Friday, January 19, 2024

கண்ணதாசனைத் தேடிய மறதி - சிறுகதை



ஆசை

ஒருமுறை சீன ஞானி சுவாங் ட்சு ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தார். மிகவும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் விரும்பிய இடமெல்லாம் பறந்து திரிந்தார். ஆனால், கனவில் வண்ணத்துப்பூச்சியாக வந்த சுவாங் ட்சுவுக்குத் தான் சுவாங் ட்சு என்பது தெரியாது. திடீரென்று விழிப்பு வந்துவிட அந்த வண்ணத்துப்பூச்சி தான்தான் என்று அறிந்துகொள்கிறார். ஆனால், அவருக்கு ஒரு சிக்கல்: வண்ணத்துப்பூச்சியின் கனவில் வந்தது சுவாங் ட்சுவா அல்லது தன்னை சுவாங் ட்சுவாக எண்ணி வண்ணத்துப்பூச்சியொன்று தன்னைக் கனவுகண்டுகொண்டிருக்கிறதா?

கிட்டத்தட்ட 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கும் அதே பிரச்சினை வந்திருக்கிறது என்று சொன்னால் சுவாங் ட்சுவுக்கு உன்னை இணைவைத்துக்கொள்கிறாயா என்று பலருக்கும் கோபம் வர வாய்ப்பிருக்கிறது. அதற்காக, இந்தச் சிக்கல் எனக்கு வரவில்லை என்று நான் மறுத்துக்கொள்ள முடியுமா?

2012-ம் ஆண்டின் முற்பகுதியாக இருக்க வேண்டும். மன்னார்குடிக்கு ரயிலில் சென்றுகொண்டிருக்கிறேன். அப்போது வந்த கனவு இது. நனவில் காகத்தைப் பற்றி அதற்கு முந்தைய ஆண்டு நான் எழுதிய கவிதையைப் பற்றிய கனவு. கனவிலோ அது நிகழ்நேரத்தில் எழுதப்பட்ட கவிதையாக வருகிறது. காகம் ஒன்றோடு கொஞ்சம் கொஞ்சமாக நட்பை ஏற்படுத்திக்கொண்டு இறுதியில் அது என் கையிலிருந்து பிஸ்கெட் வாங்கிச்செல்லும் அளவுக்கு நான் நிஜத்தில் நெருங்கியதைப் பற்றிய கவிதை அது. பறவைகளிடமும் விலங்குகளிடமும் நம் அகத்தைக் காட்டி அல்ல, நம் அகத்தைச் சிறிதுசிறிதாகக் குறுக்கிக்கொண்டு, இறுதியில் முற்றிலுமாக ‘நம்’மை மறைத்துக்கொண்டால் மட்டுமே அவற்றின் நட்பை நாம் பெற முடியும். நம்மை மறைத்தால் நாம் காகமாகலாம். காகம் நாம் ஆகும். ஒரு காகம் என்னைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அதாவது என் இருப்பு அதற்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாமல் என் கையிலிருந்து பிஸ்கெட்டை வாங்கிச் சென்றபோது அளவற்ற ஆனந்தத்தை உணர்ந்தேன். இதையெல்லாம்தான் அந்தக் கவிதையில் எழுதியிருந்தேன்.

துரைசிங்கம் என்னுடன் மிகவும் அன்பாகப் பழகும் ஈழத்தமிழர். காகத்தைப் பற்றி நான் நிஜத்தில் எழுதிய கவிதையை அவருக்கு நான் கனவில் அனுப்பி வைக்கிறேன். அந்தக் கவிதையைப் படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் துரைசிங்கம். அந்தக் கனவில் அவர் எனக்கு எழுதிய கடிதத்தின் ஒவ்வொரு சொல்லும் மாறாமல் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது.


‘அன்புள்ள ஆசை, வணக்கம்! தங்கள் கவிதையைப் படித்தேன். என்ன சொல்ல? ‘கொண்டலாத்தி’ கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் போல் இல்லை. அது மட்டுமல்ல, ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் கண்ணதாசன் இப்படி எழுதியிருப்பார்:

‘ஞானியர் தேடும் மதி/

மறதி’

இந்த வரிகளைத் தாண்டியொன்றும் நீங்கள் எழுதிவிடவில்லை.”

துரைசிங்கத்தின் எழுத்திலும் சரி பேச்சிலும் சரி ஈழத்தமிழின் தனித்துவம் அலாதியாக வெளிப்படும். கனவில் வந்த அவரது கடிதத்திலோ அவரது ஈழத்தமிழ் முழுக்கவும் தமிழ்நாட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தேன். அது மட்டுமல்லாமல் வழக்கமான அவரது துயரம் இழையோடும் அபாரமான நகைச்சுவையுணர்வுடன் கூடிய நலவிசாரிப்புகள் ஏதுமின்றிக் கடுமையான தொனியில் அந்தக் கடிதம் இருந்தது. அது துரைசிங்கத்துக்கு மிகவும் அந்நியமானது. ஆனாலும், என் கனவில் எனக்குக் கடிதம் எழுதியது துரைசிங்கம்தான். பிரச்சினை இதுவல்ல. ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் கண்ணதாசன் எழுதியதாக துரைசிங்கம் குறிப்பிடும் அந்த வரிகள்தான்.

 ‘தெய்வம் தந்த வீடு’ பாட்டு எனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதால் அந்தப் பாடலுக்குள் இந்த வரிகளை இட்டுத் தேடிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமலே இந்த வரிகள் அந்தப் பாடலைச் சேர்ந்தவை அல்ல என்பதை என்னால் உறுதியாகக் கூறிவிட முடியும் என்றாலும் அதீத நம்பிக்கை சில சமயம் நம் முகத்துக்கு முன்பு தொங்குவதைக் கூட நம் பார்வையிலிருந்து மறைத்துவிடக்கூடும் என்பதால் ‘தெய்வம் தந்த வீடு’ பாடலை அதுவரை அறிந்தேயிராத ஒருத்தனின் மனநிலையை எனக்குள் வர வைக்க முயன்றேன். தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக ஆக்கிக்கொள்வது மிகவும் எளிது என்பதையும் நன்கு தெரிந்த ஒன்றைத் தெரியாததாக ஆக்கிக்கொள்வதுதான் இந்த உலகிலேயே மிகவும் கடினம் என்பதையும் அப்போதுதான் உணர்ந்துகொண்டேன். அம்னீஷியா, மரணம் போன்று ஏதும் வராமல் இதைச் செய்யவே முடியாது என்றாலும் எதற்கும் ஒரு சுருக்கு வழி இருக்குமல்லவா என்று ‘தெய்வம் தந்த வீடு’ பாடலை எனக்குத் தெரியாமல் ஆக்கும் முயற்சியில் முழு மூச்சில் ஈடுபட ஆரம்பித்தேன்.

