Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Sunday, October 5, 2025

காவிரி தந்த மல்லாரி வேந்தர்! - நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பிக்கு அஞ்சலி!


பிரபல நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (பிறப்பு: 14-04-1930) இன்று காலமானார். அவருக்கு வயது 95. அவரைப் பற்றி எனது ‘நீரோடிய காலம்’ தொடரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய அத்தியாயத்தை இங்கே பகிர்கிறேன்:

கொள்ளிடம் கடலுடன் கலக்கும் பழையாறில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதும் என் மனதில் ஓடிய ஊரின் பெயர் ‘ஆச்சாள்புரம்’தான்.

ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை சி.டி. வடிவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்க ஆரம்பித்தேன். மல்லாரி என்பது சுவாமி புறப்பாட்டின்போது நாதஸ்வரத்தின் வாசிக்கப்படும் ஒரு இசைவடிவம். எனக்கு ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை அறிமுகப்படுத்திய நண்பர் “பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை” என்று கூறியபோது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். ஆனால், கம்பீர நாட்டையில் அமைந்த கம்பீரமான சின்னத்தம்பியின் மல்லாரிகளைக் கேட்டு முடித்தபோது நண்பரின் கூற்றில் எந்த மிகையும் இல்லை என்பதை உணர்ந்தேன்.

Thursday, September 11, 2025

பாரதீ: எம் கவிஞன் நீ! - பாரதி நினைவுநாள் கட்டுரை



ஆசை

‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.

Wednesday, June 18, 2025

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Friday, March 14, 2025

ஸ்டீவன் ஹாக்கிங் ஏன் நமக்கு முக்கியமானவர்?



ஆசை

(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள்) 

 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, இரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.

மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார். 

Saturday, February 22, 2025

பாவென்று அழையுங்களேன் பாபுஜி! - கஸ்தூர்பா காந்தி நினைவுநாள் கவிதை


இன்று கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள். எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
**
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
- ஆசை

Sunday, November 17, 2024

க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்: நினைவுநாள் பகிர்வு


ஆசை

தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.

எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

Thursday, March 14, 2024

ஸ்டீவன் ஹாக்கிங் ஏன் நமக்கு முக்கியமானவர்?


ஆசை

(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள். 2018ல் அவர் மறைந்தபோது எழுதிய கட்டுரை இது)

 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, இரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.

மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார். 

ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளையின் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி.

Saturday, November 11, 2023

சிங்காரத்தின் மாபெரும் சிக்ஸர்



உள்ளூர்ப் போட்டியில்
சிக்ஸர்களாய் அடித்து
எங்கள் தெருவுக்கு
வெற்றிதேடித் தந்தவன் சிங்காரம்
பரிசாய்க் கிடைத்த
மூன்னூறு ரூபாயில்
தெருவுக்கே புது மட்டை
வாங்கிக்கொடுத்தவன்
சிங்காரம்
பகலில்
கிரிக்கெட் மைதானமாகவும்
இரவில்
கேரம் மைதானமாகவும்
மாறிப் போகும்
அவன்
வீட்டு வாசல்
எல்லா நேரத்திலும்
இளமையின்
வர்ணனை மைதானமாக
இருக்கும் அது
கிரிக்கெட்டையும்
இளமையையும்
தெருவையும்
ஒன்றாகப் பறித்துக்கொண்டதன்
பெயர் என்னவென்று தெரியவில்லை
ஊருக்குப் போகும்போது
எப்போதாவது
சிங்காரத்தைப் பார்ப்பதோடு சரி
படிப்பு இல்லையென்றாலும்
வெளிநாடு போய்ச் சம்பாதித்து
அதில் பாதி இழந்து
பின் சொந்தமாய் ஒரு மர இழைப்பகம்
பெரிய கோயிலுக்கு அருகில்
கணினியில் வடிவமைத்து
ஆணையைத் தட்டும்போது
உள்ளே அவனுடைய சிஎன்ஸி இயந்திரம்
சிக்ஸர்களாய் அடிக்க ஆரம்பிக்கும்
வாழ்வை
அப்படித்தான் அனுதினமும்
வென்றுகொண்டிருந்தான்
கடைசியாய் ஊருக்குப் போனபோது
சிங்காரத்தின் மரணச் செய்தி
தடுக்கிப் பின்பக்கமாக விழுந்து
தலையில் அடிபட்டுச்
செத்துப்போனதாய்க் கேள்வி
இளம் மனைவி
வயிற்றில் பிள்ளை
அது இன்னேரம் பிறந்திருக்கும்
ஆணோ பெண்ணோ
எங்கிருக்கிறது தெரியவில்லை
தன் அப்பா அடித்த
சிக்ஸர்களை
அது பார்த்திருக்க வேண்டுமே
அது இருந்திருந்தால்
பரிசில் பங்கு பிரித்துக்கொண்டு
பொம்மை வாங்கிக்கொடுத்திருப்பான்
சிங்காரம்
மிச்சப் பணத்தில்
தண்ணி அடித்திருப்போம்
நாங்கள்
இப்படித்தான் பல நேரங்களில்
நேரிடுகிறது
சிங்காரம் சிக்ஸர் அடித்ததைப் பார்க்க
அப்போது அவன் குழந்தை இல்லாததைப் போலவும்
அவன் அடித்த சிக்ஸர்
அவனது எல்லைக்கோட்டைத் தாண்டிப்போய்
எங்கோ இப்போது கொட்டக் கொட்டக்
கண்ணை உருட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க
சிங்காரம் இல்லாததைப் போலவும்

-ஆசை 

(மறைந்த நண்பன் சிங்காரத்தின் பிறந்தநாள் கவிதை)

Saturday, September 18, 2021

பிரான்சிஸ் பிரான்சிஸ் உன்னை ஏன் நீ கைவிட்டாய்?

