Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Monday, April 14, 2025

சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை


டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.

Tuesday, December 31, 2024

காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை


(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)

தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும். 

       எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

       கண்ணென்ப வாழும் உயிர்க்கு  

என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப்  ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Saturday, February 10, 2024

மகாத்மாவின் மறுமொழி


நமஸ்தே பாபாசாகேப்
நலம்மிக விரும்புகிறேன்
சவிதாபென் நலமும்

நான்தான்  எத்தகையதோர் துரதிர்ஷ்டசாலி 
நான் சித்தரித்த பூரண திருமணத்தின்
உன்னத நிகழ்வை 
தரிசிக்காமலேயே போய்விட்டேனே

இருந்திருந்தாலும்
நீங்கள் அழைத்திருக்க மாட்டீர்தான்
ஆனாலும் அகமகிழ்ந்து
தொலைவிலிருந்தே 
அட்சதை தூவியிருப்பேன்
அதை என் கருணையென்று 
தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்

கருணை
ஐயோ இச்சொல்
என் காதைக் குடைந்து
நெஞ்சையொரு
வண்டாக உண்கிறதே

கடைச்சிறியேன் நான்
எனக்கே கருணை வேண்டி
இறைவனை மட்டுமல்ல
இறைவனின் குழந்தைகளையும்
இறைஞ்சுகிறேன்

அவர்தம் கருணை வேண்டிதான்
நடையாய் நடக்கிறேன்
துடியாய்த் துடிக்கிறேன்
அடுத்த பிறவியிலாவது
தீண்டப்படாதோரில்
ஒருவனாய்ப் பிறக்க 
வேண்டுமென்று
ஜெபிக்கிறேன்

உள்ளத்திலே நானொரு
தீண்டப்படாதவன்
என்றே நினைப்பது
சொகுசுக் கற்பனையல்ல
அவரிடத்தில் என்னை
இடம்பெயர்த்துவைத்து
முழுவலியுணரும்
முயற்சியே

அந்தோ பரிதாபம்
அம்முயற்சியில் தோல்வியுற்றேன்
என்றே எனை நீங்கள்
எத்தனைதான் ஏசினாலும் 
மறுபேச்சின்றி ஏற்பேன்
பாபாசாகேப்
மறுபேச்சின்றி ஏற்பேன்

கருணையால் நசுக்க அல்ல
அவர்கள் கருணை
எனக்குக் கிட்டுமொரு வாழ்வை
அவர்கள் அடையவே
துடிக்கிறேன்

அந்தோ பரிதாபம்
அம்முயற்சியில் தோல்வியுற்றேன்
என்று நானே சொல்கிறேன்
எனை நீங்கள்
எத்தனைதான் காறியுமிழ்ந்திடினும்
எதிர்ப்பின்றி ஏற்பேன்

ஆனால்
என் விஷப்பற்களை
உங்கள் கழுத்தில் பதித்திட்டதாய்
நேர்காணல் அளித்தீர்கள்
நெஞ்சு துடிக்கிறது
பாபாசாகேப்
நெஞ்சு துடிக்கிறது

என் விஷப்பற்களை 
நீங்கள் கண்டறிந்தது
எனக்குப் பெரும் மகிழ்ச்சியே
ஆயினும் அவற்றை
யார் கழுத்திலும் பதித்ததில்லை
என் கழுத்து தவிர

மேலென்றும் கீழென்றும்
சொல்லிப் பிறப்பெடுத்தால்
மேலெல்லாம் விஷம்தானே
என் விஷம் முறிப்பதற்காய்
என் கழுத்தில் நானே
கணந்தோறும் பற்கள் பதிக்கின்றேன்

அந்தோ பரிதாபம்
அம்முயற்சியில் நானடைந்த தோல்வியின்
வழிதவறிய பிம்பமொன்று
உங்கள் சிந்தைக்குள்
குடிகொண்டுவிட்டதே
உங்கள் கழுத்தில் பதித்ததாய்
எண்ணம் விதைத்ததே

மன்னியுங்கள்
பாபாசாகேப்
தோல்விகளே என் பிழை
அவற்றுக்காய் எனை
மன்னியுங்கள்

என் பெருஞ்சிலையையும்
பேரிலுள்ள மகாத்மாவையும்
நானே முன்னின்று உடைப்பேன்
அதையும் நீங்கள்
கருணையென்று எண்ணினால்
கைமட்டும் தட்டுகிறேன் தூரநின்று

உண்மையில் சொல்கிறேன்
பாபாசாகேப்
ஒருவர் தன் சிலுவையைத்
தானே சுமக்கலாம்
தன் சிலையைத்
தானே சுமப்பது பெருஞ்சுமை
உடைத்தெறியுங்கள்
என் பெருஞ்சிலையை

காலியாகும் இடத்தில்
நீங்கள் அனுமதித்தால்
ஓரமாய் நானும்
ஒருக்களித்துக் கொள்கிறேன்
        -ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 

1. பாபாசாகேபின் தனிமொழி



4. TENET











 

Friday, February 9, 2024

பாபாசாகேபின் தனிமொழி


உங்கள் கருணையைக்
கொஞ்சம் நிப்பாட்டுங்கள்
காந்திஜி
அது
எங்கள் துயரைவிட
பூதாகரமாக உருக்கொண்டு
நிற்கிறது
ஒரே ஒரு
பூதாகரம்தான் இருக்க முடியும்
அது எங்கள் துயரே
இருபதாம்
நூற்றாண்டின்
இணையற்ற பெருநிழல் நீங்கள்
அதற்குள் ஒரு சிறுநிழலாய்
இளைப்பாற
என்னால் முடியாது
அதனால்தான்
தனிச்சூரியனாய்
எரிகிறேன்
எங்கள் கதை
பெரும் நாடகமாய்
இருந்திருக்க வேண்டும்
ஆனால்
உங்கள் நாடகத்தின்
ஓரங்கமாகிவிட்டது
எங்கள் துரதிர்ஷ்டம்
உங்கள்
கருணை நிழலை
நீங்களே திரும்பிப் பாருங்கள்
அதன் கடைவாய்ப் பற்கள்
இரண்டு நீண்டு
எம் கழுத்தில் பதிகின்றன
அவை எங்களைக்
கருணைக்காகக்
காலமெல்லாம்
காத்திருக்க வேண்டிய
ரத்தக் காட்டேரி
ஆக்கிவிடுகின்றன
நீங்களோ
என்றென்றும்
மகாத்மாகவே எஞ்சிவிட்டீர்
இப்போதும் பாருங்கள்
இந்நூலின் நாயகர் நீங்களே
பன்மைக்குரலுக்காய்
ஒரு ஓரத்தில் நான்
இதைத்தான்
இதற்கெதிராய்த்தான்
தொடக்கம் முதல்
முழுமூச்சாய்
என் போராட்டம்
என்னிடம்
இருப்பது சிறு சுத்தியல்தான்
ஆயினும்
ஒரு பெருஞ்சிலையை
உடைத்து வீழ்த்த
இது போதுமானதே
அது வீழ்ந்தால்தான்
அதன் கீழ்
நிம்மதியாய்த்
தன்நிழலுடன்
தூங்க முடியும்
நிழலின்றிப் பிறந்துவிட்டோம்
நிழலின்றிப் போக மாட்டோம்
காந்திஜி
-ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 




4. TENET











 

Thursday, August 17, 2023

அதிகாரம் என்பது தலித் மக்களுக்கு வெறும் கனவா?



ஆசை


I

அப்போது 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தது. பலருக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்திக்கொண்டிருந்த விஷயம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்தங்கிக்கொண்டிருந்ததுதான். மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசம்தானே, எப்படியும் அவர் வென்றுவிடுவார் என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அப்படியும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தால் இன்னொரு விஷயமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே தொகுதியில் டி. திருமாவளவன் என்பவர் சுயேச்சையாக நின்று 289 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நோட்டாவுக்காக விழுந்த ஓட்டு 1,025. இந்தக் கணக்குகள் சொல்லும் செய்திகள் புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கடினமானவை அல்ல. இத்தனைக்கும் அது தனித்தொகுதி; வென்றவரும் தலித் சமூகத்தினர்தான். ஆனால், அவர் தலித் சமூகத்துக்காக ஒரு கேள்வியைக்கூட சட்டமன்றத்தில் கேட்பார் என்றால் அது உலக அதிசயமாகத்தான் இருக்கும்.

திருமாவளவன் என்ற ஒரு கட்சித் தலைவர் வெல்ல வேண்டும் என்று ஏன் முற்போக்காளர்கள் துடித்தார்கள்? ‘அவரும் அரசியல் குட்டையில் ஊறியவர்தானே? பாரபட்சமே இல்லாமல் எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கடைசியில் விஜயகாந்த்தைத் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்தானே? கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சிதானே அது?’  என்றெல்லாம் அவர்மீது  இந்தத் தோல்விக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து விமர்சனங்கள், அவதூறுகள் அள்ளிவீசப்படுகின்றன. ஊழலிலும் அதிகாரத்திலும் காலம்காலமாகத் திளைத்தவர்கள் மீது கூட இவ்வளவு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதில்லை. எந்த அதிகாரத்திலும் இல்லாத திருமாவளவன் போன்றவர்கள் மீது மட்டும் இந்தச் சமூகமும் விமர்சகர்களும் இவ்வளவு குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு பதில் காண முயன்றால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊறித் திளைத்திருக்கும் சாதியம் நமக்குப் புலப்படும்.

திராவிடக் கட்சிகளின் கணக்கு

கடந்த ஆண்டு வாக்குப் பதிவு அன்று எங்கள் தெருவில் இருந்த தேமுதிக கட்சிக்காரர் ஓட்டுப் போட்டுவிட்டு இப்படி வந்து சொல்கிறார், ‘தே.மு.தி.கவுக்கு ஓட்டு போட்டிருப்பேன். ஆனால், இவர் (திருமாவளவன்) இந்தக் கூட்டணியில் இருக்கிறார் இல்லையா. மேல்ஜாதிப் பொண்ணுங்களெல்லாம் போய் லவ் பண்ணுங்கன்னு சொன்ன ஆளு இருக்குற கூட்டணிக்கு நான் ஓட்டு போட மாட்டேன்’ என்றார். (திருமாவளவனை ஒருமையில்தான் விளித்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை). தன் பையனோ பெண்ணோ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பையனையோ பெண்ணையோ காதலிப்பார்கள் என்றால் அவருக்கு இந்த அளவுக்குப் பிரச்சினை இருந்திருக்காது. இந்த ஒரு வாக்காளரின் மனநிலைதான் அதிமுக, திமுக என்று கட்சிகள் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவுகிறது. விசிகவைச் சேர்த்துக்கொண்டால் முக்குலத்தோர் ஓட்டுகள், வன்னியர் ஓட்டுகள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது மட்டுமல்ல, அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளும் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பது இருபெரும் திராவிடக் கட்சிகளின் கணக்கு. இத்தனைக்குப் பிறகும் திமுக தோற்றதற்கு சமூகநீதி உணர்வுள்ள கருத்தாளர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை. ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் சமூக நீதி என்ற விஷயத்தில் (பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதிதான்!) திமுக பங்களிப்பு செய்திருக்கலாம். இப்போதோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. கருணாநிதியின் பிடி திமுகவில் தளர்ந்ததன் விளைவாகவும் இதைக் கருதலாம். ‘தி இந்து’வுக்கு திருமாவளவன் அளித்த விரிவான பேட்டியொன்றில் தலித் சமூகத்தின் உரிமைகள், பிரச்சினைகள் குறித்துத் தன்னால் கருணாநிதியிடம் பேச முடிந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதே திமுகதான் தற்போது திருமாவளவனுக்குப் பாராமுகம் காட்டியிருக்கிறது. சரி திமுக, அதிமுகதான் இப்படி என்றால் மக்கள்நலக் கூட்டணி மட்டும் என்ன லட்சணம். திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்வைக்கும் துணிச்சல் யாருக்காவது இருந்ததா? தோற்றிருந்தாலும் எவ்வளவு மகத்தான முன்னுதாரணமாக இருந்திருக்கும். 

ஒட்டுமொத்த அரசியலும் வாக்கு வங்கியை நம்பிச் செயல்படுகிறது. அப்படியிருந்தும் தலித் மக்கள் என்ற பெரும் வாக்கு வங்கி யாருக்கும் தேவையில்லை. வாக்கு வங்கி என்ற அளவில் கூட தலித் மக்கள் பொருட்படுத்தப்படுவதில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதில் பொதுச் சமூகத்துக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவுக்கு தலித் கட்சிகளுக்கும் இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசியல் மையநீரோட்டத்தில் கலந்துகொள்ளும்போது மற்றவர்களைப் போலவே தலித் தலைவர்களும் ஊழல்மயப்பட்டுவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால், அரசியல் மையநீரோட்டம் என்பது முழுக்க முழுக்க பணபலத்தை நம்பி இயங்குவது. சமூகநீதிக்காகப் போராடும் கட்சியொன்று மையநீரோட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினால் ஊழல்மயப்பட்டாக வேண்டிய கட்டாயத்தை அமைப்பே ஏற்படுத்திவிடுகிறது. பணத்தை நம்பாமல் அரசியலில் ஈடுபடவும் முடியாது. ஆகவே, தலித் கட்சிகளின் பிரச்சினை என்பது புலி வாலைப் பிடித்த கதைதான்.  


II

அதிகாரமின்மையின் இரண்டாயிரம் ஆண்டுகள்…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்துக்குத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள் தலித் மக்கள் என்று திருமாவளவன் ‘தி இந்து’ பேட்டியில் குறிப்பிட்டிருந்தது பெரும் தவிப்பின் அடையாளம். அப்படியே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றாலும் அதற்கு அவர் எந்த அளவுக்குப் போராட வேண்டும் என்பதற்கு அம்பேத்கரை விட சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியாது. அவர் காலத்து இந்தியர்கள் யாரை விடவும் அதிகம் படித்திருந்தும், உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருந்தும், தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகப் போகும் இடங்களிலெல்லாம் புறக்கணிப்பை எதிர்கொண்டார். தனது புரவலரின் அலுவலகத்தில் ஆரம்பத்தில் அவருக்கு வேலை கிடைத்தாலும் அங்கும் தனக்குக் கீழ்நிலையில் பணிபுரியும் ஆதிக்கசாதி ஊழியர்களிடமிருந்து கடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டார். அவர் வேலை பார்த்த அலுவலகத்தின் பியூன் கோப்புகளை அம்பேத்கர் மேசைமீது தூக்கித்தான் எறிவார். அலுவலகத்தில் உள்ள தண்ணீர்ப் பானையில் அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவும் முடியாது.

இன்னும் நெடுக, சமூகத்தினரிடமிருந்தும் அரசியல் வட்டத்திலும் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டே மேலே மேலே வந்துகொண்டிருந்த அம்பேத்கர் தேர்தல்களில் கூட அதிகம் தோல்விகளையே பெற்றார்.

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த முதல் அமைச்சரவை என்பது உலகத்துக்கே ஓர் முன்னுதாரணம். ‘சுதந்திரம் என்பது காங்கிரஸுக்கு மட்டும் கிடைக்கவில்லை. எல்லோருக்கும்தான்’ என்று சொல்லிய காந்தி, திறமையானவர்கள், தகுதியானவர்கள் காங்கிரஸுக்கு எதிர் அணிகளில் இருந்தாலும் அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். காந்தியின் பரிந்துரையைத் தாண்டியும் அம்பேத்கருக்கு நிகரானவர்கள் அப்போது அநேகமாக யாரும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்த முதல் அமைச்சரவைதான் அப்படிப்பட்ட கடைசி அமைச்சரவையாக அமைந்துபோய்விட்டது என்பது இந்திய ஜனநாயகத்தின் பெருந்துயரம். அதற்குப் பிறகு மறுபடியும் தேர்தல் அரசியலில் அம்பேத்கர் தோற்றுப்போனார். தலித் வேட்பாளர்களுக்கான தனித்தொகுதி இருந்தாலும் பெருங்கட்சிகளைச் சேர்ந்த தலித் வேட்பாளர்களாலோ, பெருங்கட்சியினருடன் கூட்டணி வைத்த தலித் வேட்பாளர்களாலோதான் இந்தத் தேர்தல் அரசியலில் வெல்லவோ தாக்குப்பிடிக்கவோ முடிந்தது. தலித் கட்சிகளாக இருந்தால் அவற்றுக்குப் பொதுச் சமூகத்தின் ஆதரவும் ஓட்டுக்களும் கிடைக்காது. தலித் சமூகத்தினரின் ஓட்டுக்களும் பெருங்கட்சிகளிலுள்ள தலித் வேட்பாளர்களுக்கே பெரும்பாலும் விழும். அந்த வேட்பாளர்கள் தலித்களின் உரிமைகளுக்காக அநேகமாகப் பேசுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தலித்களுக்குக் கொடுக்கப்படும் பதவிகள், பொறுப்புகள் பெரும்பாலும் பெயரளவில் அடையாளச் சின்னமாகத்தான் இருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன், பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டும். இதையும் தாண்டி, மாயாவதியின் வருகை என்பது இந்திய அரசியலில் ஓர் அதிசயம்தான். பிஹார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சிகூட ஒரு வகையில் பொம்மை முதல்வராகத்தான் ஆக்கப்பட்டிருந்தார்.

மாயாவதியின் முக்கியத்துவம்

தலித்கள் அதிகாரத்துக்கு வருவதற்கான அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பிற சமூகத்தினர் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. மாயாவதியின் மீது மற்ற எல்லோரையும்விட அதிகமாக ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதில் பெருமளவு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலித் நண்பர் ஒருவர் சொன்ன செய்தியின் மூலம் மாயாவதி என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.  “தலித் முதல்வர் என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த அளவுக்கு ஊழல்வாதியாக இருக்கிறாரே மாயவாதி, அவரை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?” என்ற கேள்விக்கு அவர் இப்படிப் பதில் அளித்தார்: “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும். மாயாவதி முதல்வராக ஆவதற்கு முன் ஒரு தலித் ஏதாவது புகார் கொடுக்கக் காவல் நிலையம் சென்றால், ‘ஓ, காவல் நிலையம் வந்து புகாரெல்லாம் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டாயா?’ என்று கேட்டுக் கைகால்களை முறித்துவிட்டுத்தான் அனுப்புவார்கள். மாயாவதி முதல்வரான பின்புதான் தலித்கள் புகார் கொடுக்க வந்தால் மதித்து உட்காரச் சொன்னார்கள். தலித் உரிமைகளைப் பொறுத்தவரை இது எவ்வளவு பெரிய பாய்ச்சல் என்பதைப் புரிந்துகொண்டால்தான் உங்களால் மாயாவதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார். திருமாவளவன் மீது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகள் வைக்கட்டும்; அவர்களுக்கும் சேர்த்துதான் அந்த உத்தர பிரதேசத்துக்காரர் பதில் சொல்லியிருக்கிறார்.


III

எந்த பாதை நோக்கி?

தலித் மக்கள் காலம்காலமாக அனுபவித்துவரும் கொடுமைகளுக்குத் தீர்வு  என்பது அவர்கள் அதிகாரத்துக்கு வருவதுதான். ஆனால், அதிகாரத்தை நோக்கி மற்றவர்கள் சென்ற பாதையிலேயே அவர்களும் கட்டாயம் காரணமாகச் செல்ல முயன்றுகொண்டிருப்பதும், சமூகத்தின் புரையோடிய சாதிய உணர்வும்தான் தலித்களின் அதிகாரப் பாதை நோக்கிய பயணத்தை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள். பொதுச் சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றாமல் தலித்களால் அதிகாரத்தை அடையவே முடியாது. இதற்கு அரசியல் அதிகாரத்துக்கான முயற்சிகள் மட்டுமே போதாது. ஏனெனில், அந்த முயற்சிகளை அடையும் வழியை வழக்கமான ஊழல் பாதையாகவே அமைப்பு போட்டு வைத்திருக்கிறது. ஊழலை விட சாதியம் எவ்வளவு மோசமானது, இந்தியாவின் தலையாய பிரச்சினை சாதிதான் என்பதை தலித் மக்களும் முற்போக்காளர்களும் சொல்லிவந்தாலும் பொதுச் சமூகத்தின் பொதுப் புத்தியில் ஊழல்தான் பிரதானப் பிரச்சினையாகத் தோன்றும். (வெளித்தோற்றத்துக்காகவாவது) ஊழலற்ற மனிதர்களால், ஊழலற்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களே பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஆகவே, ஒரு பக்கம் அரசியல் பாதையை நோக்கிய பயணம் இருக்க, இன்னொரு பக்கம் தலித் மக்களிடையே இயங்கி, பொதுச் சமூகத்துக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான உரையாடலை, உறவை மேம்படுத்தி, அரசியலின் ஊழலுக்கு அப்பால் இயங்கும் தலித் அமைப்புகள் ஆகிய இரண்டு தரப்புகளும் அவசியமகின்றன.

காந்தியின் காலத்தில் ஆதிக்கசாதியினரிடையே அவர்களது மனசாட்சியைத் தட்டியெழுப்ப அவர் பணியாற்றியதுபோல் இன்று யாரும் செய்யக் காணோம். இரு தரப்பும் பிளவுபட்டு, உரையாடலும் உறவும் சாத்தியமற்ற சூழல் காணப்படுகிறது. தலித் அமைப்புகள்-கட்சிகள், இடதுசாரிகள், பெரியாரியர்கள், திராவிடக் கட்சிகள், காந்தியர்கள் போன்றோர் தங்கள் கருத்துவேறுபாடுகளைத் தூரத்தில் வைத்துவிட்டு சாதியொழிப்பை நோக்கியும் தலித் மக்கள் உள்ளிட்ட நசுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெறுவதை நோக்கியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் பெருமளவிலான மாற்றம் ஏற்படும். ஆனால், இங்கே தலித் அமைப்புகள், தலித் தலைவர்கள் காந்தியையும் காந்தியவாதிகளையும் அடியோடு வெறுக்கின்றனர். பெரியார் மீதும் கணிசமானோருக்கு விமர்சனம் உண்டு. இடதுசாரிகள் மீதும் முழு நம்பிக்கை இல்லை. இது ஒரு பக்கம் என்றால், காந்தியவாதிகளுக்கு அம்பேத்கர் ஒரு பொருட்டல்ல (காந்தி அப்படிக் கருதியவரல்ல), பெரியாரியர்கள் பலரும் பிராமணியத்துக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் போராடிய அளவுக்கு தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. கீழ்வெண்மணி போன்ற பிரச்சினைகளில் தலித் மக்களுடன் நின்றவர்கள் இடதுசாரிகள். ஆனால், அவர்களில் பலரும் சாதியத்தை வர்க்கப் பிரச்சினையாக பார்க்கும் மனநிலையைத் தாண்டி வரவில்லை. இப்படி இரு தரப்பிலும் காணப்படும் வேறுபாடுகளால், பிளவுகளால் இழப்பென்பது தலித் மக்களுக்கும், லாபம் என்பது சாதியவாதிகளுக்குமாகத்தான் இருக்கிறது. இந்தப் பிளவு மேலும் மேலும் மோசமாகிக்கொண்டுதான் போகிறது. அதிகாரத்தை நோக்கிய தலித் மக்களின் பயணம் இதனால் அடைந்திருக்கும் பின்னடைவை முற்போக்காளர்கள் அனைவரும் ஆழமான அகவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பொது மனசாட்சியைக் குறிவைத்து…

ஜனநாயகத்துக்குத் தேர்தல் எவ்வளவு அவசியமாக இருந்தாலும் தேர்தலுக்கு ஜனநாயகம் பொருட்டல்ல என்பதுதான் அம்பேத்கரில் ஆரம்பித்து திருமாவளவன் வரையிலானோரின் தோல்விகள் நமக்கு உணர்த்தும் உண்மை. அந்த அளவுக்கு சாதியத்துக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது நம் சமூகம். மற்றவர்களெல்லாம் கோபம் வந்தால் வன்முறையில் இறங்கலாம், கலவரத்தில் ஈடுபடலாம். ஒரு தலித் அப்படிச் செய்ய முடியாது. எதிர்க்க நினைத்தாலும் பாதிப்பு அவருக்குத்தான். அவர் ஒரு அடி கொடுத்தால் அவர் சமூகம் முழுமைக்கும் பல அடிகள் திருப்பி விழும். ‘அம்பேத்கர் நினைத்திருந்தால் நம்மீது வன்முறையைப் பிரயோகித்திருக்கலாம். அதற்குரிய எல்லா நியாயமும் அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் நம்மீது காறித் துப்பினாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தி கூறினார். தலித்கள் என்னவோ அகிம்சையை விரும்பித் தேர்ந்தெடுத்ததுபோல் நமக்குத் தோற்றமளித்தாலும் உண்மை என்னவென்றால் அவர்கள் திருப்பி அடிக்க முடியாதவாறு, அப்படிச் செய்தால் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும்விதத்தில் இந்தச் சாதியச் சமூகம் அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் யதார்த்தம்! தலித்கள் அகிம்சையை மேற்கொண்டிருப்பது இருக்கட்டும், இந்தச் சமூகம் எப்போது அகிம்சைக்குத் திரும்பப் போகிறது என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டுமானால், தலித்களின் அதிகாரத்தை நோக்கிய பயணம் முன்திசையில் செல்ல வேண்டுமானால் பிளவுகளைக் கடந்த உரையாடலும் உறவாடலும் பொது மனசாட்சியைக் குறிவைக்கும் முயற்சிகளும் நடைபெற்றால் மட்டுமே சாத்தியம்! இது ஒரு கை ஓசையாக இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கரகோஷமாக ஆக வேண்டும். ஒற்றுமையாய்க் கைகோத்துக்கொண்ட சாதியப் பெருமிதங்களை உள்வாங்கிக்கொண்டு பிரம்மாண்டமாய் இந்துத்துவம் எழுச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் முற்போக்காளர்கள் மட்டும் சிதறிக் கிடப்பது இந்தக் கனவைக் கனவாகவே வைத்திருக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

 (2017-ல் வெளியான கட்டுரை)

Friday, August 7, 2020

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்


அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம். சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது

உங்களுடைய பாதைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே? 

அது உண்மையல்ல. 1989-ல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது “தேசியச் செயல்திட்டத்தில் நீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்” என்று தெளிவாகக் கூறியிருந்தோம். அரசியல் அறம், அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் நீதி. அது பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. ‘இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்க வேண்டும். எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம்.  

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?  

கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும். 

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?  

அது வெறும் மேல்பூச்சுதான்.  

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?  

இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மதமும் இந்த அமைப்புமே மேலோங்கின. ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அரசியல், சமூக, பொருளாதார ஏகபோகங்கள் முடிவுகள் எடுப்பதிலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன. இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.  

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?  

இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான்.  

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?  

இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது. ‘ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்தது” என்று என்னிடம் கூறினார்கள். இது 27% அல்லது 10% என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1%-கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி. நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்? இன்னொரு முறை ஒரு பத்திரிகைக்காரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், “நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்” என்று பதில் கூறியிருக்கிறார். “வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்” என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். “ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்” என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.  

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?  

