Saturday, May 20, 2023

‘க்ரியா’ 50!

 


ஆசை

தமிழின் மிகச் சிறந்த முன்னோடிப் பதிப்பகங்களில் ஒன்றான ‘க்ரியா’வின் 50-ம் ஆண்டு இன்று தொடங்குகிறது. பத்தாண்டு காலம் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அவர்களுடன் பக்கத்தில் இருந்து பணிபுரிந்தும், அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகள், பிந்தைய பத்தாண்டுகள் எல்லாம் சேர்த்து 22 ஆண்டுகாலம் அவருடைய நட்பில் இருந்தும் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, ‘டாக்டர் இல்லாத இடத்தில்’, தமிழின் தொன்மையை நிறுவுவதற்கு உதவும் நூல்களுள் ஒன்றான ஐராவதம் மகாதேவன் அவர்களின் ‘Early Tamil Epigraphy' (க்ரியாவின் இணை பதிப்பாளர் ஹார்வர்டு பல்கலைக்கழகம்) போன்ற நூல்களும் இலக்கிய நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவையும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ‘க்ரியா’வின் பெரும் பங்களிப்புகள். புத்தக உருவாக்கம், கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய நேர்த்தி, எடிட்டிங் போன்றவற்றில் உலகத் தரத்தைக் கொண்டுவந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தனக்கு முன்னோடியாகத் தமிழில் வாசகர் வட்டம் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தியை க்ரியா ராமகிருஷ்ணன் கூறுவார்.

பதிப்பு மட்டுமல்லாமல் கூத்துப்பட்டறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மொழி அறக்கட்டளை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ராமகிருஷ்ணனுக்கும் க்ரியாவுக்கும் பெரும் பங்குண்டு. புரிசை கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்துக் குழுவின் சென்னை முகவரியாகவும் க்ரியா சில காலம் இருந்திருக்கிறது. ராயப்பேட்டையில் க்ரியா இருந்த காலங்களில் தமிழ் நவீன ஓவிய இயக்கத்துக்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.  ஓவியர்கள் ஆதிமூலம்,  ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருடன் க்ரியா இணைந்து செயல்பட்டிருக்கிறது. அநேகமாக ட்ராட்ஸ்கி மருதுவின் முதல் ஓவியக் கண்காட்சி க்ரியாவில் நடந்தது என்று நினைக்கிறேன். ஜோசப் ஜேம்ஸ், ஆர்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோரின் உதவியுடன் நவீன ஓவியங்கள் பற்றிய அறிமுகத்தை க்ரியா பல கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றது. மேலும், அச்சுதன் கூடலூர், எஸ்.என். வெங்கட்ராமன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஓவியர்களும் கலைஞர்களும் க்ரியாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். 

1974-ல் க்ரியா ராமகிருஷ்ணனும் அவரது நண்பர் ஜெயாவும் பெருங்கனவுடன்  க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில், இடைக்காலத்தில், பின்னாளில், அல்லது நெடுங்காலம் என்று வெவ்வேறு வகையில் கவிஞர் சி.மணி, சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், பேராசிரியர் சிவராமன், ரமணி, சங்கரலிங்கம், கி.அ. சச்சிதானந்தம், இ.அண்ணாமலை, அ. தாமோதரன், தங்க. ஜெயராமன், பா.ரா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்குதாரர்களாகவோ பக்கபலமாகவோ இருந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களான பத்மநாப ஐயர், மு.நித்தியானந்தன் உள்ளிட்டோரும், டேவிட் ஷுல்மன் போன்ற சர்வதேச அறிஞர்களும் க்ரியாவின் முக்கியமான நண்பர்கள். சா. கந்தசாமி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ந.பிச்சமூர்த்தி, மௌனி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சார்வாகன் உள்ளிட்ட ஆளுமைகளில் தொடங்கி சமகால இலக்கியத்திலும் அறிவுத் துறையிலும் பெரும் பங்களிப்பு செய்துவரும் எஸ்.வி.ராஜதுரை, தியடோர் பாஸ்கரன், பூமணி, இராசேந்திர சோழன், திலீப் குமார், இமையம் உட்பட பலருடைய எழுத்தியக்கத்துக்கும் க்ரியா உறுதுணையாக இருந்திருக்கிறது.  

கோபி கிருஷ்ணன், திலீப் குமார், சி.மோகன், பிரபஞ்சன், வண்ணநிலவன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்களும் க்ரியாவில் பணியாற்றியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் நூல்களை தமிழ்நாட்டில் முதலில் வெளியிட்ட பதிப்பகங்களுள் க்ரியாவும் ஒன்று. வெ.ஸ்ரீராம், ஏ.வி. தனுஷ்கோடி உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்பில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்து க்ரியா வெளியிட்ட நேரடி மொழிபெயர்ப்புகள் அசாத்திய உழைப்பினாலும் அக்கறையினாலும் திறமையினாலும் உருவானவை என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இலக்கியம், அகராதி, கல்வெட்டியல், சுற்றுச்சூழல், மருத்துவம், விவசாயம், தத்துவம், மார்க்சியம், வரலாறு உள்ளிட்ட பரந்துபட்ட அளவில் க்ரியாவின் பங்களிப்பு விரிகிறது.  க்ரியா வெளியிட்ட ‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ (1986) என்ற நூல் தமிழில் வெளிவந்த முதல் சுற்றுச்சூழல் நூல்களுள் ஒன்று. அணுசக்தியின் ஆபத்து பற்றிப் பேசும் ஜோஷ் வண்டேலுவின் நாவலின் மொழிபெயர்ப்பை 1992-ம் ஆண்டிலேயே ‘அபாயம்’ என்ற தலைப்பில் க்ரியா வெளியிட்டது .

திறன், அறிவு போன்றவற்றைத் தவிர க்ரியாவில் நான் கற்றுக்கொண்டவற்றுள் பிரதானமானது வாழ்க்கை சார்ந்த விழுமியங்கள். கடினம் என்றாலும் அவற்றைப் பின்பற்றுவதற்கு மிகவும் முயன்றுகொண்டிருக்கிறேன். ‘க்ரியா’ 50-வது ஆண்டில் கால் பதிக்கும் இந்நாளில் க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அவர் என்றும் என்னுடன் இருப்பார் என்ற நினைப்பிலேயே இருந்துவிட்ட எனக்கு அவருடைய மரணம் என் தந்தையின் மரணம் போல பெரும் அதிர்ச்சியையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்திவிட்டது. வழிகாட்டல் பெறவும், புரிதலுடன் கூடிய அன்பைப் பெறவும், இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளவும், கருத்துவேறுபாடுகளை முன்னிட்டு நான் சண்டை போடவும் இன்று அவர் இல்லை. வாழ்க்கை அப்படித்தான், அவரிடமிருந்து பெற்றதைச் சிறிதாவது நல்ல முறையில் செலவிடுவதுதான் அவருக்கும் க்ரியாவுக்கும் நான் செலுத்தும் நன்றிக்கடன்.

50 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 150 புத்தகங்கள்தான் ‘க்ரியா’ வெளியிட்டிருக்கும். அவற்றுள் உள்ளடக்கம், தயாரிப்பு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்த ஒரே ஒரு புத்தகத்தைச் சொல்லச் சொன்னால் எந்தப் புத்தகத்தைச் சொல்வீர்கள் என்று ஒரு முறை க்ரியா ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். தயங்காமல் சொன்னார், ‘சி. மணி மொழிபெயர்த்த சீன ஞானி லாவோ ட்சுவின் தாவோ தே  ஜிங்’ என்று. என்னுடைய தெரிவும் அதுவே. நான் படித்த ஞான நூல்களுள் முதல் இடத்தில் அதனையே வைப்பேன்.   

‘க்ரியா’ பதிப்பகத்துக்கும், (இப்போது நம்மிடையே இல்லையென்றாலும்) ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும் அவருடன் பங்களிப்பு செய்திருப்பவர்களுக்கும் வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்! 

Tuesday, May 16, 2023

சங்கி சமஸ்!


ஆசை

சமஸை சங்கி என்று குறிப்பிட்டு கவின்மலர் அவர்கள் எழுதிய பதிவைப் படித்தேன். கடந்த பத்தாண்டு காலமாகப் பலரும் செய்துவரும் அவதூறுப் பிரச்சாரத்தின் தொடர்ச்சிதான் இது. இதற்கெல்லாம் எதிராக எழுதினால், ‘சமஸின் சகா என்பதாலேயே சமஸுக்கு வக்கீல் வேலை பார்க்கிறாயா?’ என்று அற்பத்தனமாகக் கேட்பவர்களும் இருப்பார்கள் என்பதாலேயே பல காலம் நான் மௌனம் காத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; சமஸ் செய்த வேலைகளே அவருக்காகப் பேசும் என்று அறிவேன். 

இருந்தும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க அணியிலும், ’தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ உருவாக்க அணிகளிலும் சமஸுடன் பணியாற்றியவன் என்ற முறையில் இந்த அவதூறு என்னையும் அவமானப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். ஆகவே இந்த எதிர்வினை.

ஒரு சம்பவத்தை நான் முதலில் சொல்லியாக வேண்டும். ‘இந்து தமிழ்’ சார்பில், எத்தனையோ மாணவர்கள் நிகழ்ச்சிகளில் சமஸ் பேசியிருப்பதைப் பலரும் அறிவார்கள். சென்னையில் ஒரு நிகழ்ச்சி. நாங்கள் நடுப்பக்க அணியினரும் போயிருந்தோம். அந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் இன்றைய தலைமைச் செயலர் வெ. இறையன்பு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சமஸ் மூவரும். 

அதிகாரிகள் இருவரும் பேசிய பிறகு சமஸ் பேச வந்தார். பேச்சின் தொடக்கத்திலேயே அவர் இப்படி கூறினார்: ‘இன்றைக்கு நம்முடைய அரசமைப்புச் சட்டம் ஒன்றிய அரசின் கைகளிலேயே பெரும்பான்மை அதிகாரத்தைக் கொடுத்திருப்பதாக, மையப்படுத்தியிருப்பதாக இருக்கிறது. இந்த நாட்டின் அரசமைப்பையே கூடுதல் குடியரசுத்தன்மை மிக்கதாக, கூட்டாட்சித்தன்மை மிக்கதாக நாம் மாற்ற வேண்டும். நம்முடைய அரசமைப்பைக் கூட்டாட்சியை மையப்படுத்தியதாக நாம் மாற்ற வேண்டும். மாணவர்கள் உங்கள் கைகளிலும் இந்த ஜனநாயகக் கடமை இருக்கிறது.’

சைலேந்திர பாபு பதறிப்போனார். ‘மிஸ்டர், அஜெண்டாபடி பேசுங்கள்; இது என்ன மாணவர்கள் வழிகாட்டி நிகழ்ச்சிதானே!’ என்றார் சத்தமாக. சமஸ், ‘சார், அஜெண்டாபடித்தான் பேசுகிறேன்’ என்றார். ‘அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதுதான் உங்கள் அஜெண்டாவா? நான் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது’ என்றார். சமஸ் பணிவாகச் சொன்னார், ‘நூறு முறைக்கு மேல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறோம். கூட்டாட்சியை மையப்படுத்தி ஏன் திருத்தக் கூடாது? இதைத்தான் பேசப்போகிறேன். சாரி சார், ஒருவேளை இந்தப் பேச்சு நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு சங்கடம் தரும் என்றால், நீங்கள் புறப்படுங்கள். நான் உறுதியாக இதைத்தான் பேசப்போகிறேன்.’ சைலேந்திர பாபு உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கினார். பக்கத்திலிருந்த இறையன்புவிடம், ‘சார், உங்களுக்குச் சங்கடம் வேண்டாம், நீங்களும் புறப்படுங்கள்’ என்று சமஸ் சொன்னதும் அவரும் புறப்பட்டார். 

சமஸ் பேச்சைத் தொடர்ந்தார். நான் அருகில் இருந்த என் அணி நண்பரிடம்  ‘என்னங்க, இப்படிப் பேசுறார்? நாளைக்கு சமஸுக்கு வேலை இருக்குமா?’ என்று கேட்டேன். சமஸோடு பல நிகழ்ச்சிகளுக்கும் உடன் செல்லும் அண்ணனும் மூத்த இதழியல் சகாவும் இப்படிச் சொன்னார், ‘நீங்க வேற, இந்தக் கூட்டத்துல சமஸ் பேசுனது கம்மி.’

உண்மைதான். சமஸ் பேட்டிகள் யூடியூபில் நிறைய இருக்கின்றன. பார்க்கலாம். சமீபத்தில் திருவாரூர் புத்தகக்காட்சியில் அவர் பேசிய பேச்சு சுருதி டிவி தளத்தில் இருக்கிறது. தான் பிறந்த முக்குலத்தோர் இனம் தலித்துகளுக்கு இழைக்கும் கொடுமைகள் குறித்துக் கடுமையாக விமர்சித்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பார்.  திருவாரூர் அவரது சொந்த மாவட்டம், முக்குலத்தோர் கணிசமானோர் வசிக்கும் மாவட்டம். நான்காண்டுகளுக்கு முன்பு கல்கி நிறுவன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார், மயிலாப்பூரில் பிராமணர்கள் மத்தியில் இந்துத்துவத்தையும் சிஏஏவையும் கண்டித்துப் பேசினார். ஐஎஃப்டி உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் மத்தியில் சென்று வஹாபியஸத்தை எதிர்த்துப் பேசியிருக்கிறார். எந்தத் தரப்பு பேச அழைத்திருக்கிறதோ அந்தத் தரப்பின் தவறுகளை விமர்சித்துப் பேசுவது சமஸுடைய வழக்கம். எழுத்தும் அப்படித்தான்! 

நண்பர் என்பதால் சொல்லவில்லை. உடனிருந்து பார்த்தவன், கூடவே பங்கெடுத்தவன் என்ற வகையில் சொல்கிறேன், கடந்த 15 ஆண்டுகளில் சமஸ் தமிழ் இதழியலில் உருவாக்கிய சமதளத்தை எவரும் சாதித்தது இல்லை. 

இந்து தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து சமஸ் நடுப்பக்க ஆசிரியராக இருந்தபோது அவர் செய்த பெரும் முன்னெடுப்பு, எல்லாத் தரப்பு கருத்துகளுக்கும் இடம் அளித்ததுதான். மதவாதம் எந்தத் தரப்பில் வெளிப்பட்டாலும் கடுமையாக எதிர்வினையாற்றும் களமாக இந்து தமிழ் நடுப்பக்கங்களை அவர் மாற்றினார். கவின்மலர் சங்கி என்று சமஸைக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபோது நான் சிரித்துக்கொண்டேன், மாட்டிறைச்சியின் பெயரால் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது நடுப்பக்கத்தில், ‘பசுக் காவலர்கள்’ என்று அழைத்துக்கொள்வோரை இனி ‘பசு குண்டர்கள்’ என்றே அழைக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியவர் சமஸ். தமிழுக்கு ‘பசு குண்டர்கள்’ என்ற வார்த்தையைத் தந்தவர் அவர். அந்தப் படுகொலைகளை எதிர்த்து ’த வயர்’ இதழில் மனஷ் பட்டாச்சார்ஜி எழுதிய கட்டுரையை ‘கும்பலாட்சி’ என்று என்னை மொழிபெயர்க்கச் செய்து முழுப் பக்கத்துக்கு வெளியிட்டார் சமஸ்.

தமிழ் வெகுஜன தினசரிகளில் ‘கௌரவக் கொலை’ என்ற சொல்லாக்கத்தை ‘ஆணவப் படுகொலை’ என்று எழுதியதும் இந்து தமிழ் நாளிதழ்தான். வெகுஜன நாளிதழ்களில் முதன்முதலில் ‘ஒன்றிய அரசு’ என்று நடுப்பக்கத்தில் எழுதியவர் சமஸ். அவர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய உடனே அது மத்திய அரசு என்று மாற்றப்பட்டது. எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. 

திராவிட இயக்கக் குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் இடையில் அந்த இயக்கம் மீது வெறுப்புற்று இருந்தேன். மொத்தச் சூழலில் காந்தி மட்டுமே எனக்கு வெளிச்சம் தருபவராக இருந்தார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகப் பணியில் சமஸ் என்னை ஈடுபடுத்தியபோதுதான் திராவிட இயக்கத்தின் ஆழ அகலங்களை உணர்ந்தேன். காந்திய வாசிப்பு இப்போது திராவிட இயக்கத்தைப் பார்ப்பதில் எனக்குக் கூடுதல் புரிதலைத் தந்தது. ஆனாலும், இந்தக் காலகட்டத்திலெல்லாம் எனக்கே எரிச்சல் ஏற்படும் அளவுக்கு ‘எவ்வளவு பெரிய லீடர், எவ்வளவு பெரிய லீடர்’ என்று மாய்ந்து மாய்ந்து கலைஞரையும் அண்ணாவையும் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். அந்த நூலை உருவாக்குவதற்காக அறிவாலயம் நூலகத்தில் அவர் செலவிட்ட நாட்களையும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்காக அவர் அலைந்த அலைச்சலையும் அர்ப்பணிப்பையும் கவின்மலர் போன்றவர்களால் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாது. அண்ணா இறந்தே 50 ஆண்டுகளுக்குப் பின் வந்த புத்தகம் அது. அண்ணாவைப் பற்றிப் பேட்டி கொடுக்க வேண்டும் என்றால், அண்ணா உயிரோடு இருந்தபோது, 1969இல் 30 வயதேனும் நிரம்பியிருக்கக் கூடிய ஒருவரால்தான் கொஞ்சமேனும் அண்ணாவைப் பற்றிப் பேச முடியும். அப்படிப்பட்டவர் சமஸ் பேட்டி எடுக்கும்போது 80 வயதுக்கு மேல் இருப்பார். முதுமை, நினைவுப் பிழை, தொடர்பற்ற பேச்சு என்று எவ்வளவோ சிக்கல். சமஸ் தமிழ்நாடு முழுக்க அலைந்து திரிந்தார்.

தான் காந்தியராக இருந்தபோதிலும், திராவிட இயக்கத்துக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் அம்பேத்கரிய இயக்கத்துக்கும் அவர் இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் மிகுந்த முக்கியத்துவம் ஏற்படுத்தினார். இதேபோல, ஜனநாயக அடிப்படையில் வலதுசாரிகளின் குரல்களுக்கும் ஒரு இடமேனும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இடதுசாரி, வலதுசாரி என எந்தத் தரப்பில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை விமர்சிக்கும் களமாக நடுப்பக்கத்தை அமைத்தார். நல்லகண்ணு அவர்களின் பேட்டி ஒரு முழுப் பக்கத்துக்கு  வெளிவந்தது; தொல்.திருமாவளவன் அவர்களின் பேட்டி ஐந்து நாட்களுக்குத் தொடராக வெளிவந்தது இவையெல்லாம் முதல் முறையாக வெகுஜன ஊடகம் ஒன்றில் நிகழ்ந்தன. அவர் தொகுப்பாசிரியர் பொறுப்பில் அமர்ந்து வெளிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஏதோ நாலு பேரிடம் கட்டுரைகளைக் கேட்டுப் பெற்று திரட்டி புத்தகமாக்கிய பணி அல்ல. ஆய்வின், அலைச்சலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டவை.

வெளியே என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த நூல்களுக்கெல்லாம் அடையாள நிமித்தமான சில ஆயிரங்களைத் தவிர சமஸோ, எங்களுடைய நடுப்பக்க அணியினரோ நிறுவனத்திடமிருந்து பெரிய தொகை எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அன்றாடப் பணியினூடாக, கூடுதல் நேரம் ஒதுக்கித்தான் இந்த வேலைகளைப் பார்த்தோம். பல இரவுகள் ஒட்டுமொத்த இந்து அலுவலகத்திலும் சமஸ் ஒருவர் தனியாக அதிகாலை வரை வேலை பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு உடல்நலக் குறைவு அடிக்கடி ஏற்பட வேறு எந்தக் காரணமும் இல்லை, அவரது அயராத உழைப்பைத் தவிர. ஒரு ‘சங்கி’ புத்தக விற்பனைக்காக அல்லது நிறுவன வளர்ச்சிக்காகத் தன் உயிரையே பணயம் வைத்துக்கொள்வார் என்று என்னால் நம்ப முடியவில்லை அல்லது அந்த அளவுக்கு நான் முட்டாளாக இல்லை. 


இந்திய வரலாற்றில் முக்கியமான தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியா முழுவதும் அப்போது சமஸ் சுற்றி வந்தார்.  இந்துத்துவத்துக்கு எதிராகவும் இந்தியாவின் பன்மைத்துவத்தையும் அப்போது அவர் எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரை ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்தான் செய்தார். ‘இது நாட்டையே புரட்டிப்போட்டுவிடக் கூடிய தேர்தல்; நாம் சும்மா இருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். குஜராத்தில் வீதிகளுக்கு இரும்புக் கதவு போட்டுக்கொண்டு இருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்பதை இந்திய இதழியலில் முதல் முறையாகப் புகைப்படத்துடன் பதிவுசெய்தது அவர்தான். கலவரத்துக்குப் பின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த குதுபுதீன் அன்சாரியின் பேட்டியைத் தமிழில் கொண்டுவந்ததும் சமஸ்தான். அதேபோல் ‘கடல்’ தொடரின் மூலம் தமிழ்நாட்டில் அதுவரை ஊடகங்கள் செல்லாத கடல் பகுதிகளை வெளிச்சப்படுத்தினார். அதைப் பின் தொடர்ந்து காட்சி ஊடகங்கள் அங்கெல்லாம் சென்றன. 

இந்தப் பயணங்களெல்லாம் முடித்துவிட்டு ஊர் திரும்பியதும் மீண்டும் சமஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடல் நலப் பாதிப்பு என்றால், சும்மா இல்லை. மூன்று முறை மாதக் கணக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தார் சமஸ். உயிர் பிழைத்துத் திரும்புவார் என்று நாங்கள் நம்பவில்லை.

ஒற்றைத்தன்மையை இந்துத்துவம் இறுக்கமாகக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்தபோது அதை வலுவாக எதிர்ப்பதற்கு மாநில உரிமைகள், மாநில சுயாட்சி, கூட்டாட்சி (Federalism) போன்றவற்றைத் தீவிரமாகக் கையில் எடுக்க வேண்டும் என்று இந்து தமிழ் ஆரம்பித்தபோதே உறுதியாகச் சொன்னவர் சமஸ். கடந்த பத்தாண்டுகளில் கூட்டாட்சி (Federalism) தொடர்பாக வெகுஜன இதழ்களில் சமஸ் அளவுக்கு எழுதிய பத்திரிகையாளர் எவரும் இந்தியாவிலேயே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். காந்தி கூறிய அதிகாரப் பரவலாக்கலை அண்ணா பேசிய கூட்டாட்சி வழியாகவே சாதிக்க முடியும் என்று ஆழமாக நம்புபவர் சமஸ்.

சமஸின் ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ நூல்களைக் கவின்மலர் வாசிக்க வேண்டும். இந்தியாவில் கூட்டாட்சியைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் முக்கியமான நூல்களின் வரிசையில் அவை அமரக் கூடியவை.

சமஸ் எல்லாத் தலைவர்களிடமிருந்தும் நாம் கற்க முடியும் என்று சொல்வார். பிராமணியம் சார்ந்து ராஜாஜியை விமர்சிக்கும் அவர்,  மறுபக்கம் பிற்காலத்தில் இருமொழிக் கொள்கை வழியாக இந்திக்கு ராஜாஜி வெளிப்படுத்திய எதிர்ப்பு, காஷ்மீர் விவகாரத்தில் ராஜாஜி பேசிய சுயாட்சி உரிமை, பிரிவினைக் காலத்தில் முஸ்லிம்களிடம் அவர் காட்டிய நெருக்கம் போன்றவை மிக முக்கியமானவை என்பார். ராஜாஜியைப் பாரட்டுவதோடு வெளிப்படையாகவும் அதை எழுதுவார். இதேபோல, கூட்டாட்சித் தளத்தில் ஜெயலலிதாவின் இடம் முக்கியமானது என்றும் சொல்வார். ஜெயலலிதாவின் 25-வது ஆண்டுகால அரசியல் வாழ்வைப் பிரதிபலிக்கும் சிறப்புப் பக்கங்களை நாங்கள் வெளியிட்டோம். ஜெயலலிதாவின் கூட்டாட்சிப் பங்களிப்பைப் பாராட்டி ‘இந்து தமிழ் ‘ நாளிதழில் எழுதிய கட்டுரை ‘முரசொலி’யில் மறுபிரசுரமானதெல்லாம் முன்னுதாரணமே இல்லாத நிகழ்வு! எப்போதும் தேசியவாதத்தைக் கடுமையாக எதிர்த்து சமஸ் நிறைய எழுதியிருக்கிறார். அந்த விஷயத்தில் காந்தி, நேருவை கூட விமர்சித்து தாகூரைப் பற்றி உயர்வாகச் சொல்வார் சமஸ்.

தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ள சமஸ் தயங்கியதே இல்லை. திமுகவைக் கடுமையாக விமர்சித்த ‘ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்’, மன்மோகன் சிங் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த ‘சி.மு.-சி.பி.’ கட்டுரைகளுக்காக, ‘இவ்வளவு காட்டமாகவும் முதிர்ச்சியற்றும் நான் எழுதியிருக்கக் கூடாது’ என்று வெளிப்படையாக முகநூலில் வருத்தம் தெரிவித்தவர் அடுத்து வந்த தன்னுடைய புத்தகத்தின் பதிப்புகளில் அந்தக் கட்டுரைகளை நீக்கவும் செய்தார். எத்தனை பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தபடி இப்படி வெளிப்படையாக இருந்திருக்கிறார்கள்?

சமஸ் திமுகவைப் பாராட்டிய வேண்டிய தருணத்தில் பாராட்டவும் விமர்சிக்க வேண்டிய சமயத்தில் விமர்சிக்கவும் செய்கிறார். அதனால்தான் கலைஞர் விரும்பிப் படித்த பத்திரிகையாளாராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பிருந்தே மதிக்கும் பத்திரிகையாளராகவும் சமஸ் இருக்கிறார். அந்தத் தார்மிகத்தால் சமஸ் செய்த பங்களிப்புகள் பற்றி வெளியில் பலருக்கும் தெரியாது. காலை உணவுத் திட்டத்துக்காக பத்தாண்டுகளுக்கு மேல் சமஸ் எவ்வளவு பாடுபட்டிருப்பார் என்று பலருக்கும் தெரியும். ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததில் அவருக்குள்ள பங்கு பலருக்கும் தெரியாது. ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ புத்தக வெளியீட்டின்போது காலை உணவுத் திட்டத்துக்காக சமஸ் ஜெயரஞ்சன் அவர்களைப் புகழ்ந்து பேசினார். ஜெயரஞ்சன் பேச வந்தபோது இப்படி ஆரம்பித்தார்: ‘காலை உணவுத் திட்டத்தில் எனது பங்கையும் உதயச்சந்திரன் பங்கையும் பற்றி சமஸ் பேசினார். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கதை இருக்கு. அதைச் சொல்ல மாட்டார், தன்னடக்கம் காரணமாக’ என்று ஆரம்பித்து சமஸின் பங்கைப் பற்றிப் பேசினார். நான் அந்த நிகழ்வில் இருந்தேன். அந்த வீடியோவும் வெளியானது. ஆனால், வழக்கம்போல அனைவரும் அமைதி காத்தனர். காலை உணவுத் திட்டத்தை நடைமுறைக்கும் கொண்டுவந்தது முதல்வருக்கு சமூகத்தின் மீது இருக்கும் பெரும் அக்கறையின் வெளிப்பாடு என்றால் அதன் பின் பலரின் பங்களிப்பும் இருக்கிறது என்பதும் உண்மை. சான்றுக்குக் கீழே கொடுத்திருக்கும் வீடியோவில் 15.50-லிருந்து பாருங்கள்.


சமஸ் எல்லோரோடும் உரையாடுகிறார் என்பது பலருக்கும் பிடிக்கவில்லை. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சித்துவிட்டு ஜெயமோகனுடன் பேசுவார். ஜக்கி வாசுதேவை விமர்சித்துவிட்டு அவரையும் பேட்டி எடுப்பார்; ‘தமிழ்நாட்டின் அடுத்த அர்னாப் யார்’ என்ற பட்டியலில் சமஸையும் பட்டியலிட்ட மகஇக முகாமிலிருந்து அவரைச் சந்தித்துச் செல்லும் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் எல்லோரிடமும் உரையாட வேண்டும் என்றும் அதற்காகத் தன் கருத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்றும் எப்போதும் கூறுவார்.

சமஸுடைய ‘அருஞ்சொல்’ அலுவலகம் அவருடைய அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வகையிலேயே இருக்கும். ஒரு சுவரில் காந்தி தொங்குவார், இன்னொரு சுவரில் அயோத்திதாசர், ராஜாஜி, பெரியார், காமராஜர் சுற்றிலும் இருக்கும் நடுவே அண்ணா சிரித்தபடி இருப்பார். அதில் ஒரு வாசகம் இருக்கும்: ‘தமிழர்கள் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்.’  இவைதான் சங்கிகளுக்கு அடிப்படை என்றால் சமஸ் நிச்சயம் சங்கிதான் கவின்மலர்.

சித்தாந்த அடிப்படைவாதமும் காழ்ப்புணர்வும் இன்றி  சமஸின் கடந்த 15 ஆண்டுகால இதழியல் பணியைப் பார்ப்பவர்கள் அவர் பெரும் சாதனை புரிந்திருக்கிறார் என்று மனமார ஒப்புக்கொள்வார்கள். அதற்கு தன் உயிரைப் பணயம் வைத்தே செயலாற்றியிருக்கிறார். இன்று காலை சமஸின் கைபேசிக்கு அழைத்தேன். அவருடைய மனைவி எடுத்தார். சமஸ் தனது வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார் என்றும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிவிடுகிறது, எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை என்றும் வருத்தப்பட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் நான் இந்தக் கட்டுரையை எழுத முடிவுசெய்தேன். 

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்வேன். திராவிட இயக்கம் உள்ளவரை ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரண்டும் வாழும். அதன் மூலம் சங்கி சமஸும் நினைவுகூரப்படுவார். ஏனெனில், உண்மையான பணிக்கு ஆயுள் அதிகம். அவதூறுகளுக்கு ஆயுள் குறைவு!

Wednesday, April 26, 2023

மன்சூர் அலிகான் என்ன பாவம் செய்தார்? - பெயரிலி துயர்க்கவி


(வேட்டையாடத் தெரியாத, கள்ளு எங்கே கிடைக்கும் என்று அறியாத, ஆதிகுடியின் வெறியாடலை ஆடவும் தெரியாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட இளம் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை இது. போன ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார். யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று. அவர் துயரத்தை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன்)


நான் மன்சூர் அலிகானைப் பற்றி

ஒரு கவிதை எழுதுவேன்

அவருடைய வாழ்க்கை சந்திரபாபுவுடையதுபோல

சாவித்திரியைப் போல

அவ்வளவு துயரமானது இல்லை எனினும்

என் கவிதையில் இடம்பெறுவதைவிடவும்

மன்சூர் அலிகானுக்குத் துயரம்

ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற ஆசுவாசத்தை

அவர் பெறலாம்


நிச்சயம்

‘சக்கு சக்கு வத்திக்குச்சி

சட்டுன்னுதான் பத்திக்கிச்சி’ பாடலும் 

என் கவிதையில் இடம்பெறும்

ஆனால் அதற்கு இசையமைத்த

ஆதித்தியன் இடம்பெற மாட்டார்

அவருக்கு என் அன்பும் வணக்கங்களும் 

இருந்தாலும்


அகால மரணமடைந்தவர்களுக்கு

அஞ்சலி பாடியே ஒட்டடை அடைந்துபோன 

நவீனக் கவிதையில் நான் மேலுமொரு

ஒட்டடை இழையை சேர்க்க மாட்டேன்


மன்சூர் அலிகான் காலைத் தூக்கிச்

சுழற்றி ஆடும் ஆடலில் 

ஆதிகுடியின் 

கள்ளுகுடி ஆடலை நான் நிச்சயம் காண மாட்டேன்


அந்த நேர சந்தோஷத்துக்கு

என் கவிதைக்கு

ஆதி வரை செல்லத் தெரியாது


எனக்குப் பன்றிக்கறி சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது

ஆனால்

எனக்குள்

இருந்த வேட்டையாடியை 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

சரணாலயம் ஆகாத காடொன்றுக்குள் 

விட்டுவிட்டு வந்துவிட்டேன்

கவிதைக்குள் வந்து புகுந்துவிடுவானென்ற அச்சத்தில்


அவன் அப்படியே வந்தால் பிரச்சினை இல்லை

வரும் வழியில் உருவான சாமி, மதம், சாதி

என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவான்

அவன் அங்கேயே வேட்டையாடிக்கொண்டிருக்கட்டும்


ஆனால்

ஆதியில் தின்ற பன்றிக்கறியின் சுவையை

என் உதிரத்தின் பல்லிடுக்குகளிலிருந்து

எந்தத் துடியிசையின் பல்குச்சி கொண்டும்

என்னால் குத்தி அகற்ற முடியவில்லை


வேட்டையாடத் தெரியாத,

குறைந்தபட்சம்

கவிதையில் வேட்டையாடத் தெரியாத

ஒரு 21-ம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞன்,

(கவனிக்க ‘கவிஞன்’,

பெண் கவிஞர்கள் ஒருபோதும் 

வேட்டைக் கவிதைகள் எழுத முடியாது

என்ற அளவில் நிம்மதி)

இன்பாக்ஸ்களைத் தாண்டிவரும்

தகுதி இழந்துவிடுகிறான்


எனக்கும்

எனது வேட்டையாடிக்கும் இடையிலோ

மூவாயிரம் ஆண்டுகள் காலத்தொலைவு


கைபேசியின் கூகுள் மேப்ஸால்

முடிந்ததெல்லாம்

பக்கத்தில் உள்ள 

நல்லதொரு பன்றிக்கறி உணவகத்துக்கு

டைரக்‌ஷன் காட்டுவதே


அதுவே பேருதவி

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் சேர்த்து

டைரக்‌ஷன் காட்டினால்

தாங்க முடியாது என்னால்

ஏற்கெனவே

இந்தியனாகவும் தமிழனாகவும்

தலைக்கு மேல் வந்து உட்கார்ந்திருக்கும்

பல்லாயிரமாண்டுகளை 

கம்ப்யூட்டர் வைரஸ் வந்து அழித்திடாதா

என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன் நான்


சாப்பிட்டு முடித்துவிட்டு

ஒரு தம்மைப் போடுவதற்காக

வாயில் சிகரெட்டை வைத்து

வத்திக்குச்சியைத் தீப்பெட்டியில் 

உரசினால்

சக்கு சக்கு வத்திக்குச்சி

சட்டுன்னுதான் பத்திக்கிச்சு மயிலே மயிலே


நவீன செவ்வியல் கவிதையின்மீது

மன்சூர் அலிகான் ஆடுகிறார்

துயரழியதியுயர்மீப்பெரும்

டிக்டாக் நடனம்

- பெயரிலி துயர்க்கவி



Sunday, April 9, 2023

புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்



தேவனே
நீர் உம்மை
உயிருள்ள அப்பமும்
திராட்சை ரசமும் என்றீர்

நானோ
உயிருள்ள கல்லறையாக
இருக்கிறேன்

யாரேனும் திறந்து பார்த்தால்
இப்படி
வெட்டவெளியைப்
புதைத்துவைத்திருக்கிறார்களே
என்ன மடத்தனம்
என்று காறியுமிழ்வார்கள்

