Monday, October 30, 2023

தாடி வச்ச பிரபஞ்சம் - கேசட்டுக் கடை கவிதை வரிசை-3
இப்போதான்
ஒரு இயற்பியல் பேராசிரியர்
என்னைக் கூப்பிட்டார்
"நடைமுறையில்
சாத்தியம் இல்லன்னாலும்
கோட்பாட்டளவுல
நீங்க எடுத்தது அழகான முடிவு
எத்தனையோ கோள்கள் நட்சத்திரங்கள்
பிரபஞ்சங்கள்
ஏன் அணுக்கள் கூட
பயன்
பயனின்மை பத்தியெல்லாம்
கவலைப்படாம
சுத்திக்கிட்டு இருக்கு
அப்படி ஒன்னா
உங்க கேசட்டுக் கடை
இருந்துட்டுப் போகட்டுமே"ன்னு
சொன்னாரு
பாருங்க
நான் பறக்க ஆரம்பிச்சுட்டேன்
"அப்பன்னா
நான் ஒரு பிரபஞ்சத்துக்குப்
பொறப்பு கொடுத்திட்டனா
அப்பன்னா
உங்க பாணியில
அதுக்கு ஒரு பேரும்
வச்சிடுங்க சார்"னு
கேட்டதுக்கு
"உங்களுக்கு டி.ஆர். புடிக்கும்னு
எனக்குத் தெரியும்
அதனால டி.ஆர்.55னு வச்சிடுங்க"ன்னாரு
பாருங்க
ஆகா இன்னைலருந்து
நான் தாடி வச்ச
பிரபஞ்சத்துக்கு
சொந்தக்காரன்

-ஆசை 

Saturday, October 28, 2023

கடைசியா கேசட்டுக் கடை வைக்கிறவன் - கேசட்டுக்கடை கவிதை வரிசை:2
நான் கேசட்டுக் கடை
வைக்கப்போறேன்னதும்
சாடா பேரும்
வளைச்சுக்கிட்டாய்ங்க
வீட்டுல ஒரே கரைச்சல்
“ஏன்டா இந்தத் தேவையில்லாத
வேலை
யாருடா இப்போ கேசட்டுல்லாம்
ரிலீஸ் பண்ணுறாங்க
யாருடா இப்போ
டேப் ரெக்கார்டெர்லாம்
வச்சிருக்காங்க
சிடி போயே பத்து வருஷம் ஆச்சு
யூடியூபு ஸ்பாட்டிபைன்னு வந்தாச்சு
உனக்கென்ன கிறுக்காடா புடிச்சுருக்குன்னு”
விடாம கேள்வி கேக்குறானுங்க நண்பனுங்கள்லாம்
ஒரே போனு மேல போனு
இதுவரைக்கும் எனக்கு லைக் போடாதவங்கள்லாம்கூட
இன்பாக்ஸ்ல அக்கறையா கேக்குறாங்க
வாட்சப் மூலமா கேக்குறாங்க
எல்லாரும் கேக்குறது சொல்லுறது
எல்லாம் எனக்குப் புரியுது
ஆனா
உலகத்துல ஒருத்தன்
கேசட்டுக் கடை வைக்கணும்னு
ஆசைப்படுறது அவ்வளவு பெரிய குத்தமான்னு
நான் கேக்குறது மட்டும்
யாருக்கும் புரியலை
மொதல்ல நிலாவுக்குப் போனவய்ங்க
மொதல்ல அணுகுண்ட கண்டுபுடிச்சவய்ங்க
மொதல்ல ரேடியோவை கண்டுபுடிச்சவய்ங்க
மொதல்ல ஏரோப்பிளேன்ல பறந்தவய்ங்க
அவ்வளவு ஏன்
மொதல்ல கேசட்டுக் கடை வைச்சவய்ங்களெல்லாம்
கொண்டாடுற இந்த உலகம்
கடைசியா கேசட்டுக் கடை
வைக்க ஆசப்படுறவன மட்டும்
கிறுக்கனாக்கிக்
கீழ ஒக்கார வைச்சிடுது
காலத்தத் தாண்டிக் கனவு கண்டவனையும்
சரி
காலங்கடந்து கனவு காணுறவனயும்
சரி
இந்த உலகம் வாழவச்சதா
சரித்திரமே கெடையாது
கடைசியெல்லாம் முடிஞ்சி போன பிறகும்
கட்டக்கடைசியா ஒரு கடைசியைக்
கொண்டுவர்ற நெனைக்கிறான் பாரு ஒருத்தன்
அதாவது நானு
நியாயமா பாத்தா
என்னெல்லாம்
இந்த உலகமே
தலைமேலே தூக்கிவச்சிக் கொண்டாடனும்
இத்தனைக்கும்
நான் சாதனைக்காக இதை
செய்யணும்னு
நெனைக்கல
எனக்கு கேசட்டுக் கடை வைக்கணும்னு
சின்ன வயசுலேருந்து அவ்வளவு ஆசை
அதுக்குள்ள கேசட்டு டேப்ரெக்கார்டர்லாம்
காணாம போச்சுன்னா
நான் என்ன பண்ணுவேன்
என் ஆசை இன்னும் அப்படியேத்தானே இருக்கு 
-ஆசை

