ஆசை
(‘தி இந்து’ நாளிதழில் 31-03-2016 அன்று வெளியான கட்டுரை)
எந்த மதத்தையும் சித்தாந்தத்தையும்விட புனிதமானது குழந்தையின் உயிர்!
குயில் குஞ்சின் பசிக் குரலுக்கும் பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த ஒரு சிறுமி பிரதமர் நவாஸ் செரீபிடம் கேட்ட கேள்விக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
அந்த மரக்கிளையில் இரண்டு காகங்கள். நடுவே ஒரு குயில் குஞ்சு. அலகை அகலத் திறந்துகொண்டு இரண்டு காகங்களுக்கும் நடுவில் கத்திக்கொண்டிருக்கிறது அந்த குஞ்சு. காகங்கள் கண்டும் காணாததுபோல் இருக்க முயல்கின்றன. இடது பக்கக் காகத்தை நோக்கிக் கத்தியபடியே குயில் குஞ்சு செல்கிறது. அந்தக் காகமோ சற்று நகர்ந்துசெல்கிறது. இப்போது வலது பக்கக் காகத்தை நோக்கிக் கத்திக்கொண்டே நகர்ந்துசெல்கிறது குயில் குஞ்சு. அந்தக் காகமும் சற்று நகர்ந்துசெல்கிறது. இடப் பக்கமும் வலப் பக்கமுமாக மன்றாடுகிறது குயில் குஞ்சு. காகங்களும் இப்படியும் அப்படியுமாக நகர்கின்றன. குயில் குஞ்சை அப்படியே விட்டுவிட்டுப் பறந்து சென்றிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை காகங்கள். அதே நேரத்தில் குயில் குஞ்சின் குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை காகங்கள். இப்படியே பத்து நிமிடம் சென்ற பிறகு அந்தக் காகங்களில் ஒன்று சட்டென்று தன் வாயில் இருந்த இரையைக் குயில் குஞ்சுக்கு ஊட்டிவிட்டது. தீனி கிடைத்த பின் சாந்தமானது குயில் குஞ்சு.
இன்னொரு குரல்!
பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இன்னும் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் 29 பேர் குழந்தைகள். ஈஸ்டர் அன்று நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் கிறிஸ்தவர்களை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.