Tuesday, July 12, 2022

விடைபெறுகிறேன்… ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து!

இறுதி நாள் பணி...

ஆம்! ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெறுகிறேன்! 9 ஆண்டுகள் இந்த நாளிதழுடன் நான் மேற்கொண்ட பயணம் சென்ற புதனுடன் (06-07-22) முடிவுக்கு வந்திருக்கிறது. நானாக விரும்பி எடுத்த முடிவு என்றாலும், ஏற்பட்டிருக்கும் வலி அதிகமானது. 9 ஆண்டுகளுக்கு முன்பும் இப்படி ஒரு வலி ஏற்பட்டது. ‘க்ரியா’ பதிப்பகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து வெளியேறியபோது ஏற்பட்ட வலி அது.

கல்லூரிக் காலத்திலேயே ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். அப்போது அவர் ‘க்ரியா’ தமிழ் அகராதியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை உருவாக்கும் பணியை ஆரம்பித்திருந்தார். முதல் பதிப்பில் விடுபட்ட சொற்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் போன்றவற்றை எழுதிக்கொண்டுவந்து அவரைச் சந்திக்கும்போதெல்லாம் கொடுப்பது வழக்கம். படிப்பு முடித்தபோது, “க்ரியாவில் இணைந்துகொள்ளுங்களேன்” என்று அழைத்தார். பெரிய வாய்ப்பு அது. அப்போது எனக்கு வயது 23. ஆர்வத்தோடு அகராதிப் பணியிலும் பதிப்புப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும், அதன் முக்கியத்துவத்தை முழுமையாக அப்போது உணர்ந்திருந்தேன் என்று சொல்ல முடியாது.

ஒருநாள் பேராசிரியர் தங்க.ஜெயராமன் க்ரியா அலுவலகத்துக்கு வந்திருந்தார். மன்னார்குடியில் இளங்கலை படிக்கும்போது என்னுடைய துறைத் தலைவர் அவர். க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் நண்பர். மாலையில் புறப்படும்போது, நானும் அவரும் சேர்ந்து சென்றோம். தங்க.ஜெயராமன் சொன்னார், “ஆசைத்தம்பி, உங்களைப் பத்தி ராமகிருஷ்ணன் அவ்வளவு பெருமையா சொன்னார். உங்களுடைய ஆசிரியரா ரொம்பப் பெருமையா உணர்றேன்” என்றவர் ஒரு கணம் நின்றார். “ஒண்ணு சொல்லவா, உங்க வயசுல லெக்ஸிகோகிராஃபியில ஈடுபடுற ஆளுங்க அநேகமா இந்தியாவிலேயே இல்லை. நீங்க கோடியில ஒருத்தர்!”அந்தத் தருணம்தான் என்னை, எனது திறமையை, நான் ஈடுபட்டிருக்கும் பணியின் முக்கியத்துவத்தை வாழ்வில் நான் உணர்ந்த தருணம்.

அகராதியை விரிவாக்கித் திருத்தும் பணியில் பிரதான ஆசிரியர் குழுவாக ராமகிருஷ்ணன், ரகுநாதன், நான் மூவருமே பணியாற்றினோம் (ஏனையோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள்). எனது உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவே  அகராதியின் ‘துணை ஆசிரியர்’(Deputy Editor) பொறுப்பில் என்னை ராமகிருஷ்ணன் நியமித்தார். ‘துணை ஆசிரியர்: தே.ஆசைத்தம்பி’ என்ற பெயர் அந்த அகராதியின் தலைப்புப் பக்கத்தில் இடம்பெற்றபோது எனக்கு வயது 28. 

அதோடு வெவ்வேறு அகராதிப் பணிகள், க்ரியா பதிப்பித்த புத்தகங்களின் செம்மையாக்கப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அகராதியில் பணிபுரிந்ததால் அத்தனை துறைகளிலும் அடிப்படை அறிவு வேண்டும். இதற்காக ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்களையும் தேடித்தேடி சந்தித்து, உரையாடியது, அகராதி விரிவாக்கத்துக்கும் எனது அறிவு விரிவாக்கத்துக்கும் பேருதவியாக இருந்தது. கூடவே, க்ரியாவில் இருந்த 10 ஆண்டுகளில் முக்கியமான மொழிபெயர்ப்புகள், ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களின் திருத்திய பதிப்புகளில் மொழிபெயர்ப்பாளர்களுடன் பணிபுரிந்ததும் வளமான அனுபவம். இவையெல்லாம் பிற்பாடு நான் ஆற்றப்போகும் இதழியல் பணிக்குப் பெரும் பலமாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

திடீரென ஒருநாள் ‘தி இந்து’ அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. “தி இந்து குழுமத்திலிருந்து தமிழில் ஒரு நாளிதழ்தொடங்கப்போகிறோம். அதன் ஆசிரியர் குழுவில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறினார்கள். சந்தோஷமாக இருந்தது என்றாலும், அதை மறுக்க நான் யோசிக்கவே இல்லை. ஏனென்றால், என் வாழ்க்கை ‘க்ரியா’வுடனும், அகராதிப் பணியுடனுமானது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தேன். மறுநாள், ராமகிருஷ்ணன் என்னை அழைத்தார். சமஸ் அவருடன் பேசியதாகச் சொல்லி என்னிடம் பேசினார்.

