Wednesday, March 30, 2016

தரம்பால் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துகளும்

                    கீதா தரம்பால், ஏ.வி. பாலசுப்ரமணியன், ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் 

ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் கடந்த 27-03-2016 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)

இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களிலும் காந்தியச் சிந்தனையாளர்களிலும் தரம்பாலும் (1922-2006) ஒருவர். அவர் எழுத்துக்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பான, ‘எஸென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் தரமபால்’ (Essential Writings of Dharampal) சமீபத்தில் இந்திய அரசின் பப்ளிகேஷன் பிரிவால் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பற்றியும் தரம்பாலைப் பற்றியும் கடந்த 23-ம் தேதி மாலை நேரத்தில் நந்தனம் ஸ்ரீபாலாஜி மகாலில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பேரா. ஜி. சிவராமகிருஷ்ணன் (ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்), பேரா. எம்.டி. ஸ்ரீனிவாஸ், எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி. ரவிக்குமார், எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
தரம்பாலின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய மாணவர்கள் போன்ற தரப்புகளின் பார்வைகளுடன் கருத்தியல்ரீதியில் தரம்பாலுடன் வேறுபட்டவர்களின் பார்வைகளும் இடம்பெற்றது இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றது.

இந்த நிகழ்ச்சியை சி.ஐ.கே.எஸ் நிறுவனத்தின் ஏ.வி. பாலசுப்ரமணியன் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல் தரம்பாலைப் பற்றி ஒரு அறிமுக உரையையும் நிகழ்த்தினார். இதை அடுத்து தரம்பால் புத்தகத்தின் தொகுப்பாசிரியரும் அவரது மகளுமான கீதா தரம்பால் புத்தகத்தின் எட்டுக் கட்டுரைகளைப் பற்றியும் ஒரு அறிமுகத்தை வழங்கினார்.


