Monday, August 1, 2016

மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல்




ஆசை

(‘தி இந்துநாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அச்சில் வெளியாகியிருக்கிறது. முழுமையான, விரிவான நேர்காணல் எனது வலைப்பதிவில் பிரத்யேகமாக இங்கே...)
 
நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின்முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். கடந்த ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார்...


இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனக்கு எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நான் வேண்டுமென்றே எந்த உத்தியையும் பின்பற்றி அந்தப் படத்தை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். ஆனால், மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார்கள் அதைப் பற்றி. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. மேடை நாடகங்கள் போலவும் வானொலி நாடகங்கள் போலவும் தமிழ்த் திரைப்படங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகர வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள் மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான்உதிரிப்பூக்கள்’.


நிறைய திறமைசாலிகள், திறமையான இயக்குநர்கள் எல்லோரும் இருந்தும் தமிழ் திரைப்படம் ஏன் இப்படி இருக்கிறது என்று நினைத்தேன். மற்ற நாடுகளின் திரைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் பல படிகள் கீழே இருப்பதாகவே உணர்ந்தேன். அதற்குக் காரணம் நம் திரைப்படங்கள் யதார்த்தமாக இல்லாததுதான் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டிலேயே வங்க மொழிப் படங்கள் எவ்வளவு யதார்த்தத்துடன் இருக்கின்றன. (சத்யஜித் ராய் படங்கள் கூட நான் பிற்பாடுதான் பார்த்தேன்.) 
அடுத்ததாக, இலக்கியம். புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு..ரா., சூடாமணி போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது என்னையறியாமலேயே அவை என்னைச் செதுக்கின. அவர்களின் அணுகுமுறை, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் விதம், தங்களைச் சுற்றியுள்ளவர்களை அவர்கள் பார்த்த விதம் எல்லாமே எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தின. உண்மையில், சினிமாவை இவர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும்தான் கற்றுக்கொள்ள வேண்டும். யதார்த்தவாதம், அதை அழகுணர்ச்சியோடு சொல்லுதல் இதுதான் முக்கியம். அழகுணர்ச்சி என்பதற்காகப் போட்டு மூளையைக் கசக்க வேண்டியதில்லை. மக்களின் கண்கொண்டு பார்த்தாலே இயல்பான அழகுணர்ச்சி பிடிபடும். நான் என்னை மக்களிடமிருந்து பிரித்துப் பார்ப்பதில்லை. மக்களில் ஒருவனாகத்தான் என்னைக் கருதிக்கொள்கிறேன்.


உங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் சினிமா இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு உறைநிலையில் - கிட்டத்தட்ட ஈடுபாடின்மைபோல - நீங்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒருவேளை ‘உதிரிப்பூக்கள்’ படமே உச்சம் என்று திருப்தியடைந்துவிட்டீர்களா?

வழக்கமாகப் பலரும் திரைப்படங்களுக்குள் நுழையும்போது பெரும் கனவுகளுடனும் சினிமா மீது ஈடுபாட்டுடனும் வருவார்கள். நான் இதற்கெல்லாம் நேரெதிர். தமிழ் சினிமா மீது ஈடுபாடே இல்லாமல் இருந்தவன் நான். அதிலும் சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமா மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவன். கட்டாயமாகத்தான் அழைத்துவரப்பட்டேன். இங்கே வந்த பிறகும் கூட எனக்குக் கிடைத்த ஸ்தானத்தை ஒரு வியாபாரஸ்தலாமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதனால் நான் மற்றவர்களைக் குறைசொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு விருப்பம் இல்லை அவ்வளவுதான். ஒரு படம் வெளியானதும் அது ஓடுகிறதா, இல்லையா; அதற்கு எப்படி விமர்சனங்கள் வருகின்றன என்று எதையும் பற்றிக் கவலைப்பட்டதில்லை. என் படங்களைப் பத்திரிகைகளில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள் என்றுகூட சொல்வார்கள். அவற்றையும் பெரும்பாலும் படிப்பதில்லை. ஒரு படம் முடிந்துவிட்டால் நான் பாட்டுக்கும் போய்த் தூங்குவேன், புத்தகங்களைப் படிப்பேன், அடுத்து என்ன வேலை என்பதில் நான் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன். ஒரு ஹோட்டலைத் தொடங்கி அதற்குப் பிறகு அதற்குப் பல கிளைகளைத் திறக்கும் வணிக சாம்ராஜ்யத்தைப் போல திரைப்படத் துறையை மாற்றிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என் முதல் படத்தில் நடித்த ரஜினி எனக்கு நல்ல நண்பர்தான். நான் நினைத்திருந்தால் எனது இரண்டாவது படத்திலும் அவரையே போட்டு தொடர்ச்சியாக ஹிட் கொடுக்க என்னால் முடிந்திருக்கும். நான் அப்படிச் செய்யவில்லையே. ஏராளமான தயாரிப்பாளர்கள் வந்தார்கள். அவர்கள் யாருக்கும் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. புதியவர்களை வைத்துத்தான்உதிரிப்பூக்கள்படம் எடுத்தேன். அப்படி எடுக்கும்போது கூட அது ஓடுமா, ஓடாதா, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. வணிக நோக்கம் இருந்திருந்தால் இரண்டாவது படமும் வெற்றிபெற என்னென்ன சேர்க்க வேண்டும், யாரையெல்லாம் அதில் நடிக்க வைக்க வேண்டும் என்றுதானே ஒரு இயக்குநர் யோசித்திருப்பார். நான் அப்படியெல்லாம் பயப்படவே இல்லை. எத்தனையோ தயாரிப்பாளர்களை நான் நிராகரித்துவிட, ஒரு தயாரிப்பாளர் உதவி கேட்டு வந்தார். சரி, அவருக்கு உதவி செய்யலாமே என்று ஆரம்பித்ததுதான்உதிரிப்பூக்கள்’.

அந்தத் தயாரிப்பாளர் கேட்ட பிறகுதான்உதிரிப்பூக்கள்படத்துக்கான கதையையே தேர்வு செய்தீர்களா?

ஆமாம்! ஒருவர் பசிக்கிறது என்று நம் முன் வந்து நிற்கிறார். அப்போது யோசித்துக்கொண்டிருக்க முடியுமா? அதுபோலத்தான், உதவி கேட்டு நம் முன்னே ஒருவர் வந்து நிற்கிறார். சரி என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்தான் கதையைத் தேர்வுசெய்தேன்.    