மேலும்
வாழ்வது கல்லறை சுமப்பதற்கான
கூலி
என்று நான் எழுதிக்கொண்ட
கல்லறை வாசகத்தைப் பார்த்து
உம் வாக்காக 
எடுத்துக்கொண்டு
எல்லோரும்
அஞ்சி அகன்றுவிடுகிறார்கள்

சிலுவை சுமத்தலுக்குக்
கிடைத்த வெளிச்சம்
கல்லறை சுமத்தலுக்குக்
கிடைப்பதில்லையே
என்ற கடுப்பில்
உமக்கே நான் செய்த
இடைச்செருகல் அது

சிலுவையில் மரித்தபின்
உம்மையும்
ஒரு கல்லறையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்
மூன்று நாட்கள் கூட
தாக்குப்பிடிக்க
முடியவில்லை

இப்போதாவது
ஒப்புக்கொள்ளுங்கள்
கல்லறை சுமத்தலில்
நான்
எவ்வளவு பெரிய
வீரன் என்று

-ஆசை 

Friday, April 7, 2023

புனித வெள்ளியின் உதிரத் துளி


இவ்வெள்ளியின் தரையில் ஆழ ஊன்றியிருக்கிறது ஒரு புனித மனம்

அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை
களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்
கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
எட்டியதும்
பெருங்குரலொன்று
ஓவென்றெழுந்து
அண்டம் உலுக்கியது
ஆதியிலிருந்து
அங்கே குமைந்திருப்பதும்
எல்லா உதிரச் சொட்டுகளின்
ஆகர்ஷணப் புள்ளியாய்
அமைந்திருப்பதும்
படைப்பின்போது
பிதாவிடமிருந்து பிய்ந்து தங்கியதுமான
ஆதாரவலியின் குரல் அது
‘என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர்’
என்றபோது
விசும்பி எழுந்தாலும்
வெளிப்பட விரிசலில்லாமல்
தவித்த குரல் அது
ஒரு சொட்டு
தட்டிக் கதவகற்ற
வீறிட்டெழுந்து
மூன்றாம் நாளில்
கல்லறை பெயர்த்ததும்
எழுப்பித்ததும்
உயிர்ப்பித்ததும்
விண்ணேற்றியதும்
அக்குரலே
அக்குரலை எட்டுமொரு
சொட்டு
எம்முடலிலும்
தாருமென் பிதாவே
அது
கண்ணீராக இருந்தாலும் சரி
உதிரமாக இருந்தாலும் சரி
-ஆசை

Tuesday, April 4, 2023

உன் பதினெட்டு வயதின் பட்டம்

உன் பதினெட்டு வயதை விட்டு
வெகு தொலைவில் போய்விட்டாய்

அது ஒரு பட்டமாய்
இன்னும் அங்கேதான்
பறந்து கொண்டிருக்கிறது
அதன் மேல்தான்
நானும் மிதக்கிறேன்

நூலறுந்து போயிருந்தாலும்
என்னை
கீழே தள்ளி விடாமல்
காப்பாற்றி
ஏந்தியிருக்கிறது
உன் பதினெட்டு வயதின் பட்டம்

சற்றே நழுவினாலும்
உன் 42ன் மீதோ
என் 43ன் மீதோ
விழுந்துவிடுவேன்

அந்தரம்
பதினெட்டு
ஏறிச்செல்லும்
ஒருவழிப் படிக்கட்டு

அதில்
தனியாக நான்
ஏறிச்சென்றதால்தான்
உனக்கே இனி
வாய்க்காத
உன் பதினெட்டின் அருகாமை
எனக்கெப்போதும்
வாய்க்கிறது

உன் பதினெட்டின் மேல்
என்றும் மலர்ந்திருக்கும்
என் பதினெட்டைப் பார்க்கவே
நீங்காமல்
அங்கிருப்பேன்

இப்போதுன்
பிறந்தநாளுக்கு
நான் பூத்தூவுவது
அங்கிருந்துதான்

என்ன பூ வென்று
எடுத்துப் பார்த்துத் திகைக்காதே
அது உன் பதினெட்டு
உனக்கனுப்பும்
இறவாமை திறவுகோல்
- ஆசை

Wednesday, August 24, 2022

இமையத்தின் ‘சாரதா’ கதையும் மகிழ்ச்சிக்கு எதிரான இந்திய சமூகமும்



ஆசை

இமையத்தின் நாவல்கள் அளவுக்கு அவருடைய பல சிறுகதைகள் முக்கியமானவை. சாதியத்தின் நுண்ணடுக்குகள், பசி, ஏழ்மை, ஏழ்மையின் மீது நவீன வாழ்க்கை நடத்தும் தாக்குதல்கள், பெண்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் – உலகம், அரசியல், காதல் என்று பல பேசுபொருள்களில் அமைந்தவை இமையத்தின் கதைகள். இவையெல்லாம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பதுதான் இமையத்தின் கதைகளின் தனிச் சிறப்பு. இந்தியச் சமூகமும் அப்படித்தானே.


இமையத்தின் ‘சாரதா’ கதை 2019-ல் எழுதப்பட்டது. 55 வயது மதிக்கத்தக்க தனவேலுவும் அதே வயதுடைய சாரதாவும் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் சந்தித்துக்கொள்வதுதான் கதை. வழக்கமான அர்த்தத்தில் காதல் கதை என்றோ, பிரிந்த காதலர்கள் முதுமைக் காலத்தில் எதேச்சையாக சந்திப்பதைப் பற்றிய கதை என்றோ, சாத்தியமாகாத காதல் குறித்த நினைவேக்கக் கதை என்றோ இதைக் குறுக்கிவிட முடியாது. ஆனாலும், இது ஒரு காதல் கதைதான். காதல் தொடங்குவதற்கு முன்பே முடிந்துபோன, அல்லது 34 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பரஸ்பரம் தொடங்கிய காதல். இந்தக் காதல் சாத்தியப்படாமல் போனதற்கு அல்லது சிறு அளவிலேனும் முறையான பகிர்தல் 34 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியப்பட்டதற்கு என்னென்ன காரணங்கள் என்று நம்மை யோசிக்க வைக்கும் தளங்களில்தான் இந்தக் கதை மிகச் சிறந்த கதையாகிறது.  


அங்கன்வாடிக்கு மாற்று ஆசிரியராகத் தற்காலிகமாக 1985-ல் தனது ஊருக்கு வரும் சாரதாவைத் தூரத்தில் கண்ட உடனே காதலிக்க ஆரம்பித்துவிடும், முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவர் தனவேலு கவிதையாக எழுதித் தள்ளுகிறார். ‘வெயிலில் நிற்பவனுக்கு வியர்த்து ஒழுகுவதுபோல அவருக்குக் கவிதை வந்தது’   என்று அழகாகச் சொல்கிறார் இமையம். ஒரு வாரத்துக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காதல் கடிதம் எழுதி, அங்கன்வாடிக்குச் சென்று சாரதாவிடம்கூட கொடுக்காமல் மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்துவிடுகிறார். அடுத்தடுத்துக் கடிதங்களை அப்படியே வைத்துவிட்டு, சாரதா தரப்பின் எதிர்வினையைப் பற்றி அறிந்துகொள்ளாமல் ஓடிவந்துவிடுகிறார். அந்தக் கடிதங்களின் எதிர்வினைதான் சாரதாவின் கடந்த 34 ஆண்டு வாழ்க்கை என்பதை ரயில் பயணத்தின்போதுதான் தனவேலு (அதிர்ச்சியுடன்) அறிந்துகொள்கிறார். தனவேலு கடிதம் எழுதியதில், சாரதாவின் அழகு தவிர, அவளுக்கு எந்தப் பங்கும் இல்லாமலேயே, அவளுக்கு ஒரு பையனிடமிருந்து காதல் கடிதங்கள் வந்ததாலேயே அவள் தண்டிக்கப்படுகிறாள். 19 வயதிலேயே கல்யாணம். வேலைக்குப் போகாத, பரம்பரைச் சொத்தினைக் குடித்தே அழிக்கும் கணவன். அதனால் சாரதாவின் வாழ்க்கையும் நரகமாகிவிடுகிறது; அவளுடைய பெண்களின் வாழ்க்கையும் அவ்வளவாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.  


அந்தக் கடிதங்களை மட்டும் தனவேலு கொடுக்காமல் இருந்திருந்தால் தன் வாழ்க்கையே மாறியிருக்கும் என்கிறாள் சாரதா. “ரெண்டு மூணு வருசம் கழிச்சியிருந்தா நானும் ஒரு வேலையில உள்ள மாப்ளயக் கட்டியிருப்பனில்ல?” என்பதுதான் அவளுடைய ஆதங்கம். அப்படியென்றால் தனவேலு கடிதம் கொடுத்தது தப்பா? தனக்கு ஈர்ப்பு ஏற்பட்ட பெண்ணிடம் தன் காதலை அவர் வெளிப்படுத்த அப்படியொரு வழிமுறையை வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? அவரும் பயந்துபோய்தான் கடிதங்களை வைத்துவிட்டு ஓடிவருகிறார். சாரதாவுக்கும் தொடை வியர்த்துவிடுகிறது. ஒரு ஆண் தனக்கு விருப்பமான பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் அந்த விருப்பத்தை அந்தப் பெண் பெறுவதற்கும் (அவள் ஏற்றுக்கொள்கிறாளோ இல்லையோ) இடையில் எத்தனை கட்டுப்பாடுகள், தடைகள், நியதிகள்? இவை அத்தனையும் பாரம்பரியத்தின் பேரிலும் மதங்கள், சாதிகள் பேரிலும்தான் நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள், நியதிகளெல்லாம் அடிப்படையில் மனித மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானவை. தனிநபரின் நியாயமான மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதிலிருந்தே சாதி, இன, நிற பேதங்கள் பிறக்கின்றன என்று கூறலாம். இதன் பலிகடாக்கள் பெண்கள் என்று மட்டுமல்ல, அனைவரும்தான். நம் சமூகத்தில் எந்த ஆண்தான் மகிழ்ச்சியானவனாகவும் சுதந்திரமானவனாகவும் இருந்திருக்கிறான். ஆனால், பிறரின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் சுதந்திரம் மட்டும் அவனுக்கு இயல்பாக இருக்கிறது.


இந்தியச் சமூகம் முழுவதுமே மகிழ்ச்சிக்கு எதிரானது. கணினி மொழியில் சொல்ல வேண்டுமென்றால் நாம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு புரோகிராம் செய்யப்படாதவர்கள்; பிறரையும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்கு அனுமதிக்க புரோகிராம் செய்யப்படாதார்கள். இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கண்டு அஞ்சி ஒடுங்குபவர்கள். இல்லையென்றால் ஏன் இவ்வளவு சாதிய வன்மம், ஆணவக் கொலைகள், காதலுக்கு முட்டுக்கட்டைகள்?


ஒரு பெண், தனது உடன்பாடு இல்லாமல் திடீரென்று ஒரு ஆணால் காதல் கடிதம் கொடுக்கப்பட்டதால், என்ன ஏதென்று அவள் உணர்ந்துகொள்வதற்குள், எதையும் முடிவெடுக்கப் பக்குவம் இல்லாத வயதில் அவளுக்கு மாபெரும் தண்டனை அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட, இப்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் பேரறிவாளனுக்கு நடந்ததைப் போலதான் சாரதாவுக்கும், அதே 19 வயதில் நடந்திருக்கிறது. பேரறிவாளனுக்கென்று அவரும் அவரது அன்னையும் ஒட்டுமொத்த சமூகமே போராடினார்கள். ஆனால், சாரதாக்கள் போராடுவதில்லை, போராட முடியாத நிலையை எட்டி அதற்குள் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது அப்பாவி தனவேலுகளை சிறிய குற்றவுணர்வுக்குள் ஆளாக்கியோ, அல்லது சின்னதாக அவர்களைக் காதல் செய்ய முயல்வதோதான். இந்த இரண்டையும் சாரதா இந்தக் கதையில் செய்துவிடுகிறார். மேலும், காதல் என்பது பரஸ்பர உணர்வு, அதை ஒருதலையாகவே வைத்து மூடிவிட்டுப்போன தனவேலுவை இறுதியில் திக்குமுக்காடச் செய்துவிட்டும் போகிறாள்.


நம் தலைக்கு மேல் இவ்வளவு பெரிய பாரம்பரியமும் வரலாறும் தொன்மையும் மதங்களும் சாதிகளும் வர்க்கங்களும் இல்லையென்றால் ஒருவேளை தனவேலு சாரதாவிடம் சென்று “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. இவையெல்லாம் நான் உன்னை நினைத்து எழுதிய கவிதைகள்” என்று தயங்காமல் சொல்லியிருக்கலாம். அவள் அதை இயல்பாக ஏற்கவோ மறுக்கவோ செய்திருக்கலாம். ஏற்றிருந்தால் அடுத்த நாளே அவர்களுக்குள் உடலுறவுகூட நடந்திருக்கலாம். அதற்கடுத்த நாள் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து பிரிந்துகூட இருக்கலாம். காதலோ திருமணமே ஆயுள்வரை நீடிக்க வேண்டுமா என்ன?


மேற்கத்திய நாடுகளில் தங்கள் பிள்ளைகள் உடல்ரீதியாக இனப்பெருக்கத் தகுதியை அடையும் பருவத்தில் அவர்களுக்கு ஆணுறைகளும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்கித்தருகிறார்கள். அதனால், அவர்களில் பலரும் இளம் வயது கர்ப்பம் என்ற அச்சமின்றி இயல்பாகக் காதலையும் காமத்தையும் அனுபவிக்கிறார்கள் (இவற்றை அனுபவிப்பதில் என்ன தவறு?). ஆனால், இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அங்கே புலம்பெயர்த்து வாழ்பவர்கள் கூடவே கலாச்சாரம், கௌரவம் போன்றவற்றைத் தூக்கிச்செல்கிறார்கள் அல்லவா, அதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆணுறைகளும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் வாங்கித்தரத் தயங்குகின்றனர். இதன் விளைவு அதிகரிக்கும் இளம் வயது கர்ப்பங்கள்.


ஒப்பீட்டளவில் தனவேலுவை விட சாரதா சுதந்திரமானவளாகவும் மகிழ்ச்சிக்கு ஏங்குபவளாகவும் இருக்கிறாள். ஆனால், அவளும் கூட முழுமையாக நம் சமூகத் தளைகளிலிருந்து விடுபட முடியாதவள் என்பதைத்தான், “இந்தக் காலமா இருந்தா மாப்ள என்னா படிச்சிருக்காரு, என்ன வேல பாக்குறாரு, தனியாரா, கவர்மன்டா, சம்பளத்தோட பேங்க் ஸ்டேட்மன்ட் கொடுங்கன்னு கேக்க முடியும். மேட்ரிமோனியல்ல பதிவுசெஞ்சிவச்சி துணிக்கடயில துணிய செலக்ட் பண்ற மாதிரி மாப்ள, பொண்ண செலக்ட் பண்ண முடியும். அந்தக் காலத்தில அப்பா அம்மா சொல்றதுதான? நிலம் எம்மாம் இருக்குன்னு பாத்துதான பொண்ணு கொடுத்தாங்க?” என்ற கூற்றின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அப்பா பார்க்கும் மாப்பிள்ளைக்குப் பதிலாக மேட்ரிமோனியல் மாப்பிள்ளை. அவ்வளவுதான் வித்தியாசம். அங்கே, காதல் திருமணம் ஒரு தெரிவாக இருக்கவில்லை. தான் அனுபவித்துவரும் வேதனையைப் பொறுத்தவரை அவளுக்குத் தேவையாக இருந்தது காதல் அல்ல, ‘ஒரு லட்ச ரூபாய் சம்பளம்’ வாங்கக்கூடிய அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை. ஏனெனில், அது சாத்தியமாகாததால் அவளுடைய பெண்கள் வரை கஷ்டப்படுகின்றனர். ஆண்கள் பலரும் காதல் அல்லது திருமணம் என்று நின்றுவிட, பெண்களோ தங்கள் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கும் சூழலில் காதல் என்பது பெரிதும் தெரிவாக இருப்பதில்லை. இதையெல்லாம் தாண்டியும் மீறலில் முன்னிற்பவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.


இந்தத் தளங்களுக்கு அப்பாலும் இதை ஒரு அழகான காதல் கதையாக மட்டும் படிக்க முடியும். தனவேலு கொடுத்துப்போன கடிதங்களை சாரதா இதுவரை படித்துப் பார்க்காதது மட்டுமல்ல, கடந்த 34 ஆண்டுகளாக அவற்றைத் தூக்கியெறியாமலும் வைத்திருக்கிறாள். தன்னுடைய இத்தனை ஆண்டு கஷ்டத்துக்குக் காரணமானவை என்பது மட்டுமல்ல, தனக்குக் கொடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான கடிதங்கள் அவை என்பதும் காரணம். படித்திருந்தால் கிழித்துப்போட்டிருப்பாள். “நான் சாவுறவரைக்கும் கிழிக்கவும் மாட்டன். படிக்கவும் மாட்டன். என்னோட வாழ்க்கய நாசமாக்குன சீட்டுவோதான? நான் சாவுறவரைக்கும் அப்படியே இருக்கட்டும். என்னோட சந்தோஷம் அந்த சீட்டுவோதான். என்னோட நரகமும் அந்த சீட்டுவோதான்” என்பதுதான் அந்தக் கடிதங்களின் இருப்புக்குக்  காரணம்.

