ஆசை
('தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 19-07-2015 அன்று வெளியான கட்டுரை)
பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ‘இந்தியாவின் மகள்கள்’ குறித்துப் பேசிவந்திருக்கிறார் மோடி. இதன் சமீபத்தியத் தொடர்ச்சியாக ‘மகள்களுடன் செல்ஃபி’ என்ற புதுமையான யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். இது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால், மோடி உட்படப் பலரும் பெண்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவது தந்தைவழிச் சமூகத்தின் ஆதிக்கப் பார்வையை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது.
கடந்த சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “சகோதர சகோதரிகளே, நாமெல்லாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்த வெளியில் மலம்கழிப்பது குறித்து நமக்கு எப்போதாவது வருத்தம் ஏற்பட்டிருக்கிறதா? நமது தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணியம் காப்பதற்கு நமது வீட்டிலே கழிப்பறைகள் கட்டுவதற்கு நம்மால் ஏற்பாடுகள் செய்துகொள்ள முடியாதா?” என்று கேட்டது நம் நெஞ்சை உலுக்குவதாகத்தான் இருக்கிறது. ஆனால், இதற்கிடையில் இன்னொரு கேள்வி நம் மனதில் எழுகிறது. நமது கண்ணியம், கவுரவம் எல்லாம் நமது தாய்மார்களும் சகோதரிகளும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் போகிறது என்றால், நம் சகோதரர்களும் தந்தையர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலும் சிறுநீர் கழிப்பதாலும் போகாதா?
எதனுடைய நீட்சி?
பெண் நம் உடைமை, நம் குடும்பத்தின் சொத்து, பாரம்பரியத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பவள் என்று சமூகத்திடையே நிலைபெற்றிருக்கும், மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல விஷயம் போன்று தெரியும், கருத்தின் நீட்சிதான் கழிப்பறை விஷயத்திலும் தொனிக்கிறது. தெருவோரங்களில் எந்தக் கூச்சநாச்சமும் இல்லாமல் சிறுநீர் கழிக்கும் ஆண்கள், அவர்கள் அப்படிச் சிறுநீர் கழிக்கும்போது அவர்களைக் கடந்துசெல்லும் பெண்களின் கண்ணியத்தையும் தங்கள் கண்ணியத்தையும் ஒருசேர அவமதிக்கிறார்களே, அது எந்த நாகரிகத்தின் எச்சம்?
பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலையினர் போன்றோரெல்லாம் அதிக அளவில் சமூகப் புறக்கணிப்புக் குள்ளாக்கப்படுபவர்கள் என்பதால் அவர்கள் விஷயத்தில் கூடுதலாக அக்கறை காட்டுவது சமூகத்தின் கடமை. ஆனால், அந்த அக்கறையும் ஆதிக்கத்தின் போக்கை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கக் கூடாது.
ஆணுக்குக் கண்ணியம் தேவையில்லையா?
கழிப்பறையின் அவசியம் தொடர்பாக வரும் விளம்பரங்கள், வாசகங்கள் போன்றவையெல்லாம் பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் விஷயத்தையே முன்னிறுத்துகின்றன. இதன் விதை குழந்தைப் பருவத்திலேயே வீடுகளில் விதைக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளை அம்மணமாக இருக்க விடுவதும் பெண் குழந்தைகளுக்கு உள்ளாடை, அரசிலை போன்றவற்றைப் போட்டுவிடுவதும் வழக்கம். இதன் காரணமாக, ஆண் குழந்தை தனது அந்தரங்க உறுப்புகளை வெளியில் காட்டலாம் என்ற ஒருவித ஆதிக்க விதையை விதைத்துவிடுகிறோம். பெண் குழந்தைகளோ, பொத்திப்பொத்தி வைக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்! ‘ஆம்பள தடிமாடு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகலாம்’ என்ற கருத்து மிகவும் ஆரம்பத்திலேயே இரண்டு பாலினரிடமும் ஊன்றிவிடுகிறது. இது அப்படியே நீண்டுகொண்டுவந்து தெருவில் சிறுநீர் கழிக்கும் மனப்பான்மையில் கொண்டுவந்து விடுகிறது.
இது தொடர்பாக, ‘தி வையர்’ என்ற இணைய இதழில் முக்கியமான கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரை, கழிப்பறை விவகாரத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நிலவும், பெண்கள் முகத்தை மூடும் வழக்கத்தைக் குறித்தும் அலசுகிறது. கழிப்பறை தொடர்பான அக்கறைகள் பெரும்பாலும் ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என்பதை அந்தக் கட்டுரை துலக்கமாக நிறுவுகிறது.
கழிப்பறை விழிப்புணர்வு தொடர்பாக வித்யா பாலன் தோன்றும் அரசு விளம்பரங்களில் ‘முகத்தை மூடிக்கிறதுல மட்டும் இல்ல கவுரவம்…’ என்று பெண்களைப் பார்த்தே பேசுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் 98% பெண்களிடம் முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. ஆனால், திறந்தவெளியில் மலம் கழிப்போர் எண்ணிக்கையும் ராஜஸ்தானில்தான் அதிகம். இதை மனதில் வைத்துக்கொண்டு ராஜஸ்தானில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ‘முகத்தை மூடுவதில் அக்கறை காட்டும் பெண்கள் திறந்த வெளியில் மட்டும் மலம் கழிக்கிறார்களே?’ என்ற தொனியில் கேள்வி எழுப்புகின்றன. முகத்தை மூடிக்கொண்டு கையில் சொம்புடன் செல்லும் தனது தாயைப் பார்த்து ஒரு சிறுமி இதே போன்ற தொனியில் கேள்வி கேட்கும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ராஜஸ்தானில் நிறைய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘மகள்களும் மருமகள்களும் வெளியில் செல்லக் கூடாது. உங்கள் வீட்டுக்குள் கழிப்பறை கட்டுங்கள்’ என்ற வாசகம் இடம்பெறும் விளம்பரமும் அதிகம் காட்சிப்படுத்தப்படுகிறது. இதற்கு
மாறாக உத்தரப் பிரதேசத்தில் சில கிராமங்களில் ‘துணிச்சல் மிகுந்த திருவாளர் சாகசக்காரரே, புதரை விட்டுவிட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துங்கள்’ என்ற விழிப்புணர்வு வாசகம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதை ராஜஸ்தானும் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று ‘தி வையர்’ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
பெண்கள் பாதுகாப்புக்காகவும் பெண்களின் கண்ணியத்துக்காகவும் தானே இப்படியெல்லாம் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்படுகிறது; இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். பாதுகாப்பு, கண்ணியம் ஆகிய நோக்கங்களில் தவறில்லைதான். ஆனால், இதைச் சமன்படுத்துவது போன்று ஆண்கள் கண்ணியமாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டு மல்லவா? ஆண்கள் கண்ணியமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் பெண்களும் தங்கள் கண்ணியத்துடன் இருப்பார்கள். இந்தச் செய்தியை சமூகத்தின் மனதில் விதைக்கும்படி பிரச்சாரம் மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
- நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: இந்தியாவின் கவுரவம் மகன்களும்தான்!
No comments:
Post a Comment