Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, October 2, 2025

காந்தி பிறந்தநாள் சிறப்புக் கவிதைகள்!



காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ‘ஹே... ராவண்!’ (2025, எதிர் வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:

1. இரண்டு ராமராஜ்ஜியங்கள்
**
இரண்டு ராமராஜ்ஜியங்கள்
உள்ளன
ஒன்று
சீதையின் கற்பைத்
தலைநகராகக் கொண்டது
இன்னொன்று
சீதையின் துயரைத்
தலைநகராகக் கொண்டது
ஒன்றில்
சீதைக்கென்று
எப்போதும் அக்னி
எரிந்துகொண்டிருக்கும்
இன்னொன்றில்
சீதைக்காக ராமனே
எப்போதும் அக்னியில் இறங்குவான்
ஒன்றில்
ஒரே ஒரு ராமன்தான்
மீதமுள்ள எல்லோரும்
அனுமன்கள்
நிமிடந்தோறும்
நெஞ்சைப் பிளந்து
அதன் உள்ளே சீதையற்ற ராமன்
படத்தைக் காட்ட வேண்டியவர்கள்
காட்ட மறுப்போரெல்லாம்
வாலிகள் ராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
வதம் செய்ய வேண்டியவர்கள்
இன்னொன்றில்
எல்லோருமே ராமர்கள்
அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட
அதில் அனுமன்கள் சீதைகள்
வாலிகள் இராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
தெரிவார்கள்
ஒன்றில்
ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும்
இருக்க
அதில் வீற்றிருந்து
ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்
இன்னொன்றில்
சிம்மாசனமே இருக்காது
இரண்டு ராமராஜ்ஜியங்களும்
சந்தித்துக்கொண்டன
ஒன்று
‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக்
கையில் வில்லெடுத்து
அம்பெய்தது
இன்னொன்று
‘ஹே ராம்’ என்று சொல்லி
மார்பில் அந்த அம்பை வாங்கி
மண்ணில் வீழ்ந்தது
*
2. துப்பாக்கித்தனத்தை வீழ்த்தும் உடல்
**
அன்றொரு துப்பாக்கி நீண்டது
உலகின் மிகமிக எளிய
இலக்கொன்றை நோக்கி
துப்பாக்கித்தனத்தையும் தாண்டி
தன் இலக்குக்கு
முறையாக மரியாதைகள் செய்துவிட்டே
நீண்ட துப்பாக்கிதான் அது
எவ்வளவு நல்ல துப்பாக்கி அது
என்று இன்றும் சிலாகிக்கப்படுவதுண்டு
இலக்கின் உடல் மீது
தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை துப்பாக்கிக்கு
ஆனால் அவ்வுடலின்
விரிந்த கைகள்…
'உனக்கு விரிந்த கைகளில்லை’
என்றல்லவா
இடைவிடாமல் சொல்கின்றன
துப்பாக்கியிடம்
எந்த அளவுக்கு முடியுமோ
அந்த அளவுக்குச் சுருங்கி
எந்த அளவுக்கு முடியுமோ
அந்த அளவுக்கு இறுகிப்போய்த்
தன்னைப் பற்றியிருக்கும் கைகளையே
என்றும் விரும்பும் துப்பாக்கி
அதுமட்டுமா
‘துப்பாக்கியை என்றுமே நான் வெறுத்ததில்லை
துப்பாக்கித்தனத்தையே வெறுக்கிறேன்.
வா, துப்பாக்கியே உன்னை அணைத்துக்கொள்கிறேன்’
என்று சொல்லிக்கொண்டு
அணைக்க முயல்கின்றன அந்தக் கைகள்
துப்பாக்கிக்கும் கருணைசெய்வதான
கடவுள் பிம்பத்தை
அந்த எளிய இலக்கின் உடலுக்கு
அதன் விரிந்த கைகள்
எப்போதும் வழங்கிக்கொண்டிருப்பதை
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்
ஒரு துப்பாக்கியால்?
இப்படியெல்லாம்
பிரபஞ்சம் அளாவும்
விரிந்த கைகளின் பாசாங்கு
துப்பாக்கிக்கு இல்லை
ஒரே புள்ளி
பிரபஞ்சத்தை இல்லாமலாக்கிவிடும்
இலக்கு நோக்கி நீள
இதற்கு மேலா காரணம் வேண்டும்?
ஒன்று
இரண்டு
மூன்று…
உலகின் துப்பாக்கித்தனத்தைக் குறிவைத்து
வீழ்ந்துகொண்டிருக்கின்றன அன்றிலிருந்து
உலகின் மிகமிக எளிய இலக்கின்
விரிந்த கரங்கள்
*
3. தோட்டாவுடன் ஒரு ஒப்பந்தம்
காந்தியை
அவர் இதயத்தில் போய்
நேருக்கு நேர்
சந்தித்த தோட்டா
இனி தன் பயணத்தை
நிறுத்திக்கொள்வதாக
அவரிடம் உறுதியளித்தது
அந்த ஒப்பந்தத்தை
உலகறியத்
தன்முகத்தில்
படிய விட்டுப்
படிக்கக் கொடுத்தபடி
படுத்திருந்தார்
காந்தி
தோட்டா நின்ற
நிச்சலனம்தான்
அவர் முகச் சாந்தம்
முழுமையை எட்டியதற்கு
இப்போது வரை
முழுமுதற் காரணம்
*
4. இலக்கு அட்டையின் இதயம்
இலக்கு அட்டையின்
இதயத்தை
வேறெவரையும் விட
வேறெதனையும் விட
துல்லியமாய்ப் பார்த்தது
துல்லியமாய்ப் பாய்ந்தது
அந்தத் தோட்டாதான்
என்றும் சொல்லியிருக்கிறார்
ஆஷிஸ் நந்தி
அப்படியொரு தோட்டா வந்து
ஆரத்தழுவும்போது
எப்படிப்பட்ட இதயமும்
ஒரு கணமோ
ஒரு யுகமோ
ஸ்தம்பித்துதானே
ஆக வேண்டும்
இது தோட்டாவின் நினைப்பு
இதயத்தில் பாய்ந்தாலும்
ஒருபோதும்
தான்
இதயத்தின் உறுப்பாய்
ஆகிவிட முடியாது
என்பதை யறியுமந்தத்
தோட்டா
ஆவதற்கும்
முயல்வ தில்லையந்தத்
தோட்டா
இங்கேதான்
இதயத்தின் பிரச்சினை
தன்னொரு உறுப்பாய்த்
தோட்டாவைத் தடவிக்கொடுக்க
ஆரம்பித்துவிடுகிறது
அதுவும்
துயில்கொண்டுவிடுகிறது
நிரந்தரமாய் அங்கே
எந்த இதயத்துள்
துயில்கின்றோம்
என்ற நினைவழிந்து
*
5. ராமர் நடந்த தொலைவு
கதைகளிலும்
உங்கள் கற்பனை ராஜ்யத்திலும்
நீங்கள் கண்டுவந்த
ராமனை
நேரில் கண்டால்
என்ன கேட்பீர்கள்
காந்தி மகாத்மா
ஹே ராம்
என் வலுவிழந்த
கால்களுடனும்
உடலுடனும்
மனதுடனும்
இந்த கல்கத்தா வீதிகளிலும்
நவகாளியிலும்
பிஹாரிலும்
இந்தக் கிழவன்
நடந்து தளர்ந்துவிட்டேன்
நடந்த தொலைவையெல்லாம்
நடக்க வேண்டிய தொலைவு
விழுங்கிவிடுகிறது
அத்தொலைவையொரு வில்லாய்
எடுத்தது கண்டார்
இற்றது கேட்டாரென்று
முறித்துப் போட
மாட்டாயோ
என்று கேட்பேன்
கவிஞர்ஜீ
ஹே ராம்
அதுவும் முடியாதெனின்
மிச்சமுள்ள
தொலைவை
எனக்காய்
நடந்து கடக்க முடியாதோ
என்று கேட்பேன்
கவிஞர்ஜீ
முதல் வில்லால்
சரம்சரமாய்
ராமர் எடுத்த
வில்லெல்லாம்
எண்ணிலடங்காதவை
அவை எடுத்த உயிரெல்லாம்
கம்பன்
பண்ணிலடங்காதவை
காந்தி மகாத்மா
மேலும்
ராமர்
நடந்து கடந்த தொலைவெல்லாம்
இன்னும் நம்முன்
கிடந்து தொலைக்கிறது
இதயத்துள் நெடுவலி
குடைந்து தொலைக்கிறது
காந்தி மகாத்மா
உங்கள்
கால்களுக்கும்
ராமர் கால்களுக்கும்
நீங்கள்
எவ்வளவு முயன்றாலும்
ஓய்வே கிடையாது
நடந்து தீருங்கள்
காந்தி மகாத்மா
ஆனால்
ஒன்று அறிந்துகொள்ளுங்கள்
வில்லெடுத்தவன்
வில்லால் மடிவான்
நடை எடுத்தவன்
நடையால் மடிவான்
காந்தி மகாத்மா
*