‘கல்யாணமாயிட்டா பாக்கக் கூடாதின்னு சட்டமா?’ என்று கேட்டு தனவேலுவை அதிர வைக்கிறாள் சாரதா. ஆம், இங்கே எல்லாவற்றுக்கும் சட்டம் இருக்கிறது. மேலும், ‘நான் எங்க இருக்கன்னாவது விசாரிச்சிருக்கலாம். ஒங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் இருபது கிலோமீட்டர் தூரம்கூட இருக்காது’ என்கிறாள் சாரதா.


ஒரு சிறிய, துயரமான, கூடவே குதூகலமூட்டும் இந்தக் கதையில் எத்தனையோ அழகான தருணங்களையும் வரிகளையும் இமையம் உருவாக்கிவிடுகிறார். பெரும்பாலான அழகிய கூற்றுகள் சாரதாவுடையதாகவே இருக்கின்றன: ‘”காது, மூக்கு, வாய் மாதிரி மனசும் இருந்தா எந்தத் தொந்தரவும் இருக்காது. மனசுக்கு மட்டும்தான திருப்பி நெனச்சிப்பாக்குற புத்தி இருக்கு” என்று சொன்னாள்’ என்ற வரிகளும் ’“ஒங்களப் பாத்ததில ஒரு கடல் அளவுக்கு சந்தோஷமின்னா, ரெண்டு கடல் அளவுக்குக் கஷ்டம்”’ என்ற வரிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

சாரதாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று கேட்கும் தனவேலுவிடம் சாரதா இப்படிச் சொல்கிறாள்:

“எதுக்குப் பாக்கணும்? இப்பியே ஏன்டாப்பா பாத்தமின்னுதான் இருக்கு. இதுவே கனவா இருந்தா நல்லா இருந்திருக்கும்.”

***

தனவேல் கைபேசி எண் கேட்கும்போது சாரதா இப்படிச் சொல்கிறாள்:

“ஒங்க சுடுகாடு ஒங்களுக்காகக் காத்திருக்குது. என்னோட சுடுகாடு எனக்காகக் காத்திருக்குது. சட்டியா பானயா மாத்திக்கிறதுக்கு?”

***

இன்னொரு இடத்தில்:

‘அழுது முடித்து ஓய்ந்த மாதிரி முகத்தைத் துடைத்துகொண்ட சாரதா “கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல.”

“கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி.”

அவளுக்கு உண்மையில் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், யாரோ கூப்பிட்டதுபோல். தனவேலு முதன்முதலில் கூப்பிட்டது (அதாவது, கடிதங்கள் கொடுத்தது) கூப்பிட்டது மாதிரியும் கூப்பிடாதது மாதிரியும்தானே இருந்தது. இறுதிவரை தனவேலு அப்படித்தான். ஆனால், அங்கிருந்து தொடர நினைக்கிறது தனவேலுவின் புத்தி. கைபேசி எண்ணைக் கேட்கிறான். சாரதா தர மறுத்துவிடுகிறாள். அவளைப் பொறுத்தவரை இத்தனை ஆண்டு குமுறலைக் கொட்டுவதற்கு வாய்ப்போ, பழிவாங்கலோ, அல்லது காதலோ எதற்கும் நீடித்த மதிப்பில்லை. அந்தத் தற்காலிகமே போதும்.


காதலையும் அதன் சூழலையும் அனைத்துத் தளங்களிலும் ‘ரொமான்டிக்’ தன்மைகளை உரித்தெடுத்து (Deromanticization) அங்கிருந்து ‘ரொமான்டிக்’கான உணர்வை ஏற்படுத்துகிறார். மலையாளப் படங்களிலே கௌதம் வாசுதேவ் படங்களிலோ வருவதுபோலல்லாமல் நெரிசலான ரயில், தரையில் உட்காரக்கூட இடமில்லாமல் நின்றுகொண்டிருக்கும் சூழல். வெக்கை, வியர்வை வேறு. ரயில் கழிப்பறைக்குப் பக்கத்தில் இருவரும் நிற்கிறார்கள். இருவருக்கும் வயது 50-களில். 34 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லியாக இருந்த சாரதா இப்போது பேத்திகள் எடுத்துப் பல மடங்கு பெருத்துவிட்டாள். தனவேலுக்குத் தலையில் முடியை எண்ணிவிடலாம். இருவரும் கடந்த கால வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிப் பேசவில்லை. பிளாஷ்பேக்கும் சிறு அளவுக்குத்தான் வருகிறது. ஆனாலும், இந்தக் கதையில் வாசகருக்கு ரொமான்டிக் மனநிலை கிடைக்கிறது. இந்தியச் சமூகமே நெரிசல் சமூகம்தானே. அந்தக் காலத்தில் பத்துப் பிள்ளைகள் நெருக்கியடித்துக்கொண்டு இருக்கும் வீட்டில் முதல் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனால் அவனுக்கும் பத்துப் பிள்ளைகள் அதே வீட்டில்தானே பிறக்கும். தனிப்பட்ட வெளி (private space) என்பதை அப்படிப்பட்ட நெருக்கியடிக்கும் வீட்டில் மட்டுமல்ல விசாலமான வீடுகள், பொதுவெளிகள் எங்கும் நாம் உருவாக்குவதில்லை. அப்படிப்பட்ட சூழலிலிருந்து ஒரு அழகிய ‘ரொமான்டிக்’ கதையை இமையம் தந்திருக்கிறார்.


தாம்பரத்திலிருந்து கைபேசியில் டைப் செய்துகொண்டிருக்கும் பெண்ணுக்கும் 34 ஆண்டுகளுக்கு முந்தைய சாரதாவுக்கும் எந்த அளவுக்கு வேறுபாடு இருக்கிறது! ஏன் அந்தப் பெண்ணுக்கும் தனவேலுக்குமே எந்த அளவுக்கு வேறுபாடு! இப்படிப்பட்ட நுட்பமான பல இடங்களை இமையம் இந்தக் கதைக்குள் அள்ளித்தருகிறார். தமிழின் மகத்தான காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறிவிடலாம். இன்னும் சொல்லப்போனால் இது ‘காதலைத் தோன்ற விடாத ஒரு சமூகத்தின் கதை’ என்றும் சொல்லிவிடலாம்.

- நன்றி: ‘தலித்’ இதழ் 


Tuesday, July 12, 2022

விடைபெறுகிறேன்… ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து!

இறுதி நாள் பணி...

ஆம்! ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெறுகிறேன்! 9 ஆண்டுகள் இந்த நாளிதழுடன் நான் மேற்கொண்ட பயணம் சென்ற புதனுடன் (06-07-22) முடிவுக்கு வந்திருக்கிறது. நானாக விரும்பி எடுத்த முடிவு என்றாலும், ஏற்பட்டிருக்கும் வலி அதிகமானது. 9 ஆண்டுகளுக்கு முன்பும் இப்படி ஒரு வலி ஏற்பட்டது. ‘க்ரியா’ பதிப்பகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து வெளியேறியபோது ஏற்பட்ட வலி அது.

கல்லூரிக் காலத்திலேயே ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். அப்போது அவர் ‘க்ரியா’ தமிழ் அகராதியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை உருவாக்கும் பணியை ஆரம்பித்திருந்தார். முதல் பதிப்பில் விடுபட்ட சொற்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் போன்றவற்றை எழுதிக்கொண்டுவந்து அவரைச் சந்திக்கும்போதெல்லாம் கொடுப்பது வழக்கம். படிப்பு முடித்தபோது, “க்ரியாவில் இணைந்துகொள்ளுங்களேன்” என்று அழைத்தார். பெரிய வாய்ப்பு அது. அப்போது எனக்கு வயது 23. ஆர்வத்தோடு அகராதிப் பணியிலும் பதிப்புப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும், அதன் முக்கியத்துவத்தை முழுமையாக அப்போது உணர்ந்திருந்தேன் என்று சொல்ல முடியாது.

ஒருநாள் பேராசிரியர் தங்க.ஜெயராமன் க்ரியா அலுவலகத்துக்கு வந்திருந்தார். மன்னார்குடியில் இளங்கலை படிக்கும்போது என்னுடைய துறைத் தலைவர் அவர். க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் நண்பர். மாலையில் புறப்படும்போது, நானும் அவரும் சேர்ந்து சென்றோம். தங்க.ஜெயராமன் சொன்னார், “ஆசைத்தம்பி, உங்களைப் பத்தி ராமகிருஷ்ணன் அவ்வளவு பெருமையா சொன்னார். உங்களுடைய ஆசிரியரா ரொம்பப் பெருமையா உணர்றேன்” என்றவர் ஒரு கணம் நின்றார். “ஒண்ணு சொல்லவா, உங்க வயசுல லெக்ஸிகோகிராஃபியில ஈடுபடுற ஆளுங்க அநேகமா இந்தியாவிலேயே இல்லை. நீங்க கோடியில ஒருத்தர்!”அந்தத் தருணம்தான் என்னை, எனது திறமையை, நான் ஈடுபட்டிருக்கும் பணியின் முக்கியத்துவத்தை வாழ்வில் நான் உணர்ந்த தருணம்.

அகராதியை விரிவாக்கித் திருத்தும் பணியில் பிரதான ஆசிரியர் குழுவாக ராமகிருஷ்ணன், ரகுநாதன், நான் மூவருமே பணியாற்றினோம் (ஏனையோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள்). எனது உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவே  அகராதியின் ‘துணை ஆசிரியர்’(Deputy Editor) பொறுப்பில் என்னை ராமகிருஷ்ணன் நியமித்தார். ‘துணை ஆசிரியர்: தே.ஆசைத்தம்பி’ என்ற பெயர் அந்த அகராதியின் தலைப்புப் பக்கத்தில் இடம்பெற்றபோது எனக்கு வயது 28. 

அதோடு வெவ்வேறு அகராதிப் பணிகள், க்ரியா பதிப்பித்த புத்தகங்களின் செம்மையாக்கப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அகராதியில் பணிபுரிந்ததால் அத்தனை துறைகளிலும் அடிப்படை அறிவு வேண்டும். இதற்காக ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்களையும் தேடித்தேடி சந்தித்து, உரையாடியது, அகராதி விரிவாக்கத்துக்கும் எனது அறிவு விரிவாக்கத்துக்கும் பேருதவியாக இருந்தது. கூடவே, க்ரியாவில் இருந்த 10 ஆண்டுகளில் முக்கியமான மொழிபெயர்ப்புகள், ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களின் திருத்திய பதிப்புகளில் மொழிபெயர்ப்பாளர்களுடன் பணிபுரிந்ததும் வளமான அனுபவம். இவையெல்லாம் பிற்பாடு நான் ஆற்றப்போகும் இதழியல் பணிக்குப் பெரும் பலமாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

திடீரென ஒருநாள் ‘தி இந்து’ அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. “தி இந்து குழுமத்திலிருந்து தமிழில் ஒரு நாளிதழ்தொடங்கப்போகிறோம். அதன் ஆசிரியர் குழுவில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறினார்கள். சந்தோஷமாக இருந்தது என்றாலும், அதை மறுக்க நான் யோசிக்கவே இல்லை. ஏனென்றால், என் வாழ்க்கை ‘க்ரியா’வுடனும், அகராதிப் பணியுடனுமானது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தேன். மறுநாள், ராமகிருஷ்ணன் என்னை அழைத்தார். சமஸ் அவருடன் பேசியதாகச் சொல்லி என்னிடம் பேசினார்.

சமஸ் எனக்கு மன்னார்குடி கல்லூரி கால நண்பர். அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் என் உலகமும் அவர் உலகமும் வெவ்வேறாகி இருந்தன. ஆனால், பரஸ்பர மதிப்பு இருந்தது. ஊருக்குப் போகும்போது எப்போதாவது சந்திப்பதும் உண்டு. ஆனால், ராமகிருஷ்ணனோடு அவர் நெருக்கமான உறவில் இருந்ந்தார். புதிதாக ஆரம்பிக்கவிருந்த ‘இந்து தமிழ்’ நாளிதழில் உருவாக்க அணியில் ஒருவராக, ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆளெடுப்புப் பணியை அவர் முன்னின்று மேற்கொண்டிருந்தார். “தமிழில் தரமான இதழியல் இல்லை என்று குற்றம்சாட்டும் நீங்கள், இப்போது அப்படி ஒன்று உருவாகும்போது அதற்குப் பங்களிக்க வேண்டாமா? ஆசை போன்றவர்கள் எங்களுக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்று ராமகிருஷ்ணனிடம் அவர் பேசியிருக்கிறார்.

ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார், “தமிழில் தரமான நாளிதழைக் கொண்டுவர வேண்டும் என்று இந்து குழும இயக்குநர்கள் விரும்புகிறார்கள் – இதற்கான முழுச் சுதந்திரத்தையும் தந்திருக்கிறார்கள். ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசோகனும் மிகுந்த சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கக் கூடியவர். எல்லாவற்றுக்கும் மேல் எனக்குக் கீழ் உள்ள அணிக்குத்தான் அவரைத் திட்டமிடுகிறோம். அதனால் ஆசைத்தம்பிஅனுப்புங்கள் என்று சமஸ் சொல்கிறார். ஆசைத்தம்பி, நீங்கள் க்ரியாவை விட்டுப் போனால் எனக்கு அது பெரிய இழப்புதான். ஆனால், இது உங்கள் எதிர்காலத்தை யோசிக்கும்போது இதழியல் மேலும் விரிந்த தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

அடுத்த நாளே புதிய நாளிதழ் குறித்து ராமகிருஷ்ணனின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ‘இந்து’வின் அன்றைய பதிப்பாளர் என்.ராம் சொல்லி, ஆசிரியர் அசோகனும், பிஸினஸ்லைன் முன்னாள் ஆசிரியர் சம்பத்தும் வந்திருந்தார்கள். மீண்டும் என்னிடம் பேசினார் ராமகிருஷ்ணன். நான் அரைமனதுடன் சம்மதித்தேன். நேர்காணலுக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு சமஸிடமிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘Now, We are standing on history. Yes, you are selected!’

ஆம், இந்த ஒன்பது ஆண்டுகளையும், அங்கு நான் பங்கெடுத்த நடுப்பக்கங்களில் நடந்த பணிகளைத் திரும்பிப் பார்க்கும்போது அது 100% உண்மை என்றே தோன்றுகிறது.

பத்திரிகைத் துறையில் அனுபவமே இல்லாதவனாகத்தான் உள்ளே நுழைந்தேன். என்னைப் போல மேலும் பலரையும் அவர்களுடைய வேறு துறை சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் பணிக்கு எடுத்திருந்தார்கள் என்றாலும், அது முற்றிலும் ஒரு புதிய விஷயம். அதோடு நான் சார்ந்த நடுப்பக்க அணி கலவையான ஆளுமைகளைக் கொண்டிருந்தது. ‘தினமணி’யில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில், 30 ஆண்டு பணி அனுபவத்தோடு வந்திருந்த சாரி சார், ‘விகட’னில் 25 ஆண்டு அனுபவத்தோடு வந்திருந்த சிவசு சார் போன்றோரைக் கொண்ட அணி. பிந்தைய ஆண்டுகளில் நடுப் பக்க அணியில்  எங்களோடு வந்து சேர்ந்துகொண்ட சந்திரமோகன், நீதிராஜன், புவியரசன், சுசித்ரா, மகேஷ், ராஜன் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். பத்திரிகைக்குள்ளேயே பலராலும் வித்தியாசமாகப் பார்க்கப்படும் அணியாக நாங்கள் இருந்தோம். அதன் தொடக்கக் கட்டத்தில் ஒரு அணியாக நாங்கள் சேர்ந்து 2 மாதங்களுக்குள் பத்திரிகை வெளிவர வேண்டி இருந்தது. மிகக் கடுமையாக உழைத்தோம். ஒரு பத்திரிகை உருவாவதை அங்குலம் அங்குலமாக நேரில் பார்ப்பதும், அதில் நாமும் ஒரு பங்காக இருப்பதும் திகைப்பூட்டும் அனுபவமாக எனக்கு  இருந்தது. 


மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன் நான். முதல் தலைமுறைப்  பட்டதாரி. ஆங்கில இந்து நாளிதழே எங்கள் வீட்டுப் பக்கம் எல்லாம் வராது. இப்படிப்பட்டவர்களைத்தான் புதிதாக வரும் தமிழ்ப் பத்திரிகை பிரதான கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள் நடுப்பக்க அணி மிகுந்த தெளிவோடு இருந்தது. அணியில் எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முடிந்தவரை ஒரு சமூகக் கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

***

நான் ‘இந்து தமிழ்’ குறித்துமகிழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்கின்றன. அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது. எங்கள் ஊட்டச்சத்தை எங்கிருந்து பெற்றோமோ, பெறுகிறோமோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது என்ற உணர்வு எங்களிடம் இருந்தது. அறிவுத் தளத்தில் கி.ரா., அசோகமித்திரன்,ஆ.சிவசுப்பிரமணியன், அ.மார்க்ஸ், இமையம், ஜெயமோகன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் முதல் பா.செயப்பிரகாசம்,பி.ஏ.கிருஷ்ணன், மாலன், சலபதி,டி.தர்மராஜ், ராஜன் குறை, ப்ரேமா ரேவதி, சுகிர்தராணி, ஸ்டாலின் ராஜாங்கம் வரை வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட பல நூறு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் இடமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கம் இருந்திருக்கிறது. கி.வீரமணியின் கட்டுரையும் வந்திருக்கிறது, கமல்ஹாசனின் கட்டுரையும் வந்திருக்கிறது.

