Tuesday, February 20, 2024

தில்லைக் காளி பதிகம்! நவீனத் தமிழ் கவிதையில் பதிக முயற்சி!


கடந்த ஞாயிறு (18-02-24) தில்லைக் காளியைச் சென்று பார்த்தேன். அங்கே அரை மணிநேரத்தில் பதிகம் எழுதிவிட்டேன் (பத்துப் பாடல்கள்). தில்லைக் காளி பதிகம்! நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியில் என்றாலும் அவர்களுக்கு தூரத்தில் கூட நாம் நிற்க முடியாது. ஆயினும் அவர்களுக்கும் நமக்கும் பொதுவாய்த் தமிழ் இருக்கிறாள். அவளின் தன்னம்பிக்கைதான் இம்முயற்சிக்கும் காரணம். அநேகமாக நவீனத் தமிழ் இலக்கியத்தில் திருத்தலம் சென்று பதிகம் இயற்றுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி தொடர்ந்து எல்லா மதத் திருத்தலங்களிலும் பதிகம் பாடவிருக்கிறேன். சர்வமதப் பதிகங்கள் என்பதால் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்றாக இந்த முயற்சி இருக்கும்!

இந்தப் பதிகங்களில் எந்தத் திட்டமிடலும் இருக்காது. அங்கே போய் எழும் உணர்வுகளையே அப்போதே எழுதுவேன். பிறகு மிகச் சிறிய அளவில் திருத்தங்கள், சேர்த்தல்கள் மட்டும் உண்டு. அடிப்படையில் மாற்றம் இருக்காது.

கோயில் சார்ந்த நடைமுறைகள், சொல்வழக்குகள் ஏதும் அறியாதவன் என்பதால் பிழையேதும் இருந்தால் மன்னித்தருள்க!
*

தில்லைக் காளி பதிகம்
**
1.
அபிஷேகம் முடிந்து
அம்மைக்கு ஒப்பனை
கண்ணை மட்டும்
தொடவில்லை

ஒப்பனையெல்லாம்
அண்ட முடியாத
அண்டம் அது

அதன் முன்னே
நீண்ட வரிசை நிற்கிறது
கண்திறந்த அபிஷேகத்தில்
குளிக்கிறது

திரைபோட்டாலும்
நடை சாத்தினாலும்
நிற்காத அபிஷேகம்
*

2.
எனக்கோ கண்ணாடி இல்லாத
மங்கலான பார்வை கிடைத்தது
ஒரே ஒரு நிமிடப் பார்வை

அப்பார்வையில்
ஒப்பனை இல்லாத ஒரே இடமான அம்மையின் கண்ணோ கண்ணாடிபோல் காட்சியளிக்கிறது

தன் வெப்பம்
தான் தணித்து
அருளை முன்நீட்டும்
கண்ணாடியோ

முன்வெப்பம்
இருந்த இடத்திலேயே
அருளாக்கும் கண்ணாடியோ
*

3.
பதிகத்தின் முதல் கவிதை மேல்
வந்து விழுந்தது
ஒரு சாமந்திப் பூ
தரையில் ஓடும்
அம்மை அபிஷேகத் தாரையின்
நிறம்கொண்டு

அபிஷேகம்
தன்னைப் பற்றிய கவிதைக்கா
இல்லை
அபிஷேகம்
கவிதையின் முடிவா
இல்லை
அபிஷேகம்தான்
கவிதையை எழுதியதா
*

4.
வந்த நேரம்
வெகு தாமதம்

பிள்ளைகளைக் கிளப்பிக்கொண்டு
வந்ததால்
அப்படி

அபிஷேகம் இல்லாமலேயே
அவர்களும் வந்துவிட்டார்கள்

காத்திருந்ததும்
வெகு நேரம்

உச்சிக் கால பூஜையின்
கடைசி அபிஷேகம் முடிந்து
திரை திறந்து
அம்மை காட்சியளித்தது
சிறு நேரம்

பின் திரை போட
நடைசாத்த
கதவுசாத்த
துரத்தப்படுகிறோம்

கொஞ்ச நேரத்துக்கா அப்பா
இவ்வளவு தூரம்
இவ்வளவு நேரம்
என்றே சிணுங்கும்
பிள்ளைகள்

கொஞ்ச நேரம்தான்
அந்தக்
கொஞ்ச நேரத்தில்
எனக்குள் பாய்ந்தது எது

காலத்தைச் சுருக்கி விரித்துச்
சுருக்கும் இதயமல்லவா

இதயம் பெறுவது
கண நேரம்தான்
அதன் பின்
இதயத்துள் வாழ்வதென்பது
நித்தியம்
*

5.
அபிஷேகத்தின் போது
அம்மையின் வெற்றுடம்பில்
கரும் உடம்பில்
சலசலக்கிறது
ஒரு ஓடை

அம்மை உடம்பு
ஓடையின் அடித்தரையாய்
நெளிகிறது

அவள் உடலின்
இருளுக்குள்ளிருந்து
அருளைச் சுரந்தெடுக்க
எத்தனையெத்தனைதான்
அபிஷேகம்
*

6.
அம்மை சன்னிதிக்குள்
அம்மையும் ஒரு யாசகி
யாவரும் அங்கே யாசகரே
பெறும் சன்னிதியிலும்
அதிகம் பெறுபவள் அவளே
அருள் செய்யும் சிலிர்ப்பே
யாவினும் மிகப் பெரிது
*

7.
யாவரும் அருள் பாலிக்கின்றனர்
அம்மை சன்னிதிக்குள்

யாவருக்குமான
அருள்பாலிப்பு வளையம் இது

யாரோ இரு சகோதரிகள்
மாயி மகமாயி நீ சூலி
என்று பாடி அருள்பாலிக்கின்றனர்

பதின்சிறுமியொருத்தி
பச்சைப் பாவாடை யவ்வனத்தால்
அருள்பாலிக்கின்றாள்

ஒரு குடும்பம்
தேன்குழைத்த பொங்கலில்
முந்திரியை நீந்த விட்டுத்
தந்தருள்பாலிக்கின்றது

யாரோ ஒரு பெண்
செம்மதுரக் கொய்யா கொடுத்து
முருகா வாங்கிக்கொண்டாயே
என்று தொட்டு வணங்குகின்றாள்
என் குழந்தைகளின் காலை

ஒருவர் தன்னைக்
கீழே வைக்குமிடத்தில்
அருளின் கோபுரம் மேலே
எழக் கண்டேன்

அதை இச்சன்னிதிக்குள்
கண்டேன்
*

8.
உற்சவ அம்மை
முந்தியடைத்தாள்
மூலவர் அம்மை
பிந்தியடைத்தாள்
சாத்தப்பட்டது கதவு
திறக்கப்பட்டது திட்டிவாசல்
எப்போதும் உறங்காத
அம்மையின் கண்போல
*

9.
இறுதியில் என்ன செய்ய வேண்டும்

தரையில் விழுந்து கும்பிடு
என்றாள் உடலம்மை
நானொரு நாத்திகனென்று
அங்கே விளக்க நேரமில்லை
அம்மையைக் கும்பிட
நாத்திகனாயிருப்பது தடையுமில்லை

அப்படியே படுத்துவிட்டேன்
மூடிய அம்மைத் திருவுரு இதயம்
எனக்காகத் துடித்துக்கொண்டிருந்தது
தரையில்
குளிர்ந்து

அக்குளிருக்கே
இம்முழுவுடல்
நெடுவணக்கம்

அக்குளிரை உண்டு
குளிராய்
சன்னிதியிலிருந்து வெளிவருக
உடலே
*

10.
ஆறுமுகம்
அருளிடும்
அனுதினமும்
ஏறுமுகம்
என்றொரு மந்திரம்

கோயிலுக்கு வெளியே
கிடைத்தது

அம்மைக்கு
அதிலொன்றும்
பிரச்சினை இருக்காது

அதை அருளியவளே
அவள்தானே
செம்பிழம்பு பொட்டுவைத்து
பொட்டின் சுடராய்
உடல்கொண்ட யாரும்
அம்மைதானே
-ஆசை, 18-02-24


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:

4 comments:

  1. மிகச் சிறந்த கவிதைகள். ஆன்மீகம் கடந்த இறைநெறிகாட்டும் தமிழ் உளவியலை வெளிக்காட்டும் கவிதைகள்.

    ReplyDelete
  2. உங்களுடைய இந்த புதிய முயற்சி போற்றத்தக்கதாகும். மனம் நிறைந்த வாழ்த்துகள். சில அடிகள் என்னுடைய இளமைக்காலம் முதல் இன்று வரை பட்டீஸ்வரம் துர்க்கையினை நான் சென்று, கண்டு வரும்போது பெற்ற சில அனுபவங்களைப் பிரதிபலிப்பதைப் போல இருந்தது.

    ReplyDelete
  3. திட்டி வாசல் அம்மையின் கண் போல. அருமை. பொன்.கந்தசாமி.

    ReplyDelete
  4. தில்லை சென்று நடராஜனைப் பாடாமல் காளியைப் (சிதம்பரியைப்) பாடியிருப்பது ஒரு புது முயற்சி. பாராட்டுகள்.

    இந்தப் பதிகத்தின் முதலாம் கவிதையில் இடம்பெற்றுள்ள ஒப்பனையெல்லாம் அண்ட முடியாத அண்டம், கண் திறந்து அபிஷேகத்தில் குளிக்கும் வரிசை, திரை போட்டாலும் நடை சாத்தினாலும் நிற்காத அபிஷேகம் போன்ற வரிகள் அற்புதம்.

    "அவள் உடலின்
    இருளுக்குள்ளிருந்து
    அருளைச் சுரந்தெடுக்க
    எத்தனையெத்தனைதான்
    அபிஷேகம்"

    சிறப்பு. உண்மையில் அந்த அபிஷேகம் நமக்குள் இருக்கும் மருளை நீக்கி தெருளை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வை நாம் அம்மை மீது ஏற்றிப்பாடுகிறோம். தன் கருணையால் அம்மை அதை ஏற்றுக்கொள்கிறாள்.

    அம்மையின் சன்னதியில் மானிடர்களையும் நடமாடும் தெய்வங்களாகக் காட்டியிருப்பது அருமை.

    "ஒருவர் தன்னைக்
    கீழே வைக்குமிடத்தில்
    அருளின் கோபுரம்
    மேலே எழக் கண்டேன்"

    ஜீவகாருண்யம் சுரக்கும் இடத்தில் தான் கடவுள் தோன்றுகிறார். அதுவே உண்மையான வழிபாடு என்கிறார் வள்ளலார்.

    செம்பிழம்பு பொட்டுவைத்து
    பொட்டின் சுடராய்
    உடல்கொண்ட யாரும்
    அம்மை தானே

    என்று முடித்திருப்பது அழகு.

    பெண்கள் அனைவரையும் நடமாடும் சக்தி வடிவங்களாகக் காண்பதுவே சாக்தத்தின் அடிப்படை.

    உங்களின் அடுத்தடுத்த பதிகங்களுக்காகக் (மற்ற மத கடவுள்கள் மீதான பதிகங்கள் உட்பட) காத்திருக்கிறேன். உங்களின் இந்த முயற்சி வெல்லட்டும். எப்போதும் திறந்திருக்கும் திட்டிவாசலான அம்மையின் கண்ணிலிருந்து திமிறி வரும் அருளாற்றல் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும். வாழ்த்துகள். நன்றி !!

    ReplyDelete