Saturday, February 22, 2025

பாவென்று அழையுங்களேன் பாபுஜி! - கஸ்தூர்பா காந்தி நினைவுநாள் கவிதை


இன்று கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள். எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

**
பாவென்று அழையுங்களேன் பாபுஜி
**
உடன் இருந்தபோது
இப்படி
என்றாவது
பாவைப்
பார்த்துக்கொண்டே
இருந்ததுண்டா பாபுஜி
உங்கள் பார்வை கண்டு
பா அஞ்சிய
காலம் உண்டு
பிறகு
பாவின் பார்வைக்கு
அஞ்ச ஆரம்பித்தீர்கள்
நீங்கள்
இன்று இரண்டுமில்லை
ஒருவழிப் பார்வை
மட்டுமே
பாவின் விழிகள்
இறுதியாய் வெறித்த
ஆகா கான் மாளிகையின்
உட்கூரை உச்சியாய்
அப்போது இருக்க
ஆசைப்பட்டீர்களா பாபுஜி
ஒரு மகாத்மா ஆவதற்கு
நிரம்பக் கல்நெஞ்சம்
வேண்டுமென்று
உடனிருந்து கண்டவர்
இன்று அதில் உங்களைத்
தோல்வியடையச் செய்துவிட்டுப்
போய்விட்டாரா பாபுஜி
எப்போதும்
ஏந்திப் பொறுத்துக்கொண்ட
பாவின் அகிம்சை முன்
உங்கள் உன்னத அகிம்சை
மேலும் தோற்றுப்போய்
அதனால்
துவண்டுபோய்
அமர்ந்திருக்கிறீர்களா பாபுஜி
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் விருட்டென்றெழுந்து
உங்களுக்கு
ஆட்டுப்பாலும் பேரீச்சையும்
கொண்டுவரப் போய்விடுவார்
பா என்று அழையுங்களேன்
பாபுஜி
அவர் சட்டென்றெழுந்து
உங்களுடன்
கேரம் விளையாட
உட்கார்ந்துவிடுவார்
ஆனால்
நீங்கள் மாட்டீர்கள்
கல்நெஞ்சக்காரர்
கேட்டால்
பாவுக்கு
அவள் துயர்களிலிருந்தும்
என்னிடமிருந்தும்
விடுதலை கிடைத்திருக்கிறது
என்று சாக்கு சொல்வீர்கள்
கூட
ஒரு துயரச் சிரிப்புடன்
- ஆசை

No comments:

Post a Comment