Monday, August 17, 2020

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

 

ஆசை

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்து நகரில் 1964-ல் அக்டோபர் 20 அன்று பிறந்த கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம் சென்னை என்றுதான் பெரும்பாலான உலகப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இன்னும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள பைங்காநாடு கிராமம்தான் அவரது பூர்வீகம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நுணுக்கம் மிகவும் அவசியமானது. ஏனென்றால், சென்னை-அமெரிக்கா என்பதைவிட பைங்காநாடு-அமெரிக்கா என்பதன் நுட்பங்களும் நீளமும் அதிகம். 

அரசியல் வாழ்க்கைக்கான வித்து 

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரின் பெண் ஷியாமளா மேற்படிப்புக்காக 19 வயதில் அமெரிக்கா சென்றார். அவரை அந்நாடு வரவேற்கவில்லை. இந்தியாவில் ஷியாமளா மேல்வகுப்பினராகப் பார்க்கப்பட்டாலும் நிறவெறி அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் ஒரு கறுப்பினத்தவரே! அந்தச் சூழல் ஷியாமளாவைப் புலம்பெயர்ந்தவர்கள், கறுப்பினத்தோருக்கான செயல்பாட்டாளராக மாற்றியது. கறுப்பின உரிமைச் செயல்பாட்டாளரும் ஜமைக்காவைச் சேர்ந்தவருமான டொனால்டு ஹாரிஸை அவர் மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: கமலா தேவி ஹாரிஸ், மாயா லட்சுமி ஹாரிஸ். நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள், அணிவகுப்புகள் போன்றவற்றின்போது ஷியாமளாவும் டொனால்டு ஹாரிஸும் தங்கள் குழந்தைகளைக் குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளியபடி கலந்துகொண்டார்கள் என்று கமலா பின்னாளில் நினைவுகூர்கிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கான வித்து அவர் தவழும் காலத்திலேயே இடப்பட்டிருக்கிறது. கமலாவுக்கு 7 வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 

கமலா ஹாரிஸின் குழந்தைப் பருவம் கலப்பினச் சூழலில் கழிந்தது. இந்திய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கலாச்சாரம் மூன்றையும் பின்பற்றியே ஷியாமளா தன் குழந்தைகளை வளர்த்தார். வெள்ளையினக் குழந்தைகளும் கறுப்பினக் குழந்தைகளும் கலந்து வளரும், படிக்கும் சூழல் உருவாக வேண்டுமென்ற முன்னெடுப்புகள் நிகழ்ந்த 60-களின் பிற்பகுதி அது. மேற்கு பெர்க்லியிலிருந்து வடக்கு பெர்க்லியில் உள்ள பள்ளிக்கு கமலா ஹாரிஸ் அனுப்பப்பட்டார். நிறப் பாகுபாடு களைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு 95% வெள்ளையினக் குழந்தைகள் மட்டுமே படித்துவந்த பள்ளி அது. கமலா ஹாரிஸின் இந்தப் பின்புலம் தற்போதைய வரலாற்றுக்கு மிகவும் முக்கியமானது. 

பள்ளிப்படிப்பை முடித்ததும் ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும் பொருளாதாரமும் படித்தார். அதை அடுத்து 1989-ல் ஹேஸ்டிங் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1990-1998 வரை ஓக்லாந்தில் மாவட்ட இணை அட்டர்னியாகப் பணியாற்றினார். தனது பணிக் காலத்தில் பாலியல் வன்முறை, கும்பல் வன்முறை, போதைமருந்து கடத்தல் போன்ற குற்றங்களின் மீது மிகவும் கடுமை காட்டினார். அவர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது போதை மருந்து குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறுவர்கள் போன்றோர் சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்குப் பதிலாக அவர்கள் படிப்பைத் தொடரவோ, நல்ல வேலையில் சேரவோ வழிவகுத்தார். 2004-ல் மாவட்ட அட்டர்னி ஆனார். 2010-ல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் போட்டியிட்டு வென்றார். அப்படி அந்தப் பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர், முதல் இந்திய-அமெரிக்கர் அவர்தான். 