கீதா தரம்பாலின் அறிமுகத்தை அடுத்து எழுத்தாளர் ரவிக்குமார் பேசினார். அவரது உரை பெரிதும்   தரம்பாலின் கருத்தியலுடன் மாறுபட்டதாகவே இருந்தது. அதிகாரப்பரவலாக்கம் என்பது ஜனநாயகத்துக்கு அடிப்படையானது என்பதும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அதிகாரம் அளிக்க முடியும் என்பதும் தரம்பாலின் விவாதங்கள். சமுதாயத்தின் தன்னிறைவுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியமானவை என்று தரம்பால் கருதினார். அதிகாரப்பரவலாக்கம் என்ற பார்வையில் தரம்பாலுடன் தான் பெரிதும் வேறுபடுவதற்கு ரவிக்குமார் முக்கியமான காரணம் ஒன்றை முன்வைத்தார். தரம்பால் முன்வைக்கும் கிராம சமுதாயம் என்பதும் கூட பல அதிகார மையங்களை உருவாக்கி அவற்றுக்கு மையங்களையும் விளிம்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. ஒரு அதிகார மையத்துக்குப் பதிலாகப் பல அதிகார மையங்கள். இதில் யார் அதிகார மையங்கள் என்று பார்த்தால் ஆதிக்க சாதியினர்தான். தாழ்த்தப்பட்ட மக்களோ இதில் விளிம்பு நிலையில் வைக்கப்படுகின்றனர். தரம்பால் பார்த்த முந்தைய இந்தியச் சமுதாயம் என்பது உலகமயமாதலுக்குப் பிறகு பெரிதும் மாறிவிட்டது. அப்போது குறைவான எண்ணிக்கையில் இருந்த ஆதிக்க சாதியினரிடம் பெரும்பான்மையான நிலமும் கையில் இருந்தது. தங்கள் விவசாய நிலங்களில் வேலைகள் நடைபெறுவதற்கு அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களையே நம்பியிருந்தார்கள். நிலமற்றவர்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களும் வேலைக்கு ஆதிக்க சாதியினரையே நம்பியிருந்தனர். இதில் அடிமைத்தனம் இருந்ததுடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டிய இணக்கமான ஒருவிதச் சூழலும் இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு பெரும்பாலான ஆதிக்கச் சாதியினர் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டனர். இப்போது நிலங்கள் இடைநிலை சாதியிடம் வருகிறது. அவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே  பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் இல்லாமல் போகிறது. சமூக அமைப்பு மேலும் இறுக்கமடைகிறது. பஞ்சாயத் ராஜ் சட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கிடைக்கிறது. இப்போது நிலத்துடன் அதிகாரம், பணம் எல்லாம் இடைநிலை சாதிகளிடமே குவிகிறது. இவையெல்லாம் சேர்ந்து கிராமங்களை மேலும் கொடூரமாக ஆக்கிவிட்டன. சாதிய வன்முறைக்கும் சாதிய மேலாதிக்கத்துக்கும் இப்படியாக உள்ளாட்சி அமைப்புகளும் பஞ்சாயத்து அமைப்பும் வழிவகுத்தன. இதையெல்லாம் பார்க்கும்போது காந்தி, தரம்பால் ஆகியோர் கிராமங்களைப் பார்த்த பார்வை தனக்கு உவப்பானதாக இல்லை. மாறாக, கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் முன்வைத்த பார்வைகளை நோக்கித்தான் தான் உந்தப்படுகிறேன். அதே சமயத்தில் முந்தைய சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்து நிறைய தரவுகளை தரம்பால் முன்வைத்திருக்கிறார். அவை கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டியவையே. என்றார் ரவிக்குமார்.
பி.ஏ. கிருஷ்ணனும் தன்னுடைய உரையில் தரம்பாலுடன் மாறுபட்ட பார்வைக் கோணத்தை முன்வைத்தார். தரம்பால் மீது மதிப்பு கொண்டிருக்கும் அதே வேளையில் தரம்பாலின் ஒருசில கருத்துகள் இன்றைய காலகட்டத்துடன் பொருந்துவது சிரமம் என்றார். பி.ஏ. கிருஷ்ணன் தன்னுடைய உரையில் தரம்பாலின் ‘த பியூட்டிஃபுல் ட்ரீ’ என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.
‘த பியூட்டிஃபுல் ட்ரீ’ அதாவது ‘அழகிய மரம்’ என்பது இந்தியாவின் மரபான கல்வி முறையைப் பற்றிச் சொல்வதற்கு காந்தி உபயோகித்த பதம். 18-ம் நூற்றாண்டின் இந்தியக் கல்விமுறையைப் பற்றிய தனது ஆய்வு நூலுக்கு காந்தியரான தரம்பால் மேற்கண்ட பதத்தையே தலைப்பாக்கியிருக்கிறார். அப்போதைய கல்வி முறையையும் இப்போதைய கல்வி முறையையும் பார்க்கும்போது அப்போதைய கல்வி முறையானது தரம்பால் சொல்வது போல் அவ்வளவு ‘அழகான மரம்’ போன்று தனக்குத் தெரியவில்லை என்றார் பி.ஏ. கிருஷ்ணன். அன்றைய கல்வி அமைப்பில் பெரும்பாலும் பிராமணர்களே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். பழங்காலக் கல்வி முறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கோ பெண்களுகோ இடம் இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார் கிருஷ்ணன்.
மொழிகளைக் குறித்து வரும்போது மெக்காலேவைப் பற்றி விவாதித்தார் கிருஷ்ணன். ஆங்கிலக் கல்வி முறையை மெக்காலே பரிந்துரைத்ததற்கு முன்பு சமஸ்கிருதம், அரபி, பாரசிகம் மற்றும் பிராந்திய மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. இவை எல்லாமே நவீன உலகுடன் பெரிதும் தொடர்பற்றவையாக இருந்தன. ஒரு தரப்பில் ஆங்கிலத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் இன்னொரு தரப்பில் சம்ஸ்கிருதம், அரபி ஆகியவையும் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும், ஆங்கிலக் கல்விதான் வேண்டும் என்று ஒரு மனுவை எல்ஃபின்ஸ்டோன் பிரபுவுக்கு 1839-ல் 70 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு அனுப்புகிறார்கள். இவர்களெல்லாம் ஆதிக்க சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆகவே, அவர்களே ஆங்கிலக் கல்வியைத்தான் நாடியிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஆங்கிலத்துக்குப் பதிலாக சம்ஸ்கிருதமோ அரபியோ பரிந்துரைக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்! அரபியைப் பயிற்றுமொழியாக ஆக்கியிருக்கும் அரபி நாடுகள் நவீன உலகத்துடன் போட்டி போட முடியாமல் பின்தங்கியிருக்கும் நிலையை நாம் நினைத்துப் பார்க்கலாம் என்று பி.ஏ. கிருஷ்ணன் பேசினார். அதே நேரத்தில் இந்தியக் கல்வி முறையில் எல்லாமே இப்போது பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் இன்றைய கல்விமுறை எந்தவிதத்தில் முந்தைய கல்வி முறையைப் பிரதிபலிக்கவில்லை. எனினும் முன்பு என்ன இருந்தது இப்போது என்ன இல்லை என்பதைத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் நமக்கு என்ன தேவையாக இருக்கும் என்பதைத் தேர்வுசெய்ய வசதியாக இருக்கும் என்று தரம்பால் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது என்று பி.ஏ. கிருஷ்ணன் கூறினார்.
தரம்பாலுடன் பழகிய தருணங்களை ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். ஒருமுறை சென்னையில் தரம்பாலைச் சந்திக்க ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் ஆட்டோவில் செல்கிறார். இறங்கும்போது ஆட்டோ கட்டணத்துக்காக சண்டை வருகிறது. தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார் தரம்பால். ஆட்டோ சென்றதும் ‘எல்லா ஆட்டோகாரர்களுமே இப்படித்தான். நியாயமே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்’ என்றரீதியில் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் தரம்பாலிடம் சொல்லியிருக்கிறார். அப்போது தரம்பால், “ஆட்டோவில் வரும்போது ஆட்டோகாரரிடம் ஏதாவது பேசினாயா? அவரைப் பற்றி விசாரித்தாயா?” என்றெல்லாம் கேட்கிறார். “இல்லை” என்கிறார் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன். அதற்கு தரம்பால், “அவரிடம் நீ ஒரு உறவை ஏற்படுத்தியிருந்தால் இந்தச் சண்டையே வந்திருக்காது. அவர் ஒன்றும் இயந்திரமல்ல. அவரும் மனிதர்தான். மனிதர்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வது அவசியம்” என்று சொன்னது ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணனுக்குப் பெரும் திறப்பாக அமைந்திருக்கிறது.
தரம்பாலின் இன்னொரு மாணவரான எம்.டி. ஸ்ரீனிவாஸும் தரம்பாலுடன் தனக்குக் கிடைத்த நெருக்கமான அனுபவங்கள், சாதாரண மக்களிடம் தரம்பால் கொண்டிருந்த உறவு போன்றவற்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

பத்ரி சேஷாத்ரி பேசும்போது தன்னுடைய கருத்துகள் பெரிதும் பி.ஏ. கிருஷ்ணனுடன் உடன்படுகின்றன என்றும் முந்தைய கல்வி முறையை விடத் தற்போதைய கல்வி முறை மேம்பட்டது என்றே தான் கருதுவதாகவும் கூறினார். தரம்பாலின் ஆய்வுகளின் தனக்கு மிகவும் முக்கியமானதாகப் படுவது 18-ம் நூற்றாண்டின் இந்திய அறிவியல், தொழில்நுட்பம் குறித்த ஆய்வு என்றார். 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கிராமங்களில் இரும்பு, எஃகு, காகிதம், பனிக்கட்டி போன்றவற்றை உற்பத்தி செய்திருக்கிறார்கள். இந்தியாவின் இரும்பு பிரிட்டிஷாரின் இரும்பை விட மேம்பட்டதாக இருந்ததாக இங்கிருந்து மாதிரிகள் அனுப்பியிருக்கிறார்கள். அதே போல், தரம்பாலின் தரவுகளின்படி அன்றைய விவசாய உற்பத்தியை இன்றைய விவசாய உற்பத்தியால் எட்டிக்கூடப் பிடிக்க முடியாது என்றே தெரிகிறது. முந்தைய இந்திய சமுதாயத்தின் அறிவியல், தொழில் நுட்பத்தைப் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அவற்றில் இன்றைக்கு மிகவும் பொருத்தமானவற்றை நாம் இன்று பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கலாம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தரம்பால் முன்னெடுத்த முயற்சிகள் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றார் பத்ரி சேஷாத்ரி.
தரம்பால் என்ற மனிதரின் கருத்தியல் பற்றி இசைவான கருத்துகளும் மாறுபட்ட கருத்துகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றாலும் மிகவும் இணக்கமான சூழலே அங்கு நிலவியது ஆரோக்கியமான விஷயம். தரம்பால் குறித்து நிறைய தெரிந்தவர்களும் தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் நிறைந்த ஒரு நிகழ்வாக அது இருந்தது. 

  - நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/627Ylz



No comments:

Post a Comment