்கிருந்தோ நம்பிக்கையின் வாசனையைக்
காற்றில் மிதக்கவிடும்
அந்தச் சிறுவனம்
தன் பாதையை
வானத்தில் வைத்தது ஏன்
என்ற கேள்வி
நிச்சயமின்மையிலிருந்து
நிச்சயமின்மை நோக்கிப்
போகும் விமானமாகப்
பறந்துகொண்டிருக்கிறது

 

Thursday, August 6, 2020

ஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை


ஆசை 

மனித குல வரலாற்றில், மனிதர்களின் படைப்பு சக்தியும் அழிவு சக்தியும் ஒருசேர புதிய உச்சத்தைத் தொட்ட நாள் ஆகஸ்ட் 6, 1945. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடும் சம்பவம் அது. அதன் விளைவுகள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன.  

இரண்டாம் உலகப் போர் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணம் அது. ஜப்பான் போரில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எண்ணிய சாதாரண குடிமக்களில் ஒருவர் சுடோமு யமகுச்சி. இன்றைக்கு உயிரோடிருந்தால் அவருக்கு 104 வயது இருக்கும். 1945-ல் அவருக்கு 29 வயது. அவரது குடும்பமும் அவர் வேலை பார்த்த நிறுவனமும் ஜப்பானின் நாகசாகி நகரத்தில்தான் இருந்தன. ஆனால், 1945-ல் மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். 

ரத்த சாட்சியம் 

ஆகஸ்ட் 6 அன்று காலையில் ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதற்காக ரயில் நிலையத்துக்குத் தனது சகாக்களுடன் சென்றவர் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்திருக்கிறது. அதை எடுப்பதற்காகத் திரும்பிவந்தபோதுதான் வானை அண்ணாந்து பார்த்திருக்கிறார். ஒரு விமானமும் இரண்டு பாராசூட்டுகளும் தென்பட்டிருக்கின்றன. சற்று நேரத்தில் வானத்தில் பெரிதாக ஏதோ ஒன்று அதுவரை யமகுச்சி கண்டிராத பிரகாசத்துடன் வெடித்திருக்கிறது. யமகுச்சி தூக்கிவீசப்பட்டார். எங்கு பார்த்தாலும் தீ. எங்கெங்கும் மரண ஓலம். அவரது செவிப்பறை, கண்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது; உடலில் கதிரியக்கத்தால் காயம் ஏற்பட்டது.  

குண்டுவெடித்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்ததால் யமகுச்சி உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படவில்லை. பேரழிவுக்கு நடுவே அவருக்குப் புகலிடம் கிடைத்தது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் நாகசாகிக்கு சென்றார் யமகுச்சி. உடலில் காயம் இருந்தாலும் ஆகஸ்ட் 9 அன்று பணிக்குத் திரும்பினார். அன்றைக்கு நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பிலும் யமகுச்சி உயிர் தப்பினார். அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் ஏனைய 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இல்லை. அதன் பிறகு நெடிய காலம் ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் நினைவாக இருந்த யமகுச்சி 2010-ல் தனது 93 வயதில் காலமானார். அவரை இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்தது. ஒரு கொடூர வரலாற்றுக்கு ரத்த சாட்சியமாக இருந்த அந்த மனிதர் வாழ்நாள் நெடுக அணு ஆயுதங்களின் கொடுமையையும் பேரபாயத்தையும் பேசிக்கொண்டேயிருந்தார்.  

முன் வரலாறு 
1939-ல் உலகப் போர் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் செயல்பாடுகளெல்லாம் உலக அமைதியை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலம் அது. இதற்கு முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைனின் கோட்பாடு விளக்கியிருந்தது; இயற்பியலாளர் லியோ ஸில்லார்ட் அணுக்கரு சங்கிலித் தொடர் நிகழ்வை 1933-ல் கண்டுபிடித்திருந்தார். 1930-களின் இறுதியில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உலகையே அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்தத் திசையில் ஜெர்மனியை முந்துவது அவசியம் என்று கருதி ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனும் லியோ ஸில்லார்டும் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார்கள். அதுதான் அணுகுண்டு திட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி.  

முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில் 1942-ல் அணுகுண்டு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற ஆரம்பித்தன. அதனால், இதற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற பெயர் வந்து சேர்ந்தது. 1945-ல் அமெரிக்கா வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தும்விட்டது. தயாரித்த அணுகுண்டை 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பரிசோதித்தார்கள்.  

இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் பிரதானமாக இருந்த ஜெர்மனி சரணடைந்ததால் அந்தப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும் ஆசியப் பகுதியில் ஜப்பான் எளிதில் அடிபணிவதாக இல்லை. அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ரஷ்யாவின் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரும் சந்தித்து ஜப்பான் சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார்கள். ஜப்பானோ வேறு வழிகளில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தது. எது எப்படியிருந்தாலும் ஜப்பான் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே ஜப்பானின் 60 நகரங்களில் அமெரிக்கா சாதாரண வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்திருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தது அமெரிக்கா.  

ஆகஸ்ட் 6 அன்று காலையில் பசிபிக் கடலில் உள்ள டினியன் தீவிலிருந்து ‘பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்’ விமானம் புறப்பட்டது. பால் டிபெட்ஸ் ஓட்டிச்சென்ற அந்த விமானம் சுமந்திருந்த அணுகுண்டின் பெயர், குட்டிப் பையன் (லிட்டில் பாய்). 4,400 கிலோ எடை கொண்ட அதன் உள்ளே 64 கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட ‘யுரேனியம்-235’ இருந்தது. சரியாக 8.15 மணிக்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 31,060 அடி உயரத்தில் பறந்தபோது அணுகுண்டு விடுவிக்கப்பட்டது. கீழ்நோக்கிப் பயணித்து 45 நொடிகள் கழித்து, தரையிலிருந்து 1,950 அடிகள் இருக்கும்போது அது வெடித்தது. அணுகுண்டைப் போட்டுவிட்டு வெகு வேகமாக அந்த இடத்தைவிட்டுச் சென்ற அந்த விமானம் குண்டுவெடித்த இடத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் பறந்தபோது குண்டுவெடிப்பின் அதிர்வுகள் அதையும் உலுக்கின.  

மானுட அவலத்தின் பேயாட்டம் 

அதன் பின்பு நடந்தது முன்னுதாரணமில்லாத ஒரு பேரழிவு. இந்தக் குண்டுவெடிப்பின் சக்தி 2 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருளுக்கு இணையானது என்றார்கள். குண்டுவீச்சின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். 13 சதுர கி.மீ. தூரத்துக்கு நகரம் அழிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 70% கட்டிடங்கள் சேதமடைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹிரோஷிமாவுக்கு மேலே சிவப்பும் கறுப்புமாக ராட்சகக் காளான் ஒன்று முளைத்திருந்ததைப் போல தெரிந்ததாகச் சொன்னார்கள். குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. இறந்துகொண்டிருந்தவர்களின் மரண ஓலமும், தங்கள் குடும்பத்தினரைத் தேடி அலைந்தவர்களின் ஓலமுமாக ஓசைகளின் நகரமானது ஹிரோஷிமா. கை, கால், தலையில்லாத குழந்தைகளை அவற்றின் அன்னையர் தூக்கிக்கொண்டு திரிந்தனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் பலரும் தங்கள் உயிரையும் குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டிருந்தார்கள். 

ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டும் ஜப்பான் அடிபணியவில்லை. மூன்று நாட்கள் கழித்து கொக்குரா என்ற நகரத்தின் மீது குண்டுவீசத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கொக்குராவில் மேகமூட்டமாக இருந்ததால், அடுத்து நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இங்கு வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் குண்டு மனிதர் (ஃபேட் மேன்). இதன் எடை 4,670 கிலோ. இதன் உள்ளே 6.4 கிலோ புளுட்டோனியம் இருந்தது. ‘குட்டிப் பைய’னைவிட இது திறன் மிகுந்தது என்று கூறப்படுகிறது. 2.3 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருட்களின் திறனுக்கு இணையானது அது என்று சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் நாசத்தை வைத்துதான் போர் வியாபாரிகள் எல்லாவற்றையும் அளவிடுவார்கள். நாகசாகியின் மீது வீசிய குண்டும் ஹிரோஷிமாவுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கியது. எங்கெங்கும் மானுட அவலத்தின் பேயாட்டம். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. 

நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சு. ஜப்பான் நடுங்கிப்போனது. சில நாட்களில் ஜப்பான் மீது போர் தொடுக்கப்போவதாக ரஷ்யா அறிவித்ததும் வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. அணுகுண்டு வீசினாலும் வீசாவிட்டாலும் எப்படியும் ஜப்பான் இறுதியில் தோல்வியடைந்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ரஷ்யாவுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இந்தக் குண்டுவீச்சுகள் என்போரும் உண்டு. இரண்டாவது உலகப் போரை முடித்துவைத்தது அணுகுண்டு வீச்சுதான் என்று ஒரு வாதம் சொல்லப்பட்டாலும் அதுதான் பனிப்போரைத் தொடங்கியும் வைத்தது என்ற உண்மையை நாம் காண வேண்டும். 