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும். வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

- மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று வி.பி.சிங் அறிவித்த 30-வது ஆண்டு நிறைவையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான நேர்காணல்.


 

Wednesday, February 5, 2020

அம்பேத்கரின் ‘குரலற்றவர்களின் தலைவருக்கு’ நூற்றாண்டு


ஆசை

(டாக்டர் அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ இதழின் நூற்றாண்டையொட்டி 05-02-2020 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான எனது கட்டுரை)

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து எந்த ஒரு இயக்கமும் தனக்கான ஒரு ஊடகத்தைக் கொண்டிருப்பதை முக்கியமென்று கருதிவந்திருக்கிறது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள்/ இருப்பவர்கள் தலித் மக்களே! அம்மக்களின் குரல் ஒலிப்பதற்கான அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ இன்றுவரை குறைவாகத்தான் இருக்கின்றன. ஊடகங்களில் பலவும் முற்பட்ட சமூகத்தினரால் நடத்தப்படுவதால், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவை பெரிதும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு காலமாகவே இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மேற்கொண்ட முன்னோடி இதழியல் முயற்சிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது நமக்குப் புலப்படுகிறது.

அது 1920, ஜனவரி 31. டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய மாதமிருமுறை மராத்தி இதழான ‘மூக் நாயக்’கின் முதல் இதழ் வெளியான நாள். ‘மூக் நாயக்’ என்றால், மராத்தி மொழியில் ‘குரலற்றவர்களின் தலைவர்’ என்று பொருள். இந்தப் பெயரை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்திய பக்திக் கவிஞர் துக்காராமின் பாடல் ஒன்றிலிருந்து டாக்டர் அம்பேத்கர் தழுவிப் பயன்படுத்தினார். ‘மூக் நாயக்’ என்ற பெயருக்குக் கீழாக, அந்தப் பாடலும் இடம்பெற்றிருந்தது.

மூக் நாயக்கின் பின்னணி
முன்னதாக அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த அம்பேத்கர், லண்டனில் உள்ள பொருளாதாரக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பரோடா மாகாண கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அந்த ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டு, இந்தியாவுக்கு 1917-ல் வந்தார். மீண்டும் தனது ஆய்வைத் தொடரும் கனவோடு அதற்கு ஆகக்கூடிய செலவுக்குத் தொகையைச் சேமிப்பதற்காக ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சில அனுபவங்கள்தான் அவரை சொந்தமாகப் பத்திரிகை நடத்தத் தூண்டின.

1918-19 ஆண்டுகளில் சவுத்பரோ கமிட்டி இந்தியாவுக்கு வந்தது. அது தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில், டாக்டர் அம்பேத்கரையும் முற்பட்ட பிரிவினர் சார்பில் சமூக சேவகர் வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் தங்கள் தரப்புகளின் வாதங்களை எடுத்துவைக்க அழைத்தது. இந்த விஷயத்தில் வித்தல் ராம்ஜியின் தரப்பு வாதங்களுக்குப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை என்று அம்பேத்கரின் மனம் வாடியது. கூடவே, ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை எடுத்துக்கூறி ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்தக் கடிதம் பிரசுரிக்கப்படவேயில்லை. இதெல்லாம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி பத்திரிகை வேண்டும் என்ற திசையை நோக்கி அம்பேத்கரை நகர்த்தின.

நிதி வசதி ஏதும் இல்லை என்றாலும் ஒரு லட்சிய உத்வேகத்துடன்தான் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ பத்திரிகையைத் தொடங்கினார். அவர் பத்திரிகை தொடங்கும் செய்தியை அறிந்த கோலாப்பூரின் சத்திரபதி ஷாஹு மகாராஜா அம்பேத்கரின் இல்லத்துக்கு வந்து ரூ.2,500 நன்கொடையைத் தந்தார். பத்திரிகையின் தொடக்க நிலையில் இந்தத் தொகை பெரும் ஊக்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘மூக் நாயக்’ பத்திரிகையை அம்பேத்கர் தொடங்கினாலும் அதன் ஆசிரியர் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்ததில்லை. அரசுப் பணியில் இருந்ததுவும் இதற்கு ஒரு காரணம். மாதம் இருமுறை இதழாக ஒரு சனிக்கிழமை விட்டு அடுத்த சனிக்கிழமையில் அந்த இதழ் வெளியானது. ஆரம்பத்தில் பாண்டுரங் நந்தராம் பட்கர் அந்த இதழின் அதிகாரபூர்வ, பெயரளவிலான ஆசிரியராக இருந்தார். பிறகு, தின்யந்தேவ் கோலப் ஆசிரியர் பொறுப்பேற்றார். சில காலம் கழித்து அம்பேத்கருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோலப் பதவி விலகினார்.

மூக் நாயக் இதழின் முகப்பு

படிகளற்ற கோபுரம்
‘மூக் நாயக்’கின் முதல் இதழில்தான் தற்போது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அம்பேத்கரின் வரிகள் இடம்பெற்றன. “இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.” ‘

மூக் நாயக்’ அதன் பெயருக்கு ஏற்ப குரலற்றவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்கொண்ட சாதிக் கொடுமைகளைப் பற்றி அந்த இதழுக்குக் கடிதம் எழுதினார்கள். அது சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம். ‘மூக் நாயக்’ பத்திரிகை இந்திய தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் அம்பேத்கரோ ‘மூக் நாயக்’ பத்திரிகையோ இந்திய சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அந்நியரின் கொடுமைகளை, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இந்திய தேசியவாதம் நமக்குள்ளே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதால்தான் அது அம்பேத்கரால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்னொரு இதழில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: “இந்தியா ஒரு சுதந்திர நாடாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. ஒரு நல்ல அரசாகவும் உருவாக வேண்டும். அதில் எல்லா வகுப்பு மக்களுக்கும் மதம், சமூகம், பொருளாதாரம், அரசியல் தொடர்பானவற்றில் சம உரிமை என்பது உறுதிசெய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வின் படிகளில் உயர்வதற்கான வாய்ப்பும், இவ்வாறு முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் அளிக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பிராமணர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதைவிட நூறு மடங்கு நியாயம், ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து பிராமணர் கைகளுக்கு மட்டும் மாற்றப்படக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்ப்பதில் அடங்கியிருக்கிறது.”

புறக்கணிப்பு
‘மூக் நாயக்’ இதழ் தொடங்கப்பட்டபோது, பால கங்காதர திலகரின் ‘கேசரி’ பத்திரிகைக்கு மூன்று ரூபாய் பணத்துடன் விளம்பரம் அனுப்பப்பட்டது. விளம்பரம் செய்ய மறுத்துவிட்டு பணத்தைத் திருப்பி அனுப்பியது அந்தப் பத்திரிகை. இப்படியாக, தொடக்கத்திலேயே அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ புறக்கணிப்பை எதிர்கொண்டது. 1920-ல் 700 சந்தாதாரர்களைக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, 1922-ல் ஆயிரத்தைத் தொட்டது. இதற்கிடையில் பாதியிலேயே நின்றுபோன தனது பொருளாதார முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக அம்பேத்கர் லண்டன் சென்றுவிட ‘மூக் நாயக்’ பத்திரிகை தள்ளாடியது. அதற்கு முன்னதாக ஆறு மாதங்களில் 12 இதழ்களின் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியராக இருந்து அம்பேத்கரே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.
சில ஆண்டுகளில் ‘மூக் நாயக்’ நின்றுபோனது. ஆனாலும், பின்னாளில் பஹிஷ்க்ரிட் பாரத், ஈக்குவாலிட்டி ஜன்ட்டா ஆகிய இதழ்களை டாக்டர் அம்பேத்கர் தொடங்கி நடத்தினார். அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவுக்கு வந்தாலும் அந்தக் காலத்தைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வலுவான ஊடகம் இல்லாதது இன்றும் தொடர்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அமையும்போது அது ‘மூக் நாயக்’ இட்ட அடித்தளத்தின்மீதுதான் அமையும் என்பது டாக்டர் அம்பேத்கரின் தியாகத்துக்கும் துணிவுக்கும் சான்று!

Friday, April 14, 2017

அதிகாரம் என்பது தலித் மக்களுக்கு வெறும் கனவா? - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை


ஆசை

(அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ இணையதளத்தில் 14-04-2017 அன்று வெளியான கட்டுரை)

I
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்கப் பலருக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்திக்கொண்டிருந்த விஷயம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்தங்கிக்கொண்டிருந்ததுதான். மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசம்தானே, எப்படியும் அவர் வென்றுவிடுவார் என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அப்படியும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தால் இன்னொரு விஷயமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே தொகுதியில் டி. திருமாவளவன் என்பவர் சுயேச்சையாக நின்று 289 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நோட்டாவுக்காக விழுந்த ஓட்டு 1,025. இந்தக் கணக்குகள் சொல்லும் செய்திகள் புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கடினமானவை அல்ல. இத்தனைக்கும் அது தனித்தொகுதி; வென்றவரும் தலித் சமூகத்தினர்தான். ஆனால், அவர் தலித் சமூகத்துக்காக ஒரு கேள்வியைக்கூட சட்டமன்றத்தில் கேட்பார் என்றால் அது உலக அதிசயமாகத்தான் இருக்கும்.

திருமாவளவன் என்ற ஒரு கட்சித் தலைவர் வெல்ல வேண்டும் என்று ஏன் முற்போக்காளர்கள் துடித்தார்கள்? அவரும் அரசியல் குட்டையில் ஊறியவர்தானே? பாரபட்சமே இல்லாமல் எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கடைசியில் விஜயகாந்த்தைத் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்தானே? கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சிதானே அதுஎன்றெல்லாம் அவர்மீது  இந்தத் தோல்விக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து விமர்சனங்கள், அவதூறுகள் அள்ளிவீசப்படுகின்றன. இந்த விமர்சனங்களில் சிலவற்றில் உண்மை இருந்தாலும் திருமாவளவனை இதையெல்லாம் தாண்டியும் மிகவும் முக்கியமான ஒருவராகப் பார்ப்பதற்கு நமக்கும் சரி, அவருக்கும் சரி நிறையவே நியாயம் இருக்கிறது.

ஊழலிலும் அதிகாரத்திலும் காலம்காலமாகத் திளைத்தவர்கள் மீது கூட இவ்வளவு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதில்லை. எந்த அதிகாரத்திலும் இல்லாத திருமாவளவன் போன்றவர்கள் மீது மட்டும் இந்தச் சமூகமும் விமர்சகர்களும் இவ்வளவு குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு பதில் காண முயன்றால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊறித் திளைத்திருக்கும் சாதியம் நமக்குப் புலப்படும்.


திராவிடக் கட்சிகளின் கணக்கு

கடந்த ஆண்டு வாக்குப் பதிவு அன்று எங்கள் தெருவில் இருந்த தேமுதிக கட்சிக்காரர் ஓட்டுப் போட்டுவிட்டு இப்படி வந்து சொல்கிறார், ‘தே.மு.தி.கவுக்கு ஓட்டு போட்டிருப்பேன். ஆனால், இவர் (திருமாவளவன்) இந்தக் கூட்டணியில் இருக்கிறார் இல்லையா. மேல்ஜாதிப் பொண்ணுங்களெல்லாம் போய் லவ் பண்ணுங்கன்னு சொன்ன ஆளு இருக்குற கூட்டணிக்கு நான் ஓட்டு போட மாட்டேன்என்றார். (திருமாவளவனை ஒருமையில்தான் விளித்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை). தன் பையனோ பெண்ணோ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பையனையோ பெண்ணையோ காதலிப்பார்கள் என்றால் அவருக்கு இந்த அளவுக்குப் பிரச்சினை இருந்திருக்காது. இந்த ஒரு வாக்காளரின் மனநிலைதான் அதிமுக, திமுக என்று கட்சிகள் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவுகிறது. விசிகவைச் சேர்த்துக்கொண்டால் முக்குலத்தோர் ஓட்டுகள், வன்னியர் ஓட்டுகள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது மட்டுமல்ல, அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளும் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பது இருபெரும் திராவிடக் கட்சிகளின் கணக்கு. இத்தனைக்குப் பிறகும் திமுக தோற்றதற்கு சமூகநீதி உணர்வுள்ள கருத்தாளர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை. ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் சமூக நீதி என்ற விஷயத்தில் (பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதிதான்!) திமுக பங்களிப்பு செய்திருக்கலாம். இப்போதோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. கருணாநிதியின் பிடி திமுகவில் தளர்ந்ததன் விளைவாகவும் இதைக் கருதலாம். ‘தி இந்துவுக்கு திருமாவளவன் அளித்த விரிவான பேட்டியொன்றில் தலித் சமூகத்தின் உரிமைகள், பிரச்சினைகள் குறித்துத் தன்னால் கருணாநிதியிடம் பேச முடிந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதே திமுகதான் தற்போது திருமாவளவனுக்குப் பாராமுகம் காட்டியிருக்கிறது. சரி திமுக, அதிமுகதான் இப்படி என்றால் மக்கள்நலக் கூட்டணி மட்டும் என்ன லட்சணம். திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்வைக்கும் துணிச்சல் யாருக்காவது இருந்ததா? தோற்றிருந்தாலும் எவ்வளவு மகத்தான முன்னுதாரணமாக இருந்திருக்கும்

ஒட்டுமொத்த அரசியலும் வாக்கு வங்கியை நம்பிச் செயல்படுகிறது. அப்படியிருந்தும் தலித் மக்கள் என்ற பெரும் வாக்கு வங்கி யாருக்கும் தேவையில்லை. வாக்கு வங்கி என்ற அளவில் கூட தலித் மக்கள் பொருட்படுத்தப்படுவதில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதில் பொதுச் சமூகத்துக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவுக்கு தலித் கட்சிகளுக்கும் இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசியல் மையநீரோட்டத்தில் கலந்துகொள்ளும்போது மற்றவர்களைப் போலவே தலித் தலைவர்களும் ஊழல்மயப்பட்டுவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால், அரசியல் மையநீரோட்டம் என்பது முழுக்க முழுக்க பணபலத்தை நம்பி இயங்குவது. சமூகநீதிக்காகப் போராடும் கட்சியொன்று மையநீரோட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினால் ஊழல்மயப்பட்டாக வேண்டிய கட்டாயத்தை அமைப்பே ஏற்படுத்திவிடுகிறது. பணத்தை நம்பாமல் அரசியலில் ஈடுபடவும் முடியாது. ஆகவே, தலித் கட்சிகளின் பிரச்சினை என்பது புலி வாலைப் பிடித்த கதைதான்.  