புதுமைப்பித்தன் மாபெரும் எழுத்தாளர்தான். ஆனால், அவரது படைப்புகளில்சிற்றன்னைசுமாரான ஒரு படைப்பாகத்தான் இலக்கிய உலகில் கருதப்படுகிறது. அதையும் தாண்டிய ஒரு படைப்பாகத்தான் நீங்கள்உதிரிப்பூக்கள்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள் என்று கருதப்படுகிறது. வழக்கமாக ஒரு இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக்கும்போது அந்தப் படைப்பின் வாசகர்களுக்குத் திருப்தி ஏற்படாது. அதைத் தாண்டிஉதிரிப்பூக்களில் வெற்றிபெற்றிருக்கிறீர்களே, எப்படி?

புதுமைப்பித்தன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். ஆகவே இந்த ஒப்பிடல் எல்லாம் தேவையே இல்லை.

திரைக்கதை எப்படி எழுதுவதென்று நான் யாரிடமும் போய்க் கற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், நாவல், சிறுகதை போன்றவற்றை எப்படித் திரைப்படம் ஆக்குவதென்றும் யாரிடமும் போய்க் கற்றுக்கொள்ளவில்லை. அதற்கு முன்பு அப்படி உருவாக்கப்பட்ட படங்களை உற்றுநோக்கியும் நான் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு பொறி போதும். அது என்னுள் ஏற்படுத்தும் தாக்கத்தை அப்படியே விஸ்தரித்துக் கதையை உருவாக்கிவிடுவேன். ஒரு தீக்குச்சியைப் பற்றவைப்பதன் மூலம் ஊருக்கே விருந்துவைத்துவிட முடியுமல்லவா! அப்படித்தான்உதிரிப்பூக்கள்கதையை உருவாக்கிய விதமும். அதிலுள்ள காட்சிகள், முக்கியமாக தாயில்லாப் பிள்ளைகள் என்ற விஷயம் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது. நானும் அங்கிருந்துதான் எனக்கான பொறியை எடுத்துக்கொண்டேன். புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலில் சுந்தரவடிவேலு வாத்தியார் பூட்ஸ் காலால் தனது பிள்ளையை உதைக்கும் இடத்தில் நான் அதிர்ந்துபோய்விட்டேன். புதுமைப்பித்தன் இப்படி போன்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கிவிட்டாரே என்று அதிர்ந்துபோனேன். நானும் சிறு வயதில் அதுபோன்ற சூழலில் வளர்ந்தவன்தான். குழந்தைகளுக்கு அப்பா, அம்மா, சித்தி எல்லாம் இருந்தாலும் அவர்களின் பேச்சுத்துணைக்கென்று, அவர்களில் உலகத்தில் யாராவது வேண்டுமல்லவா? அங்கிருந்து
விஸ்தரித்துக்கொண்டதுதான்உதிரிப்பூக்கள்

பாதி ராத்திரியில் பசியுடன் வந்து சித்தியின் வீட்டுக் கதவைத் தட்டும் குழந்தைகள், சித்தி கதைவைத் திறந்ததும் சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சி நம்மை உலுக்கக் கூடியதல்லவா

ஆம், அந்தக் குழந்தைகள் அழுதுகொண்டே நின்றிருந்தால் ரொம்பவும் வழக்கமான சென்டிமெண்டாக இருந்திருக்கும். அப்படிக் கள்ளங்கபடமில்லாமல் சிரித்துக்கொண்டு நின்றதுதான் நம்மை அந்த அளவுக்கு பாதித்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள்தான் கதையை விஸ்தரிப்பவை. என்னைப் பொறுத்தவரை கதையை உருவாக்குவது என்பது பெரிய விஷயமாக இருந்ததில்லை. நிறைய பயணம் செய்வேன். அப்போது பார்க்க நேரிட்ட சோகமான பெண்களின் தோற்றம், வாழ்க்கையில் காண நேரிட்ட கொடுமைக்கார கணவர்கள் என்று இதெல்லாம் போதாதா கதையை உருவாக்குவதற்கு? சுற்றி இருக்கும் உலகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாலே கதைகள் உருவாகிவிடும்

பம்பாயில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது காலையில் கதவைத் திறந்தேன். ஒரு பெண் ஜாகிங் போய்க்கொண்டிருந்தாள். இன்று உடல் ஆரோக்கியத்துக்காக ஓடும் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் எதெற்கெல்லாமோ ஓட வேண்டியிருக்கும். பிறந்த வீட்டிலிருந்து புருஷன் வீட்டுக்கு, அப்புறம் புருஷனுக்காக, மண வாழ்க்கை சரியாக அமையவில்லையென்றால் விவாகரத்துக்காக, அப்புறம் மறுபடியும் தாய்வீட்டுக்கு. இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறாள். இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில்நெஞ்சத்தைக் கிள்ளாதேபடத்துக்கான கதையை எழுதிவிட்டேன். அதேபோல்தான், முன்புதங்கப்பதக்கம்கதையையும் உருவாக்கினேன். துக்ளக் அலுவலகத்தில் என்னை சந்திக்க வந்த நண்பர்கள் செந்தாமரை போன்றோர் ஒரு நாடகத்துக்காகக் கதை கேட்டனர். அப்போது வெளிவந்துகொண்டிருந்தடிட்பிட்ஸ்பத்திரிகையில் ஜான் வெய்ன் நடித்த கவுபாய் படம் ஒன்றின் ஸ்டில் வெளியாகியிருந்தது. ஒரு கண்ணில் பட்டை மாட்டிக்கொண்டு ஷெரீஃபாக அவர் இருக்கும் தோற்றம். அதைப் பார்த்துக்கொண்டே இருந்த என் மனதில் நம்மூரிலும் அதைப் போன்ற ஒரு ஸ்டிரிக்ட் அதிகாரி பாத்திரத்தை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. தீச்சட்டிக் கோவிந்தன் போன்ற பல அதிகாரிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படியே யோசித்துக்கொண்டிருந்தபோதுதங்கப்பதக்கம்கதையை உருவாக்கிவிட்டேன். கதை வேண்டி வந்திருந்த நண்பர்களிடம்ஒரு ஸ்டிரிக்ட் போலீஸ் அதிகாரிஎன்று ஆரம்பித்துக் கதையைச் சொல்லிவிட்டேன்.

