Thursday, February 14, 2019

காதலெனும் பொருண்மை - ஜலாலுதீன் ரூமி



(காதலர் தினத்தை முன்னிட்டு 14-02-2019 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான ரூமியின் கவிதை, என் மொழிபெயர்ப்பில்)

இவ்வேட்கையால் தணிவுற்ற
காதலர் யாரையும்
கண்டதுண்டோ நீ?
இக்கடலால் தணிவுற்ற
மீனெதையும் கண்டதுண்டோ நீ?

சைத்ரீகனிடமிருந்து தப்பியோடும்
சித்திரம் எதையும்
கண்டதுண்டோ நீ?
அஸ்ராவிடமிருந்து மன்னிப்பு கோரும்
வாமிக் யாரையும்
கண்டதுண்டோ நீ?

பிரிவில் காதலர்
பொருளற்ற பெயர் போல்
காதலெனும் பொருண்மைக்கோ
தேவையில்லை பெயரேதும்.

நீ கடல் நான் மீன்
உன்னிஷ்டம் போல்
ஏந்திக்கொள் என்னை
கருணை செய்,
ராஜவல்லமை செய்,
நீயின்றி நானோ தனியனாகிறேன்.

பெருந்திறன் பேரரசே,
கருணையில் ஏனிந்த சுணக்கம்?
ஒரு நொடி நீயில்லாவிடினும்
தீயெழுந்து வானுயரும்.
அத்தீயுன்னைக் கண்டால்
ஒதுங்கிக்கொள்கிறது ஒரு மூலையில்
தீயிலிருந்து ரோஜா பறிப்பவர் எவருக்கும்
அற்புத ரோஜா நீட்டுகிறது தீ.

பெருந்துயரம் இவ்வுலகெனக்கு நீயின்றி,
நீயில்லாத ஒரு கணமேனும்
கூடாது.     
உன் ஜீவன் மீது ஆணையாக,
நீயில்லாத வாழ்வெனக்குச்
சித்ரவதையும் வலியுமே!

ஒரு சுல்தான் போல்
ராஜ நடை போடுகிறது
உன்னுரு என்னிதயத்துள்,
ஜெருசலேம் தேவாலயத்துள் நுழையும்
சுலைமான் போலவும்.

ஆயிரம் தீப்பந்தங்கள் உயிர்கொள்ள
மசூதி ஒளிர்வுகொள்கிறது
சொர்க்கத்திலும் கௌஸார் பொய்கையிலும்
நிரம்பி வழிகிறார்கள்
ரித்வான்களும் ஹூரிகளும்

மாட்சிமை மிகு அல்லா,
மாட்சிமை மிகு அல்லா,
விண்ணகத்தில் எத்தனையெத்தனை நிலாக்கள்!
இந்தப் பீடம் முழுவதும்
அவ்வளவு ஹூரிக்கள்
விழியற்றோருக்கு மட்டும் புலப்படாமல்.

சடுதியான, ஆனந்தமான பறவையே
நேசத்துக்குள் முகாமிடுகிறது.
காஃப் மலையில் முகாமிட்டு வசிக்க
அன்காப் பறவையன்றி வேறு யாரால் முடியும்?

சடுதியான, ராஜ அன்கா, பேரரசன் ஷம்ஸ்!
கிழக்கு, மேற்கு மட்டுமல்ல
எவ்விடத்தையும் சாராதது
அந்தச் சூரியன்!
- தமிழில்: ஆசை