Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Tuesday, March 11, 2025

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறா மீனின் வாயானால்...

வார்ஸன் ஷைர்

ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)


சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார். தன் பூர்வீக நாட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குரலில் அவர்கள் தேசத் தொல்கதைகளை வார்ஸன் ஷைர் பதிவுசெய்துகொள்கிறார். பிறகு, அவற்றுக்குத் தன் கவிதைகளில், இன்ன பிற எழுத்துகளில் உரு கொடுக்கிறார்.

Saturday, March 8, 2025

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?



ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Monday, March 11, 2024

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறாமீனின் வாயானால்...



ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)

சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார்.

Friday, March 8, 2024

மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்?


ஆசை

பகுதி-1

இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தன் தாயார் புத்தலிபாய், மனைவி கஸ்தூர்பாயில் தொடங்கி கடைசியில் காந்தி சுட்டுக்கொல்லப்படும்போது அவருடைய ஊன்றுகோல் போல் கூட நடந்துவந்த மனு, ஆபா போன்றோர் வரை காந்தி வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் ஏராளமானோர். காந்தியைப் போல் பெண்களை ஈர்த்த தலைவர்கள் இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வெகு குறைவு. எனினும், இளமைப் பருவத்தில் காந்தி வழக்கமான இந்திய ஆண் போலவே பெண் குறித்த பார்வையைக் கொண்டிருந்தார். 13 வயதிலேயே காந்திக்குத் திருமணம் செய்யப்படுகிறது. தன் மனைவி கஸ்தூர்பாவை ஒரு போகப் பொருளாகவே காந்தி ஆரம்பத்தில் கருதி வந்திருக்கிறார். காமமும் சந்தேக உணர்ச்சியும் அவரை ஆரம்பத்தில் வாட்டிவதைத்தன.

Saturday, July 24, 2021

பொன்முகலி கவிதைகள்: கால நதிக் காதல்


ஆசை

‘மென்மையான ஒரு பெண்ணுடலுக்குச் சூரியனின் கதிர்கள் மட்டுமே உரிய மரியாதை செலுத்துகின்றன’ என்றார் ஸ்வீடிஷ் பெண் கவிஞர் எடித் சோடெர்கிரான். பொன்முகலியின் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு பெண்ணின் உடலுக்கு, காதலுக்கு நிலவொளியும் விண்மீன்களின் ஒளியும்தான் உரிய மரியாதை செலுத்துகின்றன என்று தோன்றும் அளவுக்கு அவை குளிர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. இரவில் எழுதப்பட்ட கவிதைகளோ என்று நினைக்கும் அளவுக்கு இருளும் இரவும் நிலவும் விண்மீன்களும் அதிகமாக இடம் பிடிக்கின்றன.
 ‘உன் இரவுகளுக்கென நிலா வளர்க்கும்
பிரத்யேகமான இரு கண்களைத்
தேடிக் கண்டடை’
என்கிறார் ஒரு கவிதையில்.

‘விண்மீன்கள் உன் கண்களாய் மாறி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற
இவ்விரவில்,
நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?’
என்று ஆரம்பிக்கிறது இன்னொரு கவிதை. விண்மீன்கெளல்லாம் உண்மையில் தகிக்கும் சூரியன்கள் என்றாலும் கவிஞர்கள் அவற்றை எவ்வளவு குளிர்ச்சியானவையாக மாற்றிவிடுகிறார்கள்!

இதம்

இதம், கவித்துவம் போன்ற பண்புகள் கவிதையில் தடை செய்யப்பட்ட வஸ்துகளோ என்ற அளவுக்குச் சந்தேகம் ஏற்படும் இந்நாட்களில் பொன்முகலியின் பெரும்பாலான கவிதைகள் இதமாக இருக்கின்றன.

‘நிலவு ஒரு தும்பை பூவைப்போல
வானத்தில் மலர்கிறது’
என்பது போலெல்லாம் நவீனக் கவிதையில் யாரும் எழுதத் துணிய மாட்டார்கள். ஆனால், பொன்முகலி எழுதுகிறார். இவ்வரிகளின் எளிமை முதலில் இவ்வரிகளைச் சாதாரணமாகக் காட்டினாலும் நிறுத்தி இன்னொரு முறை வாசிக்கும்போது அழகில் பொலிகிறது.

‘என் மீது கவிகிற இரவுகளில்
பூக்கிற விண்மீன்
நீதானே?’
எனும்போது ஒரே நேரத்தில் ரொம்பவும் சாதாரணமாகவும் அதனாலேயே அழகாகவும் இருக்கிறது.

சில கவிதைகளில் காட்சியில் இருக்கும் நிசப்தத்தின் ஆழம் கடுமையாக நம்மைத் தாக்குகிறது:
‘பௌர்ணமி இரவுகளில்,
அவள் உடல்.
தாழம்பூ வாசனையேறிக் கிடக்கிறது.
அன்றைய இரவின் மீது பனி
நிசப்தமான கடுமையுடன் பொழிகிறது’
என்ற வரிகள் சப்தமின்மைக்கும் ஒரு பேரிரைச்சல் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

’…நகரும் நொடிமுட்களின் சத்தம்
ஓர் அருவியின் பேரிரைச்சலாய் மாறி
செவிப்பறையில் விழுந்து
நினைவுகளைத் துரத்துகின்றன
என்ற கவிதை வரிகளில் ஒன்றைப் பிடித்து ஒன்று என சொற்கள் சேரும்போது காட்சிகள் உருவாகி, அந்தக் காட்சிகளின் ஓசைகள் உருவாகி, அவை உணர்வுகளாகின்றன.

காதலின் எரிபதம்

இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் பிரதான பாடுபொருள் காதல்தான். அதுவும் எப்படிப்பட்ட காதல்? ‘அவன் என்னை அந்தரத்தில் ஒரு வானவில்லாக’ மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் காதல். இந்தக் காதல் கவிதைகள் பலவற்றையும் சங்கக் கவிதைகளின் தொடர்ச்சி என்றும் கூறலாம். குறிப்பாக,
‘இரவுகளில் நான் உறங்குவதில்லை
எனது உடலில்
மலர்ந்துதிர்கிற பூக்களைப்
பார்த்தபடியிருக்கிறேன்’
என்ற கவிதை அதன் கச்சிதத் தன்மையாலும் கவித்துவத்தாலும் பொருளாலும் குறுந்தொகையின் தொடர்ச்சியாகிறது.   

காதலின் முறுகுபதம் தாபம். இந்தக் கவிதையைப் பாருங்கள்:
‘பசிய குளங்களின் கரைகளில்
நிலவைச்  சிறு துண்டுகளாக வெட்டிப்  புதைத்துச் செல்பவளே.
உன் தடங்களின் மீது என் தாபம்
எப்படி தூண்டிவிடப்பட்ட தீபத்தைப்போல
பிரகாசமாய் எரிகிறது பார்.’
என்ற வரிகள் பிரமிளின்
‘கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து அணையாது எரியும் ஒருபெயர்
நீ’
என்ற வரிகளின் தாபத்தையும் அக சந்தத்தையும் தீவிரத்தையும் நினைவுபடுத்துகின்றன. மேலும், இந்தக் கவிதை ஒரு ஆணின் நோக்கிலிருந்து எழுதப்பட்டிருப்பது சிறப்பு. காதலின் முறுகுபதம் தாபமென்றால் எரிபதம் புணர்ச்சி:
‘எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம்
பள்ளத்தாக்கில் வீசப்பட்ட உடலைப் போல
என் உயிரைச் சிதறடித்துவிடக் கூடிய
ஒரு புணர்ச்சி.’

உடலை அல்ல, உயிரைச் சிதறடித்துவிடக் கூடிய புணர்ச்சி என்பதைக் கவனிக்க வேண்டும்.