ஒரு படத்தைப் பார்க்கும்போது அதன் இயக்குநரோ ஒளிப்பதிவாளரோ, கதைவசனகர்த்தாவோ நமக்குத் தெரியக்கூடாது. அந்தப் படத்தில் அந்த அளவுக்கு ஒன்றிப்போக வேண்டும். நான் அடிக்கடி பார்க்கும் படம்தி வே-ஹோம்என்கிற கொரிய மொழிப் படம். எவ்வளவோ உலகத் திரைப்படங்களை நான் பார்த்திருந்தாலும் அதுபோன்ற ஒரு படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. வாய் பேச முடியாத ஒரு கிராமத்துப் பாட்டிக்கும், நகரத்தில் பிறந்த அவளது பேரனுக்குமான உறவைப் பற்றிய படம் அது. படம் முழுவதும் பெரும்பாலும் அமைதியாகத்தான் நகரும். ஆகவே, வசனங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காட்சிகள் மூலமாகத்தன் படம் நகரும். ஆழ்மன உணர்வுகள், காட்சிமொழியின் ஆழம், உணர்வுகள், மனித வாழ்க்கையின் யதார்த்தம் போன்றவற்றை அதில் காட்டியதுபோல் வேறு எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை. அந்த இயக்குநர் எப்படி இந்தக் கதையை, படத்தை மனதில் உருவாக்கினார், எப்படி அதை எடுத்தார் என்று இன்றுவரை எனக்கு ஆச்சரியம்தான். திரைப்படக் கல்லூரியில் எனது மாணவர்களுக்கு விளக்குவதற்காக இப்படிப்பட்ட ஏராளமான உலகத் திரைப்படங்களை நான் பார்த்து, ஆய்வுசெய்கிறேன். அந்தப் படங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய படங்கள் ஒன்றுமேயில்லை.

இப்படி ஒரு ஒப்பீட்டை நீங்களே வைப்பதால் இந்தக் கேள்வி. தமிழைப் பொறுத்தவரைஉதிரிப்பூக்கள்படமும் உங்களின் மற்ற சில படங்களும் முக்கியமானவை. இந்திய திரைப்பட வரலாற்றிலும் உலகத் திரைப்படங்களுக்கு மத்தியிலும் வைத்துப்பார்க்கும்போது உங்கள் படங்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஸ்டோனிங் ஆஃப் சுரையாஎன்ற ஈரானிய திரைப்படம் 2008-ல் வெளியானது. அதைப் பார்த்துவிட்டு கனடாவில் இருக்கும் என் பெண், ‘என்னப்பா இந்தப் படத்தைப் பார்த்துட்டுதான்உதிரிப்பூக்கள்எடுத்தீங்களா?’ என்று வேடிக்கையாகக் கேட்டாள். அந்த அளவுக்கு இரண்டு படங்களும் ஒற்றுமை கொண்டவை. அந்தப் படத்தில் ஒரு பெண் பாத்திரம், அதற்கு இணையாகஉதிரிப்பூக்களில் ஒரு ஆண் பாத்திரம்.

உதிரிப்பூக்கள்படத்தில் நான் பாடல்கள் வைத்திருந்தேன். தயாரிப்பாளரின் விருப்பத்துக்காக அது. அப்படிச் செய்தால்தான் மற்ற விஷயங்களில் நம்மிடம் தலையிடாமல் இருப்பார்கள். அந்தக் காலத்தில் ஆடியோ உரிமைதான் மிகவும் லாபம் தரக்கூடிய ஒன்று. அதனால் பாடல்கள் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. ஒருவேளை பாடல்களே இல்லாமல்உதிரிப்பூக்களை நான் எடுத்து அது வெற்றிபெற்றிருந்தால் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லலாம். பாடல்களை வைத்துவிட்டு அந்தப் படத்தை உலகப் படங்களோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்கக் கூடாது.

ஆனால், அந்தப் பாடல்களையும் நீங்கள் அழகாக எடுத்திருக்கிறீர்களே?

தமிழ்த் திரைப்படங்களிலும் சரி, இந்தியத் திரைப்படங்களிலும் சரி பாடல்கள் என்பது பிடிக்காத விஷயம். ‘ஜானிமாதிரியான மியூசிக்கல் படங்களுக்கு வேண்டுமானால் பாடல்கள் தேவைப்படலாம். மற்ற படங்களுக்கு அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இதற்காக நான் இசைக்கும் பாடலுக்கும் எதிரானவன் என்று நினைத்துவிடக் கூடாது. இசையைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? இசை சாராத படங்களில் பாடல்கள் தேவை இல்லை என்பது மட்டுமே எனது கருத்து.
ஆகவே, பாடல்கள் என்பது படத்தில் எனக்கு நெருடலான விஷயம்தான். அந்த நெருடலான விஷயத்தையே சாதகமான அம்சமாக மாற்றுவதற்குதான் எனது இசையமைப்பாளர் இளையராஜாவைப் பயன்படுத்திக்கொண்டேன். காட்சிக்கு ஏற்ற மாதிரியான பாடல்களை, காட்சிச் சூழல்களைத் தூக்கி நிறுத்தக்கூடிய பாடல்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். அப்படிப்பட்ட பாடல்களை அழகான படமாக்கினேன். அப்படி அழகாகப் படமாக்கப்பட்டதால் பாடல்கள் தப்பில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். எப்படியிருந்தாலும் பாடல்கள் வைப்பது தப்புதான்.

கூத்து, நாடகம் போன்ற கலை மரபுகளில் பாடல்களைக் கொண்டிருக்கும் இந்தியா திரைப்படம் என்ற மேற்கத்திய கலையை தன்னுடைய கலையாக ஆக்கிக்கொண்டதன் அடையாளமாகப் பாடல்களை நாம் கருதிக்கொள்ளலாம் அல்லவா?

இதெல்லாம் சப்பைக்கட்டு. இந்தியாவில் மட்டும்தான் பாடல்கள் இருக்கின்றனவா? பீட்டில்ஸ், மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களுக்கெல்லாம் உலகமே மயங்கிக் கிடந்தது. அவர்களெல்லாம் திரைப்படங்களிலா பாடினார்கள்? ஆப்பிரிக்காவின் ஏதாவது ஒரு மூலையிலுள்ள ஒரு கிராமத்துக்குப் போனாலும் அங்கே பாடல்கள் இருக்கும். உலகத்தில் எல்லா நாடுகள், கலாச்சாரங்களிலும் அப்படித்தான். அவர்கள் யாரும் பாடல்களைச் சினிமா மூலமாக வேண்டுவதில்லை. சினிமாவை சினிமாவாக எடுக்கத்தான் சொல்கிறார்கள். ஆனால் நாம்தான் பிறந்து தொட்டிலில் கிடக்க ஆரம்பித்ததிலிருந்து சாகிற வரைக்கும் சினிமாவில் பாடல் கேட்கிறது. காதலிக்கும்போது குரூப் டான்ஸர்கள் சூழ நீங்கள் என்ன டூயட்டா பாடிக்கொண்டிருப்பீர்கள்? இந்தியாவில் 1955-லேயே பாடல்களே இல்லாமல் சத்யஜித் ராய்பதேர் பாஞ்சாலிஎடுத்திருக்கிறார். உலகமே அதை ஏற்றுக்கொண்டு பார்த்து ரசித்தது. சுவாரஸ்யமாகவோ, யோசிக்க வைக்கும் விதத்திலோ, மகிழ்ச்சியூட்டும் விதத்திலோ எது இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள். மனதுக்கு சந்தோஷம் கொடுக்க வேண்டும். பாட்டும் நகைச்சுவையும்தான் சந்தோஷம் கொடுக்கும் என்று அர்த்தமில்லை. ‘ வே-ஹோம்படம் ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. அதில் என்ன மகிழ்ச்சியூட்டும்ஜனரஞ்சகஅம்சம் இருக்க முடியும்? ஆனால், அது நம்மை மகிழ்ச்சியூட்டியதே!