Thursday, October 26, 2023

செண்பகா தியேட்டரில் கடைசிக் காட்சிஆமாம்
சொந்த கிராமத்தில்
நான் ஆடியோ கேசட் கடை
வைக்கப்போறேன்
உங்களுக்குப் பிடிச்ச பாட்டையும்
பதிவுசெஞ்சு தருவேன்
முடிஞ்சா பக்கத்துலேயே
ஒரு சினிமா கொட்டகை
கட்டுவேன்
மல்ட்டிபிளெக்ஸ் இல்லை
ஒரு திரைதான்
அதற்கு செண்பகா தியேட்டருன்னு
பேர் வைப்பேன்
அதற்கு டிக்கெட் எடுக்க
உள்ளே குகை மாதிரி
வளைஞ்சு வளைஞ்சு
போவணும்
ஆறு மணி ஆட்டமும்
பத்து மணி ஆட்டமும்தான்
வருசத்துக்கு ஒருதரமாவது
ஜெகன்மோகினி
ஒரு தலை ராகம்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
உதயகீதம்
வைஜெயந்தி ஐபிஎஸ்
படமெல்லாம் போடுவேன்
வாடகை சைக்கிள் கடையும்
தொடங்கலாம்னு யோசனை
சின்னப் பசங்களுக்கெல்லாம்
சின்ன வண்டி நெறையா வாங்கணும்
ஒரு மணி நேரத்துக்கு பத்துக் காசு
வாங்குவேன்
அஞ்சு பத்து ரூபாயெல்லாம்
கொண்டுவராதீங்க
சில்லறை இருக்காது
எங்க தெரு செட்டியார் கடை
தூந்துபோய் இருபது வருஷம்
ஆகுது
அவரு செட்டியாரு இல்லை
கடை வச்சதால செட்டியாரா ஆனவரு
அங்க மறுபடியும்
கீத்து சார்ப்பு வைச்சு
அதே கடைய எடுத்து நடத்தப் போறேன்
போர்டு ஏதும் வைக்க மாட்டேன்
ஆனா நானும் செட்டியார் ஆவேன்
என் கடையும் செட்டியார் கடை ஆகும்
குண்டுகுண்டா தேன்முட்டாயி
சூடகல்ல முட்டாயி
தவுல் வித்துவான் மாதிரி விரல்ல மாட்டிக்கிற
ஆட்டுக்குடலு எல்லாம் வாங்கிவைப்பேன்
யாரும் வரலைன்னாலும்
பரவாயில்லை
நான் மட்டுமாவது
என் செட்டியார் கடையில தேன்முட்டாயி
ஆட்டுக்குடலு வாங்கிக்கிட்டு
என் சைக்கிள் கடையில
சின்ன வண்டி வாடகை எடுத்துக்கிட்டு
என் சினிமா கொட்டகைக்கு
ரெண்டாம் ஆட்டம் படம் பாக்கப் போவேன்
‘வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது’
பாட்டு முடிஞ்சோன
ஒன்ஸ்மோர் கேப்பேன்
பாத்துக்கிட்டே
கொண்டுவந்த தின்பண்டத்தெல்லாம்
தின்னு முடிப்பேன்
படம்முடிஞ்சி
பாதி ராத்திரிக்கு
வீட்டுக்குத் திரும்பும்போதும்
எனக்காகத் திறந்துவைச்சிருக்க
கேசட்டுக் கடையிலயும்
‘வாசமில்லா மலரிது’
பாட்டை போடச் சொல்லிவிட்டு
25 வருஷத்துக்கு முன்னாடி
முளைக்க ஆரம்பிச்ச
தாடிய இங்கேருந்தே
சொறிஞ்சிவிட்டுப்பேன்
கேசட்டுக்கடை
சினிமா கொட்டகை
சைக்கிள் கடை
செட்டியார் கடை
இதையெல்லாம் வைக்க
லட்சம் லட்சமா தேவையில்ல
நெறைய அஞ்சு காசும்
பத்துக் காசும் இருந்தா போதும்
கூடவே
இந்த உலகத்துலேயே
கடைசிப் பத்துக் காசுக்கு
முட்டாய் வாங்குன குழந்தை
கெடைச்சா போதும்
-ஆசை

Wednesday, October 11, 2023

போலிச்செய்திகளின் போலிக்கவிதைகளின் போலிக்காலத்தின் காலம்
இன்னார் இறந்துபோய்விட்டார் என்று
நாம் நம்பும்
இன்னார் கூறியதும்
உடனே அஞ்சலி செலுத்திவிடுகிறோம்
பின்னே இன்னார் இறக்கவில்லை
அது போலிச் செய்தி என்று
நாம் நம்பும் இன்னார்
கூறியதும்
இன்னார் இறக்கவில்லை
என்று உடனே
அஞ்சலியைத் திரும்பப் பெற்றுவிடுகிறோம்
இறக்க மறந்த இன்னார் மேலோ
அவர் இருப்பதை மறந்த இன்னார் மேலோ
அவர் மீது நம்பிக்கை வைத்த நம் மீதோ
பிழையேதும் இல்லை

ஏனெனில்
போலிச்செய்திகள்
போலிக்கவிதைகள்
எல்லாம் உண்மையாய் மாறும்
தருணம் ஒன்று கண்டிப்பாய் வரும்
நின்றுபோன வீட்டின் சுவர்க் கடிகாரம்
இரண்டு முறை சரியாகக் காலத்தைக் காட்டுவதைப்போல

அது என்ன இரண்டு முறை என்று
கேள்வி எழலாம்

முதல் முறை என்பது
இன்னார் பிறந்த நேரம்
இரண்டாம் முறை என்பது
இன்னார் இறக்கும் நேரம்
இடையில் நாம்
போலிக்காலத்தால்
நிரப்பிக்கொள்ள வேண்டியதுதான்
     -ஆசை

Monday, October 2, 2023

காந்தி பிறந்த நாளில் ஒரு சிறப்பு அறிவிப்பு!

 


‘என்றும் காந்தி’ உள்ளிட்ட எனது நூல்களை சிறப்பு விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தை காந்தி பிறந்த நாளான இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தத் திட்டத்தின்படி ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ ஆகிய கவிதை நூல்களையும் ‘இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ என்ற இலக்கிய விமர்சன நூலையும் பாதி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
‘என்றும் காந்தி’, 'பறவைகள் அறிமுகக் கையேடு’, ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’, பௌத்தத் துறவி திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ ஆகிய நூல்களை 35 சதவீதத் தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம். விவரங்கள் மேலே உள்ள படத்தில். இந்தத் திட்டம் என் அப்பா நினைவு நாளான அக்டோபர் 11 வரை மட்டுமே. நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் தகவல்களுக்கு வாட்ஸப் எண்: 7401329355
(இந்த நூல்களின் பதிப்பாளர்கள்: க்ரியா, டிஸ்கவரி புக் பேலஸ், இந்து தமிழ் திசை)
பின்குறிப்பு: இந்தப் புத்தகங்களைப் படிக்க விரும்பும் ஆனால் பணம் கொடுத்து வாங்குவதற்கு இயலாத நிலையில் உள்ள அன்பர்கள் கூரியர் செலவுக்கான பணத்தை மட்டும் அனுப்பி இந்த நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டு ராமராஜ்யங்கள்

 


இரண்டு ராமராஜ்யங்கள்
உள்ளன

ஒன்று
சீதையின் கற்பைத் 
தலைநகராகக் கொண்டது

இன்னொன்று 
சீதையின் துயரைத்
தலைநகராகக் கொண்டது

ஒன்றில் 
சீதைக்கென்று
எப்போதும் அக்னி
எரிந்துகொண்டிருக்கும்

இன்னொன்றில்
சீதைக்காக ராமனே
எப்போதும் அக்னியில் இறங்குவான்

ஒன்றில்
ஒரே ஒரு ராமன்தான்
மீதமுள்ள எல்லோரும்
அனுமன்கள்
நிமிடந்தோறும்
நெஞ்சைப் பிளந்து
அதன் உள்ளே சீதையற்ற ராமன்
படத்தைக் காட்ட வேண்டியவர்கள்
காட்ட மறுப்போரெல்லாம்
வாலிகள் ராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
வதம் செய்ய வேண்டியவர்கள்

இன்னொன்றில்
எல்லோருமே ராமர்கள்
அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட
அதில் அனுமன்கள் சீதைகள் 
வாலிகள் இராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
தெரிவார்கள்

ஒன்றில்
ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும் 
இருக்க
அதில் வீற்றிருந்து 
ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்

இன்னொன்றில்
சிம்மாசனமே இருக்காது

இரண்டு ராமராஜ்யங்களும்
சந்தித்துக்கொண்டன

ஒன்று
‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக்
கையில் வில்லெடுத்து
அம்பெய்தது

இன்னொன்று
‘ஹே ராம்’ என்று சொல்லி
மார்பில் அந்த அம்பை வாங்கி
மண்ணில் வீழ்ந்தது
         - ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: