Wednesday, November 29, 2017

தாண்டவராயன் கதை: முதல் மனப்பதிவுகள்ஆசை

பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல் 2008-ல் வெளியானது. அப்போது, முதல் இரண்டு அத்தியாயங்களைப் படித்தேன். ஏற்கெனவே, கோணங்கி போன்றோரின் படைப்புகளைப் படிக்க முயன்று தோற்றுப்போயிருந்த என்னை ‘தாண்டவராயன் கதை’ நாவலும் பிடித்து வெளியில் தள்ளியது. அதன் அந்நியத் தன்மையும் இயல்பற்றதாக எனக்குத் தோன்றிய நீண்ட வாக்கியங்களும்தான் அதற்குக் காரணம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அந்த நாவலைப் படித்ததற்கு ஒரே காரணம் ‘பாகீரதியின் மதியம்’ நாவல்தான். தற்போது அச்சில் இல்லாத ‘தாண்டவராயன் கதை’யை அதன் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதனிடம் கேட்டு எப்படியோ ஒரு பிரதியை மார்ச் மாதத்தில் வாங்கிவிட்டேன். ஏப்ரல் மாதம் அந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இந்த முறையும் அதே அனுபவம்தான். எனினும், பொறுமையைக் கடைப்பிடித்து 400 பக்கங்கள் வரை வந்துவிட்டேன். அப்படியும் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கொண்டு படிப்பதை விட்டுவிட்டேன். இந்த நாவல்மீது அசாத்தியமான காதலைக் கொண்ட சில இளம் வாசக நண்பர்கள் தொடர்ந்து என்னை வலியுறுத்தவே ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் மறுபடியும் கையிலெடுத்தேன். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். இந்த முறை நாவல் வெகு வேகமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நேற்று இரவு 10.15-க்கு நாவலை முடித்துவிட்டு, ‘அப்பா கதை சொல்லுறேன் வா, அப்பா கதை சொல்லுறேன் வா’ என்று நாவலைப் படிக்க விடாமல் இடைவிடாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்த என் மகனின் அழைப்பை ஏற்று அவனிடம் கதை கேட்கப் போவதுவரை படைப்புச் சூறாவளியாக என்னுள் ‘தாண்டவராயன் கதை’ சுழன்றடித்து மாயங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.

படித்து முடித்ததும் எனக்கு ஏற்பட்ட சில மனப் பதிவுகளைச் சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.நிறைகள்

 1. என் வாசிப்புக்குட்பட்டு தமிழில் இதற்கு நிகரான படைப்புப் பெருவெடிப்பை (Creative big bang) தமிழ் இலக்கியத்தின் பாரதிக்குப் பிந்தைய பரப்பில் நான் கண்டதில்லை. ‘தாண்டவராயன் கதை’யை பா.வெங்கடேசன் தாண்டவம் ஆடிய கதை என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட படைப்பை எழுதிவிட்டு பா.வெங்கடேசன் ஆரவாரம் இல்லாமல் இருப்பது முதலில் ஆச்சரியத்தைத் தந்தாலும் இப்படிப்பட்ட படைப்பை எழுதுபவரின் இயல்பு அதுதான் என்று பிறகு எனக்குத் தோன்றியது.
 2. அசாத்திய கற்பனைகளின் தொடர்ச்சியான அணிவகுப்பு நாவல் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
 3. அந்நியத் தன்மை, இந்தியப் புராணிக நடை, 18-ம் நூற்றாண்டின் தமிழ் நடை என்று எல்லாம் கலந்த நடையில் அலாதியான வாசிப்பனுபவத்தை நாவல் கொடுக்கிறது.
 4. ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் உள்ளதைப் போல இந்த நாவலிலும் ‘நிகழ்ந்ததெல்லாம், நிகழ்ந்த பொழுதிலல்ல, மாறாக நிகழ்ந்ததன் மீதே நிகழ்ந்தது. மற்றும் நிகழ்த்திக்கொண்டிருந்தது.’ நாவலில் வரும் காலம், இடம், மனிதர்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இண்டெர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போன்ற ‘காலவெளி ஊடுதுளை’யை (worm hole) ஒத்த தருணம் இந்த நாவலில் வருகிறது. இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி பா. வெங்கடேசனுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நாவலில் அதுபோன்ற புனைவு அற்புதமாக உருக்கொண்டிருக்கிறது.
 5. நாவலில் வரும் ‘நீலவேணியின் பாதை’, 40 பக்கங்கள் கதைப்பாடலாக நீளும் ‘தாண்டவராயன் கதை’ போன்ற பகுதிகள் தமிழ்ப் புனைகதை மொழியின் உச்சபட்ச சாதனைகளுள் வைக்க வேண்டியவை.
 6. என் தனிப்பட்ட வாசிப்பின் சிறுபரப்பைப் பொறுத்தவரை காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை விட இது மகத்தானது. சீரொழுங்கு என்றால் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குப் பக்கத்தில் ‘தாண்டவராயன் கதை’ வர முடியாது. ஆனால், இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கும் படைப்புப் பெருவெடிப்புதான் இதை மார்க்கேஸின் நாவலை விட மேலானதாக ஆக்குகிறது. இது என் தனிப்பட்ட ரசனையின் அளவுகோல்படி உருவான கருத்து என்பதையும் நாவலைப் படித்து முடித்த பரவசத்தில் இதை நான் சொல்கிறேன் என்பதையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.


குறைகள்:
 1. நாவல் எந்த வகையிலும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தவே இல்லை. இது மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்கும் பொருந்தும். ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் வலியை, காதலை, காமத்தைக் குத்திக் கிளறிவிடும் தன்மை நெடுக இருந்துகொண்டே இருக்கும். ‘தாண்டவராயன் கதை’யில் அந்தத் தன்மை அநேகமாக இல்லை. ஒரு புனைவு சாகசத்தை வேடிக்கை பார்க்கும் மனநிலைதான் இந்த நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. படித்து முடித்தவுடன் துக்கமோ துயரமோ பேரன்போ அல்லது ஜெயமோகன் வழக்கமாகச் சொல்வதுபோல் ‘மகத்தான அறவுணர்ச்சி’யோ என் மனதில் வந்து கவிந்துகொள்ளவில்லை. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவற்றைப் படித்ததுபோன்ற உணர்வுதான் இருந்தது. பூர்வகுடிகளின் கதி, புரட்சி போன்றவற்றைப் பற்றி நாவலில் விஸ்தாரமாக எழுதப்பட்டிருந்தாலும் சாகசப் புனைவும் அசாத்தியமான மொழி வீச்சும் முன்னவை ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
 2. அசட்டுத் தித்திப்பு என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. திகட்ட வைக்கும் அதீத இனிப்பைக் குறிப்பது அது. அதைப் போன்று, மலைக்க வைக்கும் சாகசப் புனைவைத் தொடர்ந்து கட்டவிழ்த்துக்கொண்டே வருவதால் அதீதங்கள் ஒரு கட்டத்தில் அலுப்பையும் ஏற்படுத்துகின்றன. பத்து நாவல்களுக்கான கதைகளை, புனைவை, சாகசங்களை, மொழியை இந்த ஒரே நாவலில் இறக்கியிருக்கிறார். இதைப் பாராட்டாகவும் வைத்துக்கொள்ள முடியும். விமர்சனமாகவும் வைத்துக்கொள்ள முடியும். ‘மரத்தை மறைத்த மாமத யானை’யைப் போல் படைப்பை மறைத்து நிற்கிறது பா.வெங்கடேசனின் மலைக்க வைக்கும் அதிசய ஆளுமை.
 3. நாவலில் குறைந்தது இருநூறு பக்கங்களை நீக்கிவிடலாம். இதற்குத் தெளிவான எல்லைக்கோடு இல்லை என்பதால் கதைத் தொடர்ச்சியை விட்டுவிடாமல் சில பகுதிகளைச் சுருக்கமாக எழுதியிருக்கலாம். முதல்  இருநூற்றைம்பது பக்கங்களை, அவற்றில் அற்புதமான பகுதிகள் சில இருந்தாலும், கடப்பதற்கு இப்போதும் சிரமமாகவே இருக்கிறது. நானூறு பக்கங்களுக்கு மேல்தான் வெங்கடேசன் விஸ்வரூபம் எடுக்கிறார்.
 4. தொடர்ச்சியான அதீத சாகசப் புனைவின் காரணமாக நாவலின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சற்றே அலுப்பு ஏற்படுகிறது. ‘பாகீரதியின் மதியம்’ நாவலின் முடிவைப் போலில்லாமல் அழுத்தமே இல்லாத ஒரு இடத்தில் நாவல் முடிந்துவிடுவதைப் போல் தோன்றுகிறது.
 5. பா.வெங்கடேசனுக்கு நீளமான வாக்கியங்கள் மீது அளவுகடந்த காதல் இருப்பது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. உத்தி என்பது ஒரு கருவி. அதுவே படைப்பல்ல. உத்தியையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கும் இடங்கள் ‘பாகீரதியின் மதியம்’ நாவலை விட இதில் அதிகம். வாக்கியங்கள் தன்னளவில் நிறைவுபெற்றிருந்தாலும் அவற்றின் இறுதியில் பல இடங்களில் முற்றுப்புள்ளி வைக்காமல் காற்புள்ளியையே வைத்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் இதற்கு என்னால் உதாரணங்களைக் காட்ட முடியும். இங்கும் ‘மரத்தை மறைத்த மாமத யானை’ கதைதான்.