சமஸ் எனக்கு மன்னார்குடி கல்லூரி கால நண்பர். அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் என் உலகமும் அவர் உலகமும் வெவ்வேறாகி இருந்தன. ஆனால், பரஸ்பர மதிப்பு இருந்தது. ஊருக்குப் போகும்போது எப்போதாவது சந்திப்பதும் உண்டு. ஆனால், ராமகிருஷ்ணனோடு அவர் நெருக்கமான உறவில் இருந்ந்தார். புதிதாக ஆரம்பிக்கவிருந்த ‘இந்து தமிழ்’ நாளிதழில் உருவாக்க அணியில் ஒருவராக, ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆளெடுப்புப் பணியை அவர் முன்னின்று மேற்கொண்டிருந்தார். “தமிழில் தரமான இதழியல் இல்லை என்று குற்றம்சாட்டும் நீங்கள், இப்போது அப்படி ஒன்று உருவாகும்போது அதற்குப் பங்களிக்க வேண்டாமா? ஆசை போன்றவர்கள் எங்களுக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்று ராமகிருஷ்ணனிடம் அவர் பேசியிருக்கிறார்.

ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார், “தமிழில் தரமான நாளிதழைக் கொண்டுவர வேண்டும் என்று இந்து குழும இயக்குநர்கள் விரும்புகிறார்கள் – இதற்கான முழுச் சுதந்திரத்தையும் தந்திருக்கிறார்கள். ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசோகனும் மிகுந்த சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கக் கூடியவர். எல்லாவற்றுக்கும் மேல் எனக்குக் கீழ் உள்ள அணிக்குத்தான் அவரைத் திட்டமிடுகிறோம். அதனால் ஆசைத்தம்பிஅனுப்புங்கள் என்று சமஸ் சொல்கிறார். ஆசைத்தம்பி, நீங்கள் க்ரியாவை விட்டுப் போனால் எனக்கு அது பெரிய இழப்புதான். ஆனால், இது உங்கள் எதிர்காலத்தை யோசிக்கும்போது இதழியல் மேலும் விரிந்த தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

அடுத்த நாளே புதிய நாளிதழ் குறித்து ராமகிருஷ்ணனின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ‘இந்து’வின் அன்றைய பதிப்பாளர் என்.ராம் சொல்லி, ஆசிரியர் அசோகனும், பிஸினஸ்லைன் முன்னாள் ஆசிரியர் சம்பத்தும் வந்திருந்தார்கள். மீண்டும் என்னிடம் பேசினார் ராமகிருஷ்ணன். நான் அரைமனதுடன் சம்மதித்தேன். நேர்காணலுக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு சமஸிடமிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘Now, We are standing on history. Yes, you are selected!’

ஆம், இந்த ஒன்பது ஆண்டுகளையும், அங்கு நான் பங்கெடுத்த நடுப்பக்கங்களில் நடந்த பணிகளைத் திரும்பிப் பார்க்கும்போது அது 100% உண்மை என்றே தோன்றுகிறது.

பத்திரிகைத் துறையில் அனுபவமே இல்லாதவனாகத்தான் உள்ளே நுழைந்தேன். என்னைப் போல மேலும் பலரையும் அவர்களுடைய வேறு துறை சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் பணிக்கு எடுத்திருந்தார்கள் என்றாலும், அது முற்றிலும் ஒரு புதிய விஷயம். அதோடு நான் சார்ந்த நடுப்பக்க அணி கலவையான ஆளுமைகளைக் கொண்டிருந்தது. ‘தினமணி’யில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில், 30 ஆண்டு பணி அனுபவத்தோடு வந்திருந்த சாரி சார், ‘விகட’னில் 25 ஆண்டு அனுபவத்தோடு வந்திருந்த சிவசு சார் போன்றோரைக் கொண்ட அணி. பிந்தைய ஆண்டுகளில் நடுப் பக்க அணியில்  எங்களோடு வந்து சேர்ந்துகொண்ட சந்திரமோகன், நீதிராஜன், புவியரசன், சுசித்ரா, மகேஷ், ராஜன் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். பத்திரிகைக்குள்ளேயே பலராலும் வித்தியாசமாகப் பார்க்கப்படும் அணியாக நாங்கள் இருந்தோம். அதன் தொடக்கக் கட்டத்தில் ஒரு அணியாக நாங்கள் சேர்ந்து 2 மாதங்களுக்குள் பத்திரிகை வெளிவர வேண்டி இருந்தது. மிகக் கடுமையாக உழைத்தோம். ஒரு பத்திரிகை உருவாவதை அங்குலம் அங்குலமாக நேரில் பார்ப்பதும், அதில் நாமும் ஒரு பங்காக இருப்பதும் திகைப்பூட்டும் அனுபவமாக எனக்கு  இருந்தது. 


மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன் நான். முதல் தலைமுறைப்  பட்டதாரி. ஆங்கில இந்து நாளிதழே எங்கள் வீட்டுப் பக்கம் எல்லாம் வராது. இப்படிப்பட்டவர்களைத்தான் புதிதாக வரும் தமிழ்ப் பத்திரிகை பிரதான கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள் நடுப்பக்க அணி மிகுந்த தெளிவோடு இருந்தது. அணியில் எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முடிந்தவரை ஒரு சமூகக் கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

***

நான் ‘இந்து தமிழ்’ குறித்துமகிழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்கின்றன. அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது. எங்கள் ஊட்டச்சத்தை எங்கிருந்து பெற்றோமோ, பெறுகிறோமோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது என்ற உணர்வு எங்களிடம் இருந்தது. அறிவுத் தளத்தில் கி.ரா., அசோகமித்திரன்,ஆ.சிவசுப்பிரமணியன், அ.மார்க்ஸ், இமையம், ஜெயமோகன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் முதல் பா.செயப்பிரகாசம்,பி.ஏ.கிருஷ்ணன், மாலன், சலபதி,டி.தர்மராஜ், ராஜன் குறை, ப்ரேமா ரேவதி, சுகிர்தராணி, ஸ்டாலின் ராஜாங்கம் வரை வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட பல நூறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் இடமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கம் இருந்திருக்கிறது. கி.வீரமணியின் கட்டுரையும் வந்திருக்கிறது, கமல்ஹாசனின் கட்டுரையும் வந்திருக்கிறது.

எங்களுடைய ஐந்தாவது ஆண்டு இதழில், எழுத்தாளர் அழகிய பெரியவன் இப்படி எழுதியிருந்தார், “ஒருவேளை ‘தி இந்து’ தமிழ் நாளேடு வெளியாகாமல் இருந்திருந்தால், அயோத்திதாசப் பண்டிதரோ, இரட்டைமலை சீனிவாசனோ, ஞானக்கூத்தனோ, இன்குலாப்போ, அஃ பரந்தாமனோ, நா.காமராசனோ, ரோஹித் வெமுலாவோ, ஜிக்னேஷ் மேவானியோ கௌரி லங்கேஷோ எந்தத் தமிழ் நாளேட்டின் நடுப்பக்கத்தில் இப்படி இடம்பிடித்திருப்பார்கள்? குடிச் சீரழிவு, சூழல் சீர்கேடு, மதவாதம், ஊழல், கல்வி வணிகம், மணல் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றுக்கு எதிராகக் கட்டுரைகள், செய்திகள் மூலம் மிகுந்த நெஞ்சுரத்தோடு ‘தி இந்து’ தமிழ் பணியாற்றியிருக்கிறது.”

காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர் என்று தலைவர்கள் தொடங்கி ஞானக்கூத்தன், அசோகமித்திரன், இன்குலாப்,எஸ்.என்.நாகராஜன், பிரான்சிஸ் கிருபா என்று சமகால எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் வரை பிறந்த நாள் / நினைவு நாளில் ஒரு பக்க, இரு பக்கச் சிறப்பிதழை வெளிக்கொண்டுவந்திருக்கிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தியிருக்கிறோம். ஆங்கில ‘லிட் ஃபெஸ்ட்’ போல தமிழிலும் விருதாளர்களுக்குக் கண்ணியமான தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ரூ. 5 லட்சம் தொகையுடன் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டதெல்லாம் மிக மகிழ்ச்சியான தருணம். அதைக் காட்டிலும் முக்கியமானது, எந்தச் சர்ச்சையும் எழாத வகையில் எங்கள் விருதாளர்கள் தேர்வு அமைந்தது: கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், தமயந்தி, கீரனூர் ஜாகீர் ராஜா… இப்படி நீளும் பட்டியலில் யாரைக் குறை கூறிட முடியும் அல்லது எந்தக் குழு அரசியல் நோக்கத்தை இதன் பின்னணியில் கற்பிக்க இயலும்? இதிலெல்லாம் நான் முக்கியப் பங்குவகித்தது குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டு!

***

இந்து தமிழ் நடுப்பக்கங்கள் தமிழில் என்ன செய்திருக்கின்றன – குறிப்பாக ஆரம்ப காலங்களில் – என்பது பிற்பாடு இதழியல் ஆய்வுக்குரிய ஒரு பொருளாக அமையும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. மொழிபெயர்ப்புகளில் மட்டும் அது செய்திருக்கும் வேலைகளே ஒரு வெகுஜன இதழில் அதுவரை நிகழாத சாதனை. 