II
அதிகாரமின்மையின் இரண்டாயிரம் ஆண்டுகள்…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்துக்குத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள் தலித் மக்கள் என்று திருமாவளவன் ‘தி இந்து’ பேட்டியில் குறிப்பிட்டிருந்தது பெரும் தவிப்பின் அடையாளம். அப்படியே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றாலும் அதற்கு அவர் எந்த அளவுக்குப் போராட வேண்டும் என்பதற்கு அம்பேத்கரை விட சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியாது. அவர் காலத்து இந்தியர்கள் யாரை விடவும் அதிகம் படித்திருந்தும், உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருந்தும், தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகப் போகும் இடங்களிலெல்லாம் புறக்கணிப்பை எதிர்கொண்டார். தனது புரவலரின் அலுவலகத்தில் ஆரம்பத்தில் அவருக்கு வேலை கிடைத்தாலும் அங்கும் தனக்குக் கீழ்நிலையில் பணிபுரியும் ஆதிக்கசாதி ஊழியர்களிடமிருந்து கடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டார். அவர் வேலை பார்த்த அலுவலகத்தின் பியூன் கோப்புகளை அம்பேத்கர் மேசைமீது தூக்கித்தான் எறிவார். அலுவலகத்தில் உள்ள தண்ணீர்ப் பானையில் அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவும் முடியாது.
இன்னும் நெடுக, சமூகத்தினரிடமிருந்தும் அரசியல் வட்டத்திலும் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டே மேலே மேலே வந்துகொண்டிருந்த அம்பேத்கர் தேர்தல்களில் கூட அதிகம் தோல்விகளையே பெற்றார்.

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த முதல் அமைச்சரவை என்பது உலகத்துக்கே ஓர் முன்னுதாரணம். ‘சுதந்திரம் என்பது காங்கிரஸுக்கு மட்டும் கிடைக்கவில்லை. எல்லோருக்கும்தான்என்று சொல்லிய காந்தி, திறமையானவர்கள், தகுதியானவர்கள் காங்கிரஸுக்கு எதிர் அணிகளில் இருந்தாலும் அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். காந்தியின் பரிந்துரையைத் தாண்டியும் அம்பேத்கருக்கு நிகரானவர்கள் அப்போது அநேகமாக யாரும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்த முதல் அமைச்சரவைதான் அப்படிப்பட்ட கடைசி அமைச்சரவையாக அமைந்துபோய்விட்டது என்பது இந்திய ஜனநாயகத்தின் பெருந்துயரம். அதற்குப் பிறகு மறுபடியும் தேர்தல் அரசியலில் அம்பேத்கர் தோற்றுப்போனார். தலித் வேட்பாளர்களுக்கான தனித்தொகுதி இருந்தாலும் பெருங்கட்சிகளைச் சேர்ந்த தலித் வேட்பாளர்களாலோ, பெருங்கட்சியினருடன் கூட்டணி வைத்த தலித் வேட்பாளர்களாலோதான் இந்தத் தேர்தல் அரசியலில் வெல்லவோ தாக்குப்பிடிக்கவோ முடிந்தது. தலித் கட்சிகளாக இருந்தால் அவற்றுக்குப் பொதுச் சமூகத்தின் ஆதரவும் ஓட்டுக்களும் கிடைக்காது. தலித் சமூகத்தினரின் ஓட்டுக்களும் பெருங்கட்சிகளிலுள்ள தலித் வேட்பாளர்களுக்கே பெரும்பாலும் விழும். அந்த வேட்பாளர்கள் தலித்களின் உரிமைகளுக்காக அநேகமாகப் பேசுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தலித்களுக்குக் கொடுக்கப்படும் பதவிகள், பொறுப்புகள் பெரும்பாலும் பெயரளவில் அடையாளச் சின்னமாகத்தான் இருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன், பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டும். இதையும் தாண்டி, மாயாவதியின் வருகை என்பது இந்திய அரசியலில் ஓர் அதிசயம்தான். பிஹார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சிகூட ஒரு வகையில் பொம்மை முதல்வராகத்தான் ஆக்கப்பட்டிருந்தார்.

மாயாவதியின் முக்கியத்துவம்
தலித்கள் அதிகாரத்துக்கு வருவதற்கான அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பிற சமூகத்தினர் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. மாயாவதியின் மீது மற்ற எல்லோரையும்விட அதிகமாக ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதில் பெருமளவு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் நண்பர் ஒருவர் சொன்ன செய்தியின் மூலம் மாயாவதி என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.  “தலித் முதல்வர் என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த அளவுக்கு ஊழல்வாதியாக இருக்கிறாரே மாயவாதி, அவரை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?” என்ற கேள்விக்கு அவர் இப்படிப் பதில் அளித்தார்: “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும். மாயாவதி முதல்வராக ஆவதற்கு முன் ஒரு தலித் ஏதாவது புகார் கொடுக்கக் காவல் நிலையம் சென்றால், ‘, காவல் நிலையம் வந்து புகாரெல்லாம் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டாயா?’ என்று கேட்டுக் கைகால்களை முறித்துவிட்டுத்தான் அனுப்புவார்கள். மாயாவதி முதல்வரான பின்புதான் தலித்கள் புகார் கொடுக்க வந்தால் மதித்து உட்காரச் சொன்னார்கள். தலித் உரிமைகளைப் பொறுத்தவரை இது எவ்வளவு பெரிய பாய்ச்சல் என்பதைப் புரிந்துகொண்டால்தான் உங்களால் மாயாவதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்என்றார். திருமாவளவன் மீது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகள் வைக்கட்டும்; அவர்களுக்கும் சேர்த்துதான் அந்த உத்தரப் பிரதேசத்துக்காரர் பதில் சொல்லியிருக்கிறார்.


III
எந்த பாதை நோக்கி?
தலித் மக்கள் காலம்காலமாக அனுபவித்துவரும் கொடுமைகளுக்குத் தீர்வு  என்பது அவர்கள் அதிகாரத்துக்கு வருவதுதான். ஆனால், அதிகாரத்தை நோக்கி மற்றவர்கள் சென்ற பாதையிலேயே அவர்களும் கட்டாயம் காரணமாகச் செல்ல முயன்றுகொண்டிருப்பதும், சமூகத்தின் புரையோடிய சாதிய உணர்வும்தான் தலித்களின் அதிகாரப் பாதை நோக்கிய பயணத்தை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள். பொதுச் சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றாமல் தலித்களால் அதிகாரத்தை அடையவே முடியாது. இதற்கு அரசியல் அதிகாரத்துக்கான முயற்சிகள் மட்டுமே போதாது. ஏனெனில், அந்த முயற்சிகளை அடையும் வழியை வழக்கமான ஊழல் பாதையாகவே அமைப்பு போட்டு வைத்திருக்கிறது. ஊழலை விட சாதியம் எவ்வளவு மோசமானது, இந்தியாவின் தலையாய பிரச்சினை சாதிதான் என்பதை தலித் மக்களும் முற்போக்காளர்களும் சொல்லிவந்தாலும் பொதுச் சமூகத்தின் பொதுப் புத்தியில் ஊழல்தான் பிரதானப் பிரச்சினையாகத் தோன்றும். (வெளித்தோற்றத்துக்காகவாவது) ஊழலற்ற மனிதர்களால், ஊழலற்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களே பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஆகவே, ஒரு பக்கம் அரசியல் பாதையை நோக்கிய பயணம் இருக்க, இன்னொரு பக்கம் தலித் மக்களிடையே இயங்கி, பொதுச் சமூகத்துக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான உரையாடலை, உறவை மேம்படுத்தி, அரசியலின் ஊழலுக்கு அப்பால் இயங்கும் தலித் அமைப்புகள் ஆகிய இரண்டு தரப்புகளும் அவசியமகின்றன.

காந்தியின் காலத்தில் ஆதிக்கசாதியினரிடையே அவர்களது மனசாட்சியைத் தட்டியெழுப்ப அவர் பணியாற்றியதுபோல் இன்று யாரும் செய்யக் காணோம். இரு தரப்பும் பிளவுபட்டு, உரையாடலும் உறவும் சாத்தியமற்ற சூழல் காணப்படுகிறது. தலித் அமைப்புகள்-கட்சிகள், இடதுசாரிகள், பெரியாரியர்கள், திராவிடக் கட்சிகள், காந்தியர்கள் போன்றோர் தங்கள் கருத்துவேறுபாடுகளைத் தூரத்தில் வைத்துவிட்டு சாதியொழிப்பை நோக்கியும் தலித் மக்கள் உள்ளிட்ட நசுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெறுவதை நோக்கியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் பெருமளவிலான மாற்றம் ஏற்படும். ஆனால், இங்கே தலித் அமைப்புகள், தலித் தலைவர்கள் காந்தியையும் காந்தியவாதிகளையும் அடியோடு வெறுக்கின்றனர். பெரியார் மீதும் கணிசமானோருக்கு விமர்சனம் உண்டு. இடதுசாரிகள் மீதும் முழு நம்பிக்கை இல்லை. இது ஒரு பக்கம் என்றால், காந்தியவாதிகளுக்கு அம்பேத்கர் ஒரு பொருட்டல்ல (காந்தி அப்படிக் கருதியவரல்ல), பெரியாரியர்கள் பலரும் பிராமணியத்துக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் போராடிய அளவுக்கு தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடவில்லை. கீழ்வெண்மணி போன்ற பிரச்சினைகளில் தலித் மக்களுடன் நின்றவர்கள் இடதுசாரிகள். ஆனால், அவர்களில் பலரும் சாதியத்தை வர்க்கப் பிரச்சினையாக பார்க்கும் மனநிலையைத் தாண்டி வரவில்லை. இப்படி இரு தரப்பிலும் காணப்படும் வேறுபாடுகளால், பிளவுகளால் இழப்பென்பது தலித் மக்களுக்கும், லாபம் என்பது சாதியவாதிகளுக்குமாகத்தான் இருக்கிறது. இந்தப் பிளவு மேலும் மேலும் மோசமாகிக்கொண்டுதான் போகிறது. அதிகாரத்தை நோக்கிய தலித் மக்களின் பயணம் இதனால் அடைந்திருக்கும் பின்னடைவை முற்போக்காளர்கள் அனைவரும் ஆழமான அகவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பொது மனசாட்சியைக் குறிவைத்து…
ஜனநாயகத்துக்குத் தேர்தல் எவ்வளவு அவசியமாக இருந்தாலும் தேர்தலுக்கு ஜனநாயகம் பொருட்டல்ல என்பதுதான் அம்பேத்கரில் ஆரம்பித்து திருமாவளவன் வரையிலானோரின் தோல்விகள் நமக்கு உணர்த்தும் உண்மை. அந்த அளவுக்கு சாதியத்துக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது நம் சமூகம். மற்றவர்களெல்லாம் கோபம் வந்தால் வன்முறையில் இறங்கலாம், கலவரத்தில் ஈடுபடலாம். ஒரு தலித் அப்படிச் செய்ய முடியாது. எதிர்க்க நினைத்தாலும் பாதிப்பு அவருக்குத்தான். அவர் ஒரு அடி கொடுத்தால் அவர் சமூகம் முழுமைக்கும் பல அடிகள் திருப்பி விழும். ‘அம்பேத்கர் நினைத்திருந்தால் நம்மீது வன்முறையைப் பிரயோகித்திருக்கலாம். அதற்குரிய எல்லா நியாயமும் அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் நம்மீது காறித் துப்பினாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று காந்தி கூறினார். தலித்கள் என்னவோ அகிம்சையை விரும்பித் தேர்ந்தெடுத்ததுபோல் நமக்குத் தோற்றமளித்தாலும் உண்மை என்னவென்றால் அவர்கள் திருப்பி அடிக்க முடியாதவாறு, அப்படிச் செய்தால் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும்விதத்தில் இந்தச் சாதியச் சமூகம் அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் யதார்த்தம்! தலித்கள் அகிம்சையை மேற்கொண்டிருப்பது இருக்கட்டும், இந்தச் சமூகம் எப்போது அகிம்சைக்குத் திரும்பப் போகிறது என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டுமானால், தலித்களின் அதிகாரத்தை நோக்கிய பயணம் முன்திசையில் செல்ல வேண்டுமானால் பிளவுகளைக் கடந்த உரையாடலும் உறவாடலும் பொது மனசாட்சியைக் குறிவைக்கும் முயற்சிகளும் நடைபெற்றால் மட்டுமே சாத்தியம்! இது ஒரு கை ஓசையாக இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கரகோஷமாக ஆக வேண்டும். ஒற்றுமையாய்க் கைகோத்துக்கொண்ட சாதியப் பெருமிதங்களை உள்வாங்கிக்கொண்டு பிரம்மாண்டமாய் இந்துத்துவம் எழுச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் முற்போக்காளர்கள் மட்டும் சிதறிக் கிடப்பது இந்தக் கனவைக் கனவாகவே வைத்திருக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.