1.
அன்னைக் குங்குமப் பிரகாசம்
ஒரு சன்னிதி
உடலை நிறைப்பது
ஒரு சான்னித்தியம்
மனதில் மலர்வது
ஒரு மகத்துவ யோனி
2.
மனதில் மலர்ந்த
மகத்துவ யோனி
உடலின் எல்லைகள்
விசும்பின்
எல்லையாய்
மாறிடக் கண்டேன்
உடலின் அவயவங்கள்
ஒவ்வொன்றும்
பறவையாய் மாறி
எங்கெங்கும் பறந்திடக் கண்டேன்
3.
பறந்திடக் கண்டேன்
பயிர்செய் வயலெல்லாம்
விசும்பின் வளியில்
விசும்புக்குச் சிலிர்த்தாற்போல்
ஒற்றைப் புல்லாய்
மாறியது விசும்பு
அப்பசும்புல்
அசைப்பது எவ்வளி
4.
வளிசெய் துருத்தியின்
வழிகேட்டுப் பறக்கிறேன்
எதிர்வளி பறத்தல்
எளிதன்று
எனினும்
அதுவொன்றே தரும்
உயிர்வளி
5.
உயிர்வளி ஓசை
வெற்றிடம் செய்யும்
வெற்றிடத்துள்
பறத்தல் தேவையில்லை
இருத்தல் போதும்
இருப்பிடம் சேர்க்கும்
6.
இருப்பிடம் சேர்ந்தால்
என்ன வரும்
இருப்பிடம் தன்னில்
கண்கள் என்ன காணும்
இங்கிருந்தே காண
ஆவல் துடிக்கிறது
மனதை உதைத்துப் பறக்கிறது
இருக்கும் இடத்துக்கே
இருப்பிடம் வரும்
இடமதை அழி மனமே
7.
அழிந்த மனதில்
இடமிருக்காது
காலமிருக்காது என்று
அங்கிருந்தே இருப்பிடம்
சொல்வது இங்கெனக்குக்
கேட்கிறதென்றால்
இருந்த இடத்திலிருந்தே
பறக்கின்றேனா நான்
இருப்பிடத்துக்குள்
8.
இருப்பிடப் பறத்தலில்
அமர மரமிருக்காது
அருந்த நீரிருக்காது
சிறகு மறைய
உடல் கரைய
இருப்பிடம் தோன்றும்
கடைசி இணுக்கும்
மறைந்த பின்
9.
மறைந்த பின்
தோன்றும் இடத்தில்
நானிருக்க மாட்டேன் என்றால்
ஏனிந்தப் பறத்தல்
என்று கேட்க
இருப்பிடம் சொன்னது
மறைந்த இடத்தில்
தோன்றும் பறவையாய்
இருந்து பார் என்று
10.
பாரென்று சொன்னது பார்
பார் தோன்றி மறைந்தது பார்
யாரென்று தெரியவில்லை
நானென்பது புரியவில்லை
செஞ்சுடர் சோதியெழுந்தது
கண்கள் கண்டதை நோக்கிப்
பறந்தது பறவை
அங்கே அப்படியொரு தகிதகிப்பு
அன்னைக் குங்குமப் பிரகாசம்
-ஆசை, 21-02-24
தில்லைக் காளியின் குங்குமக் கொதிப்புக்கு
*
கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:
No comments:
Post a Comment