சமூகத்துக்கும் படைப்புலகத்துக்கும் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கும் பல்வேறு செயல்பாடுகளையும் இயக்கங்களையும் இந்து தமிழின் அங்கமாக நாங்கள், முக்கியமாக சமஸ் தலைமையிலான நடுப்பக்க அணியினர் முன்னெடுத்திருக்கிறோம். 2014 பொதுத்தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் சமஸ் பயணித்து எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடருக்கு முன்னும் சரி அதற்குப் பிறகும் சரி அப்படியொன்று தமிழ் இதழியலில் வந்ததில்லை. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பயணித்து சமஸ் எழுதிய ‘கடல்’ தொடர் வெளியானபோதுதான் அப்படியொரு உலகம் இருக்கிறது என்ற பிரக்ஞையே சமவெளியில் உள்ள பலருக்கும் ஏற்பட்டது. மதுவுக்கு எதிராகவும், தமிழக நதிநீர் ஆதாரங்களை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், உள்ளாட்சிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியும் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய மூன்று தொடர்களும் முக்கியமானவை. அரசுப் பள்ளிகள் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ‘நம் கல்வி நம் உரிமை’ இயக்கத்தை முன்னெடுத்தோம். அதேபோல் சென்னை புத்தகக்காட்சிகளின்போது நடுப்பக்கங்களில் அளிக்கப்பட்ட முக்கியத்துவமே ஏனைய எல்லா ஊடகங்களும் அது நோக்கி வர வழிவகுத்தன. சென்னைப் பெருவெள்ளத்தால் பதிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்த சூழலில் ‘புத்தாண்டில் புத்தக இரவு’ இயக்கத்தைப் பதிப்பாளர்களுடன் இணைந்து முன்னெடுத்தோம். எழுத்தாளர்களுக்கு நிதி திரட்டும்போதெல்லாம் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கமும் அந்த முயற்சிகளோடு கைகோத்துக்கொண்டு அறிவிக்கப்படாத மீடியா பார்ட்னராக இருந்துவந்திருக்கிறது. இப்படி எவ்வளவோ விஷயங்கள்.

பிரிட்டனின் ‘த கார்டியன்’, அமெரிக்காவின் ‘த நியூயார்க் டைம்ஸ்’ என்று தொடங்கி ஆப்பிரிக்காவின், மத்திய கிழக்கு நாடுகளின், லத்தீன் அமெரிக்க நாடுகளின் பத்திரிகைகளை உள்ளடக்கி பாகிஸ்தானின் ‘டான்’, ‘தி இந்து’ ஆங்கிலம் வரை பல்வேறு உலக-இந்தியப் பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகள், பேட்டிகள், படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறோம். மூத்த சகா சாரி, நான், வெ.சந்திரமோகன், செல்வ புவியரசன் உள்ளிட்டோர் நடுப்பக்கத்துக்காக செய்திருக்கும் மொழிபெயர்ப்புகள் சில ஆயிரங்களைத் தாண்டும். நடுப்பக்கத்துக்காக காந்தி, நேரு, அம்பேத்கர் தொடங்கி சார்லி சாப்ளின், நெல்சன் மண்டேலா, வி.பி.சிங் வரையிலானவர்களின் உரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோய் ஜிஜெக், டேவிட் ஷுல்மன், வால்ட்டர் ஐஸக்ஸன், டேவிட் அட்டன்பரோ, தாமஸ் எல். ஃப்ரீட்மன், வரலாற்றறிஞர் சஞ்சய் சுப்பிரமணியம், கோபால்கிருஷ்ண காந்தி, யானிஸ் வருஃபாக்கீஸ், டேவிட் பொடனிஸ், ஈராக் போரில் அமெரிக்காவின் பங்கை அம்பலப்படுத்திய செல்சியா மேனிங், யுவால் நோவா ஹராரி, இர்ஃபான் ஹபீப், அய்ஜாஸ் அகமது, ராமச்சந்திர குஹா, ருட்கர் பிரெக்மென், அமர்த்தியா சென், ஜீன் த்ரஸே, ஷிவ் விஸ்வநாதன்  என்று பல உலக எழுத்தாளர்கள், இந்திய எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகள் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். 

கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். எண்ணற்ற கட்டுரைகளை எழுதினேன் என்றாலும், ‘என்றும் காந்தி’ தொடரை எழுதியதும், காந்தியின் 150 ஆண்டில் அது நூலாக வெளிவந்ததும் என்றும் நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள். இணைப்பிதழில் ‘மொழியின் பெயர் பெண்’ என்று ஒரு தொடரை எழுதினேன். இடையில் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ-பாதை புதிது’ தொடரையும், காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ தொடரையும் எழுதினேன்.

**

பல்வேறு கருத்துகளுக்குக் களமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கம் இருந்தாலும் நம்முடைய முதன்மை நோக்கம் மக்கள் நலன்தான். மக்களா, அதிகார வர்க்கமா என்ற கேள்வி எழும்போதெல்லாம் நடுப்பக்கம் மக்கள் பக்கமே நின்றிருக்கிறது. ஜல்லிக்கட்டு, பணமதிப்பு நீக்கம், பெருமாள் முருகன் பிரச்சினை உள்ளிட்ட கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல்கள், மீத்தேன் பிரச்சினை, சிறுபான்மையினர் - பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள், ஆணவக் கொலைகள் இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று உறுதிபடப் பேசியது.

