Thursday, January 11, 2024

கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்?

 

(குறுநாவலின் தொடக்கப் பகுதி)

ஆசை

(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)

**

நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.

கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்

இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்   

குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்

**

1.

சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு  “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.

நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான். 

அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.

“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”

சண்முகம் அண்ணன் சத்யா திரையரங்கின் உரிமையாளர். எங்களைப் போல கமல் ரசிகர். மன்னார்குடியில் நாங்கள் மூன்று பேர் மட்டும்தான் கமல் ரசிகர்கள். அதிலும் அதிதீவிர ரசிகர்கள். அது வெளியே. உள்ளுக்குள் நாங்கள் கமலின் ரகசிய சங்கத்தினர். ஓடுமோ ஓடாதோ என்ற கவலையின்றி கமலின் எல்லாப் படங்களையும் அவர் தன் திரையரங்கில் திரையிடுவார். இரண்டாவது, மூன்றாவது ரிலீஸ்களும் உண்டு. அவையெல்லாம், சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள் மாதிரி நன்றாக ஓடிய படங்கள். அதிலெல்லாம் எங்களுக்கு ஈடுபாடு இல்லை. நான் பிறக்கும் முன்னே வந்த படங்கள், முதல் வெளியீட்டிலும் ஓடாத ஆனால் நல்ல படங்கள், பிற மொழியில் கமல் நடித்த நல்ல படங்கள் போன்றவற்றை நாங்கள் இரண்டாம் ஆட்டம் முடிந்து ஒரு மணிக்குப் போட்டுப் பார்ப்போம். இது மாதிரி மாதத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது ஒன்று நடக்கும். இதெல்லாம்கூட ‘அதிதீவிர’ என்ற பதத்துக்குள் நாங்கள் சேர்க்க மாட்டோம். 

அது வேறு விஷயம். ஆம்! எங்களைப் போல் தமிழ்நாடு முழுவதும் கமலின் ரகசிய சங்கத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்கு ஏதாவது ஒரு பொக்கிஷத்தைக் கொண்டுவருவார்கள். அது கமலின் கைவிடப்பட்ட படத்தின் திருடப்பட்ட ஃபிலிம் சுருள்களாக இருக்கலாம். படத்திலிருந்து நீக்கிய காட்சிகளாக இருக்கலாம். பட உருவாக்கத்தின்போது யாரோ ரகசியமாக எடுத்த வீடியோவாக இருக்கலாம். இதில் எனக்குப் புரியாத விஷயம் என்னெவென்றால் கொஞ்சம் எடுக்கப்பட்டுக் கைவிடப்பட்ட கமலின் வெளிவராத படங்களின் படச்சுருள் நெகட்டிவாகத்தானே இருக்கும். அதை எப்படி புராசஸ் செய்தார்கள்? ஜெமினி லேப், விஜயா லேப் போன்றவற்றில் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பிற மாநிலங்களில் புராசஸ் செய்தபின் இங்கே வந்திருக்குமோ என்று நினைத்துக்கொள்வேன். நாங்கள் செய்வது ஒரு வகையில் சட்டத்துக்குப் புறம்பான வேலை என்பதால் இதைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்வதில்லை. சண்முகம் அண்ணன்தான் ஆப்பரேட்டர். அதிகம் ஆப்பரேட்டர் அறையில் இருந்தே பார்ப்போம். சற்றே நீளமான படம் என்றால் திரையரங்கில் அமர்ந்து பார்ப்போம்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘டாப் டக்கர்’, ருத்ரையாவின் ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ போன்ற படங்களின் காட்சிகளைப் பார்த்தபோது எங்களைவிட அதிகப் பரவசம் அடைந்தவர் சண்முகம் அண்ணன். இருக்காதா, அந்தப் படங்கள் அறிவிக்கப்பட்ட காலத்தில் ஒரு இளைஞராக, கமல் ரசிகராக எவ்வளவு ஆர்வத்துடன் இருந்திருப்பார். அந்தப் படங்கள் கைவிடப்பட்ட பின்னும் வரும் வரும் என்று எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்திருப்பார். வரவே வராது என்று ஆன பின் அவற்றின் முடிவுபெறாத வடிவமாவது கிடைக்கிறதே என்பது எத்தகைய உணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை கடந்த சில மாதங்களாக மருதநாயகம் குறித்து நான் கொள்ளும் கவலைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரே ஒரு முறைதான் பிரகாஷை அடிக்கப் போய்விட்டார். 