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டுவீச்சின்போது உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருந்தாலும், அடுத்து வந்த சில வாரங்கள், மாதங்கள் என்று அந்த ஆண்டின் முடிவுக்குள் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாகப் பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். கணக்கற்ற குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்து ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் சாட்சிகளாக உலவுகின்றனர். அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகாலமாக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது அணுகுண்டு வீசவில்லை என்றாலும் ஏராளமான அணுஆயுதங்களைப் பல நாடுகளும் வைத்திருக்கின்றன. ஆகவே, எப்போதும் எரிமலையின் வாய் மீது உட்கார்ந்திருப்பது போன்றதுதான் நம் வாழ்க்கை. ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளரோ அல்லது ஸ்டேன்லி கூப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்…’ படத்தில் வருவதுபோல் ஒரு ராணுவ ஜெனரலோ திடீரென்று ஒரு கணத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் இந்த உலகம் முடிவுக்கு வரும் அபாயத்தில்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  

முதல் அணுகுண்டைத் தயாரித்த அறிவியலாளர்கள் ‘அழிவுநாள் கடிகாரம்’ (டூம்ஸ்டே கிளாக்) என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அழிவுநாளுக்கு, அதாவது கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன. நள்ளிரவு 12 மணியை நோக்கிய முதல் உந்தலை ஹிரோஷிமா அளித்ததென்றால் தொடர்ந்த போர்கள், அணுஆயுதப் பெருக்கம், இயற்கைப் பேரழிவுகள் போன்றவை மேலும் கடிகாரத்தின் முட்களை வேகமாக நகர்த்தின, நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியின் மீது குண்டுவீசப்பட்ட 75-ம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. அது ‘அழிவுநாள்’ கடிகாரத்தையும் முடக்கிப்போடுமானால் மனித குலத்துக்கே பெரும் விடிவாக அமையும். 

-(ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)

Monday, May 22, 2017

உரையாடல் நெகிழும் இடம் -ஒரு இந்துத்துவவாதியிடம் உரையாடல்


இந்துத்துவரான மாளவியாவுடன் காந்தி

ஆசை
  
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, நீண்ட தலைப்புடன் என் வலைப்பூவில் வெளியிட்ட கட்டுரை ‘வரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா? (அல்லது) இந்துபாகிஸ்தான் ஜிந்தாபாத்!’ (http://writerasai.blogspot.in/2015/10/blog-post_28.html). அந்தக் கட்டுரையைச் சமீபத்தில் படித்துவிட்டு ஒரு இந்துத்துவவாதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அந்த மின்னஞ்சலில் காந்தியையும் சிறுபான்மையினரையும் முற்போக்காளர்களையும் அவர் கடுமையாக நக்கலடித்து எழுதியிருந்தார். கோட்சேவை தேசபக்தர் என்று வேறு எழுதியிருந்தார். நான் உட்பட முற்போக்காளர்கள் எல்லோரையும் போலிகள், சன்மானத்துக்காகக் கூவுபவர்கள் என்ற தொனியில் அந்த மின்னஞ்சல் முழுவதும் எழுதியிருந்தார். அதிலிருந்து சில உதாரணங்கள்:

1:
“சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தொழுகை நேரங்களில் மட்டுமல்லாது எப்போதுமே ஹிந்துக்களின் ஊர்வலங்கள் மசூதி வழியாக செல்வதை ஆயுதம் தாங்கிய முஸ்லீம்கள் தடை செய்து மதக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இந்த பந்தத்துக்கு தீப்பந்தம் வைத்தது யார் என்று யார் ஒப்பாரி வைக்க முடியும்? காந்தி போலவே நீங்களும் ஆன்மீக அறிவுரைக்கு கிளம்பி விடுவீர்களே? கோவில் விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்து வர பட வேண்டும் என்று ஹிந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று உங்களுக்கு பிடிக்காத ஹிந்து மதத்தை பற்றி எல்லாம் தெரிந்தது போல வியாக்கியானம் பண்ண கிளம்புவீர்கள்தானே?”

2:
“வாழ்வியல் கட்டாயங்களினால் அரையும் குறையுமாக படித்து புரிந்து கொண்டதை அவசரமாக ஆசை ஆசையாக எழுதி தள்ளுகிறீர்கள். தவறில்லை . வடக்கில் ராஜ் தீப் சர்தேசாய், அவரது மனைவி சாகரிகா கோஷ், 2 ஜி புகழ் பர்கா தத் இவர்கள் அளவுக்கு நீங்கள் என்னதான் முயன்றாலும் உபரி வருமானம் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி. (அதிலும் வடக்கு-தெற்கு இடைவெளியா என்று ஈ.வே.ரா சொன்னது சரிதான் என்று இன்னொரு கட்டுரைக்கு உட்கார்ந்து விடாதீர்கள்!)’
  
2:
“மொத்தத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது, ஆசை! ஏனென்றால் இங்கு புனை கதை வல்லுனர்கள் -அதுவும் இடது சாரி சிந்தனைகளில் தோய்ந்தவராக இருந்துவிட்டால் நல்ல வருமானம் காத்திருக்கிறது! சன்மானம் நிறைய கிடைத்தால் தன்மானமாவது வெங்காயமாவது!

குட் லக்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்; தூற்றிக் கொண்டிருங்கள்!”


சரி, நம்முடன் ஒரு இந்துத்துவவாதி முதன்முறையாக  உரையாட வந்திருக்கிறார். அவருடன் சற்றுப் பொறுமையாகப் பேசிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்து அவருக்கு மிதமான ஒரு மொழியில் பதில் அனுப்பியிருந்தேன். ஒரு இந்துத்துவவாதியை மதித்து நான் பதில் அனுப்பியதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலின் முதல் இரண்டு வரிகள் இவை: “ஒரு நட்சத்திர அறிவுஜீவி பத்திரிகையாளர் என் போன்ற தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளனை கூட  மதித்து பதில் எழுதுவார் என்பது நான் எதிர்பாராத ஒன்று. நன்றி!”

ஆனால், அந்த மின்னஞ்சலிலும் அவர் கடுமையான மொழியில் அவதூறுகளைக் கொட்டினார். குறிப்பாக இந்த வரிகள்:
“…இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்தை உருவாக்கி வரும் நீங்கள்,  உங்கள் ஆசான்  சமஸ் இவர்கள் எல்லாம் காஷ்மீரில் ஒரு பத்து நாட்கள் உங்கள் குடும்பத்தோடு தங்கி விட்டு அப்புறம் கட்டுரை எழுத வாருங்கள். அங்கு இருக்கிற நாட்களில் பாதுகாப்பு படையினரை ஒதுங்க சொல்லி விட்டு "ரகுபதி ராகவ ராஜாராம்"   பஜனை கீதங்கள் இசைத்து கொண்டு கல்லெறியும் கூட்டத்தினரை அமைதி படுத்துங்கள்.
குறைந்தபட்சம் உங்கள் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், சாலியமங்கலம், அய்யம்பேட்டை, ராஜகிரி, கொரடாச்சேரி இங்கெல்லாம் போய் மனிதம் தழைக்க மசூதிகளில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குங்களேன். அங்கு  நிறைய உண்மைகள் தெரிய வந்தாலும் திருடனுக்கு தேள் கொட்டியது போல உரத்து கத்த கூட முடியாது. இப்படி தீவிரவாதத்துக்கு சிம்மாசனம் போட்டு கவுரவம் தந்து கட்டுரை எழுதியது என் போன்ற ஒரு சிலருக்கு நினைவு வந்து  கேள்வி கேட்டால் வம்பு! உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களோடு வாதம் செய்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் படு சாமர்த்தியமாக கக்கும் நஞ்சு கலந்த சிந்தனைகள்அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்  சிலரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிய வைக்கும் எளிய முயற்சிதான் இது.”

அவதூறுகளோடு, நான் நட்சத்திரப் பத்திரிகையாளர், சமஸ் எனக்கு ஆசான் என்ற நகைச்சுவைத் துணுக்குகளும் இதில்  இடம்பெற்றிருந்தன. இந்த மின்னஞ்சலுக்குப் பிறகு நான் பொறுமை இழந்துவிட்டேன். “உரையாடுவதற்கான இடமே உங்களிடம் இல்லை என்று நினைக்கிறேன். நஞ்சைத்தான் கக்குகிறீர்கள். ஆகவே, தயவுசெய்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று அவருக்கு பதில் அனுப்பியிருந்தேன். அதற்கு அவர், “அடடா...என்னுடைய சொற்கள் உங்களது காந்திய போர்வையும், இண்டெலெக்சுவல் முகமூடியும் சரலென்று கழன்று விழும் அளவு உங்களை பாதித்து விட்டன என்பது வருத்தத்தை தருகிறது.
இது நான் எதிர்பார்த்ததுதான்என்று பதில் அனுப்பியிருந்தார். எனது அடுத்த மின்னஞ்சலில் நான் வெறுமனே, “Hail Hitler” என்று அனுப்பினேன். அவர் அதற்கு “Hail Hypocrisy! Hail doublespeak!! Hail pusillanimity!!! Hail quislings!!!! Hail fifth column!!!!’ என்று அனுப்பினார். நான் சீக்கிரம் பொறுமையிழந்துவிட்டதை உணர்ந்துகொண்ட நான் மறுபடியும் நிதானமாகச் சற்றுப் பேச முடியுமா என்பதை முயன்றுபார்க்கும் வகையில் மிகவும் அடங்கிய தொனியில் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்குப் பிறகுதான் ஒரு மாயம் நிகழ்கிறது.

