Friday, March 22, 2024

காஃப்காவின் முன் இரு சிறுமிகள் - காஃப்கா நினைவு நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை


ஆசை

1. சர்வீஸ் சாலை

அந்த நெடுஞ்சாலை மிகவும் பெரியது என்றாலும் அதன் ஓரம் நடப்பதற்கு நிறைய இடம் இருக்கிறது என்றாலும் அந்த சாலையில் செல்லும் மிக நீண்டதும் ஏராளமான சக்கரங்களைக் கொண்டதுமான லாரிகளையும் கண்டெய்னர்களையும் பார்க்க எனக்கு அச்சமாக இருந்ததால் அந்த நெடுஞ்சாலையின் இடது பக்கம் இருந்த சர்வீஸ் சாலை என்று சொல்விவிட முடியாத ஆனால் இணையாகச் செல்லும் மண்ணும் தார்ச் சாலையும் கலந்த அந்த சாலையில் குறுக்காக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் புழுதி மயம். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் அங்கே ஓரத்தில் இருந்த புழுதி கிளம்புகிறது என்றால் இந்த சர்வீஸ் சாலையில் ஏன் இந்த அளவுக்குப் புழுதி என்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் காற்றே இல்லாத புழுக்கமான பகல் பொழுது இது. இந்தப் புழுதிக் காட்டில் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் இருப்பது போன்று டீக்கடை, பிஸ்கெட் சிகரெட் விற்கும் தண்ணீர் போன்றவை விற்கும் கடைகளும் இருந்தன.

வெயில் மட்டும் இல்லையென்றால் இந்தப் புழுதியைப் பார்க்கும்போது காலைப் பனிக்கு நடுவே எல்லோரும் கதகதப்பாக டீ குடித்துக்கொண்டிருப்பதைப் போல தோன்றும். புழுதிக்கு நடுவே கண்ணை இடுக்கிக்கொண்டு ஊடுருவிப் பார்த்தேன் ஒருவராவது குளிர் பானம் குடிக்கிறாரா என்று. ம்கூம். எல்லாரும் டீதான். எல்லோரும் ஆசுவாசத்தையோ மாற்றையோ விரும்புவதில்லை. அதிகரிப்பைத்தைதான் விரும்புகிறார்கள். நானும் அந்த இடத்துக்குப் போனால் அப்படித்தான். எதுவும் அருந்தாமல் கூட நின்றிருக்க முடியாது. சூழலின் அழுத்தம் நம்மையும் டீ அருந்த வைத்துவிடும். ஒருவேளை அந்தப் புழுதிகூட எல்லோரையும் அங்கே இழுக்கும் நிரந்தர ஏற்பாடாகக் கூட இருக்கலாம். இரவிலாவது அந்தப் புழுதி அடங்குமா என்று நினைத்துக்கொண்டேன். 

அந்த டீக்கடையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன். பிரதான சாலைக்கும் இந்த ரெண்டும்கெட்டான் சர்வீஸ் சாலைக்கும் நடுவே சிறு வாய்க்கால் போல பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் குப்பைகூளங்களுடன் சிறுசெறு முட்புதர்களும் காணப்பட்டன. அதே போல் சர்வீஸ் சாலையின் வலது பக்கமும் சரிவும் முட்புதர்களும் காணப்பட்டன. அந்த முட்புதர்களில் ஒன்றிலிருந்துதான் ஒருவன் வெளிப்பட்டதை நான் பார்த்தேன். கையில் பெரிய திருப்புளி போன்ற ஆயுதம். ஆடையெங்கும் ரத்தம். பதறிப் போய் நின்றேன். எனக்கும் முன்பு ஒருத்தன் என்னையும் தடுத்துக்கொண்டு திருப்புளி வைத்திருந்தவனை நோக்கிக் கற்களை எறிந்துகொண்டிருந்தான். என்னைத் திரும்பிப் பார்த்து “ஏய் ஏய் போய்விடு” என்று கத்தினான். என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. உறைந்துபோய் நின்றுவிட்டேன். கையில் திருப்புளி வைத்திருந்தவன இப்போது நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள சரிவுப் பக்கம் ஓடினான். அங்கே ஒருத்தன் லேசாகப் புரண்டுகொண்டிருந்தான். இவன் ஓடிப்போய் அவன் கழுத்திலும் நெஞ்சிலுமாகத் துடிப்படங்கும் வரை குத்தினான். மறுபடியும் இடது பக்கம் ஓடிவந்து ஏற்கெனவே துடிப்படங்கிய ஒருத்தனை மாறி மாறிக் குத்தினான். குத்திவிட்டு எங்களை நோக்கி ஓடிவந்தான். எனக்கு முன் நின்றிருந்தவன் கற்களை வீசிக்கொண்டு எனக்கு சமிக்ஞை காட்டுகிறான். அப்போதுதான் கவனித்தேன். டீக்கடையில் உள்ளவர்களும் சத்தம் போட ஆரம்பிக்கிறார்கள். எங்கள் திசையை நோக்கி ஓடிவந்தவன் அப்படியே நின்று திரும்பி ஓட ஆரம்பிக்கிறான். 

நான் இந்தப் பக்கம் திரும்பி வேகவேகமாக நடக்கிறேன். திருப்புளியைக் கையில் வைத்திருந்தவன் என்னை நோக்கி ஓடிவந்த மாதிரியே இருந்ததே என்று படபடப்புடன் நினைத்துக்கொண்டு நான் வந்த வழியை நோக்கி நடந்தேன். சர்வீஸ் சாலையில் திரும்பும்போதுதான் கவனித்தேன் அருகே ஒரு பெண் எனக்கு இணையாக நடந்துவந்துகொண்டிருந்தாள். போகப்போக எங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தாள். எனக்கு இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. நடந்துகொண்டே சட்டென்று என் கையைப் பற்றினாள். அவள் முகத்தைப் பார்க்கக்கூட எனக்குத் தெம்பில்லை. “ஏன் பார்த்தாய்” என்று என்னைக் கடிந்துகொள்வதுபோல் கேட்டாள். “நீ யார்” என்று கேட்டேன். “எனக்காகத்தான் அந்தக் கொலையெல்லாம்” என்றாள். மேலும் அவளே சொன்னாள் “ஆனால் நான் அவர்கள் யாரையும் காதலிக்கவில்லை.” மேலும் அவளே சொன்னாள் “நான் காதலிப்பது உன்னைத்தான்.” இப்படிச் சொன்னதும்தான் எனக்குப் புரிந்தது அவன் ஏன் என்னை நோக்கிக் கொலைவெறியுடன் ஓடிவந்தான் என்று. ஆனால் எனக்கு அவனையோ இவளையோ இதற்கு முன்பு சுத்தமாகத் தெரியாது. மேலும் நான் இரண்டு பெண் குழந்தைகளின் அப்பா. எப்படிப்பட்ட வலையில் விழுந்திருக்கிறேன். இவள் கையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது எனக்கும் அவள் மேல் காதல் இருக்கிறது என்று. ஆனால் இன்னும் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்கவில்லை. சுடிதாரின் நிறம் வெளிப் பிங்க். முக்கால் கை வைத்திருக்கிறாள். பச்சைப்பிள்ளை போல அவளிடமிருந்து ஒரு மணம் தனிப்பட்ட வகையில் இந்தப் புழுதி புழுக்கம் நெடுஞ்சாலை லாரிகள் கண்டெய்னர்களுக்கு இடையிலும் எங்கும் என்னையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. இதன் வலைக்குள்தான் இதெல்லாம் நடக்கிறதா. என் ஓரக்கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு பெண் நடந்து வருவது தெரிகிறதே தவிர என்னால் தலையைத் திருப்பவே முடியவில்லை. அவளின் மணம் என் தலையை வலது பக்கம் திருப்பும் திறனைச் செயலிழக்கச் செய்துவிட்டதுபோல.

ஒரு கட்டத்தில் தரதரவென்று என்னை இழுத்துச்செல்வதுபோலவே அவள் சென்றாள். அப்படிச் செல்வதால் என் கால்கள் தரையில் பாவாமல் என் முழு எடையையும் அந்தரத்தில் உணர்ந்தேன். ஓரக்கண்ணுக்கு ஒல்லியாகத் தெரிந்த அந்தப் பெண் எப்படி இவ்வளவு அநாயசமாக என்னைக் காற்றில் இழுத்துச் செல்கிறாள். ஒரே ஒரு முறையாவது உன் முகத்தைக் காட்டிவிடேன் அதற்குப் பிறகு அவன் கையால் குத்துப்பட்டுச் சாகக்கூடத் தயார் என்று என் மனதுக்குள் கெஞ்சினேன். அவளுக்கு என் நிலை சிறிதளவாவது புரிந்ததா என்று தெரியவில்லை. 

எனக்கு இப்போதுதான் தோன்றியது. அந்த நான்கு பேருமே அவள் முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். பக்கவாட்டில் கையைப் பற்றியபடியே நடந்திருப்பார்கள். அதிலேயே பித்தேறிவிட்டார்கள். அதனால்தான் இந்த வெறி. திருப்புளி வைத்திருந்தவன் இல்லையென்றால் மற்றவர்கள் மற்றவர்களைக் கொன்றிருப்பார்கள். இப்படியே மாறி மாறி நிகழ்ந்திருக்கும் என்று தோன்றியது. இது வேறொன்றாகவும் இருக்கலாம். கொல்லப்பட்டவர்கள் மட்டுமே இவள் முகத்தைப் பார்த்திருக்கலாம். அது தாங்க முடியாமல் திருப்புளிக்காரன் அவர்களைக் கொன்றிருக்கலாம். இவள் முகத்தைப் பார்த்தால் அதன் பின் வாழ முடியாது போல. இருந்தாலும் பரவாயில்லை இவள் முகத்தை நான் பார்த்தே ஆக வேண்டும். ஆனால் அதைச் சொல்லிக் கெஞ்சுவதற்குக்கூட என் மனதில் சக்தி எழ மாட்டேன் என்கிறதே. என் வாயே திற, என் மனதே பேசு. என்னைப் பார்த்து என் நிலையைக் கேலி செய்வதற்காவது அவள் என் முகம் பக்கம் திரும்ப மாட்டாளா என்று நான் ஏங்கியபோது அவள் முகம் திரும்பியது. அது என்னைப் பார்ப்பதற்காக இல்லை என்பதை ஒரு கண்டெய்னர் லாரி என் கண்ணில் புழுதி அப்பியதால் புரிந்துகொண்டேன். புழுதியோடு என்னுடைய கண் போராடியும் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.    

நாங்கள் ஒரு மெட்ரோவின் நுழைவாயில் செல்லும்வரை இதே நிலைதான். என் அறிவுக்குத் தெரிகிறது நான் நடந்துதான் வந்திருக்கிறேன் என்று. ஆனால் தரதரவென்று இழுத்துவந்ததால் கைகாலிலிருந்து பார்வை செவித்திறன் என்று புலன்கள் வரை மழுங்கிப்போன உணர்வு. 

