Tuesday, February 23, 2021

ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ ஓர் அறிமுகம்ராஸ்மி 

தனது சக உயிரினங்களை வெற்றிக்கொண்ட மனிதகுலத்தை தற்போது தொழில்நுட்பங்கள் ஆளுகின்றன என்று கூறும் ஹராரி யுகத்தில், ஆசையின் கவிதை உலகம் இப்பேரண்டத்தை தனக்குள் அடக்கி அனைத்துப் படைப்புகளுக்கும் சரிசமமான இடத்தை உறுதி செய்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்கிறது. 75 கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு, கிட்டத்தட்ட இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றைப் பற்றியுமே பேச முற்படுகிறது. இவற்றுக்காக இதற்காகத்தான் இந்த கவிதைகள் என்று வகைமைப்படுத்திட முடியவில்லை. உலக உயிர்களுக்கெல்லாம் இக்கவிதைகளை பொருத்திப் பார்த்தாலும் சாலப் பொருந்திப் போகிறது.

‘குவாண்டம் செல்ஃபி’யின் மொத்தக் கவிதைகளும் இந்த ஒரு கவிதைக்குள் அடங்கிவிடுகின்றன.

 “உடலின் எல்லை எதுவரை

 என்று தெரிந்தாக வேண்டும்

எனக்கு’’ - எனத் தொடங்கி ,

“மரணமென்பது

விரித்தலுக்கெதிரான

எல்லையற்ற சுருங்குதலின்

திடீர் கலகமன்றி

வேறென்ன”  என்று முடியும்.

இந்தக் கவிதையின் முதல் பத்திக்கும் இறுதி பத்திக்கும் இடையில்தான் ‘குவாண்டம் செல்பி’ கவிதை உலகம்  தன்னை சுருக்கி விரித்து நிகழ்த்திக் காட்டுகிறது.

ஒரு கவிதையை அணுகும் பார்வைக்கோணம் நிச்சயம் வாசகனை சார்ந்தது. எனக்கு ‘குவாண்டம் செல்ஃபி’யை வாசிக்கும்போது ஒரு குறு நகரச் சிறுவனின் கண்ணோட்டத்தில் இக்கவிதைகள் அமைந்துள்ளதாக தோன்றியது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையில், சவாகாசமாய்த் தகரப் பீப்பாயைக் கையில் பிடித்துபடி  செத்துக்கொண்டிருக்கும் கிழவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை போன்ற சிறுவன் அவன். நவீன உலகின் எவ்வித உளவியல் கோட்பாடுகளுக்கும் தர்க்கத்துக்கும் உள்ளாகாத சிறுவன் அவன். இத்தகைய தீங்குகளில்லாமல் உலகை தரிசிக்கும் தன்மை இக்கவிதைகளின் ஆன்மாவாக உள்ளது.

" நீ என்

ஆன்ம சகோதரி,

ஆத்மிக அன்னை,

அடிமனதின் காதலி என்

புலன்களின் வேசி. "

இதில் ஒரு பெண் எத்தனை உருவாக, உயிராக விஸ்தரிக்கப்படுகிறாள் என்பதுனூடே அவள் மீதான பிரியம் எப்படி எல்லையற்ற அண்டமாக பரந்து அவளென்ற புள்ளிக்குள் அமிழ்கிறது.

“நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா” என்ற கவிதை அனைத்து மகன்களும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்தக் கவிதை உலக கற்பிதங்களால் உண்டாக்கப்பட்ட நம் மனதின் அழுக்கைக் கழுவிவிடுகிறது.

“உன் மதாவிடாய் வலியைத் தன் மேல் பூசிக்கொள்ளத் தெரியவில்லை என்றால் இக்கவிதை உயிரற்றது என்று அர்த்தம்” என்று தொடங்கும் கவிதையில், ஆசையின் ‘குவாண்டம் செல்பி’யின் குறிக்கோள் நிறைவடைகிறது. அது இப்பேரண்டத்தின் அற்புதத் தருணங்களை வெளிச்சமிட்டு அதன் மடியில் நம்மை அணைத்து நம் அத்தனை தீங்கெண்ணங்களையும் வெளியேற்றச் செய்கிறது.

“சுவரை உதைத்து உதைத்து” என்ற சர்ரியல் கவிதையை பல முறை வாசித்தேன். ஒரு பெண்ணாக, ஒரு தேசாந்திரியாக, பூனையாக, செடியாக இன்னபிற உயிராக என்னை  கற்பனை செய்து வாசிக்கும்போது ஒவ்வொரு வாசிப்பிலும் அக்கதாபாத்திரத்திற்குரிய தரிசனத்தை அடையும் சாத்தியத்தை அக்கவிதை எனக்கு வழங்கியது.

ஒட்டுமொத்தமாக,‘குவாண்டம் செல்ஃபி’ வாழ்தலின் ஊடாக மேற்கொள்ளப்படும் பயணம் பற்றிய கதைகளாய் தன்னை பிறப்பித்துக்கொள்கிறது. விலக்கப்பட்ட கனியை உண்டு அறிதலை அடையாமல், அறியாமையின் வழியே ஞானத்தை நோக்கிய பயணமாக அந்தப் பயணம் அமைகிறது.

நூல் விவரம்:

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

ஆசை

விலை: ரூ.160

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu.

No comments:

Post a Comment