Wednesday, March 30, 2016

ஷெல்டன் போலக்கும் மோடியின் அறிஞர்களும்


ஆசை
ஷெல்டன் போலக், மேலை நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர். இந்தியாவின் இலக்கிய வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் செய்திருக்கிறார். தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறையில் பேராசிரியராக இருக்கிறார். கூடவே, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி தொடங்கிய ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ (Murty Classical Library of India) என்ற அமைப்பின் பதிப்பாசிரியராகவும் இருக்கிறார். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட பதவியால்தான் தற்போது ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.

மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் அமைப்பொன்றை நிறுவும் நோக்கத்துடன் ரோஹன் மூர்த்தி 52 லட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 34கோடி) ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கியிருக்கிறார். இந்த நிதியைக் கொண்டு ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ நிறுவப்பட்டது. ஷெல்டன் போலக்தான் தலைமைப் பதிப்பாசிரியர். பதிப்பாசிரியர் குழுவில் மோனிகா ஹார்ஸ்ட்மன், சுனில் ஷர்மா, டேவிட் ஷுல்மன் ஆகிய முக்கியமான இந்தியவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள்.


அடுத்த 100 ஆண்டுகளில் 500 புத்தகங்கள் என்பது இந்த அமைப்பின் இலக்கு. ஆதி இலக்கியங்களிலிருந்து தொடங்கி, கி.பி. 1800 வரை உருவான செவ்வியல் இலக்கியங்கள்தான் இவர்களின் எல்லை. இதன் முதல்முயற்சியாக சூஃபி ஞானி பாபா புலே ஷாவின் சூஃபி பாடல்கள், அக்பரின் வரலாற்றைச் சொல்லும் ‘அக்பர் நாமா’வின் முதல் பாகம். புத்தரின் காலத்தைச் சேர்ந்த புத்த மதப் பெண் துறவிகளின் கவிதைகளான ‘தேரிகாதா’. அல்லாசாணி பெத்தண்ணா எழுதிய மனுவின் கதை (மனுசரித்திரமு) என்ற தெலுங்கு காவியம், இந்தி மொழிக் கவிஞர் சுர்தாஸின் ‘சுர்சாகர்’ என்ற பாடல்களின் பெரும் தொகுப்பு ஆகிய ஐந்து புத்தகங்களும் கடந்த ஆண்டு (2015) வெளியிடப்பட்டன.


ஆதாரபூர்வமான மூலப்பிரதி, நம்பகத்தன்மை கொண்ட மொழிபெயர்ப்பு, பாடபேதங்கள், கலாச்சாரச் சொற்கள், மரபுச்சொற்கள் போன்ற வற்றுக்கான குறிப்புகள் என்று இந்தப் பதிப்புகளின் சிறப்பம்சங்கள் பல. சமஸ்கிருதத்தைப் போலவே பிற இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி’யின் தனிச்சிறப்பு.


அறிஞர்களின் அறிக்கை
சரி, நல்ல விஷயம்தானே. இதில் என்ன பிரச்சினை? ஆளும் மோடி அரசின் செயல்பாடுகளை ஒருமுறை விமர்சித்துவிட்டால் என்றென்றைக்கும் பிரச்சினைதானே! ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் தலையீட்டைக் கண்டித்து உலகின் முன்னணி அறிஞர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஷெல்டன் போலக்கும் ஒருவர். அது போதாதா? உடனே, இந்துத்துவ அறிஞர் படை கிளம்பிவிட்டது. ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி’யின் தலைமைப் பதிப்பாசிரியராக ஷெல்டன் போலக் நீடிக்கக் கூடாது என்று 132 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 

கையெழுத்திட்டவர்களில் 32 பேர் ஐஐடிகளைச் சேர்ந்தவர்கள். முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி என். கோபால்சாமி உள்ளிட்டவர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய வாதங்கள் என்ன? ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி’யின் தலைமைப் பதிப்பாசிரியராக இருக்க ஷெல்டன் போலக்குக்குத் தகுதி கிடையாது; இந்தியக் கலாச்சாரம் குறித்த சரியான அறிவு அவருக்குக் கிடையாது; இந்தியக் கலாச்சாரம் குறித்த வெறுப்பு கொண்டவர்… இப்படியாகப் போகிறது அவர்களின் அறிக்கை. ‘மேலைநாட்டின் ஞானம் தெற்காசியாவின் ஞானத்தை வெற்றிகொண்டுவிட்டது’ என்று பொருள்படும்படியான மேற்கோள் ஒன்றை ஷெல்டன் போலக்கின் உரையிலிருந்து அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பதவிக்கு இந்தியர்களையும் அரசியல் சார்பற்றவர்களையும்தான் நியமிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

விமர்சனங்கள்
முதலில், ஷெல்டன் போலக் கூறியதாக மேற்கோள் காட்டப்படுவது ஷெல்டன் போலக்கின் கருத்தே கிடையாது. ‘தெற்காசியாவின் அறிவுச் சொத்தால் தற்போது எந்தப் பயனும் இல்லை. மேற்குலகின் அறிவுச் சொத்துதான் தற்போது வெற்றியடைந்திருக்கிறது’ என்ற வாதத்தைச் சுட்டிக்காட்டி அது தவறு என்றும் தெற்காசியா உற்பத்திசெய்திருக்கும் அறிவுவளம் மிகவும் உயர்ந்தது என்றும்தான் ஷெல்டன் போலக் தன் உரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த உரையில் முன்னும் பின்னும் நீக்கிவிட்டு நடுவே உள்ளதை மட்டும் ஷெல்டன் போலக்கின் கருத்துபோல் அறிக்கையாளர்கள் முன்வைத்திருப்பது பல்வேறு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகியிருக்கிறது.

அவர்களின் வாதத்தில் இன்னும் பலவீனமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. முதலில், ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி’ ஒரு தனியார் முன்னெடுப்பு. அதில் யாரைத் தலைவராகப் போடுவது என்பது அவர்களுடைய விருப்பம். அதில் தலையிட வெளியாட்களுக்கு உரிமை இல்லை. இரண்டாவது, அப்படி ஷெல்டன் போலக்கை நீக்க வேண்டும் என்று அறிக்கையாளர்கள் விரும்பினால் அவரைத் தலைவராக அறிவித்தபோதே (அதாவது 2010-ல்) தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஜே.என்.யூ. தொடர்பான அறிக்கை வெளியான பிறகுதான் இவர்களெல்லாம் விழித்துப் பார்த்தார்களா என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

மூன்றாவதாக, இவர்கள் ஆதரிக்கும் இந்திய அரசிடம், அதுவும் இந்துத்துவத்தைத் தங்கள் உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் பாஜக தலைமையிலான இந்திய அரசிடம், இல்லாத பணமா, வளங்களா? அவர்கள் விருப்பப்படி இந்திய வரலாற்றில் ஆழமான அறிவு கொண்ட, அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களை(?) நியமித்து இதுபோன்ற ஒரு முயற்சியைச் செய்திருக்க வேண்டாமா? அப்புறம் இறுதியாக ஒரு கேள்வி, ஷெல்டன் போலக் நடுநிலையாளர் இல்லை என்றால் இவர்களெல்லாம் யார்? அரசின் செயல்பாட்டை விமர்சித்த பிறகுதானே இவர்களெல்லாம் பொங்கி எழுந்திருக்கிறார்கள்! இப்படியெல்லாம் எழுகின்றன விமர்சனங்கள்.

இந்தியாவின் இலக்கியத்துக்கு மேற்கத்திய பேராசிரியர்கள்தான் பாதுகாவலர்களா என்ற கேள்வியில் நியாயம் இல்லாமலும் இல்லை. கீழைநாடுகளின் கலாச்சாரங்களிலும் மொழிகளிலும் நிபுணத்துவம் பெறுவதையும் மொழிபெயர்ப்புகளை மேற்கொள்வதையும் காலனியாக்கத்தின் வழிமுறைகளுள் சிலவாகவே மேலைநாட்டினர் மேற்கொண்டார்கள். எனினும், ஆழ்ந்த தேடலுடனும் நல்ல நோக்கத்துடனும் இந்தக் கலாச்சாரப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட, ஈடுபடும் மேலைநாட்டு அறிஞர்கள் பலரை நம்மால் அடையாளம் காண முடியும். ஆகவே, ஒட்டுமொத்தமாக இப்படி ஒரு குற்றாச்சாட்டை எல்லோர் மீதும் வைத்துவிட முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் இதுவரை அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட இதுபோன்ற முயற்சிகளைப் பார்க்கும்போது பெரும்பாலும் அவநம்பிக்கையே ஏற்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதியின் உருவாக்கத்தில் இங்கிலாந்து அரசும் அதன் அறிஞர்களும் மக்களும் எப்படிப் பங்கெடுத்தார்கள் என்பதைப் பார்க்கும்போது மலைப்பாகவே இருக்கிறது. இந்தியாவில் அதுபோன்ற முயற்சிகளைப் பெரும்பாலும் தனியார் அமைப்புகளோ தனிநபர்களோதான் எடுக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையைப் பணயமாக வைத்துதான் பலரும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களைப் போன்றவர்களுக்கு அரசு காட்டும் ஆதரவு மிகவும் சொற்பமே. உ.வே.சா.வில் ஆரம்பித்து, சாம்பசிவம் பிள்ளை என்ற அறிஞரின் பெரும் உழைப்பில் 1938-ல் வெளியான சித்த மருத்துவப் பேரகராதி என்று தமிழிலேயே நிறைய உதாரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். வையாபுரிப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளியான சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) ஆங்கிலேய அரசின் நிதியுதவியில் உருவான அகராதி என்பதுதான் வேடிக்கை. இந்தப் பின்னணியில்தான் இதுபோன்ற முயற்சிகளில் தனியார்களின் ஈடுபாட்டைப் பார்க்க வேண்டும்.
ரோஹன் மூர்த்தி அந்த 34 கோடி ரூபாயை இந்திய அரசிடம் கொடுத்து ஓர் அமைப்பை உருவாக்கச் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சிவப்பு நாடாவிலும் ஊழலிலும் இந்துத்துவ-மைய அறிஞர்களிடமும் சிபாரிசுகளிடமும் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கும்! நல்லவேளை, திறமைமிக்க அறிஞர்களின் குழுவிடம் நம்பிக்கை வைத்துதான் அவர் இந்த முன்னெடுப்பைச் செய்திருக்கிறார். அதற்கு உதாரணம் இதுவரை வெளியாகியிருக்கும் புத்தகங்களின் தரமும் உழைப்புமே. அதை இந்த அறிக்கையாளர்கள் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம்!
 - (‘தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 06-03-2016 அன்று வெளியான கட்டுரை)


கீழ்க்கண்ட கட்டுரைகளையும் தவற விடாதீர்கள்:


1. இந்தியாவிலிருந்து உலகத்துக்கு...


2. மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியில் என்ன நடக்கிறது?

No comments:

Post a Comment