Tuesday, February 23, 2021

ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ ஓர் அறிமுகம்



ராஸ்மி 

தனது சக உயிரினங்களை வெற்றிக்கொண்ட மனிதகுலத்தை தற்போது தொழில்நுட்பங்கள் ஆளுகின்றன என்று கூறும் ஹராரி யுகத்தில், ஆசையின் கவிதை உலகம் இப்பேரண்டத்தை தனக்குள் அடக்கி அனைத்துப் படைப்புகளுக்கும் சரிசமமான இடத்தை உறுதி செய்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்கிறது. 75 கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு, கிட்டத்தட்ட இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றைப் பற்றியுமே பேச முற்படுகிறது. இவற்றுக்காக இதற்காகத்தான் இந்த கவிதைகள் என்று வகைமைப்படுத்திட முடியவில்லை. உலக உயிர்களுக்கெல்லாம் இக்கவிதைகளை பொருத்திப் பார்த்தாலும் சாலப் பொருந்திப் போகிறது.

‘குவாண்டம் செல்ஃபி’யின் மொத்தக் கவிதைகளும் இந்த ஒரு கவிதைக்குள் அடங்கிவிடுகின்றன.

 “உடலின் எல்லை எதுவரை

 என்று தெரிந்தாக வேண்டும்

எனக்கு’’ - எனத் தொடங்கி ,

“மரணமென்பது

விரித்தலுக்கெதிரான

எல்லையற்ற சுருங்குதலின்

திடீர் கலகமன்றி

வேறென்ன”  என்று முடியும்.

இந்தக் கவிதையின் முதல் பத்திக்கும் இறுதி பத்திக்கும் இடையில்தான் ‘குவாண்டம் செல்பி’ கவிதை உலகம்  தன்னை சுருக்கி விரித்து நிகழ்த்திக் காட்டுகிறது.

ஒரு கவிதையை அணுகும் பார்வைக்கோணம் நிச்சயம் வாசகனை சார்ந்தது. எனக்கு ‘குவாண்டம் செல்ஃபி’யை வாசிக்கும்போது ஒரு குறு நகரச் சிறுவனின் கண்ணோட்டத்தில் இக்கவிதைகள் அமைந்துள்ளதாக தோன்றியது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையில், சவாகாசமாய்த் தகரப் பீப்பாயைக் கையில் பிடித்துபடி  செத்துக்கொண்டிருக்கும் கிழவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை போன்ற சிறுவன் அவன். நவீன உலகின் எவ்வித உளவியல் கோட்பாடுகளுக்கும் தர்க்கத்துக்கும் உள்ளாகாத சிறுவன் அவன். இத்தகைய தீங்குகளில்லாமல் உலகை தரிசிக்கும் தன்மை இக்கவிதைகளின் ஆன்மாவாக உள்ளது.

" நீ என்

ஆன்ம சகோதரி,

ஆத்மிக அன்னை,

அடிமனதின் காதலி என்

புலன்களின் வேசி. "

இதில் ஒரு பெண் எத்தனை உருவாக, உயிராக விஸ்தரிக்கப்படுகிறாள் என்பதுனூடே அவள் மீதான பிரியம் எப்படி எல்லையற்ற அண்டமாக பரந்து அவளென்ற புள்ளிக்குள் அமிழ்கிறது.

“நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா” என்ற கவிதை அனைத்து மகன்களும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்தக் கவிதை உலக கற்பிதங்களால் உண்டாக்கப்பட்ட நம் மனதின் அழுக்கைக் கழுவிவிடுகிறது.

“உன் மதாவிடாய் வலியைத் தன் மேல் பூசிக்கொள்ளத் தெரியவில்லை என்றால் இக்கவிதை உயிரற்றது என்று அர்த்தம்” என்று தொடங்கும் கவிதையில், ஆசையின் ‘குவாண்டம் செல்பி’யின் குறிக்கோள் நிறைவடைகிறது. அது இப்பேரண்டத்தின் அற்புதத் தருணங்களை வெளிச்சமிட்டு அதன் மடியில் நம்மை அணைத்து நம் அத்தனை தீங்கெண்ணங்களையும் வெளியேற்றச் செய்கிறது.

“சுவரை உதைத்து உதைத்து” என்ற சர்ரியல் கவிதையை பல முறை வாசித்தேன். ஒரு பெண்ணாக, ஒரு தேசாந்திரியாக, பூனையாக, செடியாக இன்னபிற உயிராக என்னை  கற்பனை செய்து வாசிக்கும்போது ஒவ்வொரு வாசிப்பிலும் அக்கதாபாத்திரத்திற்குரிய தரிசனத்தை அடையும் சாத்தியத்தை அக்கவிதை எனக்கு வழங்கியது.

ஒட்டுமொத்தமாக,‘குவாண்டம் செல்ஃபி’ வாழ்தலின் ஊடாக மேற்கொள்ளப்படும் பயணம் பற்றிய கதைகளாய் தன்னை பிறப்பித்துக்கொள்கிறது. விலக்கப்பட்ட கனியை உண்டு அறிதலை அடையாமல், அறியாமையின் வழியே ஞானத்தை நோக்கிய பயணமாக அந்தப் பயணம் அமைகிறது.

நூல் விவரம்:

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu.

Monday, February 22, 2021

மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

 


கண்டராதித்தன்                                        

     ஏழூர் எல்லையைக் காக்கும் எல்லைக் கோயில் அது, ஒரு பக்கம் ஊர்,மற்றொரு பக்கம் நீர் நிரம்பி வழியும் ஏரி, மற்ற இரண்டு பக்கங்களிலும் அறுவடைக்குத் தயாராகவும், அறுவடை  முடிந்தும் இருக்கும் வயல்கள்  உள்ளே வாசியம்மன். உக்கிர தெய்வம். ஆனால் எல்லையைக் காப்பவள், மனம் பிறழ்ந்தவர்களையும் கதியற்றவர்களைம் திக்கு தெரியாதவர்களையும்  அன்போடு அரவணைத்து இரவும் பகலுமாய்க் காத்து நிற்பவள்,ஏழூர் மக்களும் மனம் விரும்பித் தேடி வரும் அன்னை அவள்.

        கோயில் என்று சொல்ல முடியாத கட்டிடம் அது.  சுண்ணாம்புக் காரை உதிர்ந்தும் எண்ணெய்ப் பிசுக்குடனும் அழுக்குடனும் காணப்படும் வசிப்பிடம்தான் ஆண்டாண்டு காலமாக அன்னைக்கு வாய்த்திருக்கிறது. குனிந்து சென்று சேவிக்கும்படியான நுழைவாயிலின் வழியாக உள்ளே செல்லும்போது சப்த நாடியும் ஒடுங்குவது போலவொரு அமைதி. அன்னை வாசியம்மன் கருத்த பெண்ணின் அகண்ட முதுகைப்போல உள்ள கற்பலகையில் வீற்றிருப்பாள், அங்கிருந்து அன்னையை வணங்கி எங்கள் ஊர் கற்பகம் பாடும் பாடல்கள் பல. என் நினைவில் இருப்பவை இரண்டே இரண்டு. அவற்றுள் ஒன்று இது:

 பல்லது கடித்து மீசை படபடவென்றே துடிக்க

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரியமேனி எம்படர் வரினும் என்னை

ஒல்லையில் தாரகாரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

எனக்குத் தெரிந்து இந்தப்  பாடல்களை நெக்குருகப் பாடும் கற்பகம் சில சமயம்  அன்னைக்கு எதிரில் நின்று மனம்போன போக்கில் வசைமாரி பொழிந்துவிட்டுத் தரையிலிருந்து மண்ணெடுத்து அப்பிக்கொண்டு செல்வார். புதிதாகப் பார்ப்பவருக்கு அந்தக் கோலம் அச்சுறுத்துவதாக இருக்கும்.

