Sunday, June 28, 2020

உலகை அன்புமயமாக்கும் கலை- தி.ஜா. நூற்றாண்டு


ஆசை

நவீனத் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத்துக்கு நிகரான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது சிறுகதையில்தான் என்ற கருத்து இங்கே வெகு காலமாக நிலவுகிறது. அது உண்மைதான் என்பதை புதுமைப்பித்தன், மௌனி, குபரா தொடங்கி நீளும் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் நிரூபிக்கிறது. இவர்களில் தி.ஜானகிராமனின் பங்களிப்பும் மிக முக்கியமானது. நெகிழ்ச்சியும் காதலும்  மீறல்களும் நிரம்பிய தனது நாவல்களாலே அதிகம் வெகுஜன வாசகர்களிடையே அறியப்படும் தி.ஜானகிராமனின் சிறுகதைகளையே அவரது முதன்மையான சாதனையாக தமிழிலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவதுண்டு. 

ஒரு எழுத்தாளருக்கு நாவல்தான் பரந்த களத்தை அமைத்துக்கொடுக்கும். சிறுகதையில் அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், தி.ஜானகிராமன் விஷயத்தில் இது நேரெதிர் என்று தோன்றுகிறது. அவர் தனது நாவல்களில் எழுதிய விஷயங்களை காதல், மரபை மீறிய பாலுணர்வு, இசை என்று ஒரு சில வகைமைகளுக்குள் அடக்கிவிடலாம. அவையும் கூட ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாகவே இருக்கும். ஆனால், சிறுகதைகளில்தான் அவர் விரிவான பொருள்களைப் பேசியிருக்கிறார். மேற்கண்ட மூன்று கருப்பொருள்களுடன் அன்பு, நம்பிக்கை துரோகம், வன்மம், அறம், கருணை, (இரக்கத்திலிருந்து மாறுபட்ட) பரிவு, வீம்பு, அந்தஸ்தின் போலித்தன்மை, மரணம், குற்றவுணர்வு, நகைச்சுவை என்று பல்வேறு கருப்பொருள்களும் உணர்வுகளும் அவரது சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அவருடைய சமகால (பிராமண) எழுத்தாளர்கள் அநேகமாகத் தொடாத சாதி என்ற கருப்பொருளும்கூட ஒரு கதையில் (இசைப்பயிற்சி) இடம்பெற்றிருக்கிறது. 

சிற்சில கதைகளில் கூறல் முறையில் தி.ஜா. பரிசோதனை முயற்சிகள் செய்திருந்தாலும் அவர் ஒரு மரபான கதைசொல்லியே. ‘நாடகத்தின் முதல் அங்கத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் நாடகம் நிறைவுக்கு வருவதற்கு முன்பு அது வெடித்தாக வேண்டும்’ என்ற ஆண்டன் செகாவின் இலக்கணத்தையே தி.ஜா. பெரிதும் தனது சிறுகதைகளில் பின்பற்றியிருக்கிறார். ஒரு துரோகம், வஞ்சம், ஏமாற்று வேலை, குற்றம், கொடுமை அவரது கதை பேசும் என்றால் அந்தக் கதை முடிவதற்குள் அதற்கான பரிகாரம் கிடைத்துவிடும். அது பழிவாங்குதல், தண்டனை போன்றவற்றின் மூலம் ஈடுகட்டாமல் பெரிதும் மன்னிப்பு, குற்றவுணர்வு போன்றவற்றின் மூலம் ஈடுகட்டப்படுவதுதான் தி.ஜா. கதைகளின் சிறப்பு. இதற்கு கடன் தீர்ந்தது, கங்கா ஸ்நானம், கண்டாமணி போன்ற கதைகள் சிறந்த உதாரணம். ‘பாயசம்’ கதையில் கூட சாமநாது தன் வஞ்சத்தைக் கதையின் இறுதியில் வெளிப்படுத்தினாலும் உடனேயே அவருக்குக் குற்றவுணர்வு ஏற்படுத்தும் முள் ஒன்றும் அவர் மனதில் செருகப்படுகிறது. இது போன்ற மனித மனத்தின் அடிப்படை உணர்வுகள் நிகழ்த்தும் விளையாட்டைத் தன்னுடைய நெகிழ்வான, மொழியழகு மிக்க நடையால் கதை என்ற பெயரில் தி.ஜா. செதுக்கித் தருபவைதான் அவரது சிறுகதைகள்.

தி.ஜா.வின் கதைகளைப் படித்து முடிக்கும்போது கிட்டத்தட்ட வெறுக்கத் தக்கவர்கள் என்று யாருமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். ஒருவர் மோசமானவராகக் காட்டப்படுகிறார் என்றால் அவரது நெஞ்சில் ஒரு துளி அன்பைச் சேர்த்து அவரை நெகிழ்த்திவிடுகிறார் தி.ஜா. அவரது புகழ்பெற்ற ‘பரதேசி வந்தான்’ கதையில் வரும் வக்கீல் இப்படிப்பட்டவர்தான். எப்பேர்ப்பட்ட படுபாதகக் கொலை வழக்கையும் தன் வாதத் திறமையால் வெல்லக்கூடிய வக்கீல் அவர். பெரிய சங்கீத ரஸிகரும் கூட. எந்த அபஸ்வரத்தையும் சங்கீதத்திலும் வாழ்க்கையிலும் பொறுக்க முடியாதவர். அவருடைய ஒரே பிள்ளையின் கல்யாணத்தின் விருந்தின்போது வீட்டுக் கூடத்தில் முக்கியஸ்தர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடும் பந்தியில் ஒரு பிச்சைக்காரரை அவர் பார்த்துவிடுகிறார். அவரைத் தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளிவிடுகிறார் வக்கீல். அடுத்த மாதம் அதே நாள் இங்கே வந்து சாப்பிடுவதாக சாபமிட்டுச் செல்கிறார் அந்தப் பிச்சைக்காரர். அதே நாள் மாலையில் கொல்லைக்குப் போய்விட்டுத் திரும்பிய மணமகன் மயக்கம் போட்டுவிழுகிறான். என்ன செய்தும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. பிச்சைக்காரர் தான் சொன்ன தேதியில் வாசலில் வந்து நிற்கிறார். அவர் சாபமிட்டது நடந்துவிட்டது என்கிறார் வக்கீல். ‘என் பசி சாபமிட்டது’ என்கிறார் அந்தப் பிச்சைக்காரர். “அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்கு… தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை… உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம். துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது கம்பீரமாக நிற்கும்” என்கிறார் அந்தப் பிச்சைக்காரர். இது அந்த வக்கீலுக்கு எவ்வளவு பெரிய கண் திறப்பாக இருந்திருக்கும்! அதனால்தான் அந்தப் பிச்சைக்காரரை ‘காலதேவரே’ என்று அழைக்கிறார்.

தி.ஜா.வின் இன்னொரு முக்கியமான, ஆனால் அதிகம் பேசப்படாத கதை  ‘இசைப்பயிற்சி’. அநேகமாக தி.ஜா. எழுதிய ஒரே அரசியல் கதை இதுவாகத்தான் இருக்கக் கூடும். இதில் நேரடியான அரசியல் கிடையாது. சென்னையிலெல்லாம் பலருக்கும் சங்கீதம் சொல்லிக்கொடுத்துவிட்டு திருப்தியடையாமல் கிராமத்து அக்கிரகாரத்தில் வந்து குடியிருக்கும் பாகவதர் மல்லிக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்க எந்த சிஷ்யரும் கிடைக்கவில்லை என்ற குறை உண்டு. தற்செயலாக ஒரு இளைஞருக்கு நல்ல குரல் வளம் இருப்பதை மல்லி கண்டடைகிறார். அந்த இளைஞர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞர். அந்த இளைஞரை வெள்ளிக்கிழமை தன் வீட்டுக்கு வரச் சொல்கிறார். இந்த விஷயம் அக்கிரகாரத்திலும் ஊர் முழுவதும் பரவி பயங்கரக் கேலிக்குள்ளாகிறார் மல்லி. தவறான முடிவெடுத்துவிட்டோமோ என்ற குழப்பம் அவருக்கு. எனினும் சொன்னது சொன்னதுபோல் வெள்ளிக்கிழமை அந்த இளைஞனைத் தன் வீட்டுக் கொல்லைக்கு வரச் சொல்கிறார். தனக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே 40 அடி இடைவெளி விட்டு சங்கீதம் சொல்லித் தருகிறார். ஒரு பக்கத்தில் சேரி மக்களும் இன்னொரு பக்கத்தில் அக்கிரகாரவாசிகளும் இதையெல்லாம் வேடிக்கைபார்க்கிறார்கள். பயிற்சி முடிந்ததும் “மீசையிலே படாம கூழும் குடிச்சாச்சு” என்று அக்கிரகாரவாசி ஒருவர் சொல்ல, “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லியா பாருங்கடா, ஒழிச மக்களா” என்று சொல்லிவிட்டு சுருதிப் பெட்டியைத் தூக்கியெறிகிறார். சக மனிதர் மீதான கருணை, இரக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும்போது ஒருவர் தன்னை மேலேயும் இரக்கத்துக்குப் பாத்திரமானவர்களைக் கீழேயும் வைத்துப் பார்க்கும் மனநிலையை இந்தக் கதை உடைக்கிறது. இரக்கம் (சிம்பதி) அல்ல, பரிவுணர்வே (எம்பதி) சாதிய மனநிலையை அகற்ற உதவும் என்பதை உணர்த்தும் கதை இது. நுட்பமாகக் கவனித்தால், கேலி பேசிய ஊராரைவிட சங்கீதம் கற்றுத்தரும் மல்லிதான் இந்தக் கதையின் வில்லன் என்பது புலப்படும்.  

சிறுகதையின் பக்க அளவும் கால அளவும் குறைவு என்பதால் தி.ஜா.வின் நாவல் அளவுக்கு அவரது சிறுகதைகளில் வர்ணனை இடம்பெறுவதில்லை. எனினும் சில வரிகளில் ஒருவரின் தோற்றத்தை, குணநலனைச் சொல்லிவிடும் வித்தை அவருக்கு சிறுகதைகளில் கைகூடியிருக்கிறது. கதையை நடத்திச் செல்வதில் உரையாடல்கள் மிக முக்கியப் பாத்திரங்கள் வகிக்கின்றன. அவரது நாவல்களும் சரி சிறுகதைகளும் சரி அலாதியான வாசிப்பனுபவத்தைத் தருபவை. கடந்த 70- ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்திய தி.ஜா.வின் எழுத்துக்கள் இனி வரும் பல நூற்றாண்டுகளும் அப்படியே செய்யும் என்பது உறுதி! 
- (தி.ஜானகிராமன் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்)   
No comments:

Post a Comment