Showing posts with label மதவாதம். Show all posts
Showing posts with label மதவாதம். Show all posts

Tuesday, December 31, 2024

காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை


(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)

தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும். 

       எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

       கண்ணென்ப வாழும் உயிர்க்கு  

என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப்  ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Thursday, February 8, 2024

ஷெனாய் ராம்


தன் இதயத்தில் துடித்த
ஈஸ்வர அல்லா தேரே நாமை
நாடெங்கும் நடந்து
காலால் மண்ணில்
எழுதிச் சென்றார்
அவர்
அதை
ஷெனாய் கொண்டு
மனதால் கிளறி
காற்றில் எழுதி வைத்தார்
இவர்
ராம் ராம் ராம் ராம்
ராஜாராம்
பிரித்திட முடியா
பிஸ்மில்லாஹ் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராஜாராம்
ஷெனாய் வனம் துயிலும்
சீதாராம்
-ஆசை

உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானின் ரகுபதி ராகவ ராஜாராமைக் கேட்க:


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 



3. TENET










 

Wednesday, February 7, 2024

தோட்டாவுடன் ஒரு ஒப்பந்தம் - கவிதைக் காணொளி


காந்தியைப் பற்றிய எனது 'தோட்டாவுடன் ஒரு ஒப்பந்தம்' கவிதை வரிகளை உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானின் 'ரகுபதி ராகவ ராஜாரா'மில் குழைத்துத் தம்பி சதீஷ் காணொளி ஆக்கியிருக்கிறார். அவருக்கு நன்றியும் அன்பும்! 

அன்பின் நிச்சலனம்


காந்தியைக்
கடைசியாய் வந்தடைந்தவர்
அவர்
அதற்கென்று
கையடக்க வழிமுறையைத்
தேர்ந்தெடுத்தார்
கையடக்கத்தின்
விசையழுத்தி
காந்தி இதயத்துள்
நேரே சென்று
கண்விழித்தார்
அடடா
அன்பின் நிச்சலனத்தை
அதன் உள்ளேயே சென்று
தரிசித்தவர்தான்
எவ்வளவு பாக்கியவான்
-ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 



3. TENET









 

Tuesday, February 6, 2024

எங்கள் ராமாயணமும் உங்கள் ராமாயணமும்


எங்கள் ராமன்
அதிகாரத்துக்கோ
ஆட்சிக்கோ
ஆசைப்படாதவன்
கிடைக்கும் தருணத்தில்
அப்படியே விட்டுச் செல்பவன்
எங்கள் பரதனும்
அப்படித்தான்
கிடைத்த ஆட்சியில்
ராமனின் பாதுகைகளை
சிம்மாசனத்தில் வைத்து
ஆள்பவன்
எங்கள் இலக்குவனும்
கூட இருந்து
ஆட்சி சுகத்தை
அனுபவிக்கும் நிலை விட்டு
அண்ணனோடு
வனவாசம் சென்றவன்
எங்கள் சீதையோ
வனவாசம்
சிறைவாசம்
பின்
அக்கினி பிரவேசம்
எங்கள் ராவணன்
ராமனுக்கு இணையாய்
நாயகன்
தங்கைக்காகப்
பழிவாங்கத் துடித்துப்
பத்துத் தலையும்
மொத்த நாட்டையும்
இழந்தான்
எங்கள் ராமாயணமோ
அதிகாரத்தை துறக்கிறது
உங்கள் ஆட்சியோ
ராமாயணத்தை
சிம்மாசனத்தில் சுமக்கிறது
அது எல்லோர்க்கும்
வனவாசம்
சிறைவாசம்
அக்னிப் பிரவேசம்
விதிக்கிறது
-ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 





Monday, February 5, 2024

TENET - கவிதை

 


பார் ரத ரத்தினம்!

(இந்தக் கவிதை முழுக்க முழுக்க கற்பனையே)

பார் ரத ரத்தினம்!
ரதம் சென்ற திசையெலாம்
ரதம் பதித்த
ரத்தினத்தின்
முத்தொளிக்
குத்திக் கிழிக்கக் கண்டாய்
ரதம் சென்ற முடுக்கெல்லாம்
ரத்தினத்தின்
இதம் கொண்ட ஒளி
வதம் செய்யக் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
பதித்திட்ட ரதமது
கொதித்திட்ட
ரத்தம் சுமந்து
இடிக்கவும்
இடித்ததைக்
கிடத்தவும் கண்டாய்
ஊர் உலகெலாம்
வெடித்திடத்
துடித்திடக் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
ரத்தின வணிகர்கள்
அதன்பின்
அதன்மீதேறி
உச்சியமர்ந்து
புத்துலகு செய்து
புத்துலகாளக் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
ரத்தினக் களஞ்சியத்தின்
குப்பை மூலையில்
மிஞ்சிய ஒளிதின்று
துஞ்சிய நிலையும் கண்டாய்!
பார் ரத ரத்தினம்!
அதற்கொரு மறுதருணம்
அப்போதெடுத்திட்டுத்
துடைத்திட்டு
அதன் மேல்
பதித்திட்டார்
பார் ரத ரத்தினம்
மற்றுமொன்று

Sunday, February 4, 2024

ஆஷிஸ் நந்தி பின்னுரையோடு ஒரு நாடகம்


    Every political assasination is a joint communique
          - Ashis Nandy (At The Edge of Psychology: Essays in Politics and Culture )

'சுடுதலை நோக்கி கோட்சேவும்
சுடப்படுதலை நோக்கி காந்தியும்
ஒரே நேரத்தில்
பயணித்தார்கள்'
என்றார் நந்தி

காலத்தின் ஜிபிஎஸ் திரையில்
வைத்துப் பார்த்தால்
இன்னும் தெளிவாகப் புரியும்

இரண்டு புள்ளிகளும்
சேருமிடம் என்பது
மாபெரும் துன்பியல் நாடகம்

அப்போது
இரண்டு பக்கமும்
பிறக்கிறது சிறகு
அதில்
பறக்கிறது
ரத்தச் சிவப்பாய்
நடுவில் ஒரு
நாடகீயம்
      -ஆசை

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


Saturday, February 3, 2024

தோட்டாவுக்கு ஒரு நினைவு மண்டபம்


பழைய தேசத்தின்
இதயத்தை நிறுத்திய தோட்டா
அதற்கென்றொரு நினைவு மண்டபம்

நெடுங்காலம் கழித்தாவது
நிறுவத் தோன்றியதே
அந்நாட்டில் ஒருவருக்கு
அம்மட்டில் 
எல்லோருக்கும் பேருவகை

உள்ளே போய்ப்
பார்த்தால்
புதிய தேசத்தின் ஆன்மா
சற்றுத் தள்ளி நின்று
பார்த்தால்
அத்தேசத்தின் ஆண்குறி
இன்னும் தூரத்தே 
சென்று பார்த்தால்
அது ஒரு ராக்கெட்

அதன் உச்சியில்
பறக்கிறது பட்டொளி வீசி
ஆன்மா-நீக்க-அரசியல்சாசனத்தின்
புதிய மணிக்கொடி

ஆன்மாக்களையெல்லாம்
உருவிக்கொண்டுபோய்
உருவிய ஆன்மாக்களின்
சுமைதாளாமல்
அந்தரத்தில்
வெடிக்கப்போகும்
ராக்கெட் அது

தோட்டா வளர்ந்து
ராக்கெட் ஆகும் வரை
காத்திருக்க வேண்டும்
ஒரு தேசம்
ஆன்மாவற்றுப் போவதற்கு
      -ஆசை


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 



Friday, February 2, 2024

தோட்டாவுடன் ஒரு ஒப்பந்தம்


காந்தியை
அவர் இதயத்தில் போய்
நேருக்கு நேர்
சந்தித்த தோட்டா
இனி தன் பயணத்தை
நிறுத்திக்கொள்வதாக
அவரிடம் உறுதியளித்தது
அந்த ஒப்பந்தத்தை
உலகறியத்
தன்முகத்தில்
படிய விட்டுப்
படிக்கக் கொடுத்தபடி
படுத்திருந்தார்
காந்தி

Thursday, February 1, 2024

பெருங்கோயில்


அம்பின்
விசையறிவான்
திசையறிவான்
ராமன்
வலியறிவான்
ராவணன்
வலியே
பிரம்மாஸ்திரம்
அவ்வலியின் மீதே
பெருங்கோயில்

-ஆசை 


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


Tuesday, January 30, 2024

அல்லாஹூ அக்பர்


தன் ஸ்கூட்டியை
நிறுத்திவிட்டு வரும்
பர்தா அணிந்த பெண்ணை
நோக்கி ஓடிவருகிறது
உலகின் பெருமைக்குரிய நாகரிகம் ஒன்று
தனது தொன்மையான நாயகன் வெல்க
என்று முழக்கமிட்டபடி

அவர்களை நோக்கி
கைகளை ஓங்கி ஓங்கி
எதிர் முழக்கமிடுகிறாள்
அந்தப் பெண்
‘அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்’ என்று

அவளுக்குப் பின்னால்
இன்னொரு உருவமொன்று
ஓடிவருகிறது
மூன்று தோட்டாக்களை நெஞ்சில் ஏந்தி
’ஹே ராம்’ என்று சொல்ல வாயெடுத்துப்
பிறகு
‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டபடி
          -ஆசை

(2022-ல் எழுதிய கவிதையின் மீள்பகிர்வு)


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


திருவாளர் கோட்சேவை ஒன்றும் சொல்லாதீர்கள்


திருவாளர் கோட்சேவை
ஒன்றும் சொல்லாதீர்கள்
அவ்வளவாகத் திருவாளர் இல்லாத
காந்தியின் நெஞ்சுக்கு நேரே
அவராக ஒருபோதும் துப்பாக்கி நீட்டியதில்லை
திருவாளர் கோட்சேவின் துப்பாக்கியை
மந்திரவிசை போல் தன் மார்பை
நோக்கி நீளச் செய்தது
அவ்வளவாகத் திருவாளர் இல்லாத
காந்தியின் நெஞ்சுதான்
மூன்று தோட்டாக்களை
அடுத்தடுத்து உறிஞ்சிக்கொண்டதும்
அவரது நெஞ்சுதான்
தன் துப்பாக்கியிலிருந்து
பிடுங்கப்பட்ட
மூன்று தோட்டாக்கள்
எங்கே என்று
திகைத்துப் போன திருவாளர் கோட்சே
இன்னும் அதே இடத்தில்தான்
நிற்கிறார்
அவரைக் கொஞ்சம்
சாந்தப்படுத்தி
உட்கார வைக்கலாம்
இன்னொரு துப்பாக்கி தருகிறோம்
இனிமேல் நீங்களே சொந்தமாகச் சுடுங்கள்
என்று ஆறுதல் சொல்லலாம்
ஆனால்
அவ்வளவாகத் திருவாளர் இல்லாத காந்தியின்
முன்னால் மட்டும் சென்றுவிடாதீர்கள்
சுட்டது நீங்கள்தான் என்ற பெருமையை
உங்களிடமிருந்து
பறித்துவிடுவார்
என்பதை மட்டும்
திருவாளர் கோட்சேவிடம் சொல்லிவிட வேண்டும்
- ஆசை
(காந்தியைத் திரும்பத் திரும்பச் சுட முயல்பவர்களுக்கு, பரிதாபத்துடன்)

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: