பழைய தேசத்தின்
இதயத்தை நிறுத்திய தோட்டா
அதற்கென்றொரு நினைவு மண்டபம்
நெடுங்காலம் கழித்தாவது
நிறுவத் தோன்றியதே
அந்நாட்டில் ஒருவருக்கு
அம்மட்டில்
எல்லோருக்கும் பேருவகை
உள்ளே போய்ப்
பார்த்தால்
புதிய தேசத்தின் ஆன்மா
சற்றுத் தள்ளி நின்று
பார்த்தால்
அத்தேசத்தின் ஆண்குறி
இன்னும் தூரத்தே
சென்று பார்த்தால்
அது ஒரு ராக்கெட்
அதன் உச்சியில்
பறக்கிறது பட்டொளி வீசி
ஆன்மா-நீக்க-அரசியல்சாசனத்தின்
புதிய மணிக்கொடி
ஆன்மாக்களையெல்லாம்
உருவிக்கொண்டுபோய்
உருவிய ஆன்மாக்களின்
சுமைதாளாமல்
அந்தரத்தில்
வெடிக்கப்போகும்
ராக்கெட் அது
தோட்டா வளர்ந்து
ராக்கெட் ஆகும் வரை
காத்திருக்க வேண்டும்
ஒரு தேசம்
ஆன்மாவற்றுப் போவதற்கு
-ஆசை
கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:
No comments:
Post a Comment