அவர் இப்படி எழுதியிருந்தார் “பெரு மதிப்பிற்குரிய ஆசை அவர்களுக்கு, எனது ஆதங்கம்..ஏன் ஆத்திரம் என்று கூட சொல்லலாம்..மிகுந்த பதிவுகளை படித்த பின்னரும் கண்ணியம் குறையாமல், இவ்வளவு விரிவாக தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வரும் உங்கள் பொறுமை, முதிர்ச்சி இவற்றுக்கு தலை வணங்குகிறேன்.

உங்கள் வயதில் நான் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்று என் மனதில் எழும் கேள்வி உங்கள்  அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
முன்பு சொன்னது போல உங்கள் நம்பிக்கைகளை குலைத்து என் கருத்துக்களை வன்மையாக திணிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் இந்த வாதத்தை துவக்கவில்லை. ( அது நடக்காது என்பதோடு தேவையற்ற முயற்சி என்பதையும் நான் நன்கு உணர்ந்தவன்.)…. என்னுடைய சொற்களில் இருந்த காட்டம் ஆசை என்ற தனிமனிதரின் மீது நடத்திய தாக்குதல் அன்று. அவை உங்களை நிச்சயம்  புண்படுத்தி இருக்கக் கூடும். மன்னித்துவிடுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் எதிர்வினையாற்றும் கூர்மையுடன் என் போன்றவர்கள் விழிப்புடன் இருக்க முடியும். உங்கள் கனிவான பதிலுக்கு மீண்டும் எனது பாராட்டுகள்.”

இந்தக் கடிதத்திலும் தன் கருத்துக்கள் சிலவற்றை அவர் விட்டுக்கொடுக்காமல் முன்வைத்திருந்தாலும் அவற்றை முன்வைத்த தொனி மிகவும் மட்டுப்பட்டதாக இருக்கிறது. அவருக்கு என் மேல் பெருமதிப்பு ஏற்படுத்த என் தொனி உதவியிருக்கிறது. அது உண்மையிலேயே நான் காந்தியிடம் சிறிதளவு கற்றுக்கொண்டது. எதிர்த் தரப்பிடம் உரையாடும்போது நம் தொனி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லும்போது காந்தி இப்படிச் சொல்கிறார்: “நாம் எதிராளி சொல்வதைக் கேட்க மறுக்கையிலும், கேட்டாலும் அவர்கள் சொல்வதைக் கேலி செய்கையிலும் நம் நடவடிக்கைகளில் நியாயம் புகாது தடுக்கிறோம். எதிராளியின் பேச்சை சகிக்காமலே, பொறுக்காமலே பழகிவிடுகையில் நம்மால் உண்மையை அறிய முடியாமல்போகும். இயற்கையில் நமக்குள்ள அறிவாற்றலின் துணையால் செயல்படுகையில் நமக்கு சரியென்று தோன்றுவதை அஞ்சாமல் சொல்லவும்,செய்யவும் துணிய வேண்டும். ஆனால் நாம் உண்மையென்று நம்பியிருந்தது அவ்வாறில்லை என்று தெரிந்ததும் நம் கருத்தை மாற்றிக்கொள்ளவும், முன்பு நினைத்தது தவறு என்று தயங்காது ஒப்புக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்மிடமுள்ள உண்மை மேலும் உறுதியாவதோடு, அதிலிருந்த குறைகளும் நீக்கப்பெறும்” (ஹரிஜன்,31-5-1942)

காந்தியின் மிக முக்கியமான நண்பர்களில் ஒருவரான ஹென்றி போலக்கின் மனைவி மிலி போலக், காந்தியைப் பற்றிகாந்தி எனும் மனிதர்’ (தமிழில்: . கார்த்திகேயன், சர்வோதய இலக்கியப் பண்ணை) என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.
ஒரு நாள் மாலை தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பெர்கில் உள்ள ஒரு அரங்கில் இந்தியர்களும் இந்திய ஆதரவாளர்களும் கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டமொன்று நடைபெற்றது. அரங்கமே நிரம்பி வழியும் கூட்டம். கூட்டம் முடிந்து காந்தியும் மிலி போலக்கும் வெளியேறுகிறார்கள். அப்போது வெளிக் கதவின் மறைவில் ஒரு இந்தியர் நிற்பதை மிலி போலக் காண்கிறார். காந்தி நேராக அந்த மனிதரிடம் சென்று, அவருடன் கைகோத்துக்கொண்டு, தீவிரமான தொனியில் ஏதோ பேசுகிறார். பிறகு, தயங்கித் தயங்கி காந்தியுடன் நடந்துசெல்கிறார். மிலியும் அவர்களைப் பின்தொடர்கிறார். தாழ்வான குரலில் இருவரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். தெருவின் முடிவில் அந்த நபர் காந்தியிடம் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது என்ன என்று மிலி போலக் காந்தியிடம் கேட்ககத்திஎன்கிறார் காந்தி. அந்த நபர் காந்தியைக் கொல்வதற்காக வந்திருக்கிறார். காந்தி தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்திய மக்களுக்கு துரோகம் செய்வதாகவும், அரசாங்கத்தின் கையாளாக இருந்துகொண்டு இந்தியர்களிடம் நண்பராக, தலைவராக காந்தி நடிப்பதாகவும் அந்த நபர் கருதியிருக்கிறார்.
அதிர்ந்துபோன மிலிஇப்படிப்பட்ட மனிதர்கள் ஆபத்தானவர்கள், அவரைக் கைது செய்திருக்க வேண்டும், நீங்கள் ஏன் அவரை அப்படியே போக விட்டீர்கள்? அவர் ஒரு பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்என்கிறார்
"அவர் பைத்தியமல்ல, தவறாகப் புரிந்துகொண்டிருந்தார். நான் அவருடன் பேசி முடித்ததும் என்னைக் கொலை செய்ய தான் கொண்டுவந்திருந்த கத்தியையும் அவர் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றதைப் பார்த்தாயே," என்று காந்தி பதிலளிக்கிறார். ‘இருட்டில் அவர் உங்களை குத்தியிருப்பார், நான்... ’ என்று பேச ஆரம்பித்த மிலியை காந்தி மேற்கொண்டு பேசவிடவில்லை.
"இதை நினைத்து நீ அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம். என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், உண்மையில் அவருக்கு அந்தத் துணிச்சல் கிடையாது. நான் அவர் நினைத்த அளவுக்கு உண்மையில் மோசமானவனாக இருந்தால் அப்போது நான் சாக வேண்டியவன்தானே? இனி நாம் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. இது முடிந்துவிட்டது. அவர் இனிமேல் என்னை கொலை செய்ய முயற்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரை கைது செய்ய வைத்திருந்தால், அவர் எனக்கு ஒரு எதிரியாக மாறியிருப்பார். இனி அவர் ஒரு நண்பராகவே இருப்பார்."

நான் இதையெல்லாம் சொல்வது என்னை காந்திக்கு இணையானவனாகக் காட்டுவதற்காக அல்ல. காந்தியோடு ஒப்பிடும்போது நானெல்லாம் இன்னும் கோட்சே தரப்பில் இருப்பதற்கான குணங்களைக் கொண்டவனாகவே உணர்கிறேன். உண்மையில் இங்கே வென்றது எனது உரையாடல் அல்ல. காந்தியின் உரையாடல். அதை மிகச் சிறிதளவு பயன்படுத்தியதற்கே ஒரு இந்துத்துவவாதியின் மனம் நெகிழ்கிறது. அவர் தனது கருத்திலிருந்து மாறவில்லைதான். ஆனால், இங்கிருந்து பொறுமையுடன் செயல்பட்டால் அவரை நம் கருத்துகளின் நியாயத்தை நோக்கிக் கொண்டுவரலாம். எத்தனையோ ஆசாரமானா பிராமணர்கள் மாவோயிஸ்ட்டுகளாகவும் பிற இடதுசாரிகளாகவும் மாறவில்லையா! தீவிரம், மிதம் என்ற அளவுகோல்கள் பலவற்றிலும் இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். சாரு மஜூம்தாரிலிருந்து ஆரம்பித்து இ.எம்.எஸ்., சீதாராம் யெச்சூரி நம்மூர் மகஇக வீராச்சாமி என்று எண்ணற்ற இடதுசாரிகள் பிரமாண வர்க்கத்திலிருந்து நகர்ந்திருக்கிறார்கள் அல்லவா! பெரியாரின் தொண்டர்களுள் ஒருவரான சின்னக்குத்தூசியும் பிறப்பால் பிராமணர்தானே! அவர்களுக்கு இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. பெரும்பாலும் யாரோ ஒருவர் அவர்களுடன் நிதானமாக உரையாடியிருக்கக் கூடும். எடுத்தவுடனே அவர்களிடம் ‘போடா பாப்பாரப் பயலே’ என்று சொல்லி ஒதுக்கிவிட்டிருந்தால் அவர்களில் எத்தனை பேர் இன்று இந்தப் பக்கத்தில் வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

அவருக்கு இறுதியாக நான் அனுப்பிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: “நானும் சில காலம் வரை ‘சங்கி’, ‘பக்த்’, ‘அரைடவுசர்ஸ்’ என்றெல்லாம் வலதுசாரிகளைக் கிண்டலடித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் போட்டிருக்கிறேன். ‘என்றும் காந்தி!’ என்ற தொடரை நான் எழுதுவதற்காக காந்தியை மேலும் மேலும் படித்தபோது ‘சே, இந்த மனிதர் எதிர்த் தரப்பை எவ்வளவு கண்ணியமாக அணுகியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதும் நாம் எந்த அளவுக்குக் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறோம்’ என்பதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு நான் அப்படிக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன். கிண்டலைத்தான் நிறுத்திக்கொண்டேனே தவிர, விமர்சனத்தை அல்ல!”

அதெப்படி வலதுசாரிகளுடன் பேசுவது? முன்பு நான் எழுதிய கட்டுரையொன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: “பாபர் மசூதியை இடித்துத் தொடர் கலவரங்களுக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் காரணமானவர்கள், குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றவர்கள், இன்று மாட்டுக்கறி பிரச்சினையிலும் கருத்து சுதந்திரத்திலும் மூர்க்கமாக நடந்துகொண்டிருப்பவர்களைக் குற்றம் சாட்டாமல் சாத்விகமாகப் பேசுவதா? மிதமான இந்துத்துவாவாதியின் பேச்சு போல் இருக்கிறதே என்று என்னையும் சுட்டிக்காட்டி எளிதாகப் பேசிவிட முடியும். அவர்கள் செய்ததை நம்மால் மறைக்கவோ அவர்களால் மறைக்கவோ முடியாதுதான். அவர்களின் கொடூரத்துக்கு வரலாற்றில் அவர்களால் பதில்சொல்ல முடியாதுதான். (வரலாற்றில் கொடூரங்களை வலது மட்டுமா நிகழ்த்திருக்கிறது என்ற கேள்வியையும் நாம் திறந்த மனதுடன் கேட்டுக்கொள்ள வேண்டும்!) ஆனால், என்ன செய்வது, இன்று அவர்கள் வரலாற்றையும் சட்டங்களையும் உருவாக்கும் அல்லது அழிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சரியாக எதிர் தரப்பில் இருக்கிறோம். எடுத்தவுடன் குஜராத் கொலைவெறியர்களே என்று ஆரம்பித்தால் அவர்களுக்கு அடுத்த வரியைப் படிக்க பொறுமை இருக்காது. அடுத்த வாதத்தைக் கேட்க பொறுமை இருக்காது. ‘நண்பரே, நான் சொல்வதைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்என்று சொன்னால் அடுத்தததாக நாம் சொல்லப்போவதை அவர்கள் கேட்பதற்குச் சிறிதளவாவது வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். இம்முயற்சி தோற்றும்போகலாம். ஆனால், ஜனநாயகத்துக்குட்பட்டு இந்த முயற்சியளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படும் (சிறிதளவே வெற்றி என்றாலும்), வேறொரு வழிமுறை எனக்குத் தெரியவில்லை. இந்தத் தருணத்தில் வன்முறையைத் தவிர்த்த எந்த வழிமுறையையும் முயற்சித்துப் பார்ப்பதால் நமக்கு இழப்பு அதிகம் இருக்காது என்றே தோன்றுகிறது.”             

ஆகவே, நாம் நிதானமான உரையாடலை வலதுசாரிகளிடம் நிகழ்த்தியே ஆக வேண்டும். சற்றுப் பொறுமையாகப் பேசியதில் ஒரு இந்துத்துவ அன்பருக்கு நம்மேல் அன்பு ஏற்படுகிறது என்றால் நூற்றுக்கணக்கான இடதுசாரித் தோழர்கள் இதுபோன்ற உரையாடலை மேற்கொண்டால் எவ்வளவு மாற்றம் ஏற்படும்! இதற்குத்தான் திரும்பத் திரும்ப தொண்டை வரள நான் கத்திக்கொண்டிருக்கிறேன், ‘நிதான உரையாடலை மேற்கொள்ள வேண்டும்’ என்று. ஆனால், அப்படிப்பட்ட குரலை எழுப்புபவர்களுக்கு நாம் இங்கே ‘சங் பரிவாரக் கைக்கூலி’, ‘பார்ப்பன அடிவருடி’ போன்ற பரிசுகளைத்தானே வழங்கிக்கொண்டிருக்கிறோம். ஒருவர் பார்ப்பன அடிவருடியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவருடன் நிதானமாக நம்மால் பேச முடியாதா?


எங்களுக்கு இடையிலான மின்னஞ்சல் பரிவர்த்தனைகளின் முழு வடிவம்:

இந்துத்துவவாதியின் முதல் கடிதம்:

அன்புள்ள ஆசை என்கிற ஆசைத்தம்பி அவர்களுக்கு,
  
பல தசாப்தங்களாக எவ்வளவோ முயன்று பார்த்து விட்டு சரக்கு விற்பனை ஆகவில்லை என்பதால் இப்போதெல்லாம் நம்ம ஊர் இடதுசாரி அறிவுஜீவிகள் காந்தீய போர்வை போர்த்திக் கொண்டு கடை விரிக்கிறார்கள் என்பதற்கு தொடர்ந்து உங்களை போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளே சான்று.  
பெருங்குரலில் "ரகுபதி ராகவ ராஜாராம் பாடுவதின்  மூலம் மனதில் பீறிட்டு பொங்கி எழும் கடைந்தெடுத்த ஹிந்துமத துவேஷத்தை மறைக்க முயற்சித்திருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்தில் அழகு இருக்கிறது ஆனால் ஆழம் இல்லை; ஆர்வம் இருக்கிறது ஆனால் உண்மை இல்லை. எல்லாவற்றயும் மீறி இடதுசாரி பத்திரிக்கையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டிக் கொண்டு அது தரும் உபரி வருமானத்தில் நாட்டம் இருப்பது தெள்ளத்தெளிவாக  தெரிகிறது. 

ஆனால் பெரிய கறுப்புக் கண்ணாடி தொப்பி சகிதம் கன்னத்தில் மச்சத்தை ஒட்டிக் கொண்டு கிளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்னர் எம்ஜியார் கோமாளித்தனமான மாறு வேடத்தில்  வருவது மாதிரி (வில்லன் அவனது கையாட்கள் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்துவிடுவது போல) இது போன்ற எழுத்துக்கள் உங்கள் அடிப்படை வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது என்பது நன்றாகவே தெரிகிறது. 

வாழ்வியல் கட்டாயங்களினால் அரையும் குறையுமாக படித்து புரிந்து கொண்டதை அவசரமாக ஆசை ஆசையாக எழுதி தள்ளுகிறீர்கள். தவறில்லை . வடக்கில் ராஜ் தீப் சர்தேசாய், அவரது மனைவி சாகரிகா கோஷ், 2 ஜி புகழ் பர்கா தத் இவர்கள் அளவுக்கு நீங்கள் என்னதான் முயன்றாலும் உபரி வருமானம் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி. (அதிலும் வடக்கு-தெற்கு இடைவெளியா என்று ஈ.வே.ரா சொன்னது சரிதான் என்று இன்னொரு கட்டுரைக்கு உட்கார்ந்து விடாதீர்கள்!)

சரி., நீங்கள் உதிர்த்திருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்வோம்:  

கிட்டத்தட்ட பாகிஸ்தான் மக்கள்தொகை அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் எஞ்சியிருந்தனர். கிறிஸ்தவர்களும் கணிசமாக இருந்தனர். அது மட்டுமல்லாமல், ஏராளமான மொழிகள், இனங்கள் என்று பிளவுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆகவே, சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா சுக்குநூறாக உடைந்துவிடும் என்றே மேலை நாடுகள் ஆரூடம் சொன்னார்கள். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அந்த ஆரூடத்தை அவர்கள் மறுபடியும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் இந்தியா அப்படியேத்தான் இருக்கிறது. சிலபல மோசமான பிரச்சினைகள் நீடித்தபோதும் இந்தியா சிதைந்துபோகவில்லை. என்ன காரணம்? அதுதான் இந்தியாவின் பன்மைத்தன்மை. எவற்றைப் பிளவுகளாக மேலை உலகமும் இந்தியாவின் அழிவை எதிர்பார்த்தவர்களும் கருதினார்களோ அவற்றைப் பிளவுகளாகக் கருதாமல் இந்தியாவின் ஒருங்கிணைக்கும் நூலிழையாகச் சரியாகக் கண்டுகொண்டவர் காந்தி. 

இதைத்தான் இந்துத்வாவும் சொல்லி வருகிறது. நீ எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் இந்த தொன்மையான பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கிறவன் என்று அவனை உள்ளடக்கி கொள்ள முன் வருகிறது. இந்த நாட்டு முஸ்லீம்கள் இஸ்லாமிய ஹிந்துக்கள்  ; இந்த நாட்டின் கிறித்தவர்கள் மதத்தால் கிறித்தவர்கள் மரபினால் ஹிந்துக்கள். உங்கள் தாய் வேளாங்கண்ணி போவதையும் கிறித்தவர்கள் திருநீர் பூசிக்க கொள்வதையும் எதோ நியூட்டன் அல்லது கலிலியோ கண்டுபிடிப்பு போல தெரிவிக்க கிளம்பிவிட்டீர்களே. ஏன், இன்னும் சில முஸ்லீம்கள் ராகுகாலம் பார்க்கிறார்கள், ஜாதகம் கணித்து நல்ல முகூர்த்தமாக பார்த்து கல்யாண தேதி குறிக்கிறார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு துணி எடுக்க போனால் மங்களகரமான மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் துணிமணிகளை வாங்குகிறார்கள்.  ஸ்ரீ ராம நவமி அன்று கடப்பா அருகே உள்ள ராமர் கோவிலுக்கு போய் வழிபட்டுவிட்டு தீர்த்தம் சடாரி ஏற்றுக் கொள்கிறார்கள். (உங்கள் கைபேசி எண் இருந்தால் சொல்லுங்கள் வாட்சப்பில் காணொளிக்காட்சியாக அனுப்பி வைக்கிறேன்.)