“அண்ணே, எனக்கு ஒரே ஒரு ஆசைண்ணே. கமலுக்கும் ….க்கும் ஒரு வீடியோ இருக்குன்னு நெறைய பேரு பேசிக்கிறாங்க. அதை மட்டும் பார்த்துடணும்” என்று பிரகாஷ் கேட்டுவிட்டான். நான் குறுக்கே போய்ப் பாய்ந்து தடுக்காவிட்டால் அன்று அவனுக்கு உண்மையில் முதுகு பிளந்திருக்கும். அது மட்டுமல்ல, எங்கள் ரகசியச் சங்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கும். அல்லது, சண்முகம் அண்ணன் மட்டுமே ஒற்றை உறுப்பினராகத் தொடர்ந்திருப்பார்.

அவர் அடங்கிச் சற்று ஓய்ந்திருந்தபோது மெல்லிய குரலில் பிரகாஷ் மன்னிப்பு கேட்டுவிட்டுச் சொன்னான், “அதில்லண்ணே, காதல் காட்சிகள்லயே ரெண்டு பேருக்கும் இடையில அவ்வளவு லவ்வு தெரிஞ்சிதுண்ணே. உலகத்துலேயே அழகான அந்த ரெண்டு பேரும் உடம்பால இணையிற சமயத்துல அவங்க இன்னும் எவ்வளவு அழகா இருப்பாங்க. அதுவும் நடிப்பை மறந்து. அதுக்காகத்தான் அப்படிச் சொன்னேண்ணன். எனக்கு அந்த மாதிரி படங்கள்லாம் பாக்குறதுன்னா பாக்யா தியேட்டருக்குப் போக மாட்டேனா” என்று அவன் சொன்னதும் முடிந்தது கதை என்று நினைத்தேன். அவரோ குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். “அய்யோக்கியப் பயலே” என்று வி.கே.ராமசாமி மாதிரி சொல்லிவிட்டு அவன் முதுகில் ஒரு அடி கொடுத்தார். அப்பாடா சங்கம் தப்பித்தது என்ற நிம்மதி எனக்கு.

இன்றைக்கு ‘ரொம்ப ரொம்ப வேற விஷயம்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறாரே என்னவாக இருக்கும். ‘ஹே ராம்’ படம் வருவதற்கு இன்னும் ஒரு வருஷமாவது ஆகிவிடும். எல்.சுப்பிரமணியத்தை நீக்கிவிட்டு இளையராஜாவைப் போடப்போகிறார்கள் என்று வேறு கேள்விப்பட்டேன். அண்ணன் ’ரொம்ப ரொம்ப’ என்று சொல்லி அனுப்பினால் ரொம்ப ரொம்ப வேறு விஷயமாகத்தான் இருக்கும் என்று சில முறை கண்டிருக்கிறேன். 

பன்னிரண்டு மணிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.  


2. 

“இன்னைக்கு என்ன போடப் போறோம்னு நான் சொல்லப் போறதில்லை. ஏன்னா எனக்கே இன்னும் தெரியாது. ரீலை ஒரு மணிக்கு ஓட விடப் போறப்பதான் எனக்கும் தெரியும். அப்புறம் எனக்கு ரீலைக் கொடுத்தவங்க ரொம்ப ரொம்பக் கண்டிப்பா சொன்ன விஷயம் இந்த ரகசியத்தை சாகிற வரைக்கும் காக்கணும்ங்கிறதுதான். நமக்கு மட்டும் முதல் தடவையா தரப்பட்டிருக்குன்னு சொன்னாங்க” என்றார் சண்முகம் அண்ணன்.

“சரிண்ணேன்” என்று ஆப்பரேட்டர் அறையிலேயே நாற்காலியை இழுத்துப் போடப்போன என்னைப் பார்த்து “ம்கூம், ரெண்டு பேரும் உள்ளே போங்க” என்றார். அது வழக்கத்துக்கு மாறாக ஒரு ஆணை மாதிரி இருந்தது.

அரங்கத்தின் கதவைத் திறந்துவிட்டு ஒவ்வொரு படியாக இறங்கிக்கொண்டிருந்தோம். ஆனால், எனக்கென்னவோ ஏறிக்கொண்டிருப்பதுபோலவே ஒரு உணர்வு ஏற்பட்டது. பிரகாஷ் முகம் எப்படி இருக்கிறது என்பதும் இருட்டில் தெரியவில்லை. படத்தின் ஒளி வருவதற்கான பொந்து வழியாகக் குரல் வந்தது:

“வழக்கமா ஒக்கார்ற இடம் வேண்டாம். நட்ட நடுவுல உக்காருங்க”

அவர் சொன்னபடியே உட்கார்ந்தோம். எங்கள் மூச்சு சீராகும்வரை காத்திருந்தாற்போல் திரையில் ஒலி விழ ஆரம்பித்தது. 

“நான் வணக்கம் சொல்லப்போறதில்லை, நன்றிதான் சொல்லப்போறேன். ஏன்னா நீங்க பார்க்கப் போறது ஒரு படத்தோட கிளைமாக்ஸ்.” 

தலைவரின் குரல்.

அதனைத் தொடர்ந்து ஒளியும் திரையில் விழ ஆரம்பித்தது. எந்த எழுத்தும் இல்லை. இரவு தொடங்கும் நேரம் போல் இருக்கிறது. ஒரு பணக்கார வீட்டின் திறந்த வெளியில் ஏதோ விருந்து தொடங்கவிருக்கிறது. மிக மிக நீளமான அலுமினிய பெஞ்சில் வரிசையாக பஃபே போன்ற விருந்துக்காகப் பாத்திரங்களில் உணவு வைக்கப்பட்டிருக்கிறது.

பணக்காரத் தந்தை சத்தியராஜ் வருகிறார். (ஆ, மருதநாயகத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் இதில் எப்படி?) உணவுப் பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறார். ஓரமாக நிற்கும் மாப்பிள்ளை வீட்டாரை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, 

“செய்வினையெல்லாம் செய்ய வக்கு இல்லதான். ஆனா அதுக்காக சும்மாவா வேடிக்கை பார்ப்பீங்க” என்கிறார்.

பதறிப்போன மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் (அப்படித்தான் இருக்க வேண்டும்) ஒரு பாத்திரத்தை ஒன்றாகத் தொடப்போக, அந்த நவீன வடிவமைப்பு கொண்ட அலுமினிய பெஞ்சில் அது வழுக்கிக்கொண்டுபோய் மறுமுனையைத் தாண்டிக் கீழே விழுந்து அதிலிருந்து ரசம் சிதறுகிறது. சத்தியராஜ் மறுபடியும் அவர்களை இளக்காரமாகப் பார்ப்பதற்குள் காட்சி மாறுகிறது. 

இரவுதான். அன்றைய இரவா, பல ஆண்டுகளுக்கு முந்தைய இரவா, பல ஆண்டுகள் கழித்து வரப்போகும் இரவா என்பதற்கெல்லாம் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், நீச்சல் குளத்திலிருந்து நீச்சல் உடையுடன் வெளிப்பட்டு நிக்கி கல்ரானி அழுதபடி, உடலில் நீர்ச் சொட்டச் சொட்ட ஓடுகிறார். அவர் பின்னாலேயே நீச்சல் குளத்திலிருந்து அப்பா சத்யராஜும் வெளிப்பட்டு மெதுவாக நிக்கி கல்ரானியைப் பின்தொடர்கிறார். எப்போதும் நீந்திக் குளித்தபின் அங்கிபோல் அணியும் தூவாலை உடையை நீச்சல் குளத்திலிருந்து வெளிப்படும்போதே சத்யராஜ் அணிந்திருந்தார். காட்சி அங்கே வெட்டப்படுகிறது. மாப்பிள்ளைக் கோலத்தில் ஜெய் பிணமாகப் படுத்திருந்தார். (இந்தக் காட்சிக்கு கமலை வசனம் எழுதச் சொன்னால் ‘மாப்பிள்ளைக் கோலத்தில் பிணம் படுத்திருந்ததா, இல்லை பிணக் கோலத்தில் மாப்பிள்ளை படுத்திருந்தாரா’ என்று நிச்சயம் எழுதியிருப்பார்).        

ஜெய்க்கு அருகில் வாகை சந்திரசேகர் போலீஸ் உடையில், கூடவே மழை கோட்டு போல ஏதோ ஒன்றையும் அணிந்திருந்தார். கமலும் அதே மாதிரி ஆடைகளை அணிந்தபடி புரியாத மாதிரி சன்னமான குரலில் ஏதோ வசனம் பேசுகிறார். பிறகு விசிலடிக்க ஆரம்பிக்கிறார். 

அது ‘உன்னையறிந்தால் உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்’ பாடல். விசிலடித்துக்கொண்டே கமல் கேமரா நோக்கி வருகிறார். பின்னால் வாகை சந்திரசேகர் ஜெய்யின் மேலே உட்கார்ந்துகொண்டு தலையை ஆட்டிக்கொண்டு காலை இரண்டு பக்கமும் ஆட்டுகிறார். பாட்டின் தாளத்துக்கு ஏற்ப கமல் இன்னும் கேமரா நோக்கி நெருங்கி வருகிறார்.

பின்னால் வாகை சந்திரசேகர் தொடர்ந்து இன்னும் தலையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஜெய் திடீரென்று கார் ஆகிறார். வாகை தொடர்ந்து கால் ஆட்டுகிறார். கமல் பாடிக்கொண்டே இருக்கிறார். படம் முடிந்துவிடுகிறது.

என்ன இது? என்ன பார்த்தோம்? இதுவரை இப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லையே? எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது? கருமாந்திரத்தை எடுத்துவைத்திருக்கிறாரா, இல்லை அபத்தத்தை அபத்தமாகவே கலைப்படுத்தியிருக்கிறாரா? யாரோ ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஏன் நிக்கி கல்ரானி என்ற பெயர் எனக்குத் தோன்றியது? பிணமாகக் கிடக்கும் அந்த நடிகரின் பெயர் ஜெய் என்று எனக்கு எப்படித் தோன்றியது? 

“கமல் கனவில் படம் எடுத்தால்கூட இப்படித்தான் எடுப்பார் போல” என்று நினைத்துக்கொண்டு பக்கத்தில் பிரகாஷைத் தேடினேன். அவனைக் காணவில்லை. அவன் அப்போதே போய்விட்டான் போல.

சண்முகம் அண்ணனிடம்கூட சொல்லாமல் எழுந்து, திக்பிரமையிலிருந்து விடுபடாமலேயே வெளியே வந்தேன். சைக்கிளில் ஏறியபோது திரையரங்குக்கு வெளியே ஓரத்தில் மிகவும் விலையுயர்ந்த கார் ஒன்று நிற்பது தெரிந்தது. காருக்குள் சிறு செவ்வக வடிவத்தில் மங்கலான வெளிச்சம் ஒரு ஜோடிக் கண்களின் மீது விழுந்திருந்தது. அந்தக் கண்கள் அங்கிருந்தே என்னைப் பின்தொடர்வது தெரிந்தது. எங்கேயோ பார்த்த கண்கள்.

3.

மறுநாளும் பிரகாஷ் வந்தான். இம்முறையும் “கோபாலகிருஷ்ணன்” என்றான்.

அடுத்தடுத்த நாட்களில் இப்படி நிகழ்ந்ததில்லையே என்ற குழப்பத்துடன் அவனிடம் இது குறித்துக் கேட்பதற்கு வாயைத் திறப்பதற்கு முன் தன் வாய் மேல் ஆட்காட்டி விரலை வைத்து எச்சரித்துவிட்டு மறுபடியும் “கோபாலகிருஷ்ணன்” என்றான். நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது. “இன்னும் ரொம்ப ரொம்ப வேற மாதிரி” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பன்னிரண்டரை மணிக்குத் திரையரங்க வாசலில் எனக்காக பிரகாஷ் காத்திருந்தான். நேற்று போலவே அதே மாதிரியான சடங்குகள். இருட்டுக்குள் நடுவாந்திரமாகப் போய் உட்கார்ந்ததும் ஒலி தொடங்கியது. தலைவரின் அதே குரல், அதே வார்த்தைகள். அதே போன்ற காட்சிகள். ஆனால், ஜெய் பிணமாகக் கிடப்பது வரைதான் நேற்று மாதிரி. 

“கொலையா தற்கொலையா?” என்று கமல் கேட்கிறார்.

“இரண்டுக்கான அறிகுறியும் தெரியலை” என்கிறார் வாகை.

“உயிரோட இருக்கானா இல்லையா?” என்று கமல் கேட்கிறார்.

“இரண்டுக்குமான அறிகுறியும் தெரியலை” என்கிறார் வாகை.

“வாகை, யூ ரிப்பீட் யுவர்செல்ஃப். மேக் ஹிம் டு பி சம்ஒன்” என்று சொல்லிவிட்டுத் திரையின் முன்னுள்ள திசை நோக்கிக் கண்ணடிக்கிறார் கமல்.

‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ படத்தின் காட்சிப்படுத்தும் விதத்தை கமல் காப்பியடித்திருக்கிறார் என்ற நினைப்பு என்னுள் தோன்றி மறைவதற்குள்,

மாப்பிள்ளைக் கோலத்தில் பிணம் படுத்திருக்கிறதா, இல்லை பிணக் கோலத்தில் மாப்பிள்ளை படுத்திருக்கிறாரா? நோ கன்ட்ரி ஃபார் யங் மென்” என்று சொல்லிவிட்டு திரையின் முன்னுள்ள திசை நோக்கி, இல்லை என்னை நோக்கிக் கண்ணடிக்கிறார் கமல். 

“ஓ மை காட்! கமல் மைண்ட் ரீடிங் ஃபிலிம் எடுத்திருக்கிறார், அல்லது எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘ரொம்ப ரொம்ப வேற மாதிரி’ என்பதன் அர்த்தம். ஒரே ஒருவருக்காக, அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அறிவியல் வரலாற்றில், சினிமா வரலாற்றில் இதுபோன்ற ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே. அல்லது நாம் கனவு கண்டுகொண்டிருக்கிறோமா? திரும்பிப் பக்கத்தில் பார்த்தால் பிரகாஷை இன்றும் காணோம்.

கமல் விசிலடிக்க ஆரம்பிக்கும்போதே எழுந்து ஆப்பரேட்டர் அறைக்குச் செல்கிறேன். அங்கே சண்முகம் அண்ணன் நக்கலா முறைப்பா என்று சொல்ல முடியாத ஒரு பார்வையுடன் என்னைப் பார்த்தபடி நிற்கிறார். 

“படத்தை நிப்பாட்டுங்கள் அண்ணே. நான் ஃபிலிமைப் பார்க்கணும்,”

அவர் நிப்பாட்டுகிறார். நான் சொன்னதை அவர் உடனே கேட்டதில் கூட ஏதோ சூட்சமம் இருப்பதுபோல் தெரிந்தது.

அவர் நிறுத்தியதும் மின்விளக்கைப் போட்டுவிட்டு ஃபிலிமைப் போய் எடுத்துப் பார்த்தேன். என்ன இது, ஒரே ஒரு ஃபிரேம்தான் ஒட்டுமொத்தப் படச் சுருளிலும் தொடர்ந்து வருகிறது. கமல் பார்வையாளர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், பின்னணியில் ஒரு கார் மேலே வாகை உட்கார்ந்திருக்கிறார். ஒரே ஒரு காட்சிதான், எல்லா ஃபிரேம்களிலும். என் உதடுகள் “ஆல் வொர்க் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் எ டல் பாய்” என்று உச்சரிக்கத் தொடங்குகின்றன. அதையே உச்சாடனம் போல் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அறையிலிருந்து சண்முகம் அண்ணன் பதுங்கிச் சென்றுவிடுகிறார். நான் உச்சாடனத்தை நிறுத்தாமல் பக்கவாட்டில் பார்க்கிறேன். ஆப்பரேட்டர் அறையிலிருந்து திரையரங்கை விட்டு வெளியேறுவதற்கான கதவு நிலையில் சாய்ந்துகொண்டு குறுஞ்சிரிப்புடன் கமல் நிற்கிறார். ஷெல்லி டூவாலின் கையில் இருந்ததைப் போலவே ஒரு பேஸ்பால் மட்டையுடன் கமல். மன்னார்குடியில் இப்போதுதான் ஒரு பேஸ்பால் மட்டையை முதன்முதலில் பார்க்கிறேன்.

சண்முகம் அண்ணனின் குரல் மட்டும் வெளியிலிருந்து கேட்கிறது. “தம்பி, சங்கத்துக்கு இன்னொரு உறுப்பினர் இருக்காரு. நேத்துவரைக்கும் உன் கண்ணுக்குத் தெரிஞ்சதில்ல.” இப்போது புரிந்தது, கிடைப்பதற்கே வாய்ப்பில்லாத படச்சுருள்கள் பலவும் எப்படி சங்கத்துக்குக் கிடைக்கிறது என்பது.

பேஸ்பால் மட்டையை கமல் தனது இன்னொரு கைமீது மெதுவாக அடித்தபடி என் மீது விழிகளை விலக்காமல் என்னை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார். அந்த அறையின் இன்னொரு கதவு நோக்கி ஓடுகிறேன். ஆனால், அது திரையரங்குக்குள் செல்லும் கதவு.


4.

திரையரங்குக்குள் நுழைந்ததும் ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் போடப்பட்டது. திரையில் வேறொரு படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், நான் இருக்கும் நிலையில் அது என்ன படம் என்று நான் கவனிக்கவில்லை. நான் கமலை நோக்கியவாறே பின்பக்கமாக இறங்கிக்கொண்டிருந்தேன். திரும்பி நேராக ஓடலாம். ஆனால், எனக்கு என்ன நிகழப் போகிறது என்பதை கடைசி நொடித் துகள் வரை நேரே கண்டுவிட விரும்பினேன். 

கமல் கேட்டார், “இந்த ஊரில் எனக்கு எவ்வளவு ரசிகர்கள்?”

“நிறைய பேர். அபூர்வ சகோதர்கள், தேவர் மகன்லாம் நூறு நாள் ஓடுச்சு”

“அப்புறம் ஏன் குணா, மகாநதி எல்லாம் ஒரு வாரத்தைக்கூட தாண்டவில்லை? இப்போ சொல்லு இந்த ஊரில் எனக்கு எத்தனை ரசிகர்கள்”

“மூன்று பேர்.”

“அதெப்படி இன்னும் ஒன்பது வருஷம் கழிச்சு வரப்போற ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்’ படத்தை நான் இப்பவே காப்பியடிச்சிருக்கேனா?”

“……..”

“நான் என்ன படம் எடுக்கிறேன்?”

“மைண்ட் ரீடிங் படம்”

”சபாஷ்! அப்புறம்”

“மைண்ட் கன்ட்ரோலிங் படம்”

“ட்ரூ ட்ரூ! அப்புறம்”

“இன்டெராக்டிவ் படம்”

“அற்புதம்! அப்புறம்”

“டைம் ட்ராவலிங் படம்”

“யூ மீன் டைம் ட்ராவல் படம்?”

“இல்லை இல்லை! டைம் ட்ராவல் செய்யுற படம்”

“ப்ரில்லியண்ட்! அப்புறம்”

“செல்ஃப் திங்க்கிங் படம்”

“வாவ்! அப்புறம்”

“செல்ஃப் ட்ரீமிங் ஃபில்ம்”

“எவ்ரிதிங்… எவ்ரிதிங்… எவ்ரிதிங்… எவ்ரிதிங்… யூ காட் மை பாய்ண்ட் பீம் பாய். அண்ட் அனதர் திங்க், படச்சுருள் இட்செல்ஃப் இஸ் எ திங்கிங் பீயிங். எ சென்டியண்ட். என் ரசிகன் ஒரு சென்டியண்ட் படச்சுருளாகத்தான் இருக்க வேண்டும். அவனைத் தேடித்தான் இதுநாள் வரை நான் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். என் கலையைப் பரிபூரணமாக உள்வாங்கக் கூடிய ரசிகன் நீயே” என்று சொல்லிவிட்டு ‘விக்ரம்’ (1986 & 2022) பாட்டுக்கிடையில் வருவதைப் போல் பயங்கரமாகச் சிரிக்கிறார். இவ்வொரு படி இறங்கும்போதும் மட்டையால் தன் கையில் மெதுவாக அடிப்பதை நிறுத்தவே இல்லை.

“கமல் தயவுசெஞ்சு நிறுத்துங்க” என்று கெஞ்சினேன்.

“இங்க கமல்னு யாரும் இல்லை. நான் ஜாக் நிக்கல்சன்” என்றார்.

“இல்லை நீங்க கமல், நான் ஆசை, ஆசைத்தம்பி.”

“இனிமே நீ ஆசை இல்லை, ஷெல்லி டூவால். வேண்டுமென்றால் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்” குரூரமாக இளித்தார்.

“இங்கே கண்ணாடி ஏதும் இல்லையே.”

“நான் எங்கிருந்து வந்தேனோ அதுதான் கண்ணாடி. டயலாக் நல்லா இருக்குல்ல?” 

“கூப்ரிக் கூப்ரிக் நிறுத்துங்க. கட் சொல்லுங்க” என்று குத்துமதிப்பாக ஒரு திசையைப் பார்த்துக் கதறினேன்.

“இந்த ஷாட்டை கட் செய்வதற்கு கூப்ரிக் என்று யாரும் வர மாட்டார். இப்போதுதான் இதே மட்டையால் அடித்து அவரைக் கொன்றுவிட்டு வந்தேன். வேண்டுமென்றால் இந்த மட்டையைப் பார். ரத்தம். திஸ் ஷாட் இஸ் ஹியர் டு ஸ்டே ஃபாரெவர் லைக் ‘ஆல் ஒர்க் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் எ டல் பாய்.” 

திரையை நோக்கி ஓடுகிறேன். திரைக்குள் பாய்ந்தால் கிழித்துக்கொண்டு அந்தப் பக்கம் வழியாகத் தப்பிக்கலாமே என்ற யோசனை வருகிறது. திரையின் அந்தப் பக்கம் இதுவரை பார்த்ததில்லையே, வழி இருக்குமோ இருக்காதோ என்றாலும் இப்போது எங்காவது பாய்ந்தாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பாய்கிறேன். 


5.

பாய்ந்துவிட்டேன். ஆனால் திரைக்கு அந்தப் பக்கம் இல்லை நான். வேறு எங்கே இருக்கிறேன்? அங்கே ஒரு கறுப்புச் செவ்வகக் கல் இருந்தது. அதைச் சுற்றிலும் சிம்பன்சிகள் இங்குமங்குமாக அலமலந்துகொண்டிருந்தன. ஓ கூப்ரிக், விடவே மாட்டீர்களா? சற்று அருகே சென்று பார்த்தேன். அதன் மேல் பக்கம் ஸ்டேன்லி கூப்ரிக் என்று எழுதி அதன் கீழே இப்படி இருந்தது: “Here lies our love Stanley with Eyes Shut Wide, born in New York city on 26 July 1928, Died here at home on 7 March 1999 buried 2,00,000 years ago” 

இன்றைய தேதி என்ன? அப்படியென்றால் கமல் உண்மையைத்தான் சொல்கிறாரா? ஸ்டேன்லி கூப்ரிக் இறந்துவிட்டாரா? நான் திரையரங்குக்கு வரும் வரை எந்தச் செய்தியிலும் பார்க்கவில்லையே. தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ கூப்ரிக்கின் முக்கியத்துவம் தெரியாது என்பதால் இன்றோ நாளையோ எப்போதும் தமிழ்ச் செய்திகளில் அவரது மரணம் இடம்பெறுவது கடினம். எனக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் கிடைத்திருக்கிறது. சினிமா ஆர்வலர்களிடமாவது பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், வெளியே எப்படிப் போவது?

இவ்வளவு நேரமும் என்னையே குரூரக் குறுஞ்சிரிப்பு மாறாமல் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார் கமல்.

என் முன்னே எத்தனை வாய்ப்புகள், தெரிவுகள் இருக்கின்றன என்று யோசிக்க ஆரம்பித்தேன். 

இன்னும் சற்று நேரத்தில் அந்தச் செவ்வகக் கல் இருக்கும் இடமருகே ஒரு சக குரங்கின் எலும்பாயுதத்தால் அடிவாங்கிச் சாகவிருக்கும் ஒரு குரங்கு போலவே நானும் கமல் கையால் அந்த மட்டையாலேயே அடிவாங்கி செத்துப்போகலாம்.

இல்லையெனில் அங்கேயே இருந்துகொண்டு குரங்கின் அறிவு வளர்ச்சியைத் தூண்டும், அதன் மூலம் பரிணாம மாற்றம் நிகழ்த்தும் செயல்களை இப்போதோ அப்போதோ சாகும் வரை செய்துகொண்டிருக்கலாம். 

இல்லையெனில் குரங்கிலிருந்து மனிதன் என்பதன் முதல் படியாக முதல் மனிதக் குழந்தையின் தகப்பனாகலாம். பரிணாம மாற்றத்தைப் பொறுத்தவரை அது படிப்படியானதாக இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கூறியதுபோல் ’ஜெயண்ட் லீப்’பாக இருக்கும். கூடவே, தன் இணையைக் கவர்ந்ததால் என்மேல் பொறாமை கொண்ட ஆண் குரங்கொன்றால் அடித்துக் கொல்லப்பட்ட முதல் மனிதனாகவும் நான் ஆகலாம். 

தப்பிக்க வழி இல்லாமல் இருக்காது. எனினும் ஸ்டேன்லி குப்ரிக் படத்துக்கு ஒருபோதும் முடிவு கிடையாது. தெரியவில்லை, இது ஸ்டேன்லி படமா கமல் படமா என்று. ஸ்டேன்லி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கொண்டுபோய்த் தன் கல்லறைக் கல்லை சும்மா வைத்திருப்பார் என்று தோன்றவில்லை. அது நிச்சயம் என்னை எதிர்காலத்துக்கோ வேறு பிரபஞ்சத்துக்கோ கொண்டுசெல்லும் புழுத்துளையாகத்தான் இருக்கும். 

ஆனால், அசைக்கவே முடியாத ஆகிருதியுடன் அது இருந்தது. திறப்புகளோ, ஒட்டவைக்கப்பட்ட விளிம்புகளோ ஏதும் இல்லை. படச்சுருளின் ஃப்ரேமும், கையில் பேஸ்பால் மட்டையுடன் இருக்கும் கமலும் அனுமதிக்கும் காலத்துக்குள் நானும் எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டேன். பிறகு ‘த யூஸுவல் சஸ்பெக்ட்ஸ்’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆம், உடைத்துப் பார்த்துவிட வேண்டியதுதான். துணிந்து கமலிடம் கேட்டேன்:


“கமல், அந்த பேஸ்பால் மட்டையைத் தாங்களேன்”

“கட்” என்ற சத்தம் திரைக்கு முன்னாலிருந்து கேட்டது. அது ஸ்டேன்லி கூப்ரிக் குரல் போல இல்லை, சந்தானபாரதி குரல் போலத்தான் இருந்தது. 

(தொடரும்)


நன்றி:

‘The Shining’ and ‘2001: A Space Odessey’ by Stanely Kubrick

‘No Country for Old Men’ by Coen Brothers

‘The Usual Suspects’ by Christopher McQuarrie

கமல் ரகசியச் சங்கம், மன்னார்குடி கிளை


No comments:

Post a Comment