பலருக்கும் பல விஷயங்கள் மறந்துவிடும் என்பதால் இதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 2017-ல் இஸ்லாமியச் சிறுவன் ஜுனைத் டெல்லி – மதுரா ரயிலில் அடித்துக் கொல்லப்பட்டான். அதற்குச் சொல்லப்பட்ட காரணம்: ‘அவன் மாட்டிறைச்சி சாப்பிட்டான்’ என்பது. மனசாட்சியும் ஈரமும் இந்தியப் பன்மைப் பண்பாட்டின் மீது பிடிப்பு உள்ளோரை உலுக்கிய சம்பவம் இது. அப்போது ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணி ஒரு முடிவெடுத்தது. இந்தப் படுகொலைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்துபவர்களை இனி ‘பசு குண்டர்கள்’ என்று குறிப்பிடுவது என்பதே அது (அப்போது எல்லா ஊடகங்களும் ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்று எழுதிக்கொண்டிருந்தன. இதைத் தலையங்கத்திலேயே காட்டமாக எழுதினோம். https://www.hindutamil.in/news/opinion/editorial/200206-.html இப்படிப் பல சொற்களை அது உறுதியாகக் கையாண்டது.

ஒரு வாசகனாகவும்கூட எனக்குத் தெரிய கூட்டாட்சிக்கும், சமூகநீதிக்கும் இவ்வளவு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்த வெகுஜன இதழ் ஒன்று கிடையாது. இளம் தலைமுறையினரை அரசியல்மயப்படுத்துவதை வெளிப்படையாகவே செய்தன நடுப்பக்கங்கள். நடுப்பக்கங்களின் பார்வைக்கு அடித்தளமாக இருந்தவர் காந்தி என்றால், அதற்கு மேலும் உரம்சேர்த்தவர்களாக பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றவர்கள் இருந்தார்கள்.

இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞரைப் பற்றிய நூலான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, அண்ணா பற்றிய நூலான ‘மாபெரும் தமிழ்க் கனவு. திராவிட இயக்கத்துக்குச் செய்யப்பட்ட மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று இது; ஆனால், இந்த இரு நூல்களுமே திமுக ஆட்சியில் இல்லாத சமயத்தில் கொண்டுவரப்பட்டவை.

முந்தைய தலைமுறை நவீனத் தமிழ் இலக்கியத்தால் நான் வளர்ந்தேன் என்றாலும், கிட்டத்தட்ட அரசியல் நீக்கமும் செய்யப்பட்டிருந்தேன். என்னை அரசியல்மயப்படுத்தியது காந்தியும் ‘இந்து தமிழ்’ நாளிதழும் சமஸும்தான். எல்லாக் கருத்துகளுக்கும் இடம் அளிப்பார் என்றாலும், ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சி போன்ற விஷயங்களில் துளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் சமஸ். என்றேனும் எங்களை அறியாமல் அத்தகு விஷயங்களில் பிசகு ஏற்பட்டுவிட்டாலும் சமஸ் கொதித்துப்போய்விடுவார். கடுமையாகத் திட்டுவார். கூட்டாட்சியை ஒரு கதையாடலாக மீண்டும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்கு அவருக்கும் நடுப்பக்கங்களுக்கும் உண்டு.

அரசியல்மயப்படுவது என்பது ஒரு கட்சியில் சேருவதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதோ அல்ல. மக்களை, அவர்களின் பிரச்சினைகளை அவர்களின் தரப்பிலிருந்து புரிந்துகொள்ள முயல்வதுதான் அரசியல்மயப்படுவது என்று கருதுகிறேன். அந்த வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் கிடைத்தது வாழ்நாள் முழுவதற்குமான மகத்தான கல்வி. 

***

எனது நடுப்பக்க சகாக்கள் சாரி சார், சிவசு சார், சந்திரமோகன், செல்வ புவியரசன், கே.கே.மகேஷ், த.ராஜன், ச.கோபாலகிருஷ்ணன், சண்முகம் ஆகியோருடன் அருகருகே இருந்து பணிபுரிந்ததில் கிடைத்த இதமும் அன்பும் அறிவும் அதிகம். எங்களுக்கிடையே எவ்வளவோ நெகிழ்வான தருணங்கள் உண்டு. குடும்பத்தினர் போலவோ கல்லூரித் தோழர்கள் போலவோதான் பழகியிருக்கிறோம். அவர்களுக்கு நன்றியும் அன்பும்! 

முக்கியமாக, தன்னைவிட முப்பது வயது இளையவர்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து நேராக அவர்கள் இருக்கைக்குச் சென்று பாராட்டும் சாரி என்ற வ.ரங்காச்சாரி அவர்களின் பணிவுக்கும் பெருந்தன்மைக்கும் முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். நாமெல்லாம் எத்தனை பேரை பாராட்டியிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு உண்டாகும். எவ்வளவு பெரிய சீனியர் அவர்! ஆனால், துளி ஈகோ இல்லாத மனிதர்! இடையில் கொஞ்ச காலம் இதழ் பிரிவில் இருந்தபோதும்கூட “ஆசை ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை அனுப்பியிருக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்களேன்” எங்கள் அறையை எட்டிப்பார்த்து கூறுவார். இப்படி அவர் கூறும்போது சத்தமாகவே கூறுவார் என்பதால், அருகில் உள்ள அனைவரும் அவரை வியந்து பார்ப்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் அவர் பிரதியில் தவறுகள் எதுவும் இருக்காது; ஆனாலும் துல்லியத்துக்கான மெனக்கெடல்; வயது பாராத மரியாதை. தினமும் ரயிலை விட்டு இறங்கிவரும்போது மிக்சர், கடலை மிட்டாய் என்று வாங்கிக்கொண்டு எங்கள் அணியில் உள்ள தின்பண்ட டப்பாக்களை வழிய விட்டுக்கொண்டிருப்பார். எனக்கு என்னுடைய அப்பாவை தினமும் நினைவுபடுத்தியவர் அவர். நான் அவரிடமிருந்து கற்ற விஷயங்கள் ஏராளம்.

என்னுடைய படைப்பிலக்கியப் போக்கு, பார்வைகள் சார்ந்து முக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதற்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் காரணமாக இருந்தது. கவிஞரும் சகாவுமாக இருந்த ஷங்கரும் அதற்கு ஒரு காரணம். என் கவிதைகள் குறித்த சுயவிமர்சனத்தை நான் செய்துகொள்ளவும், ஒரு நெடிய தடையை உடைத்துக்கொண்டு மீண்டும் எழுத உத்வேகமாகவும் அவர் இருந்திருக்கிறார். நாங்கள் முட்டிக்கொண்ட தருணங்கள்தான் அதிகம். அவற்றையெல்லாம் தாண்டி என்னை செழுமைப்படுத்திக்கொள்வதற்கு ஷங்கரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றியும் அன்பும். கூடவே, இலக்கியம் அரசியல் பேச வேண்டும் என்றும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குள் இருக்கும் படைப்பாளியின்மீது தாக்கம் செலுத்த வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியவர் சமஸ்.

அலுவலகத்தில் பக்கத்துப் பக்கத்து இருக்கை, பிறகு ஒரே தளத்தில் வீடுகள் என்று நெருங்கியவர் நண்பர் டி.எல்.சஞ்சீவிகுமார். வாழ்க்கையின் பல தருணங்களில் அவ்வளவு ஆதரவாகவும் அன்பாகவும் இருந்திருப்பவர், இருந்துவருபவர். அவரிடம் சண்டை போட்டவர்களுக்குக்கூட உதவிக்கு முதல் ஆளாக ஓடிப்போய் நிற்பவர். என் மீது எப்போதும் வாஞ்சை கொண்டிருப்பவர் ‘இந்து தமிழ்’ இணையதளத்தின் ஆசிரியர் பாரதி தமிழன். பல சமயங்களில் ஆபத்பாந்தவனாக அலுவலகத்தில் பலருக்கும் ஓடிச் சென்று உதவுபவர். என் எழுத்துகள், பணி இவற்றையெல்லாம் தாண்டியும் எனக்கு உதவுபவர்கள் இவர்கள். இருவருக்கும் என் அன்பும் நன்றியும்.

நிறையப் பேரைச் சொல்ல வேண்டும் என்றாலும், பட்டியல் நீண்டுவிடும் என்பதால், வேகமாகக் கடக்கிறேன். இவர்களிடமெல்லாம் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன். பல தருணங்களில் பல வகைகளிலும் உதவியும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட என் மேல் அன்பு செலுத்தியிருக்கிறார்கள். அரவிந்தன், கவிதா முரளிதரன், மானா பாஸ்கரன், நீதிராஜன், பிருந்தா, வள்ளியப்பன், களந்தை பீர்முகம்மது, ஜெயந்தன், ராம்குமார், செல்லப்பா, இசக்கிமுத்து, பாரதி ஆனந்த், சுசித்ரா, கே.கே.மகேஷ், சுவாமிநாதன்… என்று பத்திரிகையோடு தொடர்புடைய இணையதளப் பிரிவு தொடங்கி பதிப்பகம் வரையில் ஒவ்வொரு பிரிவிலும் பல சகாக்கள் நினைவில் வந்து செல்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.

***

வெகுஜனப் பத்திரிகையொன்றில் பணியாற்றுவது என்பது கண்ணுக்குப் புலப்படாத பல எல்லைகளுக்குள் இயங்குவது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் அழுத்தங்கள் ஒருபோதும் புரியாது. விடுபடல்கள், போதாமைகள் இருந்தாலும், எங்களால் முயன்ற அளவுக்கு முயன்றிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

இரண்டு நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். 2015-ல் தோழர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் தருணத்தில் அவரை அலுவல் நிமித்தம் நானும் தோழர் நீதிராஜனும் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது, தோழர் தொல்.திருமாவளவனும் அங்கே இருந்தார். நல்லகண்ணு அவர்கள் எம்மை அறிமுகப்படுத்தியபோது திருமாவளவன் அவர்கள் சொன்னார், “நேற்றுகூட உங்களைப் பற்றி நல்லகண்ணு ஐயா சொன்னார்!” நான் ஆச்சரியத்தோடு பார்த்தபோது, நல்லக்கண்ணு அவர்கள் தொடர்ந்து என்னுடைய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளைப் படித்துவருவதைச் சொன்னார். இன்னொரு நிகழ்வு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு ஆட்டோவில் நானும் நண்பர்களும் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது காந்தியைப் பற்றிப் பேச்சு வந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை ஆட்டோக்காரர் கவனித்துவந்திருக்கிறார். “தமிழ் இந்துல ஆசைன்னு ஒருத்தர் காந்தி பத்தி நல்லா எழுதுறார் சார். நான் தொடர்ந்து படிக்கிறேன்” என்றார்.  