உடலே உன்னதம்

‘ஆன்மா என்பது உடலின் சிறை’ என்றார் மிஷெல் ஃபூக்கோ. உடலைக் கொண்டாடும் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் முக்கியமானவை. உடல் என்பது,
‘வெறுமனே
ஓர் ஆன்மா வசித்துச் செல்கிற
கூடு இல்லை.
வேட்கைகளின் நீர் கொந்தளிக்கிற
பசிய கடல்’
என்கிறார் பொன்முகலி ஒரு கவிதையில். ‘இந்த உலகம் உடல்களால் ஆனது’ என்கிறார் இன்னொரு கவிதையில். உடல்-ஆன்மா என்ற இருமையில் உடலைப் பழித்தும் இழித்தும் சாஸ்வதமற்றது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் கூறுவது மரபு. உயிரைச் சிதறடித்துவிடும் புணர்ச்சியைக் கேட்பவளுக்கு சாஸ்வதமாவது மண்ணாவது. உடல் என்பது நிரந்தரமின்மையின் அழகு, நிரந்தரமின்மையின் கவிதை. அதைப் பாடுகிறார் பொன்முகலி.
‘மனதின் பாசாங்குகளற்ற
என் உடலை நான் நிச்சயமாய் நேசிக்கிறேன்’
என்கிறார்.

 (‘ஆன்மாவிலிருந்து
உடலை விடுவிக்கவே
நம்
ஒட்டுமொத்த இன்பத்தையும்
கொண்டு
தாக்குதல் செய்துகொள்கிறோம்’ என்ற என் வரிகளும் இங்கே நினைவுக்கு வருகின்றன.)

இன்னொரு கவிதையில்,
 ‘எனக்கு ஒரு மின்னலைக் கொடு
அடிவயிற்றில் மின்னி
நொடிப்பொழுதில்
உடலை பஸ்பமாக்கும்
ஒரே ஒரு மின்னல்’
என்று கவிஞர் கேட்கிறார். அவ்வளவுதான்! ஆன்மாவும் வேண்டாம் சாஸ்வதமும் வேண்டாம். கணப் பொழுதின் மின்னலுக்கு அவை ஈடாகுமா?  ஒரு கவிதையில் தாழம்பூக்களைச் சூடிக்கொள்கிறாள் கவிதையில் வரும் பெண்.
‘அவை எந்நேரமும்
அவளை ஒரு வெந்நீர் ஊற்றைப் போல வைத்திருந்தன’
என்கிறார் கவிஞர். வெந்நீர் ஊற்றின் தாபத்தை யாரால்தான் அணைக்க முடியும்? ஏன் அணைக்க வேண்டும்? அந்த தாபத்தில்  குளிக்கக்கூடிய ஒருவனைப் பார்த்து,
‘இரு முலைகளுக்கிடையில் மலரும்
எல்லா மலர்களும்
உனக்கே உனக்கே’ என்கிறார் கவிஞர்.

’ஊத்தைக் குழி’ என்று சித்தர்கள் காலந்தொட்டு அருவருத்தும் புறந்தள்ளியும் வந்த ஒன்றை நவீனப் பெண் கவிஞர்கள் வந்துதான் பிரகடனம்போல், பெருமிதம்போல் முன்வைத்தார்கள். அவர்களின் தொடர்ச்சியாக  பொன்முகலி வருகிறார்:
‘மீன்களற்ற அமைதியான கடலில்
அவள் யோனி
ஒரு வெண்சங்கைப் போல்
மிதக்கிறது’
என்ற வரிகளின் மூலமும்,

‘புறாக்களின் சிறகுகளைப் போல
உங்கள் யோனியின் இதழ்கள்
ஏன் படபடவென அடித்துக்கொள்கின்றன?’
என்ற வரிகளின் மூலமும் சித்தர்களுக்கு எதிரிடையான அழகியலை முன்வைக்கிறார். யோனியை ஓர் எதிர்நாகரிகமாகச் சித்தரிக்கிறார்.      

தோள் மீது ஒரு புரவி

விடுதலையை, அடிப்படையில் அகவிடுதலையை, குறித்து நாம் மிகைக் கற்பனைகள் கொண்டிருக்கிறோம். அது அவ்வளவு எளிதல்ல என்கிறார் கவிஞர்:
‘இறந்து போவதைப் போல
வேறொன்றாவதும்
கடினமானதொரு விடுதலை.’

விடுதலை என்பது உண்மையில் வெளியில் இல்லை; அதை நாம்தான் குதிரைபோல நம் தோளில் சுமந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்:
‘தோளில் சுமக்கிற புரவியை
கீழே விடு… அதன் மீதேறிப் பற, பற, பற… காற்றோடு கலந்துவிடு…’
எனும்போது ஒரு நெருக்கடியைக் கவிதை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது; நாம் சுமக்கும் புரவியை இறக்கிவிட வேண்டும் என்ற பதற்றத்தை ஏற்பட்டுவிடுகிறது; அப்படிச் செய்ய முடியாததன் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது. இதைப் பெண்ணியக் கவிதையாக வாசிக்கச் சாத்தியம் இருக்கிறது என்றாலும் ஆண்-பெண் வேறுபாடின்றி எல்லோருடைய விடுதலைக்காகவும்தான் இந்த வரிகள் பேசுகின்றன.
‘எப்படி, எந்தப் புதிருமில்லாது
திருப்பங்களும் ரகசியங்களும் இல்லாது
வெளிப்படையாய் எளிமையாய்
சிலருக்கு வாழ்க்கை இருக்கிறது?
ஒருவேளை அவர்களுடைய ரத்தத்தில்
தீ இல்லாது இருக்கலாம்.
… எனக்கோ, நடனத்திற்காய் வளர்க்கப்படுகிற தீயைப்போல,
வாழ்வு சாகசமாய் ஒளிர்ந்தபடியே
எரிந்துகொண்டிருக்க வேண்டும்.’
என்கிறது ஒரு கவிதை. ரத்தத்தில் தீ இல்லாததால்தான் செத்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  இதுபோன்ற சில கவிதைகள் அழகான கவித்துவப் பிரகடனங்களாக இருக்கின்றன. அதேபோல் தனது முதல் தொகுப்புடன் வந்திருக்கும் கவிஞர் எப்போது கவிதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும்:
‘வாழ்தல் உனதொரு பழக்கமாக
முற்றிலுமாய் மாறிவிடுகிற அக்கணத்திலிருந்து
தயவுசெய்து நீயும் எழுதுவதை நிறுத்திவிடு.’
என்ற வரிகள் கவிதையோடும் பழக்கத்தோடும் போராடும் எனக்குத் தனிப்பட்ட முறையில் குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றன.    

காலநதி

காலத்தின் மேல் பொன்முகலிக்கு இருக்கும் ஈர்ப்பைப் பற்றியே தனியாக எழுத வேண்டும். காலம் அவரைத் தொந்தரவு செய்கிறது. அதனால்தான்,
‘காலம் ஓர் ஆறு என்று
வசீகரமாக எழுதிய ஒருவனை’
காதலிக்க ஆரம்பிக்கிறார். (உள்ளபடி, River of Time என்பதை ‘காலநதி’ என்றோ ‘காலம் என்றொரு நதி’ என்றோ, ‘காலமென்ற நதி’ என்றோ மொழிபெயர்த்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்). அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி அற்புதமானது:
‘கடலலைகளைப் போல
என் அறைக்குள் இரவு முழுவதிலும்
ஆர்ப்பரிக்கிற அவ்வரி
நள்ளிரவில் என் நெற்றியிலிடுகிற முத்தங்கள்
என் நினைவுகளை
உறக்கத்தின் பேராற்றுக்குள்
ஒரு புன்னகையோடு
நழுவவிட்டுக் கொண்டிருந்தன.’
ஆனால், ‘காலநதி’ என்ற கருத்தாக்கத்தின்படி காலமானது ஒரு நேர்க்கோட்டில் செல்வது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற வரிசை அதற்குண்டு. கவிஞரோ தன் கவிதையில் காலத்தைக் குழம்பவிடுகிறார்; வரிசை மாற்றிவிடுகிறார். ‘உண்மைகளைத் தேடி அலைகிறவனைப் பற்றி சில குறிப்புகள்’ கவிதையில் ஒருவன் நடந்து நடந்து ஓராயிரம் ஆண்டுகள் பின்னே வந்துவிட்டதை உணர்கிறான்:
‘காலம் கடிகையைப் போலன்றி
பின் நோக்கியும் நகரக்கூடியது
என்கிற சிறு உண்மையைக் கண்டுபிடித்த களிப்பில்
வானத்தைப் பார்த்துக் கிடந்தான்.’ இவ்வரிகளில் இடம்பெற்றிருக்கும் ‘சிறு உண்மையை’ என்ற சொற்கள்தான் இந்த வரிகளை ஆழமானதாக மாற்றுகின்றன. காலம் காலம் என்று சொல்லி அதற்கு எல்லோரும் மண்டை பெருக்கச் செய்துவிட்டார்கள்; கவிஞர் அதைச் சிறு உண்மைக்குள் அடைத்து, ஓரத்தில் உட்காரவைக்கிறார். இன்னொரு கவிதையில் காலத்தின் பிறப்பைப் பேசுகிறார்:
‘கள்ளுண்டு
சொல் விண்டு
காலம் உரைத்திட்ட
வித்தையை நோக்கு.’
ஆக, காலத்துக்கும் சொல்லுக்கும், சொல் பிறப்பதற்குக் காரணமான கள்ளுக்கும் ஏதோ தொடர்புண்டு. காலம் இருப்பதல்ல சொல்லப்பட்டது, புனையப்பட்டது, அதுவும் யாரோ ஒருவனின் மது மயக்கத்தில் புனையப்பட்டது என்று கவிதையிலிருந்து விரித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘’அடிபட்ட புறாவைப் போல வீஈஈஈஈழும் காலம்’ என்று போகிற போக்கில் கவிஞர் எழுதிச்செல்லும் வரியொன்று அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
‘யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?’ என்று நகுலன் கேட்கிறார். பொன்முகலியோ யாருமற்ற வீட்டில் கடிகாரத்தைப் பொருத்துகிறார். அந்த வீட்டை,
‘உடைத்து உடைத்து
நகர்கிற நொடிமுள்’
அங்கே காலத்தை நிகழச் செய்கிறது.

