Thursday, March 31, 2016

நம் கைகளில் குழந்தைகளின் ரத்தம்!


ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 31-03-2016 அன்று வெளியான கட்டுரை)

எந்த மதத்தையும் சித்தாந்தத்தையும்விட புனிதமானது குழந்தையின் உயிர்!
குயில் குஞ்சின் பசிக் குரலுக்கும் பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த ஒரு சிறுமி பிரதமர் நவாஸ் செரீபிடம் கேட்ட கேள்விக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
அந்த மரக்கிளையில் இரண்டு காகங்கள். நடுவே ஒரு குயில் குஞ்சு. அலகை அகலத் திறந்துகொண்டு இரண்டு காகங்களுக்கும் நடுவில் கத்திக்கொண்டிருக்கிறது அந்த குஞ்சு. காகங்கள் கண்டும் காணாததுபோல் இருக்க முயல்கின்றன. இடது பக்கக் காகத்தை நோக்கிக் கத்தியபடியே குயில் குஞ்சு செல்கிறது. அந்தக் காகமோ சற்று நகர்ந்துசெல்கிறது. இப்போது வலது பக்கக் காகத்தை நோக்கிக் கத்திக்கொண்டே நகர்ந்துசெல்கிறது குயில் குஞ்சு. அந்தக் காகமும் சற்று நகர்ந்துசெல்கிறது. இடப் பக்கமும் வலப் பக்கமுமாக மன்றாடுகிறது குயில் குஞ்சு. காகங்களும் இப்படியும் அப்படியுமாக நகர்கின்றன. குயில் குஞ்சை அப்படியே விட்டுவிட்டுப் பறந்து சென்றிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை காகங்கள். அதே நேரத்தில் குயில் குஞ்சின் குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை காகங்கள். இப்படியே பத்து நிமிடம் சென்ற பிறகு அந்தக் காகங்களில் ஒன்று சட்டென்று தன் வாயில் இருந்த இரையைக் குயில் குஞ்சுக்கு ஊட்டிவிட்டது. தீனி கிடைத்த பின் சாந்தமானது குயில் குஞ்சு.
இன்னொரு குரல்!
பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இன்னும் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் 29 பேர் குழந்தைகள். ஈஸ்டர் அன்று நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் கிறிஸ்தவர்களை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்கச் சென்றிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப். அவரிடம் ஒரு சிறுமி இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறாள்: ‘பயங்கரவாதிகள் ஏன் எங்களைக் கொல்கிறார்கள்?’
இந்தக் கேள்விக்குப் பின்னே உள்ளது அறியாமை மட்டுமல்ல பெரும் வலியும் கூட. ஒரு நிகழ்தகவால் இந்தக் குண்டுவெடிப்பில் உயிர்பிழைத்த ஏஞ்சல் என்ற இன்னொரு குழந்தையின் அண்ணனுக்கு நடந்ததைப் பாருங்கள். குழந்தைகள் பூங்கா ஒன்றுக்குக் குடும்பத்தோடு சென்றிருக்கும் அந்தச் சிறுமி பூங்காவுக்குள் ஓடும் சிறுவர்கள் ரயிலில் செல்ல ஆசைப்பட்டிருக்கிறாள். அவளின் அண்ணன் சாஹிலும் ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால், ஏற்கெனவே குழந்தைகள் ஆக்கிரமித்திருக்கும் அந்த ரயிலில் ஒரே ஒரு இடம்தான் பாக்கி இருக்கிறது. அந்த ஒரு இடத்துக்காகச் சண்டை போட்டு சாஹில் முந்திக்கொள்கிறான். ரயிலில் மட்டுமல்ல, மரணத்திலும். இனி, விட்டுக்கொடுக்காமல் முந்திக்கொண்ட அண்ணன் தந்த வாழ்க்கையை, இதே நினைவோடு அந்தக் குழந்தை வாழ வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் உயிரிழந்திருக்கக் கூடிய, ஆனால் ஏதோவொரு நிகழ்தகவில் உயிர்பிழைத்த குழந்தையொன்றின் கேள்விதான் அது.
நவாஸ், பெருமரம், நாய்க்குட்டி
அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நவாஸ் செரீபால் முடியாது. என்றாலும் அவர் கண்கலங்கியதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையென்றால், கண நேரமாவது அவரும் இதயம் உள்ள ஒரு மனிதர் என்பதை அவருக்கே அந்தச் சிறுமியின் கேள்வி உணர்த்தியிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். எது எப்படியோ, அந்த மருத்துவமனையைத் தாண்டி வெளியே வந்ததும் நவாஸ் செரீப் தனது வழக்கமான தோரணைக்குத் திரும்பிவிடுவார். காஷ்மீர், அணுகுண்டு, ஆயுத வியாபாரிகள், உலக சமாதான ஆயுத விற்பனையாளர்கள் என்று அவரது உலகத்தில் மூழ்கிவிடுவார். உலகின் எல்லா ஆட்சியாளர்களும் இப்படித்தான். அவர்களை எந்தக் குழந்தையின் கேள்விகளும் அசைத்துவிட முடியாது.
சீக்கியப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களெல்லாம் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரை, ‘பெருமரம் ஒன்று (இந்திரா காந்தி) வீழும்போது பூமி அதிர்வது சகஜம்தானே’. அதிரும் பூமியில் குழந்தைகளும் இருந்திருப்பார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு விஷயமேயில்லை.
குஜராத் இன அழிப்பின்போதும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்! அதில் எத்தனை குழந்தைகள் இருந்திருப்பார்கள். இன்னும் பிறக்காத குழந்தைகளும் அடக்கமல்லவா! அதையெல்லாம் பற்றிக் கேட்டால் இந்நாள் பிரதமரும் அந்நாள் குஜராத் முதல்வருமான மோடி, ‘பின்சீட்டில் அமர்ந்து நாம் போய்க்கொண்டிருக்கும் காரில் நாய்க்குட்டி ஒன்று அடிபட்டு செத்தால் வருத்தமாகத்தானே இருக்கும்’ என்பார்.
போர்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்கும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும், அவர்களுடைய விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்கும் சர்வதேசங்களின் தலைவர்களுக்கும், ஆயுதங்களின் பயனாளிகளான ராணுவ வீரர்களுக்கும், போராளிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் போர், கலவரம் என்று வந்தால் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்படுவார்கள் என்று தெரியாதா என்ன? அவர்களுக்கும் குழந்தைகள், பாசம் எல்லாம்தான் இருக்கும். அந்தப் பாசம் அவர்களுடைய குழந்தைகளைத் தாண்டி விரிவதில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கும் அவர்களுடைய ஆயுதங்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
குழந்தைகளா, மதங்களா?
ஆட்சியாளர்கள், பயங்கரவாதிகள் மட்டுமல்ல, நாமும் அப்படிதான் இருக்கிறோம். முஸ்லிம்களோ இந்துக்களோ கொல்லப்பட்டால் மட்டுமல்ல, இந்த மதங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டாலும் சமூக ஊடகங்களில் மாற்று மதத்தினரால் எவ்வளவு வெறுப்புப் பதிவுகள் இடப்படுகின்றன! அங்கே, அந்தக் குழந்தையின் ‘குழந்தைமை’ அதன் அடையாளம் அல்ல, அதன் மதம்தான் அதன் அடையாளம். மதங்களின் மீதுள்ள வெறி நம்மை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது பாருங்கள்!
நம் காலத்தில் எல்லா ஆயுதங்களையும் விட மிகக் கொடூரமான ஆயுதங்களாக மதங்கள், சித்தாந்தங்கள் மாறியிருக்கின்றன. எந்த உயிரையும் எடுக்கக் கூடாது என்பது இயல்பான புரிதல். அதிலும் குழந்தைகளின் உயிர் எந்த மதத்தையும் விட எந்த சித்தாந்தத்தையும் விட, எந்தக் கடவுளர்களையும் விட புனிதமானது. இதைத் தாண்டி நமக்கு எந்த மதமோ சித்தாந்தமோ தேவையில்லை. ஆனால், நாமோ குழந்தைகளின் கேள்விகளுக்கு, குழந்தைகளின் ரத்தத்துக்குத் திறக்காத இதயம் கொண்டவர்களாக மாறியிருக்கிறோம்.
குயில் குஞ்சுகளும் குழந்தைகளும்
உயிரியல் ரீதியில் விலங்கினங்களுக்கிடையில் நடைபெறும் போட்டிகள், அழிப்புகள், கொன்றுதின்பது எல்லாம் இயல்பானவையே என்றாலும் காகங்களுக்கும் குயில் குஞ்சுக்கும் இடையில் நடந்த போராட்டம் அறிவியல்ரீதியில் எப்படியோ, மனிதர்களாகிய நமக்கு அது விசித்திரமானதாகவே படுகிறது. இரக்கம், பரிவு என்பவற்றை மனிதர்களின் குணங்களாகவே அறிவியல் சொல்கிறது என்றாலும் முழுக்கவும் அப்படி நம்மால் எடுத்துக்கொள்ளவும் முடிவதில்லை.
காகத்தின் கூட்டில் இருக்கும் குஞ்சுகளிலேயே குயில் குஞ்சுதான் அகலமாக வாய்திறக்கும். அதனால் அதிக இரை அதற்குக் கிடைக்கும். அதேபோல் எந்த அளவுக்குக் கத்தினால் காகத்தின் மனதைக் கரைய வைக்க முடியும் என்று அதற்கு இயல்பாகவே தெரியும். தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற பரிணாம விதியின் படி குயில் நடந்துகொள்கிறது. எனினும்கூட காகங்களும் பல்கிப் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
இயற்கையில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிறைய நடக்கத்தான் செய்கின்றன. இயற்கையில் என்று சொல்லும்போது அது மனிதர்களையும் உள்ளடக்கி யதுதான். நாமும் அடிப்படையில் விலங்குகள்தான். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பரிணாம மாற்றத்தை அடைந்து விலங்குகளிடமிருந்து மட்டுமல்ல இயற்கையிடமிருந்தும் நம்மை அந்நியப்படுத்திக் கொண்டோம். நம்முடைய குழந்தைகளுக்குக் குயில் குஞ்சுகளைப் போல அகலமாக வாயைத் திறக்க முடியா மல் போயிருக்கலாம், அதிகமாகக் கத்தத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால், அதிகமாக ரத்தம் சிந்துகின்றன. அதற்காவது நம் இதயம் திறக்குமா?
- நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/wCU9V5

1 comment:

  1. மனிதாபிமானமின்றி நடக்கும் பல நிகழ்வுகள் அண்மைக்காலமாக பெருக ஆரம்பித்துவிட்டன. குழந்தைகளையும் அவற்றில் பலிகடாக்களாக ஆக்க ஆரம்பித்திருப்பது மனிதத்தன்மையற்ற மன நிலையை உணர்த்துகிறது.

    ReplyDelete