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா சிதறவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் நீங்கள் அடிக்கடி சொல்லும் பன்முகத்தன்மையை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாக விளங்கி வரும் ஹிந்துத்துவா சித்தாந்தம்.  நீங்கள் சொல்லுகிற மாதிரி எதோ தீய சக்திகளால் உந்தப்பட்டு ஹிந்துக்கள் சிறுபான்மையினரை வேட்டையாட தயாரக இருக்கிறார்கள் என்பது உண்மயானால் பிரிவினை ஏற்படுத்திய காயங்கள், பரஸ்பர அச்சங்கள் நீங்காத 52 தேர்தலிலேயே ஹிந்து மஹா சபா அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும். இங்கு ஒரு முஸ்லீம் கூட  இருந்திருக்க முடியாது. காந்திக்கும் முன்பே அஹிம்சை பற்றி நன்கு தெரிந்தவர்கள்   ஹிந்துக்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. 

நாடு துண்டாடப் பட்ட போது இருந்த வெறுப்பையும் அச்சுறுத்தலையும் விடவா இப்போது முஸ்லீம்கள் அவற்றை சந்தித்து வருகிறார்கள்?
 'இல்லை'  என்று சொல்ல  நிறைய மனசாட்சியும், சரித்திர அறிவும், உண்மையை சொல்லும் துணிச்சலும் வேண்டும்.  
"ஆமாம்' என்று அடித்து சொன்னால் முன்போக்கு சிந்தனாவாதி, தாராளர், அறிவுஜீவி  இந்த பட்டங்களோடு இது போன்ற கருத்துருவாக்கத்துக்கு கணிசமான நிதியுதவியும் கிடைக்குமே என்கிறபோது அதுதான் வசதியாக இருக்கும்.    

"அவர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்துவிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். அதாவது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளி, தான் டீ குடிப்பது மட்டுமே வழக்கம், காப்பி குடிப்பதில்லை என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாமோ டீ குடிப்பதில்லை, காபிதான் குடிப்போ.....

ராமசாமி நாயக்கரும் அவரது கூலிப்படைகளும் பிராமணர்களை தாக்கி குடுமி அறுப்பு போராட்டம் செய்தார்களே? "பாப்பாத்தியை பொது உடமையாக்கு" என்று தமிழ்நாடு நெடுக சுவரில்  எழுதி தங்களது புரட்சி மனப்போக்கையும் பெண்ணிய சிந்தனையையும் கண்ணியத்தையும் வெளியிட்டார்களே? 
அது அவர்களது தனித்துவ அடையாளங்களை அழிப்பது ஆகாதா? உங்களுடைய இடதுசாரி சிந்தனை அதை சமூக நீதி கணக்கில் சேர்த்து விடுமோ?
(அது மட்டும் அல்ல. ஜூலை 16 ,  1953 தூத்துக்குடியை அடுத்துள்ள புதுக் கிராமத்தில் பிராமணர்கள் மீது நடந்த  வெறித்தாக்குதல், கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி நேரம்கிடைக்கும்போது ஆய்வு மேற்கொள்ளவும். அந்த மாதிரி சம்பவங்களை கண்டிக்க வேண்டாம், குறைந்த பட்சம் அது போன்ற சம்பவங்கள் நடந்தன என்று ஏதாவது ஒரு வரி உங்கள் கட்டுரையில் குறிப்பிட உங்கள் முன்போக்கு சிந்தனை இடங்கொடுக்குமா?)

இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். 

இதுவும் யாருக்கும் தெரியாத உண்மையை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து உணர்த்தி விட்டோம் என்று காலரை தூக்கி வீட்டுக் கொள்ள வேண்டாம். நம் மதத்தில் உள்ள குறைபாடுகளை  புராண கால  சார்வாகனன், ஜாபாலி முனிவர் தொடங்கி நம்ம ஊர் சித்தர்கள், பிற்காலத்தில் கர்நாடகத்தில் பசவேஸ்வரர்  - அக்கம்மாதேவி, ஒரிசாவில் சைதன்ய மஹா பிரபு, கேரளத்து நாராயணகுரு இவர்களெல்லாம் சாடி இருக்கிறார்கள். எனவே சீர்திருத்தம் பற்றி   இந்துக்களிடம் பேசுவது தூத்துக்குடிக்கு உப்பு சப்ளை செய்வது அல்லது சேலத்துக்கு மாம்பழம் அனுப்புவது போல தேவையில்லாத முயற்சி.  

எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல....
இது காந்தியின் இன்னொரு முத்து. கிட்டத்தட்ட சகோதரர் பால் தினகரன், ஜாகீர் நாயக்  ரேஞ்சுக்கு காந்தியார் யோசித்திருக்கிறார் என்று படுகிறது. ஏனென்றால் எம்மதமும் சம்மதம் அல்ல என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில்தான் மானாவாரியாக மதமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. சாதியத்தை காரணம் காட்டி அதையும் நியாயப்படுத்த உங்களை போன்றவர்கள் கிளம்பி வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கைதான் அவர்களுக்கு! 

.....ஆனால், கார்கில் பிள்ளையாரை இப்போது அந்த கிறித்தவத் தெருவில் என்னால் இழுத்துச்செல்ல முடியுமா? எவ்வளவு அற்புதமான பந்தத்தை நாம் இப்படிச் சிதைத்துவிட்டோம். அதுவும் இந்து மதத்தின் பெயரால்?

ஓஹோ, கார்கில் விநாயகரை  அவர்கள் வசிக்கும் பகுதி வழியாக கிறித்தவர்கள்  அனுமதிக்காவிட்டால் அது ஹிந்துக்களின் குற்றம்! மத நல்லிணக்கம் தழைக்க அனுமதியுங்களேன் என்று அவர்களுக்கு இது போல அறிவுரை வழங்குவது முடியாது என்பதைஒப்புக் கொள்கிறீர்களா? (அது சரி, பொது இடங்கள் வழியாக ஊர்வலங்களை நடத்தி செல்ல காவல் துறையினர் அனுமதி இருந்தால் போதாதோ?சிறுபான்மையினருக்கு அந்த அதிகாரம் வேறு உண்டா, சபாஷ்!) இந்த மாதிரி வெட்கமே இல்லாமல், நடு நிலை வகிப்பது போல நடிக்கக்கூட முயலாமல் எப்படி   உங்களால் பிதற்றி தள்ள முடிகிறது, ஆசைத்தம்பி?

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தொழுகை நேரங்களில் மட்டுமல்லாது எப்போதுமே ஹிந்துக்களின் ஊர்வலங்கள் மசூதி வழியாக செல்வதை ஆயுதம் தாங்கிய முஸ்லீம்கள் தடை செய்து மதக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இந்த பந்தத்துக்கு தீப்பந்தம் வைத்தது யார் என்று யார் ஒப்பாரி வைக்க முடியும்? காந்தி போலவே நீங்களும் ஆன்மீக அறிவுரைக்கு கிளம்பி விடுவீர்களே? கோவில் விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்து வர பட வேண்டும் என்று ஹிந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று உங்களுக்கு பிடிக்காத ஹிந்து மதத்தை பற்றி எல்லாம் தெரிந்தது போல வியாக்கியானம் பண்ண கிளம்புவீர்கள்தானே?

சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் கலந்து வசிக்கும் எல்லா தேசங்களிலும் நடப்பதுபோலத்தான் இந்தியாவிலும் நடக்கிறது. பெரும்பான்மையினர் தங்களைச் சூழ்ந்திருப்பதே சிறுபான்மையினரின் அச்சத்துக்கு முதல் காரணமாகிறது. அடுத்ததாக, பெரும்பான்மையினரின் ஆதிக்கம் சிறுபான்மையினரில் சிலரை வன்முறைப் பாதையில் ஈடுபடத் தூண்டுகிறது. யாரோ சிலர் அப்படி ஈடுபடும்போது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான வாய்ப்பாக அதைப்  பயன்படுத்திக்கொண்டு பெரும்பான்மையினர் மூர்க்கமாகச் செயல்பட பிரச்சினை பூதாகரமாகிறது. விளைவு இரண்டு தரப்பிலும் அமைதியின்மை. 

What a simplistic interpretation! Absolute bunkum!!
இஸ்லாம் அல்லது முஸ்லீம்களின் மனோபாவம் பற்றின சரியான புரிதல் இல்லாததால் இன்னொரு பிதற்றல்!
எங்கெல்லாம் பெரும்பான்மையினரோ அங்கெல்லாம் சிறுபான்மையினர் ஒழிப்பு அல்லது உரிமை மறுப்பு! ஜனநாயகம் என்பது பற்றி மூச்சு விட முடியாது. எங்கெல்லாம் சிறுபான்மையினரோ அங்கெல்லாம் இஸ்லாமிய நாடுகளையும் விட கூடுதல் உரிமைகள், சுதந்திரம்!  இது சரித்திரம் சொல்லும் உண்மை.

சிறுபான்மையினர் தவறிழைக்க வாய்ப்பில்லை. அப்படியே தவறிழைத்தாலும் அதைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால், பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை அதிகாரபோதை, ஆதிக்க போதை அவர்களின் தலைக்கேறுமென்றால் என்றால் அதைத் திருத்துவது மிகமிகக் கடினம்.” காந்தி எச்சரித்த தருணம் இன்று உருவாகியிருக்கிறது. இந்தத் தருணம் இந்து மதத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு அதன் அடிமரத்தை இந்துத்துவம் வெட்டும் தருணம்.