இதைப் பொறுத்தவரை தமிழ்த் திரையுலகில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இல்லை. மலையாளம், மராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலெல்லாம் பாடல்கள் இல்லாமல் படங்கள் வெளிவருகின்றன. தமிழில் வெகு அரிதாகத்தான் அப்படி நிகழ்கிறது. அப்படியே இருந்தாலும்  ‘பாட்டு இல்ல, அதனால படம் ஓடலைஎன்று சொல்லிவிடுகிறார்கள். இந்திய சினிமா என்றாலே வெளிநாட்டுக்காரர்கள்ஐயோ, சாங்ஸ் ஓரியண்ட்டட் ஃபில்ம்ஸ்அப்படி என்று சொல்லிவிடுகிறார்கள். பாடல்கள் இல்லாமல் படங்கள் எடுத்து அவை நன்றாக ஓடினால்தான் நிலை மாறிவிட்டது என்று சொல்ல முடியும்.

திரைப்படம் என்பதை ஒரு இயக்குநரின் படைப்பாக அல்லாமல், கூட்டு முயற்சியாகக் கருதுபவரல்லவா நீங்கள்

ஒரு படம் நன்றாகப் போகவில்லை என்றால் தப்பான தயாரிப்பாளரை, தப்பான கலைஞர்களை, தப்பான கதையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆக, எல்லாமே என் தவறுகள். ஆனால், ஒரு படம் நன்றாகப் போனால் அதற்குக் காரணம் அந்தப் படத்தில் பங்குபெற்ற எல்லோரும்தான். அதனால்தான் என் படங்களில் ஃபில்ம் பை மகேந்திரன்என்று நான் போடுவதில்லை. நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல நடிகர்கள், நல்ல படத்தொகுப்பாளர் போன்றோர் அமைந்தால்தான் கதைக்கு ஏற்ற சரியான மனநிலையை ஏற்படுத்திப் பார்வையாளர்களைக் கதைக்குள் இழுக்க முடியும். இத்தனை பேர் உழைப்பும் இருந்து அந்தப் படத்தை எப்படி நான் என்னுடைய படமாக மட்டும் சொந்தம் கொண்டாடிக்கொள்ள முடியும்?

உங்கள் படங்களில் பிரதான பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு கதாபத்திரங்களில் வரும் நடிகர்கள், உதாரணத்துக்கு குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தாமரை, சாமிக்கண்ணு போன்றவர்களின் எளிமையான நடிப்பு உங்கள் திரைமொழிக்குக் கூடுதல் அழகுசேர்க்கிறது. அவர்களின் மொழிகூட மெருகேற்றப்படாமல் இயல்பாகவே உங்கள் படங்களில் இருக்கும் அல்லவா?

யார் சார் சின்னச் சின்ன பாத்திரங்கள்? தினசரி நம் வீட்டுக்குப் பால் பாக்கெட் போட வருபவர்கள், துணிகளை சலவை செய்து  கொண்டுவருபவர்கள், வீட்டுப் பணியாட்கள் போன்றவர்கள் இல்லையென்றால் நாம் வீட்டை விட்டு வெளியில் போக முடியுமா? அவ்வளவு, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் விவசாயிகள், எல்லையில் காவல் காத்துக்கொண்டிருக்கும் ராணுவத்தினர் போன்றோரெல்லாம் இல்லையென்றால் நம் பாடு திண்டாட்டம்தான் இல்லையா? பாதாளச் சாக்கடையில் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் கொடுமை இந்த 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு அநியாயம் இது. இப்படி எல்லோரையும் நாம் நம்பிக்கொண்டு வாழும்போதுஒரு ஊரில் ஒருத்தன் இருந்தான், ஒருத்தி இருந்தாள்என்று இரண்டு பேரை மட்டும் மையப்படுத்திப் படம் எடுப்பது அநியாயமில்லையா?
நான் கிராமத்தில் வளர்ந்தவன். எங்கள் ஊரில் முடிதிருத்துபவர், சலவைத்தொழிலாளி எல்லோரும் குடும்பத்தில் அங்கங்களாக மாறிவிடுபவர்கள். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் அவர்கள் பங்கெடுப்பார்கள்.

 ‘மெட்டிபடத்தில் செந்தாமரை செய்த பாத்திரம் எனது பெரியப்பாவை மனதில் வைத்துக்கொண்டு நான் உருவாக்கியது. பெரியாரின் தொண்டர் அவர். ‘மை சன்என்று கூப்பிடுவார். குடித்துவிட்டுப் பெரியம்மாவை அடிப்பார். செந்தாமரை பாத்திர வார்ப்புக்கு உரிய புகழ் என் பெரியப்பாவுக்குத்தான் போய்ச்சேரும். ‘முள்ளும் மலரும்படத்தில் திருமணத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் நாயனக்காரர்களையும் மேளக்காரர்களையும் வழிமறைத்து ரஜினி கலாட்டா செய்வாரே அது என் பெரியப்பா செய்த கலாட்டாதான்.

