Monday, October 15, 2018

கலைஞர்: நம் எல்லோரையும் சுமந்துசென்ற சைக்கிள்!

(இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ‘கலைஞர்’ சமாதியில் அப்பா... அவர் இறுதியாக நல்ல நினைவுடன் செயலுடன் இருந்த நாள்... இறுதியாக பசித்துச் சாப்பிட்ட நாள்...)


தே.ஆசைத்தம்பி


அப்பாவின் சைக்கிள் கைப்பிடியில் மாட்டப்பட்ட சிறுகூடையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனுக்கு எல்லோரையும் போல அப்பாதான் ஹீரோ. முன்னே பிள்ளையை உட்கார வைத்து சைக்கிளை மிதித்தபடி செல்லும் அப்பாவின் தோளில் ஒரு துண்டு இருக்கும். கரைவேட்டி. மன்னார்குடியின் தெருக்களில் அப்பாவின் சைக்கிள் செல்லும்போது எதிர்ப்படுபவர்கள் அப்பாவைப் பார்த்து ‘வணக்கம் தலைவரே’ என்று சொல்வதைப் பார்த்து அந்தச் சிறுவனுக்கு அளவில்லாத சந்தோஷம் அப்போது. இத்தனைக்கும் அவனுடைய அப்பாவுக்குச் சமூகத்தில் எந்த உயர்ந்த அந்தஸ்தும் கிடையாது. சொந்தமாக ஒரு சதுர அடி நிலம்கூட கிடையாது. வீடும் புறம்போக்கில், பாமணி ஆற்றங்கரையில். அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். அலுவலகத்துக்காக எல்லா வேலைகளையும் செய்துதரும் அலுவலக உதவியாளர் பணி.

இப்படி எல்லா நிலையிலும் அதிகாரமோ பணபலமோ செல்வாக்கோ இல்லாவிட்டாலும், அலுவலக உயர் அதிகாரிகளில் தொடங்கி ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் வரை அப்பாவைப் பார்த்தால் ‘வாங்க தலைவரே, வணக்கம் தலைவரே’ என்று சொல்வார்கள். இதெல்லாம் பிற்பாடுதான் அந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது. என்றாலும் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் அவன், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் மரியாதையைத் தனக்குக் கிடைத்த மரியாதையாகக் கற்பனை செய்திருப்பான்போல. அதனால்தான் அவ்வளவு சந்தோஷம்.

சைக்கிளுக்கு முன்னே ஒரு கழுகு பொம்மை இருக்கும். சைக்கிளின் பக்கவாட்டில் சங்கிலிப் பட்டையின் மேலே அவனுடைய அண்ணனின் பெயர் கறுப்பு – சிவப்பில் எழுதப்பட்டிருக்கும். தேர்தல் சமயம் என்றாலோ கட்சி மாநாடு, கூட்டங்கள் என்றாலோ அதே சைக்கிளில் முன்பக்கம் கறுப்பு சிவப்பு கொடியைச் செருகி அப்பா அழைத்துச்செல்வார். மன்னார்குடியில் திராவிட இயக்கங்களைப் போல கம்யூனிஸ இயக்கங்களுக்கும் செல்வாக்கு அதிகம் என்றாலும் திராவிட இயக்கக் கூட்டங்களுக்குத்தான் அப்பா அழைத்துச் செல்வார். அப்பாவுடன் முன்வரிசையில் அமர்ந்து பார்த்த கலைஞர் கூட்டங்கள் ஏராளம்.

‘மன்னை’ என்று அழைக்கப்படும் மன்னை நாராயணசாமி அருகில் உட்கார்ந்திருக்க, மேடையில் கலைஞர் பேசும்போது தனக்கும் மன்னைக்கும் உள்ள உறவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியது அவனுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. ‘மன்னையை நான் முந்திக்கொள்வேன்’ என்று கலைஞரும் ‘கலைஞரை நான் முந்திக்கொள்வேன்’ என்று மன்னையும் மாறி மாறிப் பேசும்போது ஒரு கட்சிக்குள் எப்படியெல்லாம் நட்பு உருவாகி ஒரு தொன்ம நிலையை அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அந்தச் சிறுவனுக்கு அப்போது இல்லை. கடைசியில் மன்னை முந்திக்கொண்டார் என்பது வேறு விஷயம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு நண்பர் கலைஞருக்கு இருப்பார். அந்த மேடையிலும் இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறும் என்று பின்னாளில்தான் அந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது.

அந்தக் காட்சிகளில் மிகையுணர்ச்சி இருந்தாலும், உள்ளூர்த் தலைவருடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை மேடையில் உணர்த்துவது அந்த ஊர் மக்களிடையே எப்படிப்பட்ட நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும் என்றும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர் கலைஞர். மிகையுணர்ச்சி இருந்தாலும் அதில் பொய் இருக்காது. உண்மையில் அந்த உள்ளூர்த் தலைவருடன் கலைஞருக்கு அப்படிப்பட்ட நெருக்கமான தருணங்கள் ஒன்றிரண்டு வாய்க்கப்பெற்றிருக்கும். கூடவே, கட்சிக்காக அந்த உள்ளூர்த் தலைவர் பிரதிபலன் கருதாமல் எத்தனையோ தியாகங்கள் செய்தவராக இருப்பார். அதற்கான அங்கீகாரம்தான் அந்த மேடையில் கலைஞர் வெளிப்படுத்தும் சற்றே நாடகப் பாணியிலான நட்புணர்வு என்பது பின்னாளில்தான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. என்றாலும் அந்த ஊரின் மற்ற தொண்டர்களைப் போலவே ‘நம்மூர்த் தலைவரைப் பற்றி, நமக்கு அருகில் உள்ள தலைவரைப் பற்றி இப்படி நெகிழ்ச்சியாகப் பேசுகிறாரே கலைஞர்’ என்ற ஊர் சார்ந்த மகிழ்ச்சி அந்தச் சிறுவனுக்கும் அன்றே ஏற்பட்டிருந்தது.

வீட்டில் அம்மா ஆச்சாரமான பிராமணப் பெண்மணி போலவே எல்லா சம்பிரதாயங்களையும் பின்பற்றுவார். ஒரு நாள் விடாமல் கோயிலுக்குச் செல்வார். வீட்டில் விரதங்கள், சடங்குகள் போன்றவற்றை மேற்கொள்வார். சிறுவனோ, குழந்தையாக இருந்த காலத்திலிருந்து அப்பாவுடன் தி.க., தி.மு.க. கூட்டங்களுக்குச் சென்றதால் இன்று பெரியவனான காலத்திலும் சாமி கும்பிடுவதில்லை. அம்மாவிடமே நாத்திகம் பேசுவான். பள்ளிக்கூடத்தில் சாமியார் ஒருவர் வந்தபோது அனைத்து மாணவர்களுக்கும் விபூதி வழங்கப்பட்டபோது அந்தச் சிறுவன் மட்டும் வாங்க மறுத்துவிட்டான்.

கல்லூரிக் காலத்தில் முதல் பகுதி வரை அவன் திமுகவுக்கு நெருக்கமாக இருந்தான். போகப் போக அந்த இயக்கம் மேல் வந்த விமர்சனங்கள் காரணமாக இயக்கத்திலிருந்து விலகினான். எனினும் இயக்கம் அவனிடமிருந்து விலகவில்லை. அவன் பெயரிலேயே இயக்கத்தை அவன் அப்பா சுமத்தியிருந்தார். திமுகவின் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏ.வி.பி. ஆசைத்தம்பி இறந்த ஆண்டில் பிறந்தவன் என்பதால் அவனுக்கும் ‘ஆசைத்தம்பி’ என்ற பெயரை அவனுடைய அப்பா வைத்திருந்தார். திராவிட இயக்கத்தோடு அவன் நெருக்கமான உணர்வைக் கொண்டிருந்த காலகட்டத்திலும் அந்தப் பெயர் அவனுக்குப் பிடித்திருக்கவில்லை. பள்ளியில் மற்ற சிறுவர்களோடு ஏதாவது சண்டை ஏற்பட்டால் அவனை ‘ஆசை தோசை’ என்று கிண்டல் செய்வதால்தான் அப்படி. இளைஞனான பிறகு தன் பெயரில் அவனுக்கு ஏற்பட்ட வெறுப்புக்குக் காரணம் ‘தோசை’ இல்லை. ஒரு கட்சியைத் தன் பெயரில் அப்பா சுமத்திவிட்டாரே என்பதுதான்.