கற்பகம் வீடு,மனைவி, பெற்றோர் என ஏதும், யாரும் அற்றவர். கிடைத்த வேலையைச் செய்து கிடைத்த இடத்தில் உண்டு உறங்குபவர். கற்பகம், வாசியம்மனுடன் தன் வாழ்நாளுக்குமான பிணக்கும் நேசமும் வெறுப்பும் பகையும் ஊடலும் கொண்டிருந்தவர். ஒரு நாள் அங்கிருந்த மணம் வீசும் இலுப்பைத் தோப்பில் இறந்தும் போகிறார். ஊர், வெறியன் இறந்துபோனதாக அவர் வாழ்வை  முடித்துவிடுகிறது.        

       கற்பகம் கற்றவர் அல்ல, உற்றார் உறவுகளற்று மனம் போன போக்கில் வாழ்ந்து மடிந்தவர். அவருக்கிருந்த ஒரே பிடிப்பு காளிசொருபமான அன்னைதான். இங்கு கவிஞர் ஆசைக்கு ‘அண்டங்காளி’ இப்படியான தோற்றத்தில் இருந்திருக்க கூடும் என்றே இத்தொகுப்பை வாசிக்கும்போது தோன்றுகிறது.

     ஒரு நவீன மனதை வைத்துக்கொண்டு இத்தகைய கவிதைகளை எழுத முடியுமா என்பதுதான் எனக்கு முதலில் எழுந்த கேள்வி. சரி எழுதலாம் என்றே வைத்துக்கொள்வோம், ஒன்றிரண்டு கவிதைகள் இதுபோன்று எழுதவும் சாத்தியம்தான். ஆனால்  ஆசை இத்தொகுப்பில் உள்ள மொத்தக் கவிதைகளின் வழியாகவும் உக்கிர மனநிலையுடனும், அடங்க மறுத்தும் அண்டங்காளியுடனான  உறவின் பல்வேறு படிநிலைகளை வெவ்வேறு விதமாகவும் எழுதியிருக்கிறார். இந்த வகையில் இந்தக் கவிதைகள் விசேஷமானவை  என்றே நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு ’அண்டங்காளி’யின் சில தெறிப்புகள்;

‘எனக்கும் வாய்த்திருக்கிறாளே…’ கவிதையில்

தலைமேல் காலைத் தூக்கி

ஆடும்

தரங்கெட்ட தறுதலையை

பெண்குலத்தின் பேரழுக்கை

தலைமேல் தூக்கிவைத்து

கொண்டாடுகிறாயே

குடும்பத்துக்காகுமாடா

குலம் செழிக்க

வேண்டுமடா

என்றெல்லாம்

என் வீட்டார் சொல்லித்தான்

பார்த்தார்கள்

பக்கம்-38ல் உள்ள கவிதை:

இருமுனை முடிவின்மையின்

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

பக்கம் 37:

நாறத்தலை விரித்து

நாலாத்திசையும்

கண்ணுருட்டி

தான்வேகும்

கொடுங்கனலை

அண்டங்கொதிக்க

அடிப்பற்ற வைத்து

கோரத்தாண்டவம்

கொற்றவை நீ

ஆடித்தெறிக்கும்போது

அஞ்சாமல் நிற்பேனோ

ஆகாசந்திறக்கும்

அன்னை அன்னை அன்னை

என்ன செய்தாய்

என்னை என்னை என்னை

இந்தத் தெறிப்புகள் சில எடுத்துக்காட்டுகள்தான்.

    இத்தொகுப்புகளின் மொத்தக் கவிதைகளையும் வாசிக்கும்போது இவற்றில் இருக்கும்  தாள கதியான நடை இக்கவிதைகளுக்கு அடிநாதமாக நின்றுகொண்டிருக்கிறது என்றே எனக்குப் பட்டது. ஆனாலும் மொத்த கவிதைகளையும் அண்டங்காளி நிரப்பியிருப்பதில் சற்றே மனப்பிசகு இருப்பது போல நினைப்பும் வந்தது.

 ஆசையின் இத்தொகுப்பில் காளியின் வடிவம், அனைத்து விதமான பெண் பாத்திரங்களுக்கும் பொருந்தியிருப்பது சிறப்பு. எனக்கு முதலில் எப்படி இது சாத்தியமாயிற்று என்றுதான் தோன்றியது.இந்த மனநிலையை எட்ட முடிந்திருப்பதே வினோதமானது என்றே கருதினேன். பிறகு அவரது முன்னுரையை வாசிக்கும்போது ஒருவிதமான தெளிவுக்கு வர முடிந்தது.

  கவிதையினால் ஏற்படும் விளைவுகள் என்பது இதுதான். இங்கு காளி எல்லா விதமான சொருபங்களாகவும் கவிஞருக்குத் தென்படுவது அவரது வினோத மனநிலையை தெளிவாக உணர்த்துகிறது. அவள் இந்த விதமான வடிவங்களை ஏறபதற்கானவள் என்றே நானும் கருதுகிறேன், காளியைப் போன்றே அணுக்கமானவளாகவும் காமக்கிழத்தியாகவும் அன்னையாகவும் சகோதரியுமாகவும் தோழியுமாகவும் இருக்க, கதியற்றவனுக்கு வேறு யாருண்டு?.அவளையே பல்வேறு வடிவ நிலைகளுக்கு வரித்துக்கொள்ளவும்,அதை அவ்வாறே எழுதவும் வாய்த்த மனதை கவிஞர் கொண்டிருந்ததும், நான் அறிந்தவரை அதுவொரு ஆட்கொள்ளப்பட்ட மனநிலை. இங்கிருந்து இத்தகைய கவிதைகள் தெளிந்த நீரோடையைப்போல சப்தமெழுப்பியபடிதான் இருக்கும். இது உருவாக்கும் ஓசை ஒரே கதியில்தான் இருக்கும், பல நேரங்களில் சலிப்பாகவும். ஆனால், இத்தகைய இடங்களில் நாம் கண்டிராத பல நூற்றுக்கணக்கான உயிரினங்கள் தன்போக்கில் வாழ்வைக் கொண்டிருக்கும். அதுபோன்ற நிலை ஆசைக்குக் கிட்டியிருக்கிறது. நம்மில் சிலருக்குக் கிட்டியும் அதை உணராமல் இருக்கிறோம் அவ்வளவுதான்.