பகுத்தறிவு என்பதை கழற்றி வைத்துவிட்டால் சிக்கல் இல்லமல் ஏற்றுக் கொள்ளலாம். 
காந்தியின் காமடிக்கு ஒரு எல்லையே கிடையாதா? ஒரு பக்கம் அவர்...இன்னொரு பக்கம் அவரை  சீரியஸாக எடுத்துக் கொண்டு ஹிந்துத்துவாவை தாக்க அவரது கொள்கைகளை ஒரு கருவியாக பயன் படுத்த முற்படும் உங்கள் போன்றவர்கள்.. உங்கள் இருவரில் யார் பெரிய கோமாளி என்பதை தீர்மானிப்பது அத்தனை  எளிதல்ல! 

முஸ்லிம்களும் ஆங்கிலேயரும் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நம்மை அடக்கியாண்டு பெருங்கொடுமைக்குள்ளாக்கிவிட்டார்கள் என்பதுதான் இன்று அவர்கள் மீது இந்துத்துவர்களுக்கு இவ்வளவு கோபம் எழுவதற்குக் காரணம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் இந்து மக்களிலேயே பெரும் பிரிவினரைச் சூத்திரர்களென்றும், அதைவிடக் கொடுமையாக இன்னும் பலரை பஞ்சமர்கள் என்றும் இந்து மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்திவருகிறோமே, அதற்கு யார் மீது கோபப்படுவது? முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் எதிரிகளாக அடையாளம் காண்பதற்குப் பதில் நம்மிடம் உள்ள சாதியத்தையல்லவா நமது பெரும் எதிரியாக நாம் கருதியிருக்க வேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையே கீழான இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது மட்டும் கோபம் கொள்வதில் சிறிதும் தார்மிக உரிமை நமக்கு இல்லை.


சிலிர்க்க வைக்கிறீர்கள் உங்கள் அறிவு சார்ந்த சிந்தனையினால்!
பிரிவினைகள் பேதங்கள் எதோ ஹிந்து மதத்தின் புராதன சொத்துக்கள் என்பது போல திரிப்பது சரித்திரம் பற்றிய சரியான புரிதலோ வாசிப்போ உங்களுக்கு அமையவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. 
இது மாதிரி வேறுபாடுகள் இன்று வரை ஒவ்வொரு மதத்திலும் நிலவி வருகின்றன என்பது விரலிடுக்கின் வழியாக உலகை பார்க்கும் உங்களை போன்றவர்களுக்கு தென்படாது. இஸ்லாத்தில்   எத்தனை   பிரிவுகள், கிறித்தவத்தில் எத்தனை   பிரிவுகள்,  மத வெறியினால் ஏன் இத்தனை ரத்தம்ஆறாக ஓடுகிறது என்று ஒரு நெடுங்கட்டுரைக்கான விஷயம் உண்டு.    

அதனால்தான் அவர் வரலாற்றிலேயே சிறந்த இந்து. அதனால்தான் அவரைக் கொன்றவன் வரலாற்றிலேயே மோசமான இந்து.

 காந்தி  தனது பரிசோதனைகளை சத்தியத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒட்டு மொத்த ஹிந்துக்களின் நலனோடு விஷப் பரீட்சை செய்ய முயன்றவர் என்றாலும்    
கோட்ஸேயின் குற்றம் மன்னிக்க முடியாத மாபாதகம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.  சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன் படுத்தி அவரை விடுவித்து விடலாம் என்று ஆலோசனை வழங்க சென்னை மைலாப்பூரை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் முன் வரும்போது செய்த குற்றத்துக்கு மரண தண்டனைதான் ஏற்றது என்று  அவரே அந்த  உதவியை மறுத்து விடுகிறார். எனவே அரை குறை தவல்களை வைத்துக் கொண்டு உங்கள் புனைகதை ஆற்றலை வைத்து அவரை ஒரு மோசமான இந்து என்று பழிப்பது  உங்களை ஒரு இண்டெலெக்சுவலாக அடையாளம் காட்டும் ஆனால் உண்மைக்கும் உங்கள் எழுத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் தவறாது பறை சாற்றும். 

என்னை ஒரு ஹிந்து வெறியன் என்று நீங்கள் புரிந்து கொண்டாலும் ஒன்றை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்: கோட்ஸே அவன் கொன்ற காந்தியை போலவே இந்த மண்ணையும், அதன் மாண்பையும், அதன் மக்களையும், அதன் நலனையும் அதே தீவிரத்துடன் நேசித்தான். 

( நீதிமன்றத்தில் அவரது  வாதத்தை கேட்ட முக்கிய நீதிபதி கோஸ்லா "அன்று மட்டும்  பொது மக்களில் யாரவது ஒரு சிலர் ஜூரிகளாக அமர்த்தப்பட்டிருந்தால் அவர் குற்றமற்றவர் என்று ஏகமனதாக முடிவு சொல்லி இருந்திருப்பார்கள்" என்று சொன்னது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆதாரமுள்ள இன்னொரு கொசுறுத் தகவல்! இன்று போராளிகள்,  புரட்சியாளர்கள் என்று அமைப்புக்கு எதிராக கொடி பிடிப்பது அல்லது அடியோடு தகர்த்தெறிந்துவிடுவது என்று முயன்று கொண்டிருக்கிற உங்கள் மனதுக்குகந்த  அனைத்து  குழுக்களும் போற்றும் அம்பேத்கர் தனது சட்ட நுண்ணறிவை பயன் படுத்தி கோட்ஸே விடுதலைக்காக தீவிரமாக முயற்சி செய்தார்!  என்ன மூச்சடைத்து போய் விட்டீர்களா?)

கருணையில், அன்பில், விருந்தோம்பலில், நட்பில், பன்மைத்தன்மையில் தலைசிறந்த நாடாக உலகமே இந்தியாவை வியந்து பார்த்திருக்கிறது. லட்சக் கணக்கான மேற்கத்தியர்கள் இந்தியாவுக்கு வருவது உலகுக்கே ஞானத்தையும் அன்பையும் போதித்த நாடு என்பதனால்தான்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையினராகவும் பரந்த மனது கொண்டவர்களாகவும் இருப்பதால்தான் அது சாத்தியமாயிற்று என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது? 

நிச்சயம் ஒரு விஷயத்திற்காகவாவது உங்கள் கட்டுரை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெறும்- நீளமான, குழப்பும் தலைப்புக்காக! தமிழ் இந்து தலைப்புகளையே தூக்கி சாப்பிடுவது போல..

வாலிபம், உடலில் வலு, உண்மைகளை அறியாது உணர்ச்சிவசப்படும் குணம், பாரம்பரியத்தின் மீது வெறுப்பு, எங்கிருந்தோ இறக்குமதியான தத்துவங்களில் ஈடுபாடு, சரித்திரம் பற்றிய புரிதல் இல்லாமை  இதெல்லாம் இருக்கும் வரை  விளையாட விட்டெறிந்த துணிப்பந்தை ஆர்வத்துடன் கிழித்து சின்னாபின்னம் செய்யும் நாய் போல புரட்சி ஜுரத்தில்  மனம் கிடந்தது அல்லாடும். உண்மைகள் தெரிய வரும்போது பொய்களை விற்று பொருள் தேடியது கருப்பு-வெள்ளை படங்களில் வருகிற மனசாட்சி போல பிரம்மாண்டமாய் கண் முன் நின்று தொந்தரவு செய்யும்

அது சரி, உங்கள் பிதற்றலில் ஓரிடத்தில் "பங்குத்தந்தை கூட  அதை  ஏற்றுக்  ஏற்றுக்கொள்ள மாட்டார்தான்" என்று ஒரு வரி பார்த்தேன். அந்த பங்குத்தந்தைக்கு என்ன பொருள் என்பதை இந்த சாமானியனுக்கு புரிகிறமாதிரி சொல்ல முயலுங்களேன்? உங்கள் அறிவுஜீவி தனத்தை இதில் கூடவா காட்ட வேண்டும்?

மொத்தத்தில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது, ஆசை!
ஏனென்றால் இங்கு புனை கதை வல்லுனர்கள் -அதுவும் இடது சாரி சிந்தனைகளில் தோய்ந்தவராக இருந்துவிட்டால் நல்ல வருமானம் காத்திருக்கிறது!

சன்மானம் நிறைய கிடைத்தால் தன்மானமாவது வெங்காயமாவது!

குட் லக்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்; தூற்றிக் கொண்டிருங்கள்
XXXXXXX (பெயர்)


எனது பதில்:
அன்புள்ள நண்பருக்கு வணக்கம்!

இந்தப் பக்கம் இடதுசாரிகள் என்னவென்றால்இந்துத்துவவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி, பார்ப்பனிய அடிவருடி, மோடி அடிவருடிஎன்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.

அந்தப் பக்கம் உங்களைப் போல வலதுசாரிகளெல்லாம்போலி அறிவுஜீவி’, ‘சன்மானத்துக்காகக் குலைக்கும் நாய்’, ‘Presstitute', ‘Anti-indian' என்றெல்லாம் முத்திரை குத்துகிறார்கள்.

நான் எங்கு போய் ஒளிந்துகொள்வது? alt="😁" goomoji=1f601 data-goomoji=1f601 class=CToWUd v:shapes="_x0000_i1025">


பிற மனிதர்களை நன்னம்பிக்கையுடனே (good faith) அணுக வேண்டும் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்

அல்லது

அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்

அல்லது 

மதங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைவிட மனிதர்களும் இயற்கையுமே முக்கியம் என்று நாம் நம்பும் சித்தாந்தமும் மதமும் நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையென்றால்

அல்லது 

அவற்றிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையென்றால்

அவர் இடதுசாரியோ வலது சாரியோ இருவருமே மனிதத்துக்கு எதிரானவர்கள் என்று கருதுகிறேன்.

உங்களுக்கு இரண்டு தகவல்கள்: நீங்கள் படித்த கட்டுரை எந்தப் பத்திரிகையிலும் வெளியாகாதது. என் வலைப்பூவில் மட்டுமே வெளியானது. இதற்கென்று எந்த ஆண்டி-இந்தியர்களிடமும் நான் சன்மானம் பெறவில்லை. அப்படிச் சொன்னாலும் நீங்கள் நம்புவதில்லை. ஏனெனில், இந்தியா, இந்துத்துவா, மோடி மீதெல்லாம் விமர்சனம் வைப்பவர்கள் எல்லோரும்ஆண்டி-இந்தியர்கள்என்றே நீங்கள் கருதுகிறீர்கள். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை எனக்கு.

இரண்டாவதாக, கம்யூனிஸ்டுகளை விமர்சித்து ஃபேஸ்புக்கிலும் பத்திரிகையிலும் எழுதுவதற்காக நானும்  என் நண்பர்களும் தொடர்ந்து இடதுசாரிகளால் அவதூறு செய்யப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள்

தீவிரமாகப் போனால்இடதும் வலதும் ஒண்ணு! இதை அறியாதவர் வாயில் மண்ணுஎன்பதை நீங்கள் எல்லோரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் கோட்ஸேவுக்குச் சொல்லும் சாக்குப்போக்கைத்தான் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காந்தியைக் கொல்வதற்குப் பதிலாக வெள்ளையர்களை எதிர்த்து பகத் சிங் போலவாவது கோட்ஸே ஏதாவது செய்திருந்தால் (நமக்கு வன்முறையில் உடன்பாடு இல்லை என்றாலும்அவரை ஒரு தேசபக்தர் என்று கொண்டாடியிருக்கலாம். தேசத்தந்தையைக் கொன்றுவிட்டு என்னதேசபக்திபட்டம் வேண்டிக்கிடக்கிறது?


எனக்கு இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிஸம், காந்தியம் எல்லாவற்றையும் விட முக்கியமானது மனிதமும் என் மனசாட்சியும். இவற்றுக்கு உதவி செய்யும் வகையில் மதங்களிலும் கோட்பாடுகளிலும் எந்தப் பகுதிகள் இருக்கின்றனவோ அந்தப் பகுதிகளை மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்!  

என் கருத்துகள் தங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

அன்புடன்
ஆசைத்தம்பி

இந்துத்துவவாதியின் இரண்டாவது மின்னஞ்சல்:

ஒரு நட்சத்திர அறிவுஜீவி பத்திரிகையாளர் என் போன்ற தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளனை கூட  மதித்து பதில் எழுதுவார் என்பது நான் எதிர்பாராத ஒன்று. நன்றி!

குடுமி அறுப்பு, இந்து மதம் குறித்த ஆபாச பட்டிமன்றம், ராமாயண எரிப்பு, சேலம் ஊர்வலம், ராமருக்கு செருப்பு மாலை இதெல்லாம் நீங்கள் நம்புவதாக கூறும் மனிதத்தில் அடக்கம் என்றால் என்னிடம் கேள்விகளே கிடையாது. இவை எல்லாம்  உங்கள்சீர்திருத்த பட்டியலில் வந்து விடும் ஐட்டங்கள் போலும்

மனசாட்சி பற்றி சொல்லி இருக்கிறீர்கள். இடதுசாரி அமைப்புகள், நாயக்கர் சித்தாந்தங்கள் இதர தேச விரோத சக்திகள் இவை பற்றி விமரிசனம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு எழுதுவதில் ஒரு செல்லமான  ஆதங்கம் கலந்த அங்கலாய்ப்பு-"என்ன நீங்க.... நம்ம ஆளுங்க; நீங்க போய் இப்புடி பண்ணினா எப்புடி..?" என்கிற தொனி தென்படுகிறதே தவிர ஹிந்துத்துவாவை தாக்கும் ஆக்ரோஷம் அதில் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்இப்போது அதே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பின்னதில் இருக்கிற முனைப்பு முன்னதில் இருக்கிறதா என்பதை?

பிராமணர்கள் பற்றின ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் பசப்பி இருக்கிறீர்கள்.
அவர்கள் பற்றின கொச்சையான விமரிசனங்கள் நக்கல் நையாண்டிகள் எல்லாம் சமூக நீதி கணக்கில் சேர்ந்து விடும்; தவிர எதிர்த்து ஒரு பயல்  வாயை திறக்க மாட்டான். வேறு கோஷ்டிகளை பற்றி வாயை திறந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்பது புரியாதவரா நீங்கள்

இன்று வெறுப்பரசியல் என்று கூக்குரல் இடும் நீங்கள் அதன் மூல கர்த்தாவைத்தானே பகுத்தறிவு பகலவன் என்று தலை மேல் வைத்துக் கொண்டு கூத்தாடியதோடு அல்லாமல் அவரது எடைக்கு எடை என்னவெல்லாம் கையில் கிடைத்ததோ அதை எல்லாம் அன்பளிப்பாக கொடுத்தீர்கள்? அவரை விட ஒரு பாசிஸ்ட் தமிழ் நாட்டில் உண்டா?
இன்னமும் சொல்கிறேன். உங்களுக்கு நல்ல வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஏனென்றால் புனைகதை வல்லுநர்களை தமிழர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.  

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்தை உருவாக்கி வரும் நீங்கள்,  உங்கள் ஆசான்  சமஸ் இவர்கள் எல்லாம் காஷ்மீரில் ஒரு பத்து நாட்கள் உங்கள் குடும்பத்தோடு தங்கி விட்டு அப்புறம் கட்டுரை எழுத வாருங்கள். அங்கு இருக்கிற நாட்களில் பாதுகாப்பு படையினரை ஒதுங்க சொல்லி விட்டு "ரகுபதி ராகவ ராஜாராம்"   பஜனை கீதங்கள் இசைத்து கொண்டு கல்லெறியும் கூட்டத்தினரை அமைதி படுத்துங்கள்.

குறைந்தபட்சம் உங்கள் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், சாலியமங்கலம், அய்யம்பேட்டை, ராஜகிரி, கொரடாச்சேரி இங்கெல்லாம் போய் மனிதம் தழைக்க மசூதிகளில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குங்களேன். அங்கு  நிறைய உண்மைகள் தெரிய வந்தாலும் திருடனுக்கு தேள் கொட்டியது போல உரத்து கத்த கூட முடியாதுஇப்படி தீவிரவாதத்துக்கு சிம்மாசனம் போட்டு கவுரவம் தந்து கட்டுரை எழுதியது என் போன்ற ஒரு சிலருக்கு நினைவு வந்து  கேள்வி கேட்டால் வம்பு

உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களோடு வாதம் செய்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் படு சாமர்த்தியமாக கக்கும் நஞ்சு கலந்த சிந்தனைகள்அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்  சிலரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிய வைக்கும் எளிய முயற்சிதான் இது.

Good Luck! You have a bright future!
xxxxxxxxxx


எனது பதில்:
அன்புள்ள நண்பருக்கு,

நம் இருவருடைய கடிதங்களையும் பொறுமையாக நடுநிலையாளர் யாராவது ஒருவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். யாருடைய எழுத்தில் நஞ்சு இருக்கிறது என்று தெரியும். ஒவ்வொரு நாளும் இடது சாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் எனக்குத்தான் தெரியும் நிதானத்தின் வலி!

உங்கள் மொழியில் சொல்வதானால், மோடியின் ஆட்சி நீடிக்கும்வரை (இன்னும் 12 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று நினைக்கிறேன்) bright future மோடிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே!

உரையாடுவதற்கான இடமே உங்களிடம் இல்லை என்று நினைக்கிறேன். நஞ்சைத்தான் கக்குகிறீர்கள். ஆகவே, தயவுசெய்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்

இந்துத்துவவாதியின் மூன்றாவது மின்னஞ்சல்:
அடடா...என்னுடைய சொற்கள் உங்களது காந்திய போர்வையும், இண்டெலெக்சுவல் முகமூடியும் சரலென்று கழன்று விழும் அளவு உங்களை பாதித்து விட்டன என்பது வருத்தத்தை தருகிறது.
இது நான் எதிர்பார்த்ததுதான்.
சரியான பதில் தர அவகாசமோ அல்லது அடிப்படை  தகவலோ  இல்லாது போகும்போது இந்த மாதிரி நிலை தடுமாறுவது இயற்கைதான்.
என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு உங்கள் பணியை தொடருங்கள்.
ஆசிகளுடன்
XXXXXXXXX


எனது பதில்:
Hail Hitler!