கட்சியின் மீது தொடர்ந்து வெறுப்புணர்வை அவன் வளர்த்துக்கொண்டான். முழுக்க முழுக்க இலக்கியத்தை நோக்கி அவன் நகர்ந்ததும் இதற்குக் காரணம். அவன் படித்த நவீன இலக்கியங்கள் அவனை அரசியலற்றவனாக மாற்றிவிட்டதை சமீபத்தில்தான் அவன் உணர்ந்தான். ஆரம்ப காலத்தில் அந்த இலக்கியங்கள்தான் திராவிட இயக்கத்தின் மீது ‘புனிதமான’ கேள்விகளைக் கேட்கவைத்து அந்த இயக்கத்திலிருந்து அவனை விலக வைத்தன.இளைஞனான அவனை மேற்படிப்பில் சேர்ப்பதற்காக அவனுடன் சென்னை வந்திருந்தார் அவனது அப்பா. அரசாங்கக் கல்லூரியில்தான் அவனைச் சேர்க்க முடிந்திருந்தது அவனது அப்பாவால். அந்தத் தலைமுறைக்கு அதுவே அதிகம். ஆறாவது வரை படித்திருந்த அவனது அப்பா படிப்பின் மீது மிகுந்த நாட்டம் உள்ளவர். 5 வயதிலேயே தனது அப்பாவை, அதாவது அவனுடைய தாத்தாவை, இழந்து மிகவும் வறிய சூழலில் இருந்த அவரை அவரது அம்மாதான் வீட்டு வேலை பார்த்து ஒருவேளை சாப்பாடு கொடுத்து வளர்த்தது. இன்றும்கூட சாப்பிடும்போது கீழே பருக்கைகளை இவன் சிந்திவிட்டால், ‘ஒருவேளை சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவன் நான்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பருக்கையை எடுத்துச் சாப்பிடுவார் அவனது அப்பா. அப்படிப்பட்டவரால் படிக்க முடியவில்லை என்றாலும், அவரது மகனைச் சிரமப்பட்டாவது கல்லூரிக்குக் கொண்டுவந்துவிட்டார்.

கல்லூரிக்குச் சேர்க்க வந்தபோது ராயப்பேட்டையில் தங்கியிருந்த அவர், ஒருநாள் காலை 7 மணி வாக்கில் வெளியில் புறப்பட்டார். எங்கே போகிறார் என்று அவன் கேட்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பிவந்தார். “எங்கேப்பா போனீங்க?” என்று அவன் கேட்டதற்கு கண்ணில் நீர் மின்ன, “தலைவர் வீட்டைப் பார்க்கப் போனேன், பாத்துட்டேன்” என்று துண்டை உதறி மறுபடியும் தோளில் போட்டுக்கொண்டார். அவர் பேசியதை சிவாஜியின் குரலிலும் உடல்மொழியிலும் வெகு நாட்களாக அவன் கிண்டல் செய்துவந்தான்.

படித்து நல்ல வேலைக்குச் சென்ற பிறகும் திராவிட இயக்கம் மீதான வெறுப்புணர்வு அவனுக்கு அதிகமாகத்தான் இருந்தது. எதையும் கிண்டலாக அணுகும் தலைமுறையைச் சேர்ந்த அவன் திராவிட இயக்கத்தின் வரலாறு, கலைஞரின் செயல்கள் எல்லாவற்றையுமே கிண்டலாகத்தான் அணுகினான். வீட்டில் அப்பாவை வெறுப்பேற்றுவதற்காக வேண்டுமென்றே ஜெயலலிதா படத்தை மாட்டிவைப்பான். ஜெயா டி.வி.யை வைப்பான். கடுமையாகச் சண்டை போடுவார். அவருடைய முரட்டுத்தனமான இயக்கப் பற்று அவனை மேலும் மேலும் இயக்கத்தைக் கிண்டல் செய்யத் தூண்டியது.

கலைஞரைப் பற்றிக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தபோது உச்சக்கட்டமாக ஒரு நாள் வெடித்துவிட்டார். “தலைவரு இல்லனா நான் அன்னைக்குச் சோத்துக்கு கஷ்டப்பட்ட மாதிரிதான் நீயும் ஒண்ணனும் (ஒங்க அண்ணனும்) கஷ்டப்பட்டிருப்பீங்க. ஒங்க அப்பனுக்கு இந்தத் தோள்ல துண்டு இருந்திருக்காது” என்றார்.

அலுவல் தொடர்பாக திராவிட இயக்க வரலாற்றைப்படிக்கும் வாய்ப்பு வந்தபோது ‘ஒங்க அப்பனுக்கு இந்தத் தோள்ல துண்டு இருந்திருக்காது’ என்ற சொற்கள் அவனுக்குக் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தன. அப்பாவைத் துண்டு இல்லாமல் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அலுவலகத்தில் ஏதாவது பிரியாவிடை நடைபெறும்போது தரப்படும் இனிப்பு, காரங்களையும் அந்தத் துண்டில்தான் முடிந்துகொண்டுவந்து அவனுக்குத் தருவார். அப்படித்தான் கரைவேட்டியும். பெரியவனாகி, வேலைக்குப் போய் பொங்கல் சமயத்தில் தன் அப்பாவுக்குக் கரையில்லாத வேட்டி எடுத்துக்கொடுத்தால் அதை அவர் வாங்கிக்கொள்ளவே மாட்டார்.

திராவிட இயக்க வரலாற்றைப் புரட்டிப் படித்தபடியே தன் குடும்ப வரலாற்றையும் அவன் அசைபோட ஆரம்பித்தான். ஆறாவதோடு படிப்பு நிறுத்தப்பட, தன் உறவினர் வீட்டில் ‘ஓட ஒடியார’ இருந்தார் அவனது அப்பா. இளைஞரானதும் அவருடைய ஒன்றுவிட்ட சித்தப்பா அப்போது திமுகவில் எம்.எல்.ஏ. ஆகிறார். அவருடைய முயற்சியில் அவனுடைய அப்பாவுக்கு அரசாங்க வேலை கிடைக்கிறது. கடைநிலை வேலை என்றாலும் அரசாங்க வேலை. ஒரு தலைமுறையை உந்தி மேல் தள்ள வேறென்ன வேண்டும்? திமுக ஆட்சிக்கு வந்தபோது அப்படித்தான். ஏராளமான எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தார்கள். அவர்கள் உறவினர்களில் கஷ்டப்படுபவர்கள் பலருக்கும் அவர்களால் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதுவரை எந்த ஆதரவும் ஆதாரமும் இல்லாதவர்களுக்கு அந்த வேலைகள் எவ்வளவு பெரிய பற்றுக்கொம்பாக இருந்திருக்க வேண்டும்!

அன்று ஆரம்பித்தது, துண்டும் கரை வேட்டியும். ‘தலைவர் வீட்டைப் பாத்துட்டேன்’, ‘தலைவரைப் பாத்துட்டேன்’, ‘தலைவர் பேசினதைக் கேட்டுட்டேன்’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லும் திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கான பேருக்கு இதுபோன்ற கதைகள் இருக்கும். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கிண்டல் அடித்துக்கொண்டிருக்கும் அவனைப் போன்ற இன்றைய தலைமுறையினர் பலருக்கும் அந்த உணர்ச்சிக் கதைகளின் ஆழம் தெரியாது.

துண்டு போட முடியாத, கரைவேட்டியை மிடுக்குடன் கட்ட முடியாத காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கதைகளுடன் தங்களைக் கரைத்துக்கொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலரும் இன்று கலைஞருக்கு எதிராகவும் இடஒதுக்கீடுக்கு எதிராகவும் பேசுவதைப் பார்க்கும்போதெல்லாம் தன்னைப் போலவே வழிதவறிய ஆட்டுக்குட்டிகளாக அவர்களையும் அவன் உணர்வான்.

ஒரு தலைவரின் வரலாற்றை அவரது போராட்டங்கள் மூலமாகவும் சொல்லலாம், மற்றவர்களின் வாழ்க்கை மூலமும் சொல்லலாம். அப்படி, சொல்லக்கூடிய வாழ்க்கைக் கதைதான் அவனது அப்பாவின் கதையும். அவனது அப்பாவோ அவனோ இன்று செல்வச் செழிப்பிலோ செல்வாக்கின் உச்சத்திலோ இல்லை. ஆனால், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. சுயமரியாதைக்காகப் போராடிய தங்கள் தலைவரின் வாழ்க்கையின் துணைவிளைவு இந்த வெற்றி.

அப்பா ஓய்வு பெற்ற பிறகு, அவரது பிள்ளைகள் தலையெடுத்த பிறகு ஒருநாள் ஊருக்குச் செல்கிறான் அவன். அதே சைக்கிள்… இருபதாண்டுகளாக… எங்கோ அப்பாவுடன் புறப்படும்போது சைக்கிளை அவனிடம் கொடுத்து `ஓட்டு’ என்கிறார் அப்பா. அப்பாவுக்கு வயதாகிவிட்டது, வண்டியை அவன் ஓட்டுவதுதான் நியாயம் என்றாலும் அப்பா வண்டியை ஓட்ட அவன் முன்னாலோ பின்னாலோ பெருமையுடன் உட்கார்ந்துகொள்ள, எதிர்ப்படுவர்கள் ‘வணக்கம் தலைவரே’ என்று அழைக்க, மன்னார்குடியைச் சுற்றிச் செல்வதுதான் அவனுக்குப் பிடிக்கும். கண்களில் நீர் கோத்துக்கொள்ள அவன் வண்டியை எடுத்து மிதிக்க ஆரம்பிக்கிறான். பின்னால் அப்பா அமர்ந்துகொள்கிறார். அப்பாக்களின் காலத்துக்குப் பிறகு பிள்ளைகள்தான் வண்டியை ஓட்ட வேண்டும் என்று அவன் உணர்கிறான். இன்றோ, தங்கள் தலைவர் மரணத் துயிலில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவரைப் பற்றி நினைக்கும்போது இறுதிவரை தன் கோடிக்கணக்கான பிள்ளைகளை சைக்கிளின் முன்னும் பின்னும் உட்காரவைத்து அவர் சைக்கிள் ஓட்டியதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. பிள்ளைகளுக்கு அப்பா சைக்கிள் மிதிக்கும் வலியும் தெரியாது, தன் பிள்ளைகளுக்காக சைக்கிள் மிதிப்பதில் அப்பாவுக்கு உள்ள பெருமையும் தெரியாது. அப்பா இல்லாதபோதுதான் எல்லாமே தெரியும்.

அவன் சிறுவனாக இருந்தபோது ‘தலைவர்’ கூட்டங்களைக் காணச் செல்லும்போது அவன் வயதையொத்த ஏராளமான சிறுவர்கள் அந்தக் கூட்டங்களில் தங்கள் அப்பாக்களுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறான். கூட்டம் முடிந்ததும் சைக்கிள்களிலும் தோளிலும் சுமந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை அவர்கள் அழைத்துச்செல்வதை அப்போது பார்த்திருக்கிறான். இன்றும் மன்னார்குடியில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பிள்ளைகளை அழைத்துவரும் எந்த அப்பாக்களையும் அவனால் பார்க்க முடியவில்லை. அதேபோல் பிள்ளைகளையும் அப்பாக்களையும் ஒருசேர ஈர்க்கும் ஒரு தலைவரையும் இனி அவனால் பார்க்கவே முடியாது.

இப்போதெல்லாம் யார் கேட்டாலும் அவன் தயக்கமில்லாமல் முழுப் பெயரையும் சொல்லிவிடுகிறான், ‘ஆசைத்தம்பி’ என்று. அந்தப் பெயர் அவனுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு இயக்கத்தின் மீதும், ஒரு தலைவரின் மீதும் ஒரு கடைமட்டத் தொண்டன் கொண்டுள்ள அன்பையும் நன்றியுணர்வையும் தெரிவிக்கக் கூடியது. அதை மறுக்கும் உரிமை அவனுக்கு இல்லை.
-நன்றி: ‘இந்து தமிழ்’
(கலைஞர் மரணத்தை முன்னிட்டு நான் எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையை முரசொலியில் முழுப் பக்கத்துக்கு மறுபிரசுரம் செய்திருந்தார்கள். இந்தக் கட்டுரை எழுதிய இரண்டு மாதத்துக்குள் அப்பாவும் தன் தலைவரைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டார். என் எழுத்து வாழ்க்கையில் அவர் படித்த ஒரே கட்டுரை இது. படித்து முடித்துவிட்டு எனக்குத் தெரியக்கூடாது என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்ட அப்பா 11-10-2018 அன்று எங்களைக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். அவருக்கான அஞ்சலியை முன்கூட்டியே எழுதினாற்போல் ஆகிவிட்டது இந்தக் கட்டுரை.)