நம்மைச் சுற்றி நிகழ்வதையெல்லாம் நாம் உள்வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதெல்லாம் ஏதோ சினிமாவுக்கு வந்த பிறகு நான் உள்வாங்க ஆரம்பித்ததில்லை. சிறுவயதிலிருந்தே உள்வாங்கிய விஷயங்கள்! தி.ஜானகிராமன், லா..ரா கதைகளையெல்லாம் படித்தபோது, தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை அவர்கள் உள்வாங்கியிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அடடா, அவர் எழுதியிருக்கும் பாத்திரம் போன்றே பக்கத்துத் தெருவிலும் ஒருத்தர் இருக்கிறாரே, நம் வீட்டு எதிரேயும் ஒருத்தர் இருக்கிறாரே என்றெல்லாம் தோன்றும். இதெல்லாம்  நமக்குள் ஊறிப்போய் எல்லாவற்றையும் உற்றுநோக்கும் ஒரு சுபாவம் நமக்கும் வந்துவிடும். படப்பிடிப்பின் போது இந்த சுபாவம் நமக்கு நிறைய தீனி போடும். அதிலும் நாம் நினைத்ததை நடித்துக்கொடுக்கக் கூடிய நடிகர்கள் இருந்தாலோ இன்னும் அழகாக மெருகேறிவிடும். அதனால் ஒரு படத்தின் வெற்றியில் நடிகர்கள் தேர்வு ரொம்பவும் முக்கியம். அதுமட்டுமல்ல, படத்துக்குத் தலைப்பு வைப்பதிலும் கூட கவனம் தேவை. படத்துக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். படத்தின் தன்மையை மக்களிடம் கொண்டுசெல்லும் வகையிலான விளம்பர வடிவமைப்பும் வேண்டும்.

பிரம்மாண்டமாகப் படங்கள் எடுப்பதைவிட அன்பைஉணர்வுகளைப் பிரம்மாண்டமாக எடுங்கள் என்று ஒரு முறை நீங்கள் சொன்னீர்களல்லவா?

என்னைப் பொறுத்தவரை உணர்வுகள்தான் பிரம்மாண்டமானவைஅந்த பிரம்மாண்டத்துக்கு முன்பு பட்ஜெட் பிரம்மாண்டம் ஒன்றும் செய்ய முடியாதுபட்ஜெட்டில் நீங்கள் பிரம்மாண்டமாகப் படம் எடுத்தாலும் அங்கேயும் சென்டிமெண்ட் இருந்தால்தான் அது ஓடும்.

உங்கள் படங்களில் பெரும்பாலும் ஒருசில நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களே திரும்பத் திரும்ப இடம் பெற்றதற்கு என்ன காரணம்?

சொன்னால் ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். எனக்கு அதிகப் பேரை அப்போது தெரியாது. நான் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது வந்த படங்களில் ஒன்றிரண்டைத்தான் பார்த்திருப்பேன். எவ்வளவோ பெரிய கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்களெல்லாம் அப்போது வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது. ‘துக்ளக்பத்திரிகையில் இருந்தவரைக்கும் விமர்சனம் எழுத வேண்டும் என்பதற்காக நிறைய படங்களைப் பார்த்தேன். சினிமாவுக்கு வந்த பிறகு எனக்கு என் படங்களைப் பற்றிச் சிந்திக்கவே நேரம் போதவில்லை. அதனால் மற்ற படங்களைப் பார்க்கவில்லை. அந்த காலகட்டத்தில் வெளியான படங்களை இன்று  பார்க்கும்போது எவ்வளவு பேர் அந்தக் காலத்தில் நடிக்க வந்திருக்கிறார்களா, எப்படி நமக்குத் தெரியாமல் போயிற்று என்று ஆச்சரியப்பட்டுப்போவேன். ஆக, என் படங்களில் நடித்தவர்களை மட்டும்தான் பெரும்பாலும் எனக்குத் தெரியும். ஸ்ரீதேவி மட்டும் ஒரு படத்தோடு சரி. மற்றவர்களெல்லாம், சரத்பாபு, குமரிமுத்து போன்றவர்கள் என்னோடுதான் முழுவதும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.    
  
ஒரே காலகட்டத்தில் தமிழில் யதார்த்தப் பட அலையைத் தோற்றுவித்தவர்கள் நீங்களும் பாலு மகேந்திராவும்தான். ஆனால், அந்த அலை நீண்ட காலத்துக்கு வெற்றிகரமாக நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நல்ல படங்களுக்கான களம் அமைந்திருக்கிறது. நீங்கள் இருவரும் நீடித்த உத்வேகத்துடன் இயங்கியிருந்தால் தற்போதைய  நிலையை தமிழ் சினிமா எப்போதோ அடைந்திருக்கும் என்ற ஆதங்கமும் கோபமும் உங்கள்  ரசிகர்கள் மனதிலே இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

என் மேல் எப்படி சார் நீங்கள் கோபப்பட முடியும்? நான் என்ன விருப்பப்பட்டா சினிமாவுக்கு வந்தேன். நான் தொடர்ந்து திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமென்று எந்த அவசியமும் எனக்கில்லை. ஆகவே, இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது. எத்தனையோ பேர் ஆண்டுதோறும் திரைப்படம் தந்து தங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். நான் அப்படி இல்லை.

திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலானோர் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சினிமாவுக்கு வந்த பிறகு அவர்களுக்கு வெற்றி பெற்ற பிறகு அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிடும். அதற்குப் பிறகு அவர்கள் சொகுசை நோக்கிப் போகிறார்கள். ஒன்றுக்கு நான்கு கார்கள் வைத்துக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுடைய சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அவர்கள் சம்பாதித்தே ஆக வேண்டிய சூழல். அதனால் வருஷத்துக்கு ஒரு படம், இரண்டு படம் என்று கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழில் நல்ல திறமைசாலியான இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், இப்படி டிமாண்டுக்கு ஏற்றவாறு படம் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். ஆடிட்டர்களோடு செலவழிக்கும் நேரம்தான் அதிகரிக்கிறது. இதில் படைப்புத்திறனைப் பற்றி யோசிக்க நேரம் எங்கே. அது ஒரு கட்டத்தில் குதிரைப் பந்தயம் போன்று ஆகி, ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதாகிறது. அதனால் படைப்புத் திறனில் அவர்கள் தேங்கிப்போகிறார்கள். இப்போது வருபவர்கள் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்கள். சினிமாவுக்குள் வந்தவுடன் தங்கள் பில்லை நீட்டிவிடுகிறார்கள், இவ்வளவு சம்பளம் என்று. பரவாயில்லை அப்படியாவது அவர்கள் பிழைத்துக்கொள்ளட்டும். நான் அப்படி இல்லை. விருப்பமே இல்லாமல் வந்த என்னிடம் அதனால் ஏன் நீங்கள் படம் எடுக்கவில்லை என்று யாரும் கேட்டுவிட முடியாது

மகாபாரதம், திருக்குறள் போன்றவையெல்லாம் எழுதப்பட்டு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. தஞ்சை பெரிய கோயில் போன்ற அற்புதங்கள் நிகழ்ந்து எத்தனை நூற்றாண்டுகள் ஆகின்றன. நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் வருவதற்கு முன்பே மனிதர்கள் தங்கள் அறிவின் உச்சத்தைத் தொட்டுவிட்டதன் அடையாளம் அவையெல்லாம். இப்போது மின்சாரம் வந்துவிட்டது, ஏசி வந்துவிட்டது; நமக்கு வேப்பமரக் காற்று தேவையில்லை எனும் சூழல் வந்துவிட்டது. இவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றம் இருந்தும் நாம் பழங்கால அறிவின் உச்சத்தைத் தொட முடியவில்லையே. முப்பது வருட இடைவெளிக்கே நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இடைவெளி விழுந்துவிட்டதே அதை ஏன் கேட்கவில்லை?

