Wednesday, September 23, 2015

இனப்படுகொலையின் மறுபக்கத்தில் இரண்டு தேன்சிட்டுக்கள்



ஆசை 

வரலாறு என்பது
ஒற்றைத் தாள்தான்

அந்த ஒற்றைத் தாளின்
முதல் பக்கத்தின் பெரும் பரப்பில்
இனப்படுகொலை
நடந்துகொண்டிருக்கிறது
மறுபக்கத்தின் பெரும்பரப்பில்
தேடித் தேடித் தேன் குடிக்கும்
தேன்சிட்டுக்கள் இரண்டு

இனப்படுகொலை
தொலைநோக்குப் பார்வை கொண்டது
எதிரியாகக் கூடும் என்று
சிறுவர்களையும்
எதிரியைத் தன் கருவறையில்
சுமக்கக்கூடும் என்று
சிறுமிகளையும் அழிக்கிறது

தேன்சிட்டுக்கு
முதல் பக்கத்தின் இனப்படுகொலை
தெரியாதது போல்
இனப்படுகொலைக்கும்
மறுபக்கத்தின்
தேன்சிட்டுக்களைத் தெரிவதில்லை

மறுபக்கத்தில்
தேன்சிட்டுக்களாய் இருந்திருக்கக் கூடிய
குழந்தைகளை
அது கொல்கிறது

ஓலத்திற்குப் பதிலாக
ரத்தம் மட்டும் வெளியேறி
முதல் பக்கத்தின் பெரும் பரப்பில்
சொட்டுகிறது

மறுபக்கம்
ரத்தச் சிவப்பில் ஊறிவரும்
புள்ளி ஒன்றைக் கண்டுகொண்ட தேன்சிட்டு
தன் துணையிடம் காட்டுகிறது

தேன் குடிப்பதை விட்டுவிட்டு
ரத்தச் சிவப்பை நோக்கிப்
பறக்கின்றன இரண்டும்
 ... ... ... 
தேன்சிட்டுக்கள்
ரத்தத்தைக் குடிக்கப் பழகுவதற்கு முன்
எரித்தழித்துவிட வேண்டும்
வரலாற்றின்
அந்த ஒற்றைத் தாளை

        - 2012 வாக்கில் நான் எழுதிய கவிதை இது. சமீபத்தில்தான் கண்டெடுத்தேன்.

1 comment:

  1. வரலாற்றின் ஒற்றைத்தாளை எரித்தழிக்கத் துடிக்கும் உணர்வினை வெளிப்படுத்திய விதம் நன்று.

    ReplyDelete