எங்களுடைய ஐந்தாவது ஆண்டு இதழில், எழுத்தாளர் அழகிய பெரியவன் இப்படி எழுதியிருந்தார், “ஒருவேளை ‘தி இந்து’ தமிழ் நாளேடு வெளியாகாமல் இருந்திருந்தால், அயோத்திதாசப் பண்டிதரோ, இரட்டைமலை சீனிவாசனோ, ஞானக்கூத்தனோ, இன்குலாப்போ, அஃ பரந்தாமனோ, நா.காமராசனோ, ரோஹித் வெமுலாவோ, ஜிக்னேஷ் மேவானியோ கௌரி லங்கேஷோ எந்தத் தமிழ் நாளேட்டின் நடுப்பக்கத்தில் இப்படி இடம்பிடித்திருப்பார்கள்? குடிச் சீரழிவு, சூழல் சீர்கேடு, மதவாதம், ஊழல், கல்வி வணிகம், மணல் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றுக்கு எதிராகக் கட்டுரைகள், செய்திகள் மூலம் மிகுந்த நெஞ்சுரத்தோடு ‘தி இந்து’ தமிழ் பணியாற்றியிருக்கிறது.”

காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர் என்று தலைவர்கள் தொடங்கி ஞானக்கூத்தன், அசோகமித்திரன், இன்குலாப்,எஸ்.என்.நாகராஜன், பிரான்சிஸ் கிருபா என்று சமகால எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் வரை பிறந்த நாள் / நினைவு நாளில் ஒரு பக்க, இரு பக்கச் சிறப்பிதழை வெளிக்கொண்டுவந்திருக்கிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தியிருக்கிறோம். ஆங்கில ‘லிட் ஃபெஸ்ட்’ போல தமிழிலும் விருதாளர்களுக்குக் கண்ணியமான தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ரூ. 5 லட்சம் தொகையுடன் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டதெல்லாம் மிக மகிழ்ச்சியான தருணம். அதைக் காட்டிலும் முக்கியமானது, எந்தச் சர்ச்சையும் எழாத வகையில் எங்கள் விருதாளர்கள் தேர்வு அமைந்தது: கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், தமயந்தி, கீரனூர் ஜாகீர் ராஜா… இப்படி நீளும் பட்டியலில் யாரைக் குறை கூறிட முடியும் அல்லது எந்தக் குழு அரசியல் நோக்கத்தை இதன் பின்னணியில் கற்பிக்க இயலும்? இதிலெல்லாம் நான் முக்கியப் பங்குவகித்தது குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டு!

***

இந்து தமிழ் நடுப்பக்கங்கள் தமிழில் என்ன செய்திருக்கின்றன – குறிப்பாக ஆரம்ப காலங்களில் – என்பது பிற்பாடு இதழியல் ஆய்வுக்குரிய ஒரு பொருளாக அமையும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. மொழிபெயர்ப்புகளில் மட்டும் அது செய்திருக்கும் வேலைகளே ஒரு வெகுஜன இதழில் அதுவரை நிகழாத சாதனை. 

சமூகத்துக்கும் படைப்புலகத்துக்கும் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கும் பல்வேறு செயல்பாடுகளையும் இயக்கங்களையும் இந்து தமிழின் அங்கமாக நாங்கள், முக்கியமாக சமஸ் தலைமையிலான நடுப்பக்க அணியினர் முன்னெடுத்திருக்கிறோம். 2014 பொதுத்தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் சமஸ் பயணித்து எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடருக்கு முன்னும் சரி அதற்குப் பிறகும் சரி அப்படியொன்று தமிழ் இதழியலில் வந்ததில்லை. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பயணித்து சமஸ் எழுதிய ‘கடல்’ தொடர் வெளியானபோதுதான் அப்படியொரு உலகம் இருக்கிறது என்ற பிரக்ஞையே சமவெளியில் உள்ள பலருக்கும் ஏற்பட்டது. மதுவுக்கு எதிராகவும், தமிழக நதிநீர் ஆதாரங்களை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், உள்ளாட்சிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியும் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய மூன்று தொடர்களும் முக்கியமானவை. அரசுப் பள்ளிகள் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ‘நம் கல்வி நம் உரிமை’ இயக்கத்தை முன்னெடுத்தோம். அதேபோல் சென்னை புத்தகக்காட்சிகளின்போது நடுப்பக்கங்களில் அளிக்கப்பட்ட முக்கியத்துவமே ஏனைய எல்லா ஊடகங்களும் அது நோக்கி வர வழிவகுத்தன. சென்னைப் பெருவெள்ளத்தால் பதிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்த சூழலில் ‘புத்தாண்டில் புத்தக இரவு’ இயக்கத்தைப் பதிப்பாளர்களுடன் இணைந்து முன்னெடுத்தோம். எழுத்தாளர்களுக்கு நிதி திரட்டும்போதெல்லாம் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கமும் அந்த முயற்சிகளோடு கைகோத்துக்கொண்டு அறிவிக்கப்படாத மீடியா பார்ட்னராக இருந்துவந்திருக்கிறது. இப்படி எவ்வளவோ விஷயங்கள்.

பிரிட்டனின் ‘த கார்டியன்’, அமெரிக்காவின் ‘த நியூயார்க் டைம்ஸ்’ என்று தொடங்கி ஆப்பிரிக்காவின், மத்திய கிழக்கு நாடுகளின், லத்தீன் அமெரிக்க நாடுகளின் பத்திரிகைகளை உள்ளடக்கி பாகிஸ்தானின் ‘டான்’, ‘தி இந்து’ ஆங்கிலம் வரை பல்வேறு உலக-இந்தியப் பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகள், பேட்டிகள், படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறோம். மூத்த சகா சாரி, நான், வெ.சந்திரமோகன், செல்வ புவியரசன் உள்ளிட்டோர் நடுப்பக்கத்துக்காக செய்திருக்கும் மொழிபெயர்ப்புகள் சில ஆயிரங்களைத் தாண்டும். நடுப்பக்கத்துக்காக காந்தி, நேரு, அம்பேத்கர் தொடங்கி சார்லி சாப்ளின், நெல்சன் மண்டேலா, வி.பி.சிங் வரையிலானவர்களின் உரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோய் ஜிஜெக், டேவிட் ஷுல்மன், வால்ட்டர் ஐஸக்ஸன், டேவிட் அட்டன்பரோ, தாமஸ் எல். ஃப்ரீட்மன், வரலாற்றறிஞர் சஞ்சய் சுப்பிரமணியம், கோபால்கிருஷ்ண காந்தி, யானிஸ் வருஃபாக்கீஸ், டேவிட் பொடனிஸ், ஈராக் போரில் அமெரிக்காவின் பங்கை அம்பலப்படுத்திய செல்சியா மேனிங், யுவால் நோவா ஹராரி, இர்ஃபான் ஹபீப், அய்ஜாஸ் அகமது, ராமச்சந்திர குஹா, ருட்கர் பிரெக்மென், அமர்த்தியா சென், ஜீன் த்ரஸே, ஷிவ் விஸ்வநாதன்  என்று பல உலக எழுத்தாளர்கள், இந்திய எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகள் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். 

கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். எண்ணற்ற கட்டுரைகளை எழுதினேன் என்றாலும், ‘என்றும் காந்தி’ தொடரை எழுதியதும், காந்தியின் 150 ஆண்டில் அது நூலாக வெளிவந்ததும் என்றும் நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள். இணைப்பிதழில் ‘மொழியின் பெயர் பெண்’ என்று ஒரு தொடரை எழுதினேன். இடையில் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ-பாதை புதிது’ தொடரையும், காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ தொடரையும் எழுதினேன்.

**

பல்வேறு கருத்துகளுக்குக் களமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கம் இருந்தாலும் நம்முடைய முதன்மை நோக்கம் மக்கள் நலன்தான். மக்களா, அதிகார வர்க்கமா என்ற கேள்வி எழும்போதெல்லாம் நடுப்பக்கம் மக்கள் பக்கமே நின்றிருக்கிறது. ஜல்லிக்கட்டு, பணமதிப்பு நீக்கம், பெருமாள் முருகன் பிரச்சினை உள்ளிட்ட கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல்கள், மீத்தேன் பிரச்சினை, சிறுபான்மையினர் - பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள், ஆணவக் கொலைகள் இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று உறுதிபடப் பேசியது.

பலருக்கும் பல விஷயங்கள் மறந்துவிடும் என்பதால் இதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 2017-ல் இஸ்லாமியச் சிறுவன் ஜுனைத் டெல்லி – மதுரா ரயிலில் அடித்துக் கொல்லப்பட்டான். அதற்குச் சொல்லப்பட்ட காரணம்: ‘அவன் மாட்டிறைச்சி சாப்பிட்டான்’ என்பது. மனசாட்சியும் ஈரமும் இந்தியப் பன்மைப் பண்பாட்டின் மீது பிடிப்பு உள்ளோரை உலுக்கிய சம்பவம் இது. அப்போது ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணி ஒரு முடிவெடுத்தது. இந்தப் படுகொலைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்துபவர்களை இனி ‘பசு குண்டர்கள்’ என்று குறிப்பிடுவது என்பதே அது (அப்போது எல்லா ஊடகங்களும் ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்று எழுதிக்கொண்டிருந்தன. இதைத் தலையங்கத்திலேயே காட்டமாக எழுதினோம். https://www.hindutamil.in/news/opinion/editorial/200206-.html இப்படிப் பல சொற்களை அது உறுதியாகக் கையாண்டது.

ஒரு வாசகனாகவும்கூட எனக்குத் தெரிய கூட்டாட்சிக்கும், சமூகநீதிக்கும் இவ்வளவு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்த வெகுஜன இதழ் ஒன்று கிடையாது. இளம் தலைமுறையினரை அரசியல்மயப்படுத்துவதை வெளிப்படையாகவே செய்தன நடுப்பக்கங்கள். நடுப்பக்கங்களின் பார்வைக்கு அடித்தளமாக இருந்தவர் காந்தி என்றால், அதற்கு மேலும் உரம்சேர்த்தவர்களாக பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றவர்கள் இருந்தார்கள்.

இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞரைப் பற்றிய நூலான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, அண்ணா பற்றிய நூலான ‘மாபெரும் தமிழ்க் கனவு. திராவிட இயக்கத்துக்குச் செய்யப்பட்ட மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று இது; ஆனால், இந்த இரு நூல்களுமே திமுக ஆட்சியில் இல்லாத சமயத்தில் கொண்டுவரப்பட்டவை.

முந்தைய தலைமுறை நவீனத் தமிழ் இலக்கியத்தால் நான் வளர்ந்தேன் என்றாலும், கிட்டத்தட்ட அரசியல் நீக்கமும் செய்யப்பட்டிருந்தேன். என்னை அரசியல்மயப்படுத்தியது காந்தியும் ‘இந்து தமிழ்’ நாளிதழும் சமஸும்தான். எல்லாக் கருத்துகளுக்கும் இடம் அளிப்பார் என்றாலும், ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சி போன்ற விஷயங்களில் துளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் சமஸ். என்றேனும் எங்களை அறியாமல் அத்தகு விஷயங்களில் பிசகு ஏற்பட்டுவிட்டாலும் சமஸ் கொதித்துப்போய்விடுவார். கடுமையாகத் திட்டுவார். கூட்டாட்சியை ஒரு கதையாடலாக மீண்டும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்கு அவருக்கும் நடுப்பக்கங்களுக்கும் உண்டு.

அரசியல்மயப்படுவது என்பது ஒரு கட்சியில் சேருவதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதோ அல்ல. மக்களை, அவர்களின் பிரச்சினைகளை அவர்களின் தரப்பிலிருந்து புரிந்துகொள்ள முயல்வதுதான் அரசியல்மயப்படுவது என்று கருதுகிறேன். அந்த வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் கிடைத்தது வாழ்நாள் முழுவதற்குமான மகத்தான கல்வி. 

***

எனது நடுப்பக்க சகாக்கள் சாரி சார், சிவசு சார், சந்திரமோகன், செல்வ புவியரசன், கே.கே.மகேஷ், த.ராஜன், ச.கோபாலகிருஷ்ணன், சண்முகம் ஆகியோருடன் அருகருகே இருந்து பணிபுரிந்ததில் கிடைத்த இதமும் அன்பும் அறிவும் அதிகம். எங்களுக்கிடையே எவ்வளவோ நெகிழ்வான தருணங்கள் உண்டு. குடும்பத்தினர் போலவோ கல்லூரித் தோழர்கள் போலவோதான் பழகியிருக்கிறோம். அவர்களுக்கு நன்றியும் அன்பும்! 

முக்கியமாக, தன்னைவிட முப்பது வயது இளையவர்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து நேராக அவர்கள் இருக்கைக்குச் சென்று பாராட்டும் சாரி என்ற வ.ரங்காச்சாரி அவர்களின் பணிவுக்கும் பெருந்தன்மைக்கும் முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். நாமெல்லாம் எத்தனை பேரை பாராட்டியிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு உண்டாகும். எவ்வளவு பெரிய சீனியர் அவர்! ஆனால், துளி ஈகோ இல்லாத மனிதர்! இடையில் கொஞ்ச காலம் இதழ் பிரிவில் இருந்தபோதும்கூட “ஆசை ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை அனுப்பியிருக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்களேன்” எங்கள் அறையை எட்டிப்பார்த்து கூறுவார். இப்படி அவர் கூறும்போது சத்தமாகவே கூறுவார் என்பதால், அருகில் உள்ள அனைவரும் அவரை வியந்து பார்ப்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் அவர் பிரதியில் தவறுகள் எதுவும் இருக்காது; ஆனாலும் துல்லியத்துக்கான மெனக்கெடல்; வயது பாராத மரியாதை. தினமும் ரயிலை விட்டு இறங்கிவரும்போது மிக்சர், கடலை மிட்டாய் என்று வாங்கிக்கொண்டு எங்கள் அணியில் உள்ள தின்பண்ட டப்பாக்களை வழிய விட்டுக்கொண்டிருப்பார். எனக்கு என்னுடைய அப்பாவை தினமும் நினைவுபடுத்தியவர் அவர். நான் அவரிடமிருந்து கற்ற விஷயங்கள் ஏராளம்.

என்னுடைய படைப்பிலக்கியப் போக்கு, பார்வைகள் சார்ந்து முக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதற்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் காரணமாக இருந்தது. கவிஞரும் சகாவுமாக இருந்த ஷங்கரும் அதற்கு ஒரு காரணம். என் கவிதைகள் குறித்த சுயவிமர்சனத்தை நான் செய்துகொள்ளவும், ஒரு நெடிய தடையை உடைத்துக்கொண்டு மீண்டும் எழுத உத்வேகமாகவும் அவர் இருந்திருக்கிறார். நாங்கள் முட்டிக்கொண்ட தருணங்கள்தான் அதிகம். அவற்றையெல்லாம் தாண்டி என்னை செழுமைப்படுத்திக்கொள்வதற்கு ஷங்கரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றியும் அன்பும். கூடவே, இலக்கியம் அரசியல் பேச வேண்டும் என்றும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குள் இருக்கும் படைப்பாளியின்மீது தாக்கம் செலுத்த வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியவர் சமஸ்.

அலுவலகத்தில் பக்கத்துப் பக்கத்து இருக்கை, பிறகு ஒரே தளத்தில் வீடுகள் என்று நெருங்கியவர் நண்பர் டி.எல்.சஞ்சீவிகுமார். வாழ்க்கையின் பல தருணங்களில் அவ்வளவு ஆதரவாகவும் அன்பாகவும் இருந்திருப்பவர், இருந்துவருபவர். அவரிடம் சண்டை போட்டவர்களுக்குக்கூட உதவிக்கு முதல் ஆளாக ஓடிப்போய் நிற்பவர். என் மீது எப்போதும் வாஞ்சை கொண்டிருப்பவர் ‘இந்து தமிழ்’ இணையதளத்தின் ஆசிரியர் பாரதி தமிழன். பல சமயங்களில் ஆபத்பாந்தவனாக அலுவலகத்தில் பலருக்கும் ஓடிச் சென்று உதவுபவர். என் எழுத்துகள், பணி இவற்றையெல்லாம் தாண்டியும் எனக்கு உதவுபவர்கள் இவர்கள். இருவருக்கும் என் அன்பும் நன்றியும்.

நிறையப் பேரைச் சொல்ல வேண்டும் என்றாலும், பட்டியல் நீண்டுவிடும் என்பதால், வேகமாகக் கடக்கிறேன். இவர்களிடமெல்லாம் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன். பல தருணங்களில் பல வகைகளிலும் உதவியும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட என் மேல் அன்பு செலுத்தியிருக்கிறார்கள். அரவிந்தன், கவிதா முரளிதரன், மானா பாஸ்கரன், நீதிராஜன், பிருந்தா, வள்ளியப்பன், களந்தை பீர்முகம்மது, ஜெயந்தன், ராம்குமார், செல்லப்பா, இசக்கிமுத்து, பாரதி ஆனந்த், சுசித்ரா, கே.கே.மகேஷ், சுவாமிநாதன்… என்று பத்திரிகையோடு தொடர்புடைய இணையதளப் பிரிவு தொடங்கி பதிப்பகம் வரையில் ஒவ்வொரு பிரிவிலும் பல சகாக்கள் நினைவில் வந்து செல்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.

***

வெகுஜனப் பத்திரிகையொன்றில் பணியாற்றுவது என்பது கண்ணுக்குப் புலப்படாத பல எல்லைகளுக்குள் இயங்குவது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் அழுத்தங்கள் ஒருபோதும் புரியாது. விடுபடல்கள், போதாமைகள் இருந்தாலும், எங்களால் முயன்ற அளவுக்கு முயன்றிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

இரண்டு நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். 2015-ல் தோழர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் தருணத்தில் அவரை அலுவல் நிமித்தம் நானும் தோழர் நீதிராஜனும் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது, தோழர் தொல்.திருமாவளவனும் அங்கே இருந்தார். நல்லகண்ணு அவர்கள் எம்மை அறிமுகப்படுத்தியபோது திருமாவளவன் அவர்கள் சொன்னார், “நேற்றுகூட உங்களைப் பற்றி நல்லகண்ணு ஐயா சொன்னார்!” நான் ஆச்சரியத்தோடு பார்த்தபோது, நல்லக்கண்ணு அவர்கள் தொடர்ந்து என்னுடைய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளைப் படித்துவருவதைச் சொன்னார். இன்னொரு நிகழ்வு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு ஆட்டோவில் நானும் நண்பர்களும் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது காந்தியைப் பற்றிப் பேச்சு வந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை ஆட்டோக்காரர் கவனித்துவந்திருக்கிறார். “தமிழ் இந்துல ஆசைன்னு ஒருத்தர் காந்தி பத்தி நல்லா எழுதுறார் சார். நான் தொடர்ந்து படிக்கிறேன்” என்றார்.  

