Thursday, July 30, 2015

டைகர்களின் உலகில் யாகூப்கள்தான் எப்போதும் பலிகடாக்கள்!எஸ். ஹுஸைன் ஜைதி

(‘தி இந்து’ நாளிதழில் 30-07-2015 அன்று, அதாவது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினத்தன்று, வெளியான கட்டுரையின் முழுவடிவம். மொழிபெயர்ப்பு: ஆசை)

அந்தப் பெண்ணின் பெயர் ஜுபைதா.

அவளுடைய அப்பா அவளுடைய அம்மாவை ஒரு அந்நியமான, விரோதமான தேசத்தில் அவள் பிறப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக விட்டுவிட்டு, முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவதற்காகச் சென்றுவிட்டார். சில மாதங்களுக்குள் அந்தக் குழந்தையையும் அதன் அம்மாவையும் வந்து பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றார்.  


யாகூப் மேமன் தனது மனைவி ராஹினை கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.

பாகிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு மேலும் தாமதமானால் இந்தியாவுக்கு வந்து, இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்குவதற்கு மேலும் தடங்கல்கள் ஏற்படும் என்று அஞ்சினேன். நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்,” என்றார் யாகூப் மேமன். பாகிஸ்தானிலிருந்து அவர் தப்பியது குறித்து விரிவாகச் சொல்லும்படி நான் வற்புறுத்திக் கேட்டபோது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள்தான் அவை.

Monday, July 27, 2015

இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

                                             
         


                                        உலக இயற்கை பாதுகாப்பு நாள்: ஜூலை: 28

ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 25-07-2015 அன்று வெளியான கட்டுரை)


உக்கிரமாக அடிக்கிற காற்று
காலை முழுவதும் நீடிக்க முடியாது;
பயங்கரமாக அடிக்கிற மழை
நாள் முழுவதும் நீடிக்க முடியாது;
வானகமும் வையகமும் தவிர
இவற்றை யார் உருவாக்கியிருக்கிறார்கள்?
வானகமும் வையகமும்
நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது
மனிதன் எப்படி நீடிக்க முடியும்?
- லாவோ ட்சு

இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டடையத் தேனீ போன்ற ஒரு சிற்றுயிர் நமக்கு உதவக்கூடும். பதிலைக் காண்பதற்கு முன்பு தேனீக்களைப் பற்றிய சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு
உலகம் முழுவதும் தாவரங்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையில் 80 சதவீதத்துக்குப் பொறுப்பு காட்டுத் தேனீக்களும் வளர்ப்புத் தேனீக்களும்தான். தேனீக்களின் ஒரு சமூகம், ஒரு நாளில் 30 கோடி பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு உணவு தரும் பயிர்களில் நூற்றுக்கு 70 பயிர்களில் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இந்தப் பயிர்கள்தான் உலகின் ஊட்டச்சத்து தேவையில் 90 சதவீதத்தைப் பூர்த்திசெய்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தேனீக்கள்தான்.
ஆனால், எதையும் பண மதிப்பில் சொன்னால்தானே நமக்குப் புரியும்! ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ. 20 லட்சம் கோடி! இது உணவு விளைபொருளின் மதிப்புதான். இந்த உணவுகளெல்லாம் புவியின் பெரும்பாலான உயிர்களுக்குக் கொடுக்கும் ஆற்றலையும் அதனால் காக்கப்படும் இயற்கைச் சமநிலையையும் மதிப்பிடவே முடியாது.

கூடு திரும்பாத தேனீ
ஆனால், தேனீக்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? 1990-களிலிருந்து தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. தேனீக்கள் கூட்டம் கூட்டமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. 2006-ல் டேவ் ஹேக்கன்பெர்க் என்ற தேனீ வளர்ப்பாளருக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்.

தேனீக்களுக்கு ஒரு பாடல்


பாப்லோ நெருதா

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 25.07-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கவிதை. தமிழில்: தங்க. ஜெயராமன்)

மொய்க்கும் தேனீக்கூட்டமே
உலகின் மென்மைக்கும் மென்மையான
சிவப்பு, நீலம் மஞ்சளின் உள்ளே
புகுந்தும் புறப்பட்டும்
தொழிலுக்காகப்
பூவிதழின் அடுக்கினுள்
கவிழ்ந்து விழுந்து, மீண்டு,
பொன்மயமான உடையும்,
கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.

கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு
துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை
புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---
மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,
பட்டுக் கதவுகளைத் திறந்து,
இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,
வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.
சென்றுவரும் வீடெல்லாம்
தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை
அள்ளிச்செல்கிறீர்கள்
அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.
கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து
அதன் கைப்பிடிச் சுவரில்
பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்
விளைச்சலான அந்த
கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,
தேனை, சேமித்து வைத்து
மொய்க்கும் தேனீக்களே,
ஒற்றுமையின் புனித முகடே,
ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்
பூவின் மதுவைப் பக்குவமாக்க
அமுதத் துளிகளைப் பரிமாறி
பசுமை படர்ந்த
ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்
வெய்யில்கால பிற்பகலின் கண்ணயர்வு--
உச்சி சூரியன்
ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,
எரிமலைகள் ஒளிர
கடலாக நிலம் விரிகிறது.
நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.
கனன்றுவரும் கோடையின் இதயம்,
தேனினிக்கும் இதயங்கள் பெருகின
ரீங்கரிக்கும் தேனீ
நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு
பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!

தேனீக்களே,
களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்
தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!
தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்
குறையில்லா தீரப் போர்ப்படையே
இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்.
பொன்வண்ணக் குடும்பமே,
காற்றின் மந்தையே
பூக்களின் தீயை,
மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,
நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,
நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,
அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்
வெம்மையான கண்டங்களைக் கடந்து
மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,
பசுமைச் சிலைகளை
தேன் மெழுகு உருவாக்கட்டும்!
எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,
தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்
பூமியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!
உலகமே ஓர் அருவியாகட்டும்
எரிகல்லின் ஒளிரும் வாலாக
தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!

- பாப்லோ நெருதா (1904 1973), சிலே நாட்டைச் சேர்ந்த பெருங்கவிஞர்,
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1971-ல் பெற்றவர்.
- நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க: தேனீக்களுக்கு ஒரு பாடல்


Monday, July 20, 2015

இந்தியாவின் கவுரவம் மகன்களும்தான்!


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 19-07-2015 அன்று வெளியான கட்டுரை)
      
பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ‘இந்தியாவின் மகள்கள்’ குறித்துப் பேசிவந்திருக்கிறார் மோடி. இதன் சமீபத்தியத் தொடர்ச்சியாக ‘மகள்களுடன் செல்ஃபி’ என்ற புதுமையான யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். இது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால், மோடி உட்படப் பலரும் பெண்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவது தந்தைவழிச் சமூகத்தின் ஆதிக்கப் பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது.
கடந்த சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “சகோதர சகோதரிகளே, நாமெல்லாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்த வெளியில் மலம்கழிப்பது குறித்து நமக்கு எப்போதாவது வருத்தம் ஏற்பட்டிருக்கிறதா? நமது தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியம் காப்பதற்கு நமது வீட்டிலே கழிப்பறைகள் கட்டுவதற்கு நம்மால் ஏற்பாடுகள் செய்துகொள்ள முடியாதா?” என்று கேட்டது நம் நெஞ்சை உலுக்குவதாகத்தான் இருக்கிறது. ஆனால், இதற்கிடையில் இன்னொரு கேள்வி நம் மனதில் எழுகிறது. நமது கண்ணியம், கவுரவம் எல்லாம் நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் போகிறது என்றால், நம் சகோதரர்களும் தந்தையர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலும் சிறுநீர் கழிப்பதாலும் போகாதா?

Friday, July 17, 2015

எம்.எஸ்விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?


ஆசை

('தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் 17-07-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்.)


மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகுசிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த்‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒருசிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்: ‘கல்யாணச் சாவு’. ஆம். அது ஒரு ‘கல்யாணச் சாவு’தான். இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் நிஜம். தன் வாழ்வால் எல்லோருடைய வாழ்வையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர் எம்.எஸ்.வி. அப்படிப்பட்டவரின் மரணம் உண்மையில் கல்யாணச் சாவாகத்தானே இருக்க முடியும்!

Saturday, July 11, 2015

இதயத்தால் பார்ப்பது எப்படி?


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 11-07-2015 அன்று வெளியான வெளியான கட்டுரை)

பறவைகளைப் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக, தொழிலாக, கலையாக இன்றைக்கு உருவாகி யிருக்கிறது. எல்லாவற்றையும் மீறிபறவை பார்த்தல்’ (Bird watching) என்பது அடிப்படையில் இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பின் பொறியைத் தூண்டிவிடுவதுதான்; இயற்கை வேறு, நாம் வேறு அல்ல என்ற பேருணர்வு நமக்குள் இயல்பாகவே தோன்ற அனுமதிப்பதுதான். ‘பறவை பார்த்தல்மூலமாக அப்படிப்பட்ட உணர்வைப் பெற்றிருப்பவர்தான் உருகுவேயைச் சேர்ந்த ஹுவான் பாப்லோ குலாஸோ. அவர் பார்வையற்றவர் என்பதுதான் இதில் விசேஷம்.

பார்வையற்றவர் எப்படிப் பறவை பார்த்தலில் ஈடுபடுகிறார், முரணாக இருக்கிறதே என்ற கேள்விகள் நம்முள் எழலாம். பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் எந்தப் புலனைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து இருக்கிறது இந்தக் கேள்விகளுக்கான தெளிவு. ஹுவான் காதுகளால் பார்க்கிறார்!

இன்னும் சொல்லப்போனால் இதயத்தால் பார்க்கிறார். காதுகளும் இதயமும் மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடியவை, தேவையானவற்றை மட்டும் பார்க்கக்கூடியவை. அதனால், பார்வையுள்ளவர்களைவிட பறவை பார்த்தலில் வல்லவர் ஹுவான் என்றுகூட சொல்லலாம். ஹுவானின் பறவை பார்த்தல் சாகசத்தைப் பின்தொடர்ந்து, அற்புதமான வீடியோ பதிவொன்றை பி.பி.சி. உருவாக்கியிருக்கிறது.

Monday, July 6, 2015

சினேகலதா ரெட்டி: ஒரு மகளின் நினைவுகூரல்

                                          சம்ஸ்காரா திரைப்படத்தில் சினேகலதா

நந்தனா ரெட்டி

(நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சினேகலதா ரெட்டியின் மகள் நந்தனா ரெட்டி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 05.07.2015 அன்று வெளியான இந்தக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. தமிழில்: ஆசை)


சூழலின் அமைதியைக் கிழித்தபடி, திடீரென்று ஒலிக்க ஆரம்பித்தது தொலைபேசி அழைப்பொலி. நான் போய் எடுப்பதற்குள் அது நின்றுவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டே மாடிப்படி வழியாகக் கீழே ஓடினேன். உடைந்த குரலில் என் அம்மாவின் குரல் கேட்டது. “என்னை மறுபடியும் இங்கே அழைத்துக்கொண்டுவந்துவிட்டார்கள். என்னைப் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார். நான் போய்ச்சேர்வதற்குள் அவரை மறுபடியும் அங்கிருந்து அவர்கள் கொண்டுசென்றுவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டே நான் விக்டோரியா மருத்துவமனைக்கு விரைந்தோடினேன்.


இந்தக் காட்சிகள்தான் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னைத் துரத்துகின்றன. அந்தத் தொலைபேசி ஒலியின் அழைப்பைக் கேட்டு நான் இன்றுவரையிலும் திடுக்கிட்டு, வேர்க்க விறுவிறுக்க விழித்துப்பார்க்கிறேன். நெருக்கடி நிலையின் மடத்தனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இன்னும் முயன்றுகொண்டிருக்கிறேன். என் அம்மாவை அவ்வளவு சீக்கிரம் இழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவும் இளம் வயதில், அர்த்தமேயில்லாமல். ‘ஏன், ஏன்’ என்று இன்னும்கூட எனக்குள் கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. எனக்குள் எழும் கோபத்தை ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதன் மூலம் தணித்துக்கொள்ள முயல்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம் அவருக்கு நான் உயிர் கொடுக்கவோ அவரது கனவுகளை நிறைவேற்றவோ என்னால் முடியும். ஆனால், இந்தப் பணியில் எவ்வளவு மோசமாக நான் தோல்வியடைகிறேன் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்கிறேன். ‘ஆராதனை நாயக’ பிரதமர் ஒருவர் இருக்கும் இந்த நேரத்தில் பழைய அச்சங்களெல்லாம் மீண்டும் தலைகாட்டுகின்றன.