இன்று மாசி மாதம் இரண்டாம் நாள், மாசி அண்டங்காளி பிறந்த மாதம். இதிலொரு நாளில் தங்களது நேர்த்திக் கடனுக்காகச் சுடுகாட்டிலிருந்து காளி வேடமிட்ட பெண்கள் கபாலத்தையேந்தி அகால இரவில்  ஊர்வலம்  வருகிறார்கள். அதில் நமது அன்னை, காதலி, சகோதரி என அனைவரும் கலந்து ஒன்றுபோல வீதியைக் கடக்கிறார்கள்.

  .

இக்கவிதைகளை எழுதியதன்  வாயிலாக  கவிஞர் ஆசை எந்த இடத்தில் நின்றிருப்பார் அல்லது எதை அடைந்திருப்பார் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். மிகுந்த ஆயாசம் கொள்ளும் ஒரு கரிய நிழலில் அவர் நிற்பது போலத் தோன்றுகிறது. அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும்; ஏனெனில் ஒரு கவிஞனாக எனக்கு துக்கமாக இருக்கிறது.

                                         

அண்டங்காளி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

Friday, February 19, 2021

குவாண்டம் செல்ஃபி: ஓர் அறிமுகம்



குட்டி ரேவதி

கவிஞர் ஆசையின் “குவாண்டம் செல்ஃபி” நூல் வெளியீடு!

இந்நூலை முகநூலில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

“குவாண்டம் செல்ஃபி”, பெரும்பாலும் மனித யாக்கை பற்றிய கவிதைகள். 

பாலியல் லயிப்பை  இயல்பான சொற்கள் கொண்டு  உடல் மீதே எழும் கவனக்குவிப்பு. 

நிகழ்கணத்தின் முன் - பின் என்ற இரு எல்லைகளுக்கு வெளியே இழுத்துச்செல்லும் சொற்களின் நீட்சி. 

மேலோட்டமான வாசிப்பில் கைப்பற்றிவிட முடியா அர்த்த வெளிப்பாடு. 

இன்னொரு வாசிப்பிற்கு ஈர்த்துச் செல்லும் வாக்கியத்தொடர்ச்சி.

பெண் உடல் அருமையை மிக அருகில் கண்டறிந்துவிட்ட ஆண் உடலின் கூவிளி. 

பிண்டத்துடன் பேரண்டப்பரிமாணத்தை இணைக்கும்  மொழி முயற்சி.

பெண்ணின் பாலியல் வலிமைகளிடம் மன்றாடும் நெறி.

அவளுடன் தன்னைப் பிணைத்து  அவள் உடலின் மாண்புகளைக் கண்டறியும் தீவிரம்.

பெண் உடலையும் ஆண் உடலையும் ஒன்றாக்கிவிடும் தொடர் முயற்சி. 

முந்தைய கவிதையை விட அடுத்த கவிதையில் அதிகமாய்.  

உடலின் அற்புத பால்தன்மைகளைக் கண்டறிய கவிதையையே 

ஓர் அகழ்வாய்வுக்கருவியாக பயன்படுத்தும் கூர்திறன்.

தன்னைனயே தன்னொளிர்வுமிக்க பிம்பமாக மாற்றும் மொழிச் செயல்பாடு.

உளச்சிக்கலற்ற பால் புத்தெழுச்சி, இதை மொழிப்படுத்துவதில் முரண்பாடில்லாமை. 

இதை இத்தொகுப்பின் எல்லாவற்றிலும் முன்னதாக வைக்கலாம். 

ஆண் உடற்சிறையிலிருந்து வெளியேறி, அதே சமயம்  தன்தளையிலிருந்து விடுதலையடைந்த 

பெருங்கூவல், பெரும் பறப்பு.

உடல் இயங்கியலைப் பாலியல் நுகர்வு, கிளர்ச்சி, பரிவு, 

ஒன்றுதலுடன் ஏற்கும் ஆணின் அழகியல் பயணம்.

பெண்ணியம் என்ற முனைமழுங்கிய கத்தியை எறிந்துவிட்டு, 

பெண் - ஆண் உடல்களைக்  கனிந்த சொற்களால் ஊசி கொண்டு தைக்கும்

மீமெய்ப் பெண்ணியம்

இருமுனைப் பாலியல் அடையாளங்களைக் கலைத்து ஒருமை செய்யும் 

மொழி + அறிவு + கவிதை கூட்டுத்தொழிற்பாடே, 

கவிஞர் ஆசையின் “குவாண்டம் செல்ஃபி”

தன் உடலில் சிறைபட்டிருப்பதும் அதிலிருந்து விடுதலையுறுதலுமே 

வாழ்க்கையின் முதன்மையான மெய்ப்பாடு 

என்பதை ஒவ்வொரு கணமும் அறிவுறுத்தும் அகவுணர்ச்சி.

நூலில் திருத்தம் என்று நான் கூற விரும்புவது, தலைப்புகளற்ற கவிதைகளாக 

அவற்றைத் தொகுத்திருப்பதே.

குறிப்பிட்டுக்காட்ட ஏதுவாக இல்லாமல் போவதுடன்  ஒரு கவிதை தலைப்பின்றி 

தர்க்கப்பூர்வமாக நிறைவுறுவதில்லையே.

வாழ்த்துகள், ஆசை. தொடர்ந்து இதே தீவிரத்துடன் கவிதை வெளியில் செயல்பட்டு

நீங்கள் முன்வைக்கும் புதிய வகைமையான 

சமூக உடலின் பரிமாணங்களால் எல்லோரையும் எழுச்சியுறச்செய்க.

நூல் விவரங்கள்:

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu

Thursday, February 18, 2021

சாக்த அழகியல் - ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

 


கலாப்ரியா

கவிஞர் ஆசையின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் இன்று முக நூல் மூலமாக முகம் காட்டுகின்றன.  ’அண்டங்காளி’ அதில் ஒன்று. முதலில் அவற்றிற்காக என் வாழ்த்துகள். 

இயற்கை மனித குலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. எப்போதும் இருக்கும். இயற்கையின், அல்லது இயற்கை நிகழ்வுகளின் பேருண்மையினைக் கண்டு பிடிப்பதே, காரண காரியத்தை ஆராய்வதே  மனித குலத்தின் தொடர்ந்த தேடலாக இருக்கிறது. அந்த வகையான, காரண- காரியத் தேடல் என்பது ஆன்மீகவாதிகள் ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகளின் தேடல்.இதில் பின் இரண்டு வகையினரின் தேடல் என்பது பருண்மையானது.ஆன்மீக வாதிகளின் தேடல் முற்றிலும் தர்க்கங்களின் அடிப்படியில் அனுமானிக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் முடிவுற்ற பாடுமில்லை முடிவுறுகிற விஷயமும் இல்லை. அது முடிவுறாதது என்கிற புரிதலுமே ஒருவகைத் தேடலுடன் சேர்ந்ததுதான்,  அதனைப் புரிந்து கொள்கிறவர்கள் கவிஞர்களே. அவர்களே இயற்கையின் இந்தக் கூத்தை ஒரு சக்தியின் கூத்தாக உருவகித்து அதன் எல்லையின்மையையும் முடிவின்மையையும் உணர்ந்து கொள்கிறார்கள். 