 


உன் சிலுவையுடனே
மரித்துப்போனாய்
பிரான்சிஸ்

உன்னை எடுத்து
மடியில் போட்டுக்கொண்டு
உலகத்துத் துக்கத்தையெல்லாம்
தன்னுடையதாக்கிக்கொள்ளும்
உன் மரியன்னையும்
ஆணியிறங்கிய காயங்களுடனான
உன் பாதங்களைத்
தன் கண்ணீரால் கழுவுவதற்கு
உன் மரியாள் மகதலேனாவும்
வரவில்லை

ஆனால்
யூதாஸுக்கு முப்பது வெள்ளிக்காசுகள் கொடுத்து
உன்னைக் காட்டிக்கொடுக்க
நீயே அனுப்பிவிட்டிருந்தாய்

உனக்கொரு முத்தம் கொடுத்து
அவன் காட்டிக்கொடுக்கும்முன்
பொறுமையின்றி
மரணத்திடம்
நீயே உன்னைக்
காட்டிக்கொடுத்துவிட்டாய்

உனக்குத் தெரியாது
எல்லோரும் உன்னை மெசியாவென்றும்
மீட்பரென்றும்
ரட்சகரென்றும் கூறியதெல்லாம்
நீ கூடவே தூக்கித் திரிந்த
உன் சிலுவையைப் பார்த்துதான் என்பது

நீ தச்சன் மகனாகவே
இருந்திருக்கலாம்
மீட்பரென்ற சித்திரத்தைவிட
அழகியது அது

ஆனால்
யாருக்கோ சிலுவை செய்வதை
ஒருபோதும் நீ
தேர்ந்திருக்க மாட்டாய்

விண்ணகத்து ஒளி
கணநேரம் பளிச்சிட்டு
மின்னலென உன் குருதியை
ஆழ உழுத இன்பத்திற்குப் பிறகு
எஞ்சிய வாழ்நாளை
கல்வாரி நோக்கித்
திருப்பிக்கொண்டாயோ?

அப்படி என்ன ஒளி
அது
உன் நெஞ்சின் ஒளியையெல்லாம்
உறிஞ்சிக்கொள்ளுமளவுக்கு

வாழ்க்கை உன்னை
வழிதவறிய ஆட்டுக்குட்டியாக்க
மரணம் உன்னை
உனது மீட்பராய்
ஆக்கிவிட்டது

அவரவர் சாத்தான்
அவரவருடனேதான் பிறக்கும்
உன்னுடன் பிறந்த சாத்தானை
குறுக்கும் நெடுக்குமாக
அறுத்துப்போட்டு
நீ செய்துகொண்ட சிலுவையைத்தான்
இத்தனை காலமாய் சுமந்துகொண்டிருந்தாய்

அதில் உன்னை நீயே
அறைந்துகொண்டபின்
நீ பேசியிருக்க வேண்டிய
இறுதி வார்த்தைகளை
உன்னிடம் நான் கேட்கிறேன்

 'பிரான்சிஸ் பிரான்சிஸ்
உன்னை ஏன் நீ கைவிட்டாய்?’

    18-09-21

Saturday, August 21, 2021

நகுலன் ஊர்ந்து வருகிறார் - நகுலன் நூற்றாண்டு நினைவுக் கவிதை


புணர்ச்சிக்கு நடுவே நினைவுக்கு வருகிறது இன்று நகுலனின் நூறாவது பிறந்த நாள் என்று

தனக்கு யாருமில்லை
தான்
‘கூட’
என்று சொன்ன
அந்த வாழ்நாள் ஒண்டிக்கட்டைக்குச்
செய்யும் அவமதிப்பில்லையா இது
என்று கேட்கலாம்
நகுலன் இல்லாத இடத்தில்
எல்லாம்தானே
நடந்துகொண்டிருக்கும்
உண்மையில்
ஒரு நூற்றாண்டென்பது
வெகு தொலைவு
இவ்வளவு தூரம்
ஊர்ந்து ஊர்ந்து
வந்திருக்கிறார்
நகுலன்
இடையில் மரணம் வேறு
அதற்கு முன்பு
சுசீலா வேறு
ஆமாம்
நகுலன் போன பிறகு
எந்தக் கதவைத்
தட்டிக்கொண்டிருக்கிறாள்
சுசீலா
அவள் கேட்டால்
திறப்பவர் எவரோ
அவர் சொல்லிவிடுங்கள்
நகுலன் தன்னைத் தானே
துரத்திக்கொண்டு
சென்றிருக்கிறார் என
உண்மையில்
ஒரு நூற்றாண்டு
என்பது
வெகு தொலைவுதான்
ஏனெனில்
திரும்பிப் பார்க்கும்போது
நகுலனே
ஒரு இடமாகக் காட்சியளிக்கிறார்
சூரல் நாற்காலியின் மீது
நகுலனின் பிறப்புக்கு முந்தைய வெயில்
இறப்புக்குப் பிந்தைய வெயிலுடன் சேர்ந்து
அடித்துக்கொண்டிருக்கிறது
அதில் வண்ணாத்திப் பூச்சிகள்
பறந்து கொண்டிருக்கின்றன
உண்மையில் ஒரு
நூற்றாண்டு என்பது
வெகு தொலைவுதான்
தன் இறப்புக்குப் பிறகும்
ஊர்ந்து ஊர்ந்து
வந்துகொண்டிருக்கிறார்
நகுலன்
பார்க்க பயமாக இருக்கிறது பார்க்காமலும் இருக்க முடியவில்லை 

Sunday, October 11, 2020

அப்பா இல்லாத வீட்டில் இனி பயமில்லாமல் விளையாடு கொண்டைக்குருவியே!



ஆசை

அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சில நாட்களாகவே சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. நானும் கண்டுகொள்ளாததுபோல் இருந்துவிட்டேன். சில நாள் கழித்து சந்தேகத்துக்குரிய நடமாட்டம் வெளிப்படையான நடமாட்டமாக மாறியது. யாரோ ஒரு அந்நியர் அடிக்கடி எங்களை வேவுபார்க்க வருவது தெளிவாகிவிட்டது. என்ன காரணத்துக்காக வேவு பார்க்க வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வேவுபார்த்தல் என்ற நிலையைத் தாண்டித் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் அவர் எங்கள் வீட்டை ஆக்கிரமித்துவிட்டிருந்தார்.

அவர் வேறு யாருமல்ல. கொண்டைக்குருவிதான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் செம்பிட்டக் கொண்டைக்குருவி (Red-vented bulbul). எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இருந்த மரத்தில் அது கூடு கட்ட ஆரம்பித்திருக்கிறது. அது தனி ஆள் கிடையாது, இன்னொருத்தரும் அதற்குத் துணை. இப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. தான் கூடு கட்டுவதற்கு எந்த மரம் ஏற்றது, எந்தக் கிளை ஏற்றது, எந்த வீடு ஏற்றது என்பவற்றையும் கூடுகட்டும் இடம் பாதுகாப்பானதுதானா, அருகில் உள்ளவர்கள் ஆபத்தற்றவர்களா என்பதை முதலில் அறிந்துகொள்வதற்காகக் கொண்டைக்குருவி நோட்டம்பார்க்க முதலில் வந்திருக்கிறது. நோட்டம்பார்க்க வரும்போதெல்லாம் சுற்றுச்சுவரின் மேல் சற்று உட்கார்ந்துவிட்டுப் போவது, கொடியில் ஊஞ்சலாடுவது, அருகில் உள்ள செடிகொடிகளில் சற்று உலாவிவிட்டு வருவது என்று வழக்கத்தை வைத்திருந்தது. பிறகு தன் வருகையை அதிகரித்து, அதைத் தன்னுடைய பிரதேசமாக ஆக்கிக்கொண்டு அங்கிருக்கும் மரத்தில் கூடு கட்ட ஆரம்பித்தது.

அதன் கூடு உருவாகும் விதத்தை அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. மாடிப்படிகளுக்கு அருகில் இருந்த மரத்தில்தான் கூடு உருவாக ஆரம்பித்தது. மாடியில் போய்ப்பார்த்தால் இரண்டு அடி தூரத்தில் பார்க்கலாம். அதன் கூடு உருவாகும் இடத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இலைக்காம்பைவிடச் சற்றுப் பெரிய தளிர்க் கிளைகள் இரண்டுக்கு இடையில் பொதிந்து கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தத் தளிர்க் கிளையில் அணில் கூட ஓடாது, அவ்வளவு மென்மை. இதில் என்ன அப்படி பாதுகாப்பு என்று ஆயிரத்தெட்டு தடவை நோட்டமிட்டாய் கொண்டைக்குருவியே என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் உண்மையில் அதற்கு அந்த இடம் போதுமானது, அவற்றின் கனத்தையும் போடக்கூடிய முட்டைகள், அதிலிருந்து வெளியாகக் கூடிய குஞ்சுகள் எல்லாவற்றையும் கணக்குப்போட்டுதான் கூட்டை உருவாக்க ஆரம்பித்திருந்தது. சிறுசிறு நார்கள் செத்தைகள் போன்றவற்றைக் கொண்டு சிறு கிண்ணம் போன்ற வடிவில் அந்தக் கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரமாயிரம் தடவை கொண்டைக்குருவி கட்டுமானப் பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டை நோக்கிப் பறந்திருக்கும். எப்படியோ கூடு உருவாகிவிட்டது.

ஒருநாள் மாடிக்குப் போய்ப் பார்த்தேன். கூட்டுக்குள் கொண்டைக்குருவி உட்கார்ந்திருந்தது. அது முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சற்றுப் பக்கத்தில் மாடியில் செருகப்பட்டிருந்த கம்பு ஒன்றில் இன்னொரு கொண்டைக்குருவி என்னைப் பார்க்காததுமாதிரி பார்த்துக்கொண்டிருந்தது. சரி அவற்றின் குடும்ப வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று நான் நல்லபிள்ளையாகக் கீழே வந்துவிட்டேன். ஆனால் அந்த அந்நியர்கள் என் அளவுக்குக் கண்ணியமாக இல்லை.

காம்பவுண்டு சுவரை ஒட்டி இருந்த தண்ணீர்க் குழாய்க்குக் கீழே உள்ள வாளியில் குதித்துக் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என்று எங்கள் அனுமதியில்லாமல் அநாகரிகமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்! அது மட்டுமல்லாமல் போர்டிகோ மாதிரி இருந்த இடத்தின் மேலே ஒரு மின்விசிறி இருக்கும். அதன் மேல் வந்து உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அத்துமீறிச் செயல்பட்டாலும், அது எங்கள் வீடாக இருந்தாலும் நான் அவர்களை இடையூறு செய்யக் கூடாது என்று எவ்வளவு ஒதுங்கி நடந்தேன் தெரியுமா? அவர்கள் வந்து விளையாடும்போது சிறுவர்கள் பெரியவர்கள் யாரையும் சத்தம்போடாமல் பார்த்துக்கொண்டதுடன் அவை விளையாடும் இடத்துக்கு அருகில் யாரும் வராமலும் பார்த்துக்கொண்டேன். முரட்டு ஆசாமியான என் அப்பாவைக்கூட அதட்டி ஒடுக்கினேன். வீட்டுக் கதவை மெலிதாகத் திறந்துவைத்துவிட்டு அந்த அந்நியர்கள் என்ன அட்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

லேடிபேர்ட் சைக்கிளுக்கு முன்னால் உள்ள கூடையில் வந்து படுத்துக்கொள்வது அந்த அந்நியர்களுக்குப் பிடித்தமான செயல். படுத்துப் புரள்வார்கள், சமயத்தில் ஆள் வரும்போதுகூட பயப்படாமல் மும்முரமாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களை மதிப்பதே இல்லை. உண்மையான வீட்டுக்காரர்களான நாங்கள் அவர்களுக்காக அடங்கி ஒடுங்கி நடந்துகொள்ள அவர்களோ எங்களைச் சட்டை செய்வதே இல்லை. ஆகா! எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து புரிய வந்தது. அவர்கள் நம் வீட்டை அபகரித்துவிட்டிருக்கிறார்கள். கயவர்கள், இருக்க இடம் கொடுத்துச் சுதந்திரமாக உலவ விட்டதற்கு நன்றியுணர்ச்சியே இல்லாமல் வீட்டைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். போலிப் பத்திரம் ஏதாவது தயாரித்திருப்பார்களா என்று வேறு எனக்குச் சந்தேகம். அந்நியர்களை ஆட்சியை விட்டுத் துரத்த இன்னொரு சுதந்திரப் போர் நிச்சயம் தேவை என்பது எனக்குத் தெரிந்தது. அந்தச் சுதந்திரப் போருக்கு என்ன பெயர் வைக்கலாம்? ‘கொண்டையனே வெளியேறு இயக்கம்’ என்று பெயர் வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அவற்றை வெளியேற்றுவதற்கான வேலைகளில் நிஜமாகவே எங்கள் அப்பா ஏற்கனவே இறங்கிவிட்டிருந்தார். கூடு இருந்த மரத்தில் நிறைய கொசு அடைவதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனால் அப்பா மரத்தை வெட்டத் தீர்மானித்துவிட்டார். அப்போதுதான் முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் மரத்தை வெட்டினால் அவ்வளவுதான் என்பதால் அப்பாவிடம் நயமாகக் கெஞ்சினேன். அவர் முரட்டு மனிதர், அவரிடம் மென்மைக்கு இடமே கிடையாது. சாப்பிடும்போது கரப்பான் பூச்சியைப் பார்த்தால்கூட அப்படியே கையால் சப்பென்று அடித்துக் கொன்றுவிடுவார். பக்கத்து வீடுகளில் பாம்பு என்று கேள்விப்பட்டாலே வீட்டில் அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்திருக்கும் சுளுக்கியை எடுத்துக்கொண்டு ஓடுவிடுவார். இதுவரை பாம்பை அடிப்பதில் அவருக்குத் தோல்வியே கிடையாது. அப்படிப்பட்டவரிடம் கெஞ்சிப் பிரயோசனம் இல்லை. பாவபுண்ணியத்தைச் சொல்லிதான் தடுக்க வேண்டும் என்று சொல்லித் தற்காலிகமாக அவரைத் தடுத்துவிட்டேன். குஞ்சு பொறித்து பறந்து சென்ற பிறகு வெட்டிவிடலாம் என்ற ஒப்பந்தத்துக்கு வந்தோம்.

சென்னைக்கு வந்துவிட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்பியபோது அங்குள்ள சிறுவர்கள் வந்து என்னிடம் சென்னார்கள், குஞ்சு பொறித்துவிட்டதென்று. மாடியில் நின்றுகொண்டு அவர்கள் கிளையைச் சற்று இழுத்துக் கூட்டினுள் இருந்த குஞ்சைப் பார்த்திருக்கிறார்கள். நான் அப்படிச் செய்யக் கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டு மாடிக்குச் சென்று கிளையையோ கூட்டையோ தொடாமல் எட்டிப் பார்த்தேன். கூட்டினுள் ஒரே ஒரு குஞ்சு அப்படியே பொதிந்து உட்கார்ந்துகொண்டிருந்தது. அருகே இருந்த ஒரு கம்புக்கு மேலே அதன் தாய்ப் பறவை உட்கார்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தபோது, "நான் கண்காணிக்கவில்லை, உன்னைப் பற்றித்தான் எனக்குத் தெரியுமே, நான் சும்மாதான் இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்" என்று அது என்னிடம் சொன்னது.

என் வாழ்வில் என்னை மிகவும் நெருங்கி வந்த பறவைகள் காகமும் கொண்டைக்குருவியும்தான். காகம் என் கையில் இட்லியோ பிஸ்கட்டோ வாங்கித் தின்னும் அளவுக்கு நெருங்கிவந்திருக்கிறது. கொண்டைக்குருவியோ மாடியில் சாயங்காலம் நான் படித்துக்கொண்டிருக்கும்போது இரண்டடி தள்ளியிருக்கும் கட்டையில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கும். அப்படி உட்கார்ந்திருக்கும்போது நான் அதை மிகவும் என் மனதுக்கு நெருக்கமானதாக உணர்வேன். ஒரு துணையோடுதான் நாம் மாடியில் இருக்கிறோம் என்று எனக்கு உற்சாகமாக இருக்கும். மற்ற பயல்கள் அப்படியில்லை. கரிச்சான் பயல்கூட ஓரளவுக்குப் பக்கத்தில் வருவான். ஆனால் இந்தத் தேன்சிட்டுப் பயல் பண்ணிக்கொள்ளும் பிகு இருக்கிறதே. அருகில் போனாலே ஓடிவிடுவான். என்னவோ தான்தான் உலக அழகி (அழகன்) என்று நினைப்பு, அவனை/ளை ஒளிந்து நின்றுதான் பார்க்க வேண்டுமாம். ஆனால் கொண்டைக்குருவிப் பயல் அப்படியில்லை. ஆமாம் அவன் ஏன் என்னருகில் வரப் பயப்பட வேண்டும். அவன்தான் இந்த வீட்டை உரிமையாக்கிக்கொண்டானே. நான்தானே அவனுக்குப் பயப்பட வேண்டும். தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் விதத்தில்தான் அவன் எனக்கு அருகில் தைரியமாக உட்கார்ந்திருக்கிறான் போல. அவன் என்னருகில் வரும்போதெல்லாம் ஏதோ அவனுடைய இடத்தில் நாம் இருக்கிறோமோ என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவான்.

அப்போது என் நண்பன் அவனுடைய மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கினான். அவனுக்கு மூத்தது ஒரு பெண், அடுத்து ஒரு சிறு பையன். அந்தப் பையன் வீட்டுக்குள் நுழைந்த கணத்தில் ஒட்டுமொத்த வீடும் தலைகீழாகப் புரள ஆரம்பித்தது. புதிய இடம் என்ற உணர்வு சற்றும் இல்லாமல் ஓடவும் உருளவும் புரளவும் ஆரம்பித்தான். அவனுடைய விளையாட்டுக்குத் துணை யாரும் தேவையில்லை. அவன் விளையாடுவதற்கு அவன் மட்டுமே போதும். யாராலும் அவனை அடக்க முடியவில்லை. அவ்வளவு விளையாட்டு! நண்பனும் நானும் நெருக்கமாகப் பேசிக்கொள்வதற்காக வெளியில் வந்தோம். அப்போது தன் பையனைப் பற்றி அவன் வியந்து பேசினான். "தம்பிகிட்ட ஒரு இயல்பு இருக்கு அவன் எந்த எடத்துக்குப் போனாலும் அவன் அதத் தன்னோட இடமா மாத்திக்குவான்" என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, முதல் நாள்தான் கொண்டைக்குருவியைப் பற்றி இந்தக் கவிதையை எழுதினேன்:

என் இடம்
நீ வந்தால்
அது
உன் இடம்
ஆகிவிடுகிறதே
எப்படிக்
கொண்டைக்குருவியே?

கொண்டைக்குருவியைப் பற்றி நான் எழுதியது என் நண்பன் தன் குழந்தையைப் பற்றிச் சொன்னதோடு எவ்வளவு பொருந்திப்போகிறது!

***

சில நாட்கள் கழித்து கூட்டில் ஆட்களை யாரும் காணோம். அப்பா மரத்தை அடியோடு வெட்டாமல் பாதி மட்டும் வெட்டியிருந்தார். மாடியில் உட்கார்ந்து ஒருநாள் படித்துக்கொண்டிருந்தபோது மாடியின் சுவரில் இரண்டு ஆசாமிகளைப் பார்த்தேன். ஒரு ஆசாமி வாயைப் பிளந்துகொண்டிருந்தார்; மற்றொரு ஆசாமி ஒரு வேப்பம்பழத்தை அப்படியே முழுசாக மேற்படியார் வாயில் ஊட்டியதும் அவர் அப்படியே விழுங்கிவிட்டார். நமக்கெல்லாம் தொண்டையை அடைத்துக்கொள்ளுமே, மேற்படியார் எப்படி விழுங்கினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் மேற்படியார் எவ்வளவு விரைவில் வளர்ந்திருக்கிறார். கூட்டில் பார்த்த முட்டை இனி வானை அளக்க ஆரம்பிக்கும்!

***

மரம் வளர்வதும் அதில் அதே கொண்டைக்குருவியோ அல்லது வேறு ஒரு கொண்டைக்குருவியோ கூடு வைப்பதும், கொசுவுக்காக அப்பா மரத்தை வெட்டுவதும் எல்லாம் திரும்பத்திரும்ப இயற்கையின் சுழற்சிபோல் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருந்தது. சமீபத்தில் அப்பா மரணமடைந்த பின் ஒட்டுமொத்த வானத்தையும் அதன் கீழுள்ள அந்த வீட்டையும் ஏகபோகமாக அந்தக் கொண்டைக்குருவியே எடுத்துக்கொண்டிருக்கும். இனி அதனுடன் போர் தொடுக்க அந்த வீட்டில் யாருமில்லை!  

Sunday, September 27, 2020

அதுவா அதுவா அதுவா எஸ்பிபி?



ஆசை 

சுஜாதா ஒரு கட்டுரையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு உலகம் (குறிப்பாக, தமிழ்நாடு) வழக்கமான விதத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட சில விஷயங்களைப் பட்டியலிட்டிருப்பார். அதில் இதுவொன்று: ‘எஸ்பிபி வழக்கமாகப் பாடலுக்கிடையே சிரித்தார்’. அதைப் படித்தபோது ‘ஆமால்ல’ என்று தோன்றியது. சற்று கிளாஸிக் தொனி கொண்டிருந்த ஏசுதாஸின் குரலை சிறு வயதிலிருந்து அதிகம் ரசித்த மனதுக்கு சுஜாதாவின் வரியில் இருந்த விமர்சனம் பிடித்திருந்தது. எனினும் இளையராஜாவின் வழியாக எஸ்பிபி துரத்திக்கொண்டிருந்தார். ‘பருவமே புதிய பாட’லில் என்னுடன் ஓடினார்; ‘உறவெனும் புதிய வானில்’ என்னுடன் பறந்தார்; ‘ஸென்யோரீட்டா ஐ லவ் யூ’ என்று கூறவைத்தார்; சிறு வயதில் தெரு நிகழ்வில் ஆடுவதற்காகப் பின்னணியில் ‘மாங்குயிலே பூங்குயி’லாகக் கூவினார். இன்று சிறுவனான என் மகனைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடல் தேடும்போது ‘தேனே தென்பாண்டி மீனாக’த் துள்ளிவருகிறார். விடாப்பிடியானவர்தான் எஸ்பிபி. 

நான் பல முறை யோசித்ததுண்டு எஸ்பிபி ஏன் பாடலுக்கிடையில் சிரிக்கிறார் என்று? நயமான ரசிகர்கள் இதை வெறும் ‘ஜிகினா வேலை’, ‘ஜிமிக்ஸ்’ என்று கடந்துவிடுவார்களல்லவா? சிறு வயதில் பார்த்த ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று நினைவுக்கு வருகிறது. மேடையில் இசை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது; ஆனால், பாடகரைக் காணோம். திடீரென்று மக்களுக்கிடையிலிருந்து ‘புதிய வானம் புதிய பூமி’ என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒருவர் எழுந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி ஓடுகிறார். ஒருசில நொடிகள் அதிசயித்து வாயைப் பிளந்திருந்த மக்கள் அதன் பிறகு வெளிப்படுத்திய ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது. இது ஒரு நிகழ்வோடு பார்வையாளர்களையும் ஒரு அங்கமாக்கும் முயற்சி என்பதை பின்னாளில் மனம் விளங்கிக்கொண்டது. தெருக்கூத்தில் இதுபோன்ற உத்திகள் சகஜம். கலைக்கு ஒரு திறந்த தன்மையை வழங்கும் உத்தி இது. மியூஸிக் அகாடமியில் சஞ்சய் சுப்பிரமணியன் இப்படிச் செய்தால் மறுநாள் அதை ‘மகத்தான கலைஞனின் மலிவான உத்தி’ என்று ஆங்கில நாளிதழ்கள் எழுதும். 

எஸ்பிபி சிரித்தது, அழுதது எல்லாம் பாடலை உறைநிலையிலிருந்து நெகிழ்த்துவதற்கான உத்தி. ஜானகியும் இதைப் பின்பற்றியிருக்கிறார். இது பாடலிலிருந்து கைகள் முளைத்து, அதைக் கேட்கும் ரசிகரின் கைகளுடன் கோக்கும் முயற்சி. தங்கள் கலை வாழ்க்கையின் உச்சத்தில் அவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிலேயே அதிகம் கேட்கப்பட்ட குரல்கள் அவர்களுடையதுதான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். 

கவிஞர் இசை எஸ்.பி.பி.யின் பாடலொன்று தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ என்ற கவிதையொன்று தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவிவருகிறது. அந்தக் கவிதை இதுதான்:  
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்
"மூக்கின் மேலே
மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே... "அதுவா?
என்று நீங்கள் கேட்க,
கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா.. ?
அதுவா... ?
அதுவா... ?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி ஸார்? 

எஸ்.பி.பி. குறிப்பிட்ட தரப்பினருக்கானவர் மட்டும் இல்லை; எல்லோருக்குமானவர் என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு அவருக்குக் குவியும் புகழாஞ்சலிகள் உணர்த்துகின்றன. எனினும், அவர் எல்லோருக்குமானவர் என்பதைவிட கொஞ்சம் கூடுதலாக, ‘அடுப்பில் கிடந்து கருகும்’ பரோட்டா மாஸ்டருக்கானவர் என்பதுதான் உண்மை; அதுவே எஸ்.பி.பி.க்குப் பெருமை. இந்தக் கவிதை எஸ்.பி.பி.யின் பார்வையைச் சென்றடைந்ததா என்பது தெரியவில்லை. அப்படி இல்லையென்றால், தன்னைப் பற்றிய மிகச் சிறந்த புகழாஞ்சலி ஒன்று இப்போதேனும் அவரைச் சென்றடையட்டும். 

 இப்போது சுஜாதாவின் குறிப்பையும் இசையின் கவிதையையும் நேரெதிராக வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘அதுவா…? அதுவா…? அதுவா…?’ என்று எஸ்.பி.பி.போல் சிரித்துக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் கேள்வி கேட்டபோது அந்த வழியாக சுஜாதா செல்கிறார் என்று கற்பனை செய்துகொள்வோம். ‘தமிழர்கள் பரோட்டா சுடும்போது ஒருவிதமாக ஆகிவிடுகிறார்கள்’ என்று கூட அவர் நகைச்சுவையாக எழுதியிருக்கலாம். 

சமீப ஆண்டுகளாக மனம் வெளிப்படையாக எஸ்.பி.பியுடன் சேர்ந்து சிரிக்கிறது. தான் பாடும்போது தன்னை எஸ்.பி.பியாக நினைத்துக்கொள்கிறது. எஸ்.பி.பியைவிட கூடுதலாக சிரிக்கிறது; அழுகிறது. எஸ்.பி.பி. சிரித்தார் என்பதற்காகத் தவறவிட்ட ‘பனி விழும் மலர் வனம்’, ‘விழியிலே மணி விழியில்’ போன்ற ரத்தினங்களை மனம் தன் கைகளில் உருட்டிவிளையாடுகிறது. 

எஸ்.பி.பி சார், இப்போது நீங்கள் ‘அதுவா அதுவா அதுவா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்கிறீர்கள்; உங்களுக்கு மறுகேள்வி கேட்கிறார் அந்த பரோட்டா மாஸ்டர்; எனக்கோ இரண்டையும் கேட்டுக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் போட்ட பரோட்டாக்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது.

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 27-09-20 அன்று வெளியான, எஸ்பிபிக்கான அஞ்சலிக் கட்டுரையின் சற்று விரிவான வடிவம்)

Thursday, September 17, 2020

நினைவில் வாழ்வீர் கல்யாண்!

கேமராவிலிருந்து முதலாவதாக கல்யாண், அடுத்து தஞ்சாவூர் கவிராயர், என் மகன் மகிழ் ஆதன், நான், என் மனைவி, கீழே கவிராயர் பேரன்

ஆசை

காலையில் ஜீவசுந்தரி மேடத்தின் பதிவைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். நண்பர் கல்யாண் (ஆர். கல்யாணசுந்தரம்) இன்று அதிகாலை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 38. ஃபேஸ்புக்கில் அசடன் பாலாஜி என்ற பெயரில் இயங்கிவந்தார். ஒரு வாசகராக எனக்கு அறிமுகமாகி உலகத் திரைப்படங்கள் பலவற்றையும் அறிமுகப்படுத்தியவர் அவர். ஸ்டேன்லி கூப்ரிக்கின் படங்கள் அவர் புண்ணியத்தால்தான் எனக்கு அறிமுகமாயின. முற்போக்குச் சிந்தனைகள் நிரம்பியவர். நாங்கள் இருவரும் புத்தகங்களும் திரைப்படங்களும் பரிமாறிக்கொள்வோம். எங்கள் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கு நானும் சென்றிருக்கிறோம். திருவான்மியூரில் நாங்கள் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இடியாப்பம் விரும்பிச் சாப்பிட்டார். இடையில் சில காலம் அவர் தொடர்பே இல்லாமல் இருந்தது. கைபேசி மாற்றியதால் அவர் எண் தொலைந்துபோய்விட்டிருந்தது. அப்புறம் எப்படியோ கண்டுபிடித்து அழைத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோய்விட்டன. அதனால்  டயாலிஸிஸில்தான் தனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது என்று துயரம் நிறைந்த குரலில் என்னிடம் பேசினார். நேரில் போய் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சி. பாதியாய் இளைத்து, குச்சி ஊன்றிக்கொண்டு நடந்தார். இத்தனைக்கும் மதுப் பழக்கம், புகைப்பழக்கம் என்று ஏதுமில்லாதவர். ஏதோ மரபுக் காரணம் போல. வாழ்க்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்குப் பிறகும் எங்கள் பகிர்தல் தொடர்ந்துகொண்டிருந்தது. சென்னைத் திரைப்பட விழாவில் சில படங்களைப்  பார்க்க வேண்டும் என்று விரும்பினார். என்னிடம் இருந்த நுழைவுச் சீட்டை அவருக்குத் தந்து ஒரு படத்துக்கும் அழைத்துச் சென்றேன். குச்சி ஊன்றியபடிதான் வந்தார். வாரத்தில் இரண்டு தடவையாவது டயாலிஸிஸ் செய்தாக வேண்டிய அவருக்கு சென்னை பெருமழை வெள்ளத்தின்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிட்டது. எனினும் வாழ்வின் மீதான பிடிப்பில் அதையும் தாண்டி வந்தார். 