Sunday, September 21, 2025

மாயக்குடமுருட்டி - அப்பாவின் பிறந்தநாள் பகிர்வு

காலம்சென்ற எங்கள் அப்பாவு தேசிகாமணிக்கு இன்று 83-வது பிறந்தநாள். அப்பாவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நான் எழுதிய ‘மாயக்குடமுருட்டி’ (எதிர் வெளியீடு, 2025) காவியத்தின் முதல் படலத்தை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

**
மாயக் குடமுருட்டி
“ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள்ளமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனலாடிய
திருத்தனைப் புத்தூர் சென்றுகண்டுய்ந்தேனே.”
-திருநாவுக்கரசர்
1. தனியுருட்டி
சிறுவனாய்க் குளிக்கப் போன
அப்பாவை
இழுத்துச் சுருட்டி
உருட்டிக்கொண்டு போனதாம்
குடமுருட்டி
மலங்கழித்துக் கொண்டிருந்த
யாரோ
மாக்கடியென்று குதித்து
முடி பற்றிக்
கரையிழுத்துப் போட்டாராம்
அன்று
இன்னொரு குடமுருட்டி
ஓட ஆரம்பித்தது

2. மலத்தின் பாதை
அந்த யாரோ
அந்த யாரோ
இந்தக் கரையிலா
அந்தக் கரையிலா
எழுபது
ஆண்டுகள்
கழிந்திருக்கும்
எனினும்
உயிர் பற்றி
இன்னும்
இழுக்கிறது
அவர் கை
நெடுங்காலம் கடந்தும்
நடுங்கலையே தருகிறது
அப்பற்றல்
கரைக்கும்
நீருக்கும் இடையில்
உயிர்க்கோட்டினை இழுக்கும்
இடைவிடாத பதற்றம்
அது
என் உயிர்
என்பது ஒன்றுமில்லை
யாரோ ஒருவரின்
மலங்கழிக்கும் உந்துதல்தான்
அவ்வுந்துதலின்
கரைகளில்
பயணிக்கிறேன்
பயணிக்கிறேன்
பயணித்து வந்த இடம்
தன் பாதி வழியில்
குடமுருட்டி
பெயரிழக்குமிடம்
இனி குடமுருட்டி
இல்லை
சோழசூடாமணியாய்
புதாறாய்க் கிளைத்து
அவள் தன் உருட்டை
இழக்கிறாள்
நான் இருக்கிறேன்
குடமுருட்டியே
உன் பெயர் நீள
பாய்வு நீள

3. தண்ணீரும் காவிரியே
காவிரியின் நற்பேறு
காவிரிக்கு மட்டும்தான்
அவள் பிள்ளைகளுக்கல்ல
காவிரி கடைசி வரைக்கும்
காவிரிதான்
அவள் கரையெல்லாம்
காவிரிதான்
ஊற்றெல்லாம்
காவிரிதான்
தொட்டித் தண்ணீரும்
காவிரிதான்
தண்ணீரெல்லாம்
காவிரிதான்
பாதி வழியில்
மறையும் குழந்தைகள்
முக்கால் வழியில் கரையும்
குழந்தைகள்
இருவர் ஒருவராய்
மாறும் குழந்தைகள்
உண்டு உனக்கு
நீயோ
அத்தனை பிள்ளைகள்
பெற்றுப் போட்டும்
இளைக்காமல் சளைக்காமல்
யவ்வன நடை
நடந்தாய்
வாழி காவிரி
காவிரியின் நற்பேறு
காவிரிக்கு மட்டும்தான்
அவள் பிள்ளைகளுக்கல்ல

4. இடைவு
குடமுருட்டி
மலையில் தொடங்கவில்லை
கடலில் முடியவில்லை
இடையில் இருப்பவள் மட்டுமே
நீ
இடைவின் புதைகுழியிலிருந்து
பூப்பறிக்கிறது
ஒரு கை
பூப்பூவாய்ப்
பூக்கிறது

5. சுழிவு
உன் தூரத்துச் சகோதரி
பாமணியாற்றங் கரையில்தான்
என் வீடு
உன் பெயரும்
உன்னைப் பற்றிய
கதைகளும்
அப்பாவின்
வாயிலிருந்து
அடிக்கடி உருளும்
நீரள்ள வரும்
பெண்களின் குடங்களை
உருட்டிக்கொண்டு
போய்விடுவாயாமே
நீ சுழித்தோடும் பரப்பே
குடம் பல மூழ்கிச்
சுழன்றோடுவது
போல் இருக்குமாமே
பிணங்களின் பிட்டம் மட்டும்
வெளித்தெரிய
குடம் கவிழ்த்தாற்போல்
சுற்றிச் செல்லுமாமே
என் அப்பாவையும்
குடமென்று
நினைத்தாயோ
நீரை நிரப்பியிருப்பாய்
அதற்குள்
வாழ்வை நிரப்பியொரு கை
இழுத்துப் போட்டதென்று
உனக்கு
இன்னும் வருத்தமா
இதோ நான் நிற்கிறேன்
இழுத்து நிரப்பிக்கொள்
என்னை
எப்படி நீ
குடமாக்குவாய் என்று
பார்க்க வேண்டும் நான்

6. தைலதாரை
குறையாக் குடத்துக்கும்
நிறையாக் குடத்துக்கும்
தீரா துவந்தம்
துவந்தத்தின் மேல்
பாலம் கட்டி
பாலத்தின் நடுவிலிருந்து
இரு புறமும்
ஒரே சமயம்
உருள்கிறது
உடையாக் குடம்
வாழ்வின் தளும்பலோசை

7. ‘கெர்ப்பப்பை’
‘என்ன கண்ணு பாக்குற
அது அம்மா
கும்பிட்டுக்கோ
‘பொறப்பெடுத்த எத்தனையோ பேர
மறுபடியும் தன் வயித்து சிசுவாக்கிக்க
ஆசைப்படுற
அம்மா
‘அதோட ஒவ்வொரு சுழலும்
அதோட கெர்ப்பப்பை
மொட்டு மொட்டாப்
பூத்து வரும்
புள்ளை கிடைச்சா
வாரிச் சுருட்டிக்கும்
‘அவளோட கெர்ப்பப்பை வாசம்
இருக்குற
குழந்தைங்கதான்
அவளைப் பாக்க
வருவாங்க
அதான் நீ வந்திருக்கே
‘கும்பிட்டுக்கோ ஐயா
ராசவடுவு’

8. மூழ்குவேனென்று நினைத்தாயோ
நீ யார் பாட்டி
உன் பெயர் என்ன
மாயக் குடமுருட்டியா
கரைக்கே வந்துவிட்டாயா
கைப்பிடித்துக்
கூட்டிச்சென்றிடுவாயா
வேண்டாம் பாட்டி
உன் கைக்கும்
அன்று முடி பிடித்த கைக்கும்
இடையே நான்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கே வாய்த்த
சிறு நிரந்தரத்தில்
நானும்
சோழசூடாமணியாய்
புதாறாய்
என் பாதி வழியில்
பெயரிழக்கும் தருணம் வரை
ஓடிக்கொண்டிருந்துவிட்டுப்
போகிறேன்
குடமுருட்டியில்
மூழ்க அல்ல
குடமுருட்டி
ஆக வந்தவன் நான்
அப்படியே ஆகட்டும்
என் வாழ்வு

9. சவாரி
வெளிப்படுத்தாமல்
அமுக்கி வைத்த சுழிப்புகள்
எத்தனையோ
என்னிடம்
கையளித்துச் சென்றுவிட்டார்
அப்பா
அவற்றுள்
ஒன்றிரண்டாவது
குமிழியிட்டுப் பின்
குழந்தைகளுக்கு
விட்டுச்செல்வேன்
குடமுருட்டிச் சவாரி
அவர்களுக்கானது
எங்களைச் சிறைவைக்க நினைத்த
கருப்பைகளைக் குதிரையாக்கித்
தட்டிப் புழுதி பறக்க
ஓட்டிச்செல்வார்கள்
அவர்கள்

10. பாமணியாறு
அன்று ஆற்றங்கரையில்
வீடிருந்த காலம் தொட்டு
இன்று கடற்கரையில் வீடிருக்கும்
காலம் வரை
நீச்சலறியாக் குழந்தை நான்
இது தூரத்துக்
குடமுருட்டியின்
இழுப்பன்றி வேறென்ன
பத்து முறை மூழ்கியும்
ஒவ்வொரு முறையும்
வந்துவிடுகிறது
ஒரு கை
பாமணியாறு நீயல்ல
அதற்குக் குடங்களை உருட்டிப்
பழக்கமில்லை
அடித்து ஆழத்தில் முக்கும்
இல்லையேல்
விலக்கிக் கரைமேல்
போடும்
இந்த
இரண்டுக்கும் நடுவே
ஒரு கதவு திறந்து
ஒரு பாதை தெரிய
ஒவ்வொரு முறையும்
கேட்டிருக்கிறேன்
உன் தீனமான குரலை
அதற்குள்
இழுத்துக் கரையில் போடப்பட்டு
அரைமயக்கத்தில் கிடந்தாலும்
நான் வியந்துகொண்டிருந்தது
எல்லா ஆறுக்குள்ளிருந்தும்
எல்லா நீருக்குள்ளிருந்தும்
நீளும் உன் பாதை பற்றித்தான்

11. குறுநண்டுச் சிரிப்பு
குடமுருட்டி
மேலும் மேலும்
நீச்சலின்மையைக் கற்றுக்கொடுக்க
உன் தூரத்துச் சூழ்ச்சியை இன்றுவரை
உணர்கிறேன்
வங்கக் கடல் அழைக்கிறது
கால்பிடித்து இழுக்கிறது
அலைவிலகி நீர்வடிய
தரைப்பரப்பில்
குடம்குடமாய் நீர்மொட்டுகள்
உனைக் காட்டி
வெடித்து மறையும்
மொட்டிருந்த தரையெல்லாம்
குறுநண்டுகள்
குப்பென்று பூத்து
வெளியோடும்

12. ஆகாசம்
குடம்
குடமுருட்டி
குடா
குடாகாசம்
ஆகாசம்
மாபெரும் குடமுருட்டி
கூத்தாடிக் கூத்தாடி
ஆகாசம்
போட்டுடைப்பேன்டி
-ஆசை

Thursday, September 11, 2025

பாரதீ: எம் கவிஞன் நீ! - பாரதி நினைவுநாள் கட்டுரை



ஆசை

‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.