’காலம் என்று சொல்லும்போது நிகழ்வது என்பதைத் தாண்டி நாம் வேறு எதையும் குறிக்கவில்லையென்றால் எல்லாமே காலம்தான்’ என்கிறார் இயற்பியலர் கார்லோ ரோவெல்லி.

‘நீ வந்தாய்
காலம் முன் போனது.
பின் போனது.
இருந்தும் இல்லாமலும் ஆனது.
நான்
உன் இதழ்களில் முத்தமிட்டேன்.
… நீ நிகழ்ந்தாய்’ என்று எழுதுகிறார் கவிஞர். காதல் நிகழ்கிறது. அதனாலேயே காலமாக ஆகிறது. ‘தாழம்பூ’ கவிதையைப் படிக்கும்போது, தாழம்பூவின் வாசத்துக்கென்று ஒரு காலம் இருந்தால் அதில் வாழ்கிறார் கவிஞர் என்று தோன்றுகிறது.

ஒரு கணம் என்பது பொன்முகலியைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு காலத்தைச் சேர்ந்ததல்ல. அதனால்தான்,
‘அவன் உடல்
சுக்குநூறாக வெடித்து
எல்லாக் காலங்களிலும் சிதறி விழுந்தது.’
என்கிற வரிகளில் ஒரு கணம் எல்லா காலத்தையும் போய்ச் சேர்கிறது. அதேபோல், இன்னொரு கவிதையில்
‘உடல் எல்லாத் திசைகளிலும்
எழும்பிப் பறக்கிறது.’

காலம், வெளி என்ற கருத்தாக்கங்களை (உண்மையில் இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவைதான்) கவிஞர்  நெகிழ்வு கொள்ள வைக்கிறார்.

மூன்றாவது கண்

மெய்ம்மையின் பரிமாணங்களையும் சாத்தியங்களையும் கவிஞர் ஆழ்ந்தும் விரித்தும் பார்க்கிறார்.
‘மூன்றாவது கண்
எனக்  கனவுக்குப் பெயரிட்டேன்.’
என்ற வரிகளில் கனவை ‘மூன்றாவது கண்’ என்று அழைக்கும்போது சிவனின் ‘மூன்றாவது கண்’ என்ற மரபார்ந்த பயன்பாட்டைத் தாண்டிப் பார்க்க வேண்டும்; மெய்ம்மையின் வேறு உலகங்களைப் பார்ப்பதற்கான திறப்பு என்று அதைக் கருதும்போது அசாதாரணமான சாத்தியங்களை அது திறந்துவிடுகிறது.
‘உண்மையின் எந்தக் கரையில்
நின்றாலென்ன?
சாத்தியங்களின் எண்ணற்ற கதவுகளைத் திற’
எனும்போது உண்மை தட்டையானதோ ஒற்றையானதோ அல்ல என்று நமக்குக் கவிஞர் உணர்த்துகிறார். இன்னொரு கவிதையில்,
‘காண முடியாதவையெல்லாம்
இல்லாதவையா?’
என்ற வரிகள், குவாண்டம் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் ‘நிலாவை நான் பார்க்காவிடில் அது இல்லை என்று அர்த்தமா? என்று குயுக்தியாகக் கேட்ட ஐன்ஸ்டைனின் கேள்வியை நினைவுபடுத்துகின்றன. கூடவே, பாரதியின் ‘நிற்பதுவே நடப்பதுவே’ கவிதையையும் இந்த வரிகளுடன் பொருத்திப்பார்க்கலாம். வேறோர் உலகம், இணை உலகம் பற்றிய விசாரங்களும் ஆங்காங்கே வருகின்றன. ‘இரு பாதைகளுக்கு இடையில் இருக்கும் அரூபமான’ பாதைகளில் செல்வதைப் பற்றி ஒரு கவிதை பேசுகிறது. 
’நீ பார்க்காத உலகத்தில்
நீ பார்க்காத சூரியன்கள்
தினம், தினம்
வெடித்துச் சிதறுகின்றன’
எனும் வரிகளும்,
‘எல்லாவற்றையும் மிதக்க வைக்கிற கடலொன்று
உன் கண்களுக்குப் புலப்படாமல்
உன் பக்கவாட்டில் பொங்கிக்கொண்டிருக்கிறது’
வரிகளும் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் நின்று நம்மை அழைக்கின்றன.

காதல், தனிமை, மரணம், காலம் போன்ற ஒருசில கருப்பொருள்களுக்குள் பொன்முகலியின் கவிதைகள் அடங்கிவிடுகின்றன. அவற்றையே திரும்பத் திரும்ப ஆலாபனை செய்கிறார். எளிய சொற்களால்  ஆன ஆலாபனை. சொற்களிடமிருந்து சுமைகளை அகற்றுவதால் மேலும் மேலும் ஆழம் கூடுகிறது. அதுவும் காதல்வயப்பட்ட பெண் ஒருத்தியின் குரலாய் வந்து விழும் சொற்கள் நிலவொளியின் குளிர்ச்சியுடன் இருக்கின்றன. அதே நேரத்தில் குறைவான கருப்பொருள்கள், அதிக அளவிலான கவிதைகள், பெரும்பாலும் ஒரே மாதிரியான தொனி போன்றவை சலிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டேன். அப்போது படித்தபோது இரண்டு மூன்று கவிதைகள் மட்டுமே பிடித்திருந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எடுத்துப் படித்தபோது புத்தகம் திறந்துகொண்டது. சிறிதும் பெரிதுமாகக் கிட்டத்தட்ட முந்நூறு கவிதைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 50 கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. (வெறும் 50 கவிதைகளுடன் தொகுப்புகள் வருவது வழக்கமென்பதால் ஒரு தொகுப்பில் ஒருவருக்கு 50 கவிதைகள் பிடித்திருப்பது நல்ல எண்ணிக்கையே). பிடிக்காத கவிதைகள் சிலவற்றிலும் பிடித்த கவிதைகள் இருக்கின்றன. அதிக அளவில் கவிதைகள் இருப்பது அயர்ச்சியூட்டுவது. 75 கவிதைகளையாவது பொன்முகலி நீக்கியிருக்கலாம்.

சில கவிதைகள் மனுஷ்ய புத்திரனின் பாணியை நினைவூட்டுகின்றன:
‘நாம் நேசிக்காத ஒருவரை
நாம் ஏன் மனம் பிறழ்ந்து போகிறபடி
நேசிக்கிறோம்’
என்ற வரிகளும்

‘ஒரு அன்பை மறுதலிக்க
நீ நடந்த தொலைவுகள் அதிகம்’
என்ற வரிகளும்

‘நான் புசிக்க நினைக்கிற மாமிசம்
நான் குடிக்க விழைகிற குருதி
நான் செய்ய விரும்புகிற துரோகம்’
என்ற வரிகளும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். மேலும், செந்நிற மது, கோப்பை, விஷம் போன்றவை திரும்பத் திரும்ப வருகின்றன. ‘துயரம்’ என்பதைக் கவிஞர் மிகைக் கற்பனைக்கு (romantisize) உள்ளாக்குகிறார். ‘ஒளிர்கின்ற தீபத்தைப் போல
பிரகாசமான
ஒரு துயரத்தை
நான் உனக்கு அளிப்பேன்’
என்பது போன்ற வரிகள் இதற்கு எடுத்துக்காட்டு. 

