Thursday, March 21, 2024

மகிழ் ஆதன் கவிதைகள்: உலகக் கவிதைகள் தினத்தை முன்னிட்டுச் சிறப்புப் பகிர்வு



உலகக் கவிதை தினத்தை முன்னிட்டு என் மகன் மகிழ் ஆதனின் கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெற்றோர்களாகிய எங்களின் விருப்பமும் திணிப்பும் இன்றி அவனாகவே 4 வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவனது முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ வானம் (நூல்வனம்) வெளியீடாக 2021ல் வெளியானது. அதுவரையிலான கவிதைகள் அவன் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக்கொண்டவை, அல்லது கைபேசியில் பதிவுசெய்துகொண்டவை. அதற்குப் பிறகு எழுத்துப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவனாகவே எழுதும்படி ஊக்குவித்தோம். 

“காலம்னா என்னப்பா?” என்று ஒரு நாள் மகிழ் கேள்வி கேட்டான். அதற்கு என்னால் சரியான விளக்கம் தர முடியாததை அடுத்து “நீ உன் கவிதை மூலமா பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாமே” என்று கூறியதை எடுத்து மகிழ் காலத்தைப் பற்றி தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்தான். காலத்தைப் பற்றிய அவனது 51 கவிதைகளின் தொகுப்பு ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ என்ற தலைப்பில் எதிர் வெளியீடாக 2022-ல் வெளியானது. புத்தக ஆக்கம் பெற்றவை, ஆக்கம் பெறாதவை என்று இதுவரை 500-க்கும் மேற்பட்ட கவிதைகளை மகிழ் ஆதன் எழுதியிருக்கிறான். இவற்றுள் ‘இறந்த டைனோசார்’ என்ற, ஓராண்டுக்கும் மேல் அவன் எழுதிய நெடுங்கவிதையும் உள்ளடக்கம். மகிழ் ஆதனுக்குத் தற்போது வயது 11. ஏழாம் வகுப்பு படித்துவருகிறான். மகிழ் ஆதன் உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள இந்தப் பதிவின் கீழ் நான் கொடுத்திருக்கும் கட்டுரைகள், அறிமுகங்கள் போன்றவற்றின் இணைப்புகளுக்குச் சென்று படித்துப் பார்க்கலாம்.

இதுவரை மகிழ் ஆதனுக்கு வரவேற்பும் ஊக்கமும் கொடுத்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!  

இறுதியாக ஒன்று. கவிதை எழுதுவதும் கவிஞனாக இருப்பதும் முழுக்க முழுக்க மகிழ் ஆதனின் முடிவு. முடிவு என்று கூட சொல்ல முடியாது, அவனது இயல்பு. ஆகவே, அதில் தலையிட பெற்றோர் தொடங்கி யாருக்கும் உரிமை இல்லை என்பதை அறிந்தே இருக்கிறேன்.

**

மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021) தொகுப்பிலிருந்து…



1.
பூக்கள் நம்மளை
வாசனை ஏத்த வைக்கும்
நம்மள்
புல்லாங்குழல் வைச்சு
வாசனை ஏத்த வைப்போம்


2.
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது

3.
கண்முத்தம்
பறவை முத்தம்
ஊதா முத்தம்
மனசு முத்தம்
ஏசப்பா முத்தம்
நீலப்பறவை முத்தம்


4.
நான் பறவை ஒளி
நீ பறவை கண்காட்சி
நான் முந்திரிக் கண்
நீ முத்தம் கண்

5.
சிறுத்தைக் கண்
என்மீது பாயும்போது
ஒரு நடு ஒளி வரும்

6.
நீலத்துக்குள்ளே வட்டம்
வட்டத்துக்குள்ளே நான்
எனக்குள்ளே ரயில் பூச்சி

7.
எரிகல்
வானத்தில் இருக்கும்போதே
வானத்தைக்
காதலிக்கும்


8.
மழைச் சொட்டுக்கள்
என் கண்ணில் விழுந்து
என் கண்
பழச்சொட்டுக்களாக மாறும்


9.
நான்தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்
வானம் என்னைக்
காற்றால் கட்டிப்போட்டது
கட்டிப்போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
         -மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’
         தொகுப்பிலிருந்து.
         நூலைப் பெற: வானம் வெளியீடு – 91765 49991    

**

மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2022) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…



1.

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்

2.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது


3. காலத்தின் சொல்

காலத்திற்கு வடிவம் இருக்கா
சொல்லுக்கு முடிவு இருக்கா
காலத்திற்கு இடம் உண்டா
சொல்லுக்கு வெளிச்சம் உண்டா
காலத்திற்கு வீடு இருக்கா
சொல்லுக்கு முத்தம் இருக்கா
காலத்திற்குக்  கனவு இருக்கா
சொல்லுக்கு உடம்பு இருக்கா
காலத்திற்கு உணர்வு இருக்கா
சொல்லால் வளர முடியுமா
சொல் என்றால் என்ன
அது ஒரு நிறம்
காலம் என்றால் என்ன
அது ஒரு புதிய மண்


4. புதிய காலம்

காலத்தின் அழகு
கண்ணால் மறைந்து
காதால் தெரியும்

நான் காலத்தின் மேல்
காலத்தின் வெளிச்சத்தை வரைந்தேன்

காலம் ஒரு கற்பனை

அந்தக் கற்பனையை
நான் உடைத்தேன்

காலத்துக்குள் ஒரு புதிய காலம்
பிறக்கிறது


5. பகலிரவு

பகல்
வண்ணங்களின் நிழலைக்
காட்டும்

இரவு
வண்ணங்களின்
கலைந்த கனவைக் காட்டும்

பகல்
ஒளியின் கோடு

இரவு
வண்ணங்களின் திட்டம்

பகல்
பார்வையின்  ஒளி

இரவு
வெளிச்சத்தின் குளிர்


6. நமக்குள் கருந்துளை

கருந்துளை காலத்தை முழுங்கியது
நம்மள் கருந்துளைக்குள் இருக்கிறோம்
கருந்துளை ஒரு கருப்புபூதம்
கருந்துளை  காந்தத்தின் கண்
காலத்தின் நிறம் கருப்பு
காலத்தின் நிறம்
கருந்துளையைக் கற்பனையில் உருவாக்கியது
கருந்துளை ஒரு கதையிலிருந்து வந்தது

நமக்குள் கருந்துளை

கருந்துளை
பூவுக்குள் தூங்கியது

காலமும் கருந்துளையும்
ஒரு பாட்டின் சந்தம்

கருந்துளை
சத்தத்தின் கனவு


7. எதிர்காலத்தில் வீசும் காற்று

பூக்கள்
பூக்களில் ஒட்டும் காலம்

காலம்
ஒளியைக் கூறிச் செல்லும் காலம்

பூக்களின் நிறம்
காலத்தின் மேல்

காலம்
ஒரு தட்டில் தெரியும் முகம்

கனவு
ஒரு எதிர்காலத்தில் வீசும் காற்று

காலம்
காற்றின் நிழல்

காலம்
கண்கட்டும் பூச்சாண்டி

காலத்துக்குள்
கரைந்த மேகம் இருக்கு


8. காலம் என்றால்

காலம் என்றால் மேகம்
ஒளி
மழை
கடல்
பறவை
சிங்கம்
சத்தம்
காற்று
புலி
ஆறு
சுனாமி
சூறாவளி
காட்டு யானை
நெருப்பு
குளிர்
மண்
வாசனை
விசில் குருவி
இறகு
கிளி
பச்சை
மான்
உலகம்
காலம் என்றால் கதை சொல்லும் பூ
          - மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’
           தொகுப்பிலிருந்து.
           நூலைப் பெற: எதிர் வெளியீடு – 99425 11302, 98650 05084

**

இன்னும் நூலாக்கம் பெறாத புதிய கவிதைகள்

1.
ரயில் பூச்சி
நீங்கள்
என் மனசைத் தொட்டால்
என் மனசு
புதிய இடமாக
ஆகும்

2. விக்கலால் இறந்துபோன எலி

ஒரு நாள் காலையில்
விக்கலால் இறந்துபோன எலி
இறந்த உடனே
தூரத்தில் இருந்து
கண்காணித்துக்கொண்டு இருக்கும் காகங்கள்
ஆசையால் பறந்துவந்து
இறந்த எலியைக் கொத்திக் கொத்திக்
கனவின் முடிவிற்கு வரவைத்தது

நானும் விக்கிக்கொண்டுதான் இருந்தேன்
இரண்டு நிமிடம்


3. அதிசயங்கள்

இயற்கை நமக்குத் தரும்
அதிசயங்கள்
நம் நினைவைப்
பூட்டுப் போட்டுப் பூட்டும்

அதிசயங்கள் சிட்டுக்குருவியின்
இறகில் வாழ்ந்துகொண்டு
இருக்கட்டுமே


4.
வானத்தின் ஜன்னல்
என் நினைவின் முயல்


5.
காட்டுக்கு அடங்கிய ஆடு
ஆட்டைப் பார்த்த பூக்கள்
மரத்திடம் என்ன சொன்னது
ஆட்டுக்கு வந்த பசிதான்
நம் எதிரி
ஆட்டின் மனசைப் பார்த்து ஓடிய புலி
காட்டுக்குள் ஆடிய ஒளி
காட்டின் சத்தம் பறவைகளின் இதயம்
காட்டுக்குள் நுழைந்த ஒளியின் பதில்
காடு காலத்தில் படுக்கும் பாய்
காட்டுக்கு வந்த தூக்கம்
உணர்வில்லாத மரம்


6.
‘பூவுக்குள் இருக்கும் தேன்
யாருக்காக ஒளிந்திரிக்கிது

பறவைகளின் குரல் தேனின் காதில்
புல்லாங்குழல் வாசித்தது

தேனின் நிறம் ஆசையின் புதையல்

தேனிடம் மாட்டிய சத்தங்களை
பூமியில் புதைத்தது

பூமியில் இருந்து சத்தத்தின் பூக்கள் பூக்கும்
அதில் இருந்த தேன்கள் சிரித்தன

பூவுக்குள் இருக்கும் தேன்
முத்தத்தின் இருள்

பூவின் மேல் படும் வெயில்
தேனுக்கான அலாரம்
**

மகிழ் ஆதன் உலகத்துக்கு நான் எழுதிய அறிமுகம்:

ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்


மகிழ் ஆதன் கவிதைகள் தொடர்பாக மேலும் விரிவாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்கலாம்:


எஸ். ராமகிருஷ்ணன்
:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கைhttps://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமிhttps://tinyurl.com/yu3y94jk

The New Indian Expresshttps://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki


No comments:

Post a Comment