Friday, June 16, 2023

நிர்மலா லெட்சுமணனுக்கு வாழ்த்துகள்!

 



நிர்மலா லெட்சுமணன் அவர்கள் The Hindu Group Publishing Private Limited‘ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த சமயத்தில் 'இந்து தமிழ்' நாளிதழுடனான அவருடைய உறவையும் அணுகுமுறையையும் கொஞ்சம் இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘தி இந்து’ குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அவர் ஆங்கில நாளிதழின் இலக்கிய முகமாகவும் இருப்பவர். ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ என்ற இலக்கியத் திருவிழாவை முன்னெடுத்து நடத்துபவர். இந்தியாவின் முக்கியமான இலக்கியத் திருவிழாக்களுள் ஒன்றாக அது பெயர்பெற்றிருக்கிறது. 

முன்னதாக 'இந்து தமிழ்' நாளிதழின் தலைவராக நிர்மலா லக்ஷ்மண் சில காலம் செயல்பட்டார். 
'தி இந்து' ஆங்கில இலக்கிய விழாவைப் போல தமிழிலும் 'லிட் ஃபெஸ்ட்' நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. இதற்கான திட்டமிடல், நிகழ்ச்சிப் பொறுப்பு, நெறியாள்கை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகள் நடுப்பக்க அணியிடம் இருந்தன. ஆசிரியர் அசோகனும், நடுப்பக்க ஆசிரியர் சமஸும் முழுமையாக இந்தப் பணிகளை என்னிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான ஆலோசனைக்காக நிர்மலா அவர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. 

தமிழ் ஆளுமைகளில் ஐந்து பேருக்கு  சாதனையாளர் விருதும் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கலாம் என்று அப்போது நான் முன்மொழிந்தேன்.  விருதுத் தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் விளம்பரத் துறையினரைச் சார்ந்திருந்தது. ஏனென்றால், ஏராளமான பொருள் செலவில் நடக்கும் இந்த விழாவில் விளம்பரதாரர்களின் பங்களிப்பு முக்கியமானது.  ஆங்கில நாளிதழ் அளவுக்கு தமிழ் நாளிதழுக்கு விளம்பரம்  பெறுவது சிரமம். ஆகையால், சமகாலச் சாதனையாளர்களுக்கு நபருக்குத் தலா ரூ.25 ஆயிரமும், வாழ்நாள் சாதனையாளருக்கு ரூ. 1 லட்சமும் வழங்கலாம் என்று விளம்பரத் துறையினர் கூறியிருந்தார்கள். எனக்கோ ஆங்கில எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுவது போன்ற ஒரு கணிசமான விருதுத் தொகை தமிழ்ப் படைப்பாளிகளுக்குக் கிடைத்தால்தானே உரிய மரியாதையாக இருக்கும் என்ற எண்ணம் அழுத்திக்கொண்டே இருந்தது. விளம்பரத் துறையினருடனான கூட்டத்தில் ஆசிரியர் குழு நடத்திய பேச்சில் வெற்றி கிடைக்கவில்லை. இப்போது நிர்மலா அவர்களுடன் பேசும்போது இதை ஒரு வலியுறுத்திப் பார்ப்போம் என்று எண்ணினேன். 

விளம்பரத் துறையினரின் முடிவு, தமிழ் - ஆங்கில எழுத்தாளர்கள் இடையே பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும் என்று நிர்மலா அவர்களிடம் குறிப்பிட்டேன். ஏனென்றால் 'தி இந்து' ஆங்கிலம் நடத்தும் லிட்ஃபெஸ்ட் இலக்கிய விழாவில் போட்டியில் வென்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருதுத் தொகை ரூ. 5 லட்சமாக இருந்தது. நிர்மலா அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். 
  
உடனே துளி தயக்கமும் இல்லாமல் அவர் சொன்னார், ‘எஸ் எஸ் யு ஆர் கரெக்ட். பார்ஷியாலிட்டி காட்டக் கூடாது. ஆசைத்தம்பி சொல்றதுபோலவே லைஃப் டைம் அச்சீவ்மென்ட்டுக்கு ஃபைவ் லேக் ருப்பீஸும் மற்ற எழுத்தாளர்களுக்கு ஒவ்வொருத்தங்களுக்கும் ஒன் லேக் ருப்பீஸும் கொடுத்திடுவோம்! அதனால் என்ன தொகை குறைவாகுதோ அதை மேனேஜ்மென்ட் கொடுக்கும்’ என்றார். அந்த நிமிடம் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 

விளைவாக, தமிழில் அதுவரை இல்லாத வகையில், முதல் ஆண்டு இலக்கியத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ. 5 லட்சமும், சமகாலச் சாதனையாளர்களுக்கு ரூ.ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.  பிந்தைய ஆண்டுகளில் இந்தத் தொகை குறைந்தது தனிக் கதை.
 நான் நிகழ்ச்சிப் பொறுப்பேற்றிருந்த இரண்டு விழாக்களில் மட்டும் மொத்தம் ரூ. 15 லட்சம் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுத் தொகையாக வழங்கப்பட்டிருந்தது.

இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்கிரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், தமயந்தி, கீரனூர் ஜாகீர்ராஜா, சயந்தன் ஆகியோர்தான் அந்த விருதாளர்கள். 

. “ஜெய்பூர் லிட்ஃபெஸ்ட் மாதிரியான சர்வதேச நிகழ்வுகளில் கலந்துக்குற எழுத்தாளர்களைத்தான் சொகுசான உயர்தர ஹோட்டல்ல தங்க வச்சு கௌரவப்படுத்துவாங்க. அதுமாதிரியான கௌரவம் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாட்டுலேயே கிடைக்கணும்னு நெனைச்சிருக்கேன். தாஜ் கொரமண்டல் ஹோட்டல்ல தங்கவைச்சு அந்தக் குறைய ‘இந்து தமிழ்’ போக்கிடுச்சி. அப்பப்பா அற்புதமான கவனிப்பு” என்று மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி என்னிடம் கூறியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. 

எழுத்தாளர்களையும் உரையாளர்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நிர்மலா மேடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டார். உரையாளர்களுக்கு மதிப்புத் தொகையுடன் சிறந்த புத்தகங்களும் தர வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு அப்படியே வழங்கப்பட்டது. பிறகு கோவையில் நடைபெற்ற லிட்ஃபெஸ்ட்டில் பரிசுத் தொகுப்பில் என் தனிப்பட்ட தேர்வாக ஃப்ரண்ட்லைன் - தி இந்து வெளியீடான ‘The Art of India' (இரண்டு தொகுதிகள் ) நூலை நான் தயக்கத்துடன் முன்வைத்தேன். ஏனெனில் அதன் விலை ரூ. 5,000. ஆனால், என்னுடைய பரிந்துரை உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்கள் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றன. 


நிர்மலா லெட்சுமணன் அவர்களும் க்ரியா ராமகிருஷ்ணனும் நண்பர்கள். முதல் லிட்ஃபெஸ்ட் நடந்து முடிந்தபோது நிர்மலா மேடத்திடம் ராமகிருஷ்ணன் முறையிட்டார், ‘இப்படிப் பண்ணிட்டீங்களே?’ அதற்குப் பதறிப் போய் நிர்மலா மேடம் கேட்டார், ‘அய்யோ என்னாச்சு?’ அதற்கு ராமகிருஷ்ணன் ‘இப்படி ஆசைத்தம்பியை என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டீங்களே’ என்றார். அதற்கு சிரித்துக்கொண்டே ‘உங்ககிட்ட இருந்து இப்படி ஒருத்தர் கிடைச்சா எப்படி மிஸ் பண்ணுவோம்’ என்றார் நிர்மலா மேடம். திறமையைச் சரியாக அங்கீகரிக்கத் தெரிந்தவர் அவர். 

நிர்மலா லெட்சுமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

No comments:

Post a Comment