Sunday, January 21, 2024

வடுவூர் ராமர்

 


துப்பறியும் நாவலாசிரியர்
வடுவூர் துரைசாமி ஐயங்கார்
வரத்துப் பறவைகளும்
உள்ளூர்ப் பறவைகளும்
எச்சமிட்டு வளர்க்கும்
வடுவூர் ஏரி
இந்தியாவின்
கபடி கிராமம்
என்றெல்லாம்
பேர்பெற்றது
எங்கள் ஊர்
வடுவூர்

கூடுதலாக
ஏரிக்கரையிலேயே
வடுவூர் ராமரின்
வடிவழகு
உலகப் பிரசித்தம்

வரத்துப் பறவைகளை
அவர் ஒருபோதும் விரட்டியதில்லை
என்பதில்
கூடுதல்
வடிவழகு

அவசியம் வாருங்கள்
தரிசித்துச் செல்லுங்கள்

செல்லும்போது
சற்றே
ஏரியையும்
எட்டிப்பாருங்கள்

முதற்கணம்
வாயில் மீனோடு
வானம் பார்க்கும்
பாம்பொன்று
அடுத்த கணம்
பாம்புத்தாராவாகித்*
தண்ணீரை
உதைத்தெழுந்து
பறந்துசெல்லக் கண்டு
திகைத்துப் போவீர்கள்

அப்படியே
நிற்காதீர்கள்
கன்னத்தில்
போட்டுக்கொள்ளுங்கள்

தரிசனம்
பறந்துவிடும்
     -ஆசை, 21-01-24

பாம்புத்தாரா - Oriental Darter (Snakebird)

கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


No comments:

Post a Comment