டிஜிட்டல் யுகத்தில் சினிமா அடிவைத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதனால்தான் யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதில் தப்பேதும் இல்லை. மெரினாவில் யார் வேண்டுமானாலும் கால் நனைக்கலாம். இன்னும் கொஞ்சம் கடலுக்குள் போக வேண்டுமானால் ஒன்று நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், அல்லது படகு ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் தெரியாமல்ஐயய்யோ மூழ்குகிறேனேஎன்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

வன்முறையை இன்றைய திரைப்படங்கள் அதிக அளவில் சித்தரிக்கின்றனவா?

வன்முறையைப் பெரிய வீரதீரச் செயலாக நினைக்கிறார்கள். அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால்நம் ஊர் எல்லை சாமிகளும் அரிவாள், ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். நாங்கள் வீரத்துக்குப் பேர்போன பரம்பரை. சாமிகளும் எல்லோரும் ஆயுதங்கள் வைத்திருக்கும்போது நாங்கள் வன்முறையைப் படம் எடுத்தால் என்ன தப்புஎன்றெல்லாமும் சொல்வார்கள். பாடல்களுக்கும் இப்படித்தான். ‘ஐயோ, நாங்க பொறந்ததே பாட்டுக் கேட்டுட்டுதான். பாட்டு இல்லாம எப்படி நாங்க படம் பாக்குறதுஅப்படின்னு சப்பைக்கட்டு கட்டுவார்கள். ‘உலகத்திலேயே மிகவும் கொடுமையான விஷயம் ஒவ்வொருத்தரும் தங்கள் செயலுக்கு ஒரு நியாயம் கற்பிப்பதுதான்என்று ஒரு அறிஞர் சொன்னதுதான் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘எனக்கு நியாயம்னு பட்டத நான் செஞ்சேன். உனக்குத் தப்பா இருந்தா நான் என்ன செய்வேன்அப்படித்தான் எல்லோரும் தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள். இப்படித்தான் வன்முறைக்கும் பாடல்களுக்கும் நியாயம் கற்பிப்பார்கள். சரி, பாடல்களே இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒரு நல்ல கதையைக் கொடுங்கள் முதலில்.
உங்களால் உடனே விட முடியவில்லையா? கொஞ்சம் கொஞ்சமாக விடுங்கள். மதுப் பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றுக்கு அடிமையானால்கொஞ்சம் கொஞ்சமாக விடுங்கள்என்று டாக்டர் சொல்வார் இல்லையா, அதுபோல. கதை அடர்த்தியாக, இறுக்கமாக இருந்தால் உங்களுக்குப் பாடல் வைக்கவே இடம் இருக்காது. இப்போது கதை இறுக்கமாக இல்லாததால் பாடல்களை வைப்பதை ஒரு சம்பிரதாயமாக ஆக்கிவிட்டோம். கல்யாணம் பண்ணினால் தொலைபேசியில் அழைத்தால் போதாது, பத்திரிகை வைக்க வேண்டும் என்பதுபோல் பாடல்களை சம்பிரதாயமாக ஆக்கிவிட்டோம். வன்முறை, பாடல்கள் போன்றவற்றை விடுவதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும்.

உங்களுக்கு இந்திய அளவிலும் திரைப்படங்கள் மேல் நம்பிக்கை இல்லையா?

அப்படிச் சொல்ல முடியாது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலெல்லாம் சிறந்த இயக்குநர்கள் இப்போதும் இருக்கிறார்கள். நமக்கு தென்னிந்தியத் திரைப்படங்களைப் பற்றித்தான் அதிகம் தெரியும். ஹாலிவுட் படங்கள், கொரியன் படங்கள் போன்ற பிற மொழிப் படங்களைப் பற்றித் தெரிந்திருக்கும் அளவுக்கு நம் மக்களுக்கு இந்தியாவின் பிற மொழித் திரைப்படங்கள் பற்றி தெரியவில்லை. அவர்களுக்கு அந்தப் படங்களையெல்லாம் கொண்டுசெல்லவில்லை; அதுதான் காரணம். திரைப்படம் குறித்து ஒரு ஆழமான அறிவு நம் மக்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. உலகத் திரைப்பட விழாக்கள் நடத்துகிறார்கள். 7 நாட்களில் 250 படங்கள் போடுகிறார்கள். அதற்கு ஒருவர் எத்தனை படங்களைப் பார்த்துவிட முடியும்? அதுவும் நகரங்களில் மட்டும்தான் அதுபோன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. கிராமங்களை நோக்கியும் திரைப்பட விழாக்கள் நகர வேண்டும். அந்த மக்களும் எல்லா வகையான திரைப்படங்களும் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆனால், இதையெல்லாம் பார்த்துத்தான் ஒருவர் நல்ல சினிமா எடுப்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. நமக்கே சுய மதிப்பீடு இருக்க வேண்டுமல்லவா! ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகத்தின் உச்சத்தை அடைந்த நாம் மற்றவர்களைப் பார்த்துதான் நல்ல திரைப்படம் எடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமா? இன்னும் மகாபாரதத்தை ஒரு நல்ல படமாக எடுக்க நம்மால் முடியவில்லையே!

நானும் படம் எடுக்க வருவதற்கு முன்பு உலகப் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. என்னுடைய மாமாதான், ‘என்னடா, தமிழ்ப் படங்கள்என்று விமர்சித்து ஒரு ஹாலிவுட் படத்துக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அதைப் பார்த்த பிறகுதான் தமிழ்த் திரைப்படங்கள் மீது எனக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

அந்த வெறுப்பு உங்களுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்பட்டிருக்கிறது இல்லையா?

அது போல் ஒரு வெறுப்பு இருந்தால் போதுமே. அதற்காகத் திரைப்படக் கல்லூரிகளில் போய்த்தான் திரைப்படங்களைக் கற்றுக்கொண்டுவர வேண்டும் என்று இல்லை. ஒரு சுய மதிப்பீடு வேண்டும். சர்வதேசத் திரைப்பட விழாக்கள் எல்லாம் சரிதான். அதில் படம் பார்ப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் பொறி தட்டி உத்வேகம் கிடைக்கப் பெறுவார்கள். அதுவும் திரைப்படங்களைத் தீவிரமாகக் காதலிப்பவர்கள், திரைக்கலை மீது வெறி கொண்டவர்கள் போன்றோருக்குத் தங்களைச் செழுமைப்படுத்திக்கொள்ள அது உதவும். திரைப்படம் மீது உண்மையான காதல் கொண்டவர்களுக்கு அதனால் காப்பி அடிக்கும் எண்ணம் வராது. மற்றபடி எல்லாம் உங்களிடம்தான் இருக்கிறது.

