Showing posts with label மோடி 365°. Show all posts
Showing posts with label மோடி 365°. Show all posts

Thursday, May 28, 2015

மோடி 365° - பிரச்சாரத்தின் வெற்றி


ஷிவ் விஸ்வநாதன்
(‘தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தமான அவதாரம் ‘முப்பரிமாண பிம்பம்’ (ஹோலோகிராம்). அவரது ஆகிருதிக்கு அது கூடுதல் பரிமாணங்களைச் சேர்த்தது; உண்மையான ஆளுமைக்கும் நகலுக்கும் நடுவே அவரை வைத்தது. ஏனெனில், சமூகத்தின் பிம்பமாகத் தன்னை முன்வைக்கவே மோடி விரும்புகிறார். அவர் ஒரு சமூகக் கருதுகோள். மேலும் அவர் முடுக்கிவிட்ட, ஆதிக்கம் செலுத்திய, உருவாக்கிய சமூக மாற்றத்தைப் பற்றித்தான் நாம் விவாதிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக முன்பு முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது பிரதமராக இருக்கும்போதும் சரி, தேசிய அரசு என்ற லட்சியத்தை மோடி உருவாக்கினார். அறுதி விசுவாசம் அதற்கே என்பதை நிறுவினார். பிறகு, தேசத்தின் வரலாற்றை திருத்தியமைக்க முயன்றார். முதன்முறையாக வரலாறு, நவீன காலம் ஆகிய இரண்டிலும் திருப்திப்பட்டுக்கொள்ளும் ஒரு பெரும்பான்மை - மைய அரசை உருவாக்கினார். வரலாற்றில் தங்கள் தருணம் வந்துவிட்டது என்று பெருமைகொள்ளும் நடுத்தரவர்க்க இந்துக் குடும்பங்களை ஒன்றுதிரட்டினார். நேரு இல்லா பாரதத்தை உருவாக்கினார். சோஷலிசம், மதச்சார்பின்மை போன்ற சொற்களையே ஒழித்துக்கட்டியது அவரது அரசு. அரசியல் சட்டத்திலிருந்து அந்தச் சொற்களை பாஜகவால் நீக்க முடியவில்லை என்றாலும், அந்தச் சொற்களைப் பாஜக செயலிழக்கவைத்துவிட்டது.
இப்படியாக மோடி ஆட்சியின் முதல் ஆண்டு என்பது திட்டங்களிலோ பொருளாதாரத்திலோ நிகழ்த்தப்பட்ட சாதனையாக அல்ல; ஒரு பிம்பத்தை நிறுவி, தேர்தல் உலகத்தில் அதைப் பிரதிபலிக்கச் செய்ததில் அடைந்த வெற்றிதான் அது. பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி அது. வளர்ச்சிக்காக ஏங்கிய நடுத்தர மக்கள் அதில் தங்களுக்கேயான பிரத்யேக உலகைக் கண்டுகொண்டார்கள். இந்த உலகத்தின் எண்ணங்கள், நம்பிக்கைகள் போன்றவை குறித்து இனியும் அவமானம் கொள்ளத் தேவையில்லை. இங்கே மதத்தையும் அறிவியலையும் ஒன்றுசேர்க்கலாம். நினைவுகளூடாகக் கடந்த காலத்தை மீட்டெடுக்கலாம். வரலாற்றைப் புராணமாக்கி, அறிவியல் அடிப்படையில் அதை நிறுவ முயலலாம். பன்மைக் கருத்துகளின் இந்தியாவை அல்ல, குறிப்பிட்ட ஒரு இந்தியாவைத்தான் மோடியும் அவரது பாஜக அரசும் உருவாக்கினார்கள்.

மோடி 365° - வளர்ச்சி புல்டோசரும் உயரும் கைகளும்!


ஆசிஷ் கோத்தாரி
('தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரையின் முழு வடிவம். தமிழில்: ஆசை)

சுற்றுச்சூழலுக்கும் சூழல்சார்ந்து வாழும் மக்களுக்கும் 1980-களுக்குப் பின்பு மிக மோசமான காலகட்டமாக பாஜகவின் ஐந்து ஆண்டுகளும் இருக்கப்போகிறது என்பதுதான் மோடி அரசின் ஓராண்டு நிறைவில் நமக்குத் தெரியும் அறிகுறி.

சுத்தமான காற்று, சுத்தமான நீர், வளமான மண், ஆரோக்கியமான வனங்கள், புல்வெளிகள் போன்றவற்றைப் பற்றி இதற்கு முந்தைய அரசுகள் எதுவுமே அக்கறை கொள்ளவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது நமக்கு மேற்கண்ட அறிகுறி சொல்வது நிறைய. நம் அனைவரையும் தொடர்ந்து உயிர்வாழ வைக்கும் இவற்றையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கிவிட முடியாது என்ற உண்மையைப் பார்க்க முடியாத வகையில் வளர்ச்சி மந்திரம் என்பது ஒவ்வொரு அரசின் கண்களையும் மறைத்திருக்கிறது. இந்தக் ‘கண்மூடித்தனமான’ நம்பிக்கையை மோடி அரசோ மேலும் ஒரு படி மேலே எடுத்துச்செல்கிறது.

மோடி 365° - கோஷங்களை வைத்தே வண்டியை ஓட்டிவிட முடியாது!



சித்தார்த் பாட்டியா

(‘தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழில்: ஆசை)


மோடியின் கடுமையான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்குமானால் அரசியலில் அவருக்கு இருக்கும் திறமைதான். பழைய காலத்து அரசியல் பாணியின் அடியொற்றிச் செயல்படும் அரசியல் ஆகிருதி அவர். உணவு, உறக்கம், சுவாசம் எல்லாமே அரசியல்தான் அவருக்கு. அரசியலை அவர் மிகவும் நுணுக்கமாகக் கவனித்துவருகிறார், அதன் நுட்பங்களையும் கூர்ந்துநோக்கி அதன் அடிப்படையில் தன் முடிவுகளை அவர் எடுக்கிறார். தனது முடிவுகளின் அரசியல்ரீதியிலான விளைவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார்.
இந்தத் திறமைதான் அவருக்குத் தேர்தலில் வெற்றிபெற மட்டுமல்ல (தேர்தல்களெல்லாம் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதி மட்டும்தான்), உச்சத்துக்குப் போகவும் உதவியது. மோடியை இடறிவிட்டிருக்கக் கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. அவரது இடத்தில் மற்றவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இடறிவீழ்ந்திருப்பார்கள். அவற்றையெல்லாம் வெற்றிகொண்டுதான் மோடி மேலே வந்திருக்கிறார். அவர் அப்போதுதான் குஜராத் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். அந்த நிலையில் 2002 கலவரத்தால் ஏற்பட்ட கறை அவரது அரசியல் வாழ்க்கைக்கே முடிவு கட்டியிருக்கக் கூடியது. அப்போது அப்படித்தான் தோன்றியது. ஆனால், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுதூரம் வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தக் கலவரம் குறித்து யாருக்கும் எந்த விரிவான விளக்கமோ வருத்தமோ தெரிவிக்காமல் அவர் பாட்டுக்கும் இந்த இடத்தை நோக்கி நடைபோட்டிருந்திருக்கிறார். மிகவும் தீர்மானகரமானவராகவும் செயலூக்கம் மிக்கவராகவும்தான் மோடியை மக்கள் இப்போது கருதுகிறார்களே தவிர பலவீனமானவராகவோ விமர்சனத்தைக் கண்டு ஒதுங்கிச்செல்பவராகவோ அவரைக் கருதுவதில்லை.