பத்திரிகை துறையின் வீச்சு என்ன என்பதை எனக்கு உணர்த்திய இரு தருணங்கள். நானும் சில பணிகளைச் செய்திருக்கிறேன் என்ற உணர்வைத் தந்த இரு தருணங்கள்.

என் இதழியல் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் பலரும் வழங்கியிருக்கிறார்கள். மறைந்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுள் முதன்மையானவர். எஸ்.வி.ராஜதுரை, இரா.ஜவஹர் தொடங்கி ஜி.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.குப்புசாமி வரை எவ்வளவோ பேர் உத்வேகம் அளித்திருக்கிறார்கள். 

மனிதநேயம்,மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், நேரு, அண்ணா உள்ளிட்ட முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களை உடன் இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். எழுதுவதற்கான வாய்ப்பு, மிகப் பெரிய தளத்தில் மக்களைச் சென்றடையலாம், பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வந்த எனக்கு இதழியல் என்பது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய மாபெரும் சமூகக் கடமை என்பதையும் சேர்த்து சொல்லித்தந்தவர் அவர்… சமஸுக்கு நன்றி! 

நாங்கள் இவ்வளவையும் செய்வதற்கான சுதந்திரத்தையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்தவர் ஆசிரியர் அசோகன். என் வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் அவர் அளித்த அனுசரணையை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், நிர்மலா லெட்சுமண் உள்ளிட்ட ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர்கள் பலரும் எங்களின் செயல்பாடுகளுக்குப் பல தருணங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி!

என்னுடைய சகாக்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் மீண்டும் மிக்க நன்றியும் அன்பும். 

இப்போது விடைபெறுகிறேன். அடுத்தகட்ட பணிகளை விரைவில் அறிவிக்கிறேன்!

அன்புடன்

ஆசை


46 comments:

 1. மனோன்மணி, புது எழுத்துJuly 12, 2022 at 9:55 PM

  நல்வாழ்த்துகள். மனோன்மணி புது எழுத்து

  ReplyDelete
 2. தங்கள் பணி தொடரட்டும்

  ReplyDelete
 3. செல்லும் இடங்களும் சிறப்படையட்டும்

  ReplyDelete
 4. வாழ்த்துகள் தோழர்

  ReplyDelete
 5. கடந்து வந்த பாதையை ஆய்வு நோக்கோடு பட்டியல் இட்டு உள்ளீர்கள். பாராட்டுகிறேன். இதழியல் துறையில் தங்களைப் போல பலர் உருவாக வேண்டும்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள்💐

  ReplyDelete
 7. உங்கள் பணி மகத்தானது. க.சுவாமிநாதன்

  ReplyDelete
 8. வாழ்த்துகள்...

  ReplyDelete
 9. நெகிழ்ச்சி வாழ்த்துக்கள்…

  ReplyDelete
 10. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் 💐

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ஸார். மென்மேலும் உயர்க..!

  ReplyDelete
 14. சிறப்பு.
  வாழ்த்துகள்..
  தங்கள் சீரிய பணி தொடரட்டும்...

  ReplyDelete
 15. Prince Ennares PeriyarJuly 13, 2022 at 12:40 AM

  சிறக்க!

  ReplyDelete
 16. இன்னும் செதுக்கிக்கொள்ளுங்கள் இந்த சமூகத்தின் உளியைக் கொண்டு

  ReplyDelete
 17. வாழ்த்துகள் தமிழ்ப்பணி தொடரட்டும்.

  ReplyDelete
 18. க்ரியா நினைவோடை அற்புதம். தங்களுடைய பத்திரிக்கை துறை பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. வாழ்த்துகள்

  ReplyDelete
 20. முனைவர் ஜம்புலிங்கம்July 13, 2022 at 6:40 AM

  உங்கள் பணி அளப்பரியது. புதிய தளத்தில் தடம் பதித்து சாதனை புரிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. தங்கள் எழுத்துகளை இந்து தமிழில் ஆவலோடு படித்து வந்தவன் என்ற நிலையில், தற்போது தாங்கள் விலகுவது சிறிது வருத்தமாக இருந்தாலும் மீண்டும் விரைவில் மக்கள் முன் தாங்கள் வரவேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

  ReplyDelete
 22. மேலும் சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 23. புதிய பயணம் சிறக்க வாழ்த்துகள் சார்♥

  ReplyDelete
 24. பசு. கவுதமன்July 13, 2022 at 7:43 AM

  மேலும் சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 25. இதழோடும் மனிதர்களிடம் உங்களுக்கு இருக்கும் பிணைப்பும், உங்களின் அர்ப்பணிப்பும், பரந்த பார்வையும் ஆச்சரியப்படுத்துகிறது. நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 26. வாழ்த்துகள் புதிய பணி சிறக்க

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள், வாழ்க வளர்க

  ReplyDelete
 28. தமிழ் அறிவுலகத்திற்கு இந்து-தமிழ் நாளிதழின் நடுப்பக்கங்கள் அளித்துவரும் பங்கு காத்திரமானது. பொறியியல் தொடர்பாகவும் கிழக்காசிய அரசியல் தொடர்பாகவும் நான் இந்துவில் எழுதிய பல கட்டுரைகளுக்கு ஊக்கம் நல்கியவர்கள் நீங்களும் சமஸும். தங்களது பயணம் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. கண்கள் குளமாகிவிட்டன.

  ReplyDelete
 30. Blowing one's own trumpet that too out of proportion. இந்து நாளிதழ் ஆரம்பித்த நாளிலிருந்து படித்தவர்களின் நானும் ஒருவன். Notorious for its plagearism, Anglicised Tamil dominated by high caste Samskritised terms, unwilling to mend. It is the duty of jounalistic interpreters, translators to present the news to the common mas.Nothimg to boast. Dailies like Tamil Nadu and Dinamani were noted for their neutral presentation. As such there is no unbiased news. Very...very...lengthy deascription about print media fellows.. Of late news reading population is sadly diminished due to TV and mobile media.

  ReplyDelete
 31. உங்களின் வாசகன் என்ற வகையில் தமிழ் இந்துவில் உங்கள் பணி பிரமாதமானது. உங்களின் பல கட்டுரைகள், தொடர்கள் சிறப்பானவை என்றாலும் " என்றும் காந்தி" தொடர் அதன் உச்சம் எனலாம். உங்களின் அடுத்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் nanbare

  ReplyDelete
 32. உங்களின் வாசகன் என்ற வகையில் தமிழ் இந்துவில் உங்கள் பணி பிரமாதமானது. உங்களின் பல கட்டுரைகள், தொடர்கள் சிறப்பானவை என்றாலும் " என்றும் காந்தி" தொடர் அதன் உச்சம் எனலாம். உங்களின் அடுத்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பரே

  ReplyDelete
 33. உங்களின் வாசகன் என்ற வகையில் தமிழ் இந்துவில் உங்கள் பணி பிரமாதமானது. உங்களின் பல கட்டுரைகள், தொடர்கள் சிறப்பானவை.
  ன அடுத்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 34. விடை பெறுங்கள் ஆயிரம் கேள்விகளோடு. இது போன்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. ஆசை ஆசையாய் பல அணியின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். முதலில் சமஸ், இப்போது ஆசை என காந்தீயர்கள் ஏன் தமிழ் இந்துவை விட்டு வெளியேறுகிறார்கள் எனத் தெரியவில்லை. எது ஜனநாயகம், என நடுப்பக்கக் கட்டுரைகள் மூலம் புரியவைத்தவர்கள். நல்லன எல்லாம் தந்தவர்கள். உங்கள் அடுத்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
  விளதை சிவா

  ReplyDelete
 36. அருமை, வருங்காலம் வளமுடன் அமைய வாழ்த்துகள்.
  - பிரியசகி

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. ஏதோ ஏதோ தினசரியில் என்னென்னமோ படித்துக்கொண்டிருந்த நான், இந்து தமிழ் திசை வந்த பிறகு தான் முழுமையாக உணர்ந்தேன். ஆங்கில இந்து நாளிதழ் படிப்பதற்கு அவ்வளவு உவப்பாக இல்லாத போது, எனக்காகவே தமிழ் இந்து வந்தது போல மகிழ்ச்சியடைந்தேன். நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது, முக்கியமாக அரசியல் புரிதல்கள். எழுத்தாளனாக வேண்டுமென்ற ஆசையே இந்து தமிழ் நாளிதழின் நடுபக்கத்தினால் தான் துளிர் விட்டது. நடுபக்கத்தில் எழுத வேண்டும் என்பது எனது பெருங்கனவுகளில் ஒன்று.அந்த நாளிதழின் உருவாக்கத்தில் உள்ள உழைப்பை அறியும்போது பிராமிப்பக உள்ளது. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 39. சிறப்பு.. செல்லுமிடமும் சிறக்கட்டும்..

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள் 💙

  ஒரு பறவை போல சிறகு விரித்து வானை அளக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. தமிழ் இந்துவில் உங்கள் பணி இவ்வளவு சிறப்பாய் இருக்கும்பொழுது ஏன் வெளியேறுகிறீர்கள்?எங்கு சென்றாலும் உங்களின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
 42. வாழ்க!

  ReplyDelete
 43. பணி தொடர வாழ்த்துகள்- சென்னிமலைதண்டபாணி

  ReplyDelete