முள்ளும் மலரும்படத்தின்போது கமல் உங்களுக்குச் செய்த உதவியைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், கமலும் நீங்களும் இணைந்து படம் பண்ணாததற்கு என்ன காரணம்?

நான்தான் ஏற்கெனவே சொன்னேனில்லையா! எனக்கு ரஜினியும் நண்பர்தான், கமலும் நண்பர்தான். நான் நினைத்திருந்தால் அவர்களை வைத்துத் தொடர்ந்து படம் எடுத்திருக்க முடியும்தான். ஆனால், எனக்கு அப்படியெல்லாம் நிர்ப்பந்தம் ஏதுமில்லை. அவர்களுக்கும் என்மீது அசாத்தியமான நம்பிக்கை இருந்தது. ஆனால், இவர்களை வைத்து எடுக்க வேண்டும், அவர்களை வைத்து எடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஒரு படம் நன்றாகப் போனால்சரி, எல்லோருக்கும் பிடித்திருக்கிறதுஎன்று நினைத்துக்கொண்டு நான் பாட்டுக்கும் என் வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். ஒரு படம் சரியாகப் போகவில்லையென்றால், ‘சரி, நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம்என்று நினைத்துக்கொண்டு அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவேன். எத்தனையோ படங்களை என்னை வைத்து ஆரம்பித்து அப்புறம் கைவிட்ட தயாரிப்பாளர்களெல்லாம் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் அவர்களுடன் நட்புடன்தான் இருந்தேன்.

இளையராஜா பாடல்களை அழகாகக் காட்சியாக்கிய ஒருசில இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். அவரது பாடல்களைக் கண்ணை மூடிக்கொண்டே கேட்டால் என்ன மாதிரியான காட்சிகள், நிலப்பரப்புகள் நம் மனதில் தோன்றுமோ அதே போன்று நீங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பாடல்களைக் காட்சிப்படுதுவதென்பது நம் கதைக்குத் துணைநிற்பதாக இருக்க வேண்டும். பாடல் பதிவுக்குப் பிறகு ஒரு மாதம் ஒன்றை மாதம் கழித்துத்தான் அந்தப் பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கும். அதுவரை அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பேம். அப்போது என் மனதில் வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்த்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வேன்.

பருவமே புதிய பாடல்ஒளிப்பதிவு செய்யும்போது பெங்களூரில் காலைப் பனியில் படப்பிடிப்பு எடுத்தோம். அதிகாலைப் பனியில் மோகனும் சுஹாசினியும் ஓடுவது போன்று காட்சிப்படுத்த நினைத்தோம். ஒரு அரைமணி நேரம்தான் பனி இருக்கும். அதற்குப் பிறகு வெயில் வந்துவிடும். அந்த நேரத்தில் காலை உணவைச் சாப்பிடுவோம். நான் படப்பிடிப்பு நேரத்திலும்சரி வேறு எங்கும் சரி என் கண்கள் நான்கு புறமும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். கதைக்குத் தேவைப்படுகிற விஷயம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். சாப்பிடப் போகும் நேரத்தில் ஒரு சிறுமி கையில் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு சற்று தூரத்தில் வருவது என் கண்ணில் பட்டது. சாப்பிடத் தயாராக இருந்த அசோக்குமாரிடம்தயாராகுப்பா, அதை ஷூட் பண்ணணும்என்றேன். ‘இதைப் போய்ப் படமெடுக்க வேண்டுமா?’ என்று அடம்பிடித்தார் அசோக்குமார். ‘எடுய்யா…’ என்று வற்புறுத்தி அவரைத் தயார்ப்படுத்தினேன். அந்தக் குழந்தைக்கே தெரியாமல் லென்ஸ் வைத்து தூரத்திலிருந்தே படம்பிடித்துக்கொண்டோம். அப்புறம் படப்பிடிப்பெல்லாம் முடிந்து படத்தொகுப்பு செய்யப்படும் வேளையில் பாடலில் வரும் ஹார்மோனியம் துணுக்கு இசைக்கு ஒரு காட்சி தேவைப்படுகிறதே என்றார் எடிட்டர். 15 அடிக்கான ஒரு ஷாட் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். உபரியாக எடுத்த பிலிம்களை கேன்களில் சுற்றிச் சுற்றி வைத்திருப்போம். அதில் தேடியெடுத்து இது சரிவருமா என்று அந்த சிறுமி காட்சியைக் கொடுத்தேன். எல்லாம் முடிந்து படம் வெளியாகி ஒரு வருடம் ஓடி, பாட்டும் பெரிய ஹிட்டானது. ஆனால், படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் பாட்டும் அதில் பனியில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் பிரபலமாகிவிட்டிருந்தன. ரெக்கார்டிங்குக்கு வருபவர்களிடமெல்லாம்அண்ணன் எப்படி ஷாட் எடுத்திருக்கிறார் பாருங்க. அண்ணன் எப்படி ஷாட் எடுத்திருக்கிறார் பாருங்கஎன்று சொல்லிச் சொல்லி ராஜா ஒரு நூறு பேரிடமாவது அந்தப் பாடலைப் போட்டுக்காட்டிப் பரவசப்பட்டிருப்பார். அப்படிப் பார்த்தவர்களிடமிருந்தெல்லாம் வீட்டுக்கு ஃபோன் வந்துகொண்டிருக்கும். படம் வருவதற்கு முன்பே இப்படி அந்தப் பாடல் காட்சிகள் ஹிட்டாகிவிட திரைத்துறையில் உள்ளவர்களும் பிறரும் அந்தப் பாடலை மட்டுமாவது பிரிவியூ பார்க்க வேண்டுமே என்று துடித்தனர். என் பையனும் மகள்களும் அப்போது குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களும் அடம்பிடித்தனர். சரி என்று அந்தப் பாடலுக்கு மட்டும் ஒரு பிரிவியூ ஏற்பாடு செய்து எல்லோருக்கும் போட்டுக்காட்டினோம். பார்த்துவிட்டு எல்லோரும் ரொம்பவும் பாராட்டினார்கள். வீட்டுக்கு வந்து என் மகள்களிடம் கேட்டேன். ‘அப்பா, எல்லாத்தையும் விட தூரத்துல ஒரு குழந்தை வருமே, மூக்கு ஒழுகிகிட்டுஅதுதான்பா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குஎன்று ஒரு பெண் சொன்னாள். திரைத்துறையினரெல்லாம் மூடுபனிக் காட்சிகளைப் பற்றி வியந்து பேசிக்கொண்டிருந்தபோது என் பெண் என்னடாவென்றால் சிறுமி காட்சிதான் பிடித்திருக்கிறது என்றாள். அதுதான் ரசனை. எனக்கும் அந்தக் காட்சிதான் மிகவும் பிடித்தமானது.