”அன்புறு சோதியென்பார்- சிலர் ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்” என்றும்,அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்ததாயின் கைப்பந்தென ஓடுமடா –” என்றும் தன் முன்னோடிகளின் நீட்சியாகத் தானும் பாடவும் ஆரம்பிக்கின்றான். இது கவிஞர்கள் ஓடி ஓடி அலுக்காத பாதை. சபரிநாதன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது காளிதாசன், பாரதி எனப் பலர் வியந்துருகிக் கலந்து, புணர்ந்து கும்பிட்டுக் கூடிக் களித்த ஒரு வடிவம்.  கவிஞர்ஆசை அதன் இப்போதைய நீட்சி. அவரே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல இது எவ்வளவு தூரம் இப்போதையக் கவிதைகளுடன் பொருந்திப் போகும் என்று பார்க்க வேண்டும்

 “முலை தேடி: முலைதேடி “ என்று நான் எழுதிய போது பெரிய கசப்புணர்வுடனேயே 70களில், சிலரே ஏற்றுக் கொண்டார்கள். சக்தி உபாசனை போன்றதொரு கவிதைகளை நான் தாகூரை விலகித் தழுவி எழுதிய போது நான் உண்மையில் உபாசகன் இல்லை. ஒரு வகையில் நாத்திகன் என்று கூடச் சொல்லலாம். அப்புறமாக பிற்காலத்திலேயே பாரதியினை மறுபடி மறுபடி வாசிக்கையில், அவனால் சற்றே மாறி, அந்த வினைச்சியைக் காதலிக்கத் தொடங்கினேன்  என்று சொல்லலாம். அப்போதெல்லாம் பாரதி தன் ’மூன்று காதல்’களை முன் மொழிந்து என்னுள் பாடிக் கொண்டே இருந்தான். அவனே ” கன்னி வடிவமென்றே…”   முதலில் காளியினை கன்னியென்றே நெருங்குகிறான் பின்னரே அவள் அன்னை வடிவமடா என்று வணங்குகிறான். இதன் தாக்கம் அல்லது என் சுய அனுபவம் காரணமாகவோ “புணர்ச்சி முற்றி தாய்மை தரிசிக்கணும்” என்று நான் எழுதினேன். நானும் ஒரு வகை முரணுடனேயே என் கவிதைகளில் ”புணர்ச்சியிலிருந்து தாய்மைக்கு” என்னும் சார்பினை உருவகித்துக் கொண்டேன். ஒரு வகையில் அவருக்கு நான் முன்னோடி. அதனாலேயே நண்பர் ஆசை இதைப் பற்றிப் பேச என்னை அழைத்திருக்கிறாரோ என்னவோ. ஆனால் ஆசைக்கு எனக்கு இருந்த சுதந்திரம் கூட இப்போது இருக்கிறதா தெரியவில்லை. சபரிநாதனும் இது போல் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். ஆனால் ஆசை,  துணிச்சலாகத, ”தன் முழு உடலிலும் ஒரு விறைத்த குறிபோல காமம் அதன் தூய நிலையில் பரவியிருந்ததாக’ முன்னுரையில் எழுதுகிறார். அந்தத் தூய்மை பல கவிதைகளில் பளிச்சிட:

ஆடும் அன்னையே

நீ கால்தூக்கக் குறிகண்டு

கண்மூடாப்

பிள்ளை நான்

எனை ஊதி

வெளித்தள்ளிய

உலைத்துருத்தி

வாய்கண்டு

வாய்பிளந்து

நிற்கிறேன்

என்று எழுத முடிகிறது.

தன்னைப் பேய்க்கவியாகவும்  அம்மையை பேய்க்காளியாகவும் உருவகித்து எழுகிறார்.

விந்துத் தெறிப்பிலுன்

வினை வடிவம் காட்டுகிறாய்

ஆதார இருளுணர்த்தும்

குளிரள்ளித் தெளிக்கிறாய்

விந்தை உருவாக்கி

விந்தை உள்வாங்கி

அன்னை நீ புரியும்

அருள்கோலத்தில்

வந்து விழுந்த துளியென்னை

வாங்கிக்கொள் மறுபடியும்

இது பிராய்டியக் கருத்தியலான இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று  அலகு பிரிக்க முயல்பவர்களிடம் நான் அப்படி அல்ல என்று சொல்லுவேன். இதில் மறுபடி தாயின் வயிறே சரணம் என்னும் அத்வைதச் சாயல் கூட இருக்கிறது. ஆனால் ஆசை அத்வைதியில்லை, ஆகவும் முடியாது. மேலும், “மறுபடி தாயின் கருப்பை நோக்கி” என்பது பல வேறு தீர்க்கதரிசிகளின் தேடுதலாயும் இருக்கிறது. ஆசை காளியின் அழகோடு அந்தத் தாண்டவத்தையே அதிகம் நேசிக்கிறார்

கண்ணைத் திறந்துகொண்டு

காணும் காளியல்ல நீ

கண்ணை மூடினால்

விழிக்கோளத்துக்கும்

இமையடைப்புக்கும்

இடையே 

இருள்தாண்டவம் ஆடுபவள் நீ

இருட்காளி

உன் இருட்கோலம் 

தடவிய விழிக்கோளம்

இமைதிறக்கக் காணும்

காட்சியெல்லாம் பூணும்

பொருட்கோலம் நீ

பேயிருட்காளி

கண்மூடி நான் காணும்

இருளெல்லாம்

கண் திறந்தே காணவேண்டும்

வழிசெய்

**

’விழிக்கோளத்துக்கும்/இமையடைப்புக்கும்/இடையே இருள்தாண்டவம்  ஆடுபவள் நீ’

என்கிற வரிகள் சாக்த அழகியலின் உச்சம். இப்படிப் பல நல்ல கவிதைகள் நிரம்பிய தொகுப்பு இது. சில நீளமான “ எனக்கும் வாய்த்திருக்கிறாளே பொண்டாட்டி..” போன்ற கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம். அதே போல பல கவிதைகளில், சபரிநாதன் சொல்வது போல ஓசையின் உத்வேகத்தை நம்பி எழுதப்படும் கவிதைகளுக்கு நேரும் அசம்பாவிதங்கள் பலவும் இங்கு நிகழ்ந்துள்ளன.” அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு,

துர்கணமோ நற்கணமோ 

துயர்கணமோ உயர்கணமோ

அற்புதமோ -உன்- அலங்கோலமோ

அத்தனையும் கவிதைக்குள் வரும்போது

அன்னையின் அருஞ்செயலாய் மாறிவிடும்

அழகென்ன அருளென்ன

அவளின்றி ஒரு கணமும் கழியாத 

நிலையென்ன நினைவென்ன

போன்ற முழுமையும் இறுக்கமுமான ஏனைய பல கவிதைகளைக் கவனிக்கையில்

ஊழியின் கலையாகத் தாண்டவத்தையும் பேய்க்கூத்தின் உருவகமாக காளியையையும் அவள் தாய்மையின் பேறாக பேய்க்கவிஞனாகத் தன்னையும் ஆக்கிக் கொண்டிருக்கிற நல்ல அனுபவத்தை வழங்குகின்றன இந்த அண்டங்காளி தொகுப்பு. 

வாழ்த்துகள் ஆசை.


அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

Wednesday, February 17, 2021

ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ - கவிஞர் சுகுமாரனின் அறிமுகம்



சுகுமாரன் 

‘காதல் அல்லது காமத்தின் தீவிர நிலையே இந்தக் கவிதைகளில் பிரதானம்’ என்று தொகுப்பின் முன்னுரையில் ஆசை குறிப்பிடுகிறார். தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட கவிதைகளில் கணிசமானவை காதலையும் காமத்தையும் சொல்பவைதாம். அகத்திணை என்ற பிரிவைக் கொண்டிருப்பதும் இந்த மொழிதான். இந்த நோக்கில் ஆசையின் காதல் அல்லது காமநிலைக் கவிதைகள் ஒரு நெடிய மரபின் இன்றைய கண்ணிகள். 

அகத்துறைக் கவிதைகள் வெறும் காதலைப் பேசுவதில்லை. மாறாகக் காமத்தையே அதிகம் பேசுகின்றன. களவொழுக்கத்தை முதலிலும் கற்பொழுக்கத்தை இரண்டாவதாகவுமே கருதுகின்றன. உடலின்பத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. காலப் போக்கில் உருவாக்கப்பட்ட ஒழுக்க மதிப்பீடுகள் காமம் என்பதைக் கூடாச் சொல்லாகவும் உடல் திளைப்பைப் பேசக் கூடா ரகசியமாகவும் மாற்றின. பாரதியின் கண்ணன் பாடல்களில் ‘சாரீரகமான காதலையே கவிஞர் அதிகம் வர்ணித்திருக்கிறார்’ என்ற வ.வே.சு ஐயரின் விமர்சனம் இந்த விலக்கின் உதாரணம். இன்றைய கவிதைச் சூழலிலும் இந்த மனப்போக்கைப் பார்க்க முடிந்திருக்கிறது. தமிழில் பெண்கள் எழுதிய கவிதைகளை வெறும் உடல் துய்ப்பின் வெளிப்பாடாகவும் ஒழுக்கக் கேட்டின் பிரதிபலிப்பாகவும் கருதி பண்பாட்டுக் காவலர்கள் கொந்தளித்தது  நினைவுக்கு வருகிறது. எனினும் கவிதை  விலக்கையும் விழுமியத்தையும் கடந்தே செயல்படுகிறது. 

புதிய கவிதையில் இவை இயல்பாகவே மீறப்படுகின்றன. காமத்தைப் பேசுபொருளாகக் கொண்ட கவிதைகளைக் கலாப்ரியா உள்ளிட்ட சில கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை உதிரியான கவிதைகள். ஒரு தொகுப்பு அளவுக்கான காமக் கவிதைகளை ‘எழுத்து’ காலக் கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தியின் ‘திவ்ய தர்சனம்’ தொகுப்பு கொண்டிருந்தது. அதன் பின்னரும் சில தொகுப்புகள் வெளியாயின. காமத்தின் தீவிர நிலையைப் பேசும் தொகுப்பாக ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபியைச் சொல்லலாம். திவ்ய தர்சனத்திலுள்ள கவிதைகள் காமத்தின் உச்சமாக ஆன்மீக நிலையைக் கண்டடைகின்றன. ஆசையின் கவிதைகள் பிரபஞ்சத்தின் இயல்பான அசைவுகளில் ஒன்றாக, தவிர்க்க இயலாத இயக்கமாகக் காமத்தைப் போற்றுகிறது. குவாண்டம் என்ற அறிவியற் கலைச்சொல் குறிப்பிடும் பேரளவான ஆற்றலைக் காமத்துக்கு வழங்குகிறது.

காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாச இழை எங்கே மறைகிறது என்பது இந்த லீலையின் விளங்காப் புதிர். அந்தப் புதிரை விளங்கிக்கொள்ள முனையும் வேட்கையாகவே ஆசையின் கவிதைகள் திகழ்கின்றன. காதலின் நீட்சிதான் காமமா அல்லது காமத்தின் கௌரவச் சுருக்கம்தான் காதலா என்ற  கேள்விக்கு விடையைத் தேடுகின்றன. காதல் நெருக்கமும் சரீர முயக்கமும் தேடலுக்கு முகாந்திரங்களாகின்றன.

அதுவரை

உரக்கச் சொல்கிறேனடி

உன்னை நான் பிரபஞ்சக்காதல் செய்கிறேன் என்று  

இன்னும் சொல்லப்போனால்

பிரபஞ்சம் கொள்ளாத காதல் செய்கிறேன் என்று – என சாத்வீகமாகச் சொல்லப்படும் கவிதையும் 

உன் யோனிக்குள்ளிருந்தே

பார்க்க விரும்புகிறேன் 

ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் – எனத் தீரா வேட்கையுடன் சொல்லப்படும் கவிதையும் ஒப்புநோக்கில் ஒரே தீவிரத்தின் வெவ்வேறு வடிவங்களாகின்றன. 

இந்தத் தீவிர உணர்வை ஆசை பல தளங்களில் விரிக்கிறார். அறிவியல் உண்மைகள், சிறார் கதைகள், காட்சியனுபவங்கள், இலக்கியப் பின்புலங்கள் ஆகியவற்றின் துணையால் பெருக்கிக் காட்டுகிறார். இந்த ரசவாதத்தால் கவிதைகள் மேலும் ஆழமான பொருளைக் கொள்கின்றன. சில கவிதைகள் தரைதட்டி வெறும் காமக் கூற்றுகளாக நின்று விடவும் செய்கின்றன.

ஆசையின் குவாண்டம் செல்ஃபி தொகுப்பிலுள்ள பெரும்பான்மைக் கவிதைகளும் ஒரே குரலின் பலவிதத் தொனிகளில் வெளிப்படுவது குறிப்பிடத் தக்கது. பெண்ணை வியக்கும் காதலனின் குரலாகவோ பெண்ணுடலில் தன்னைத் தேடும் காமுகனின் குரலாகவோதான் அது வெளிப்படுகிறது. காதலுக்கு ஆட்படும் பெண்ணி்ன் உணர்வோ காமத்தில் ஆழ்ந்த பெண்ணின் உணர்ச்சியோ ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஓர் ஆணின் வெளிப்பாடு அப்படித்தானே இருக்கும் என்ற பதில் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்று தோன்றுகிறது. காதலிலும் காமத்திலும் பெண்ணும் சம பங்காளி அல்லவா? அந்தப் பங்களிப்பு இந்தக் கவிதைகளில் இடம்பெறாததைக் குறையாகச் சொல்லலாம். காதலுக்கும் காமத்துக்குமுள்ளான பெண் மனநிலையை ஒரு கவிஞன் அனுமானிக்க முடியும் இல்லையா? 