1990-களின் மத்தியில் அரசியலர் வில்லி பிரௌனுடன் கமலா ஹாரிஸ் உறவில் இருந்தார். ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. 2014-ல் யூதரான டக்ளஸ் எம்ஹாஃபும் கமலா ஹாரிஸும் மணந்துகொண்டனர். ஏற்கெனவே, தாயின் இந்து மதம், தந்தையின் கறுப்பின பாப்டிஸ்ட் கிறித்தவம் என்ற பன்மைத்தன்மை பின்னணியில் இருந்த கமலாவுக்கு டக்ளஸ் மூலம் யூத மதமும் வந்துசேர்ந்துகொண்டது. கமலாவே தான் இந்து கோயிலுக்கும் கறுப்பின பாப்டிஸ்ட் திருச்சபைக்கும் செல்வதாகச் சொல்லிக்கொள்பவர். 

கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை 2015-ல் வந்தது. ஜனநாயகக் கட்சியின் பார்பரா பாக்ஸர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததும் அவர் இடத்தில் அடுத்தது தான் நிற்கப்போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார். 2016-ல் நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ல் பொறுப்பேற்றார். அட்டர்னி ஜெனரலாக அவர் பெற்ற அனுபவம் நாடாளுமன்றத்தில் அவருக்கு மிகவும் உதவியது. எதிர்த் தரப்பை அவர் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார். இது எல்லாமே கமலா ஹாரிஸை அடுத்த நிலையை நோக்கித் தள்ளியது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் 2019-ல் அறிவித்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. தற்போது கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராக யார் அறிவித்தாரோ அதே ஜோ பிடனைக் கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் எதிர்த்துக் களம் கண்டார். ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பிடனின் இனவாத நிலைப்பாடுகளை வைத்து அவரைக் கேள்விகேட்டது பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டது. எனினும், 2019-ன் இறுதியில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறையவே அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் விலகிக்கொண்டார். 

ஆனால், 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். 

கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. ஜனநாயக வேட்பாளரான ஜோ பிடனுக்குத் தற்போது 77 வயது ஆகிறது. ஆகவே, அடுத்த அதிபராகும் வாய்ப்புகூட கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்போது அது அமெரிக்காவின் பன்மைத்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 17-08-20 அன்று வெளியான கட்டுரை.)

Saturday, August 15, 2020

பொம்மை அறை: நாவலும் மொழிபெயர்ப்பும்


ஆசை


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெயினின் மல்லோர்க்காவில் உள்ள பியர்ன் என்ற மலைக்கிராமத்து பிரபுத்துவக் குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல் இது. பியர்னில் உள்ள பிரபுத்துவக் குடும்பத்தின் தலைவர் டான் டோனியும் அவரது மனைவி டோனா மரியா அந்தோனியாவும் ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் இறந்த பின் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களின் குடும்பப் பாதிரியாரும் நடுத்தர வயதினருமான டான் ஜோன் தனது நண்பர் ஒருவருக்குக் கடிதத்தின் வழியாகச் சொல்வதுபோல் அதை அமைக்கப்பட்டிருக்கிறது. டான் டோனியுடன் தனக்கிருந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட உறவில் தான் கண்டவற்றையும் டான் டோனி எழுதிய ‘நினைவுகள்’ என்ற நூலின் கைப்பிரதியில் தெரிந்துகொண்டவற்றையும் கொண்டு டான் ஜோன் அவர்களின் கதையைச் சொல்கிறார். மரபில் மூழ்கியிருக்கும் பியர்ன் கிராமத்தில் புதுமை விரும்பியான டான் டோனி ஒரு சூனியக்காரராகப் பார்க்கப்பட்டுவருகிறார். தானே ஒரு பிரபுவாக இருந்தாலும் அடுத்து வரும் காலம் சோஷலிஸத்தின் காலமாகத்தான் இருக்கும் என்று டான் டோனி உணர்கிறார். டான் டோனி இறந்த பின் வரும் சொர்க்கத்தின்மேல் கவனம் செலுத்தாமல் மண்ணுலகின் சொர்க்கத்தின்மீதுதான் கவனம் செலுத்துகிறார். அதற்கான அடையாளங்களுள் ஒன்றுதான் தன்னுடைய உறவினரான 18 வயது க்ஸிமாவுடன் அவர் பாரீஸுக்குச் சென்று இவ்வுலக இன்பங்களில் திளைத்தது, மறுபடியும் ஒருமுறை பாரீஸுக்கு வந்து பலூனில் பறந்தது போன்ற சாகசங்கள் எல்லாம். கதைசொல்லியும் பாதிரியாருமான டான் ஜோனின் கருத்துப்படி டான் டோனி மிகவும் நல்லவராக இருந்தாலும் சில பாவங்களைச் செய்திருக்கிறார். எனினும், இறக்கும் தறுவாயில்கூட டான் டோனி பாவ மன்னிப்பு கோரவில்லை. அவருக்கான பாவ மன்னிப்பு அவர் எழுதிய ‘நினைவுகள்’ நூல்தான்.

மொழிபெயர்ப்பாளர் கூறியிருப்பதுபோல் இந்த நாவல் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு சவாலானதுதான் என்றாலும் அவ்வளவு சவால் இல்லாத இடங்களிலும் கூட அவர் சறுக்கியிருக்கிறார். Pagan, paganism என்ற வார்த்தைகளை ‘சமயச்சார்புக்குப் பெரிதும் அப்பாற்பட்ட’, ‘சமயத்துக்குப் புறம்பான’, ‘சமயவுணர்வுக்கு எதிரான’, ‘சமய வெறுப்பு’, ‘அஞ்ஞானம்’ என்றரீதியிலேயே பல இடங்களில் மொழிபெயர்த்திருக்கிறார். விவிலிய மொழியில் ‘புறவினத்தார்’, புறமதத்தார்’ (அதாவது கிறித்தவம் உள்ளிட்ட பெரு மதங்களுக்கு வெளியில் உள்ள மதத்தினர்) என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஓரிரு இடங்களில் ‘Palaces’ என்ற சொல்லை ‘அரண்மனைகள்’ என்பதற்குப் பதிலாக ‘இடங்கள்’ என்றே மொழிபெயர்த்திருக்கிறார். ‘Intelligible’ என்ற சொல் ‘புரியக்கூடிய’ என்பதற்குப் பதிலாக நேரெதிராக ‘பூடகமான’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘For Don Toni art was a little like children, who cannot be conceived following a method, but only in the careless joy and intimacy of the night’ என்ற வரியானது ‘டான் டோனிக்கு, கலை என்பது குழந்தைகள் போலச் சிறியது. அவர்கள் ஒரு பாணியைப் பின்பற்ற இயலாதவர்கள். இரவின் அந்தரங்கத்துக்கும், பொறுப்பற்ற ஆனந்தத்துக்கும் மட்டுமே விழைகிறவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஆங்கில வரியின் அர்த்தம் இதுதான்: ‘டான் டோனியைப் பொறுத்தவரை கலையானது கொஞ்சம் குழந்தைகளைப் போன்றது, குறிப்பிட்ட வழிமுறையென்று எதையும் பின்பற்றி குழந்தைகளை உருவாக்க முடியாது, கவலையற்ற ஆனந்தத்திலும் இரவு தரும் நெருக்கத்தாலும் மட்டுமே அவர்களை உருவாக்க முடியும்.’

ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்லும்போது ‘எந்நேரமும் பிறருக்காகவே வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது ‘…always lived off’ என்று இருக்கிறது; இது ’…எப்போதும் பிறரை அண்டி வாழ்ந்தார்’ என்றல்லவா இருக்க வேண்டும். அடுத்ததாக, ‘அவர் எப்போதுமே ஒரு புரவலராக இருந்தார்’ என்று வருகிறது; ஆங்கிலத்தில் ‘He always had a benefactor’ என்று இருக்கிறது; சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘அவருக்கு எப்போதுமே ஒரு புரவலர் இருந்தார்’. ‘Dog-cart’ என்பது ‘நாய்கள் இழுக்கும் சிறிய வண்டி’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது ஒருவகையான குதிரை வண்டிதான். அதேபோல் ‘Ark of the Covenant’ என்றால் கவனென்ட் பெட்டகம்தான், ‘கவனென்ட் கப்பல்’ அல்ல. ’Will never amount to much’ என்றால் ‘இவ்வளவு வேண்டியிருக்காது அவர்களுக்கு’ என்பது அர்த்தமல்ல; ‘அவர்கள் தேற மாட்டார்கள்’ என்பதுதான் அர்த்தம். ‘Thrush’ என்பது ‘அறுக்கப்பட்ட கதிர்த்தாள்கள்’ அல்ல ஒரு பறவைதான். ஆங்கில மூலத்தில் ‘டைஃபஸ்’ ஆக இருந்தது தமிழில் ‘டைஃபாய்’டாக மாறியிருக்கிறது. ’Immoral’ (ஒழுக்கக்கேடான) என்பது ‘அழிவற்ற’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (immortal என்ற சொல்லுடன் இதைப் போட்டுக் குழப்பிக்கொண்டதால் இருக்கலாம்). ‘Heresy’ என்ற சொல் பல இடங்களில் செவிவழிச் செய்தியாகவும், புரளியாகவும், கேட்பார் சொல்லாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இதற்கு ‘மதநிந்தனை’ என்று பொருள் (hearsay என்ற சொல்லைப்போல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்படிருக்கலாம்.) ‘Habit’ என்ற சொல் ஒரு இடத்தில் (பக்கம்-89) ‘பழக்கம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இந்த இடத்தில் அது துறவிகள் அங்கியைக் குறிக்கிறது.  ’Unwholesome’ என்றால் ‘முழுமையற்ற’ என்று பொருள் அல்ல; ‘ஆரோக்கியமற்ற’ என்றே பொருள். Patron-saint என்பது சுவீகாரப் புனிதர், புரவலப் புனிதர், காவற்புனிதர் என்று பலவகைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Such a distortion of history என்ற வரி மொழிபெயர்க்கப்படவில்லை. சில இடங்களில் வாக்கியம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்குச் சென்றிருக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.      

எந்த ஒரு மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல என்பது உண்மைதான். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தன்னை மீறியும் பிழைகள் நுழைந்திருக்கலாமோ என்ற கவலையை நேர்மையாக வெளிப்படுத்தவே செய்திருக்கிறார். நம் கேள்வியெல்லாம் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரின் பங்கு என்ன என்பதுதான். ஆர்வத்தால் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் சிறிய பதிப்பாளர்கள் என்றால் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லைதான். ஆனால், மொழிபெயர்ப்புக்கென்று நிதியுதவி பெறும் பெரிய பதிப்பகம் தான் வெளியிடும் நூலின் மீது மேலதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்று பிறர் எதிர்பார்ப்பது  தவறல்ல. அதுவும் இலக்கிய நூல்களை வெற்றிகரமான வணிகமாக ஆக்கலாம் என்று நிரூபித்திருக்கும் ஒரு பதிப்பகத்தில் ‘எடிட்டர்’ யாரும் இல்லையா என்பது ஆச்சரியமளிக்கிறது. இனியாவது தம் மொழிபெயர்ப்புகள் மீது பதிப்பகங்கள் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள் என்று நம்புவோம்.

பொம்மை அறை
லோரன்ஸ் வில்லலோங்கா
(ஆங்கிலம் வழி தமிழில்: யுவன் சந்திரசேகர்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
விலை: ரூ. 295

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 15-08-2020 அன்று வெளியான நூல் விமர்சனம்)

Friday, August 7, 2020

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்


அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம். சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது

உங்களுடைய பாதைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே? 

அது உண்மையல்ல. 1989-ல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது “தேசியச் செயல்திட்டத்தில் நீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்” என்று தெளிவாகக் கூறியிருந்தோம். அரசியல் அறம், அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் நீதி. அது பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. ‘இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்க வேண்டும். எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம்.  

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?  

கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும். 

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?  

அது வெறும் மேல்பூச்சுதான்.  

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?  

இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மதமும் இந்த அமைப்புமே மேலோங்கின. ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அரசியல், சமூக, பொருளாதார ஏகபோகங்கள் முடிவுகள் எடுப்பதிலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன. இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.  

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?  

இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான்.  

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?  

இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது. ‘ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்தது” என்று என்னிடம் கூறினார்கள். இது 27% அல்லது 10% என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1%-கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி. நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்? இன்னொரு முறை ஒரு பத்திரிகைக்காரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், “நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்” என்று பதில் கூறியிருக்கிறார். “வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்” என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். “ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்” என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.  

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?  

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும். வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

- மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று வி.பி.சிங் அறிவித்த 30-வது ஆண்டு நிறைவையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான நேர்காணல்.


 

Thursday, August 6, 2020

ஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை


ஆசை 

மனித குல வரலாற்றில், மனிதர்களின் படைப்பு சக்தியும் அழிவு சக்தியும் ஒருசேர புதிய உச்சத்தைத் தொட்ட நாள் ஆகஸ்ட் 6, 1945. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடும் சம்பவம் அது. அதன் விளைவுகள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன.  

இரண்டாம் உலகப் போர் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணம் அது. ஜப்பான் போரில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எண்ணிய சாதாரண குடிமக்களில் ஒருவர் சுடோமு யமகுச்சி. இன்றைக்கு உயிரோடிருந்தால் அவருக்கு 104 வயது இருக்கும். 1945-ல் அவருக்கு 29 வயது. அவரது குடும்பமும் அவர் வேலை பார்த்த நிறுவனமும் ஜப்பானின் நாகசாகி நகரத்தில்தான் இருந்தன. ஆனால், 1945-ல் மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். 

ரத்த சாட்சியம் 

ஆகஸ்ட் 6 அன்று காலையில் ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதற்காக ரயில் நிலையத்துக்குத் தனது சகாக்களுடன் சென்றவர் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்திருக்கிறது. அதை எடுப்பதற்காகத் திரும்பிவந்தபோதுதான் வானை அண்ணாந்து பார்த்திருக்கிறார். ஒரு விமானமும் இரண்டு பாராசூட்டுகளும் தென்பட்டிருக்கின்றன. சற்று நேரத்தில் வானத்தில் பெரிதாக ஏதோ ஒன்று அதுவரை யமகுச்சி கண்டிராத பிரகாசத்துடன் வெடித்திருக்கிறது. யமகுச்சி தூக்கிவீசப்பட்டார். எங்கு பார்த்தாலும் தீ. எங்கெங்கும் மரண ஓலம். அவரது செவிப்பறை, கண்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது; உடலில் கதிரியக்கத்தால் காயம் ஏற்பட்டது.  

குண்டுவெடித்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்ததால் யமகுச்சி உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படவில்லை. பேரழிவுக்கு நடுவே அவருக்குப் புகலிடம் கிடைத்தது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் நாகசாகிக்கு சென்றார் யமகுச்சி. உடலில் காயம் இருந்தாலும் ஆகஸ்ட் 9 அன்று பணிக்குத் திரும்பினார். அன்றைக்கு நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பிலும் யமகுச்சி உயிர் தப்பினார். அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் ஏனைய 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இல்லை. அதன் பிறகு நெடிய காலம் ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் நினைவாக இருந்த யமகுச்சி 2010-ல் தனது 93 வயதில் காலமானார். அவரை இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்தது. ஒரு கொடூர வரலாற்றுக்கு ரத்த சாட்சியமாக இருந்த அந்த மனிதர் வாழ்நாள் நெடுக அணு ஆயுதங்களின் கொடுமையையும் பேரபாயத்தையும் பேசிக்கொண்டேயிருந்தார்.  