பத்திரிகை துறையின் வீச்சு என்ன என்பதை எனக்கு உணர்த்திய இரு தருணங்கள். நானும் சில பணிகளைச் செய்திருக்கிறேன் என்ற உணர்வைத் தந்த இரு தருணங்கள்.

என் இதழியல் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் பலரும் வழங்கியிருக்கிறார்கள். மறைந்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுள் முதன்மையானவர். எஸ்.வி.ராஜதுரை, இரா.ஜவஹர் தொடங்கி ஜி.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.குப்புசாமி வரை எவ்வளவோ பேர் உத்வேகம் அளித்திருக்கிறார்கள். 

மனிதநேயம்,மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், நேரு, அண்ணா உள்ளிட்ட முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களை உடன் இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். எழுதுவதற்கான வாய்ப்பு, மிகப் பெரிய தளத்தில் மக்களைச் சென்றடையலாம், பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வந்த எனக்கு இதழியல் என்பது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய மாபெரும் சமூகக் கடமை என்பதையும் சேர்த்து சொல்லித்தந்தவர் அவர்… சமஸுக்கு நன்றி! 

நாங்கள் இவ்வளவையும் செய்வதற்கான சுதந்திரத்தையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்தவர் ஆசிரியர் அசோகன். என் வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் அவர் அளித்த அனுசரணையை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், நிர்மலா லெட்சுமண் உள்ளிட்ட ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர்கள் பலரும் எங்களின் செயல்பாடுகளுக்குப் பல தருணங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி!

என்னுடைய சகாக்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் மீண்டும் மிக்க நன்றியும் அன்பும். 

இப்போது விடைபெறுகிறேன். அடுத்தகட்ட பணிகளை விரைவில் அறிவிக்கிறேன்!

அன்புடன்

ஆசை






Friday, February 18, 2022

பேபல் நூலகத்தின் படிக்கட்டுகள் வழியே… ('இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ நூலுக்கு நான் எழுதிய என்னுரை)

 


ஆசை

1.

திரும்பிப் பார்க்கும் தருணம் இது! திரும்பிப் பார்க்க வேண்டிய அளவுக்கு வயதாகிவிடவில்லையென்றாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்படிச் செய்வது நம்மைச் செழுமைப்படுத்திக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன். 

மிகச் சமீபத்தில்தான் யோசித்துப் பார்த்தேன், எத்தனை ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதுகிறோம் என்று. மன்னார்குடி அரசுக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு (2001-ல்) படிக்கும்போது நண்பரின் ஆசிரியத்துவத்தில் அவருடன் இணைந்து கொண்டுவந்த ‘இந்தியன் இனி’ மாத இதழில் எழுதிய கட்டுரைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடந்த 21 ஆண்டுகளாக நான் இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகிறேன். என்னளவில் இது மலைப்பையே தருகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்கு சமீப காலம் வரை இல்லை. ’இந்தியன் இனி’ இதழுக்கும் முன்பு 10-ம் வகுப்பு படிக்கும்போது மன்னார்குடியின் மாதாக்கோவில் தெரு நண்பர்களோடு இணைந்து கொண்டுவர முயற்சி மேற்கொண்டு தோல்வியடைந்த ‘நதி’ என்ற பத்திரிகையும் என் இலக்கியச் செயல்பாடுகளுக்கு ஒரு முன்னோட்டம் என்று கொள்ளலாம். 

ஆனால், வாசிப்புதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம். சிறுவர் இலக்கியம், க்ரைம் நாவல்கள், சரித்திர நாவல்கள் என்று பெரும்பாலானோரைப் போலவே என் வாசிப்புப் படிக்கட்டு அமைந்திருந்தது. 10, 11-ம் வகுப்புகள் படித்த காலகட்டத்தில் சுஜாதாவின் கட்டுரைகள், குறிப்பாக ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ நூல், எனக்குப் பெரும் திறப்பைத் தந்தன. ஏற்கெனவே, அண்ணன் மூலம் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் அறிமுகமாகியிருந்தாலும் சுஜாதாவின் மூலம்தான் புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல பெயர்களையும் கேள்விப்படுகிறேன். தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பெரும் பரப்பை எனக்குக் காட்டிவிட்டதற்காக சுஜாதாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அடுத்து வந்த சில ஆண்டுகள் அதிகம் மரபுக் கவிதைகள்தான். பாரதியும் பாரதிதாசனும் அப்போது எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். பாரதியின் தாக்கம் இன்று வரை எனக்குள் தொடர்கிறது. கட்டுரைகளைப் பொறுத்தவரை சுஜாதாதான் ஆரம்பப் புள்ளி. இளங்கலைப் படிப்பின்போது நான் படித்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலும் ‘விரிவும் ஆழமும் தேடி’ கட்டுரைத் தொகுப்பும் என்னை அப்படியே புரட்டிப் போட்டன. அதுவரையிலான என் ரசனை, மதிப்பீடுகள் போன்றவற்றை மாற்றியமைத்தது சுந்தர ராமசாமிதான். ‘விரிவும் ஆழமும் தேடி’ கட்டுரைத் தொகுப்பில் நான் கண்டெடுத்த ‘மறுபரிசீலனை’ என்ற சொல் அப்போதைக்கு ஒரு மந்திரச் சொல்லாக எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. அரசியல், திரைப்படம், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் நான் கொண்டிருந்த மதிப்பீடுகளும் ரசனையும் மாற ஆரம்பித்தன. நான் செய்த மறுபரிசீலனைகளால் நிறைய நல்ல விளைவுகளும் சில தீய விளைவுகளும் ஏற்பட்டன. சிறு வயதிலிருந்து திராவிட இயக்கத்தில் ஊறியிருந்த எனக்கு, கார்கில் போர் காலகட்டத்தில் சற்றே பாஜக சாய்வு ஏற்பட்டது. ஆனால், அங்கே நான் விழுந்துவிடாமல் என்னைக் காப்பாற்றியது இலக்கியம். அது நல்ல விளைவு. அதே நேரத்தில் என்னை முற்றிலும் அரசியலற்றவனாகவும் நவீன இலக்கியம் ஆக்கிவிட்டது. இது குறித்து, கருணாநிதிக்கு நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருப்பேன்: “கட்சியின் மீது தொடர்ந்து வெறுப்புணர்வை அவன் வளர்த்துக்கொண்டான். முழுக்க முழுக்க இலக்கியத்தை நோக்கி அவன் நகர்ந்ததும் இதற்குக் காரணம். அவன் படித்த நவீன இலக்கியங்கள் அவனை அரசியலற்றவனாக மாற்றிவிட்டதை சமீபத்தில்தான் அவன் உணர்ந்தான். ஆரம்ப காலத்தில் அந்த இலக்கியங்கள்தான் திராவிட இயக்கத்தின் மீது ‘புனிதமான’ கேள்விகளைக் கேட்கவைத்து அந்த இயக்கத்திலிருந்து அவனை விலக வைத்தன.”

கல்லூரியில் படிக்கும்போதே சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ பாதிப்பிலிருந்து விலகிவிட்டேன். என் தனிப்பட்ட ரசனையின் விளைவு இது. நான் அதிகம் கவிதையிலேயே கவனம் செலுத்தினேன். அதன் பிறகு மறுபடியும் நண்பர்களும் நானும் சேர்ந்து 2010-ல் தொடங்கிய ’தமிழ் இன்று’ இணைய இதழ் எனக்குக் கட்டுரைகள் எழுதுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. சிற்றிதழ்கள் பலவும் இருந்தாலும் யாரோடும், எந்த இலக்கிய அரசியலோடும் என்னை இணைத்துக்கொள்ளாமலேயே இருந்தேன், இருக்கிறேன். இதிலும் நல்ல விளைவுகள், தீய விளைவுகள் இரண்டுமே இருக்கின்றன. ‘அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள், பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் போலத்தான் இலக்கிய உலகிலும் இருக்கும்; அதற்காக இலக்கிய உலகத்தையே புறக்கணிக்க வேண்டியதில்லை’ என்ற தெளிவு மிகவும் தாமதமாகவே எனக்கு வந்தது. மேலும், நான் அடிப்படையில் புதியவர்களுடன் பழகுவதில் தயக்கமும் கூச்சமும் கொண்டவன். நானொரு அகவுலகவாசி. மன்னார்குடியில் உள்ள எங்கள் வீட்டில் என்னுடைய அறைக்குள்ளேயே என்னை நானே புதைத்துக்கொண்டு புத்தகங்கள், இளையராஜா என்று மூழ்கிவிடுவேன். சென்னை வந்த பிறகும் அதிக பேருடன் நான் பழகவில்லை. ஆகவே, எந்தக் குழுவுடனும் நான் என்னை இணைத்துக்கொள்ளவில்லை.

சுஜாதா, சுந்தர ராமசாமிக்கு அடுத்தபடியாக என் இலக்கிய பார்வையை விரிவுபடுத்தியவர்கள் க்ரியா ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும். இவர்களுடைய பார்வைகளை நான் வரிந்துகொண்டதும் உரிய நேரத்தில், அல்லது சற்று தாமதமாக, அவற்றிலிருந்து விடுபட்டு, எவ்வளவு எளிமையானதென்றாலும் எனக்கென்று ஒரு பார்வையை உருவாக்கிக்கொண்டதும் காலப் போக்கில் நிகழ்ந்தது. அது எவ்வளவு அவசியமானது என்று இப்போது புரிகிறது. 

2013-ல் ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்டபோது அதன் நடுப்பக்க அணியில் இணைந்துகொண்டேன். இலக்கியம், சமூகம், சுற்றுச்சூழல், அறிவியல், மொழி, திரைப்படம், சிறார் இலக்கியம் என்று பல்வேறு வகைமைகளில் எழுதவும் மொழிபெயர்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இன்றுவரை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது சிறிய உலகம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் நான் சேர்ந்த பிறகு விரிய ஆரம்பித்தது. எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று பலரின் உறவும் கிடைத்தது. அச்சுப் பதிப்பு மட்டுமல்லாமல் இணையத்திலும் நாளிதழ் வெளிவருவதால் தினமும் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானவர்களிடம் என் எழுத்து சேர்வதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் எனக்கு ஏற்பட்டது.


2.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுள் கணிசமானவை நூல் மதிப்புரைகள். இவற்றை மேலோட்டமாகப் பார்ப்பவர்களால் கூட உணர்ந்துகொள்ள முடியும், இயன்ற அளவுக்குப் பல எழுத்தாளர்கள், பல பதிப்பகங்களை இந்தக் கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன என்று. எனினும் விடுபாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நானும் உணர்கிறேன். முன்னோடி எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், 2000-க்குப் பின் எழுத வந்தவர்கள், பெண் எழுத்தாளர்கள் என்று இன்னும் நிறைய ஆளுமைகளைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. (கிடைத்த சந்தர்ப்பங்களில் இவர்களில் பலரது படைப்புலகத்துக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழில் அணியாக மரியாதை செலுத்தியிருக்கிறோம் என்பது நினைவில் கொள்ளத் தக்கது). இவர்களைப் பற்றி நான் எழுதுவது நான் ஏதோ இவர்களுக்குச் செய்யும் உபகாரம் என்று அர்த்தமாகாது. இவர்களைப் படித்து எழுதுவதன் மூலம் எனது எழுத்தின் ஆழத்தையும் படைப்புச் சிந்தனையையும் விரிவுபடுத்திக்கொள்கிறேன் என்பதே முதலும் முடிவுமான நோக்கம். இந்த நூல் ஒரு தொடக்கம்தான். 

நான் ஆங்கில இலக்கிய மாணவன் என்பதால் அதன் வழியாகவும், சிற்றிதழ் உலகம் மூலமாகவும், தனிப்பட்ட வாசிப்பின் மூலமாகவும் எவ்வளவோ இலக்கியக் கோட்பாடுகள் என்னை வந்தடைந்திருக்கின்றன. அவையெல்லாம் சேர்ந்து என் இலக்கியப் பார்வையில் குறிப்பிட்ட அளவு தாக்கம் செலுத்தியிருக்கின்றன. கூடவே, குவாண்டம் இயற்பியல் மீதான எனது நாட்டத்தை எனது அறிவியல் கட்டுரைகளில் மட்டுமல்லாமல் எனது இலக்கியக் கட்டுரைகளிலும் காண முடியும். இலக்கியமும் குவாண்டம் இயற்பியலும் அடிப்படையில் மெய்ம்மையைப் பார்க்கும் பார்வைகள்தானே? அதனால் இரண்டுக்கும் இடையே வியக்கத்தக்க ஒற்றுமைகளை என்னால் உணர முடிகிறது. முக்கியமாக, புறவயமான (objective) பார்வை ஒன்று கிடையவே கிடையாது, எல்லாமே அகவயம் (subjective) சார்ந்ததுதான் என்பது குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படைகளுள் ஒன்று. இதை இலக்கியத்துடனும் பொருத்திப்பார்க்க முடியும். கூடவே, காலம், வெளி குறித்து குவாண்டம் கோட்பாடு, சார்பியல் கோட்பாடு போன்றவை கூறியவற்றில் பலவும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளில் அவர்களையும் அறியாமலேயே இழையோடுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. கோட்பாடுகள் எனக்கு உதவியிருந்தாலும் நான் கோட்பாட்டு விமர்சகன் அல்ல. என்னுடைய இலக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, ஒரு படைப்பில் நான் என்னவெல்லாம் கண்டடைந்திருக்கிறேன், எதுவெல்லாம் என் கற்பனையைக் கிளறுகிறது என்பதை நானே கண்டுபிடிப்பதற்காகவே பெரிதும் விமர்சனங்கள் எழுதுகிறேன். 

நான் இலக்கிய உலகுக்குக் கடன்பட்டிருப்பவன். ஆகவே, அந்த உலகுக்கு என்னால் ஆன மரியாதைதான் இந்தக் கட்டுரைகள். ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதுவதாலேயே, அதுவும் வெகுசனப் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு மதிப்புரை எழுதுவதாலேயே ஒரு நூலின் ஆசிரியருக்கு மேல் தன்னை வைத்துக்கொண்டுவிடலாகாது என்ற பிரக்ஞை எனக்கு எப்போதும் உண்டு. 

வெகுசன இதழில் எழுதும்போது கூடுமான வரை கடுமையான விமர்சனங்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், மொழிபெயர்ப்புகள் வெள்ளம்போல் பாய்ந்துவரும் சூழலில் அக்கறையின்றி எப்படி அவை செய்யப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட இரண்டு முறை மட்டும் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறேன். அதற்காக நான் மிக மோசமாக அவதூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டதும் நடந்தது. இதையெல்லாம் தாண்டி, எவ்வளவோ எழுத்தாளர்களும் வாசகர்களும் என்மீது அன்பு செலுத்தியிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


3.

என்னுடைய 21 ஆண்டுகால இலக்கியம், கலை விமர்சனக் கட்டுரைகளை மட்டும் கணக்கிலெடுத்துப் பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கிடைத்தன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் இந்தக் கட்டுரைகள். இலக்கியம், அறிவியல், மொழி என்று பல்வேறு வகைமைகளில் நான் கட்டுரைகள் எழுதியிருப்பதை இந்தப் புத்தகத்தை வேகமாகப் புரட்டினால் கண்டுகொள்ள முடியும். இலக்கியத்தைத் தாண்டியும் உலகம் இருக்கிறது, புனைவுகள், கவிதைகளைத் தாண்டியும் புத்தகங்கள் இருக்கின்றன என்று க்ரியா ராமகிருஷ்ணன் என் பார்வையை விரிவாக்கியதுதான் இதற்கு அடிப்படை.

இந்தத் தொகுப்புக்கான செம்மையாக்கம் செய்யும்போது நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறேன். கட்டுரைகளின் அடிப்படையில் கைவைக்கவில்லை என்றாலும் தேவையான திருத்தங்களைச் செய்திருக்கிறேன். சில தலைப்புகளையும் மாற்றியிருக்கிறேன். கட்டுரைகளை அவை வெளியான கால வரிசையில் இல்லாமல் புனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பகுப்புகளின் அடிப்படையில் கொடுத்திருக்கிறேன். பிற மொழிப் பெயர்களை அந்தந்த மொழியில் எப்படி உச்சரிக்கிறார்களோ அப்படியே கொடுப்பதற்குக் கூடுமானவரை முயன்றிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, Nikos Kazantzakis-ன் பெயரைத் தமிழில் நிக்கோஸ் கசன்ஸாகீஸ் என்று எழுதுவதே வழக்கம். ஆனால், அவருடைய மொழியான கிரேக்கத்தில் நீக்கோஸ் காஸான்ட்ஸாகீஸ் என்றே அவர் அழைக்கப்படுகிறார். நான் அதையே பின்பற்றியிருக்கிறேன். 

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் விரிவாக எழுதப்பட்டு அவற்றின் சுருக்கமான வடிவங்கள் மட்டுமே அச்சுப் பதிப்பில் வெளியாயின. ஆகவே, இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் விரிவான வடிவங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. தகுந்த இடங்களில் எந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன என்ற குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.


4.