இன்னும் சில…     

 1. ‘தாண்டவராயன் கதை’ நாவல் பரவலாகப் படிக்கப்படவில்லையென்றாலும் ஒரு சிறு வாசகப் பரப்பு, அதிலும் இளைஞர்கள் பலர், அதைக் கொண்டாடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் சூரியனுக்கு மேலும் கீழும் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இப்படி ஒரு நாவல் வந்திருப்பதாகவோ அதைத் தாங்கள் படித்திருப்பதாகவோ காட்டிக்கொள்ளாததைத் தமிழ் நவீன புனைகதை வரலாற்றின் மாபெரும் இலக்கிய ஊழல்களுள் ஒன்றாகவே கருதுகிறேன். இந்த நாவலைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தால்கூட நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். முழு பூமியைச் சோற்றில் மறைப்பதுபோல் இந்த நாவலை மறைத்துவிட்டு, தங்களுக்கு உரிய கவனிப்போ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்டால் வேடிக்கையாகவே இருக்கிறது.
 2. நான் பா.வெங்கடேசனை அளவுக்கு மீறித் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறேனா? கொண்டாடுகிறேன், ஆனால், அளவுக்குக் குறைவாகத்தான். என் மொழியில் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆளுமை பிறந்திருக்கும்போது அவரை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? வாழும்போது கொண்டாடத் தவறிய பாரதியை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கும் சமூகம் அல்லவா நம்முடையது. பா.வெங்கடேசனை மட்டுமல்ல, அவருக்கு நிகரான, அல்லது அவரைத் தாண்டிச்செல்லும் யாரையும் நான் கொண்டாடுவேன். கற்பனை சக்தியின் சாத்தியத்தை எந்த அளவுக்கெல்லாம், அதுவும் நம் மொழியிலேயே, விரிக்க முடியும் என்று பா.வெங்கடேசன் காட்டியிருப்பது தனிப்பட்ட முறையில் எனது நன்றிக்குரியது.


கடைசியாக ஒன்று! ‘தாண்டவராயன் கதை’ நாவலைப் படித்து முடித்த கையோடு இந்தக் குறிப்புகளை நான் எழுதுகிறேன். ஆகவே, விமர்சனப் பார்வையைவிட பரவசத்தின் ஆதிக்கமே அதிகம் இருக்கக்கூடும். இந்த நாவலை இரண்டாவது முறையாகப் படித்துவிட்டு அப்போது விரிவாக எழுதுகிறேன். எதுவும் நிரந்தரமல்ல என்பதற்கொப்ப, எனக்கு இப்போது பா.வெங்கடேசனின் படைப்புகள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த உணர்வை நான் கொண்டாடுகிறேன். பிடிக்காமல் போகும்போது (அப்படி நிகழ்வதற்கு சாத்தியம் குறைவு என்றாலும்) அதையும் வெளிப்படுத்துவேன்.

Thursday, November 23, 2017

பா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி?

 

ஆசை

1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப் பிரமித்துப்போய் நின்றேன். ஆனால், ஏனோ பா.வெங்கடேசனைப் பின்தொடராமல் போய்விட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு ‘ராஜன் மகள்’  தொகுப்பு வாங்கினேன். படிக்காமலே வைத்திருந்தேன். ‘தாண்டவராயன் கதை’ நாவல் வந்தபோது இரண்டு மூன்று அத்தியாயங்கள் படித்துவிட்டு ‘அய்யய்யோ சாமி’ என்று தூக்கி அந்தப் பக்கம் போட்டுவிட்டேன். அதன் பிறகு பா.வெங்கடேசன் பெயரைப் பார்த்தாலே ‘ஆஹா, கோணங்கி வகையறா’ என்று என் தலை காததூரம் தன்னைத் தானே திருப்பிக்கொள்ளும். வாங்கிவைத்திருந்த ‘ராஜன் மகள்’ தொகுப்பையும் படிக்கவே இல்லை. நிற்க! நான் மதிக்கும் கவிஞர் ஒருவர் என்னிடம் அப்போதுதான் வெளியாகியிருந்த பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ நாவலைத் தான் படித்துக்கொண்டிருப்பதாகவும் ‘மேஜிக்கல்!’ என்றும் கூறினார். ‘என்னங்க பா.வெங்கடேசனைப் போய் அப்படிச் சொல்லுறீங்க. சரியான பம்மாத்தாயிற்றே அவர்’ என்றேன். அப்படி இல்லை, படித்துப் பாருங்கள் என்றார் நண்பர். அவரின் இலக்கிய ரசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒன்று; ஆகவே, அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து ‘பாகீரதியின் மதியம்’ நாவலைக் கையில் எடுத்தேன். எந்த முன்னபிப்பிராயமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஸரமாகூவின் நாவல்களில் நீளமான சொற்றொடர்களை நான் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். எனினும், தமிழில் அப்படி எழுதப்படுபவை அதுகாறும் எனக்கு அந்நியமாகவே தோன்றின. கோணங்கியின் ‘பாழி’, ‘உப்புக்கத்தியில் இறங்கும் சிறுத்தை’ போன்ற நூல்களைக் காசில்லாக் காலத்திலேயே சாகச முயற்சியாக விலை கொடுத்து வாங்கிப் படிக்க முயன்று தோற்றதும் இது போன்ற உணர்வுக்குக் காரணம். அந்த உணர்வையும் நான் அந்தப் பக்கம் தள்ளிவைத்துவிட்டு முதல் வரியிலிருந்து நாவலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தேன். ‘Now you see me’ என்பதைப் போல ஒருசில பக்கங்களிலேயே பா.வெங்கடேசன் திறந்துகொண்டார். இது போன்ற படைப்புகளைப் படிக்க வேறொரு மன அமைப்பு, வேறொரு பார்வை வேண்டும் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. ‘பாகீரதியின் மதியம் நாவலை இரண்டு முறை படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.

பலரும் நான் பா.வெங்கடேசனுக்கு வேண்டியவன் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். உண்மையில் நாவலின் 150-வது பக்கத்தைத் தாண்டியவுடன் அசந்துபோய் முதன்முதலில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டினேன், ‘நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அற்புதம்’ என்று (நாவலில் அவருடைய கைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது). அவர், ‘யாரென்று தெரிந்துகொள்ளலாமா?’ என்று பதில் செய்தி அனுப்பினார். நான், ‘ஜெமினி’ என்று பதில் அனுப்பினேன். அதற்குப் பிறகு நாவலைப் படித்த பிறகுதான் பா.வெங்கடேசனுடன் தொலைபேசியில் பேசினேன். அது பரவச உணர்வின் மிகுதியால் நிகழ்ந்த தொலைபேசி உரையாடல். இன்றுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.

நாவலைப் படித்து முடித்த பரவசத்திலேயே என் மதிப்புரையை எழுதினேன். அதனால் அந்தப் பரவசத்தின் கொண்டாட்டத்தையே அதில் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த நாவலையும் மதிப்புரையையும் பாராட்டிய நண்பர்கள் சிலர் நாவலைக் குறித்த விமர்சனப் பார்வையையும் என் கட்டுரையில் முன்வைத்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்கள். உண்மையில், பா.வெங்கடேசனின் எழுத்து வீச்சு, நாவலில் கருத்தியல்ரீதியாக நான் கடுமையாக மாறுபடக்கூடிய இடங்களைப் பற்றிய உணர்வை அப்போது ஆக்கிரமித்திருந்தது. நாவல் படித்துக் கொஞ்ச காலம் கடந்த பிறகு அதன் மீதான பிரமிப்பு சற்றும் குறையாமலேயே, அதன் மீதுள்ள விமர்சனங்கள் எனக்குள் துலக்கமாக ஆரம்பித்தன. குறிப்பாக, திராவிட இயக்கம் தொடர்பான பகுதிகள் நாவலில் எனக்குச் சங்கடத்தைக் கொடுப்பவை. அவற்றை நான் பா.வெங்கடேசனிடம் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவசியம் விமர்சித்து எழுதுங்கள் என்று அவர் கூறிவருகிறார். இன்னொரு முறை படித்துவிட்டுதான் அப்படி எழுத வேண்டும்.

‘பாகீரதியின் மதியம்’ முடித்துவிட்டு ‘ராஜன் மகள்’ தொகுப்பைப் படித்தேன். ஒவ்வொரு குறுநாவலையும் பெரிய நாவல்களாக எழுதியிருக்கலாமே என்று ஏக்கம் கொள்ள வைக்கும் அசாதாரணமான தொகுப்பு அது. குதூகலத்தைக் கொடுக்கும் கற்பனை வளம் பா.வெங்கடேசனுடையது என்பதை அந்தத் தொகுப்பு எனக்கு உணர்த்தியது. அதன் பிறகு, ஆழி செந்தில்நாதனைக் கேட்டு எப்படியோ ‘தாண்டவராயன் கதை’ நாவலை வாங்கிவிட்டேன். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். எந்தப் புத்தகத்தால் பா.வெங்கடேசன் புத்தகங்களையே இனி திரும்பிப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேனோ அதே புத்தகத்தை இப்போது படித்துக்கொண்டிருப்பதுதான் காலச் சுழற்சியின் விந்தை.

இதையெல்லாம் நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் உண்டு! ஒவ்வொன்றையும் அணுக வேறொரு பார்வை தேவைப்படுகிறது என்பதை பா.வெங்கடேசனின் படைப்புகள் எனக்கு உணர்த்தின. இதற்கு என் நண்பர் முக்கியமான காரணம். நிச்சயம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘பாகீரதியின் மதியம்’ நாவல் கையில் கிடைத்திருந்தால் ஐந்து பக்கங்கள் கூடப் படித்திருக்க மாட்டேன். பம்மாத்து என்று சொல்லியிருப்பேன். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மௌனி, அசோகமித்திரன் என்று பழகிய பாட்டையிலேயே தமிழில் முன்பு என் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு திறப்பு என்னில் நிகழ்ந்ததுதான் பா.வெங்கடேசனை நோக்கி நான் வந்திருப்பதற்கான காரணம். அதுவரை இருந்தது சட்டென்று வேறொன்றாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எந்த ஒரு படைப்பையும் முழுமனதுடன், திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்ற உணர்வும் இப்போது வந்திருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, பா.வெங்கடேசனை நான் படிப்பதென்பது எனக்கு, என் கற்பனைக்கு நான் செய்துகொள்ளும் பேருதவி என்பதை நான் இப்போது உணர்கிறேன். 

   

Wednesday, November 22, 2017

மனிதர்களின் எதிர்காலம் என்ன? டான் பிரவுனின் நாவலை முன்வைத்து…


ஆசை
(‘தி இந்து’ நாளிதழில் 22-11-2017 அன்று வெளியான எனது கட்டுரையின் மிக விரிவான வடிவம்)

வெகுஜன இலக்கிய வரலாற்றில் டான் ப்ரவுனின்தி டா வின்சி கோடு’ (2003) நாவலுக்கு இணையாகப் பரபரப்பையும் சர்ச்சையையும் சமீப காலத்தில் எழுப்பிய வேறொரு நாவலை நாம் சொல்லிவிட முடியாது. கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அந்த நாவல் கடுமையான எதிர்ப்புக்குள்ளானது. அந்த எதிர்ப்பே அந்த நாவலை நம்பவே முடியாத அளவுக்குப் பிரபலமாக்கியது. இதுவரை எட்டு கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கிறது. அந்த நாவலுக்குப் பிறகு எழுதியதி லாஸ்ட் சிம்பல்’ (2009), ‘இன்ஃபெர்னோ’ (2013) ஆகிய நாவல்களில் சர்ச்சையான விஷயங்களை டான் பிரவுன் தொடாததால் எதிர்ப்பு, விற்பனை இரண்டிலும் டா வின்சி கோடுநாவலை நெருங்க முடியவில்லை. தற்போது, மீண்டும்தி டா வின்சி கோடுகாலத்துக்குத் திரும்ப அவருக்குள் ஆவல் எழுந்திருக்கிறது போல. சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரதுஆரிஜின்’ (தோற்றுவாய்) நாவலைப் படித்த பிறகு அப்படித்தான் தோன்றுகிறது.

இந்த நாவலில் குறிப்பிட்ட ஒரு மதம் என்றில்லாமல் எல்லா மதங்களையும் எல்லாக் கடவுள்களையும் டான் குறிவைத்திருக்கிறார். கதை நடைபெறும் இடம் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஸ்பெயின் என்பதால் டான் பிரவுனின் அம்புகள் கிறிஸ்தவத்தை நோக்கியே அதிகம் பாய்ந்திருக்கின்றன.

டான் பிரவுனின் பிரத்யேக நாயகரானகுறியியல்துறை பேராசிரியர் ராபர்ட் லாங்டனுக்கு (Robert Langdon) ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள அவசர அழைப்பு வருகிறது. அழைப்பு விடுத்தவர் ராபர்ட்டின் முன்னாள் மாணவர் எட்மண்ட் கிர்ஷ் (Edmond Kirsch). 40 வயதாகும் எட்மண்ட் கிர்ஷ் இளம் வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர். எதிர்காலவியல் நிபுணர். தொழில்நுட்பத்தில், குறிப்பாக, கணினித் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் போன்றவற்றில் எதிர்காலத்தில் நிகழவிருப்பவற்றை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்துக் கூறியவர்.

நிகழ்வு நடைபெறும் இடமான ஸ்பெயின் நாட்டின் பில்பாவ் நகரிலுள்ள க்யுகென்ஹெய்ம் நவீனக் கலை அருங்காட்சியகத்துக்கு ராபர்ட் செல்கிறார். வழக்கமாக டான் பிரவுனின் நாவல்களில் கொலையோ, திடுக்கிடச் செய்யும் பிற நிகழ்வுகளோ நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே நிகழ்ந்துவிடும். இந்த நாவலில் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்துக்காக 100 பக்கங்களை டான் பிரவுன் செலவழித்திருக்கிறார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அந்த அருங்காட்சியகத்திலுள்ள நவீன ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்த்துக்கொண்டே வருகிறார். அந்த ஓவியங்களைப் பற்றி அவருக்கு விளக்குவதற்கு அவர் கன்னத்தில் ஒட்டிக்கொண்ட அதிநவீன ஒலிக்கடத்தி மூலம்  துணைபுரிவது வின்ஸ்டன் என்ற பெயர் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவுச் சாதனம் (Artificial Intelligence Technology). இந்த நாவலின் மிக முக்கியமான பாத்திரங்களுள் ஒன்று வின்ஸ்டன். ஒரே நேரத்தில் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரத்யேகமாக வின்ஸ்டன் வழிகாட்டுவதுதான் இதில் விசேஷம்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எட்மண்ட் தனது முன்னாள் ஆசிரியரான ராபர்ட்டை ரகசிய இடத்தில் சந்திக்கிறார். இந்த உலகத்தையே புரட்டிப்போடக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை இன்று தான் அறிவிக்கப்போவதாகச் சொல்கிறார் எட்மண்ட். ‘எங்கிருந்து நாம் வந்தோம்?’ ‘நாம் எங்கே செல்வோம்?’ என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடையைத் தான் கண்டுபிடித்திருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பை வெளியிடும்போது மதங்களின் இடமும் கடவுள்களின் இடமும் தகர்க்கப்படும் என்று எட்மண்ட் குறிப்பிடுகிறார்.

அந்த அருங்காட்சியகத்தின் இயக்குநரும் ஸ்பெயினின் வருங்கால மன்னரைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பவருமான ஆம்ரா பீடல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து தொடங்கிவைக்கிறார். தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசத் தொடங்கும்போதுஓய்வுபெற்ற கப்பற்படை வீரர் ஒருவரால் எட்மண்ட் சுட்டுக்கொல்லப்படுகிறார். கொலையாளி தப்பி ஓடிவிடுகிறார்.

தன் மாணவர் கொல்லப்பட்டதை அடுத்து அவரின் கண்டுபிடிப்பை இந்த உலகத்தின் முன் வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்கும் ராபர்ட், ஆம்ரா பீடலுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல காவல்துறையின் சந்தேகப் பார்வை ராபர்ட் மீது விழுகிறது. எட்மண்டின் ரகசிய அலுவலகத்தில் உள்ள கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் அவரது கண்டுபிடிப்பின் கோப்பைத் திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்காக ஸ்பெயினின் கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்ற சில கட்டிடங்கள் வழியாக ராபர்ட்டும் ஆம்ரா பீடலும் தேடல் வேட்டை நிகழ்த்தி இறுதியில் கடவுச் சொல்லைக் கண்டுபிடிக்கிறார்கள். நாவலின் போக்கில் கதாசிரியர் டான் பிரவுனும், கதாநாயகர் ராபர்ட் லாங்டனும் மத அமைப்புகள், அறிவியல் தகவல்கள், நவீன - மரபு கட்டிடக் கலை, ஓவியங்கள், ஸ்பெயின் வரலாறு போன்றவற்றைப் பற்றி பாடம் நடத்துகிறார்கள். இதற்கிடையே காவல்துறை துரத்தல், கொலையாளியின் குறுக்கீடு, சில கொலைகள் என்று கதை செல்கிறது. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது நமக்குப் பெரும் அச்சம் தோன்றுகிறது.


எட்மண்டின் கோப்பைத் திறந்த பிறகு அதை உலகெங்கும் இணையத்தில் அதிக அளவிலான பார்வையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியை வின்ஸ்டன் செவ்வனே செய்கிறது. எட்மண்டின் கண்டுபிடிப்பு இந்த உலகையே புரட்டிப்போடப் போதுமானதாக இருக்கிறதா, இல்லையா என்பதை இறுதியில் வாசகர்கள் அறிந்துகொள்கிறார்கள்.


இரண்டு கேள்விகள்
எங்கிருந்து வருகிறோம்?’ ‘நாம் எங்கே செல்லப்போகிறோம்?’ விடையை நாவலின் இறுதிப் பகுதியில் எட்மண்டின் பல்ஊடக விளக்கம் கூறுகிறது. பிரபஞ்சத் தின் மைய நோக்கமே வெப்ப ஆற்றல் பரவலும் ஒழுங்கின்மையும்தான். ஒழுங்குபடுத்திக் குவிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டு இந்தப் பிரபஞ்சம் தன் ஒழுங்கின்மையை விரித்துக்கொண்டே செல்கிறது. வெப்ப ஆற்றலைப் பரப்பும் வேலையை மிகவும் திறமையாகச் செய்யக்கூடியவை உயிரினங்கள். இந்தத் தேவை காரணமாகத்தான் உயிரினங்கள் தோன்றின என்று பல்வேறு அறிவியலாளர்களின் பேட்டிகளுடன் செல்கிறது எட்மண்டின் காணொலி. டார்வினின் கோட்பாடு பரிணாமக் கொள்கையை விளக்குகிறது என்றால் இந்தக் கோட்பாடு உயிர்கள் உருவான விதத்தை விளக்குகிறது. ஆக, உயிர்களின் தோற்றத்தில் கடவுளுக்குப் பங்கு இல்லை என்கிறார் எட்மண்ட்.

அடுத்து, ‘எங்கே செல்லப்போகிறோம்?’ என்ற கேள்விக்கான பதில். எட்மண்டின்நிகழ்போலி’ (simulation) விவரிப்பு விலங்கினப் பரிமாணத்தின் 10 கோடி ஆண்டுகளைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டத்தில் எந்தெந்த உயிரினங்கள் இந்த பூமியை ஆக்கிரமிப்பு செலுத்தின என்பதை விவரிப்பின் வரைபடம் காட்டுகிறது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை டைனசோர்கள் ஆக்கிரமித்திருந்ததை திரையில் தெரியும் வரைபடத்தில் குமிழ்குமிழான புள்ளிகள் நமக்குக் காட்டுகின்றன. அப்படியே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு உயிரினங்கள். மனித இன ஆக்கிரமிப்பு என்பது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குவதை நீலநிறக் குமிழ்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000-வது ஆண்டுவரையும் அந்த ஆதிக்கம் அப்படியே தொடர்கிறது. கி.பி. 2000-லிருந்து சிறிய கரும் புள்ளி திரையில் தோன்றுகிறது. 2050-க்கு, அதாவது எதிர்காலத்துக்கு நகர்த்தும்போது திரை முழுக்க அந்தக் கருநிறம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அது மனித இனத்தை அழித்துவிடவில்லை; உட்கிரகித்துக்கொண்டிருக்கிறது. அது என்ன புதிய உயிரினம் என்று கேட்கிறீர்களா? துல்லியமாகச் சொல்லப்போனால் அது உயிரினம் இல்லை, தொழில்நுட்பம் (Technium). உயிரினங்களை விட வேகமாக அதுவும் பரிணாமமடைகிறது. ஆற்றலை உட்கிரகித்துக்கொண்டு ஆற்றலை வெளியிட்டு ஆற்றல் பரவலுக்கு உதவுகிறது. ஆக, இயற்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள ஆறு பெரும் உயிரினப் பிரிவுகளுடன் ஏழாவதாக ‘தொழில்நுட்பம்’ என்ற பிரிவும் சேர்ந்திருக்கிறது என்கிறார் எட்மண்ட். பலரும் இதைக் கணித்திருந்தாலும் தான்தான் அதன் ‘மாதிரி’யை உருவாக்கியதாக எட்மண்ட் கூறுகிறார். மனித இனமும் தொழில்நுட்பம் என்ற இனமும் இரண்டறக் கலந்துவிடும் என்கிறார் எட்மண்ட். எப்போதும் கைபேசி, காதில் இசையொலிக்கருவி, கண் முன் கணினி என்று நமக்கு வெளியில் தொழில்நுட்பத்தை வைப்பது மட்டுமல்ல. நம் மூளையில் கணினிச் சில்லுகளைப் பொருத்தத் தொடங்கியிருக்கிறோம். இன்னும், கொழுப்பை அகற்றும் விதத்தில் ரத்தத்தில் செலுத்தி நமக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கும் ‘நானோபோட்’கள், மரபணு செம்மையாக்கம் என்று தொழில்நுட்பம் நமக்குள் ஊடுருவுவதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எட்மண்ட் கூறுகிறார்.

பிரகாசமான எதிர்காலம்?
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் ‘டிஸ்டோபியன்’ படங்களைப் போல ஒரு எதிர்காலத்தை எட்மண்ட் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் அதற்கு மாறாக, பிரகாசமான ஒரு எதிர்காலத்தை எட்மண்ட் முன்வைக்கிறார். எதிர்காலத் தொழில்நுட்பம் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டை ஒழித்து, அனைவருக்கும் உணவு, குடிநீர், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களற்ற நிலை, சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி போன்றவற்றைத் தரும் என்று எட்மண்ட் வாயிலாக டான் பிரவுன் நம்பிக்கையளிக்கிறார். கடும் உழைப்பிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கும் என்கிறார். இப்படியெல்லாம் நடந்தால் நல்லதுதான். ஆனால், மனித குல வரலாற்றிலேயே தொழில்நுட்பத்தில் உச்சநிலையை அடைந்திருக்கும் கடந்த நூறு ஆண்டுகளாகத்தானே உலகில் வறுமை, ஏற்றத்தாழ்வு, சூழல் மாசுபாடு போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்திருக்கின்றன! மதங்களும் கடவுள்களும் மனித குலத்தை விடுவிக்கவில்லை என்பதும் பேரழிவுகளுக்குக் காரணமாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், மதங்களின், கடவுள்களின் இடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வந்து உட்கார முயலும் தொழில்நுட்பமும் (அதாவது அறிவியல்) அதையேதானே செய்கிறது. மதமும் அறிவியலும் முதலாளித்துவத்துக்கான கருவிகளாக இங்கு மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை டான் பிரவுன் கண்டுகொள்ளவே இல்லை.

தொழில்நுட்பம் குறித்த சிறிய அளவிலான விமர்சனம் என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து நாவலில் வெளிப்படும் அச்சம் மட்டுமே. ஆனால், இதையெல்லாம் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001- எ ஸ்பேஸ் ஒடிஸி’ உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான அறிவியல் புனைகதைகளிலும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

இந்த பூமியையே அழித்துவிடக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மிடையே உள்ளன; எனினும் நாம் இன்னும் அப்படிச் செய்யவில்லைதானே. இந்த உலகில் வெறுப்பைவிட அன்பு அதிகமாக இருக்கிறது; அழிவுச் சக்தியை விட ஆக்க சக்தி அதிகமாக இருக்கிறதுவெறுப்பைவிட அன்பு பல்கிப்பெருகிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படுத்தும் வழிமுறையைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்என்று ஒரு பேட்டியில் டான் பிரவுன் கூறியிருப்பது நெகிழ்ச்சியூட்டுகிறது. இதுவரை பூமியைத் தொழில்நுட்பம் துடைத்தழித்துவிடவில்லை என்றாலும் அந்த சாத்தியம் இன்னும் இருந்துகொண்டிருக்கிறதுதானே! மதம், அறிவியல் இரண்டையும்விட மேலானது மட்டுமல்ல, அவற்றுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதும்அறம்அல்லவா!

மேலும், கடவுளின் இடத்தைத் தகர்த்துவிடுபவை என்று எட்மண்ட் முன்வைக்கும் கண்டுபிடிப்புகளைப் பார்த்து மத அடிப்படைவாதிகள் சிரிக்கக்கூடும். வெப்ப ஆற்றல் பரவலுக்காகத்தான் உயிர்கள் தாமாகத் தோன்றின என்றால் அந்தச் சூழலை உருவாக்கியது யார் என்ற கேள்வியைத்தான்கடவுள் படைத்த உலகு’ (Creationism) கோட்பாட்டுக்காரர்கள் இயல்பாகவே முன்வைப்பார்கள். கடவுளை மறுப்பதற்கான பல மடங்கு வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் எத்தனையோ பேர் முன்வைத்திருக்கிறார்கள். கோப்பர்நிக்கஸ், கலீலியோ, டார்வின் போன்றோரின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் மதங்களின், கடவுளர்களின் செல்வாக்குக்குக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா என்ன? மேலும், மதங்களோ அறிவியலோ இரண்டும் நிறுவனமயமாவதில்தான் சிக்கலே இருக்கிறது. நாட்டார் தெய்வங்களால் பேரழிவுப் போர்கள் ஏற்பட்டதாகச் சரித்திரம் இல்லையல்லவா! மேலும், (நான் உட்பட) எவ்வளவுதான் பகுத்தறிவின், அறிவியலின் முக்கியத்துவத்தைப் பேசினாலும் இந்த உலகில் மனித இனம் இருக்கும்வரை ஆன்மிகத் தேவை இருக்கத்தான் செய்யும். அந்த இடத்தை அறிவியலால் தகர்க்கவே முடியாது.  

தோற்றுவாயின் தோற்றுவாய்
உயிர்களின் தோற்றத்துக்கு வெப்ப ஆற்றல் பரவல்தான் காரணம் என்ற கருதுகோளை ஜெரெமி இங்கிலாந்து என்ற இளம் அறிவியலாளர் சமீப காலமாக முன்வைத்துவருகிறார். இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கருதுகோளை எட்மண்ட் தன் கண்டுபிடிப்பாக, அதுவும் உலகையே புரட்டிப்போடும் கண்டுபிடிப் பாக முன்வைப்பதுபோல் டான் பிரவுன் எழுதியிருப்பது வேடிக்கை! ‘எங்கு செல்கிறோம்?’ என்பதற்கான பதிலும் அப்படித்தான். எதிர்காலவியல் நிபுணர் கெவின் கெல்லி முன்வைத்த கோட்பாட்டைத்தான் எட்மண்ட் வாயிலாக டான் பிரவுன் முன்வைக்கிறார்.

ஆக, கதை நெடுக டான் பிரவுன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை அவர் அளிக்கும் விடைகள் பூர்த்திசெய்யவில்லை என்பதே உண்மை.  டான் பிரவுனின் நாவல்கள் விற்பனையில் அடைந்திருக்கும் உச்சத்தின் சிறு உயரத்தையாவது அவரது கற்பனை எட்டிப்பிடிக்காததன் விளைவுதான் ‘ஆரிஜின்’ நாவல். உலகத்தையே புரட்டிப்போடும் கண்டுபிடிப்பை முன்வைப்பதற்கு இரண்டு சாத்தியங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, கலீலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டைன் போன்றோருக்கு நிகரான ஒரு விஞ்ஞானியாக டான் பிரவுன் இருக்க வேண்டும்; இல்லையென்றால், அசாத்தியமான கற்பனையைக் கொண்ட படைப்பாளியாக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் சேராத ஒரு மூன்றாவது சாத்தியத்தைத்தான் டான் பிரவுன் தேர்ந்துகொண்டிருக்கிறார்: கெட்டிக்காரத்தனம்!


தி டா வின்சி கோடு X ஆரிஜின்
தி டா வின்சி கோடு’ நாவலுக்கும் ‘ஆரிஜின்’ நாவலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு ‘தி டா வின்சி கோடு’ நாவலைத் தான் எழுதியதாக டான் பிரவுன் கூறினாரோ அந்த ஆதாரங்களில் சில போலியானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆயினும், அதில் சொல்லப்பட்டிருந்த ஏனைய விஷயங்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ரகசியக் குழுக்கள், சடங்குகள் போன்றவற்றைத் தாண்டி ‘புனிதப் பெண்மை’ குறித்து அந்த நாவல் பேசியது மிகவும் முக்கியமானது. நிறுவனமயமாக்கப்பட்ட கிறிஸ்தவம் (அதாவது இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவம் அல்ல) எப்படிப் பெண்ணைப் பாவத்தின் மூலாதாரமாகப் பார்க்கிறது, காலகாலமாகப் பெண்ணை எப்படி ஒடுக்கிவருகிறது என்பதைப் பற்றிய தீவிரமான விவாதங்களை ‘தி டா வின்சி கோடு’ எழுப்பியது. வெகுஜன, பரபரப்பு நாவல்தான் என்றாலும் டான் பிரவுனின் கற்பனையானது அந்த நாவலில் பல்வேறு புள்ளிகளை இணைத்து, வாசகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தையும் கொடுத்தது. ‘ஆரிஜின்’ நாவலிலோ கற்பனையை விடுத்துவிட்டு உண்மையான அறிவியல் கருதுகோள்கள்களின் அடிப்படையில் புள்ளிகளை இணைக்க டான் பிரவுன் முயன்றிருக்கிறார். அதற்காக, ஏராளமான பரபரப்பையும் சேர்த்திருக்கிறார். புள்ளிகளைக் கற்பனை கொண்டு அல்லாமல் தகவல்களைக் கொண்டு இணைக்க முயன்றதால் வெகுஜன வாசிப்பு அளவுகோல்களிலும் நாவல் வீழ்ந்துவிடுகிறது.    

தி டா வின்சி கோடுநாவல் அளவுக்கு எதிர்ப்பு உருவாகும் என்ற கற்பனையில் டான் பிரவுன் இந்த நாவலை எழுதியிருக்கக்கூடும் என்று சர்வநிச்சயமாகத் தெரிகிறது! ஆனால், இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நீக்கமற வியாபித்திருக்கும் இன்றைய உலகில் இன்னும் விக்கிபீடியா தன்மையில் தன் நாவல்களை டான் பிரவுன் எத்தனை காலம் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை

-நன்றி: ‘தி இந்து’ தமிழ்.