மெட்ரோவின் நகரும் படிக்கட்டில் இறங்கினோம். ஒரு தளம் இறங்கியதும் “அந்தத் திசையில் திரும்பிப் பார்க்காமல் போய்விடு. எங்கேயாவது போய்விடு” என்று சொல்லிவிட்டு இன்னொரு நகரும் படிக்கட்டில் இறங்கினாள். அப்போது புழுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கண்கள் விடுபட்டுக்கொண்டிருந்தன. அவளுடைய பின்புறத் தோற்றத்தைப் பார்த்தபடி நின்றிருந்தேன். நான் கணித்தபடியே ஒல்லியான உருவம்தான். ஓரக்கண்ணுக்குத் தெரிந்த அதே பிங்க் நிற சுடிதார்தான். ஆனால், கன்னக் கதுப்புகூட தெரியவில்லை. ஓரிரு நொடிகளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறங்கும் படிக்கட்டின் பக்கவாட்டில் இறங்குபவர்கள் தலை இடித்துவிடாமல் இருந்த கண்ணாடித் தூணில் அவள் முகம் தெரிந்தது. சரியாக என்னைப் பார்த்துவிட்டாள். அதில் ஒரு கணம் காதல் வெட்கத்துடன் பூத்தது. மறுகணம் ஒரு அமானுஷ்ய கண்டிப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அவள் கீழே சென்றுவிட்ட பிறகும் கூட அந்த வெட்கப் பூவுக்கும் கண்டிப்பின் கொழுந்துக்கும் இடையே அந்தத் தூணில் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு. அப்படியே கண்ணை மூடி நின்றேன். முற்றிலும் பிரிந்துசெல்லும்போது எதிர்பாராமல் எதிர்பட்டுவிட்ட ஒரு கண்ணாடித் தூணுக்காகக் கண நேரத்தில் எப்படி யதேச்சையாகத் தன் காதலை அவளால் தயார்செய்ய முடிந்தது என்ற கேள்வியின் திளைப்பிலேயே நின்றேன். ஐயோ அந்த முகம் அந்தப் பார்வை அந்த முகத்தின் திடீர் விரிவு விரிவிலிருந்து திடீர்ச் சுருக்கம் திடீர்க் கனல். எல்லாவற்றிலும் எனக்குத் திளைப்பு. 

ஒரு கட்டத்தில் அந்தத் திளைப்பும் எனக்குப் போதவில்லை. ஓடிச்சென்று அந்தத் தூணுக்குள் நுழைந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அது சரிவராது. மேலிருந்து கீழே அந்தத் தூணைப் பார்த்தபடி இறங்கிச் சென்று மறுபடியும் மேலே வந்து கீழே அந்தத் தூணைப் பார்த்தபடி இடைவிடாமல் இதையே செய்ய வேண்டும் என்றும் தோன்றியது. 

இப்போது கண்ணைத் திறந்து அந்தத் தூணைப் பார்த்தேன். காதலும் கண்டிப்புமாகத் தகதகத்து நின்றது தூண். நானும் தகதகத்து அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது என்னை இன்னொரு கை பற்றியது  

  

2. உலகின் மிகப் பெரிய புத்தகம்

என்னைப் பற்றிய கை அந்த சர்வீஸ் சாலையில் எனக்கு முன்பு நின்றுகொண்டிருந்தவனுடையது. “அவள் முகத்தைப் பார்த்துவிட்டாயா? அவள் உன் முகத்தைப் பார்த்துவிட்டாளா? சரி வா” என்று தரதரவென்று இழுத்துக்கொண்டு இன்னொரு நகரும் படிக்கட்டுக்கு என்னை அழைத்துச் சென்றான். அது வெளியேறும் படிக்கட்டு. அங்கே மேலே பெருந்திரள் சூழ்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் அவர்கள் எல்லோரும் கொலைவெறியுடன் கூச்சலிட்டனர். நான் அவ்வளவுதான் என்று தோன்றியது. இவர்களிடம் ஒப்படைக்கத்தான் இவன் என்னை அழைத்துச்செல்கிறானா, இப்படியே படிக்கட்டில் எதிர்திசையில் வேகமாக இறங்கி ஓடிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அந்தக் கூட்டத்தைப் பத்து பதினைந்து போலீஸ்காரர்கள் விலக்கினார்கள். அப்போதுதான் எனக்குச் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டது. நான் மேலே வந்ததும் என்னைச் சூழந்துகொண்ட போலீஸ்காரர்கள் கூட்டத்தின் நடுவே நீந்திக்கொண்டு அவர்களின் வாகனம் நோக்கி என்னை அழைத்துச்சென்றார்கள். வாகனத்தில் ஏறும்போதுதான் கவனித்தேன் ஒரு கையில் எனக்கு விலங்கிட்டு அந்த விலங்கின் இன்னொரு வளைத்துக்குள் தன் கையை மாட்டியிருந்தார் ஒரு போலீஸ்காரர். என் பாதுகாப்புக்காக இருக்கும் என்று நினைத்தேன். இப்போதைக்கு இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது. 

போலீஸ் வேன் கிளம்பியதும் அதை இருபுறமும் தட்டிக்கொண்டே அவர்கள் ஓடிவந்தார்கள். அவர்கள் கண்ணில் தெரிந்த கொலைவெறியைப் பார்க்கும்போது திருப்புளிக்காரன் கண்ணில் தெரிந்த கொலைவெறி போன்றே தெரிந்தது. அவன் மிகுந்த செல்வாக்குள்ள ஒருத்தரின் மகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் கைகளில் அரிவாள், சுத்தியல், கடப்பாரை, பட்டாக்கத்தி என்று விதவிதமான ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். நல்லவேளை துப்பாக்கி இல்லை. இருந்திருந்தால் போலீஸ்காரர்களை மீறியும் சுட்டிருப்பார்கள். எனக்கு என்னுடைய பெண்களின் முகமும் தூணில் தெரிந்த அவளின் முகமும் மாறிமாறி வந்தன. சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். முடிந்தால் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குக் கொஞ்ச நாள் போய் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

போலீஸ் வாகனம் ஒரு நீதிமன்றத்துக்கு வந்து நின்றது. காவல் நிலையத்தைவிட இது பாதுகாப்பானது. இங்கே எந்த அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் அரசுக்கே அவமானம் என்று இப்போது கூடுதல் ஆசுவாசம் ஏற்பட்டது. நேராக என்னை நீதிமன்றத்தின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். அங்கே குற்றவாளிக் கூண்டில் அவன் ரத்தக்கறை கொண்ட ஆடையுடன் நிற்பதைப் பார்த்து ஒரே சமயத்தில் அதிர்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டது. ஆனால், உடனே எப்படி நீதிமன்றத்துக்கு அழைத்துவருவார்கள் என்றும் என்னை வேறு ஏன் இங்கே அழைத்துவருகிறார்கள் என்றும் எனக்குச் சஞ்சலம் ஏற்பட்டது. அவன் என்னைப் பார்த்ததும் கட்டிப்போட்ட காளை கட்டை அறுத்துக்கொண்டு பாயத் துடிப்பதுபோல் திமிரினான். அவன் மூச்சு எனக்கு இங்கே வரை சுட்டது. நீதிபதியோ போலீஸ்காரர்களோ அவனை ஏதும் சொல்லவில்லை. என்னைக் கொண்டுவந்து சாட்சிக் கூண்டில் நிறுத்தினார்கள். ஏற்கெனவே விசாரணை நடந்துகொண்டிருக்கிறதுபோல. அகப்பட்டவன் மிகவும் கொடூரமானவன் என்பதால் நடந்ததை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பு வழங்கத் தீர்மானித்திருக்கிறார்கள் போல. சட்டப்படியும் வழக்கப்படியும் இது சரி இல்லை என்று தோன்றினாலும் இந்த நெருக்கடியிலிருந்து உடனடியாக விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டால் எனக்கு நிம்மதி. ஆனால் வெளியே இருக்கும் இவனது ஆட்களால் எனக்குச் சிறிதும் நிம்மதி ஏற்படாதே. சட்டம் எனக்கு எந்தப் பாதுகாப்பும் வழங்காதே. நான் என்ன சொன்னாலும் என்னைக் கொல்வது என்ற தீர்மானத்தில் இருப்பவனை நான் என்ன செய்ய முடியும். இப்படி மாட்டிக்கொண்டேனே என்று பரிதவித்துக்கொண்டிருந்தபோது நீதிபதி அவனிடம் கேட்டார், “இவன்தானா”. ”ஆமாம்” என்றான் அவன், என்னை வெறித்தபடியே. அவளும் நானும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டுவிட்டோம் என்பதை அந்தப் பார்வையின் மூலம் அவன் கிரகித்துக்கொண்டுவிடாமல் இருக்க என் பார்வையை நான் திருப்பிக்கொண்டாலும் அவனுடைய உக்கிரத்தின் சத்தம் இப்போது அதிகரித்ததை வைத்துக்கொண்டு அவன் கிரகித்துக்கொண்டுவிட்டான் என்று புரிந்துகொண்டேன். இப்போது நீதிபதி என்னைப் பார்த்துக் கேட்டார். “அவன் சொல்வது உண்மைதானா.” எனக்குப் புரியவில்லை. அவரை எப்படி விளிப்பது என்று தெரியவில்லை. சினிமாவில் நீதிமன்றங்களைப் பார்த்திருக்கிறேனேயொழிய உள்ளே வருவது இதுதான் முதன்முறை. ‘சார்’ ‘ஐயா’ ‘யுவர் ஆனர்’ என்று பலவற்றை மனதில் போட்டு உருட்டிப் பார்த்துவிட்டு ‘யுவர் ஆனர்’தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தேன். ஆனால், பேசும்போது “கனம் கோர்ட்டார் அவர்களே” என்று நான் ஆரம்பிக்கவும் நீதிமன்றமே கொல்லென்று சிரித்துவிட்டது, நீதிபதி உட்பட. நான் மேற்கொண்டு எந்த விளியும் சேர்க்காமல் “எனக்குப் புரியவில்லை என்ன நடக்கிறதென்று. எனக்கும் இதற்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இவன்தானா என்று கேட்கிறீர்கள். அவனும் ஆமாம் என்கிறான். என்னைப் பார்த்து அவன் சொல்வது உண்மைதானா என்று கேட்கிறீர்கள். எனக்கு நான் ஏதோ குற்றவாளிக் கூண்டில் நிற்பதுபோலவும் இந்த வழக்கு வெகுநாட்களாக நடந்துகொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது” என்றேன். நீதிபதி மிகவும் பொறுமையுடன் எடுத்துச் சொன்னார், “நீங்கள் இருப்பது குற்றவாளிக் கூண்டில் இல்லை. சாட்சிக் கூண்டில்தான். ஆனால் இந்த வழக்கு வெகுநாட்களாக நடக்கிறது. இன்றுதான் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஜனநாயக நாட்டில் நீதி விசாரணை சட்டம் ஒழுங்கு போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம் அல்லவா. ஆகவே கூறுங்கள். அவன் சொல்வது உண்மைதானே.” ”அவன் என்ன சொன்னான் என்பது எனக்குத் தெரியவில்லையே” என்று கேட்டேன். “அவன் செய்த கொலையை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னான்.” ஆகா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டானா. இதற்கப்புறம் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று “ஆமாம். இரட்டைக் கொலைகள். மிகவும் கொடூரமான கொலைகள். திருப்புளியை வைத்துக் கழுத்திலும் நெஞ்சிலும் மாறி மாறிக் குத்தினான். ஒருத்தனைக் குத்திவிட்டு இன்னொருத்தனைக் குத்துவதற்கு ஓடினான். இப்படியே மாறிமாறிக் குத்தினான். அவர்களின் துடிப்பு அடங்கிய பிறகு கொலைவெறியோடு எங்களை குறிப்பாக என்னை நோக்கி ஓடிவந்தான்” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். ஒன்று திருப்புளிக்காரன் முகத்தின் கொடூரமும் உக்கிரமும் தணிந்து சாந்தமாகிக்கொண்டேவந்தது. அந்த சாந்தத்திலேயே கண்களையும் மூடிக்கொண்டு திளைக்க ஆரம்பித்தான். இந்தப் பக்கம் நீதிபதியும் கண்களை மூடியிருந்தார். ஆனால் நான் கூறிய விஷயங்களின் காட்சி அவர் மனதில் ஓடியிருக்கும்போல, அந்தக் காட்சியின் குரூரம் அளித்த வேதனை அவர் முகத்தில் துலக்கமாகிக்கொண்டே வந்தது. திடீரென்று “போதும்” என்று கையை உயர்த்தினார்.

அப்போது வழக்கறிஞர்கள் இருக்கையில் இருந்து எழுந்த ஒருவர் “என் கட்சிக்காரரே ஒப்புக்கொண்டுவிட்டார். தங்களுக்குத் தெரியாத சட்டம் ஏதுமில்லை. தங்களுக்குத் தெரிந்த பிரிவின் கீழ் எந்த தண்டனை உசிதம் என்று தோன்றுகிறதோ அந்த் தண்டனையை வழங்கலாம்” என்றார். ஓ, திருப்புளிக்காரன் தரப்பு வழக்கறிஞர் போல. ஆனால், இவ்வளவு செல்வாக்கான ஒருத்தன் நியமிக்கும் ஒரு வழக்கறிஞர் தன் தரப்புக்குக் குறைந்தபட்ச தண்டனை கேட்காமல் ஏன் நீதிபதியிடமே அதனை ஒப்படைக்கிறார் என்று புரியவில்லை.

தீர்ப்பளிக்கும் நேரம் வருகிறது. என் எதிரே குற்றவாளிக் கூண்டில் இன்னும் சாந்தமான முகத்திலிருந்து விடுபடாமல் அவன். எழுந்திருந்த வழக்கறிஞர் எதையோ நீதிபதியிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போலவும் உட்காரத் தயாராவதுபோல் ஆனால் இன்னும் உட்காராததுபோலவும் நின்றுகொண்டிருக்கிறார். நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்கிறார். “குற்றவாளி தன் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி ஒப்புக்கொண்டார். சாட்சியாளரும் தான் பார்த்ததை முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்” என்று ஆரம்பித்து என் பெயரைச் சொல்லி எனக்கு ஓராண்டு தனிமைச் சிறையும் அதன் முடிவில் மரண தண்டனையும் விதிப்பதாகக் கூறினார். “யுவர் ஆனர் என்ன நடக்கிறது இங்கே? சாட்சிக்குத் தண்டனையா?” என்று அலறிவிட்டேன். ஆனால் அந்த அலறலை நீதிபதியும் சரி அங்கிருந்தவர்களும் பொருட்படுத்தவில்லை. மேலும் தொடர்ந்தேன், “இங்கே குற்றவாளித் தரப்பு இருக்கிறது, சாட்சித் தரப்பாக நான் இருக்கிறேன், பாதிக்கப்பட்ட தரப்பு எங்கே” என்று கேட்டேன். அப்போது என்னருகே வந்த அந்த வழக்கறிஞர் என்னிடம் மெதுவாக, “எங்கே இருக்கிறாய். இங்கு பாதிக்கப்பட்ட தரப்பு என்றெல்லாம் எதுவும் கிடையாது இரண்டே தரப்புகள்தான். குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, சாட்சித் தரப்பு. சாட்சித் தரப்புக்காகத்தான் நான் இவ்வளவு நாளாக என்னால் முடிந்தவரை வாதாடினேன். இன்றுகூட பார்த்திருப்பாய்” என்றார். என்ன இவர் எனது வழக்கறிஞரா. நானே இல்லாமல் இத்தனை நாள் வாதாடியிருக்கிறாரா. என்ன நடந்தது இந்த இடைப்பட்ட காலத்தில். வெகுநாட்களாகக் காணப்பட்டிராத பறவை ஒன்று இமயமலைப் பகுதியில் மறுபடியும் காணப்பட்டதாகத் தகவல் கிடைத்து இரண்டு மாதங்கள் அங்கே இருந்துவிட்டு வந்திருக்கிறேன். அதற்கு முன்பும் கூட முற்றிலும் பொது உலகிலிருந்து வெளிவந்துதான் விட்டிருந்தேன். நாட்டில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் பெரிதும் கவனிக்கவில்லை. இப்படித்தான் ஒரு முறை என் நண்பரிடம் என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் பெரும் சோகத்தைப் பற்றிப் புலம்பியபோது செய்தித்தாளை எடுத்துக் காட்டினார். பார் ஒருநாள் திடீரென்று ஒரு மாநிலத்தின் அந்தஸ்தையே நீக்கிவிட்டார்கள். இப்படித்தான் திடீரென்று ஒருநாள் நீ மனிதன் என்ற அந்தஸ்தையே நீக்கிவிடுவார்கள் என்ன செய்வாய் என்று சொன்னார். அது டிஸ்டோப்பியன் படங்களில் வருவதுபோல் மிகுகற்பனை என்றே எடுத்துக்கொண்டேன். எனக்கே அது நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. 

இப்போது நீதிபதியே மறுபடியும் பேச ஆரம்பித்தார். “நீங்களே பார்க்கிறீர்கள். எத்தனையோ படங்களில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். நீதிமன்றத்தில் யாரையும் இப்படியெல்லாம் பேச அனுமதிக்கும் வழக்கும் முந்தைய காலத்தில் இல்லை. ஆனால் நம் நாடு ஜனநாயக நாடு. தண்டனைக்குள்ளானவர் உரிமைகள் உணர்வுகள் எல்லாவற்றையும் நாம் மதிக்கிறோம். அதனால்தான் நீங்கள் பேச அனுமதிக்கப்பட்டீர்கள். ஆனால் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இது இறுதித் தீர்ப்பு நீதிமன்றம். இங்கு வாசிக்கப்படும் தீர்ப்பு இறுதியானது. ஆனால் உலகில் வேறு எங்கும் வரலாற்றில் வேறு எங்கும் இல்லாத வகையில் நம்மிடம் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. எவ்விதமான மரண தண்டனையை அனுபவிக்கப் போகிறேன் என்பதைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமை இங்கே தண்டனைக்குள்ளானவருக்கே வழங்ப்படுகிறது. ஏனெனில் நாம் ஜனநாயக நாடல்லவா” என்று நிறுத்தினார் நீதிபதி. இத்துடன் பலமுறை ஜனநாயகம் என்ற சொல்லை அவர் கூறிவிட்டார் என்பதையும் இந்த முறை நானோ யாரோ குறிப்பாக கவனிக்க வேண்டும் என்பதற்காக அவர் சொன்னது போலவும் எனக்குத் தோன்றியது.

ஒரு பெரிய புத்தகத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டுவந்து நீதிபதியின் முன் வைக்கிறார் டவாலி. நான் பார்த்த புத்தகங்களிலேயே பெரிய புத்தகம் அதுதான். எந்த வழக்கறிஞரிடமும் இருப்பதைவிட பத்து இருபது மடங்கு பெரிய புத்தகம். நீதிபதி அந்தப் புத்தகத்தின் மீது கையை வைத்துக் கண்ணை மூடித் தியானிக்க ஆரம்பிக்கிறார். அந்த நேரம் நீதிமன்றம் முழுவதையும் ஒரு நோட்டம் விடுகிறேன். அப்போது ஒரு வெளிநாட்டுக்காரர் ஒரு வழக்கறிஞருடன் தனது வழக்குக்காக உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர் முகம் எங்கேயே பார்த்த முகம் போல இருந்தது. அவர் முகத்தையே உற்றுப்பார்த்துவிட்டுக் கண்ணை மூடினேன். அது நான் படித்த நாவல் ஒன்றின் பின்னட்டையில் போய் ஒட்டிக்கொண்டது. காஃப்கா. அடக் கடவுளே. காஃப்கா இங்கே என்ன செய்கிறீர்கள். நீங்கள் இறந்து நூறு ஆண்டுகள் ஆகியும் நீங்கள் இன்னும் செல்லுபடி ஆவதன் நிரூபணத்தைக் காண்பதற்காகத் திமிருடன் இங்கே வந்திருக்கிறீர்களா. அல்லது உங்களுக்கும் தீர்ப்பு இன்று எழுதப்படுகிறதா. இந்த நினைவு என்னுடைய தற்போதைய நிலையிலும் ஒரு சுகமான உணர்வை எனக்குத் தர ஆரம்பிப்பதை உணர்கிறேன். காஃப்காவின் சக சிறைக் கைதி. சக மரண தண்டனைக் கைதியாகவும் ஆகலாம். ஏனெனில் என்னைவிட மோசமான சாட்சி காஃப்கா. இருபதாம் நூற்றாண்டுக்கு மட்டுமல்லாமல் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கும் சாட்சியாக இருப்பவர். அவருக்கெல்லாம் சாதாரணத் தண்டனை கிடைக்காது. காஃப்காவுக்கும் எனக்கும் மரண தண்டனை விதிக்கும் வரை அடுத்தடுத்த அறையிலோ முடிந்தால் ஒரே அறையிலோ எங்களை அடைக்க வேண்டும் என்று விரும்பினேன். வேண்டாம். ஒரே அறையில் என்றால் காஃப்காவை நானே கொன்றுவிடுவேன். இருபது ஆண்டுகளாக அவரது எழுத்துகளின்படிதான் எனக்குக் கனவுகள் வருகின்றன. எடுத்துக்காட்டாக ஒருநாள் என்ன குற்றம் செய்தான் என்று தெரியாமல் என் நண்பன் என் சொந்த ஊரில் கைது செய்யப்படுகிறான். அங்கே உள்ள தெப்பக்குளத்தின் நடுவில் நிற்கவைத்து அதில் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்படுகிறான். இப்படிப்பட்ட கனவுகளெல்லாம் இன்றைய தினத்துக்காக என்னைத் தயார் செய்வதற்கானவைதான் என்பது இப்போது புரிகிறது. மேலும் அதன் ஈடேற்ற தினத்தன்று காஃப்காவே சாட்சியாக வருவது பொருத்தமானது, காவிய முடிவு போன்றது என்று எனக்குத் தோன்றியது. இவ்வளவு நேரம் அவரை பார்த்த பிறகு இப்போதுதான் காஃப்கா என் பக்கம் திரும்பினார். சற்று நேரம் தீர்க்கமாகப் பார்த்தார். நான் பார்த்த பின்னட்டைப் படம் இதுவே. அதே நிறமுள்ள கோட்டுதான் அணிந்திருந்தார். சில நொடிகள் கழித்துப் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். எந்தப் பக்கம் என்று பார்த்தேன். நீதிதேவதை சிலையின் பக்கம் என்று தெரிந்தது. காஃப்காவுக்கு இது போன்ற படிமங்கள் மிகவும் பிடிக்கும். அவரது நாவலில் கூட இதுபோன்று வருமே. அது என்ன படிமம். இப்போது நினைவுக்கு வர மாட்டேன் என்கிறதே. கூடவே அந்த நாவலை வைத்திருந்திருக்கலாம்.

இப்போது நீதிபதி மறுபடியும் பேச ஆரம்பித்தார். “நான் உங்களுக்குத் தண்டனைகளின் பட்டியலை வாசிக்க ஆரம்பிக்கிறேன். அவற்றிலிருந்து உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்” என்று வாசிக்க ஆரம்பித்தார். வழக்கமான தூக்குத்தண்டனையில் ஆரம்பித்து சிரச்சேதம், மின்நாற்காலி, கில்லட்டின், வரும் ரயில் மீது தூக்கியெறிதல், யானை காலால் இடறப்படுதல் என்று வரிசையாக வாசிக்க ஆரம்பித்தார். என்ன இது மூவாயிரம் ஆண்டுகள் வரலாற்றின், வெவ்வேறு நாடுகளின், புராணங்களின், சட்டங்களின், சர்வாதிகாரங்களின், நீதிபதியின் பாணியில் சொன்னால் வெவ்வேறு ஜனநாயகங்களின், வெவ்வேறு கற்பனைகளின் தண்டனைகளையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறாரே. இதெல்லாம் எப்போது நம் நாட்டில் அமலாக ஆரம்பித்தது என்ற யோசனையில் காஃப்காவை மறுபடியும் பார்த்தேன் கல் மாதிரி உறைந்த பார்வையுடன் அந்தப் புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நீதிபதி வாசித்துக்கொண்டிருந்தார். அப்படியே வாசித்தால் சில நூற்றாண்டுகள் ஆகும் போல. அங்கு உள்ளவர்கள் அவ்வளவு பொறுமையுடன் ஒவ்வொன்றையும் கேட்டு உள்வாங்கிக்கொண்டே வந்தார்கள். நான் பெரும்பாலானவற்றைத் தவற விட்டுவிட்டேன். அப்போது எனக்கு ஒன்று தோன்றியது. இதெல்லாம் கனவோ கேலிக்கூத்தோ இல்லை. இனிமேல் தப்பிப்பதற்கு இடமே இல்லை என்றாகிவிட்டது. ஆகவே, உள்ளதிலேயே உசிதமான ஒரு தண்டனையை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று எனக்குத் தெரிந்த தண்டனையையெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். கில்லட்டின் என் முதல் தெரிவாக இருந்தது. பிரெஞ்சு புரட்சியின் சாகச நாயகர்களில் ஒருவர் போன்ற சாவு. அப்போதுதான் கி.ராஜநாராயணனின் நாவல் ஒன்று நினைவுக்கு வந்தது. பிள்ளைத்தாய்ச்சிப் பெண் ஒருத்தியைத் தண்ணீரில் வைத்து அழுத்திக் கொன்றதற்காக ஒரு திருடனை அந்தக் கிராமத்து மக்கள் கழுமரத்தில் ஏற்றிவிடுவார்கள். அவன் சில நாட்கள் உயிருடன் இருந்துவிட்டுச் சாவான். அவன் கழுமர உச்சியில் இருக்கும்போது அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில பெண்கள் ஆடியும் பாடியும் அவன் முன்னால் மகிழ்வித்துவிட்டுப் போவார்கள். கழுமரத்தைத் தேர்ந்தெடுத்தால் சாவதற்கு முன்பு என் பிள்ளைகளை ஓரிரு நாட்கள் கண்ணாரப் பார்த்துவிட்டுச் சாகலாம். முடிந்தால் கண்ணாடித் தூணில் தெரிந்த அவளையும் என்று தோன்றியது. வேறு யோசனையே வேண்டாம். கழுமரத்தையே தேர்ந்தெடுத்துவிடுவோம். 

“நான் கழுமரத்திலேயே சாக விரும்புகிறேன் யுவர் ஆனர். உங்கள் பட்டியலில் கழுமரம் இருக்கிறதா யுவர் ஆனர்” என்று கேட்டேன். 

“நிச்சயம் இருக்கிறது. மனிதர்கள் நிறைவேற்றிய, நிறைவேற்ற விரும்பிய அனைத்துத் தண்டனைகளும் இந்த நூலில் இருக்கின்றன. மேலும் கடவுளின் கற்பனைக்குட்பட்ட அனைத்துக் தண்டனைகளும் இந்த நூலில் இருக்கின்றன. கழுமரம் எப்படி இல்லாமல் போகும். இந்தத் தண்டனையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் பொதுவெளியில் வைத்து நீங்கள் கழுவேற்றப்படுவீர்கள்” என்றார் நீதிபதி. 

“சரி நான் கழுமரத்தையே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன். என் பெண் குழந்தைகள் அங்கே அழைத்துவரப்படுவார்களா” என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்டுக்கொண்டேன். 

“குடும்பத்தினர் முன்னிலையிலும் எல்லோர் முன்னிலையிலும்தான் நீங்கள் கழுவேற்றப்படுவீர்கள். கவலை வேண்டாம். இது ஜனநாயக நாடு” என்றார் நீதிபதி.

“சரி எனக்குச் சம்மதமே” என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டேன்.

“தீர்ப்பு எழுதப்பட்ட பிறகு வேறு தண்டனைகள் மாற்றப்படாது” என்று நீதிபதி சற்றே கண்டிப்பான குரலில் கூறினார். 

நான் என் சம்மதத்தை அவரிடம் தலையசைவில் வெளிப்படுத்தினேன்.

தீர்ப்பை எழுதிவிட்டு வாசித்தார். ஒரு ஆண்டு தனிமைச் சிறை. அதன் பிறகு பொதுவெளியில் சாகுவரை கழுவேற்றம்.

அவர் எழுந்திருக்கும் முன்பு எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.

“கனம் கோர்ட்டார் அவர்களே… இப்படி அழைக்கவும் மன்னிக்கவும். என்னை அறியாமல் வந்துவிட்டது. எனக்கு ஒரு சந்தேகம். கழுவேற்றப்படும்போது நான் எல்லாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவேனா”

நீதிபதி மீண்டும் அமர்ந்து அந்தப் புத்தகத்தின் பொருளடக்கத்தைப் புரட்டிப் பார்த்துக் கழுவேற்றம் இடம்பெற்றிருக்கும் பக்கத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார், “மன்னிக்கவும். தூக்குத் தண்டனைக்குச் செய்வதைப் போல கறுப்புத் துணியால் மூடப்பட்டுத்தான் கழுமரத்தில் ஏற்றப்படுவீர்கள். இதை நான் நீதிபதி என்ற முறையில் சொல்லக்கூடாதுதான். எனினும் தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். சிறையிலிருந்து கழுமரம் இருக்கும் இடத்துக்கு வாகனத்தில் உங்களை அழைத்துச் செல்வார்கள் இல்லையா. அப்போது போதுமான நேரம் இருக்கும். அந்த நேரத்தில் அந்தத் துணியை ஊடுருவி வெளியே எப்படிப் பார்ப்பது என்று பயிற்சி எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்.

என்ன காரியம் செய்துவிட்டேன். நான் வாழ்க்கையில் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளைப் போல, இன்று அந்த சர்வீஸ் சாலையில் செல்வது என்ற முடிவை எடுத்தது உட்பட, என் இறப்பு தொடர்பாகவும் மிகவும் தவறான முடிவை எடுத்துவிட்டேனே என்று சுயவெறுப்பு என்னைப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தது. சட்டென்று சாவதை விட்டு இப்படி நாள்கணக்கில் வலிதாங்காமல் துடிதுடித்து, பறவைகளால் கண்கள் கொத்தப்பட்டு, எலிகளால் கொறிக்கப்பட்டுச் சாக வேண்டுமா. என்ன முடிவை எடுத்திருக்கிறேன் என்று நான் துடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு போலீஸ்காரர்கள் என் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். வெளியேறும் நேரத்தில் “தேநீர்  இடைவேளைக்குப் பிறகான அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் வழக்கு ‘ஃபிரன்ஸ் காஃப்கா எதிர் 20ஆம் நூற்றாண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டு” என்று யாரோ வாசிப்பது என் காதில் விழுந்தது. என்னைவிட மோசமான தண்டனை காஃப்காவுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே போனேன். 


3. அர்த்தம் எதிர் அபத்தம்: ஒரு வழக்கு

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. இன்னும் சில நாட்களில் நான் இதற்குள் கிடந்தே செத்துப்போய்விடுவேன் என்பதுதான் அது. வருமானத்தை மீறியே விசாலமான, நிறைய ஜன்னல்கள் வைத்த, காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட வீடுகளில் வாடகைக்கு இருந்து பழக்கப்பட்டவன் நான். இங்கே இந்தத் தனிமைச் சிறையில் படுக்கலாம் நிற்கலாம். கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு சுவரில் சாய்ந்துகொண்டு இன்னொரு சுவரில் கால்களை ஒடுக்கியபடி உட்காரலாம். அவ்வளவுதான். மற்றபடி கைகளை விரித்துப்போட்டுப் படுக்க முடியாது. உயிர்வாழ்வதற்கான காற்றுக்காக இரண்டாள் உயரத்துக்கு மேலே துளியளவு கூட ஒளி வந்துவிடக் கூடாது என்ற ஏற்பாட்டில் சல்லடைத் துளைகள் வைத்திருந்தார்கள். அதாவது ஆறு பக்கமும் அடைத்திருந்தது, சில சல்லடைத் துளைகளைத் தவிர.

இங்கு வந்ததிலிருந்து சில நாட்கள் எனக்கு என்ன நடந்தது என்பதை திரும்பத் திரும்ப நினைவுகூர்வதிலேயே கழிந்தன. வாழ்க்கை முற்றிலும் இப்படி ஒரே நாளில் அர்த்தமிழந்தோ, அர்த்தம் என்பது திடீரென்று முழுக்க அபத்தமாகவோ கேலிக்கூத்தாகவோ ஆகிவிடுமா என்ன. இத்தனை நாள் எத்தனையோ துயரங்கள், தவறான முடிவுகள், வீழ்ச்சிகள் என்றாலும் இப்படி அபத்தமாக ஆகிவிடவில்லையே. 

இந்த சிந்தனை கழிவிரக்கத்தில் கொண்டுபோய்தான் விடும் என்று தெளிவாகப் புரிந்தது. அதே நேரத்தில் இந்த வாழ்க்கையின் பிரபஞ்சத்தின் இயல்பான அமைவு அபத்தம்தான் என்றும் சிலருக்கு அதாவது நேற்றுவரையிலான எனக்கு அது அர்த்தமாக அமைந்திருக்கிறது என்பதும் இந்த வகையில் இறுதி யோசனையாக இருந்தது. ஏனெனில் இந்தத் தனிமைச் சிறையை மிகவும் பாதுகாப்பாக உணரக் கூடிய, வானில் எப்போதும் குண்டுகளை எதிர்நோக்கக் கூடிய, நாடு விட்டுத் தப்பித்துச் செல்லும்போது படகில் மூழ்கிச் சாகும் சாத்தியமுள்ள குழந்தைளும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை அறிவேன். அவர்களுக்கு அர்த்தம், அர்த்தம் பற்றிய யோசனை போன்ற அதிர்ஷ்டங்களெல்லாம் வாய்க்கவில்லை. அந்த வகையில் நான் கழுமரத்தில் ஏற்றப்படும் வரை, ஏற்றி உயிர் போகும் வரை அதிர்ஷ்டசாலியே. அர்த்தம் அபத்தம் இரண்டையும் பற்றி இடைவிடாமல் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஏற்றப்பட்டிருக்கும் கழுமரத்தின் பெயர் அர்த்தமா அபத்தமா என்ற இரண்டு தரப்பின் சார்பாக உச்சியில் நானே வாதிடலாம். நானே தீர்ப்பு வழங்கலாம். நானே தண்டனை ஏற்கலாம்.

ஆரம்பத்தில் பசியே இல்லை. ஆனால் அவர்கள் ஏதோ ஒரு நேர முறைப்படி வைத்துச் செல்லும் சிறிதளவு உணவையும் சாப்பிடவில்லையென்றால் அந்த உணவைச் சாப்பிட்ட பிறகுதான் அடுத்த வேளை உணவை வைப்பார்கள். இதனால் உண்மையில் பசியெடுக்கும் வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்கெனவே வைத்துச் சாப்பிடாமல் கெட்டுப்போன உணவுதான் இருக்கும். வேறு வழியின்றி அதையும் நான் எடுத்துச் சாப்பிட்டுவிடுவதுண்டு. இது ஆரம்பத்தில் உடம்புக்குக் கொஞ்சம் ஒத்துக்கொள்ளாமல் போனாலும் போகப் போக இதுவும் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தது. அப்போதுதான் எனக்கு ஒரு உத்தி தோன்றியது. நாம் ஏன் கழுமரத்தில் ஏறுவதற்கு உடல்ரீதியிலும் மனரீதியிலும் பயிற்சி எடுத்துக்கொள்ளக் கூடாது?

இங்கே கழுமரத்துக்கு எங்கே போவது. எல்லாம் அடைத்த இரும்புக் கதவுகளாகவும் சுவர்களாகவும் இருக்கின்றன. ஒரு கம்பிகூட கிடையாது. சாப்பாடுகூட காகித டப்பாவில்தான் வரும். சரி முதலில் மனப்பயிற்சி எடுத்துக்கொள்வோம். அதன் பிறகு வழி கண்டுபிடிப்போம் என்று நினைத்தேன். எனக்கு அந்தத் தனிமைச் சிறை ஒருவகையில் வர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்கு ஏற்ற அமைப்பைக் கொண்டிருந்தது. முற்றிலும் இருண்ட அறை என்பதால் என் கண்களை மூட வேண்டிய அவசியம் இல்லாமலேயே கண்ணுக்கு முன்னால் மனக்கண்ணை உருவாக்க முயன்றேன். 

சில நாட்கள் முயன்ற பிறகே என்னால் ஒரு மைதானத்தை உருவாக்க முடிந்தது. கழுமரத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நான் கேள்விப்பட்டதை விட வலி கொடுக்கக் கூடிய கழுமரத்தை நான் உருவாக்கினேன். அதன் முனையை, என் அப்பா பாம்பு குத்துவதற்கு செய்து வைத்திருந்த சுளுக்கி முனையை மனதில் கொண்டு உருவாக்கினேன். அதாவது கூரிய முனைக்குக் கீழே தரையைப் பார்த்தபடி இன்னொரு சின்ன கூர்முனை இருக்கும். பாம்பும் நானும் மாட்டிக்கொண்டு திமிரினால் விடுபட முடியாது, வலி உயிர்போகும். இப்போது அருகிலும் சில கழுமரங்கள் கற்பனை செய்துகொண்டேன். என்னை இயேசு போல கற்பனை செய்துகொள்ளும் முயற்சியல்ல இது. எனக்குத் தனியாகக் கழுமரத்தில் ஏறுவதற்கு அச்சமாக இருந்தது, கற்பனையில் கூட. 

கழுமரங்களுக்கு முன்னால் தற்காலிக மேடை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவராய் அழைத்துச் செல்கிறார்கள். என்னுடைய பெயர் அகர வரிசைப்படி ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் முதலிலேயே வந்துவிடும் என்பதால் பள்ளிக் காலத்திலிருந்து கழுமரம் வரை எனக்குப் பிரச்சினை. ஆயினும் முதல் கற்பனை என்பதால் கொஞ்சம் மாற்றுகிறேன். வேறொருவரை ஆமாம் அது யார். திருப்புளிக்காரன். ஆனால் அவன் முகம் இறுதியில் சாந்தமாக இருந்ததே. வேண்டாம் நீதிபதி, சாட்சித்தரப்பு வழக்கறிஞர். எனக்கு யாரையும் ஏற்றுவதற்குத் தயக்கமாக இருந்தது. கடைசியாக ஒரு முடிவெடுத்தேன், தனியாகக் கழுமரம் ஏறுவதென்று. மற்றவற்றில் யாரும் ஏறவில்லை என்றாலும் ஒரு ஆறுதலுக்காக, துணைக்காக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என் முகத்தில் கறுப்புத் துணி போட்டு மூடியிருந்தாலும் இந்தக் கற்பனையை செய்துபார்ப்பது நான் என்பதால் என்னால் நான் கழுமரம் ஏறுவதை யாரோ பார்ப்பதுபோல் பார்க்க முடிந்தது. சுற்றிலும் பார்க்கிறேன். என் ராஜாத்திகள் இருவரும் நிற்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணில் தாரைதாரையாய் நீர் வடிகிறது. அப்புறம் அவர்களுக்குப் பின்னால் ஒரு கண்ணாடித் தூண் அந்தத் தூணில் அவள் முகம் தெரிகிறது, அதாவது கழுமரத்தில் ஏறும் எனக்கு அல்ல, கற்பனை செய்து பார்க்கும் எனக்கு.

இது சரியான முறையல்ல. கறுப்புத் துணிக்குள் சென்று கழுமரத்தில் உட்கார வைக்கப்படும் ஒருவனின் உணர்வுகளைத்தான் நான் இந்த வர்ச்சுவல் ரியாலிட்டிக்குள் கொண்டுவர வேண்டுமேயொழிய வேடிக்கை பார்க்கும் ஒருத்தனின் உணர்வுகளை அல்ல. இத்தனை நாள் உருவாக்கிய மைதானம் கழுமரங்கள் எல்லாம் வீண். ஆகவே வேறு மனப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். சுருக்கென்று என் குதத்தைத் துளைத்துக்கொண்டு குடலை இழுத்துக்கொண்டு மெதுமெதுவாய் பின்னங்கழுத்து நோக்கி முன்னேறுவதுபோல் திரும்பத் திரும்பக் கற்பனை செய்துகொண்டேன். கழுமரத்தையோ என் குதத்தையோ குடலையோ நான் பார்க்க முடியாது என்பதால் தாங்க முடியாத வலிக்கே அதுவும் குடைந்துகொண்டு பயணிப்பது போன்ற ஒரு வலிக்கே நான் உருவம் கொடுக்க முயன்றேன். உண்மையில் அந்த வலியைக் கற்பனை செய்ய முடியாமையே பெரிய வலியை மூளையில் ஏற்படுத்தியது, தலைகீழாகக் கழுமரத்தில் ஏற்றியதுபோல. 

வர்ச்சுவல் ரியாலிட்டியை விட நிஜத்தில் சிறிதளவாவது ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆகவே, என் கையை விட்டுப் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். முதலில் குதத்துக்குள் ஒரு விரலை மட்டும் மெல்ல நுழைத்து நுழைத்து எடுத்தேன். அது சுயஇன்பம் செய்துகொள்வது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு முன்பு பார்த்த ஒரு போர்ன் வீடியோ நினைவுக்கு வந்தது. ஒரு முழத்தைவிடப் பெரிதாக விறைத்திருக்கும் ஆண்குறியைக் கறுப்பின போர்ன் நடிகர் ஒருவர் நீட்டிக்கொண்டிருப்பார். வெள்ளையினப் பெண் அந்தக் குறியைத் தன் கையால் பிடித்து நீவி விட்டுக்கொண்டிருப்பார். “கடவுளே! நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய குறி இது” என்பாள். “இது உனக்கு உள்ளேயே வேண்டுமா” என்று குறிக்காரர் கேட்பார். “மிகுந்த வலியுடன், ஆமாம்” என்று சிலேடையுடன் ஆமோதிப்பாள். அதற்குப் பிறகு பார்க்க வேண்டுமானால் கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டும். அந்த வலியை அனுபவிக்கும் பெண்ணுக்கு அந்தப் பணம் போய்ச் சேருமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவு பெரிய குறி ஒன்று ஏமாற்று வேலையாக இருக்கும். இல்லையென்றால் அந்தக் குறி அந்தப் பெண்ணின் வாய்க்குள்ளோ குறிக்குள்ளோ குதத்துக்குள்ளோ செல்வதே கழுவேறுவது போல்தான் இருந்திருக்கும். உள்ளுக்குள்ளே கிழிவு, ரத்தப் போக்கெல்லாம் ஏற்பட்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். அர்த்தம் எதிர் அபத்தம் வழக்கில் நேற்று வரை எனக்கு எதிர்க் கூண்டில் நின்றுகொண்டிருந்தவர்கள்தான் அந்தப் பெண்கள். அந்த ஆண்களும் அப்படித்தான். அந்தக் கழுமரம் அவர்களுக்கு எவ்வளவு நாள் பணம் காய்க்கும் என்று சொல்ல முடியாது.   

முஷ்டியை மடக்கி என் கையைப் பார்த்தேன். வீடியோவில் பார்த்த குறியின் அளவுதான் இருந்தது. வேண்டாம். இரண்டு விரல்களில் ஆரம்பிப்போம் என்று சற்றே சிரமப்பட்டு இரண்டு விரல்களைத் திணித்துவிட்டேன். கடும் எரிச்சல் ஏற்பட்டது. இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சியை அதிகரித்துக்கொண்டே போனேன். ஒரு கட்டத்தில் கையை நுழைத்துவிட்டேன். இதயத்திலும் நுரையீரலிலும் போய் முட்டியதுபோல் மூச்சு அடைத்துக்கொண்டது. அப்புறம் தொடர்ந்த பயிற்சியின் மூலம் அதையும் இலகுவாக்கிக்கொண்டேன். ஆனால் இதனால் எனக்கு வேறு பிரச்சினை. வயிறு சரியில்லாத சமயங்களில் எனக்கு மலம் நிற்காமல் ஒழுக ஆரம்பித்தது. இதனால் ஏற்கெனவே நாற்றமடித்துக்கொண்டிருந்த தனிமைச் சிறை இன்னும் மோசமாக நாற்றமடிக்க ஆரம்பித்தது. அதனால் குதப்பயிற்சியைக் கைவிட்டதோடு அதைச் சுருக்கும் பயிற்சியையும் மேற்கொண்டேன். இந்த இடத்தில் நான் கொஞ்ச காலம் போய்க் கைவிட்ட யோகப் பயிற்சி எனக்குக் கைகொடுத்தது. புணர்ச்சியின்போது விந்து சற்று உடனடியாக வெளிவராமல் தடுப்பதற்காக எனக்குச் சொல்லப்பட்ட பயிற்சி அது. அதாவது முழு விரைப்பில் உள்ள குறியைப் பெண்குறிக்குள் செருகிய நிலையிலேயே நம் குதத்தைச் இருபது முறை சுருக்கி சுருக்கி விட வேண்டும். அனுபவபூர்வமாக அப்போது அந்தப் பயிற்சி பலன் கொடுத்தது. இப்போதும் அப்படித்தான். தொடர்ந்த பயிற்சியின் மூலம் தளர்வான குதத்தைச் சற்று இறுக்கமாக்கிக் குத ஒழுக்குப் பிரச்சினையை நிறுத்திவிட்டேன். சாவதென்று முடிவாகிவிட்டது. எப்படிப்பட்ட வலியாக இருந்தால் என்ன என்று ஒரு நிலைக்கு வந்துவிட்டேன்.

இப்போது என் முன்னுள்ள கேள்வி என் முகத்தின் மேல் போடப்படவிருக்கும் கறுப்புத் துணியை மீறி என் குழந்தைகளையும் முடிந்தால் கண்ணாடித்தூண்முகக்காரியையும் எப்படிப் பார்ப்பது என்பதுதான். துணி நெருக்கமாக நெய்யப்பட்டிருக்குமா இடைவெளியுடன் நெய்யப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. நீதிபதி கூறிய ஜனநாயக நாட்டில் எதுவும் இடைவெளியுடன் நெய்யப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆகவே, அதற்கென்ற விஷேசப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.  

இந்தத் தனிமைச் சிறைதான் அந்த விசேஷப் பயிற்சிகளுக்கான முதல் படி. எங்கிருந்தாவது இடம் வலம் மேல் கீழ் என்று மாறி மாறிப் பிரதிபலித்தும் சிதறியும் ஒரு துளியில் அணுவளவாவது ஒளி இந்தத் தனிமைச் சிறைக்குள் வந்திருக்கும் என்று நம்புகிறேன். அதைக் கண்டுபிடிக்க முயன்றால் அதன் உதவியுடன் இந்தத் தனிமைச் சிறையின் சுவர்களையும் தரையையும் கூரையையும் பார்க்க முயன்றால் கறுப்புத் துணியை என் கண்கள் ஊடுருவி விடும் என்று நம்பினேன். அதற்கான பயிற்சியை எடுக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே இருளுக்குப் பழகியிருந்தாலும் இனிமேல் இருளுக்குள்ளிருந்து ஒளியைத் தேடி எடுக்க வேண்டும் அவ்வளவுதான். 

தனிமைச் சிறையில் அடைக்கப்படும்போது டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் எனக்குக் காட்டப்பட்டிருந்த, உச்சியில் காற்றுக்காக விடப்பட்டிருந்த, ஒளி வந்துவிடாமல் தடுப்பதற்காகச் சுவருக்குள்ளே நெளிந்தும் வளைந்தும் வழியைக் கொண்ட அந்தச் சல்லடைத் துளைகள்தான் எனக்கான மீட்சி என்று நம்பினேன், திசையெல்லாம் மறந்துபோனதால் மேல் கீழ் என்பது மட்டும் நினைவில் இருப்பதால் சிறிதளவே எனினும் காற்று வரும் வழி என்பதால் ஒவ்வொரு திசையிலும் மேல்நோக்கி அனைத்துப் புலன்களையும் குவித்துவைத்துக் குவித்துவைத்துப் பார்க்க முயன்றேன். நான் முயற்சி செய்ய ஆரம்பித்த நேரம் இரவா பகலா என்று தெரியவில்லை. மாறி மாறி முயற்சி செய்து பார்த்தேன். ஒரு தடவை மேலிருந்து சிறிதளவு ஏதோ புது வகை வாசமோ நாற்றமோ வர ஆரம்பித்தது. அதே திசையில் பார்த்தபடி நின்றேன். கழுத்து வலிக்கும்போதெல்லாம் சற்று தாழ்த்திக்கொண்டு மறுபடியும் நிமிர்ந்து பார்ப்பேன். இப்படித்தான் அந்த இடத்தில் புள்ளிபுள்ளியாய் எனக்கு அந்தத் துளைகள் மிகவும் மங்கலாகத் தென்பட ஆரம்பித்தன. கவனத்தைப் பல நாட்கள் இடைவெளி விட்டு இடைவெளிவிட்டு நிலைநிறுத்தி இப்போது அந்தத் துளைகளையும் அவற்றைச் சுற்றியுள்ள பரப்பையும் தெளிவாகப் பார்த்துவிட்டேன். இப்படியே ஒவ்வொரு நாளாய் அந்த ஒளியைப் பிடித்து இழுத்தபடி தனிமைச் சிறை முழுவதற்கும் கொண்டுவந்துவிட்டேன். அப்போதுதான் கவனித்தேன் என்னைவிட பல மடங்கு திறமைசாலி ஒருவன் அந்தத் தனிமைச் சிறையில் இருந்திருக்கிறான். அவன் இந்தச் சிறையின் சுவரில் மிகவும் அழகான ஒரு பெண்ணை நிர்வாணமாக, சற்றுக் கால்களை விரித்து உட்கார்ந்திருப்பதுபோல் வரைந்துவைத்திருந்தான். முன்பு இருந்தது ஒரு பெண்ணாக இருந்தும் தன் உடலை இப்படி இந்த உலகுக்கு விட்டுச் செல்லவும் விரும்பியிருக்கலாம். அது இந்த உலகத்துக்கு அவள் உடலின் அறிக்கை. இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. என்னைப் போன்ற திறமைசாலிகள் வேண்டுமானால் கண்டுபிடித்துப் பயனடையட்டும் என்று சிறை நிர்வாகமே ஏற்கெனவே வரைந்துவைத்திருக்கலாம் என்றும் நினைத்துப் பார்த்தேன்.

இங்கேதான் நான் பெரும் தவறிழைத்துவிட்டேன். ஒரு வெற்றியை எட்டியதும் அதை விட்டுவிட்டு வேறொன்றுக்குச் செல்வது. ஒருசில நாட்கள் மட்டும் வெளிச்சமாக இருந்த அந்தச் சிறை, என் சுய இன்பத்துக்கு உதவிய அந்தப் பெண்ணின் ஓவியம் எல்லாம் இருள ஆரம்பித்துவிட்டன. நான் இப்போது வெற்றித் திமிரில் வேறொரு முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். கண்ணை மூடிக்கொண்டு வெளியே உள்ளவற்றைப் பார்ப்பது என்ற முயற்சிதான் அது. ஆனால் அறை முழுவதும் கூட்டிவந்த ஒளியைத் தொலைத்துவிட்டதால் அந்த முயற்சியும் வீண்தான் என்று புலப்பட்டபோது அதனையும் நிறுத்திக்கொண்டேன். 


3. கிரகோர் சாம்சா

ஒரு வகையில் இந்தத் தனிமைச் சிறைக்குள் நான் மேற்கொண்ட எந்த முயற்சியும் வீண் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் இவற்றையெல்லாம் நான் மேற்கொள்ளவில்லையெனில் மனப்பிறழ்வடைந்து தனிமைத் துயரிலும் விரக்தியிலும் எப்போதோ இறந்துபோயிருப்பேன். அந்த விதத்தில் நான் உடல் அளவிலும் சிந்தனை அளவிலும் சுறுசுறுப்பாகவும் விழிப்பாகவும் இருந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும், சொல்லப்போனால் இந்தச் சிறை வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கையில் என் புலன்களெல்லாம் தூசடைந்தும் மழுங்கிப்போயும் கிடந்திருக்கின்றன என்றும் இப்போதுதான் தூசிதட்டப்பட்டுக் கூர்மையடைந்திருக்கின்றன என்றும் எனக்குத் தோன்றியது. இந்தக் கூர்மையெல்லாம் சிறைவாழ்க்கைக்கு வெளியில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏதாவது பயன் இருந்திருக்கும். இப்போது என் வாழ்க்கைக்கு அல்லாமல் என் இறப்புக்கு அல்லவா பயன்படப்போகின்றன. 

இதன் பிறகு நான் அதிக முயற்சிகளில் ஈடுபடவில்லை. எவ்வளவு நாள் உள்ளே இருந்தோம் என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்களில் கழுவேற்றிவிடுவார்கள் என்பது மட்டும் தெரிந்தது. இடையிடையே என் குழந்தைகள் முகம் என் மனதில் வந்து என்னைத் தேம்ப வைத்தன. கண்ணாடித்தூண்முகக்காரி என் எல்லாச் செயல்களிலும் தூணுக்கு முன்னால் என்னைப் பார்த்துக்கொண்டே நின்றாள். தூண் எப்படி அவள் முகத்தின் பிரதிபலிப்பைத் தாங்கியது. அந்தக் கணம் அது விரிவு கொண்டு வெடிக்கவில்லையே. ஆனால் அந்தப் பிரதிபலிப்பு எங்கே போய்ச் சேர்கிறதோ அந்த இடம்தான் வெடிக்கும் போல.

அடுத்ததாக காஃப்காவின் நினைவும் அவ்வப்போது வரும். அவருக்குத் தீர்ப்பு அறிவித்திருப்பார்கள். இந்தச் சிறையில் ஏதோ ஒரு தனிமைச் சிறையில்தான் அவரை அடைத்திருப்பார்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்குச் சாட்சியாக இருந்ததால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தண்டனை அவருக்கு. நான் ஒரே ஒரு நாள் ஒரு சர்வீஸ் சாலையில் நடந்ததற்கு மட்டும்தான் சாட்சியாக இருந்தேன். சாட்சியாக இருத்தல் பெரும் தண்டனைக்குரியதாக ஆனதை அறியாமல் நான் இருந்திருக்கிறேன். ஒன்று நிகழும்போது அருகில் இருத்தல், தூரத்தில் இருத்தல், கண்டுகொள்ளுதல், கண்டுகொள்ளாமல் போய்விடுதல், மௌனமாக இருத்தல், பேசிவிடுதல் என்று எல்லாமே தண்டனைக்குட்படுத்தப்படுவதை அறியாமல் இருந்திருக்கிறேன். அதற்காக மனதளவில் காஃப்கா என்னைத் தயார்படுத்திக்கொண்டே வந்திருந்தாலும் அதை நான் சிறிதும் உணரவேயில்லை. சொல்லப்போனால் காஃப்கா தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கோ தண்டனையின் வலியிலிருந்து தப்பிப்பதற்கோ தயார்ப்படுத்தவில்லை. அப்படியென்றால் அவரே இப்போது தண்டனைக்குள்ளாகாமல் இருந்திருப்பாரே. தண்டனையின் அதிகாரத்தையும் அபத்தத்தையும் தன் உடலாலும் வலியாலும் கேள்விக்கு உட்படுத்துதல். அதுதான் காஃப்கா செய்தது. காஃப்கா உட்படுத்திய கேள்வி வெளியில் இருந்தது. அதைச் சமூகம் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அந்தக் கேள்வியுடனான தொடர்பு இப்போது முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆறு பக்க அடைப்புக்குள் இருந்துகொண்டு எந்த அதிகாரத்தின் மையத்தையும் அபத்தத்தையும் நான் கேள்வி கேட்பது. வெளிச் சமூகத்தின் ஒரு பங்காய் நான் இருந்தபோது என்னையறியாமல் என்னுள் படிந்துவிட்ட சிறிதளவு அதிகாரத்தையும் அதன் அபத்தத்தையும்தான் இப்போது என் உடலாலும் வலியாலும் கேள்விக்குட்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன் போல. இடமே போதாமல் உடலே போதாமல் ஒரு கரப்பான் பூச்சியாக புரண்டுகொண்டிருக்கிறேன். ஆம் கிரகோர் சாம்சா ஆகிவிட்டேன்.

தன் அறைக்குள்ளே பிரம்மாண்டமான கரப்பான் பூச்சி ஆனவன் கிரகோர் சாம்சா. பெரும் பரிசோதனையின் மூலம் அவன் ஆனானா. இல்லை அந்த அறையும் குடும்பவும் வெளியில் உள்ள எல்லோரும் உள்ளே தள்ளி அவனைக் கரப்பான் பூச்சி ஆக்கினார்களா. ஆனால் வெளியில் நின்றிருந்த அவன் அம்மா அழுதுகொண்டுதானே இருந்தார். எது எப்படியோ பரிசோதனையின் முடிவில் கிரகோர சாம்சா தன் அறைக்குள்ளே இறந்துகிடந்தான். எப்போதும் இப்படித்தான். முதன்முறையாக ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படும்போது வெற்றி மட்டுமே உறுதிப்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் தோல்விதான் இருக்கும். வெகு அரிதாகத்தான் வெற்றி. சில சமயம் வெற்றியும் தோல்வியும் கலந்து இருக்கும். எனக்கென்னவோ கிரகோர் சாம்சா தோல்வியும் வெற்றியும் ஆன ஒரு கலவை என்றே தோன்றுகிறது. ஒரு மனிதன் கரப்பான் பூச்சி ஆன விதத்தில் இயற்கையின் வழிமுறைகளில் அது மாபெரும் விந்தை, பரிணாமப் பரிசோதனைகளில் முன்னுதாரணமில்லாத வெற்றி. ஆனால், அந்தக் கரப்பான் பூச்சியால் வாழ முடியாமல் போனது அந்தப் பரிசோதனையின் தோல்வி. ஆக, கரப்பான் பூச்சி ஆக்குவது எப்படி என்று காஃப்கா கண்டுபிடித்துத் தந்த சூத்திரத்தை இப்போது எல்லா நாடுகளிலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் போல. அதற்காகத்தான் இந்தத் தனிமைச் சிறை. நல்ல சூத்திரத்தைக் கண்டுபிடித்துத் தந்தீர்கள் போங்கள் காஃப்கா. அதற்காக உங்களையும் கழுவேற்றினால் நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். ஆனால் அவரை நினைத்துப் பாவமாகவும் இருந்தது. உண்மையில் கரப்பான் பூச்சியாக ஆக்குவதற்கான சூத்திரத்தை அவர் கண்டுபிடிக்கவில்லை. எல்லோரும் கரப்பான் பூச்சியாக, அதுவும் அறைக்குள் அடைபட்டிருக்கும் கரப்பான் பூச்சியாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைத்தான் கண்டுபிடித்தார். அதற்காகத்தான் இப்போது நூறு ஆண்டுகளாக அனைத்து நாடுகளின் அனைத்துக் காலங்களின் அனைத்துக் கற்பனைகளின் அனைத்துத் தண்டனைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார் போல. இப்போது சக உணர்வும் சொல்லப்போனால் ஒரு ஆன்மா இந்த அளவுக்கு அடித்துத் துவைத்துப் பிய்த்தெறியப்படும்போது நம் கழுவேற்றமெல்லாம் சாதாரணம்தான் என்ற உணர்வும் ஏற்பட்டது. 


5. உலகின் மிகப் பெரிய இருள்

என் பயிற்சிகளையெல்லாம் விட்ட பிறகு மீண்டும் இருளுக்குள் மூழ்கினேன். அதனால் என் அனைத்து உறுப்புகளுக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது. வலியும் இன்ன பிற உணர்வுகளும் ஏற்படத்தான் செய்தன. ஆனால் அவையெல்லாம் எங்கோ ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு இங்கு வருவதைப் போலத் தெரிந்தது. என் உடல் முதலில் இந்தத் தனிமைச் சிறை அளவு விரிந்தது. பிறகு இருளின் எல்லையளவுக்கு விரிந்தது, அதன் பின் தனிமைச் சிறையின் சுவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஒரு வகையில் என் உடலும் பொருட்டே இல்லாமல் போனது. வெறும் உணர்வுகளின் எண்ணங்களின் தொகுப்பாக இருந்தேன். இது எனக்கு மிகப் பெரிய ஆனந்தத்தைக் கொடுத்தது. இனிமேல் எனக்கொன்றும் கவலை இல்லை. என் கழுவேற்ற நாளில் உலகின் மிகப் பெரிய இருளைத் தூக்கிக்கொண்டு போய் கழுமுனையில் உட்காரவைப்பார்கள். 


6. நூறு மரங்கள்

இதற்குப் பிறகு இந்தக் கதை தன்மையிலிருந்து படர்க்கைக்கு மாறுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தனிமைச் சிறை அவனது ‘நான்’ என்ற உணர்வை முற்றிலுமாக அழித்தொழித்துவிடுகிறது. அதனால் ‘நான்’ என்ற கோணத்திலிருந்து அவனால் இனி கதையைச் சொல்ல முடியாது. அவன் நண்பன் கூறியதுபோல நான் அந்தஸ்து நீக்கப்பட்டவன் அவன்.

ஒருநாள் சிறையதிகாரிகள் வந்து கதவைத் திறந்தார்கள். வழக்கமாக உணவு வழங்குவதற்காகத் திறக்கப்படுகிறது என்று அவன் நினைத்தான். 

“உனக்கு இன்று கழுவேற்றம்” என்று சொல்லி சின்ன டார்ச்சால் அவன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தார்கள். சிறு ஒளி வந்ததும் அவன் தாங்க முடியாமல் துடித்தான். அவனைப் பார்த்துவிட்டதால் டார்ச் ஒளியை அணைத்துவிட்டு அவனைப் பிடித்தார்கள்.

“பசிக்கிறது” என்றான்.

“மன்னிக்கவும். கழுவேற்றத்துக்கு முன்பு உணவு தரப்படுவதில்லை. ஒருவரைச் சாப்பிடவைத்துவிட்டுக் கொல்வது ஜனநாயகத்துக்கு அழகில்லை” என்றார் ஒரு அதிகாரி.

அவர்கள் ஒரு கறுப்புத் துணியை எடுத்து அவன் முகத்தில் மூடி அழைத்துச் சென்றார்கள். அவன் எந்த விதத்திலும் முரண்டு பிடிக்கவில்லை. ஆனால், தனிமைச் சிறைப் பிரிவைக் கடந்து பொதுச் சிறைப் பிரிவுக்குள் வரும்போது அந்தக் காற்றும் அங்கிருக்கும் ஒளியும் அவன் தோல்மீது பட்டு கடும் எரிச்சலைத் தர ஆரம்பித்தன. அந்த எரிச்சல் தாங்காமல் நெளிந்துகொண்டே நடக்க ஆரம்பித்தான். போலீஸ்காரர்கள் அவனை நேராகப் பிடித்தபடி நடந்தார்கள். போலீஸ் வாகனத்தில் ஏற்றி வாகனத்தைக் கிளப்பிய பிறகு சற்றே குறைந்ததுபோல் அவனுக்கு இருந்தது. சிறை அழித்த உடல் என்ற உணர்வும் நான் உணர்வும் வெளியிலுள்ள காற்றும் ஒளியும் மேலதிகமாகப் பட்டுக்கொண்டிருந்தால் அவனுக்கு மறுபடியும் வந்துவிடும்தான் போல.

அந்த வாகனத்தில் அவனைப் போலவே கடும் எரிச்சலுடன் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவன் வெளியில் வந்த உடனேயே இறந்துபோய்விட்டான். ஆனாலும் சட்டப்படி கழுவேற்ற வேண்டும் என்பதற்காக வாகனத்தின் ஒரு மூலையில் அவனை வைத்துப் பிடித்தபடி இருந்தார்கள். 

அரை மணி நேரத்தில் அந்த மைதானம் இருக்கும் இடத்துக்கு அந்த வாகனம் வந்து சேர்ந்தது. ஆனால் இந்த நேரக் கணக்கு அவர்களுக்குத் தெரியவில்லை. அதனை எப்போதோ தொலைத்துவிட்டார்கள். கழுவேற்றிய பின் வலி மட்டுமே அவர்களின் நேரம்,

அந்த மைதானம் மேலிருந்து பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருந்தது. நூறு கழுமரங்கள். உண்மையில் அவை கழுமரங்கள் அல்ல. கழுமரங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வரிசையாக வளர்க்கப்பட்ட மரங்கள். கழுமரமாக அவற்றைப் பயன்படுத்தலாம் என்ற பக்குவம் வந்ததும், உரிய பருவத்தைத் தாண்டினால் மரங்கள் கழுமரத்துக்குரிய வடிவத்தை மீறிவிடும் என்று தோன்றியதும் தண்டனை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில் கழுமரங்கள் ஒரே சீராக வெட்டப்படும்.  

நூறு கழுமரங்களுக்கும் முன்பு கழுவர்கள் ஏறுவதற்கும் அவர்களை கழுமுனையில் பொருத்தும் கழுப் பணியாளர்கள் ஏறுவதற்கும் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தண்டை விதிக்கப்பட்டவர்கள் அங்கு கொண்டுவரப்பட்டதும் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரின் மூச்சு பேரலையாக எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருந்தது. வாய்விட்டு ஏதும் கத்தினால் தண்டனை கிடைக்கும் என்பதால் மூச்சு அளவோடு அவர்கள் நின்றுவிட்டார்கள். கணிசமானோர் தண்டனை வழங்கப்படவிருப்பவர்களின் குடும்பத்தினர் என்றால் பெரும்பாலானோர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இவர்கள் அரசின் எந்தச் சட்டதிட்டத்தையும் மீறாதவர்கள் என்பதால் இவர்கள் அரசின் விருப்பத்துக்கு உரியவர்கள்.

இதற்கு முன் தன்னுடைய பிள்ளைகள் வர வேண்டும் என்று விரும்பிய அவன் இப்போது அவர்கள் வந்திருக்கக் கூடாது என்று ஆழமாக விரும்பினான். ஏனெனில் இப்போது அவன் நிர்வாணப்படுத்தப்பட்டான். எல்லோரும்தான். கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழக்கும் அந்தக் காட்சிதான் அவர்களின் இறுதிக் காலம் வரை அவர்கள் கண்ணிலும் நினைவிலும் கனவிலும் நிற்கும். அது கூடாது என்று நினைத்தான். 

எல்லோருக்கும் இங்கே ஒரு சந்தேகம் வரும்தான். ஒன்றை விரும்புவதற்கோ ஒரு உணர்வு ஏற்படுவதற்கோ அவனுக்கு உரிய உரிமை இன்னும் இருக்கிறதா. இருக்கிறதுதான். ஆனால் நான் என்ற நிலையிலிருந்து இந்தக் கதையைச் சொல்லவும் நான் என்ற நிலையிலிருந்து இந்த நூற்றாண்டை நடத்திச் செல்லவும் நான் என்ற நிலையிலிருந்து தன் உணர்வுகளின் உடைமையாளனாகவும் நான் என்ற நிலையிலிருந்து எதற்கும் சாட்சியாக இருக்கவும்தான் அவனுக்கும் அவனது சக கழுவர்களுக்கும் உரிமை இல்லை.  

எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு, விதிமுறைகள் பரிசோதிக்கப்பட்டு சமிக்ஞை எழுப்பப்பட்டதும் கழுமரத்தின் முன்னுள்ள மேடையில் நூறு பேரும் ஏற்றப்பட்டார்கள். சரியாகக்  கழுமுனைக்கு முன்னுள்ள உச்சிப் படியில் நிற்கவைக்கப்பட்டிருந்தார்கள். அடுத்த சமிக்ஞையில் அப்படியே நூறு பேரும் அழுத்தப்பட்டார்கள். அழுத்தப்பட்டபோது நூறு முரசுகள் ஒரே சமயத்தில் வாசித்ததுபோல் ஒரு ஒலி வெடித்து அது மைதானத்தில் இருந்தவர்கள் அனைவர் மீதும் அனைவரின் செவிகளுக்குள்ளும் மோதிச் சிதறி மைதானத்தின் பிரம்மாண்டமான வட்டமான சுற்றுச்சுவரில் மோதி எதிரொலித்துப் பெருகித் திரும்பி வந்த கால இடைவெளிக்கு இடையே நூறு பேரின் வலியும் மூழ்கிப்போய்விட்டது. ஒருவரும் உயிரிழக்கவில்லை. ஒருவரும் முனகவும் இல்லை. ஆனால் இதற்கிடையே கழுவேற்றிய சமயத்தில் திட்டப்படி தானியங்கிக் கழுமேடை பின்னகர்ந்ததால். ஏராளமான கழுப் பணியாளர்கள் கீழே விழுந்துவிட்டார்கள். கழுவர்கள் கழுமரத்தில் பொருத்தப்பட்ட பின் ஆதரவுக்காக மேடையில் காலை ஊன்றிவிடக் கூடாது என்பதற்காக அப்படி மேடை நகர்வதுபோல் ஒரு ஏற்பாடு. 

நூறு கழுவர்களும் பெருமூச்சு விடக்கூட தெம்பில்லாமல் தீனமாகத்தான் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் பெருமூச்சுதான் அலையலையாக வீசிக்கொண்டிருந்தது அது அடங்கும் நேரம்தான் “அப்பா” என்ற குரல் எங்கிருந்தோ வீறிட்டது. அது தன் சின்ன மகள் குரல் என்று சட்டென்று விழித்துக்கொண்டு அத்திசையில் தலையைத் திருப்பினான். அடுத்தது பெரியவளின் குரலும். ஒரு கணம் அவனுக்கு ஆசுவாசம் ஏற்பட்டாலும் ஐயோ வந்துவிட்டார்களே வந்துவிட்டார்களே என்று மனதுக்குள் அரற்ற ஆரம்பித்தான். 

அப்படி அரற்றிக்கொண்டிருப்பவனின் காதில் இந்த உலகம் ஒன்றும் அவ்வளவு ஈவிரக்கமற்றது கிடையாது. உனக்குப் பக்கத்தில் கழுவேற்றப்பட்டிருப்பது யார் தெரியுமா. காஃப்கா. என்று சொன்னால் எவ்வளவு மகிழ்ச்சியுடன் அவன் சாவான். ஆனால் அவன் காதில் இதை யாரும் சொல்லப்போவதில்லை. 

ஆனால் தன் மகள்களின் குரல்களுக்குள்ளேயே அவனது நழுவும் பிரக்ஞை உலவிக்கொண்டிருந்தபோது அவன் காதுக்கருகே ஒரு குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

“நீ அன்று அந்தத் தூணில் என் முகத்தைப் பார்த்திருக்கவே கூடாது. ஆனால் உன் முகத்தைத் தவிர பார்க்க வேண்டிய ஒன்றை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நான் பார்த்ததே இல்லை” என்று அந்தக் குரல் சொன்னது. அவனுக்கு அதற்குப் பிறகு பிரக்ஞை நழுவிட்டது. ஒன்றிரண்டு நாட்களில் அவன் முற்றிலுமாக இறந்துபோய்விட்டான்.


7. உயரத்தில் ஒரு கழுவன் 

அவனுடைய பெண் பிள்ளைகள் தினமும் தன் அப்பாவைப் பார்க்க வந்தார்கள். அப்பா செத்துப்போயும் தொடர்ந்து வந்தார்கள். அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பித்தது. ஒரு கண்ணைப் பருந்தொன்று கொத்திச் சென்றதைக் கண்டு அந்தப் பிள்ளைகள் அழுதார்கள். அப்படியும் அவர்கள் தினமும் அங்கே வருவதை நிறுத்தவில்லை. இந்தப் பிள்ளைகளுக்காக உலகையே பார்க்காமல் இருந்தவன் என்பதை அறியும் வயது அவர்களுக்கு இல்லையென்றாலும் அப்பா மீது அளவற்ற பிரியம் அவர்களுக்கு.

அப்படி வந்துகொண்டிருந்த நாட்களில்தான் சின்னப் பெண் தன் அக்காளிடம் ஒரு விஷயத்தைக் காட்டினாள். ஒன்றல்ல இரண்டு விஷயங்கள். அப்பாவுக்கு அருகில் இருந்த கழுமரம் மற்ற எல்லாக் கழுமரங்களை விடவும் அதிகமாக இருந்தது. இன்னொரு விஷயம் அதன் உச்சியில் இருந்த வெள்ளைக்காரர் கண்கள் விழித்தபடி இத்தனை நாட்களுக்குப் பிறகும் உயிரோடு இருந்தார். கழுத்தை சிறிதளவு இடது பக்கம் திருப்பிய நிலையில் மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அவரது பார்வை நிலைகுத்தியிருந்ததை அந்தப் பெண்கள் கண்டார்கள். ஒருவேளை கண்கள் திறந்தபடியே அவர் உயிரிழந்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு வந்தது. ஆனால் அத்தனை உடல்களும் சிதைந்துபோயிருந்த நிலையில் சிறிதுகூட சிதைவடையாத உடல் அவருடையதுதான். மேலும் உற்றுப்பார்த்தால் சீரான இடைவெளியில் அவரது கண் சிமிட்டிக்கொண்டிருப்பதும் தெரிந்தது. ஆனால் இவ்வளவு பெரிய மைதானத்தில் இரண்டு சிறுமிகள் மட்டும் வந்து நிற்கிறார்கள். அவரது முகம் இந்தப் பக்கம் திரும்பவில்லை என்பது அந்தச் சிறுமிகளுக்குப் புதிராக இருந்தது.

அவர் பார்வை எங்கே படுகிறதே அந்த இடத்துக்குப் போய் நின்றார்கள். அப்போது அவர் முகத்திலோ பார்வையிலோ எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்தப் பார்வை தங்களுக்கு உள்ளே ஆழமாகப் போக ஆரம்பிப்பதை அந்தச் சிறுமிகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். ராட்சச ராட்டினத்தில்  சட்டென்று மேலிருந்து கீழே வரும்போது ஏற்படும் கூச்சம் ஏற்பட்டதாகப் பின்னாளில், தங்கள் உணர்வுகளைச் சரியாகச் சொல்லத் தெரிந்த வயதில் அந்தச் சிறுமிகள் சொல்லிக்கொண்டனர். 

தினமும் வந்து பார்க்கும்போதெல்லாம் அவரின் பார்வை வெவ்வேறு புள்ளியில் இருக்கும். இவர்களும் அந்தப் புள்ளிக்குப் போய் நின்றுகொண்டிருப்பார்கள். கழுமரத்தின் உயரமும் அதிகரித்துக்கொண்டே இருந்ததை மற்ற கழுமரங்களைப் பார்த்து அவர்கள் உணர்ந்தார்கள்.

பின்னாளில் அவர்கள் தங்கள் வீட்டு அப்பாவின் புத்தக அடுக்குகளின் புத்தகங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இருந்தால் அப்பாவுக்கு அருகே கழுவேற்றப்பட்டிருப்பவரின் பெயரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடும். காஃப்காவின் புத்தகங்களை அப்பா படித்தபோதெல்லாம் இந்தக் குழந்தைகளின் கவனம் பின்னட்டைப் படத்தின் மீது சென்றதில்லை. எனினும் இப்போது காஃப்காவைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததில் அவர்கள் அப்பாவை மறந்துவிட்டார்கள். ஒருநாள் அப்பாவின் நினைவு வந்து அந்தக் கழுமரத்தைப் பார்த்தபோது அப்பாவின் ஒரு துளிகூட மிஞ்சியிருக்கவில்லை. எலும்பைக்கூட விரும்பி உண்ணும் உயிரினங்கள் இருக்கும் என்று தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் கழுமரத்தை ஏன் எந்த உயிரினமும் உண்பதில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது. அதற்குப் பிறகு காஃப்காவைப் பார்ப்பதற்கும் கழுமரம் எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கும் கூட அந்தப் பெண்கள் வந்து பார்க்கவே இல்லை.  

            -ஆசை

சமீபத்திய சிறுகதைகள்:

1. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

2. கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்?

3. கண்ணதாசனைத் தேடிய மறதி

4. பச்சையின் ஆயிரம் வண்ணங்கள்

5. மாம்பழத்தின் சுவை



No comments:

Post a Comment