முன் வரலாறு 
1939-ல் உலகப் போர் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் செயல்பாடுகளெல்லாம் உலக அமைதியை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலம் அது. இதற்கு முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைனின் கோட்பாடு விளக்கியிருந்தது; இயற்பியலாளர் லியோ ஸில்லார்ட் அணுக்கரு சங்கிலித் தொடர் நிகழ்வை 1933-ல் கண்டுபிடித்திருந்தார். 1930-களின் இறுதியில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உலகையே அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்தத் திசையில் ஜெர்மனியை முந்துவது அவசியம் என்று கருதி ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனும் லியோ ஸில்லார்டும் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார்கள். அதுதான் அணுகுண்டு திட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி.  

முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில் 1942-ல் அணுகுண்டு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற ஆரம்பித்தன. அதனால், இதற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற பெயர் வந்து சேர்ந்தது. 1945-ல் அமெரிக்கா வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தும்விட்டது. தயாரித்த அணுகுண்டை 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பரிசோதித்தார்கள்.  

இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் பிரதானமாக இருந்த ஜெர்மனி சரணடைந்ததால் அந்தப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும் ஆசியப் பகுதியில் ஜப்பான் எளிதில் அடிபணிவதாக இல்லை. அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ரஷ்யாவின் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரும் சந்தித்து ஜப்பான் சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார்கள். ஜப்பானோ வேறு வழிகளில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தது. எது எப்படியிருந்தாலும் ஜப்பான் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே ஜப்பானின் 60 நகரங்களில் அமெரிக்கா சாதாரண வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்திருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தது அமெரிக்கா.  

ஆகஸ்ட் 6 அன்று காலையில் பசிபிக் கடலில் உள்ள டினியன் தீவிலிருந்து ‘பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்’ விமானம் புறப்பட்டது. பால் டிபெட்ஸ் ஓட்டிச்சென்ற அந்த விமானம் சுமந்திருந்த அணுகுண்டின் பெயர், குட்டிப் பையன் (லிட்டில் பாய்). 4,400 கிலோ எடை கொண்ட அதன் உள்ளே 64 கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட ‘யுரேனியம்-235’ இருந்தது. சரியாக 8.15 மணிக்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 31,060 அடி உயரத்தில் பறந்தபோது அணுகுண்டு விடுவிக்கப்பட்டது. கீழ்நோக்கிப் பயணித்து 45 நொடிகள் கழித்து, தரையிலிருந்து 1,950 அடிகள் இருக்கும்போது அது வெடித்தது. அணுகுண்டைப் போட்டுவிட்டு வெகு வேகமாக அந்த இடத்தைவிட்டுச் சென்ற அந்த விமானம் குண்டுவெடித்த இடத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் பறந்தபோது குண்டுவெடிப்பின் அதிர்வுகள் அதையும் உலுக்கின.  

மானுட அவலத்தின் பேயாட்டம் 

அதன் பின்பு நடந்தது முன்னுதாரணமில்லாத ஒரு பேரழிவு. இந்தக் குண்டுவெடிப்பின் சக்தி 2 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருளுக்கு இணையானது என்றார்கள். குண்டுவீச்சின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். 13 சதுர கி.மீ. தூரத்துக்கு நகரம் அழிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 70% கட்டிடங்கள் சேதமடைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹிரோஷிமாவுக்கு மேலே சிவப்பும் கறுப்புமாக ராட்சகக் காளான் ஒன்று முளைத்திருந்ததைப் போல தெரிந்ததாகச் சொன்னார்கள். குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. இறந்துகொண்டிருந்தவர்களின் மரண ஓலமும், தங்கள் குடும்பத்தினரைத் தேடி அலைந்தவர்களின் ஓலமுமாக ஓசைகளின் நகரமானது ஹிரோஷிமா. கை, கால், தலையில்லாத குழந்தைகளை அவற்றின் அன்னையர் தூக்கிக்கொண்டு திரிந்தனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் பலரும் தங்கள் உயிரையும் குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டிருந்தார்கள். 

ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டும் ஜப்பான் அடிபணியவில்லை. மூன்று நாட்கள் கழித்து கொக்குரா என்ற நகரத்தின் மீது குண்டுவீசத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கொக்குராவில் மேகமூட்டமாக இருந்ததால், அடுத்து நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இங்கு வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் குண்டு மனிதர் (ஃபேட் மேன்). இதன் எடை 4,670 கிலோ. இதன் உள்ளே 6.4 கிலோ புளுட்டோனியம் இருந்தது. ‘குட்டிப் பைய’னைவிட இது திறன் மிகுந்தது என்று கூறப்படுகிறது. 2.3 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருட்களின் திறனுக்கு இணையானது அது என்று சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் நாசத்தை வைத்துதான் போர் வியாபாரிகள் எல்லாவற்றையும் அளவிடுவார்கள். நாகசாகியின் மீது வீசிய குண்டும் ஹிரோஷிமாவுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கியது. எங்கெங்கும் மானுட அவலத்தின் பேயாட்டம். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. 

நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சு. ஜப்பான் நடுங்கிப்போனது. சில நாட்களில் ஜப்பான் மீது போர் தொடுக்கப்போவதாக ரஷ்யா அறிவித்ததும் வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. அணுகுண்டு வீசினாலும் வீசாவிட்டாலும் எப்படியும் ஜப்பான் இறுதியில் தோல்வியடைந்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ரஷ்யாவுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இந்தக் குண்டுவீச்சுகள் என்போரும் உண்டு. இரண்டாவது உலகப் போரை முடித்துவைத்தது அணுகுண்டு வீச்சுதான் என்று ஒரு வாதம் சொல்லப்பட்டாலும் அதுதான் பனிப்போரைத் தொடங்கியும் வைத்தது என்ற உண்மையை நாம் காண வேண்டும். 

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டுவீச்சின்போது உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருந்தாலும், அடுத்து வந்த சில வாரங்கள், மாதங்கள் என்று அந்த ஆண்டின் முடிவுக்குள் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாகப் பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். கணக்கற்ற குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்து ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் சாட்சிகளாக உலவுகின்றனர். அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகாலமாக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது அணுகுண்டு வீசவில்லை என்றாலும் ஏராளமான அணுஆயுதங்களைப் பல நாடுகளும் வைத்திருக்கின்றன. ஆகவே, எப்போதும் எரிமலையின் வாய் மீது உட்கார்ந்திருப்பது போன்றதுதான் நம் வாழ்க்கை. ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளரோ அல்லது ஸ்டேன்லி கூப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்…’ படத்தில் வருவதுபோல் ஒரு ராணுவ ஜெனரலோ திடீரென்று ஒரு கணத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் இந்த உலகம் முடிவுக்கு வரும் அபாயத்தில்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  

முதல் அணுகுண்டைத் தயாரித்த அறிவியலாளர்கள் ‘அழிவுநாள் கடிகாரம்’ (டூம்ஸ்டே கிளாக்) என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அழிவுநாளுக்கு, அதாவது கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன. நள்ளிரவு 12 மணியை நோக்கிய முதல் உந்தலை ஹிரோஷிமா அளித்ததென்றால் தொடர்ந்த போர்கள், அணுஆயுதப் பெருக்கம், இயற்கைப் பேரழிவுகள் போன்றவை மேலும் கடிகாரத்தின் முட்களை வேகமாக நகர்த்தின, நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியின் மீது குண்டுவீசப்பட்ட 75-ம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. அது ‘அழிவுநாள்’ கடிகாரத்தையும் முடக்கிப்போடுமானால் மனித குலத்துக்கே பெரும் விடிவாக அமையும். 

-(ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)