இந்துத்துவவாதியின் பதில்:
Hail Hypocrisy!
Hail doublespeak!!
Hail pusillanimity!!!
Hail quislings!!!!
Hail fifth column!!!!😀😀😀😀😀 alt="😀" goomoji=1f600 data-goomoji=1f600 class=CToWUd v:shapes="_x0000_i1033">


மறுபடியும் சற்றுத் தணிவான தொனியில் எனது மின்னஞ்சல்:
நண்பரே நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கும் குணங்கள் யாவும் நம் அனைவருக்குமே இருக்கின்றன. எனக்கு மட்டுமே அல்லது உங்களுக்கு மட்டுமே இந்த குணங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. இந்த குணங்கள் ஏதுமற்ற மகாத்மா நான் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப மாட்டீர்களோ அதேபோல்இந்த குணங்கள் துளிகூட எனக்குக் கிடையாதுஎன்று சொன்னால் நானும் நம்ப மாட்டேன்தானே. நல்ல குணம் என்பது எனக்கோ அல்லது உங்களுக்கோ தனிச்சொத்து அல்ல. எப்படிச் சட்டென்று சுட்டுவிரலை நாம் அடுத்தவரை நோக்கி நீட்டிவிடுகிறோம்

என்னுடைய கட்டுரைகள் அனைத்தையும் படித்தீர்கள் என்றால் இஸ்லாமியத் தீவிரவாதத்தை நான் எந்த அளவுக்கு எதிர்த்திருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். ஒரு போட்டி வைத்துக்கொள்வோம். நான் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக எழுதியதையெல்லாம் உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்கள் இந்துத் தீவிரவாதத்துக்கு எதிராக எழுதியதையெல்லாம் (!) எனக்கு அனுப்ப முடியுமா

நான் என்னை காந்தி போல் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், மிதமும் நிதானமும் கொண்ட உரையாடல் வேண்டும் என்று ஃபேஸ்புக்கிலும் வலைப்பதிவிலும் பத்திரிகையிலும் திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டிருக்கிறேன். இடதுசாரிகளிடமும் வலதுசாரிகளிடமும் திரும்பத் திரும்ப நான் முன்வைக்கும் வேண்டுகோள் இதுதான்: “சித்தாந்தம் தாண்டி, மதம் தாண்டி நிதானமாகச் செயல்படுங்கள். எல்லோரிடமும் இருக்கும் நல்லியல்புகளையே நாடுங்கள். யாரையும் எதிரியாகக் கருதிக்கொண்டே இருக்க வேண்டாம். எதிர்த் தரப்பிடம் கண்ணியமாக உரையாடுங்கள். எடுத்தவுடனே சங் பரிவாரக் கைக்கூலி, பார்ப்பன அடிவருடி என்றோ (இது இடதுக்கு), ஆண்டி-இந்தியன், தேசத்துரோகி என்றோ (இது வலதுக்கு) யாரையும் சொல்லி உங்கள் உரையாடலை ஆரம்பிக்காதீர்கள். சக மனிதரை மனிதராகப் பார்க்காத சித்தாந்தத்தையோ மதத்தையோ பிடித்துத் தொங்க வேண்டாம்.” 

இப்போது சொல்லுங்கள் நான் ஆண்டி இந்தியன் என்றால் சந்தோஷமாக ஆண்டி இந்தியனாக இருந்துவிட்டுப் போகிறேன்! என்றாவது ஒரு நாள் நம் மனது திறக்கும் என்றும் எல்லாவற்றையும் எல்லோரையும் திறந்த மனதுடன் நாம் அணுகுவோம் என்றும் கண்டிப்பாக நம்புகிறேன்!





அன்புடன்
ஆசை


இந்துத்துவவாதியின் நெகிழ்வான பதில்:
பெரு மதிப்பிற்குரிய ஆசை அவர்களுக்கு,
எனது ஆதங்கம்..ஏன் ஆத்திரம் என்று கூட சொல்லலாம்..மிகுந்த பதிவுகளை படித்த பின்னரும் கண்ணியம் குறையாமல், இவ்வளவு விரிவாக தன்னிலை விளக்கம் கொடுக்க முன் வரும் உங்கள் பொறுமை, முதிர்ச்சி இவற்றுக்கு தலை வணங்குகிறேன்

உங்கள் வயதில் நான் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்று என் மனதில் எழும் கேள்வி உங்கள்  அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
முன்பு சொன்னது போல உங்கள் நம்பிக்கைகளை குலைத்து என் கருத்துக்களை வன்மையாக திணிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் இந்த வாதத்தை துவக்கவில்லை. ( அது நடக்காது என்பதோடு தேவையற்ற முயற்சி என்பதையும் நான் நன்கு உணர்ந்தவன்.)

தலித்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வேதனைகளை புரிந்து கொண்டு அவற்றை மக்களிடம் எடுத்து செல்ல முன் வரும் பலர் அவர்கள் போன்றே சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சாரார் கொச்சை படுத்தப்பட்டு ,  வன்முறைக்கும்    ஆளாக்கப்பட்டு கிட்டத்தட்ட பொது வாழ்க்கையில் இருந்தே துரத்தவும் பட்ட பின்னர் கண்டு கொள்ளாமல் இருப்பது  பற்றி எனக்கு நிறையவே வருத்தம் உண்டு. (அது மட்டும் அல்ல; அதை சமூக நீதி என்று நியாயப்படுத்துவதுடன் சாதனையாகவும் மார் தட்டி பிரகடனம் செய்வது வெறுப்பரசியல் இல்லாது வேறென்ன?)

அதை பற்றி  பேச, எழுத அச்சப்பட்டு ஒதுங்குபவர்கள் எப்படி நேர்மையாளர்களாகவோ அல்லது நடுநிலையாளர்களாகவோ இருக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி.

போகட்டும் விடுங்கள். என்னுடைய சொற்களில் இருந்த காட்டம் ஆசை என்ற தனிமனிதரின் மீது நடத்திய தாக்குதல் அன்று. அவை உங்களை நிச்சயம்  புண்படுத்தி இருக்கக் கூடும். மன்னித்துவிடுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் எதிர்வினையாற்றும் கூர்மையுடன் என் போன்றவர்கள் விழிப்புடன் இருக்க முடியும்.

உங்கள் கனிவான பதிலுக்கு மீண்டும் எனது பாராட்டுகள்.

அன்புடன் 
XXXXX



எனது பதில்:

அன்புள்ள XXXXX அவர்களுக்கு,

உங்கள் கருத்துகள் சிலவற்றுடன் நான் உடன்படவில்லை என்றாலும் உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஒரு கருத்துடன் கூட உடன்படாமல் ஆனால் கண்ணியமாக ஒருவருடன் உரையாட முடியும் என்பது காந்தியிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. ஆனால், நானே உங்களிடம் இடையிடையே கிண்டல் தொனியில் எழுதியிருக்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள்! உங்களிடமிருந்து நான் மேலும் ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்ணியம் என்பது தனிப்பட்ட சொத்து இல்லை என்பதுதான் அது. என்னை மிகவும் நெகிழவைத்திருக்கிறீர்கள். இந்துத்துவத்தை நான் துளிகூட ஏற்றுக்க்கொள்ளவில்லை. அதற்காக இந்துத்துவவாதிகளை நான் வெறுக்கிறேன் என்று அர்த்தமே இல்லை. அவர்களும் நம் தரப்பில் வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆதங்கம்தான். நிச்சயம், இடதுசாரிகள்  உள்ளிட்ட எங்கள் நண்பர்கள் தீவிர தொனியைக் கைவிட்டு நிதானமான உரையாடலை நிகழ்த்தினால் நீங்கள் மேலும் எங்கள் தரப்பின் நியாயங்களைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். அதேபோல் நீங்களும் அதீதமான தொனியைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  

நானும் சில காலம் வரைசங்கி’, ‘பக்த்’, ‘அரைடவுசர்ஸ்என்றெல்லாம் வலதுசாரிகளைக் கிண்டலடித்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் போட்டிருக்கிறேன். ‘என்றும் காந்தி!’ என்ற தொடரை நான் எழுதுவதற்காக காந்தியை மேலும் மேலும் படித்தபோதுசே, இந்த மனிதர் எதிர்த் தரப்பை எவ்வளவு கண்ணியமாக அணுகியிருக்கிறார். அவரைப் பற்றி எழுதும் நாம் எந்த அளவுக்குக் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறோம்என்பதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு நான் அப்படிக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன். கிண்டலைத்தான் நிறுத்திக்கொண்டேனே தவிர, விமர்சனத்தை அல்ல!

ஒரு வேண்டுகோள்! உரையாடலில் நம்பிக்கை வைத்தால் எப்படிப்பட்ட நெகிழ்வு கிடைக்கும் என்பதை, அப்படி நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் காட்டுவதற்காக என் வலைப்பூவிலும் ஃபேஸ்புக்கிலும் நம் உரையாடலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் பெயரில்லாமலே இதைப் பகிர்ந்துகொள்வேன். இது நிச்சயம் என்னை நல்லவனாகவும் உங்களை வில்லனாகவும் காட்டுவதற்காக அல்ல. நானும், 'Hail Hitler' என்றெல்லாம் போட்டு உங்களைக் கிண்டலடித்திருக்கிறேன். நம் இருவரிடமுமே, நமது நேரெதிரான சித்தாந்தங்களைத் தாண்டி, உரையாடல் எப்படி முகிழ்த்திருக்கிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.

உங்கள் மனதை நான் புண்படுத்தியிருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!

உரையாடலைத் தொடர்வோம்!


அன்புடன்
ஆசை