தீவிரநிலையை வித்தியாசமாகவும் செறிவுடனும் பெரும் எண்ணிக்கையிலும் ஆசை கவிதைகளாக்கி இருக்கிறார். கூர்வாளின்மேல் பயிலும் நடை இந்தச் செயல். அந்தத் துணிச்சலுக்குப் பாராட்டுகள். கவிதைகள் பெறவிருக்கும் புகழ்மொழிகளுக்கும் கண்டனங்களுக்கும் வாழ்த்துக்கள். 


குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu


Tuesday, February 16, 2021

காமத்தின் தாளமும் அகண்டகாரப் பின்புலமும்...



சபரிநாதன் 

மனிதன் ஒழுங்கமைவைத் தேடுகிற உயிரினம். வடிவமைப்பைக் கணிக்கும் உள்ளுணர்வு அவனுக்கு இயல்பிலேயே வாய்த்துள்ளது. மழைக்காலம் முடிந்து குளிர்காலம். பிறகு கோடையும் கழிந்தால் மீண்டும் திரும்புகிற மழைக்காலம் என பருவங்கள் ஒரு நிரந்தரச் சுழற்சியை அறிவிக்கும் அதே நேரம் ஓர் உத்தரவாதத்தையும் அவனுக்கு வழங்குகின்றன. வசந்தம் மீள மரங்கள் பூச்சூடி நிற்கையில் நமக்குள் எழுகிற நம்பிக்கை, பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் அழகியல் உணர்ச்சியாக உருமாறி இருக்கக்கூடும். பஞ்ச காலத்திலும் கொள்ளை நோய் நேரத்திலும் நம்மில் தோன்றும் ‘மழை வரும்' என்ற நிச்சயமும் ‘இயல்புநிலை திரும்பும்' என்ற எதிர்பார்ப்பும் மிக ஆழமான இடத்தில் வேர்பிடித்துள்ளவை. அது உயிரியல்பாகவே நமக்குள் ஊறிப்போயுள்ளது. காரணம், வாழ்வின் நடனமான இச்சுழற்சியானது பல்லாயிரம் ஆண்டுகளாக மனித ஞாபகத்தில் ஓடிப் பதிந்துள்ளதுதான். இன்னும் நீட்டித்துச்சொல்வதென்றால், தொன்மங்களும் புராணங்களும் யுகங்களையும் பிறவிகளையுமேகூடக் காலச்சக்கரத்தில் மீளமீள வந்துசெல்பவை என ஆறுதல் அளிக்கின்றன. தவிர, கடும்

குழப்பத்தை அறிவதற்கும் நமக்கு வடிவுருக்கள் தேவையாகின்றன. இந்த ஒழுங்கமைவின் தேட்டத்திலிருந்து பிறந்தவற்றுள் ஒன்றே தாளம் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால், எல்லா அறிதலுமே ஒரு வகையில் லயத்தை அறிவதுதான். தாளம் ஒரு காலக்கணக்கு எனில், நாம் உணரும் காலம் கூட தாளக்கணக்கு எனலாம்.

இசை, நடனம், கவிதை என எல்லாக் கலைகளும் தாளத்தின் இந்த உத்தரவாதத்தை, உத்வேகத்தை, சீர்மையின் அர்த்தத்தை, ஒழுங்கின் நிறைவை ரசிகர்களுக்கு அளிக்கின்றன. மிகச் சிறந்த லயம் வாசகனை, கண நேரமெனினும், உயர் பிரக்ஞைக்கு

அழைத்துச்செல்ல வாய்ப்புடையது என்கிறார் அரவிந்தர். இந்திய விமர்சன மரபில் சப்த அலங்காரம், அர்த்த அலங்காரம் என்ற இரண்டு வகைகள் சொல்லப்படுகின்றன. மத்தியகால அரசவைக் கவிதைகள் அளவுக்கதிகமாக சப்த அலங்காரங்களை அணிந்து நடக்க முடியாதபடி மூச்சுத்திணறத் தொடங்கியதைக் கண்ட நவீனத்துவம் அணிகலன்களைத் துறந்த நிர்வாணக் கவித்துவத்தை நோக்கி நகர்ந்தது. அப்படி திட்டமான யாப்பு வடிவங்களைத் துறந்து முன்னேறியபோது, கவிதை இழப்பது என்ன என்பது குறித்த பிரக்ஞை பல நவீன கவிஞர்களுக்கு இருந்துள்ளதைப் பார்க்கிறோம். அதைப் பேச்சுமொழியின் ஓசையொழுங்கைக் கொண்டும் லிரிக் கவிதைகள் வழியாகவும் அவர்கள் கடந்துள்ளனர். ஆங்கிலத்தில் ராபர்ட் ஃப்ராஸ்ட் மாதிரி, தமிழில் பிரமிள், ஞானக்கூத்தன் போன்று, ஓசை வடிவங்களைச் சற்று நெகிழ்த்திப் பயன்படுத்துவதைத் தொடர்ந்தோரும் இருந்தனர். இதைத் தாண்டி தற்சமயம் புத்துருவியல்வாதக் கவிதைகளும் (Neoformalist poems) மேலை மொழிகளில் பரீட்சார்த்தமாக எழுதப்படுகின்றன. இப்படியாக இசைமையின் போதாமை உணரப்படும் இப்போதைய தமிழ்ச் சூழலில் ஆசையின் இத்தொகுப்பு சமகாலக் கவிதைகளின் செல்நெறியிலிருந்து பெரிதும் விலகி நிற்கிறது என்பதால் தனது தனித்துவத்தைக் கண்கூடாக முன்வைக்கிறது. 

இருமுனை முடிவின்மையின்

நடுவெளி நர்த்தனம் நீ

தொடுஊழி தரையிறக்கும்

தத்தளிப்பு நீ

கடல்புரியும்

தாண்டவத்தின் தெறிப்பும் நீ

எரிஜோதி இடைபறக்கும்

கொடும்பறவை நீ

அனலுமிழும் கனல் மயக்கும்

பேய்ச்சிரிப்பு நீ

நாத்திகனின் கனவில் வரும்

நடனக்காளி நீ

என்ற வரிகளை எதிர்கொள்கையில் ஒரு புழுத்துளை வழியாக நாம் முற்றிலும் வேறொரு காலத்துக்குள் விழுந்துவிட்டதைப் போல உணர்கிறோம். இந்த உச்சாடன கதி அகவெளியின் சூட்டில் உருக்கொண்டு, இறுதியில் மொழியுருகி வழியும், அர்த்தங்களை அலட்சியப்படுத்திய ஒரு பித்தரங்கத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று வாசகர் கோருகையில் அவர் மொழிக்குள்ளேயே தொலைய நேரிடும். ஏனெனில், அங்கே கவிஞனேகூட ஓசையால் இழுத்துச் செல்லப்படும் குருடனாகிவிடுகிறான், யாருமின்றி லயத்தின் மேல் பயணிக்கும் படகுபோல. இப்போது அவன் பார்வை நடைபாதையில் இல்லை; அது உள்ளேயோ வெளியேயோ வேறெங்கோ கற்பனாதீதத்தில் நிலைகுத்தி நிற்கிறது. இதற்கு அழுத்தம் சேர்க்கும் பொருட்டு இக்கவிதைகளின் திரைச்சீலையாக அன்றாடக் காட்சிகள் அன்றி அண்டம், கருந்துளை, காலவெளிக் கம்பளம், பாழ்வெளி எனப் பிரபஞ்சத்தின் இருண்ட பெரும்புறம் விரிக்கப்பட்டுள்ளது. காளியானவள் காலசொரூபிதானே.