இது கவிதையை நீர்த்துப்போக வைக்கிறது. ஆங்காங்கே, ஒருமை – பன்மை மயக்கம் (சத்தம்… துரத்துகின்றன, உடல்கள்… உரசியபடியிருந்தது, சொற்கள்… வளைகிறது), எழுத்துப் பிழைகள் (நிர்வானமாக்கினர், சிரிக்கதவளாக, வன்புனறப்பட்டார்கள், கம்பளிப் பூச்சியைப் போல… ஊறத் தொடங்குகிறது, அமைதின்மயும்தான், எரியின்) போன்றவை உறுத்துகின்றன. 116-ம் பக்கத்தில் வரும் கவிதை 180-ம் பக்கத்திலும் வருகிறது.

இந்தத் தொகுப்பு பொன்முகலிக்கு ஓர் இனிய தொடக்கம். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளுக்கான சாத்தியங்களை, செல்திசைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. இன்னும் விரிவான தளங்களை அவர் கவிதை சென்றடையட்டும். வாழ்த்துகள் பொன்முகலி!

நூல் விவரங்கள்:

தாழம்பூ 

பொன்முகலி 

தமிழினி வெளியீடு 

விலை: ரூ.160 

தொடர்புக்கு: 86672 55103

(இந்து தமிழ் நாளிதழில் வெளியான மதிப்புரையின் மிக விரிவான வடிவம் இது)

 

   

 

 

 


Saturday, November 21, 2020

வல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்


தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் ஊட்டியிருக்கிறது. 

நவீன கவிதைகளுக்கு நேர்ந்த பெரும் துயரங்களுள் ஒன்று அது இடத்தையும் சூழலையும் பெரிதும் இழந்தது. பறவை வெறுமனே பறவையாகத்தான் வரும், மரம் பெயரின்றி மரமாக வரும், சிலர் விதிவிலக்குகளாக இருந்தாலும் பெரும்பாலான போக்கு அப்படி. தேன்மொழி தாஸ் கவிதைகளில் அக உலகத்தோடு புற உலகும் பின்னிப் பிணைந்தே அவையவற்றின் அடையாளங்களுடன் வருகின்றன. ஆதிமனது இயற்கையை வியப்பதன் அல்லது வழிபடுவதன் தொடர்ச்சி என்றும் தேன்மொழி தாஸின் கவிதைகளைக் கூறலாம். குளவிப் பூம்புதர், வலம்புரிக் காய், வெந்தயப் பூ, தும்பிகை மரம், அடைக்கலாங் குருவி, காட்டுப்பூனை, மலைவேம்பு, நீலச் சங்குப்பூ, வச்சிரதந்திப் புழுக்கள், புல்குருவி, மலைராணிப் பூக்கள், கிளிப்பூக்கள், அழிஞ்சில் கனி, பேய்க்காளான், மந்திரக் காளான், தூக்கணாங்குருவி, கடமான் என்று காடும் மலையும் சார்ந்த உயிர்கள் பலவும் துருத்தாமல் தேன்மொழி தாஸின் கவிதையில் இடம்பெற்றிருக்கின்றன. 

‘வச்சிரதந்திப் புழுக்கள் மரம்குடையும் காட்சி/ மனதை மத்தியானம் ஆக்கும்’ என்ற வரிகளெல்லாம் நவீன படிம மொழியில் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத சௌந்தர்யங்களை அடுத்தடுத்து வெவ்வேறு உணர்வு நிலைகளைக் கொண்டு கோத்துத் தருபவை தேன்மொழி தாஸின் கவிதைகள். ஒரு கருவை எடுத்துக்கொண்டு அதை விரித்துச்செல்பவையல்ல அவை; கரு அல்லாமல் மனநிலையே கவிதையாகிறது. அந்த மனநிலை பிரிவின் வலியைச் சுமந்திருக்கலாம், காத்திருப்பைச் சுமந்திருக்கலாம், ஏமாற்றத்தைச் சுமந்திருக்கலாம். ‘நித்திரையடையாமல்/ இமையினுள் உருளும் காதல் கண்களுக்கு/ கடுகுத்தோலின் மினுமினுப்பு’, ‘கண்கள்/ வருத்தங்களைக் குவித்து விளையாடும்/ கண்ணாடி/ அவைகளுக்கு மூளையின் முடிச்சிலிருந்து ஒருவரியேனும்/ காதல் கடிதம்/ எழுதிவிட வேண்டும்’, ‘காத்திருப்பது/ காதலின் ஈரப்பதத்தை/ காற்றின் ஒத்திசையில் இசைப்பது’, ‘கதவருகே நின்றுகொண்டு நினைவுகளோடு பேசுவது/ காட்சிப் பிழையாகவேனும் நீ/ வந்துவிடுவாய் என்பது தான்’ போன்ற வரிகளெல்லாம் அப்படி அந்தந்தச் சமயத்தின் மனநிலைகள் கவிதைகளாக ஆனதற்குச் சில உதாரணங்கள். 

இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது கம்பீரமான ஒரு பெண், அதுவும் காதல் வயப்பட்டதாலேயே கம்பீரமான ஒரு பெண், இன்னும் சொல்லப்போனால் பிரிவுவயப்பட்ட பெண் பற்றிய சித்திரம் நம் மனதில் தோன்றிவிடுகிறது. ‘பெண் ஸ்தனங்களின் கம்பீரமே/ ஆண் விழிகளின் மேல் தோல்களில்/ பல அடுக்குகளாக இருப்பதையும் கண்டேன்’ என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். இன்னொரு இடத்தில், ‘எனது அகத்தின் புன்னகை அசையா தீபச்சுடர்’ என்கிறார். பெண்ணின் காதலுக்கு முன்பு ஆண்கள் சுருங்கித்தான் போகிறார்கள். 

கவிதையே பெரிதும் தர்க்கத்தை மீறுவதுதான் என்றாலும் சமயத்தில் சேர்த்துவைத்துப் பொருள்கொள்ள முடியாத அளவுக்கு, ஆனால் அழகுடன் தேன்மொழி தாஸின் கவிதைகளில் தர்க்கம் மீறப்பட்டிருக்கிறது. ‘ஆணின் கணிதம்/ பெருங்காய வாசனையோடு விரியும் வளைகோடு’, ‘அகம் அழிவின்மையின் நீலத் தீ’, ‘காற்று பொற்கம்பியாய்/ பார்வையை எங்கோ இழுத்துச்செல்கிறது’, ‘பூமி கணித இதயம் கொண்ட நூல்கண்டு/ அதன்மேல் அவர்களோ நெல்பூவாய் நடப்பார்கள்’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். 

புனைகதையில் ‘நனவோடை’ என்பது ஒரு உத்தி. மனதில் எண்ணங்கள் ஒரு ஒழுங்கற்று வெளிப்படுவது இயல்பு. அந்த இயல்பில் அந்தப் போக்கில் எண்ணங்களைப் புனைகதையில் எழுதுவார்கள். கவிதையே சில சமயங்களில் நனவோடையின் ஒரு துண்டாக வெளிப்பட்டாலும் இது தேன்மொழி தாஸின் கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகிறது. வழக்கமாக இது நவீன இலக்கிய உத்தி என்றாலும் தேன்மொழி தாஸின் கவிதைகளில் இது செவ்வியல் தொனியில் வெளிப்பட்டிருக்கிறது. அகமொழி ஒரு இடத்தில் தொடங்கி இடையே புறமும் ஆங்காங்கே எட்டிப்பார்த்து கவிதை வேறொரு இடத்தில் முடியும். அப்படி வரும்போது இரண்டிரண்டு தொடர்புடைய வரிகளின் தொகுப்புபோல் கவிதை காட்சியளிக்கிறது. ஆழ்ந்த கவித்துவத்துடன் இப்படி தேன்மொழி தாஸ் எழுதும்போது ஒரே சமயத்தில் புரியாமையும் தித்திப்பும் ஈர்ப்பும் சௌந்தர்யமும் ஏற்படுகிறது. 

இந்த மலையுச்சியில் இருந்துகொண்டு எதிரே உள்ள மலைச்சரிவின் காட்டைப் பார்க்கும் உணர்வை அவரது பல கவிதைகள் தருகின்றன. ‘பெருவனம் காலங்களால் புலம்புகிறது’ எனும்போது காடே காலத்தின் ரூபம் கொள்கிறது. அபி தனது கவிதைகளில் ‘மாலை’ எனும் அரூபத்துக்குச் செய்திருப்பதை தேன்மொழி தாஸ் ‘மலை’, ‘காடு’ எனும் ரூபங்களுக்குச் செய்திருக்கிறார். ‘புலிக் குட்டியின் மேல் சவாரி செய்யும்/ புல் குருவி காற்றைச் சுவைக்கும்/ சம்பூரணராகம் காடுகளின் மத்தியில் தொங்குகிறது’ என்பது போன்ற வரிகள் இதற்கு உதாரணம். 

மொழி அலங்காரத்தை நவீன கவிதை புறக்கணித்தே வந்திருக்கிறது. அது நல்லதே. அதே நேரத்தில் மொழியழகும் தீண்டப்படாத ஒரு வஸ்துவாக ஆகிவிட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், தேன்மொழி தாஸின் கவிதைகள் சொல்லின்பம் கூடியவையாக இருக்கின்றன. ‘நுழுந்துதல்’, நீல வாசம்’, ‘தில்லோலம்’, ‘மணிமான் கதிர்’, ‘வாழ்வின் ஆயல் மொழி’, ‘ஒழுங்கின்மையின் பச்சைச் சுடர்’, ‘குளவிப் பூம்புதர்’, ‘புலரி நிலப்பூண்’ போன்ற சொற்களும் பிரயோகங்களும் அவருடைய கவிதைகளுக்குப் பேரழகைச் சேர்க்கின்றன. அவருடைய உணர்வையும் உலகத்தையும் சொல்வதற்கென்று விரிந்த சொற்களஞ்சியம் அவரிடம் இருக்கிறது. அகத்தின் மொழி அவருக்குப் பலம் என்றால் புறத்தைப் பற்றி எழுதும்போது சில இடங்களில் கவித்துவப் பொன்மொழிகளாகவே வரிகள் எஞ்சிவிடுகின்றன. ‘கிணற்றில் கேதுதல் சூரன்கலையாகுமோ’ போன்ற வரிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். 

‘வல்லபி’ தேன்மொழி தாஸின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. அபூர்வமான, அழகிய, செறிவான கவிதைகளுக்குச் சொந்தக்காரரான தேன்மொழி தாஸின் கவிதைகள் பரவலாகச் சென்றடையும்போது அவற்றின் சௌந்தர்யங்கள் வாசகர்களைத் திளைக்க வைப்பது நிச்சயம். 



வல்லபி 

தேன்மொழி தாஸ் 

எழுத்துப் பிரசுரம் வெளியீடு 

அண்ணா நகர், சென்னை – 40. 

தொடர்புக்கு: 98400 65000 

விலை: ரூ.200 



('இந்து தமிழ்’ நாளிதழில் 21-11-20 அன்று வெளியான கட்டுரை)

Saturday, October 10, 2020

லூயிஸ் க்லூக்: நோபலின் மற்றுமொரு ஆச்சரியம்



ஆசை 

 

கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வெளியுலகால் அதிகம் அறியப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதில் விதிவிலக்கு பாப் டிலன் (2016). ஒவ்வொரு ஆண்டும் முராகாமிக்கு வழங்கப்படும், பிலிப் ராத்துக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும். எதிர்பார்ப்பிலேயே பிலிப் ராத்தும் காலமாகிவிட்டார். இந்த ஆண்டும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முராகாமி இருந்தார். கூடவே, அவரைப் போல நீண்ட காலம் காத்திருக்கும் கூகி வா தியாங்கோவும் இருந்தார். மேலும், கனடிய கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன நாவலாசிரியர் யான் லியான்கே, ஆன்டிகுவா-அமெரிக்க எழுத்தாளர் ஜமைக்கா கின்கைட் போன்றோரும் இருந்தனர். ஆனால், எதிர்பாராதவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் மரபின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்லூக்குக்கு (77) வழங்கப்பட்டிருக்கிறது. ‘அவரது தனித்துவமான கவிதைக் குரல் அலங்காரமற்ற அழகுடன் தனிநபர் இருப்பை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குகிறது’ என்று நோபல் அறிவிப்பு கூறுகிறது. 

 

லூயிஸ் க்லூக் வெளியுலகுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர் என்றாலும் அமெரிக்காவுக்குள் மிகவும் பிரபலமானவர். அமெரிக்காவில் கவிதைக்கு வழங்கப்படும் அனைத்து விருதையும் அவர் பெற்றிருக்கிறார். ‘தி வைல்டு ஐரிஸ்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக 1993-ல் புலிட்சர் பரிசு பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கையால் ‘நேஷனல் ஹ்யூமானிட்டீஸ் மெடல்’ பெற்றிருக்கிறார். இவை தவிர, அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தேசிய புத்தக விருது’ (2014), ‘பொலிங்கன் பரிசு’ (2001) போன்றவற்றையும் பெற்றிருக்கிறார். 2003-04 ஆண்டுகளில் அமெரிக்க அரசின் அவைக் கவிஞராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரபல்யத்தை அதிகம் விரும்பாத லூயிஸ் அந்தக் கௌரவத்தை மிகவும் தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டார். 

 

1943-ல் நியூயார்க்கில் லூயிஸ் க்லூக் பிறந்தார். இவர் வளர்ந்ததெல்லாம் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டு என்ற தீவில். பதின்பருவத்தில் இவர் பசியின்மை நோயால் பெரும் பாதிப்படைந்தார். இது அவரது கவிதை உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதப்படுகிறது. தனது மேற்படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்த லூயிஸ் க்லூக் முழு நேரக் கவிஞராக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார்: “நான் இளம் பெண்ணாக இருந்தபோது எழுத்தாளர்கள் எந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதுபோன்றதொரு வாழ்க்கையை நடத்தினேன். அதாவது, உலகத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு நமது எல்லா சக்திகளையும் கலைப் படைப்பை உருவாக்குவதில் குவிப்பது. எனது மேசை முன் உட்கார்ந்துகொண்டு எழுத முயல்வேன். என்னால் எதையும் எழுத முடியவில்லை. நாம் இந்த உலகத்தைப் போதுமான அளவு ஒதுக்கித்தள்ளாததால்தான் என்னால் எழுத முடியவில்லை என்று நினைத்தேன். இதே மாதிரி இரண்டு ஆண்டுகள் இருந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது இப்படியே இருந்தால் என்னால் எழுத்தாளர் ஆக முடியாது என்று. அதனால், வெர்மான்ட்டில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தேன்; உண்மையான கவிஞர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவதில்லை என்று அதுவரை நான் நம்பிவந்தபோதும். ஆனாலும், அந்த வேலையில் சேர்ந்தேன். ஆசிரியர் பணியில் நான் ஈடுபட ஆரம்பித்த தருணத்தில், இந்த உலகத்தில் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஏற்றுக்கொண்ட தருணத்தில், நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தேன்.” 

 

லூயிஸ் க்லூக்கின் முதல் தொகுப்பான ’ஃப்ர்ஸ்ட்பான்’ 1968-ல் வெளிவந்தது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. லூயிஸ் க்லூக்கின் கவிதை சிறிய உலகத்தைப் பற்றியது, அதாவது தன்னைப் பற்றியது என்றாலும் அது அமெரிக்கர்களை ஈர்த்திருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் லூயிஸ் க்லூக்கின் கவிதை வரிகள் பதிவிடப்படுவது சகஜம். அமெரிக்காவுக்கு வெளியில் தற்போது நோபல்தான் லூயிஸ் க்லூக்கைக் கொண்டுசென்றிருக்கிறது என்பதால் அவரது கவிதைகளை உலகம் எப்படி அணுகப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.  

 

தாலாட்டு 

 

ஒரு விஷயத்தில் என் அம்மா கைதேர்ந்தவர்: 

தான் நேசிக்கும் மனிதர்களை 

வேறோர் உலகுக்கு அனுப்புவாள். 

சிறியவர்கள், குழந்தைகள்- அவர்களைத் 

தாலாட்டுவாள், கிசுகிசுப்பதுபோல் பாடுவாள் 

அல்லது மெல்லிய குரலில் பாடுவாள். 

என்னால் சொல்ல இயலாது 

என் தந்தைக்கு அவள் என்ன செய்தாள் என்று: 

எதுவாக இருந்தாலும், 

அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். 

 

இரண்டும் ஒன்றுதான், உறக்கத்துக்கும் மரணத்துக்கும் 

ஒருவரைத் தயார்ப்படுத்துவது. 

தாலாட்டுப் பாடல்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்- 

அஞ்ச வேண்டாம், அப்படித்தான் அம்மாவின் 

இதயத் துடிப்பை விளக்க முடியும் என்று. 

 

ஆக, உயிருள்ளவர்கள் மெதுவாக அமைதியாகிறார்கள்; இறந்துகொண்டிருப்போர்தான் 

அமைதியடைய முடியாமல் 

மறுக்கிறார்கள். 

 

இறந்துகொண்டிருப்பவர்கள் பம்பரங்களைப் போல, 

சுழல்மானிகளைப் போல – 

நிச்சலனமாகத் தோன்றுமளவுக்கு 

வேகமாகச் சுழல்கிறார்கள். 

அப்புறம் அவர்கள் திசையெங்கும் சிதறிப்போகிறார்கள்: 

என் அம்மாவின் கைகளில், என் தங்கை 

அணுக்களின், அணுத்துகள்களின் மேகமாக இருந்தாள் – 

அதுதான் வித்தியாசம். 

 

ஒரு குழந்தை உறக்கத்தில் இருக்கும்போது, 

அது இன்னும் முழுமையாக இருக்கிறது.  

 

என் அம்மா மரணத்தைக் கண்டிருக்கிறாள்; 

ஆன்மாவின் முழுமை பற்றி அவள் பேசுவதில்லை. 

ஒரு குழந்தையை, ஒரு முதியவரை 

அவள் கைகளில் ஏந்தியிருக்கிறாள் 

ஒப்பிட்டுப் பேசினால், அவர்களைச் சுற்றிலும் 

இருள் பரவிற்று, 

இறுதியில் அவர்களை மண்ணாக ஆக்கியவாறு. 

 

எல்லாப் பருப்பொருளையும் போன்றதுதான் ஆன்மா: 

அது ஏன் மாறாமல் இருக்க வேண்டும், 

அதன் ஒரு வடிவத்துக்கு ஏன் அது 

விசுவாசமாக இருக்க வேண்டும், 

அதனால் சுதந்திரமாக இருக்க முடியும்போது? 

 

/ 

 

பின்வாங்கும் காற்று 

 

உங்களை நான் உருவாக்கியபோது, 

உங்களை நான் நேசித்தேன். 

இப்போது உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். 

 

உங்களுக்குத் தேவையான எல்லாம் நான் தந்தேன்: 

படுக்கையாக பூமியை, நீல வானப் போர்வையை – 

 

உங்களிடமிருந்து விலகிச் செல்லச் செல்ல 

உங்களை நான் தெளிவாகப் பார்க்கிறேன். 

 

உங்களின் ஆன்மாக்கள் இப்போது 

பிரம்மாண்டமாக ஆகியிருந்திருக்க வேண்டும், 

தற்போது உள்ள மாதிரி அல்ல, 

அதாவது வெற்றுப்பேச்சு பேசும் 

சின்னஞ்சிறு விஷயங்களாக அல்ல – 

 

உங்களுக்கு ஒவ்வொரு பரிசையும் தந்தேன், 

வசந்தகாலக் காலைப்பொழுதின் நீலத்தை, 

எப்படிப் பயன்படுத்துவதென்று நீங்கள் அறியாத காலத்தை—இன்னும் வேண்டுமென்றீர் நீங்கள், 

இன்னொரு படைப்புக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட 

அந்த ஒரு பரிசை. 

 

நீங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தது 

எவையெவையோ அவற்றை 

வளரும் தாவரங்களிடையே 

தோட்டத்தில் தேடிக் காண உங்களால் முடியாது, 

அவற்றுடையதைப் போன்று உங்கள் வாழ்க்கை 

வட்டச்சுற்றானதில்லை: 

 

நிச்சலனத்தில் தொடங்கி நிச்சலனத்தில் முடியும் 

பறவையின் பறத்தலைப் போன்றது உங்கள் வாழ்க்கை – 

அது வெள்ளை பர்ச் மரத்திலிருந்து 

ஆப்பிள் மரத்துக்குச் செல்லும் 

வில்வளைவை வடிவத்தில் ஒத்திருப்பதுபோல் 

தொடங்கி முடிகிறது. 

 

(கவிதைகள் தமிழில்: ஆசை) 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 10-10-20 அன்று வெளியான கட்டுரை)

Monday, August 17, 2020

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

 

ஆசை

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்து நகரில் 1964-ல் அக்டோபர் 20 அன்று பிறந்த கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம் சென்னை என்றுதான் பெரும்பாலான உலகப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இன்னும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள பைங்காநாடு கிராமம்தான் அவரது பூர்வீகம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நுணுக்கம் மிகவும் அவசியமானது. ஏனென்றால், சென்னை-அமெரிக்கா என்பதைவிட பைங்காநாடு-அமெரிக்கா என்பதன் நுட்பங்களும் நீளமும் அதிகம். 

அரசியல் வாழ்க்கைக்கான வித்து 

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரின் பெண் ஷியாமளா மேற்படிப்புக்காக 19 வயதில் அமெரிக்கா சென்றார். அவரை அந்நாடு வரவேற்கவில்லை. இந்தியாவில் ஷியாமளா மேல்வகுப்பினராகப் பார்க்கப்பட்டாலும் நிறவெறி அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் ஒரு கறுப்பினத்தவரே! அந்தச் சூழல் ஷியாமளாவைப் புலம்பெயர்ந்தவர்கள், கறுப்பினத்தோருக்கான செயல்பாட்டாளராக மாற்றியது. கறுப்பின உரிமைச் செயல்பாட்டாளரும் ஜமைக்காவைச் சேர்ந்தவருமான டொனால்டு ஹாரிஸை அவர் மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: கமலா தேவி ஹாரிஸ், மாயா லட்சுமி ஹாரிஸ். நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள், அணிவகுப்புகள் போன்றவற்றின்போது ஷியாமளாவும் டொனால்டு ஹாரிஸும் தங்கள் குழந்தைகளைக் குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளியபடி கலந்துகொண்டார்கள் என்று கமலா பின்னாளில் நினைவுகூர்கிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கான வித்து அவர் தவழும் காலத்திலேயே இடப்பட்டிருக்கிறது. கமலாவுக்கு 7 வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 

கமலா ஹாரிஸின் குழந்தைப் பருவம் கலப்பினச் சூழலில் கழிந்தது. இந்திய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கலாச்சாரம் மூன்றையும் பின்பற்றியே ஷியாமளா தன் குழந்தைகளை வளர்த்தார். வெள்ளையினக் குழந்தைகளும் கறுப்பினக் குழந்தைகளும் கலந்து வளரும், படிக்கும் சூழல் உருவாக வேண்டுமென்ற முன்னெடுப்புகள் நிகழ்ந்த 60-களின் பிற்பகுதி அது. மேற்கு பெர்க்லியிலிருந்து வடக்கு பெர்க்லியில் உள்ள பள்ளிக்கு கமலா ஹாரிஸ் அனுப்பப்பட்டார். நிறப் பாகுபாடு களைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு 95% வெள்ளையினக் குழந்தைகள் மட்டுமே படித்துவந்த பள்ளி அது. கமலா ஹாரிஸின் இந்தப் பின்புலம் தற்போதைய வரலாற்றுக்கு மிகவும் முக்கியமானது. 

பள்ளிப்படிப்பை முடித்ததும் ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும் பொருளாதாரமும் படித்தார். அதை அடுத்து 1989-ல் ஹேஸ்டிங் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1990-1998 வரை ஓக்லாந்தில் மாவட்ட இணை அட்டர்னியாகப் பணியாற்றினார். தனது பணிக் காலத்தில் பாலியல் வன்முறை, கும்பல் வன்முறை, போதைமருந்து கடத்தல் போன்ற குற்றங்களின் மீது மிகவும் கடுமை காட்டினார். அவர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது போதை மருந்து குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறுவர்கள் போன்றோர் சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்குப் பதிலாக அவர்கள் படிப்பைத் தொடரவோ, நல்ல வேலையில் சேரவோ வழிவகுத்தார். 2004-ல் மாவட்ட அட்டர்னி ஆனார். 2010-ல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் போட்டியிட்டு வென்றார். அப்படி அந்தப் பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர், முதல் இந்திய-அமெரிக்கர் அவர்தான். 

1990-களின் மத்தியில் அரசியலர் வில்லி பிரௌனுடன் கமலா ஹாரிஸ் உறவில் இருந்தார். ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. 2014-ல் யூதரான டக்ளஸ் எம்ஹாஃபும் கமலா ஹாரிஸும் மணந்துகொண்டனர். ஏற்கெனவே, தாயின் இந்து மதம், தந்தையின் கறுப்பின பாப்டிஸ்ட் கிறித்தவம் என்ற பன்மைத்தன்மை பின்னணியில் இருந்த கமலாவுக்கு டக்ளஸ் மூலம் யூத மதமும் வந்துசேர்ந்துகொண்டது. கமலாவே தான் இந்து கோயிலுக்கும் கறுப்பின பாப்டிஸ்ட் திருச்சபைக்கும் செல்வதாகச் சொல்லிக்கொள்பவர். 

கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை 2015-ல் வந்தது. ஜனநாயகக் கட்சியின் பார்பரா பாக்ஸர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததும் அவர் இடத்தில் அடுத்தது தான் நிற்கப்போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார். 2016-ல் நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ல் பொறுப்பேற்றார். அட்டர்னி ஜெனரலாக அவர் பெற்ற அனுபவம் நாடாளுமன்றத்தில் அவருக்கு மிகவும் உதவியது. எதிர்த் தரப்பை அவர் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார். இது எல்லாமே கமலா ஹாரிஸை அடுத்த நிலையை நோக்கித் தள்ளியது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் 2019-ல் அறிவித்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. தற்போது கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராக யார் அறிவித்தாரோ அதே ஜோ பிடனைக் கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் எதிர்த்துக் களம் கண்டார். ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பிடனின் இனவாத நிலைப்பாடுகளை வைத்து அவரைக் கேள்விகேட்டது பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டது. எனினும், 2019-ன் இறுதியில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறையவே அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் விலகிக்கொண்டார். 

ஆனால், 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். 

கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. ஜனநாயக வேட்பாளரான ஜோ பிடனுக்குத் தற்போது 77 வயது ஆகிறது. ஆகவே, அடுத்த அதிபராகும் வாய்ப்புகூட கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்போது அது அமெரிக்காவின் பன்மைத்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 17-08-20 அன்று வெளியான கட்டுரை.)

Friday, March 10, 2017

என்றும் காந்தி!- 26: மகளிர் தினத்தில் காந்தியையும் ஏன் நினைவுகூர வேண்டும்? (பகுதி- 3)


ஆசை

சாதிதான் வரதட்சிணைக்குக் காரணம்

வரதட்சிணை கொடுத்தும் வாங்கியும் நடத்தப்படும் திருமணத்தை ‘திருமண வியாபாரம்’ (Marriage of Purchase) என்று அழைக்கிறார் காந்தி. வரதட்சிணைக்கு மூல காரணம் சாதியமைப்புதான் என்பதை உணர்ந்த காந்தி இந்த மூடப்பழக்கம் அடியோடு ஒழிய வேண்டுமென்கிறார். “பெற்றோர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரமாகத் திருமணம் இருப்பது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்த வழக்கம் சாதியோடு பின்னிப் பிணைந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சில நூறு இளைஞர்கள் அல்லது இளம்பெண்களுக்குள்ளேதான் இல்லற வாழ்வின் துணை தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் வரை வரதட்சிணைக்கு எதிராக என்னதான்பேசினாலும் அது ஒழியாது. இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டுமெனில் அந்தப் பெண்களோ இளைஞர்களோ பெற்றோர்களோ சாதியின் தளைகளை அறுத்தெறிந்து வேறு சாதிகளில் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்” (ஹரிஜன் பத்திரிகை, 23-5-1936) என்கிறார். அதுமட்டுமில்லை, இன்னும் புரட்சிகரமாக “தகுந்த துணை கிடைக்கவில்லையெனில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கத் துணியவேண்டும்” (ஹரிஜன் பத்திரிகை, 23-5-1936)

பெண் சிசுக் கொலை

தேசத்தைப் பெண்ணாகவும் நதிகளைப் பெண்களாகவும் வழிபடும், அப்படி வழிபடுவதில் பெருமை கொள்ளும் இந்த தேசத்தில்தான் பெண்சிசுக்கொலை முன்னுதாரணமில்லாத அளவில் நடைபெறுகிறது. பெண்கல்வி, தொழில்நுட்பம், சட்டப் பாதுகாப்பு போன்றவை அதிகரித்திருக்கும் இந்தக் காலத்திலும் பெண்சிசுக்கொலை நூதன வடிவங்களில் நடந்துகொண்டுதானிருக்கிறது. 2011-ல் வெளியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2001-ல் இருந்ததைவிட 30 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாகவே இருந்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நமக்குத் தெரியவருகிறது. விழிப்புணர்வு மிகுந்திருக்கும் காலத்திலேயே இப்படி என்றால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்திருக்கும்?

சுதந்திரப் போராட்டத்தின் நெடிய பயணத்தில் காந்தி எந்த விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. பெண்சிசுக்கொலையைப் பற்றிக் கடுமையாகப் பேசியும் எழுதியும் வந்தார். பெண்சிசுக்கொலைக்கு எதிராக ராஜஸ்தானில் செயல்பட்டுவரும் அமைப்பொன்று காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகைக்கு கடிதமொன்று எழுதியது. அதைப் பற்றி காந்தி இப்படி விவரிக்கிறார்: “இந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த நாட்டில் பெண்சிசுக்கொலை போன்ற கொடிய நடைமுறை இன்றும் நிலவுவதை நம்புவதற்குக் கடினமாகவே உள்ளது. ஆனால், என் முன்னே கிடக்கும் இந்தக் கடிதம் என்னை நம்பச் செய்யும்படி வலியுறுத்துகிறது… இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான வழக்கமொன்றைத் தொடர்வதற்குச் சொல்லப்படும் எந்தவித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொடிய வழக்கத்தை ஒழிக்கும் செயலுக்குப் பொதுமக்களிடையே ஆதரவைத் திரட்ட வேண்டும்…. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்பது ஆதாரங்களைத் திரட்டுவதுதான். கடந்த ஆண்டு எந்த இடங்களிலெல்லாம் பெண்சிசுக்கொலை நடைபெற்றது என்பதையும் எத்தனை பெண்சிசுக்கள் கொல்லப்பட்டனர் என்பதையும் தெளிவாக உணர்த்தும் வகையிலான வரைபடமொன்றை உருவாக்க வேண்டும்.” (ஹரிஜன் சேவக், 4-7-1936). காந்தி இப்படி எழுதி 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாம் இன்னமும் ஆண்டுதோறும் வரைபடங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை அவமானகரமான நிலை!

சாஸ்திரங்கள்

பெண்களின் தற்போதைய நிலைக்கு சாஸ்திரங்கள்தான் மிக முக்கியமான காரணம் என்று காந்தி நம்பினார். காலப்போக்கில் சாஸ்திரங்களில் ஏற்பட்ட இடைச்செருகல் காரணமாக பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்றவை இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டன என்று கருதினார். மனசாட்சிக்கும் நியாயத்துக்கும் பொருந்தும் விதத்தில் சாஸ்திரங்களில் இருப்பவற்றையே காந்தி ஏற்றுக்கொள்வார். சாஸ்திரம் என்பதற்காக அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி கூறியதை ஒருவர் காந்தியிடம் சுட்டிக்காட்டுகிறார். அப்படி மனுஸ்மிருதி கூறியதை “நான் புனிதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று காந்தி பதிலளிக்கிறார்.

பர்தா என்றொரு சிறை

இஸ்லாமியச் சமூகத்தில் மட்டுமல்லாமல் வட இந்தியச் சமூகங்கள் பலவற்றிலும் பர்தா என்றொரு பழக்கம் இருப்பதைக் கண்ட காந்தி அதற்கெதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். பெண்களை ஒடுக்குவதன் மூலம் பர்தாவும் சுயராஜ்ஜியத்தின் வழியில் தடைக்கல்லாக இருந்ததை காந்தி சுட்டிக்காட்டினார். “பர்தா என்ற சுவரை எழுப்பிக் கற்பு என்ற விஷயத்தைக் காக்க முடியாது” என்றார். “பெண்ணின் கற்பு பற்றி ஏன் இவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது? ஆண்களின் கற்பு என்ற விஷயத்தில் பெண்கள் தலையிட முடியுமா? பெண்ணின் தூய்மையே ஆணின் தூய்மையே வெளியிலிருந்து திணிக்க முடியாது. ஒருவரின் சுய முயற்சியினால் உள்ளுக்குள்ளிருந்து வருவதுதான் ஒழுக்கத் தூய்மை” என்று காந்தி பேசினார். அது அட்டுமல்லாமல் கடவுள் அளித்த கொடைகளுள் ஒன்றான காற்றோட்டத்தைப் பெண்கள் அனுபவிக்க முடியாமல் பர்தா தடுத்துவிடுகிறது என்று காந்தி கருதினார். ஒருமுறை காந்தியைச் சந்திக்க இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் பர்தா அணிந்தபடி வந்தார். “உங்கள் சகோதரனைச் சந்திக்க வரும்போது எதற்கு முகத்திரை” என்று அவரிடம் அன்புடன் கடிந்துகொண்டார் காந்தி. இந்து பர்தாவோ முஸ்லிம் பர்தாவோ ஒரு பெண்ணின் தூய்மையைப் பாதுகாத்துவிட முடியாது. சுயகட்டுப்பாடும், தூய்மையான மனமும்தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான காவல் என்று காந்தி கருதினார்.

பெண்கல்வி

பெண்கள் கல்வி கற்பது அவர்களின் விடுதலைக்கு மிகவும் அவசியம் என்று கருதிய காந்தி பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் சேர்வதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். சம்பாரணில் அவர் தொடங்கிய பள்ளிகளில் பெண் குழந்தைகள் நிறைய பேரைச் சேர்த்தார். தனது ஆசிரமங்களில் இருந்த பெண்களும் முறையான கல்வியைப் பெற வழிசெய்தார். வெறும் கல்வி மட்டும் ஒரு பெண்ணுக்குத் துணிவைத் தந்துவிடாது என்பதால் துணிவு, அறம் போன்றவற்றை ஊட்டும்விதத்தில் கல்வி முறை இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். காந்தி தொடங்கிய பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் காந்தியவாதிகள் பலரும் தொடங்கி, இன்னமும் நடந்துகொண்டிருக்கும் பள்ளிக்கூடங்கள் பல பெண் கல்வியில் காந்தியின் பங்களிப்பைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. 

காந்தியை மறப்பது ஏன்?

இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்கு காந்தி பெரும் பங்காற்றியிருந்தாலும் பெண் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட ஆண்களைப் பற்றி நினைவுகூரும் பலரும் காந்தியை மறந்துவிடுவது விந்தையே. பெண்கள் குறித்த காந்தியின் சிந்தனைகளில் சில, புராண உதாரணங்களை ஒட்டியதாகவும், முற்போக்கானவை இல்லை என்றும் கருதப்பட்டாலும்கூட இந்தியப் பெண்களின் விடுதலைக்கு அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பு யாருக்கும் குறைந்ததில்லை. இந்தியப் பெண்களைப் பெருந்திரளாக அரசியல்படுத்தியதிலிருந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு, இந்துமதச் சீர்திருத்தச் சட்டம் என்று பல முன்னேற்றங்களிலும் அவரது முன்னெடுப்போ, பங்களிப்போ, ஆதரவோ, முன்னோடித்தன்மையோ இருந்தது என்பது புதுக் கண்டுபிடிப்பு அல்ல. அசைக்க முடியாத ஆதாரங்கள் பல அவரது எழுத்துக்களாகவும் பிறரின் வரலாற்று நூல்களாகவும் சட்டங்களாகவும் இருக்கின்றன. மறுக்க விரும்புபவர்கள் இவற்றை முழுக்கப் படித்துவிட்டு மறுக்கலாம்.

காந்தியப் பெண்கள்:

பெண்களுக்காக காந்தி ஆற்றிய பணிகள் குறித்து மகளிர் தினத்திலிருந்து இந்தத் தொடரில் விவாதித்துவருகிறோம். ‘என்ன, காந்தி பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டிருக்கிறாரா?’ என்ற தொனியில் பலரும் கிண்டல் செய்வதை உணர முடிகிறது. திரும்பவும் சொல்கிறேன். உலக வரலாற்றிலேயே பெருந்திரளாய்ப் பெண்களை அரசியல்படுத்தியதில் காந்திக்கு இணையாக ஒருவரைக் காட்ட முடியாது. பிற நாடுகளிலும் பல தலைவர்கள் பெண்களை அரசியல்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த ஒப்பீட்டைச் செய்துபார்த்தால் என் கூற்றின் உண்மை புரியும். இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும் காந்தி குறித்தும் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒருசில நூல்களைப் படித்தாலே போதும். கூகுளில் காந்தி படங்களைத் தேடிப்பார்த்தால் அவரது கூட்டங்களில் திரண்டு வந்த பெண்களின் எண்ணிக்கை நமக்கு உறுதியான ஆதாரமாக நம் கண் முன்னால் நிற்கும். ஆனால், இதையெல்லாம் விட வலுவான ஆதாரங்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு சேவையாற்றிய பெண்களும் சாதனையாளர்களும்தான். காந்தியின் வாழ்க்கை முழுவதுமே உடன் பயணித்த, பல்வேறு காலகட்டங்களில் உடன் இருந்த பெண்கள் பலர். கஸ்தூர்பா, மிலி போலக், மீரா பென், மனு காந்தி, சுசிலா நய்யார், பிரபாவதி நாராயண் என்று இந்த பட்டியல் நீண்டது. இவர்கள் தவிர காந்தியால் தூண்டுதல் பெற்றுப் பல போராட்டங்களிலும் இயக்கங்களிலும் பங்கெடுத்த பெண்களும், தங்கள் போராட்டங்களிலும் சாதனைகளிலும் சேவைகளிலும் காந்தியத்தைத் துணைகொண்ட பெண்களும் எண்ணிலடங்காது. அந்தப் பெண்களின் சிறு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் பற்றிய நூல்களையும் இணையப் பதிவுகளையும் படித்துப் பார்த்தாலே புரியும், பெண்கள் முன்னேற்றத்தில் காந்தியின் பங்களிப்பு என்ன என்பது!

காந்தியப் பெண்மணிகள், காந்தியால் ஈர்க்கப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், சேவையாற்றியவர்களின் பட்டியல்:

1. தில்லையாடி வள்ளியம்மை (1898-1914).

2. அனசூயா சாராபாய் (1885 -1972).

3. ராஜ்குமாரி அம்ரித் கவுர் (Rajkumari Amrit Kaur, 1889–1964).

4. அம்புஜம்மாள் (1899-?)

5. ஆஷா தேவி அரியநாயகம் (Asha Devi Aryanayakam, 1901-1972)

6. கமலாதேவி சட்டோபாத்யாய (Kamaladevi Chattopadhyay, 1903–1988)

7. மணிபென் படேல் (Maniben Patel, 1903-1990)

8. சுசீதா கிருபளானி (Sucheta Kriplani, 1908 – 1974)

9. மிருதுளா சாராபாய் (Mridula Sarabhai, 1911 – 1974)

10. அருணா ஆஸஃப் அலி (Aruna Asaf Ali, 1909–1996)

11. உஷா மேத்தா (Usha Mehta, 1920–2000)

12. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (1926-)

13. இலா பட் (Ela Bhatt, 1933-)

14. ஜர்ண தாரா சௌத்ரி (Jharna Dhara Chowdhury, 1936-)

15. மேதா பட்கர் (1954-)

16. இரோம் ஷர்மிளா (Irom Sharmila, 1972-)

(திங்கள்கிழமை சந்திப்போம்…)
-  நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/bKtMqb)