Thursday, November 23, 2017

பா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி?

 

ஆசை

1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப் பிரமித்துப்போய் நின்றேன். ஆனால், ஏனோ பா.வெங்கடேசனைப் பின்தொடராமல் போய்விட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு ‘ராஜன் மகள்’  தொகுப்பு வாங்கினேன். படிக்காமலே வைத்திருந்தேன். ‘தாண்டவராயன் கதை’ நாவல் வந்தபோது இரண்டு மூன்று அத்தியாயங்கள் படித்துவிட்டு ‘அய்யய்யோ சாமி’ என்று தூக்கி அந்தப் பக்கம் போட்டுவிட்டேன். அதன் பிறகு பா.வெங்கடேசன் பெயரைப் பார்த்தாலே ‘ஆஹா, கோணங்கி வகையறா’ என்று என் தலை காததூரம் தன்னைத் தானே திருப்பிக்கொள்ளும். வாங்கிவைத்திருந்த ‘ராஜன் மகள்’ தொகுப்பையும் படிக்கவே இல்லை. நிற்க! நான் மதிக்கும் கவிஞர் ஒருவர் என்னிடம் அப்போதுதான் வெளியாகியிருந்த பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ நாவலைத் தான் படித்துக்கொண்டிருப்பதாகவும் ‘மேஜிக்கல்!’ என்றும் கூறினார். ‘என்னங்க பா.வெங்கடேசனைப் போய் அப்படிச் சொல்லுறீங்க. சரியான பம்மாத்தாயிற்றே அவர்’ என்றேன். அப்படி இல்லை, படித்துப் பாருங்கள் என்றார் நண்பர். அவரின் இலக்கிய ரசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒன்று; ஆகவே, அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து ‘பாகீரதியின் மதியம்’ நாவலைக் கையில் எடுத்தேன். எந்த முன்னபிப்பிராயமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஸரமாகூவின் நாவல்களில் நீளமான சொற்றொடர்களை நான் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். எனினும், தமிழில் அப்படி எழுதப்படுபவை அதுகாறும் எனக்கு அந்நியமாகவே தோன்றின. கோணங்கியின் ‘பாழி’, ‘உப்புக்கத்தியில் இறங்கும் சிறுத்தை’ போன்ற நூல்களைக் காசில்லாக் காலத்திலேயே சாகச முயற்சியாக விலை கொடுத்து வாங்கிப் படிக்க முயன்று தோற்றதும் இது போன்ற உணர்வுக்குக் காரணம். அந்த உணர்வையும் நான் அந்தப் பக்கம் தள்ளிவைத்துவிட்டு முதல் வரியிலிருந்து நாவலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தேன். ‘Now you see me’ என்பதைப் போல ஒருசில பக்கங்களிலேயே பா.வெங்கடேசன் திறந்துகொண்டார். இது போன்ற படைப்புகளைப் படிக்க வேறொரு மன அமைப்பு, வேறொரு பார்வை வேண்டும் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. ‘பாகீரதியின் மதியம் நாவலை இரண்டு முறை படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.

பலரும் நான் பா.வெங்கடேசனுக்கு வேண்டியவன் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். உண்மையில் நாவலின் 150-வது பக்கத்தைத் தாண்டியவுடன் அசந்துபோய் முதன்முதலில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டினேன், ‘நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அற்புதம்’ என்று (நாவலில் அவருடைய கைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது). அவர், ‘யாரென்று தெரிந்துகொள்ளலாமா?’ என்று பதில் செய்தி அனுப்பினார். நான், ‘ஜெமினி’ என்று பதில் அனுப்பினேன். அதற்குப் பிறகு நாவலைப் படித்த பிறகுதான் பா.வெங்கடேசனுடன் தொலைபேசியில் பேசினேன். அது பரவச உணர்வின் மிகுதியால் நிகழ்ந்த தொலைபேசி உரையாடல். இன்றுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.