முதலில் அந்தப் பாடல் வரிகளிலிருந்தும், ஒலிப்பேழையிலும் மனதுக்குள்ளும் ஒலிக்கும் அந்தப் பாடலின் சத்தத்திலிருந்தும் விலகி ஓடுவதன் மூலம் அந்தப் பாடல் வரிகளை மறக்க முயற்சித்தேன். எங்கு ஓட முயற்சித்தாலும் எனக்கு முன்னே அந்தப் பாடல் என் முகத்துக்குத் தன் முகத்தைக் காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. மூர்க்கமாக ஏதாவது செய்யலாம் என்று போர்ன் தளங்களுக்குச் சென்று ‘தேஸி எம்.எம்.எஸ்’, ‘தேஸி பாத்ரூம்’, ‘தேஸி நிப்பிள் ஸ்லிப்’, ‘தேஸி சிஸ்டர்’, ‘தேஸி ப்ளோஜாப்’, ‘தேஸி ஹனிமூன்’, ‘மல்லு ஹனிமூன்’, ‘ஆண்டி அண்ட் யங் பாய்’ என்று சு’தேஸி’ப் பற்று மாறாமல் ‘தேஸி’யில் என்னென்ன காமவகை, நிலை, தொகையெல்லாம் சாத்தியமோ அத்தனை சாத்தியங்களிலும் சொற்களை இட்டுத் தேடி, அந்த வீடியோக்களின் உக்கிரப் பெருமூச்சில் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு உட்கார்ந்தேன். ரகசிய கேமரா இருப்பது தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தொழில்முறையில் தெரிந்ததைத் தெரியாதவாறு காட்டிக்கொண்டோ குளிக்கும் பெண் ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தாள்: ‘தெய்வம் தந்த வீடு’. பஞ்சாபி பெண்ணுக்கு எப்படி ‘தெய்வம் தந்த வீடு’ தெரியும்? ஜெய்கணேஷ் ஏதோ ஒரு படத்தில் சிங் வேடத்தில் வந்திருப்பதையும் இதையும் எப்படி முடிச்சுப் போட்டுப் பார்க்க முடியும்? மல்லு ஜோடிகள் ஹனிமூனில் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டே ‘தெய்வம் தந்த வீடு’ என்கிறார்கள். ‘நிப்பிள் ஸ்லிப்’ ஆகும் ஃபேஷன் ஷோ பெண்ணும் முகத்தில் சலனமில்லாமல் ‘தெய்வம் தந்த வீடு’ என்று சொல்லிவிட்டுப் போகிறாள். நம் நாட்டுப் பெண்களாகப் பார்த்தால் அப்படித்தான் வரும்போல என்று ரஷ்யா, பிரான்ஸ் என்று தேடிப்பார்த்தேன். எல்லோரும் தெளிவாகத் தமிழ் உச்சரிப்பில், அவர்களுடைய அந்நியக் குரலிலேயே, அழகாக ‘தெய்வம் தந்த வீடு’ என்கிறார்கள். ரஷ்யா, பிரான்ஸுக்கெல்லாம் தமிழர்கள் சகஜமாகப் போய்வருகிறார்கள். ரஷ்யாவுக்குக்கூட கண்ணதாசன் எம்.எஸ்.வியுடன் போயிருக்கிறார் என்று படித்திருக்கிறேன். இன்பநாட்டத்தில் திளைத்திருந்த கண்ணதாசன் பிரான்ஸுக்கும் கட்டாயம் போயிருப்பார். ஆகவே, கண்ணதாசனோ, எம்.எஸ்.வியோ தமிழர்களோ போகாத தேசம் ஏதும் இருக்குமா என்று தேடித்தேடி போர்ன் வீடியோ பார்த்தேன். எங்கும் ‘தெய்வம் தந்த வீடு’தான். தமிழர்கள் போகாத இடமே இருக்காது போல.

சரி, போர் உத்தியை மாற்றிவிட வேண்டியதுதான். தெய்வம் தந்த வீட்டுக்கு தெய்வம் தந்த வீடுதான் மருந்தே. அதை அளவுக்கதிகமாகத் தெரிந்துகொண்டால் ஒரு கட்டத்தில் அது முற்றிலும் தெரியாமல் போகும் தருணம் வரும் அல்லவா! அந்தத் தருணத்தில் அதற்குள் ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’ மறைந்திருந்தால் என் கண்ணுக்கு அகப்படும் என்று நினைத்தேன். என் வீட்டின் ஒவ்வொரு அறையின் சுவரிலும் என் குளியலறைச் சுவரிலும் அந்தப் பாடல்களை எழுதி வைத்தேன். கைபேசியில் ரிங்டோனாக வைத்து என்னிடம் உள்ள இன்னொரு கைபேசி மூலம் அதற்கு அடிக்கடி அழைப்பு விடுத்தேன். அழைப்பு விடுத்த கைபேசியிலும் அதையே ரிங்டோனாக வைத்து இந்தக் கைபேசியிலிருந்து அதை அழைத்தேன். வீட்டில், நேரத்துக்குத் தகுந்தபடி, அதிக ஒலியுடனோ மெதுவாகவோ ‘தெய்வம் தந்த வீ’ட்டை எப்போதுமே ஒலிக்க விட்டேன். சில ஆன்மிகக் குழுக்களைச் சேர்ந்தவர்களைத் தொலைபேசியில் அழைக்கும்போது ‘வாழ்க வளமுடன்’ என்று கூறிய பிறகே அவர்கள் நம்முடனான உரையாடலைத் தொடங்குவதுபோல் நானும் எனக்குக் கைபேசியில் வரும் அழைப்புகளை ‘தெய்வம் தந்த வீடு’ சொல்லி உரையாடல்களை ஆரம்பித்தேன். இறுதியில் எனக்கு நிகழ வேண்டியது மற்றவர்களுக்கு நிகழ்ந்தது. எல்லோருக்கும் என் பெயர் மறந்துபோய் என்னை ‘தெய்வம் தந்த வீடு’ என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.

ம்கூம்! முந்தைய உத்தியைவிட மோசமானது மட்டுமல்லாமல், ஆபத்தானதாகவும் அமைந்துவிட்டது இது. மனநலக் காப்பகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதற்கு முன்பு விழித்துக்கொண்டு எல்லாவற்றையும் நிறுத்திக்கொண்டேன். மெதுமெதுவாக, ‘தெய்வம் தந்த வீடு’ உச்சாடனத்தைக் குறைத்துக்கொண்டே வந்தேன். சூழவும் அதன் தரிசனம், சப்தம், வாசனை, ஸ்பரிஸம், சுவை முற்றிலும் குறைந்துபோய் தற்போது மூளையில் போடப்பட்ட தையலாக ஒரு ஓரத்தில் போய் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் ‘தெய்வம் தந்த வீடு’ உட்கார்ந்துகொண்டது.

தெய்வம் தந்த வீட்டைத் தேடுவதை விட்டுவிட்டு ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’யைத் தேட ஆரம்பித்தேன். தெய்வம் தந்த வீட்டு வெறியால் நான் பட்ட சிரமங்களையெல்லாம் மறக்க முடியாது என்பதால் ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’யை நிதானமாகத் தேட ஆரம்பித்தேன். கூகுள், நண்பர்கள் என்று இரண்டே தெரிவுகள். இரண்டு பேரிடமும் என் கனவில் வந்த வரிகள் என்று நான் சொல்லவில்லை. ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’ யாருடைய வரிகள் என்று மட்டும் கேட்டேன். கூகுள், ‘ஞானியர்’, ‘தேடும்’, ‘மதி’, ‘மறதி’ என்ற தனித்தனிச் சொற்களையும் இந்தச் சொற்களின் சாத்தியமாகும் சேர்க்கைகளையும் சேர்த்து 56 முடிவுகளை மட்டுமே காட்டியது. நண்பர்களோ கையை மட்டும் விரித்துக் காட்டினார்கள். நான் அதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை அவர்களால் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை (கூகுளாலும்தான்). பார்க்கும்போதெல்லாம், ஒரு விரலால் நெற்றியைத் தேய்த்தபடி, அல்லது தலையைச் சொறிந்தபடி ‘ஞானியர் தேடும்…’ என்று ஆரம்பித்துவிடுவார்கள். கைபேசியில் என்னிடம் வேறு ஏதாவது பேசும்போதுகூட இடையில், “மச்சான், நீ சொன்னியே அந்தக் கவிதை, அது ஏதோ பண்ணுதுடா. அதுல ஏதோ இருக்கு. நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்துட்டேன் எங்கேயும் கண்டுபிடிக்க முடியலை. அதுக்கு என்ன மச்சான் அர்த்தம்?” என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இதுகூட பரவாயில்லை. துரைசிங்கம் சொல்லித்தான் நான் தெய்வம் தந்த வீட்டைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தேன். என் நண்பர்களில் ஒருவனோ அவனாகவே ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’க்கும் தெய்வம் தந்த வீட்டுக்கும் ஏதோவொரு ஒற்றுமையைக் கண்டுபிடித்து அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடியும் கேட்டும்கொண்டிருந்தவன் ஒருமுறை கைபேசியில் நான் அழைத்தபோது ‘தெய்வம் தந்த வீடு’ என்று கூறிவிட்டு “சொல்லு மச்சான்…” என்றான். அதற்குப் பிறகு அவன் எண்ணை என்னுடைய கைபேசியில் தடுத்துவைத்தேன். அவனைப் பார்ப்பதையும் தவிர்த்துவிட்டேன். ‘நாயி கடைசியாக தெய்வம் தந்த வீட்டை மறப்பதற்கு எக்ஸ்.என்.டபிள் எக்ஸின் துணையையும் எக்ஸ்.வீடியோஸின் துணையையும் தேடிப் போகட்டுமே’ என்று விட்டுவிட்டேன்.

நண்பர்கள் இப்படியென்றால் கூகுள் வேறுவிதம். ஈஷா யோகா, ராம்தேவின் பதஞ்சலி யோகா, ஸ்ரீலஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’, பிரம்மகுமாரிகளின் தியான வகுப்புகள் என்று ஆரம்பித்து ‘மதி’ ஃபர்னிச்சர், ‘மதி’ செக்ஸாலஜிஸ்ட் என்று என் கைபேசியில் விளம்பரங்கள் அனுப்பியும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று நான் போகும் திசையெங்கும் விளம்பரங்களைக் காட்டியும் என்னை இம்சிக்க ஆரம்பித்தது. ‘நீங்கள் மறதிப் பேர்வழியா? அப்படியென்றால் பதஞ்சலியின் வல்லாரை லேகியம் சாப்பிடுங்கள்’ என்று என் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததுதான் உச்சம்.

அதை விடுங்கள். இப்போது என் முன்னே, அதனால் உங்கள் முன்னே என்றும் சொல்லலாம், மொத்தம் மூன்று கேள்விகள். 1. ‘ஞானியர் தேடும் மதி/ மறதி’ வரிகள் கண்ணதாசன் எழுதியவையா? 2. துரைசிங்கம் எழுதியவையா? 3. நான் எழுதியவையா? கூடுதலாக, கனவையும் ஒரு நபராகக் கற்பனைச் செய்துபார்க்கலாமா என்று எனக்குத் தோன்றுகிறது. எது எப்படியோ, கண்ணதாசன், துரைசிங்கம், காகம், என்னை வைத்துக் கனவு ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறது. இறந்துபோனாலும் கண்ணதாசனாலும், இது தெரியாமல் இருந்தாலும் துரைசிங்கத்தாலும், பறந்துபோக முடிந்தாலும் காகத்தாலும், கனவைப் போல இவை யாவற்றையும் அறிந்துவைத்திருந்தாலும் என்னாலும் இந்த விளையாட்டிலிருந்து விடுபட முடியுமா என்று தெரியவில்லை.

சுவாங் ட்சுவைப் படிக்கவில்லையென்றால்கூட எனக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்காது. இந்தக் கனவு வந்த பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுவாங் ட்சுவின் கனவைப் படித்தேன். ஞானி என்றாலும்கூட நமக்கு இணையாக, அவரும் வகையாக மாட்டிக்கொண்டிருக்கிறார், வண்ணத்துப்பூச்சியின் கனவில் சுவாங் ட்சுவாகவோ, சுவாங் ட்சுவின் கனவில் வண்ணத்துப்பூச்சியாகவோ, தன்னை வண்ணத்துப்பூச்சியாகவோ சுவாங் ட்சுவாகவோ எதுவாகவோ அறிந்திராத எதுவாகவோ. 

    -ஆசை

      - (2018ல் எழுதிய சிறுகதை முதன்முதலாக இங்கே வெளியாகிறது)



No comments:

Post a Comment