நாங்கள் கூடுவாஞ்சேரிக்கு இடம்பெயர்ந்தபோதும் அதே உடல்நிலையுடன் ஜனவரி 1, அன்று புத்தாண்டு மட்டுமல்லாமல் என் மனைவி பிறந்த நாள்கூட, எங்கள் வீட்டுக்கு வந்தார். நாங்கள் கேக் வெட்டி, உணவு சமைத்து, படங்கள் எடுத்து அந்நாளைக் கொண்டாடினோம். கல்யாண் ஒரு செல்ஃபி எடுத்தார். அதற்கு முன்னோ அதற்குப் பின்னோ கல்யாணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை, கல்யாண் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று யார் நினைத்துப் பார்த்தது? ஒரு கட்டத்தில் அவருடைய தாயாரின் சிறுநீரகத்தைக் கொண்டு அவருக்கு சீறுநீர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மாதம்தோறும் சுமார் ரூ. 10 ஆயிரத்துக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிலை. நல்லவேளை அவருடைய திறமை காரணமாக அவருடைய நிறுவனம் (விப்ரோ) அவரைத் தொடர்ந்து வேலையில் நீடிக்க வைத்திருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் அனுமதித்தது. கரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபின் அவருக்கு மாத்திரை, சிகிச்சை எல்லாம் என்னவாகுமோ என்று கவலை கொண்டு அவரை அழைத்துப் பேசினேன். மாத்திரை அவ்வளவு பிரச்சினை இல்லை. மாதந்தோறும் செக்அப்புக்குச் சென்றாக வேண்டும். அதுதான் பிரச்சினை என்றார். அதன் பிறகு, கல்யாண் பற்றி நான் கேள்விப்பட்டது இன்று காலை ஜீவசுந்தரியின் பதிவில்தான். கல்யாண் எண் தவிர அவருடைய உறவினர்கள் எண் ஏதும் என்னிடம் இல்லை என்பதால் மிகவும் துடித்துப்போனேன். என் மனைவியும் மிகுந்த துயருற்றார். ‘அந்த அண்ணன் இடியாப்பத்தை ரசித்து சாப்பிட்டார்’ என்று குறிப்பிட்டார். ஜீவசுந்தரி மேடத்தைக் கைபேசியில் அழைத்துப் பேசியபோது கல்யாண் மீது தனக்கும் அப்பண்ணசாமிக்கும் இருக்கும் பந்தத்தையும் கல்யாண் இழப்பால் ஏற்பட்ட வலியையும் பகிர்ந்துகொண்டார். அவர் மிகுந்த துயரத்தில் இருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே பலமுறை அழுதார். இதையெல்லாம் பார்க்கும்போது கல்யாணுக்கு இறப்பில்லை, எங்கள் எண்ணங்களில் எப்போதும் வாழ்வார் என்றே தோன்றியது. பிறப்பால் பிராமணர் என்றாலும் பெரியார் மீதும் இடதுசாரி இயக்கங்கள் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். அப்படிப்பட்ட கல்யாண் பெரியாரின் பிறந்த நாள் அன்று காலமாகியிருக்கிறார்! என் பிறந்த நாளுக்கு முதல் நாள் இறந்திருக்கிறார்.  இனி நினைவில் வாழ்வீர் கல்யாண்!

Friday, April 5, 2019

மகேந்திரனின் மூன்று பாடல்கள்




ஆசை

பாடலைப் படமாக்குவது என்பது வரிகளுக்கு உருவம் கொடுப்பதல்ல. ‘மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு’ என்று விஜயகாந்த் கையாலேமே மூக்கைத் தொட்டுக்காட்டிப் பிறகு காற்றில் மூன்றாம் பிறை வரைந்து காட்டுவாரே அப்படியல்ல. பாடல் கொடுக்கும் உணர்வைக் காட்சியில் கொண்டுவருவதும் அல்லது பாடலுக்கே புது அர்த்தத்தைக் காட்சியால் கொண்டுவருவதும்தான் பாடலைச் சிறப்பாகப் படமாக்குவதன் வரையறை.

தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சில படங்களே இயக்கியிருந்தாலும் பல பாடல்களை அற்புதமாகப் படமாக்கியவர் மகேந்திரன். இன்றைய இயக்குநர்களைப் போல அவசர அவசரமாக இயங்கியவர் அல்ல அவர். பாடல் பதிவுக்குப் பிறகு ஒரு மாதம் ஒன்றை மாதம் கழித்துத்தான் அந்தப் பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கும். அதுவரை அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பார். அப்போது அவரது மனதில் வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்த்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வார்.

உறவுகள் நீயே

‘உதிரிப்பூக்கள்’ படத்தைப் போலவே மறக்க முடியாதது ‘அழகிய கண்ணே’ பாடலும். மடியில் ஒரு பிள்ளை, பக்கத்தில் ஒரு பிள்ளை. இருவரும் ஏதோ சொல்ல அதை உள்வாங்கிக்கொள்ளாமலேயே அஸ்வினி தலையாட்டிக்கொண்டிருக்கும் காட்சி மிகவும் பிரசித்தமானது. ரயிலில் போகும்போது கண்ட காட்சியிலிருந்து பெற்ற தாக்கம் இது என்று மகேந்திரன் பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தில் அவளுடைய கதாபாத்திரத்தின் துயரத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பெண்களின் துயரத்தையும் சொல்லிவிடக் கூடிய துணுக்குக் காட்சி. இழையோடும் துயரத்தோடு அழகான சிறுசிறு வாழ்க்கைத் துணுக்குகளையும் அந்தப் பாடல் முழுவதும் இழைத்திருப்பார். மகனைக் குளிப்பாட்டிவிடுவார் அன்னை. பக்கத்தில் தன் அண்ணனைத் துவட்டிவிடுவதற்கான துண்டுடன் ‘பெரிய மனுஷி’ தோரணையில் நிற்கும் குட்டி தேவதை அஞ்சு. மகனின் இடுப்புக்குக் கீழே அஸ்வினியின் கை சோப்புடன் செல்வது தெரிகிறது. அதற்குப் பிறகு அந்தப் பிள்ளை சிறு வலியால் ‘ஆ’ என்று பாவம் காட்டுகிறான். குளோஸப் காட்சியில் அஸ்வினியின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை. மிகவும் குறைந்த கால அளவே கொண்ட, ஆனால் அவ்வளவு ரசனையான காட்சித் துண்டு அது. அதேபோல், பாடலினிடையே ஓடையில் துவைத்த துணியொன்றை அம்மாவும் அண்ணனும் பிழிந்துகொண்டிருக்க தான் கட்டிக்கொண்டிருக்கும் பாவாடையின் விளிம்பை ஓடை நீரில் கலக்கிக்கொண்டிருப்பாள் குழந்தை அஞ்சு. இதுபோன்ற வாழ்க்கைக் கவிதைகளுக்காகத்தான் மகேந்திரன் இந்த அளவுக்கு நேசிக்கப்படுகிறார் என்று தோன்றுகிறது.

பிரத்யேக தேவதை

‘ஜானி’ படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒரு வகை கருப்பொருளுடன் எடுக்கப்பட்டிருக்கும். காதல் அரும்பிய பெண்ணொருத்தி பியானோ வாசிக்க அவளுடைய பிரத்யேக ரசிகன் அருகிருந்து கேட்டால் அவனுக்கு என்ன தோன்றுமோ அதையேதான் ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ பாட்டில் மகேந்திரன் காட்சியாக்கியிருப்பார். பாடலும் இசையும் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில் பரந்த வெளி நோக்கிக் காட்சியை மகேந்திரன் கொண்டுசென்றிருப்பார். அம்மா-குழந்தை பாட்டாக இருந்தாலும் சரி காதலன்-காதலி பாட்டாக இருந்தாலும் சரி மனவெளியிலிருந்து திறந்த வெளிக்குக் கொண்டுசென்றுவிடுவது மகேந்திரனின் இயல்பு.

இந்தப் பாடலிலும் அதையே செய்திருப்பார். திறந்த வெளியில் நமக்காக ஒரு தேவதை பியானோ வாசித்துக்கொண்டிருந்தால் நமக்கு எப்படி இருக்கும்! அந்த உணர்வுதான் இந்தப் பாடலில் நமக்குக் கிடைக்கும். பியானோ வாசித்துக்கொண்டே சற்று முன்னகர்ந்து, மாடிப்படியில் அமர்ந்திருக்கும் தன் உதவியாளரைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்புச் சிரிப்பாரே ஸ்ரீதேவி, அந்தச் சிரிப்பு ஒரு மனிதப் பிறவிக்கு எப்படி சாத்தியமாகியிருக்கும் என்று நீங்கள் வியந்துபோனால் அங்கும் மகேந்திரன் இருக்கத்தான் செய்வார்!

பருவம் பாடிய பாடல்!

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் ‘பருவமே புதிய பாட’லைப் போலவே அதன் உருவாக்கமும் அவ்வளவு அழகானது. பெங்களூரில் காலைப் பனியில் எடுத்த பாடல் அது. அதிகாலைப் பனியில் மோகனும் சுஹாசினியும் ஓடுவது போன்று காட்சிப்படுத்த நினைத்திருக்கிறார் மகேந்திரன். ஒரு அரைமணி நேரம்தான் பனி இருக்கும். அதற்குப் பிறகு வெயில் வந்துவிடும். எல்லோரும் காலை உணவைச் சாப்பிட உட்கார்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு சிறுமி கையில் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு சற்று தூரத்தில் வருவது மகேந்திரனின் கண்ணில் பட்டிருக்கிறது.

சாப்பிடத் தயாராக இருந்த அசோக்குமாரிடம் ‘தயாராகுப்பா, அதை ஷூட் பண்ணணும்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தைக்கே தெரியாமல் லென்ஸ் வைத்து தூரத்திலிருந்தே அசோக்குமார் படம்பிடித்துக்கொண்டார். அப்புறம் படப்பிடிப்பெல்லாம் முடிந்து படத்தொகுப்பு செய்யப்படும் வேளையில் பாடலில் வரும் ஹார்மோனியம் துணுக்கு இசைக்கு ஒரு காட்சி தேவைப்படுகிறதே என்றிருக்கிறார் எடிட்டர். உபரியாக எடுத்த பிலிம்களிலிருந்து தேடியெடுத்து இது சரிவருமா என்று அந்த சிறுமி காட்சியைக் கொடுத்திருக்கிறார் மகேந்திரன். படம் வெளியாகி ஒரு வருடம் ஓடி, பாட்டும் பெரிய ஹிட்டானது.

ஆனால், படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் பாட்டும் அதில் பனியில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் பிரபலமாகி விட்டிருந்தன. ரெக்கார்டிங்குக்கு வருபவர்களிட மெல்லாம் ‘அண்ணன் எப்படி ஷாட் எடுத்திருக்கிறார் பாருங்க. அண்ணன் எப்படி ஷாட் எடுத்திருக்கிறார் பாருங்க’ என்று சொல்லிச் சொல்லி இளையராஜா ஒரு நூறு பேரிடமாவது அந்தப் பாடலைப் போட்டுக்காட்டிப் பரவசப்பட்டிருப்பாராம்.

மேற்குறிப்பிட்ட படங்களின் பிற பாடல்களும் ‘முள்ளும் மலரும்’, ‘நண்டு’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘மெட்டி’ போன்ற படங்களின் பாடல்களும் என்று நிறைய பாடல்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு அழகான பாடல்களைப் படமாக்கியிருப்பவர் அவர். மகேந்திரன், இளையராஜா, அசோக்குமார் என்ற அற்புதமான மூன்று கலைஞர்களின் விளைச்சல் அது. அதைத்தான் நாம் இன்று யூடியூப் காலத்திலும் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.
-நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ், 05-04-19 அன்று வெளியான கட்டுரை