நாவலைப் படித்து முடித்த பரவசத்திலேயே என் மதிப்புரையை எழுதினேன். அதனால் அந்தப் பரவசத்தின் கொண்டாட்டத்தையே அதில் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த நாவலையும் மதிப்புரையையும் பாராட்டிய நண்பர்கள் சிலர் நாவலைக் குறித்த விமர்சனப் பார்வையையும் என் கட்டுரையில் முன்வைத்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்கள். உண்மையில், பா.வெங்கடேசனின் எழுத்து வீச்சு, நாவலில் கருத்தியல்ரீதியாக நான் கடுமையாக மாறுபடக்கூடிய இடங்களைப் பற்றிய உணர்வை அப்போது ஆக்கிரமித்திருந்தது. நாவல் படித்துக் கொஞ்ச காலம் கடந்த பிறகு அதன் மீதான பிரமிப்பு சற்றும் குறையாமலேயே, அதன் மீதுள்ள விமர்சனங்கள் எனக்குள் துலக்கமாக ஆரம்பித்தன. குறிப்பாக, திராவிட இயக்கம் தொடர்பான பகுதிகள் நாவலில் எனக்குச் சங்கடத்தைக் கொடுப்பவை. அவற்றை நான் பா.வெங்கடேசனிடம் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவசியம் விமர்சித்து எழுதுங்கள் என்று அவர் கூறிவருகிறார். இன்னொரு முறை படித்துவிட்டுதான் அப்படி எழுத வேண்டும்.

‘பாகீரதியின் மதியம்’ முடித்துவிட்டு ‘ராஜன் மகள்’ தொகுப்பைப் படித்தேன். ஒவ்வொரு குறுநாவலையும் பெரிய நாவல்களாக எழுதியிருக்கலாமே என்று ஏக்கம் கொள்ள வைக்கும் அசாதாரணமான தொகுப்பு அது. குதூகலத்தைக் கொடுக்கும் கற்பனை வளம் பா.வெங்கடேசனுடையது என்பதை அந்தத் தொகுப்பு எனக்கு உணர்த்தியது. அதன் பிறகு, ஆழி செந்தில்நாதனைக் கேட்டு எப்படியோ ‘தாண்டவராயன் கதை’ நாவலை வாங்கிவிட்டேன். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். எந்தப் புத்தகத்தால் பா.வெங்கடேசன் புத்தகங்களையே இனி திரும்பிப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேனோ அதே புத்தகத்தை இப்போது படித்துக்கொண்டிருப்பதுதான் காலச் சுழற்சியின் விந்தை.

இதையெல்லாம் நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் உண்டு! ஒவ்வொன்றையும் அணுக வேறொரு பார்வை தேவைப்படுகிறது என்பதை பா.வெங்கடேசனின் படைப்புகள் எனக்கு உணர்த்தின. இதற்கு என் நண்பர் முக்கியமான காரணம். நிச்சயம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘பாகீரதியின் மதியம்’ நாவல் கையில் கிடைத்திருந்தால் ஐந்து பக்கங்கள் கூடப் படித்திருக்க மாட்டேன். பம்மாத்து என்று சொல்லியிருப்பேன். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மௌனி, அசோகமித்திரன் என்று பழகிய பாட்டையிலேயே தமிழில் முன்பு என் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு திறப்பு என்னில் நிகழ்ந்ததுதான் பா.வெங்கடேசனை நோக்கி நான் வந்திருப்பதற்கான காரணம். அதுவரை இருந்தது சட்டென்று வேறொன்றாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எந்த ஒரு படைப்பையும் முழுமனதுடன், திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்ற உணர்வும் இப்போது வந்திருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, பா.வெங்கடேசனை நான் படிப்பதென்பது எனக்கு, என் கற்பனைக்கு நான் செய்துகொள்ளும் பேருதவி என்பதை நான் இப்போது உணர்கிறேன். 

   

5 comments:

 1. பா.வெ வும் நானும் 5 வருடஙகள் சேர்ந் து வேலை செய்தோம். அவன் தனனை அரிந்தவன். அவன் தெளிவை கண்டு பலமுரை ஆச்சரயம் அடைந்துருக்கிரேன். நான் அவன் படைப்புக்களை படித்ததிலலை, ஆனால், அவனை படிக்கிரேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி!
   அன்புடன்
   ஆசை

   Delete
 2. எழுத்தாளரையும், எழுத்தையும் நீங்கள் அணுகுகின்ற விதம் வியக்க வைக்கிறது. திரு வெங்கடேசன் அவர்களைப் பற்றிய ஆரம்ப கால உங்களது எண்ணங்களை உள்ளது உள்ளவாறே பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்!
   அன்புடன்
   ஆசை

   Delete
 3. ராஜன் மகள் வாசித்தேன்.
  பழைய மன்னர்கள்
  கால ஓவிய அழகை உணரமுடிந்தது.கதையை அசாதரண காலத்தில் நிகழ்த்துகிறார்.இவரது கதைசொல்லும் பாங்கு வேறுதளத்தில் நிற்கிறது
  காமத்தின் கதவுகளை திடீரென திறந்துவிட்டு ஒரு பிரளயம் நடந்து முடிகிறது ரசனையோடு.
  இவர் தொடர்ந்து எழுதவேண்டும்

  ReplyDelete