Wednesday, February 14, 2024

ஐந்து நாட்களில் 174 கவிதைகள்!

பிப்ரவரி எனக்கு ஆக்கினை மாதம்! சரியாக 5 ஆண்டுகளுக்கு முன் (2019) இதே பிப்ரவரியில்தான் எனக்குக் காளியின் ஆக்கினை கிடைத்தது. நான் ஒரு நாத்திகன், ஆனால் என் கவிதை அப்படி கிடையாது; ஆகையால் அப்படியே அந்த ஆக்கினையை ஏற்றுக்கொண்டேன். ஒரே வாரத்தில் 100 கவிதைகள். மூன்று மாதங்களில் 300 கவிதைகள், 50 ஆங்கிலக் கவிதைகள் உட்பட. இந்தக் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்தான் 2021-ல் ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ என்று இரண்டு தொகுப்புகளாக வெளியாயின. 2019-ல் அந்தக் கவிதைகள் எழுதுவதற்கு முன்பு என் கடைசிக் கவிதைத் தொகுப்பு 2010-ல்தான் வெளியாகியிருந்தது. அந்தக் கவிதைகள் பேயாட்டம் ஆடிவிட்டுச் சென்ற பின் மறுபடியும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் கவிதையே வந்தது.

ஆக, இந்த ஆக்கினையின் காரணமாகத்தான் தாங்க முடியாத சொர்க்கம், தவிர்க்க முடியாத நரகம் என்று இரண்டும் இன்றுவரை மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மிக ஆச்சரியமாக, விநோதமாக அதே நாளில் ஐந்து ஆண்டுகள் கழித்து ஆக்கினை கிடைத்தது. சில நாட்களுக்கு முன்புவரை காந்தி ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்களில் 70 கவிதைகள் எழுதினேன். கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து (11-02-24) மீண்டும் காளி ஆட்கொண்டுவிட்டாள். ‘அருளால் சிவந்த மேனியோள்’ கடந்த ஞாயிறு காலையிலிருந்து என்னைக் கவியால் இடைவிடாமல் சிவக்க வைத்துக்கொண்டிருக்கிறாள். இதன் விளைவாக ஐந்து நாட்களில் 174 கவிதைகள். அவற்றுள் சில இங்கே!

நிசும்பசூதனி
**
வதம் செய்த
கோலம் முடிந்து
அம்மை முகம்
இதம் செய்யும்
தம்புரா ஆகிறது
உயிரில்
ஊன்றிய
கார்வையொன்று
எங்கும் படர
மினுக்குச் சிவப்பை
முகத்தில் அருள்கிறாள்
அம்மை
*நிசும்பசூதனி - சோழர்களின் குலதெய்வம்
(மேற்கண்ட கவிதைதான் நூறாவது கவிதை)
**

பொட்டு
**
சிற்றகலை
அடிவயிற்றில்
ஏந்திச் செல்லும் பெண்ணே
தீபம் மட்டும்
உச்சியில் காண்கிறேன்
தீபத்தைக் குவித்தொரு
சிறு பொட்டும் காண்கிறேன்
அதில்
தீபத்தின் உட்தகிப்பின்
உட்சிவப்பைக் காண்கிறேன்
**

அம்மை பிறந்த வேகம்
**
மூல ஒளி
பிறப்பித்தவள் அம்மை
அவளுக்கும் முன்னே
பிறந்தது அவள் யோனி
ஒளி பிறப்பிக்க வேண்டும்
என்றந்த யோனி
எண்ணிய வேளையிலே
அம்மை பிறந்துவிட்டாள்
அம்மை பிறந்த வேகம்
அசரடிக்கும் வேகம்
அசரடிக்கும் வேகத்திலேயே
ஆதி ஒளி தோன்றிவிட்டது
**

மூலமறதி
**
மூலமறதிக்குள்
போகும் வழியெலாம்
வாழ்வு வழிமறித்த
தூசுதும்புகள்
தூசகற்றித் தும்பகற்றித்
துடைத்து வழிகாட்டு
மூலமறதி
கோளவடிவில்
குந்திய இடம் சுற்றி
எண்ணங்களின் கோது
கோதகற்றி உமியகற்றி
மூலமறதிக்குள்
என்னை இடு
கோளம் சுற்றி
நினைவடையாமல்
உன் சூலமத்தனையும் நடு
**

ஒளிச்சேர்க்கை
**
ஒளி என்னை
நிறைத்தது
வெளியில் உள்ள ஒளியுடன்
என்னை இணைத்தது
அது வந்த வேலை
அதுதான் என்று தெரிந்தது
**

புகைமண்டபம்
**
மூக்கும் நாவும்
வெந்நீர் ஊற்றில்
ஆழப் புதைந்திருக்க
நெற்றிக்கு ஒத்தடம் கொடுக்கும்
இனிய யோனி மேடே
முகம்
தற்கொலை செய்துகொண்ட
தடாகத்தின் ஓரத்தில்
நெற்றியை இழுத்துப்போட்டு
படுக்க வைத்திருக்கும்
மெத்திட்ட புல்வெளியே
அயிரை அளைந்த
அடிமணலே
அடிமணலின்
இமை மயிரே
அடியில் எரியுமொரு தீயின்
வெளித்தெரி புகைமண்டபமே
புகைமண்டபத்துள்ளே
வவ்வாலாய்த் தொங்கிச்
சாகப் பிறந்தவன் இவன்
**

No comments:

Post a Comment