கண்ணைத் திறந்துகொண்டு

காணும் காளியல்ல நீ

கண்ணை மூடினால்

விழிக்கோளத்துக்கும்

இமையடைப்புக்கும்

இடையே 

இருள்தாண்டவம் ஆடுபவள் நீ

இருட்காளி

...

கண்மூடி நான் காணும்

இருளெல்லாம்

கண் திறந்தே காண வேண்டும்

வழிசெய்

அந்தகத்தை வேண்டிப் பெறும் கவிஞனைக் காண்கிற அதேநேரம் இதில் ஓர் உபாசகனையும் காண்கிறோம். இந்த உபாசகன் அன்னையை யாசிப்பவன் மட்டுமல்ல; அவளைச் சீண்டுபவனும் சபிப்பவனாகவும் இருக்கிறான். ஒரு மகனின் முழுவுரிமையையும் எடுத்துக்கொள்கிற உபாசகன். இத்தகைய தோத்திரத் தன்மையும் வரம்பற்ற இறைஞ்சல் தொனியும் கலந்து காலப் பொருத்தப்பாட்டுக்கு ஒவ்வாத விசித்திரப் படைப்புகளாக இவற்றை ஆக்குவதைக் கவிஞரே ஊகித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் எதிர்பார்ப்பும் அதுதான்போல.

இவை கட்டின்மையும் ஒருவிதப் பீடிப்பும் கொண்ட கவிதைகள். இத்தகைய பித்துநிலை சொல்வழிப்படுகையில் மனவக்கிரங்களாகவும் வெளிப்படத் தயங்குவதில்லை. சில இடங்களில் இவை பிரக்ஞை வரம்பிடாத தன்னரற்றலாகவும், விளைவு கருதாத பைத்திய உளறலாகவும் படுகிறது. பல சமயம் உளவியல் கூறாய்வு செய்வதற்கான ஆர்வத்தை அடக்கிக்கொண்டேன் என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு இந்நூலில் வருகிற, மேடையில் ஆடும் காளியைக் கீழமர்ந்திருந்து காணும் தனயன் என்ற பிம்பம் பல்வேறு அடக்கப்பட்ட பிராயத்து நினைவுகளைக் கொண்டுவருகிறது.

ஆடும் அன்னையே

நீ கால்தூக்கக்

குறிகண்டு

கண்மூடாப்

பிள்ளை நான்

...

எனைப் பாதியிலே

கொண்டுவந்து

பாழ்வெளியில்

தள்ளிவிட்டாய்

முட்டித்திறப்பேனோ நான்

நீ மூடிவிட்ட பெருங்கதவை

இந்நூலில் அரங்கேறும் பிரதான நாடகம் காளிக்கும் கவிஞனுக்கும் இடையிலானது. இந்த நாடகம் காளிதாஸன் தொட்டு பாரதி உட்பட பல கவிஞர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒன்று. ஆசையும் தன் கவிதைக்குள் அதை நிகழ்த்திப் பார்க்கிறார். அரைச் சந்தத்தில் தோத்திர பாணியில் எழுதப்பட்ட கணிசமான கவிதைகளில் பாரதி பாடல்களின் எதிரொலிப்பு கேட்கிறது (அன்னை அன்னை, பேயவள்காண் எங்கள் அன்னை), ஆங்காங்கே கண்ணதாசனின் தாக்கமும் தென்படுகிறது (பார் சிவனே).

பக்தி இலக்கியங்கள் சிவன், விஷ்ணு என்ற ஆண் பெருந்தெய்வங்களை ஒட்டி எழுதப்பட்டவை. சாக்த மரபிலும் இத்தகைய பாடல்கள் இருப்பினும், தாந்திரீக மார்க்கத்தில் மைய இடம்பெற்றிருந்த காளி எனும் பெண் தெய்வம் மீதான பாடல்கள் வங்காளத்தில் 18ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘சாக்த பாதவளி' என்ற இவ்வகைமையில் தாந்திரீகக் கூறுகள் கூர் நீக்கப்பட்டு மெல்லியல் படைத்துப் பொதுவெளிக்குள் நுழைந்தன என்கின்றனர். இதில் காளி பல்வேறு மனிதாய உணர்வுகளுக்கும் உறவு நிலைகளுக்கும் ஆளாகிறாள். பெரும்பாலும் அன்னையாக, சிலபோது காதலியாக, போற்றப்பட்டு, வணங்கப்பட்டு, சீண்டப்பட்டு, சில நேரம் மிரட்டவும் படுகிறாள். இத்தகைய தன்மையை ஒத்த கவிதைகளை இத்தொகுதியில் பார்க்கலாம்.

தெண்டத்துக்குத்

தீ வளர்த்தாய்

தெருத்தெருவாய்

தேரிழுத்தாய்

உண்டசோறு

செரிப்பதற்கு எமை

உருட்டிவிளை யாடுகின்றாய்

கண்டகருமாந்திரத்தையும்

காலமென்று கூட்டிவர

மண்டைபெருத் தாடுதடி

மதிமயங்கச் செய்யுதடி-உன்

அண்டப்புளுகு நாங்கள்

அவசரத்துக்குப்

பெத்துப்போட்டாய்

இதில் மகிமைக்கும் போற்றுதலுக்கும் ஒவ்வாத அப்பட்டமான அவமதிப்பு தொனி அல்லது மரியாதையின்மை உள்ளதைக் காணலாம். இது ஏறத்தாழ இத்தொகுப்பு முழுக்க ஒலிக்கிறது. அதே நேரம் சைவ மரபில் முக்கியப் படிமமான கூத்து, முன்னொரு காலம் ஐயனின் நடனத்தைக் காண விரும்பிய மூதாட்டியின் பெருவிருப்பம், ஒற்றை முலை, காளியவள் களிநடனம் என தமிழ் இலக்கியப் பரப்பில் கண்பட்ட சில படிமங்களைத் தவிர, தனிப்பட்ட தாந்திரீகத்தின் குறியீடுகளோ படிமங்களோ தாக்கமோ இவற்றில் காணப்படுவதில்லை. பதிலாக, தடைக்கட்டுகள் நிலவும் சமூக சரிநிலைகளையெல்லாம் மீறி இங்கே அன்னை தேவியாகிறாள்; தேவி அன்னையாகிறாள். முலை, முலைப்பால், யோனிவாசல் என அன்னையோடு தொடர்புடைய யாவும் தேவியோடும் தொடர்புடையவை என்பதால் இம்மயக்கநிலைப் பிராந்தியத்தை இக்கவிதைகள் பயன்படுத்துகின்றன. பக்தியைக் காமத்தின் மொழியிலும் காமத்தை பக்தி வழியாகவும் சொல்லிப் பார்த்த பாரம்பரியம் உண்டுதானே நமக்கு. அர்த்தமாக்கல் மட்டுமல்ல, புனிதமாக்கலும் கலையை வாகனமாகக் கொண்டதுதான்போல. 

இக்கவிதைகளின் எரிபொருளாக உள்ளது காமம். வழக்கமாகக் காமம் சார்ந்து எழுதப்படும், இன்பப் பரவசத்தையும் காதலின் கிறக்கத்தையும் வெளிப்படுத்தும் மென்மையான கவிதைகள் போலன்றி இவற்றில் மூர்க்கமும் கரைதல் விருப்பமும் நிரம்பியுள்ளன. நீர்ச்சுழலில் விழ விரும்பி நீந்தும் ஒருவரைப் போலத் தெரிகிறார் கவிதைசொல்லி. உடலே குறியாக விறைப்பதாகவும் இப்பேரண்டத்தைக் காளியின் உயவுநீர் விளையாட்டாகவும் காணும் கவிஞர்,

குறிபிடித்துக் கூட்டிச்செல்லடி

என்னை

உன் குறியாளும்

பெருமேடைக்கு

என்று வேண்டுகிறார். இக்கவிதைகளில் ஒரு ‘நானும்' ஒரு  ‘நீ'யும் வசிக்கின்றன. அவை சிலநேரம் கவியாகவும் காளியாகவும், சிலநேரம் சேயாகவும் தாயாகவும், சிலபோது காதலன் காதலி யாகவும், கணவன் மனைவியாகவும் விளங்குகின்றன. ஆனால், எப்போதும் அது ஓர் ஆணும் பெண்ணுமாகவுமே அமைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், பெண்ணுக்கு இங்கு ஒரு நிலையான பாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அவள் பேரன்னையாகவும் வரமளிக்கும் பேய்க்காளியாகவும் உறைந்திருக்கிறாள். ஆணே கிடந்து அலைக்கழிபவனாகவும் தஞ்சம் கேட்பவனாகவும் உழல்கிறான். எனவே, இக்கவிதைகள் பெரும்பாலும் தனது ஆண்தன்மையை பங்கமின்றி அப்பட்டமாக எடுத்துரைப்பவையாகவும் உள்ளன எனச் சொல்லலாம். அதே நேரம் ஆசாரமான ஒரு வாசகருக்கு இத்தொகுப்பு மர்ம ஸ்தானங்களின் மணம் வீசும் வஸ்துவாகத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இவ்வரிகளையும் இவற்றை எழுதிய மனக்கொந்தளிப்பையும் இவற்றுள் புதைந்துள்ள மனரகசியங்களையுமே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஏனெனில், இங்கு உடல் மட்டும் இருக்கிறது. உணர்ச்சி  தாளமாகி அதுவே மனமாகிறது. மனம், வெறுமனே உடலின் மொழி பாய்ந்து கொப்பளிக்கும் செயலாகிறது.

அதேநேரம் இந்தப் பாலியல் சுட்டல்களும் காமத் தணலும் சுகிப்பின் பரவசத்தைப் பேசுவதைவிட நிலைகுலைவையும் உள்ளொடுங்குதலுக்கான விருப்பத்தையும் பேசுவதாகவே படுகிறது. வெப்பமிக்க ஆங்காரம் ஒலிப்பினும் இவை அடிப் படையில் இருத்தலியல் பதைப்பின் விசித்திர வெளிப்பாடுகள்தானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. ஈரோஸ் இயங்குவதுபோல தானடோஸும் இயங்குகிறது. இனம்புரியாத விருப்புறுதியும், இல்லாதொழிவதற்கான ரகசிய ஆசையும் சேர்ந்தே வினைபுரிகின்றன. யோனி வழியே மீண்டும் திரும்பிச்செல்லும் ஆசையைப் பல இடங்களில் போலவே இக்கவிதையிலும் காணலாம்:

சூனியம் பிளந்தவளே

அதைச் சுத்தியலால் அடித்தவளே

சுண்டி இழுத்தவளே

எடுத்த இடத்தில்

வைத்துவிடடி

என்னை

தாந்திரீக மரபிலிருந்தே மனித உடலை அண்டத்தின் நுண்வடிவ மாதிரியாகக் காணும் போக்கு தொடங்குகிறது. முன்பு வைதீக, அவைதீக மரபுகளின் சந்நியாச வலியுறுத்தலுக்கும் தேக ஒறுப்புக்கும் மாறாக தாந்திரீகத்தில் உடலும் உறவும் மையமாக இடம்பெறுகின்றன. அத்வைத ஒருமைக்கும் சூன்யத்துக்கும் பதிலாய் இருமையும் துய்ப்பும் முன்வைக்கப்படுகின்றன. பற்றிலிருந்து விடுதலை எனும் பெரும் பாதையில், பற்றின் வழி விடுதலை என்பதாய் நிகழ்த்தப்பட்ட இவ்விடையீடு உலகியலின் சார்பாகச் சமநிலையைப் பேண ஒரு சாத்தியத்தை வழங்கிற்று எனலாம்.

சமகாலத்திய நவீன மனம் கொண்ட வாசகருக்கு இக் கவிதைகள் எந்த அளவுக்குப் பொருத்தப்பாடு கொண்டிருக்கும் என்பது பெரிய கேள்வி. கட்டற்ற தன்மையானது வடிவ மைதியை மட்டுமின்றி சில கவிதைகளில் வெளிப்பாட்டையுமே சிதைத்துள்ளதாகப் படுகிறது. மேலும், ஓசையின் உத்வேகத்தை நம்பி எழுதப்படும் கவிதைகளுக்கு நேரும் அசம்பாவிதங்கள் பலவும் இங்கு நிகழ்ந்துள்ளன. லயமும் கவித்துவ உத்வேகமும் கலந்து அபாரமாகத் தொனிக்கும் கவிதைகளின் அருகிலேயே சிலது வெடிக்காமலும் சிலது வெறும் வெடிச் சத்தமாகவும் முடிந் துள்ளன.

நிலையற்ற பீடிப்பும், சந்தக் கட்டும், துதித் தன்மையும், தாந்திரீக சாயலும், காமக் கடுப்பும், அகண்டகார பின்புலமும் கூடி நினைவுகூர இயலாத ஒன்றை ஞாபகப்படுத்தும் விநோத மான கலவையாகக் கூடிவந்திருக்கிறது இக்கவிதைத் தொகுதி. ஆசையின் முந்தைய தொகுதியைப் போலவே இதுவும் வாசிப்பனுபவத்தில் ஒரு தனித்துவமான நூலாக விரியும் என எண்ணுகிறேன்.

(‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்புக்கு சபரிநாதன் எழுதிய மதிப்புரை)

அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb