Saturday, September 9, 2023

பிரபஞ்சத்தின் மாபெரும் சர்வாதிகாரி

சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்திலிருந்து



1.
மாபெரும் அடினாய்டு ஹிங்கல்
உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம்
என்றுமுள்ள சர்வ வல்லமைகொண்ட 
ஒரே சர்வாதிகாரி நீங்கள்
உம் ஆதிக்கத்துக்கு
அகில உலகமும்
அடிபணிவதாக

இவ்வுலகை 
ஒரே குடையின் கீழ் கொண்டுவரும்
உம் அகண்ட தேசக் கனவின்
நிழலில் என்றும் வாழ்ந்திருக்கப்
பேரவா கொண்ட சிறுபூச்சி நாங்கள்

உம் மகிமையின் 
மகுடத்திலிருந்து உதிரும்
மயிலிறகுகள்
என்றும் எமக்கு
சாமரம் வீசட்டும்

உம் வாக்குக் காற்றின் வேகத்தில்
உம் வாய்க்கு முன் 
ஒலிபெருக்கியின்
ஒலிவாங்கித் தண்டுகள்
அஞ்சி வளைந்து
நடுங்குவதுபோல்
எங்கள் உள்ளமும்
நடுங்கி வளைகிறது

உம் ஒரே நாடு 
ஒரே சர்வாதிகாரி
ஒரே இறைவன்
ஒரே மொழி
ஒரே சிந்தனை
ஒரே இனம்
என்ற மாபெரும் கனவு
எங்கள் மனத்திரையில்
படமாக விரியும்போது
வெம்மை தாளாமல்
தீப்பிடிக்கிறது

அந்தத் தீச்சூடு தாளாமல்
எங்கள் ரோமங்கள் 
குத்திட்டுக் கூர்ஈட்டியாய் நிற்கின்றன
வாய்களோ 
உன்னதக் கனவுக்கு
உரத்த கோஷம் 
பொறிபறக்கக் கக்குகின்றன
கைகளோ காட்டுத்தீச் சுவாலைகளாய்
மேலெழுந்து ஆர்ப்பரிக்கின்றன

என்றுமுள்ள சர்வ வல்லமைகொண்ட 
ஒரே சர்வாதிகாரி 
அடினாய்டு ஹிங்கல்
உம்மை நாம் ஆராதிக்கிறோம்

2.
நிற்க
உமக்கான ஆராதனையை அடுத்து
உம்மேலுள்ள விசனமொன்றை
உம்முன் வைப்பதற்கு 
மன்னிக்க வேண்டும் தேவரீர்

சென்றமுறை
உம்மைச் சந்திக்க வந்தார்
உம்மைப் போன்ற கனவுகொண்ட
இன்னொரு சர்வாதிகாரி
நல்ல பெயர் கொண்ட
நப்போலினி

அவர் திமிர் அடக்க
உம் உயரம் காட்ட
உமக்கு உயரமாகவும்
அவருக்குத் தரையொட்டியும்
இருக்கை சமைத்தீர் நன்று அய்யா

ஆனால்
இருக்கை உயரம் போதாமல்
அவர் உம் மேசைமேல்
ஏறியமரத்
திடுக்கிட்டு நீங்கள்
சமைந்ததை
உம் பக்தர்கள் நாம்
எப்படி ஏற்பது

முக்காலத்துக்கும் வாய்க்கால் வெட்டி
அதில் உம் மதுரவாய்ப் பாசனம்
செலுத்துபவரே
இதை முன்னறிய மறந்தீரே

3.
அய்யா
அடுத்த முறை
உலகின் சர்வாதிகாரிகள்
உமை நோக்கி வரும்போது
ஒரே ஒரு நாற்காலி சமையும்
அதில் நீர் மட்டுமே அமையும்

முன்னே மேசையின்றித்
தரைவிரிப்பில்
அவரெல்லாம் 
அமரச் செய்யும்

எம் தேசம்
ஒரே தேசம்
அதில் ஒரே ஒரு நாற்காலிதான்
என்று சொல்லும்

எம் நாட்டில்
விருந்தினர் உபசரிப்பு முறையிதுவே
என்று அவரெல்லாம் ஆற்றுப்படுத்தும்

உம்மைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது
அவரின் ‘சர்வ’த்தையெல்லாம்
உருவிவிட்டு
வெறும் அதிகாரிகளாய்
வழியனுப்பும்

4.
பூமிப் பந்தின் மேல்
ஒரே சிம்மாசனம் அமைத்து
அதன் மேல் வீற்றிருந்து
பூமி மேல்
நிதம் மும்மாரி
நீர் பெய்வதைப்
பார்த்துவிட்டுக் கண்மூட வேண்டும்

பின் வரும் தலைமுறைகள்
நீர் பெய்த மும்மாரிதான்
உலகுசூழ் 
உப்பு ஆழிகளாயிற்று
என்று இதிகாசங்கள்
இயற்ற வேண்டும்

அதுதான் ஐயன்மீர்
எம் ஒரே ஆசை

5.
ஆயினும் ஓர் ஆபத்து
உம்மை விடப் பெரிய ஆசனத்தைப் 
போட்டு ஒருவர் 
இப்பிரபஞ்சத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்

அவரை அவ்விடம்
அகற்றி
அங்கே நீவிர் 
அமர வேண்டும்
அதுவரை அவர் தொழுத
அமரர்க்கெல்லாம் 
நீவிர் சர்வ அதிகாரி 
ஆக வேண்டும்

இப்படியாக
நீவிர் புதிய தேசம்
புதிய உலகம் படைப்பதுபோல்
புதிய பிரபஞ்சமும் படைக்க வேண்டும்

அதன் ஒவ்வொரு
நட்சத்திரத்துக்கும்
பழைய பெயரகற்றி
உம் பெயரையே
வைக்க வேண்டும்

நட்சத்திரம் கண்சிமிட்டும்போதெல்லாம்
அது காட்டித் 
தன் குழந்தைக்குச் சோறூட்டும்
தாயெல்லாம்
‘அதோ பார்
அடினாய்டு ஹிங்கல்
கண்சிமிட்டுகிறார்’
என்று சொன்னால்
மேலும் ஒரு கவளம்
சோறிறங்காதா
தேவரீர்
          - ஆசை, 09-09-23

குறிப்புகள்: 
1. ஹிட்லரைப் பகடி செய்து 1940-ல் சார்லி சாப்ளின் எடுத்த ‘த கிரேட் டிக்டேட்டர்’ (The Great Dictator) திரைப்படத்தின் தாக்கத்தால் எழுதிய கவிதை. அந்தப் படத்தில் ஹிட்லரை நினைவுபடுத்தும் பாத்திரத்துக்கு அடினாய்டு ஹிங்கல் என்றும், முசோலினியை நினைவுபடுத்தும் பாத்திரத்துக்கு பென்ஸினோ நப்போலினி என்றும் சாப்ளின் பெயர் வைத்திருப்பார்.

2. வேறு ஏதும் இல்லை.


1 comment: