Saturday, May 18, 2013

சிறு கணங்களின் புத்தகம்


ஆசை
         எப்போதையும்விட அபாயகரமான காலகட்டத்தில் இன்றைய கவிதை நுழைந்திருக்கிறது. இன்றைய கவிஞனைக் காப்பாற்ற செய்யுள் இல்லை, சந்தம் இல்லை, இசை இல்லை, உவமை இல்லை, படிமம்கூட இல்லை, 'போல' கூட நீர்த்துப்போய்விட்டது. இவை எதுவும் இல்லாமல் கவிதை சொல்ல வேண்டிய சவால். அப்படியும் நல்ல கவிதைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன; நல்ல தொகுப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு உதாரணமாக தேவதச்சனின் கவிதைகளைக் கூறலாம். 
     தேவதச்சனின் பல கவிதைகளைப் பார்க்கும்போது அவற்றின் முடிவுகள் திட்டமிட்டு எழுதப்படுபவை அல்ல என்று தோன்றுகிறது. சாதாரணமாக, ஒன்றை அடுத்து ஒன்றைச் சொல்லிக்கொண்டுவரும்போது 'சட்டென்று' ஒரு திறப்பாய் அல்லது தெறிப்பாய் அவரது இறுதி வரிகள் வந்து விழுவதைப் பல கவிதைகளில் பார்க்கலாம். 'ஊழ்' என்ற கவிதையின் இறுதிப் பகுதி இது: 
             செடியின் வயலட் பூவிலும் 
              பச்சை இலையிலும் சிவப்புப்
              பழங்களிலும் அலையடிக்கிறது
              ஒரு கருநீலப் பரபரப்பு.
              சட்டென்று எனக்கு அதன்
              பெயர் மறந்துவிட்டது
              சட்டென்று ஆலமரத்தில்
              இன்னொரு விழுது
              பிறக்கிறது
       நான் முதலில் விவரித்த 'சட்டென்று' என்ற சொல்லின் நிகழ்வு பல இடங்களில் திரும்பத் திரும்ப வருகிறது. பிரபஞ்சத்தில் பெரும்பாலான நிகழ்வுகள் மேலோட்டமாய்ப் பார்ப்பதற்கு மிகமிக மெதுவாக நிகழ்வதைப் போலத் தோன்றினாலும் அவையும்கூட சட்டென்று நிகழ்பவைதானோ என்று இந்தக் கவிதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது. எந்தக் கணத்தில் ஆலம் விழுது வெளிவருகிறதோ அதற்கு முந்தைய கணத்தில் அந்த விழுது வெளிவராமல்தானே இருந்தது; முந்தைய கணத்தில் இல்லாதது இந்தக் கணத்தில் இருக்கிறது; இது 'சட்டென்று'தானே?
    தேவதச்சன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக எழுதுபவர்தான் என்றாலும் அவரது கவிதைகளைப் படிக்கும்போது எனக்கு எந்த விதத்திலும் சலிப்பு ஏற்படுவதில்லை. வேறு சில கவிஞர்கள் ஒரே மாதிரியாக (நன்றாக எழுதினாலும் கூட) எழுவதைப் படிக்கும்போது மட்டும் ஏன் சலிப்பு ஏற்படுகிறது; தேவதச்சன் கவிதைகளைப் படிக்கும்போது அப்படி ஏன் ஏற்படவில்லை என்று எனக்குப் பலமுறை கேள்வி எழுவதுண்டு. அதற்குக் காரணமாக நான் நினைப்பது தேவதச்சனின் எளிமையான, சுமையற்ற சொல்முறைதான். கவிதைகளை வார்த்தைகளின் சுமையால் அழுத்தாமல் காட்சிகளின், கணங்களின் சுமையால் அழுத்துபவர் தேவதச்சன்; ஜப்பானிய ஜென் மற்றும் ஹைக்கூ கவிஞர்களைப் போல. உத்திகள், ஜாலங்கள் ஏதுமில்லாமல், புத்தகத்தின் பின் அட்டை சொல்வதைப் போல 'தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள்'. மொழியின், இயற்பியலின் தர்க்க நிலையில் ஆரம்பித்து முற்றிலுமாக அவற்றுக்கெதிரான அதர்க்க நிலையில் முடிபவையாக இருக்கின்றன பல கவிதைகள்:
        ................................
        ...............................
        ஆய்வாளர் வந்து என் ஆடைகளை நீக்கி
        பரிசோதனை செய்தபோது - மீண்டும் உதிர்ந்தது
        எனது
        உடைவாள் சிறகு
        மேலும் கீழும் பறந்து
        அங்கும் இங்கும் அலைந்து
        சாயங்காலத்தின் இரண்டு பக்கங்களிலும்
                (விசாரணை அறைகளின் கூண்டுகளில்)
'உடைவாள் சிறகு' என்ற பிரயோகமும் 'சாயங்காலத்தின் இரண்டு பக்கங்களிலும்' என்ற பிரயோகமும் நான் மேற்சொன்ன மொழியின், இயற்பியலின் அதர்க்க நிலைக்கு எடுத்துக்காட்டுகள்.

       ஒரே கவிதையின் அடுத்தடுத்த காட்சிகள், வரிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போன்று தோன்றும்; கடைசியில் இப்படி ஒரு முடிவு வரும்:
        ................................
        ...............................
        உடையாத நிசப்தத்தில்
        குலுங்கும் இந்த குமிழை
        இழுத்துச்செல்லவா
        இத்தனை பெரிய ரயில்?
                    (ரயில்)
அதன் பிறகு அந்தக் கவிதையை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது எதுவுமே இல்லை என்று தோன்றும்.

    மிகமிகச் சாதாரணமான காட்சி; வீட்டுக்கு வந்திருக்கும் எழுபது வயதுத் தம்பிக்கு காப்பி போட்டுத் தரும் எண்பத்திரண்டு வயது அக்கா; அவர்களின் பழைய கதைகளுடன்,
        ................................
        ...............................
        அக்கா சொன்னாள்: எனக்கு முன் நீ
        போய்ச் சேர்ந்துவிடாதே.
        அந்தப் பழைய வீட்டின்
        பழைய அறையில்
        காப்பி
        எப்போதும் போல்
        காப்பியைவிட
        சற்று
        அதிகமாகத்தான் இருந்தது.
                    (அக்காவும் தம்பியும்)
என்று முடிகிறது ஒரு கவிதை. எப்போதுமே தேவதச்சனின் கவிதை தேவதச்சனின் கவிதைக்கும் அதிகமாகத்தான் இருக்கிறது என்று அவரது பாணியில் சொல்லலாம். இதன் சாயலை இந்தத் தொகுப்பின் வேறு சில கவிதைகளிலும் காணலாம்;
        அந்த நாற்பது விநாடிகள் நாற்பது விநாடிகளுக்கும்
        அதிகமாக இருந்தன.
                    (நாற்பது விநாடிகள்)
மேலும்,
        ஆடிமாத
        மேல்காற்றில்
        இம்மலர்கள்
        நகர்ந்துகொண்டிருக்கின்றன
        காற்றைவிட
        வேகமாக
                    (ரயில்வே பிளாட்பாரத்தில்)

 தொகுப்பு முழுக்க நுட்பமான கணங்கள், நுட்பமான வரிகள் விரவிக் கிடக்கின்றன; சில கவிதைகள் கவிதைகளாக வெற்றி பெறாதபோதும் அவற்றில் வரும் நுட்பமான சித்தரிப்புகள் அந்தக் கவிதைகளைத் தூக்கிப்பிடிக்கின்றன. தேவதச்சனின் அவதானிப்புகள் சில இடங்களில் வியப்பைத் தருவன; 'பிரிதல்கள்' என்ற ஒரு கவிதை சற்று உரைநடைத் தன்மை கொண்டதாக இருந்தாலும் அந்தக் கவிதையில் வரும் ஒரு காட்சி அபாரமானது,
        ஜனநெரிசல் சாலையில் மூன்று பேர் சிகரட்
        பிடிக்க விரும்பினார்கள். ஒருவன் ஒரு சிகரட்டை
        வாயில் வைத்துக்கொண்டு லைட்டரை எடுத்தான்.
        இன்னொருவன் தன் கையிலிருந்த சிகரட்டோடு
        அவனை நெருங்கினான். வேறு ஒருவன் அதேபோல்
        அருகில் வந்தான். மூன்று கருந்தலைகளும் அருகா
        மையில் நெருங்கின.
        ஆஸ்பத்திரி மாடியில் நின்றுகொண்டிருந்தவள்,
        ஃ எழுத்து ஒன்று
        எங்கிருந்தோ நீந்தி வருவதையும்
        பிறகு அது மூன்று திசைகளில்
        பிரிந்து செல்வதையும் கண்டாள்
               ..........................
       
காட்சியானது தரையில் தொடங்கி பிறகு உயரத்திலிருந்து பார்க்கப்படுவதாக மாறும்போது அற்புதமான பரிமாணத்தை அடைகிறது இந்தக் கவிதை.

    'நாம் என்ற ஒரு வார்த்தை' என்ற கவிதையின் 'மழை மேல் பெய்துகொண்டிருக்கிறது மழை' என்ற வரியைப் படித்தபோது கீழ்க்கண்ட ஜப்பானிய ஹைக்கூ நினைவுக்கு வந்தது.
          The falling leaves
          fall and pile up; the rain
          beats on the rain
                (Gyodai, 1732-93, tr. H.G. Henderson, Haiku in English, 1967)
இது போன்ற தற்செயல்கள் முற்றிலும் இயல்பான ஒன்றே.
   
     முப்பது வருடங்களாக எழுதிவரும் தேவதச்சனின் நான்காவது கவிதைத் தொகுப்பு 'யாருமற்ற நிழல்'. சிறிய புத்தகம்; உயிர்மை வெளியீடாக 2006இல் வெளிவந்தது. இதைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நல்ல தொகுப்பு; ஆனால் குறைந்த பக்கங்களைக் கொண்ட இது போன்ற கவிதைத் தொகுப்புகளுக்கு டெமி அளவு அவ்வளவாக ஏற்றதாக இருப்பதில்லை. அட்டையின் அச்சாக்கத்தில் துல்லியம் இல்லை. இதுபோன்ற ஒரு சில குறைபாடுகள்தான். மற்றபடி இந்தப் புத்தகத்தை எனக்கு உவப்பான கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகச் சேர்த்துவிட்டேன்.
     இறுதியாக, புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று:
                               பரிசு
        என் கையில் இருந்த பரிசை
            பிரிக்கவில்லை. பிரித்தால்
            மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
        என் அருகில் இருந்தவன் அவசரமாய்
            அவன் பரிசைப் பிரித்தான். பிரிக்காமல்
            மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
        பரிசு அளித்தவனோடு
            விருந்துண்ண அமர்ந்தோம்
        உணவுகள் நடுவே
            கண்ணாடி டம்ளரில்
            ஒரு சொட்டு
            தண்ணீரில்
            மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள்

(நூல் விவரங்கள்: தலைப்பு: யாருமற்ற நிழல், ஆசிரியர்: தேவதச்சன், பக்கங்கள்: 64, விலை: 40, உயிர்மை பதிப்பகம்)
(தமிழ் இன்று இணைய இதழுக்காக 2010ஆம் ஆண்டு எழுதிய மதிப்புரை)

No comments:

Post a Comment