Wednesday, December 1, 2021

சிறுகதை - கொண்டலாத்தியைப் பார்க்காமல் அப்பா சாகக் கூடாது

 


ஆசை

பனி பெய்யும் காலைப் பொழுதுக்கு இதமாகக் கையில் காப்பிக் கோப்பையையும் நாளிதழையும் எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தேன். அங்கிருந்த படி, திண்ணையின் கொசுக்கதவு வழியாக வாசலைப் பார்த்தேன். வாசலில் சில மீட்டர்களைத் தாண்டி எல்லாமே மங்கலாகிவிடும் அளவுக்குப்  பனி பெய்துகொண்டிருந்தது. உண்மையில் பெய்வதைப் போலத் தெரியவில்லை. அது ஆவியாகத் தரையிலிருந்து அந்தரம் வரை நிறைந்திருந்ததைப் போலத் தெரிந்தது. அந்தத் திரைக்குள்ளிருந்து வந்து வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு பறவை. அது கொண்டலாத்தி. கறுப்பும் வெள்ளையுமான பட்டைகளுடன் கழுத்திலும் மார்பிலும் செம்பழுப்பு நிறம் கொண்டிருந்தது. தலையில் விசிறிக் கொண்டை. வாசலில் என்ன கிடக்கிறதென்று தெரியவில்லை, மும்முரமாகக் கொத்திக்கொண்டிருந்தது. எப்போதும் ஆள் இருந்தால் பறந்துசென்றுவிடும் கொண்டலாத்தி பத்தடி தூரத்துக்குள் நான் இருந்தும் பொருட்படுத்தாமல் அங்கே எதையோ கொத்திக்கொண்டிருந்தது. கொசுக்கதவின் ஊடே பார்க்கும்போது வலைபோன்ற கித்தானில் வரையப்பட்ட சித்திரம் போன்று இருந்தது. ஏற்கெனவே அழகு மிக்க கொண்டலாத்தி பனியினூடே இன்னும் பேரழகாகத் தெரிந்தது. கொண்டலாத்தியை அதுவரை நேரில் பார்த்திராத என் மகன் அவசியம் இதைப் பார்க்க வேண்டும் என்று நான் அவனை மெதுவான குரலில் அழைத்தேன். அப்போதுதான் எழுந்திருந்த அவன் சோம்பல்முறித்தபடியே வெளியே வந்தான். “சத்தம் போடாமல் அங்கே பார், கொண்டலாத்தி” என்று காட்டினேன். பார்த்துவிட்டு “வாவ், எவ்வளவு அழகா இருக்குப்பா. தம்பியை எழுப்புறேன்” என்றான். “அவனை எழுப்பாதே. தாத்தாவைக் கூப்பிட்டு வா. அவர் கொண்டலாத்தி பார்த்ததே இல்லை” என்றேன். என் அப்பாவை அழைக்க அவன் உள்ளே போனான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கைபேசி அழைப்பு என்னை எழுப்பியது. மணி காலை ஏழரை. இந்த நேரத்தில் கூப்பிடுகிறார்களே என்று எடுத்து பதினோரு மணிக்குக் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்தேன். கலைந்த தூக்கம் மீண்டும் வருவதுபோல் தெரியவில்லை. இப்போது கனவு எனக்கு நினைவுக்கு வந்தது. சரியாக அப்பாவைக்  கூப்பிடும் நேரத்தில் என் கனவு துண்டிக்கப்பட்டதை எண்ணி ஒரே நேரத்தில் கோபமும் வியப்பும் ஏற்பட்டது. அந்தக் கனவையும், அதன் குறுக்கீடலாய், அதுவும் மிகச் சரியாக அப்பாவை அழைக்கப்போவதற்கு முன்பு முந்திக்கொண்ட குறுக்கீடலாய் வந்த அந்தக் கைபேசி அழைப்பையும் பேரண்டத்தின் பிரம்மாண்டமான சதித் திட்டங்களில் ஒன்றாகவே பார்க்க முடிகிறது. சில விஷயங்களை நாம் எவ்வளவு முயன்றாலும் நாம் முயல்கிறோம் என்பதை அறிந்துகொண்டு அதைத் தெரிந்துகொள்ள முடியாதபடி பேரண்டம் ஏதாவதொரு வழியில் தடுத்துவிடும் என்று நான் இயற்பியல் புத்தகமொன்றில் படித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெய்யுலகில் இறந்துபோன என் அப்பா அந்தக் கனவில் உயிருடன் இருந்தாரா, அவரை என் மகன் அழைத்துக்கொண்டு வந்தானா, அவர் கொண்டலாத்தி பார்த்தாரா, அவர் கொண்டலாத்தியைப் பார்க்க வேண்டும் என்று நான் துடித்தது ஏன் என்பதைப் பற்றியெல்லாம் இனி ஒருபோதும் என்னால் அறிந்துகொள்ள முடியாது என்பது எனக்குள் மெலிதான ஏக்கத்தை ஏற்படுத்தியது. ‘தாத்தாதான் செத்துப்போய்விட்டாரே அப்பா?’ என்று சொல்லாமல் அவரை அழைக்க என் மகன் உள்ளே சென்றது ஏன்? ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சியொன்றில் திருடன் வெகு நேரமாகியும் வராததைக் கண்டு காவலர்கள் கதவைத் திறந்தால், கதவுக்கு அப்பால் வெட்டவெளி தெரிவதைப்போல என் மகன் உள்ளே செல்லும்போது கதவுக்கு அப்பால் வீடு இருப்பது போன்றில்லால் அந்தகார அத்துவானம் ஒன்று இருப்பதுபோல்தான் தெரிந்தது. 

அந்த வீடு நிஜத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான். சாத்தியங்களின் அத்துவானத்தில்தான் இருந்துகொண்டிருந்தது/ இருந்துகொண்டிருக்கிறது. கனவில் வந்த வீடு இருப்பது பாமணியாற்றங்கரையில், சாலையோரத்தில், சாலைக்கும் வாய்க்காலுக்கும் இடையில், புறம்போக்கில். ஆகவே, எப்போது இடிப்பார்கள், எப்போது ஆற்று வெள்ளம் வரும் என்ற நிச்சயங்கள் அற்ற வாழ்க்கை. என் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகள்அந்த வீட்டில்தான் கழிந்தன. ஆற்றங்கரை, வாய்க்கால் போன்றவற்றின் அருகாமை சிறு வயதில் அந்த வீட்டை எனக்குச் சொர்க்கமாக மாற்றினாலும் கழிப்பறை வசதியில்லாதது கல்லூரிப் பருவத்தில் அந்த வீட்டை வெறுக்க வைத்தது. வெறுப்புக்கு முக்கியக் காரணம் அக்காவோ அம்மாவோ நாங்களோ கழிப்பறை வசதியில்லாததால் ஆற்றங்கரைச் சரிவில் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய நிலையை எண்ணியல்ல; மழைக்காலங்களில் பிசுபிசுத்த ஆற்றங்கரைச் சரிவில் மலம்கழிக்க இடம் தேடி நாங்கள் அலையும் சிரமங்களால் அல்ல; எப்போதோ சென்னையிலிருந்து வீட்டுக்கு வரும் அண்ணன் இந்த அசௌகரியங்களால்  அப்பாவையும் அந்த வீட்டையும் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்ததால் அல்ல; கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டுக்கு ஒரே ஒரு முறை வந்த, நான் காதலிக்கும் பெண் ‘கழிப்பறை எங்கே இருக்கிறது’ என்று கேட்டபோது தயக்கத்துடன் கொல்லையில் வாய்க்காலுக்கு அருகில் உள்ள தட்டி மறைப்பைக் காட்டியபோதுதான் அந்த வீட்டை அவ்வளவு தீவிரத்துடன் வெறுக்க ஆரம்பித்தேன். அவள் நெற்றி சுருங்கி முகத்தில் ஒரு சுளிப்பு ஏற்பட்டபோது செத்துப்போய்விடலாமா என்னுமளவுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், முதல்முதலாக ஒரு தட்டிமறைப்புக்குப் பின்னால் அப்போதுதான் சிறுநீர் கழித்திருக்க வேண்டும். அவள் என்னை ஏற்காமல் போனதற்கு அந்த வீடுதான் முக்கியக் காரணம் என்று அந்த வீட்டின் மேலும் அதை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சமையற்காரரிடமிருந்து வாங்கியிருந்த அப்பா மீதும் ஆத்திரஆத்திரமாக வந்தது. அப்படி ஆத்திரம் வரும்போதெல்லாம் அப்பாவைத் திட்டித் தீர்த்தேன். அவர் பதிலுக்கு “நான் என்னத்தையப்பா கொண்டுவந்தன், மாளிக வீடு கட்டுறதுக்கு? என் அப்பன் கோவணம் அவுத்த நேரம், என்னால முடிஞ்சது இவ்வளவுதான்” என்று சில சமயம் அழுகையை அடக்கிக்கொண்டு குமுறியிருக்கிறார். 

அந்த வீட்டுக்குப் பட்டா வாங்குவதற்கு ஒரு பக்கம் அப்பா முயன்றுகொண்டிருந்தார் என்றால் ஏதாவது நடந்து அந்த வீடு தரைமட்டமாகிவிடாதா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அதில் கொஞ்சமும் நடந்தது. திண்ணைக்கு வெளியே சாலையை ஒட்டி அப்பா கட்டியிருந்த சுவரை, சாலை போடும்போது இடித்துவிட்டார்கள். வேளாண் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக அப்பா வேர்வை சிந்தி உழைத்துப் பெற்ற ஆறு மாத சம்பளம் தரைமட்டமாகப் போனது. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். பொதுப்பணித் துறை அசைந்துகொடுக்கவில்லை. அவரது கட்சியபிமானமும் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாததால் காப்பாற்றவில்லை. அவரது கண்களில் முன்சுவர் இடிந்துவிழுந்துகொண்டிருந்தது. அப்போது எனக்கு மகிழ்ச்சி அல்ல, குற்றவுணர்வுதான் ஏற்பட்டது. எனினும் முன்சுவர் இடிக்கப்பட்டதை முன்வைத்து அந்த வீட்டின் நிலையற்றதன்மையைச் சுட்டிக்காட்டி மீண்டும் சில நாட்களுக்குள் சண்டை பிடித்தேன். அவரும் வழக்கமான ஒப்பாரியையே வைத்தார். 

சென்னைக்கு வந்த பிறகு விடுதி, அண்ணன் வீடு, நண்பர்களுடன் பல்வேறு அறைகள், பின் திருமணம் ஆன பின் வாடகை வீடுகள், தற்போது சென்னை புறநகர்ப் பகுதியொன்றில் மனைவி பிள்ளைகளுடன் ஒரு சொந்த வீடு என்று அந்த வீடில்லாமல் ஒரு 21 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும், நான் எந்த வீட்டின் மேல் அவ்வளவு ஆங்காரம் காட்டினேனோ அந்த வீடுதான் அதை நீங்கிய 21 ஆண்டுகளில் என் கனவுகளில் திரும்பத் திரும்ப வந்தது. இந்த ஆண்டுகளில் நான் இருந்த வேறு எந்த வீடும் ஒரு முறைகூட என் கனவில் வந்ததில்லை. என்னைத் தண்டிப்பதற்கென்றே மூர்க்கத்துடன் அந்த வீடு இப்படிச் செய்வதைப் போல் இருந்தது. அந்த வீட்டுக்கு ஒருபோதும் சென்றிராத என் மனைவி, மகன்கள் வரும் கனவுகள்கூட அந்த வீட்டில்தான் நிகழ்ந்தன. இவ்வளவு ஏன் அந்த வீட்டைக் குறித்துத் தன் முகத்தில் அருவருப்பை வெளிப்படுத்திய என் காதலியும் கூட கனவுகளில் அந்த வீட்டில்தான் என்னைச் சந்தித்துக்கொண்டிருக்கிறாள். அந்தக் கனவுகளில் அவள் ஒருமுறைகூட கழிப்பறை எங்கே என்று கேட்டதில்லை. நானும், கனவுகளில் காதலிகளுக்குச் சிறுநீர் வருமா வராதா என்று யோசித்துப்பார்த்ததில்லை. நான் நிறைய தடவை கனவுகளில் சிறுநீர் கழித்திருக்கிறேன் என்பது வேறு விஷயம். 

அந்த வீட்டைத்தான் கொண்டலாத்தியும் தன் கனவுக்குத் தேர்ந்தெடுத்தது. பழைய ஏற்பாட்டில் அசுத்தமான பறவைகளில் ஒன்றாகக் கருதப்பட்டதும், குர் ஆனில் சாலமன் (சுலைமான்) மன்னனின் சிறப்புத் தூதுவராகக் கூறப்பட்டதும், பாரசிகப் சூஃபிக் கவிஞர் ஃபரீதுதூன் அத்தார் கி.பி. 1177-ல் எழுதிய ‘பறவைகளின் மாநாடு’ காவியத்தில் ‘உலகிலேயே ஞானமிக்க பறவை’ என்று குறிப்பிடப்பட்டதுமான கொண்டலாத்தி நான் வெறுத்த, அப்பா தன் முழுமூச்சுடன் காப்பாற்றப் போராடிய அந்த வீட்டைத்தான் என் கனவில் வருவதற்குத் தேர்ந்தெடுத்திருந்தது. அந்த வீட்டைப் போல, அப்பாவைப் போல, அதுவும் என்னைப் பழிவாங்க வந்திருக்குமோ என்று யோசித்துப் பார்க்கிறேன். அல்லது சாலமன் மன்னனின் தூதுவராக இருந்ததுபோல் தற்போது இறந்துபோன என் அப்பாவின் தூதுவராக அது ஏதேனும் செய்திசொல்ல வந்திருக்குமோ? நீ எங்கே வேண்டுமானாலும் அலைந்து திரி, ஆனால் என் இரை இங்கேதான் என்று எனக்கு உணர்த்துவதற்காக என் அப்பாதான் கொண்டலாத்தி வடிவில் வந்திருக்கிறாரோ?       

அந்தத் தொலைபேசி அழைப்பு மட்டும் வந்திராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எப்படி யோசித்தாலும் கனவின் செல்திசைகளின் பிடி கிடைக்கவில்லை. அந்தகாரத்துக்குள் சென்ற என் மகன் தன் தாத்தாவை அழைத்துவந்திருப்பானா, அல்லது சற்று தாமதமாக நினைவுவந்ததுபோல்  ‘தாத்தாதான் செத்துப்போய்விட்டாரே அப்பா’ என்று கடிந்துகொள்வானா, அல்லது திரும்பி வராமலே அதற்குள் மூழ்கிவிடுவானா?…  அய்யோ இந்த சாத்தியம் எனக்கு அச்சமூட்டுகிறதே. நான் ஏன் அவனை அந்த அந்தகாரத்துக்குள் அனுப்பினேன்? ஆனால் ஒன்று, அனுப்பிய பிறகுதான அது அந்தகாரம் என்று தெரியும். பாவம் அவன், கொண்டலாத்தி இருந்திருக்கக் கூடிய கொஞ்ச நேரத்தில் அதைப் பார்த்து ரசித்திருக்க அவனை நான் விட்டிருக்கலாம். ஆனால், நானோ அவனுடைய தாத்தாதான் இதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். 

அப்பா அழகுணர்வு, இங்கிதம், இயற்கை குறித்த நேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கரப்பான் பூச்சியைப்  பார்த்தால் இடக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு வலக்கையால் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆற்றங்கரை ஓரத்தில் இருப்பதால் எங்கள் வீட்டுக்கும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் அடிக்கடி நல்லபாம்புகள் வரும். அதற்காகவே அப்பா சுளுக்கி ஒன்றை வைத்திருந்தார். அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவற்றைக் குத்தித் திருகிக் கொன்றுவிட்டுதான் வருவார். இதில் அவருக்கு ஒருமுறைகூட தோல்வி இல்லை. பறவைகள் விஷயத்திலும் அப்படித்தான். 

வீட்டின் வேலியையொட்டிய மரமொன்றில் கொண்டைக்குருவி கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சுபொரித்திருந்தது. அந்த மரத்தால் கொசுத்தொல்லை அதிகரித்தால் அதன் கிளைகளை அப்பா தறிக்கப்போனார். அவருடன் கெஞ்சிப்  பார்த்து, சண்டையிட்டு இறுதியில் அவர் தறிப்பதைத் தடுத்தேன். அந்தப் பறவை தன் குஞ்சுகளோடு பறந்துசென்ற பின்தான் அவரைத் தறிக்க அனுமதித்தேன். கிளைகள் அடர்வதும் கொண்டைக்குருவி மீண்டும் வந்து கூடுகட்டுவதும் அப்பா அந்தக் கிளைகளைத் தறிக்கச் செல்வதும் நான் சண்டையிட்டுத் தடுப்பதும் சீரான இடைவெளியில் நடந்துகொண்டிருந்தது. அப்படிப்பட்டவர் கொண்டலாத்தியை என் கனவில் கண்டிருந்தால் என்னவாகியிருக்கும்?

அவர் உயிரோடு இருந்தபோது பல காலம் வீட்டுக்கு அருகிலும் தொலைவிலும் பறவைகள் பார்க்கச் சென்றிருக்கிறேன். வீட்டு வேலிக்குள்ளும் பறவைகள் நிறைய வருவதுண்டு. அவற்றையெல்லாம் அவருக்கு நான் காட்டியதில்லை. அவருடைய பிரக்ஞையில் பறவைகள் என்ற ஒன்றில்லை; இந்த வீடும் இந்த வீட்டுக்குள் இருக்கும் தன் மனைவி, பிள்ளைகளும் ஏன் அவர் சைக்கிள், சுளுக்கி போன்றவையும்தான் அவர் பிரக்ஞையின் வட்டத்துக்குள் இருந்தன. அப்படிப் பறவைகள் அவர் உலகத்தில் வந்தால் அவை ஆக்கிரமிப்பாளர்களாகவோ அந்நியர்களாகவோதான் இருந்தன. ஆக, நான் ஏன் என் கனவில் அப்பாவுக்குக் கொண்டலாத்தி காட்ட முயன்றேன் என்பது எனக்குத் தீராத ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

அடுத்து வந்த சில நாட்களில் மீதிக் கனவை நான் என் கற்பனையில் உருவாக்கப் பல வழிகளிலும் முயன்றுகொண்டிருந்தேன். கனவைக் கட்டமைக்க முடியும் என்ற துணிவை போர்கேஸின் ‘வட்டச் சிதைவுகள்’ கதை எனக்குத் தந்தது. அப்படி முயன்று பார்க்கலாமா என்று தோன்றியது. அதே நேரத்தில்,  அந்தக் கதையில் கனவைக் கட்டமைக்க முயல்பவன் இருப்பதுவும் ஒரு கனவுக்குள்தான் என்று கதையின் இறுதியில் அவன் உணர்வான். ஆக, ஒரு கனவை நாமாகக் கட்டமைக்க வேண்டுமென்றால் நாம் கனவுக்குள் இருந்தாக வேண்டும்; நனவுலகிலிருந்து அதைச் செய்ய முடியாது என்று தோன்றியது. நான் இருப்பது நனவில்தான் என்று அவ்வளவு நிச்சயம் எனக்கு எப்படி ஏற்பட்டது? ‘உலகெலாம் ஓர் பெருங்கனவு அஃதுளே/ உண்டுறங்கி இடர்செய்து செத்திடும்/ கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்/ கனவினும் கனவு ஆகும்’ என்று பாரதியும் பாடவில்லையா என்ற நம்பிக்கையில் நான் ஒரு கனவின் மீதியை உருவாக்கத் தொடங்கினேன். 

கனவு தர்க்கங்களை மீறியது என்பதால் அதன் அதர்க்கங்களையும் அதே நேரத்தில் சரிபாதியளவு தர்க்கங்களும் கனவில் இருப்பதால் தர்க்கங்களையும் பொறுக்கியெடுத்துக்கொண்டிருந்தேன். தர்க்கங்கள் எனும்போது நான் இருந்த வீடு, நான், சரியான தோற்றத்துடன் கொண்டலாத்தி, என் மகன் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமல்லவா? யார் மகனோ, யார் வீடோ அந்தக் கனவில் வரவில்லை. அப்படி வரும் சாத்தியங்களும் உண்டென்றாலும் இப்போதைக்கான குறிப்புச் சுட்டி இந்தக் கனவுதானே. இந்தக் கச்சாப் பொருள்களையெல்லாம் கொண்டு நான் கட்டமைக்கும் கனவைத் தொடங்குவோம்.

மகன் உள்ளே அந்தகாரத்துக்குள் செல்கிறான். நான் அப்பாவுக்காகக் காத்திருக்கிறேன். தன் தாத்தாவைத் தேடிச் சென்ற என் மகன் தாத்தாவாகத் திரும்பி வருகிறான். “அங்க பாருங்கப்பா கொண்டலாத்தி. இதுவரைக்கும் நீங்க பாத்திருக்க மாட்டீங்க. இதைப் பாத்த பிறகுதான் நீங்க சாகணும்” என்கிறேன். “வாவ், எவ்வளவு அழகா இருக்குப்பா. தம்பியை எழுப்புறேன்” என்று என் மகனின் குரலில் பதிலளிக்கிறார் அப்பா. ஆனால், நான் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. வாசலைப் பார்க்கிறேன். சின்னவன் வாசலில் ஏதோ பொறுக்கித் தின்றுகொண்டிருந்தான். “அப்பா, போய்த் தூக்குங்க. அவன் பாம்பைத் தின்னுக்கிட்டிருக்கான்” என்று நான் கத்த அப்பா கொசுக்கதவைத் திறக்காமல் அதனூடாகப் பறந்துசென்று அந்தப் பாம்பைச் சிறியவனிடமிருந்து பிடுங்கித் தான் தின்ன ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ஒரு கைபேசி அழைப்பையோ அல்லது திடுக்கிட்ட விழிப்பையோ கூட நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

அல்லது உள்ளே சென்ற என் மகன் தன் தாத்தாவுடன் திரும்பி வருகிறான். அவரிடம் நான் சொல்கிறேன், “அப்பா அங்கே பாருங்கப்பா கொண்டலாத்தி. சாலமன் ராஜா ஏதோ தூது அனுப்பியிருக்கார். என்னென்னு அதுகிட்ட போய்க் கேளுங்க” என்றேன். அவர் திண்ணையின் வலப்புறம் திரும்பி ஓட்டுச் சார்பில் செருகிவைக்கப்பட்டிருந்த சுளுக்கியை எடுக்கிறார். கொசுக் கதவைத் திறந்துகொண்டு செல்கிறார். அவர் அதைக் குறிபார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொண்டலாத்தி அவரை நிமிர்ந்து பார்த்துப் பாட ஆரம்பிக்கிறது, “உமது நேசம் திராட்சைரசத்தைப்  பார்க்கிலும் இன்பமானது. உமது பரிமளத் தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாகயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.” அப்பா இப்போது திரும்புகிறார். கொண்டலாத்தி அவர் தோளில் வந்து உட்கார்ந்துகொள்கிறது. சுளுக்கியை என்னை நோக்கிக் குறிவைக்கிறார். என் மகன் கைதட்டி ஆர்ப்பரிக்கிறான். நான் திடுக்கிட்டுக் கண்விழிப்பதைப் போல கனவை முடித்துக்கொள்ளலாம். ஏனெனில், என் கனவுகளில் நான் செத்ததே இல்லை. பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, குத்துப் பட்டு என்றெல்லாம் சாவதற்கு முந்தைய கணம் வரை சென்றிருந்தாலும் ஒருபோதும் செத்துப்போனதில்லை. ஆகவே, அந்த இடத்தில் முடித்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

அல்லது உள்ளே சென்ற மகன் திரும்பி வராமல் நானும் அந்த அந்தகாரவெளிக்குள் சென்று திகைத்துப்போய் திரும்பும் வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கலாம். ஒரு கொண்டலாத்திக்காக அப்பாவையும் என் மகனையும் தொலைத்ததுடன் என்னையும் தொலைத்துக்கொண்டேனே என்று வருந்திக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒன்று மீட்சிக்கான பாதை தெரிய வேண்டும் அல்லது பீதியில் விழிப்பு வர வேண்டும்.

நான் கட்டமைக்க முயன்ற எந்தக் கனவுமே எனக்கு திருப்தியளிக்கவில்லை. மிகச் சரியாக அப்பா வர வேண்டிய இடத்தில் ஒரு கைபேசி அழைப்பு (இன்னும் சரியாகச் சொன்னால் இந்தப் பேரண்டம்) என் கனவைத்  துண்டித்ததில் ஒரு அமானுஷ்யத் தன்மை, இன்னும் சொல்லப்போனால் மிஸ்டிக்தன்மை இருப்பதை உணர்கிறேன். அந்தத் தன்மையை ஒருபோதும் நான் கட்டமைக்கும் கனவுக்குத் தர முடியாது. அதேபோல், இனி ஒருபோதும் மூலக் கனவின் மீதிப் பகுதியும் எனக்குத் தெரியப்போவதில்லை. இனி, எல்லையற்ற சாத்தியங்களின் வெளியில் அந்தக் கனவின் மீதி மிதந்துகொண்டிருக்கும். மண்ணில் கிடக்கும் சிறு வளையல் துண்டு நாம் கடக்கும் ஒரு நொடியில் சூரியனை மினுக்கிட்டு நம் கண்களைக் கூசச் செய்வதுபோல், எப்போதாவது ஒரு நொடியில் மினுக்கிடலாம் என்ற நம்பிக்கையும், இல்லையில்லை அந்தக் கனவு அப்படித் தொலைந்துபோனதுதான் அதற்கு அழகு என்ற வசீகரமான அவநம்பிக்கையும் ஒன்றாக ஏற்பட்டன. 

எனினும், “இந்தப் பேரண்டமானது நாம் கற்பனைசெய்யுமளவுக்கு விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் கற்பனை செய்யக்கூடிய அளவை விட விசித்திரமானது” என்று உயிரியலர் ஜே.பி.எஸ். ஹால்டேன் கூறியது எவ்வளவு உண்மை என்று சில நாட்களுக்குள் தெரிந்துகொண்டேன். ஆம்! மீண்டும் கொண்டலாத்தியும் அப்பாவும் என் கனவில் வந்தார்கள். மூலக் கனவின் மீதியாக அல்ல. தனிக் கனவாக. கனவு நாம் நினைப்பதைப் போல் மட்டுமல்ல, நாம் நினைக்கக்கூடியதை விட விசித்திரமானது.

அப்பா மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று எனக்குச் செய்தி வந்தது. எனக்கு ஒரே பயமும் தவிப்பும். கொண்டலாத்தியைப் பார்க்காமல் அப்பா செத்துப்போய்விடுவாரோ என்று. சாலமன் ராஜாவே எனக்காக ஒரு கொண்டலாத்தியை அனுப்பிவையும் என்று வேண்டிக்கொண்டே போனேன். என் கையில் நான் ஒரு மஞ்சப்பை வைத்திருந்தேன். அதில் என்ன கொண்டுசெல்கிறேன் என்று கையை விட்டுத் துழாவினேன். புசுபுசுவென்று ஏதோவொன்று என் கைக்குள் திமிறியது. கைகளில் எடுத்துப் பார்த்தேன். அது ஒரு கொண்டலாத்தி. ‘முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ அப்படியே குமாரத்திகளுள்ளே எனக்குப் பிரியமான’ என் கொண்டலாத்தி. எனக்கேற்பட்ட பரவசம் என் கனவுக்கு வெளியேயும் கசிந்துகொண்டிருந்ததைக் கனவுக்குள் இருந்துகொண்டே என்னால் உணர முடிந்தது. என் அப்பா கொண்டலாத்தி பார்க்காமல் சாக மாட்டார்; சாகக் கூடாது. ஆனால், நான் போய்ச் சேரும்வரை அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஒரே கவலை. ஆமாம், நான் எங்கிருந்து புறப்பட்டு எங்கு போய்க்கொண்டிருக்கிறேன்? சும்மா போய்க்கொண்டிருந்தாலே இறுதியில் அப்பாவைப் பார்த்துவிடலாமா? 

நான் போய்ச்சேர்ந்த இடம் பழைய வீடா, சொந்த ஊரில் அண்ணன் கட்டிய புதிய வீடா, அல்லது மருத்துவமனை அறையா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இவை எல்லாம் ஒன்றாகக் குழைந்து ஒரே நேரத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. அப்பாவை ஒரு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். அதுவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக் கட்டிலாகவும் கயிற்றுக் கட்டிலாகவும் குழைந்து தெரிந்தது. சுற்றிலும் அம்மா, அக்கா, சொந்தக்காரர்கள் நின்றிருந்தார்கள். ஆனால், ஒருவர் முகம் கூட எனக்குப் பரிச்சயமானதுபோல் தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து விம்மத் தொடங்கினேன். அதுவரை வெறுமையில், உச்சியில் வெறித்திருந்த அவரது பார்வை என்னை நோக்கித் திரும்பியது. “எனக்குத் தெரியும்ப்பா. நீங்க நான் வரும்  வரைக்கும் சாக மாட்டீங்கன்னு. நீங்க கொண்டலாத்தி பாக்காம சாகக் கூடாதுப்பா. அதுக்காகத்தான்பா ஓடோடி வந்தேன். பாருங்க சாலமன் ராஜா உங்களுக்காக அனுப்பிவச்ச கொண்டலாத்திய” என்று சொல்லிவிட்டுப் பைக்குள்ளிருந்து கொண்டலாத்தியை வெளியில் எடுத்தேன். அது விடுபடுவதற்கான எந்தப் பிரயத்தனங்களையும், பைக்குள் இருந்தபோதும் சரி என் கைக்குள் இருக்கும்போதும் சரி, செய்யவில்லை. என் கையில் இருப்பதை அப்பாவின் கண்கள் சற்று நேரம் பார்த்தன. அந்தக் கண்களுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அந்தக் கண்களில் கொண்டலாத்தி பிரதிபலித்தது ஒன்றே போதும் என்று நிம்மதியுடன் அதனை அவர் நெஞ்சின் மேல் விட்டேன். அதிர்ந்துபோய் சற்று முன்னே வந்த, யார் முகத்தையோ கொண்டிருந்த என் அம்மா “என்னடா தம்பி இது?” என்றாள். “சும்மா இரும்மா. கொண்டலாத்தி இந்த உலகின் பேரழகி. அப்பாவின் நெஞ்சு மேல அவ நிக்குற அழகைப் பாரு. எவ்வளவு நாசுக்கா எச்சம்போடுறா பாரு. இப்படிப்பட்ட பேரழகியைப் பாக்காம எவ்வளவு நாள் வாழ்ந்தா என்ன பிரயோசனம்? அப்பா கொண்டலாத்தி பார்த்துட்டார். அவருக்கு பிரக்கினை இருக்குதோ இல்லையோ அவரு உடம்பு பூரா இன்னேரம் இந்த அழகு நெறைஞ்சிருக்கும். இந்த அழகு நெறைஞ்சிருக்கிற அவர் உயிரத்தான் சாவு எடுத்துக்கிட்டுப் போகணும். இனி அவர் சாகலாம். அவருக்கு வாயில நான் ஊத்த வேண்டிய பால, கண்ணுல ஊத்திட்டேன். அவரைப் போய் சாலமன் ராஜாவோட சிம்மாசனத்துக்குப் பக்கத்துல உக்காந்துக்கச் சொல்லு. அவருக்குன்னு தனி சிம்மாசனம் போட்டுவைக்கச் சொல்லி இந்தக் கொண்டலாத்திய சாலமன் ராஜாகிட்டயே  அனுப்பப்போறேன்” என்று சொல்லிவிட்டுக் கொண்டலாத்தியை மறுபடியும் கையில் எடுத்துப்  பறக்க விட்டேன்.

பேரண்டம் இந்த முறை சதிசெய்யவில்லை.   

(‘உயிர்மை’ நவம்பர்-2021 இதழில் வெளியான சிறுகதை)