இந்தக் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸின் ‘பேபல்  நூலகம்’ (த லைப்ரரி ஆஃப் பேபல்) என்ற சிறுகதையின் தொடக்க வரியிலிருந்து தழுவிக்கொள்ளப்பட்டது. போர்ஹெஸுக்கு நன்றி!

சிந்தனையானது ஆழமாகவும் கூர்மையாகவும் வெளிப்பட மொழி மிகவும் முக்கியம் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்த க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எப்போதும் நன்றி! ஒட்டுமொத்தத் தொகுப்பையும் படித்துவிட்டு, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கூறியவர் என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமன். ஆங்கில இலக்கிய-விமர்சன மரபு பற்றிய ஆழமான அறிவு கொண்ட அவர் இந்தத் தொகுப்புக்கு வழங்கியிருக்கும் மதிப்புரையை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். அவர் எழுதியதற்கு ஏற்றவாறு என்னைச் செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்க. ஜெயராமனுக்கு என் நன்றி!

இந்தக் கட்டுரைகளை அவை எழுதப்பட்ட காலத்திலேயே, வெளியாகும் முன்பே படித்துவிட்டு அவற்றைச் செம்மையாக்குவதற்கும் கூர்மையாக்குவதற்கும் நண்பர் சமஸ் கூறிய யோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன. அவருக்கு நன்றி!  வெகுசன இதழில் தீவிர இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதற்கு முழுச் சுதந்திரம் அளித்து என்னுடைய பல கட்டுரைகளைப் பாராட்டியிருக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகனுக்கு நன்றி! உடனுக்குடன் படித்துவிட்டுக் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறிய கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன், செல்வ புவியரசன், த. ராஜன் உள்ளிட்ட சகாக்களுக்கும் நன்றி! மூத்த சகாக்கள் சாரி, சிவசு ஆகியோருக்கும் நன்றி! 

சாரு நிவேதிதாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் என் வலைப்பூவில் உள்ள கட்டுரைகளைத்  தங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி எழுதியது விரிவான இலக்கிய வாசகப்  பரப்புக்கு என்னைக் கொண்டுசென்றது. அவர்களுக்கு என் நன்றி!  

பல முறை என் கட்டுரைகளைப் படித்துவிட்டுக் கூர்மையான கருத்துகளை வழங்கியிருக்கும் பா.வெங்கடேசனுக்கும் சீனிவாச ராமாநுஜத்துக்கும் நன்றி!

இந்தக் கட்டுரைத் தொகுப்பை சிரத்தையுடன் படித்துத் தங்கள் விரிவான கருத்துகளையும் கூர்மையான விமர்சனத்தையும் வழங்கியவர்கள் தூயன், முகம்மது ரியாஸ், ராஸ்மி. அவர்களுக்கு மிக்க நன்றி!

நண்பர்கள் கார்த்தி, செந்தமிழுக்கு என் அன்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பனுக்கு நன்றி! பொருத்தமான அட்டைப் படத்தை வடிவமைத்துத் தந்த ஓவியர் மணிவண்ணனுக்கும் நன்றி!

மேலும், இந்தக் கட்டுரைகள் வெளியானபோது படித்துவிட்டுப் பாராட்டிய, குறைகளைச் சுட்டிக்காட்டிய எழுத்தாளர்களுக்கும், தொடர்ந்து ஊக்கம் தரும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

எனது ஒவ்வொரு புத்தகமும் எனக்குக் கொஞ்சமாவது மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்று ஆசைப்படும் என் மனைவி சிந்துக்கு இந்த நூல் மேலும் கொஞ்சம் ஆசுவாசம் தரும் என்று நம்புகிறேன்.

மகன்கள் மகிழ் ஆதனுக்கும் நீரனுக்கும் அன்பு முத்தங்கள்.

நூல் விவரங்கள்:

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
(இலக்கியக் கட்டுரைகள்)
ஆசை
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.330
தொடர்புக்கு: 99404 46650

Wednesday, December 1, 2021

சிறுகதை - கொண்டலாத்தியைப் பார்க்காமல் அப்பா சாகக் கூடாது

 


ஆசை

பனி பெய்யும் காலைப் பொழுதுக்கு இதமாகக் கையில் காப்பிக் கோப்பையையும் நாளிதழையும் எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். அங்கிருந்த படி, திண்ணையின் கொசுக்கதவு வழியாக வாசலைப் பார்த்தேன். வாசலில் சில மீட்டர்களைத் தாண்டி எல்லாமே மங்கலாகிவிடும் அளவுக்குப்  பனி பெய்துகொண்டிருந்தது. உண்மையில் பெய்வதைப் போலத் தெரியவில்லை. அது ஆவியாகத் தரையிலிருந்து அந்தரம் வரை நிறைந்திருந்ததைப் போலத் தெரிந்தது. அந்தத் திரைக்குள்ளிருந்து வந்து வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு பறவை. அது கொண்டலாத்தி. கறுப்பும் வெள்ளையுமான பட்டைகளுடன் கழுத்திலும் மார்பிலும் செம்பழுப்பு நிறம் கொண்டிருந்தது. தலையில் விசிறிக் கொண்டை. வாசலில் என்ன கிடக்கிறதென்று தெரியவில்லை, மும்முரமாகக் கொத்திக்கொண்டிருந்தது. எப்போதும் ஆள் இருந்தால் பறந்துசென்றுவிடும் கொண்டலாத்தி பத்தடி தூரத்துக்குள் நான் இருந்தும் பொருட்படுத்தாமல் அங்கே எதையோ கொத்திக்கொண்டிருந்தது. கொசுக்கதவின் ஊடே பார்க்கும்போது வலைபோன்ற கித்தானில் வரையப்பட்ட சித்திரம் போன்று இருந்தது. ஏற்கெனவே அழகு மிக்க கொண்டலாத்தி பனியினூடே இன்னும் பேரழகாகத் தெரிந்தது. கொண்டலாத்தியை அதுவரை நேரில் பார்த்திராத என் மகன் அவசியம் இதைப் பார்க்க வேண்டும் என்று நான் அவனை மெதுவான குரலில் அழைத்தேன். அப்போதுதான் எழுந்திருந்த அவன் சோம்பல்முறித்தபடியே வெளியே வந்தான். “சத்தம் போடாமல் அங்கே பார், கொண்டலாத்தி” என்று காட்டினேன். பார்த்துவிட்டு “வாவ், எவ்வளவு அழகா இருக்குப்பா. தம்பியை எழுப்புறேன்” என்றான். “அவனை எழுப்பாதே. தாத்தாவைக் கூப்பிட்டு வா. அவர் கொண்டலாத்தி பார்த்ததே இல்லை” என்றேன். என் அப்பாவை அழைக்க அவன் உள்ளே போனான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கைபேசி அழைப்பு என்னை எழுப்பியது. மணி காலை ஏழரை. இந்த நேரத்தில் கூப்பிடுகிறார்களே என்று எடுத்து பதினோரு மணிக்குக் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்தேன். கலைந்த தூக்கம் மீண்டும் வருவதுபோல் தெரியவில்லை. இப்போது கனவு எனக்கு நினைவுக்கு வந்தது. சரியாக அப்பாவைக்  கூப்பிடும் நேரத்தில் என் கனவு துண்டிக்கப்பட்டதை எண்ணி ஒரே நேரத்தில் கோபமும் வியப்பும் ஏற்பட்டது. அந்தக் கனவையும், அதன் குறுக்கீடலாய், அதுவும் மிகச் சரியாக அப்பாவை அழைக்கப்போவதற்கு முன்பு முந்திக்கொண்ட குறுக்கீடலாய் வந்த அந்தக் கைபேசி அழைப்பையும் பேரண்டத்தின் பிரம்மாண்டமான சதித் திட்டங்களில் ஒன்றாகவே பார்க்க முடிகிறது. சில விஷயங்களை நாம் எவ்வளவு முயன்றாலும் நாம் முயல்கிறோம் என்பதை அறிந்துகொண்டு அதைத் தெரிந்துகொள்ள முடியாதபடி பேரண்டம் ஏதாவதொரு வழியில் தடுத்துவிடும் என்று நான் இயற்பியல் புத்தகமொன்றில் படித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெய்யுலகில் இறந்துபோன என் அப்பா அந்தக் கனவில் உயிருடன் இருந்தாரா, அவரை என் மகன் அழைத்துக்கொண்டு வந்தானா, அவர் கொண்டலாத்தி பார்த்தாரா, அவர் கொண்டலாத்தியைப் பார்க்க வேண்டும் என்று நான் துடித்தது ஏன் என்பதைப் பற்றியெல்லாம் இனி ஒருபோதும் என்னால் அறிந்துகொள்ள முடியாது என்பது எனக்குள் மெலிதான ஏக்கத்தை ஏற்படுத்தியது. ‘தாத்தாதான் செத்துப்போய்விட்டாரே அப்பா?’ என்று சொல்லாமல் அவரை அழைக்க என் மகன் உள்ளே சென்றது ஏன்? ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சியொன்றில் திருடன் வெகு நேரமாகியும் வராததைக் கண்டு காவலர்கள் கதவைத் திறந்தால், கதவுக்கு அப்பால் வெட்டவெளி தெரிவதைப்போல என் மகன் உள்ளே செல்லும்போது கதவுக்கு அப்பால் வீடு இருப்பது போன்றில்லால் அந்தகார அத்துவானம் ஒன்று இருப்பதுபோல்தான் தெரிந்தது. 

அந்த வீடு நிஜத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான். சாத்தியங்களின் அத்துவானத்தில்தான் இருந்துகொண்டிருந்தது/ இருந்துகொண்டிருக்கிறது. கனவில் வந்த வீடு இருப்பது பாமணியாற்றங்கரையில், சாலையோரத்தில், சாலைக்கும் வாய்க்காலுக்கும் இடையில், புறம்போக்கில். ஆகவே, எப்போது இடிப்பார்கள், எப்போது ஆற்று வெள்ளம் வரும் என்ற நிச்சயங்கள் அற்ற வாழ்க்கை. என் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகள்அந்த வீட்டில்தான் கழிந்தன. ஆற்றங்கரை, வாய்க்கால் போன்றவற்றின் அருகாமை சிறு வயதில் அந்த வீட்டை எனக்குச் சொர்க்கமாக மாற்றினாலும் கழிப்பறை வசதியில்லாதது கல்லூரிப் பருவத்தில் அந்த வீட்டை வெறுக்க வைத்தது. வெறுப்புக்கு முக்கியக் காரணம் அக்காவோ அம்மாவோ நாங்களோ கழிப்பறை வசதியில்லாததால் ஆற்றங்கரைச் சரிவில் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய நிலையை எண்ணியல்ல; மழைக்காலங்களில் பிசுபிசுத்த ஆற்றங்கரைச் சரிவில் மலம்கழிக்க இடம் தேடி நாங்கள் அலையும் சிரமங்களால் அல்ல; எப்போதோ சென்னையிலிருந்து வீட்டுக்கு வரும் அண்ணன் இந்த அசௌகரியங்களால்  அப்பாவையும் அந்த வீட்டையும் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்ததால் அல்ல; கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டுக்கு ஒரே ஒரு முறை வந்த, நான் காதலிக்கும் பெண் ‘கழிப்பறை எங்கே இருக்கிறது’ என்று கேட்டபோது தயக்கத்துடன் கொல்லையில் வாய்க்காலுக்கு அருகில் உள்ள தட்டி மறைப்பைக் காட்டியபோதுதான் அந்த வீட்டை அவ்வளவு தீவிரத்துடன் வெறுக்க ஆரம்பித்தேன். அவள் நெற்றி சுருங்கி முகத்தில் ஒரு சுளிப்பு ஏற்பட்டபோது செத்துப்போய்விடலாமா என்னுமளவுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், முதல்முதலாக ஒரு தட்டிமறைப்புக்குப் பின்னால் அப்போதுதான் சிறுநீர் கழித்திருக்க வேண்டும். அவள் என்னை ஏற்காமல் போனதற்கு அந்த வீடுதான் முக்கியக் காரணம் என்று அந்த வீட்டின் மேலும் அதை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சமையற்காரரிடமிருந்து வாங்கியிருந்த அப்பா மீதும் ஆத்திரஆத்திரமாக வந்தது. அப்படி ஆத்திரம் வரும்போதெல்லாம் அப்பாவைத் திட்டித் தீர்த்தேன். அவர் பதிலுக்கு “நான் என்னத்தையப்பா கொண்டுவந்தன், மாளிக வீடு கட்டுறதுக்கு? என் அப்பன் கோவணம் அவுத்த நேரம், என்னால முடிஞ்சது இவ்வளவுதான்” என்று சில சமயம் அழுகையை அடக்கிக்கொண்டு குமுறியிருக்கிறார். 

அந்த வீட்டுக்குப் பட்டா வாங்குவதற்கு ஒரு பக்கம் அப்பா முயன்றுகொண்டிருந்தார் என்றால் ஏதாவது நடந்து அந்த வீடு தரைமட்டமாகிவிடாதா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அதில் கொஞ்சமும் நடந்தது. திண்ணைக்கு வெளியே சாலையை ஒட்டி அப்பா கட்டியிருந்த சுவரை, சாலை போடும்போது இடித்துவிட்டார்கள். வேளாண் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக அப்பா வேர்வை சிந்தி உழைத்துப் பெற்ற ஆறு மாத சம்பளம் தரைமட்டமாகப் போனது. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். பொதுப்பணித் துறை அசைந்துகொடுக்கவில்லை. அவரது கட்சியபிமானமும் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாததால் காப்பாற்றவில்லை. அவரது கண்களில் முன்சுவர் இடிந்துவிழுந்துகொண்டிருந்தது. அப்போது எனக்கு மகிழ்ச்சி அல்ல, குற்றவுணர்வுதான் ஏற்பட்டது. எனினும் முன்சுவர் இடிக்கப்பட்டதை முன்வைத்து அந்த வீட்டின் நிலையற்றதன்மையைச் சுட்டிக்காட்டி மீண்டும் சில நாட்களுக்குள் சண்டை பிடித்தேன். அவரும் வழக்கமான ஒப்பாரியையே வைத்தார். 

சென்னைக்கு வந்த பிறகு விடுதி, அண்ணன் வீடு, நண்பர்களுடன் பல்வேறு அறைகள், பின் திருமணம் ஆன பின் வாடகை வீடுகள், தற்போது சென்னை புறநகர்ப் பகுதியொன்றில் மனைவி பிள்ளைகளுடன் ஒரு சொந்த வீடு என்று அந்த வீடில்லாமல் ஒரு 21 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும், நான் எந்த வீட்டின் மேல் அவ்வளவு ஆங்காரம் காட்டினேனோ அந்த வீடுதான் அதை நீங்கிய 21 ஆண்டுகளில் என் கனவுகளில் திரும்பத் திரும்ப வந்தது. இந்த ஆண்டுகளில் நான் இருந்த வேறு எந்த வீடும் ஒரு முறைகூட என் கனவில் வந்ததில்லை. என்னைத் தண்டிப்பதற்கென்றே மூர்க்கத்துடன் அந்த வீடு இப்படிச் செய்வதைப் போல் இருந்தது. அந்த வீட்டுக்கு ஒருபோதும் சென்றிராத என் மனைவி, மகன்கள் வரும் கனவுகள்கூட அந்த வீட்டில்தான் நிகழ்ந்தன. இவ்வளவு ஏன் அந்த வீட்டைக் குறித்துத் தன் முகத்தில் அருவருப்பை வெளிப்படுத்திய என் காதலியும் கூட கனவுகளில் அந்த வீட்டில்தான் என்னைச் சந்தித்துக்கொண்டிருக்கிறாள். அந்தக் கனவுகளில் அவள் ஒருமுறைகூட கழிப்பறை எங்கே என்று கேட்டதில்லை. நானும், கனவுகளில் காதலிகளுக்குச் சிறுநீர் வருமா வராதா என்று யோசித்துப்பார்த்ததில்லை. நான் நிறைய தடவை கனவுகளில் சிறுநீர் கழித்திருக்கிறேன் என்பது வேறு விஷயம். 

அந்த வீட்டைத்தான் கொண்டலாத்தியும் தன் கனவுக்குத் தேர்ந்தெடுத்தது. பழைய ஏற்பாட்டில் அசுத்தமான பறவைகளில் ஒன்றாகக் கருதப்பட்டதும், குர் ஆனில் சாலமன் (சுலைமான்) மன்னனின் சிறப்புத் தூதுவராகக் கூறப்பட்டதும், பாரசிகப் சூஃபிக் கவிஞர் ஃபரீதுதூன் அத்தார் கி.பி. 1177-ல் எழுதிய ‘பறவைகளின் மாநாடு’ காவியத்தில் ‘உலகிலேயே ஞானமிக்க பறவை’ என்று குறிப்பிடப்பட்டதுமான கொண்டலாத்தி நான் வெறுத்த, அப்பா தன் முழுமூச்சுடன் காப்பாற்றப் போராடிய அந்த வீட்டைத்தான் என் கனவில் வருவதற்குத் தேர்ந்தெடுத்திருந்தது. அந்த வீட்டைப் போல, அப்பாவைப் போல, அதுவும் என்னைப் பழிவாங்க வந்திருக்குமோ என்று யோசித்துப் பார்க்கிறேன். அல்லது சாலமன் மன்னனின் தூதுவராக இருந்ததுபோல் தற்போது இறந்துபோன என் அப்பாவின் தூதுவராக அது ஏதேனும் செய்திசொல்ல வந்திருக்குமோ? நீ எங்கே வேண்டுமானாலும் அலைந்து திரி, ஆனால் என் இரை இங்கேதான் என்று எனக்கு உணர்த்துவதற்காக என் அப்பாதான் கொண்டலாத்தி வடிவில் வந்திருக்கிறாரோ?       

அந்தத் தொலைபேசி அழைப்பு மட்டும் வந்திராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எப்படி யோசித்தாலும் கனவின் செல்திசைகளின் பிடி கிடைக்கவில்லை. அந்தகாரத்துக்குள் சென்ற என் மகன் தன் தாத்தாவை அழைத்துவந்திருப்பானா, அல்லது சற்று தாமதமாக நினைவுவந்ததுபோல்  ‘தாத்தாதான் செத்துப்போய்விட்டாரே அப்பா’ என்று கடிந்துகொள்வானா, அல்லது திரும்பி வராமலே அதற்குள் மூழ்கிவிடுவானா?…  அய்யோ இந்த சாத்தியம் எனக்கு அச்சமூட்டுகிறதே. நான் ஏன் அவனை அந்த அந்தகாரத்துக்குள் அனுப்பினேன்? ஆனால் ஒன்று, அனுப்பிய பிறகுதான அது அந்தகாரம் என்று தெரியும். பாவம் அவன், கொண்டலாத்தி இருந்திருக்கக் கூடிய கொஞ்ச நேரத்தில் அதைப் பார்த்து ரசித்திருக்க அவனை நான் விட்டிருக்கலாம். ஆனால், நானோ அவனுடைய தாத்தாதான் இதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். 

அப்பா அழகுணர்வு, இங்கிதம், இயற்கை குறித்த நேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கரப்பான் பூச்சியைப்  பார்த்தால் இடக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு வலக்கையால் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆற்றங்கரை ஓரத்தில் இருப்பதால் எங்கள் வீட்டுக்கும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் அடிக்கடி நல்லபாம்புகள் வரும். அதற்காகவே அப்பா சுளுக்கி ஒன்றை வைத்திருந்தார். அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவற்றைக் குத்தித் திருகிக் கொன்றுவிட்டுதான் வருவார். இதில் அவருக்கு ஒருமுறைகூட தோல்வி இல்லை. பறவைகள் விஷயத்திலும் அப்படித்தான். 

வீட்டின் வேலியையொட்டிய மரமொன்றில் கொண்டைக்குருவி கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சுபொரித்திருந்தது. அந்த மரத்தால் கொசுத்தொல்லை அதிகரித்தால் அதன் கிளைகளை அப்பா தறிக்கப்போனார். அவருடன் கெஞ்சிப்  பார்த்து, சண்டையிட்டு இறுதியில் அவர் தறிப்பதைத் தடுத்தேன். அந்தப் பறவை தன் குஞ்சுகளோடு பறந்துசென்ற பின்தான் அவரைத் தறிக்க அனுமதித்தேன். கிளைகள் அடர்வதும் கொண்டைக்குருவி மீண்டும் வந்து கூடுகட்டுவதும் அப்பா அந்தக் கிளைகளைத் தறிக்கச் செல்வதும் நான் சண்டையிட்டுத் தடுப்பதும் சீரான இடைவெளியில் நடந்துகொண்டிருந்தது. அப்படிப்பட்டவர் கொண்டலாத்தியை என் கனவில் கண்டிருந்தால் என்னவாகியிருக்கும்?

அவர் உயிரோடு இருந்தபோது பல காலம் வீட்டுக்கு அருகிலும் தொலைவிலும் பறவைகள் பார்க்கச் சென்றிருக்கிறேன். வீட்டு வேலிக்குள்ளும் பறவைகள் நிறைய வருவதுண்டு. அவற்றையெல்லாம் அவருக்கு நான் காட்டியதில்லை. அவருடைய பிரக்ஞையில் பறவைகள் என்ற ஒன்றில்லை; இந்த வீடும் இந்த வீட்டுக்குள் இருக்கும் தன் மனைவி, பிள்ளைகளும் ஏன் அவர் சைக்கிள், சுளுக்கி போன்றவையும்தான் அவர் பிரக்ஞையின் வட்டத்துக்குள் இருந்தன. அப்படிப் பறவைகள் அவர் உலகத்தில் வந்தால் அவை ஆக்கிரமிப்பாளர்களாகவோ அந்நியர்களாகவோதான் இருந்தன. ஆக, நான் ஏன் என் கனவில் அப்பாவுக்குக் கொண்டலாத்தி காட்ட முயன்றேன் என்பது எனக்குத் தீராத ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

அடுத்து வந்த சில நாட்களில் மீதிக் கனவை நான் என் கற்பனையில் உருவாக்கப் பல வழிகளிலும் முயன்றுகொண்டிருந்தேன். கனவைக் கட்டமைக்க முடியும் என்ற துணிவை போர்கேஸின் ‘வட்டச் சிதைவுகள்’ கதை எனக்குத் தந்தது. அப்படி முயன்று பார்க்கலாமா என்று தோன்றியது. அதே நேரத்தில்,  அந்தக் கதையில் கனவைக் கட்டமைக்க முயல்பவன் இருப்பதுவும் ஒரு கனவுக்குள்தான் என்று கதையின் இறுதியில் அவன் உணர்வான். ஆக, ஒரு கனவை நாமாகக் கட்டமைக்க வேண்டுமென்றால் நாம் கனவுக்குள் இருந்தாக வேண்டும்; நனவுலகிலிருந்து அதைச் செய்ய முடியாது என்று தோன்றியது. நான் இருப்பது நனவில்தான் என்று அவ்வளவு நிச்சயம் எனக்கு எப்படி ஏற்பட்டது? ‘உலகெலாம் ஓர் பெருங்கனவு அஃதுளே/ உண்டுறங்கி இடர்செய்து செத்திடும்/ கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்/ கனவினும் கனவு ஆகும்’ என்று பாரதியும் பாடவில்லையா என்ற நம்பிக்கையில் நான் ஒரு கனவின் மீதியை உருவாக்கத் தொடங்கினேன். 

கனவு தர்க்கங்களை மீறியது என்பதால் அதன் அதர்க்கங்களையும் அதே நேரத்தில் சரிபாதியளவு தர்க்கங்களும் கனவில் இருப்பதால் தர்க்கங்களையும் பொறுக்கியெடுத்துக்கொண்டிருந்தேன். தர்க்கங்கள் எனும்போது நான் இருந்த வீடு, நான், சரியான தோற்றத்துடன் கொண்டலாத்தி, என் மகன் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமல்லவா? யார் மகனோ, யார் வீடோ அந்தக் கனவில் வரவில்லை. அப்படி வரும் சாத்தியங்களும் உண்டென்றாலும் இப்போதைக்கான குறிப்புச் சுட்டி இந்தக் கனவுதானே. இந்தக் கச்சாப் பொருள்களையெல்லாம் கொண்டு நான் கட்டமைக்கும் கனவைத் தொடங்குவோம்.

மகன் உள்ளே அந்தகாரத்துக்குள் செல்கிறான். நான் அப்பாவுக்காகக் காத்திருக்கிறேன். தன் தாத்தாவைத் தேடிச் சென்ற என் மகன் தாத்தாவாகத் திரும்பி வருகிறான். “அங்க பாருங்கப்பா கொண்டலாத்தி. இதுவரைக்கும் நீங்க பாத்திருக்க மாட்டீங்க. இதைப் பாத்த பிறகுதான் நீங்க சாகணும்” என்கிறேன். “வாவ், எவ்வளவு அழகா இருக்குப்பா. தம்பியை எழுப்புறேன்” என்று என் மகனின் குரலில் பதிலளிக்கிறார் அப்பா. ஆனால், நான் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. வாசலைப் பார்க்கிறேன். சின்னவன் வாசலில் ஏதோ பொறுக்கித் தின்றுகொண்டிருந்தான். “அப்பா, போய்த் தூக்குங்க. அவன் பாம்பைத் தின்னுக்கிட்டிருக்கான்” என்று நான் கத்த அப்பா கொசுக்கதவைத் திறக்காமல் அதனூடாகப் பறந்துசென்று அந்தப் பாம்பைச் சிறியவனிடமிருந்து பிடுங்கித் தான் தின்ன ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ஒரு கைபேசி அழைப்பையோ அல்லது திடுக்கிட்ட விழிப்பையோ கூட நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

அல்லது உள்ளே சென்ற என் மகன் தன் தாத்தாவுடன் திரும்பி வருகிறான். அவரிடம் நான் சொல்கிறேன், “அப்பா அங்கே பாருங்கப்பா கொண்டலாத்தி. சாலமன் ராஜா ஏதோ தூது அனுப்பியிருக்கார். என்னென்னு அதுகிட்ட போய்க் கேளுங்க” என்றேன். அவர் திண்ணையின் வலப்புறம் திரும்பி ஓட்டுச் சார்பில் செருகிவைக்கப்பட்டிருந்த சுளுக்கியை எடுக்கிறார். கொசுக் கதவைத் திறந்துகொண்டு செல்கிறார். அவர் அதைக் குறிபார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொண்டலாத்தி அவரை நிமிர்ந்து பார்த்துப் பாட ஆரம்பிக்கிறது, “உமது நேசம் திராட்சைரசத்தைப்  பார்க்கிலும் இன்பமானது. உமது பரிமளத் தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாகயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.” அப்பா இப்போது திரும்புகிறார். கொண்டலாத்தி அவர் தோளில் வந்து உட்கார்ந்துகொள்கிறது. சுளுக்கியை என்னை நோக்கிக் குறிவைக்கிறார். என் மகன் கைதட்டி ஆர்ப்பரிக்கிறான். நான் திடுக்கிட்டுக் கண்விழிப்பதைப் போல கனவை முடித்துக்கொள்ளலாம். ஏனெனில், என் கனவுகளில் நான் செத்ததே இல்லை. பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, குத்துப் பட்டு என்றெல்லாம் சாவதற்கு முந்தைய கணம் வரை சென்றிருந்தாலும் ஒருபோதும் செத்துப்போனதில்லை. ஆகவே, அந்த இடத்தில் முடித்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

அல்லது உள்ளே சென்ற மகன் திரும்பி வராமல் நானும் அந்த அந்தகாரவெளிக்குள் சென்று திகைத்துப்போய் திரும்பும் வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கலாம். ஒரு கொண்டலாத்திக்காக அப்பாவையும் என் மகனையும் தொலைத்ததுடன் என்னையும் தொலைத்துக்கொண்டேனே என்று வருந்திக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒன்று மீட்சிக்கான பாதை தெரிய வேண்டும் அல்லது பீதியில் விழிப்பு வர வேண்டும்.

நான் கட்டமைக்க முயன்ற எந்தக் கனவுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை. மிகச் சரியாக அப்பா வர வேண்டிய இடத்தில் ஒரு கைபேசி அழைப்பு (இன்னும் சரியாகச் சொன்னால் இந்தப் பேரண்டம்) என் கனவைத்  துண்டித்ததில் ஒரு அமானுஷ்யத் தன்மை, இன்னும் சொல்லப்போனால் மிஸ்டிக்தன்மை இருப்பதை உணர்கிறேன். அந்தத் தன்மையை ஒருபோதும் நான் கட்டமைக்கும் கனவுக்குத் தர முடியாது. அதேபோல், இனி ஒருபோதும் மூலக் கனவின் மீதிப் பகுதியும் எனக்குத் தெரியப்போவதில்லை. இனி, எல்லையற்ற சாத்தியங்களின் வெளியில் அந்தக் கனவின் மீதி மிதந்துகொண்டிருக்கும். மண்ணில் கிடக்கும் சிறு வளையல் துண்டு நாம் கடக்கும் ஒரு நொடியில் சூரியனை மினுக்கிட்டு நம் கண்களைக் கூசச் செய்வதுபோல், எப்போதாவது ஒரு நொடியில் மினுக்கிடலாம் என்ற நம்பிக்கையும், இல்லையில்லை அந்தக் கனவு அப்படித் தொலைந்துபோனதுதான் அதற்கு அழகு என்ற வசீகரமான அவநம்பிக்கையும் ஒன்றாக ஏற்பட்டன. 

எனினும், “இந்தப் பேரண்டமானது நாம் கற்பனைசெய்யுமளவுக்கு விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் கற்பனை செய்யக்கூடிய அளவை விட விசித்திரமானது” என்று உயிரியலர் ஜே.பி.எஸ். ஹால்டேன் கூறியது எவ்வளவு உண்மை என்று சில நாட்களுக்குள் தெரிந்துகொண்டேன். ஆம்! மீண்டும் கொண்டலாத்தியும் அப்பாவும் என் கனவில் வந்தார்கள். மூலக் கனவின் மீதியாக அல்ல. தனிக் கனவாக. கனவு நாம் நினைப்பதைப் போல் மட்டுமல்ல, நாம் நினைக்கக்கூடியதை விட விசித்திரமானது.

அப்பா மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று எனக்குச் செய்தி வந்தது. எனக்கு ஒரே பயமும் தவிப்பும். கொண்டலாத்தியைப் பார்க்காமல் அப்பா செத்துப்போய்விடுவாரோ என்று. சாலமன் ராஜாவே எனக்காக ஒரு கொண்டலாத்தியை அனுப்பிவையும் என்று வேண்டிக்கொண்டே போனேன். என் கையில் நான் ஒரு மஞ்சப்பை வைத்திருந்தேன். அதில் என்ன கொண்டுசெல்கிறேன் என்று கையை விட்டுத் துழாவினேன். புசுபுசுவென்று ஏதோவொன்று என் கைக்குள் திமிறியது. கைகளில் எடுத்துப் பார்த்தேன். அது ஒரு கொண்டலாத்தி. ‘முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ அப்படியே குமாரத்திகளுள்ளே எனக்குப் பிரியமான’ என் கொண்டலாத்தி. எனக்கேற்பட்ட பரவசம் என் கனவுக்கு வெளியேயும் கசிந்துகொண்டிருந்ததைக் கனவுக்குள் இருந்துகொண்டே என்னால் உணர முடிந்தது. என் அப்பா கொண்டலாத்தி பார்க்காமல் சாக மாட்டார்; சாகக் கூடாது. ஆனால், நான் போய்ச் சேரும்வரை அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஒரே கவலை. ஆமாம், நான் எங்கிருந்து புறப்பட்டு எங்கு போய்க்கொண்டிருக்கிறேன்? சும்மா போய்க்கொண்டிருந்தாலே இறுதியில் அப்பாவைப் பார்த்துவிடலாமா? 

நான் போய்ச்சேர்ந்த இடம் பழைய வீடா, சொந்த ஊரில் அண்ணன் கட்டிய புதிய வீடா, அல்லது மருத்துவமனை அறையா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இவை எல்லாம் ஒன்றாகக் குழைந்து ஒரே நேரத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. அப்பாவை ஒரு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். அதுவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக் கட்டிலாகவும் கயிற்றுக் கட்டிலாகவும் குழைந்து தெரிந்தது. சுற்றிலும் அம்மா, அக்கா, சொந்தக்காரர்கள் நின்றிருந்தார்கள். ஆனால், ஒருவர் முகம் கூட எனக்குப் பரிச்சயமானதுபோல் தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து விம்மத் தொடங்கினேன். அதுவரை வெறுமையில், உச்சியில் வெறித்திருந்த அவரது பார்வை என்னை நோக்கித் திரும்பியது. “எனக்குத் தெரியும்ப்பா. நீங்க நான் வரும்  வரைக்கும் சாக மாட்டீங்கன்னு. நீங்க கொண்டலாத்தி பாக்காம சாகக் கூடாதுப்பா. அதுக்காகத்தான்பா ஓடோடி வந்தேன். பாருங்க சாலமன் ராஜா உங்களுக்காக அனுப்பிவச்ச கொண்டலாத்திய” என்று சொல்லிவிட்டுப் பைக்குள்ளிருந்து கொண்டலாத்தியை வெளியில் எடுத்தேன். அது விடுபடுவதற்கான எந்தப் பிரயத்தனங்களையும், பைக்குள் இருந்தபோதும் சரி என் கைக்குள் இருக்கும்போதும் சரி, செய்யவில்லை. என் கையில் இருப்பதை அப்பாவின் கண்கள் சற்று நேரம் பார்த்தன. அந்தக் கண்களுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அந்தக் கண்களில் கொண்டலாத்தி பிரதிபலித்தது ஒன்றே போதும் என்று நிம்மதியுடன் அதனை அவர் நெஞ்சின் மேல் விட்டேன். அதிர்ந்துபோய் சற்று முன்னே வந்த, யார் முகத்தையோ கொண்டிருந்த என் அம்மா “என்னடா தம்பி இது?” என்றாள். “சும்மா இரும்மா. கொண்டலாத்தி இந்த உலகின் பேரழகி. அப்பாவின் நெஞ்சு மேல அவ நிக்குற அழகைப் பாரு. எவ்வளவு நாசுக்கா எச்சம்போடுறா பாரு. இப்படிப்பட்ட பேரழகியைப் பாக்காம எவ்வளவு நாள் வாழ்ந்தா என்ன பிரயோசனம்? அப்பா கொண்டலாத்தி பார்த்துட்டார். அவருக்கு பிரக்கினை இருக்குதோ இல்லையோ அவரு உடம்பு பூரா இன்னேரம் இந்த அழகு நெறைஞ்சிருக்கும். இந்த அழகு நெறைஞ்சிருக்கிற அவர் உயிரத்தான் சாவு எடுத்துக்கிட்டுப் போகணும். இனி அவர் சாகலாம். அவருக்கு வாயில நான் ஊத்த வேண்டிய பால, கண்ணுல ஊத்திட்டேன். அவரைப் போய் சாலமன் ராஜாவோட சிம்மாசனத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கச் சொல்லு. அவருக்குன்னு தனி சிம்மாசனம் போட்டுவைக்கச் சொல்லி இந்தக் கொண்டலாத்திய சாலமன் ராஜாகிட்டயே  அனுப்பப்போறேன்” என்று சொல்லிவிட்டுக் கொண்டலாத்தியை மறுபடியும் கையில் எடுத்துப்  பறக்க விட்டேன்.

பேரண்டம் இந்த முறை சதிசெய்யவில்லை.   

(‘உயிர்மை’ நவம்பர்-2021 இதழில் வெளியான சிறுகதை)