ஒவ்வொரு பாடல் எடுக்கும்போதும் இப்படித்தான். என்னுடைய வேகத்துக்கு ஏற்றதுபோல் என்னுடைய ஒளிப்பதிவாளரும் அதற்குத் தயாராக இருப்பார். நான் சொன்னதும் கேமராவைத்  தூக்கிக்கொண்டு என்னுடன் ஓடிவருவார். அதுதான் என்னுடைய அதிர்ஷ்டம். (சட்டென்று அசோக்குமார் குறித்த நினைவுகளில் மூழ்குகிறார்.)
அசோக்குமார் ஒரு குழந்தை மாதிரி. எவ்வளவு பெரிய ஒளிப்பதிவாளர். அவ்வளவு வெற்றிகரமாக இருந்துவிட்டுக் கடைசியில் நிராதரவாகச் செத்துப்போய்விட்டார். அவ்வளவுதான் இந்த இண்டஸ்ட்ரி

அடிக்கடி நான் அவரைப் போய்ப்பார்ப்பதுண்டு. இடையில் பக்கவாதம் வந்து நடக்க முடியாமல் போனது அவருக்கு. அப்போது தி. நகரில் இருந்தது அவர் வீடு. அதற்கப்புறம் எங்கே போனார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்னைப் பார்க்க வரும் சினிமா செய்தியாளர்கள், திரைத்துறையினர், நண்பர்கள் எல்லோரிடமும், ‘அசோக்குமார் எங்கே இருக்கிறார் என்று கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள்என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். யாருமே பதில் சொல்லவில்லை. அவர் இங்கேயே இரண்டு மூன்று வீடுகளில் வாடகைக்கு இருந்துவிட்டு ஹைதராபாத் போயிருக்கிறார். அங்கேயும் ரொம்பவும் முடியாமல் போய் கோமாவுக்குப் போன பிறகு காரில் வைத்துத் திரும்பவும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். விழுப்புரத்தில் ஒரு மருத்துவமனையில் வைத்துப் பார்த்தார்கள். அங்கே சேர்த்த பிறகு அவருடைய பையன்தான் என்னைத் தொலைபேசியில் அழைத்து இந்தத் தகவல்களையெல்லாம் சொன்னான். போய்ப்பார்த்தேன்… (கண்கள் கலங்குகின்றன.)

நீங்கள், இளையராஜா, அசோக்குமார் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு நிறைய கவிதைகளைக் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால்தான் நான் சொல்வேன். திரைப்படம் என்பது கூட்டு முயற்சி. சில நேரங்களில் நமக்கு அமையும் சேர்க்கை காரணமாகப் பிரமாதமாக அமைந்துவிடும். இன்னொரு பக்கம் ஈகோ வந்து பிரிந்தால் அவ்வளவுதான் முடிந்துவிடும்
ஆனால் நான், ராஜா, அசோக்குமார் எல்லாம் ஈகோ இல்லாமல் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். அதனால்தான், அசோக்குமாரின் மறைவு என்னை மிகவும் துயரத்துக்குள்ளாக்கியது. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சில சமயங்களில்வாழ்க்கையின் அர்த்தமே என்ன?’ என்று கேள்வி எழுகிறது.

எங்கோ படித்த ஞாபகம். ‘ஜானிபடத்தில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்துவிட்டு வியந்துபோய்அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியலைஎன்று ரஜினி மாய்ந்துமாய்ந்து பேசினாராமே?

பாராட்டுவதில் எப்போதுமே முதல் ஆளாக நிற்பார் ரஜினி. அன்றைக்கு நடந்தது இதுதான். ஊட்டியில் 11.30 மணிக்கு ஒரு வீட்டுக்குள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தோம். எப்போதுமே என்னுடைய படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது அந்த இடமே ரொம்பவும் அமைதியாக இருக்கும். காபி கொடுக்கிற புரடக்ஷன் பையனிலிருந்து, லைட்மேன், என்னுடைய உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என்று எல்லோருமே அமைதியாக இருப்பார்கள். ‘சார் எப்படி சீனை எடுக்கிறார்என்று பார்ப்பதில் அவர்களுக்கு நிறைய ஆர்வம். நான்சைலன்ஸ்என்று சொல்வதற்கு அவசியமே இருக்காது. நானும் காட்சி எடுத்து முடித்தவுடன் அவர்களிடம்எப்படி இருக்கு? என்று கேட்பது வழக்கம். அவர்கள்தானே எனக்குக் கண்ணாடி மாதிரி. இப்படி சூழல் இருக்கும்போது அந்தக் காட்சியை எடுக்கிறோம். ஸ்ரீதேவி சோஃபாவில் உட்கார்ந்திருக்க அவருக்கு எதிரே குளோஸப்பில் கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமராவின் வியூஃபைண்டரில் பார்த்துவிட்டுஸீ திஸ் மகேந்திரன். ஸீ ஹெர் அக்லி நோஸ்யாஎன்று சொல்லிவிட்டார் அசோக்குமார். நானோ ரொம்பவும் பதறிப் போய்விட்டேன். பக்கத்தில் ஒரு அறை சற்றே திறந்திருந்தது. ‘என்ன சத்தம்?’ என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குப் போய் அங்கிருந்துகொண்டு, அசோக்குமாரை வரச் சொல்லி ஜாடை காட்டினேன். அவரும் வந்தார். ‘என்னய்யா இது. என்ன மாதிரி சீன் எடுக்கிறேன். இந்த சமயத்தில் மூக்கு சரியில்லை, அசிங்கமாயிருக்குன்னுல்லாம் இப்படிச் சொல்லுறியே. அந்தப் பொண்ணு மனசு எவ்வளவு பாடுபடும்என்று அவரிடம் நொந்துகொண்டேன். ‘சாரி, மகேந்திரன், சாரிஎன்று அவரும் பதறிப்போய் மன்னிப்பு கேட்டார். அவர் குழந்தை மாதிரி, மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார்.  ‘உதிரிப்பூக்கள்படத்தில் அஸ்வினி இறந்துபோகும் காட்சியிலும்அக்லி நோஸ்யாஎன்கிற மாதிரி அவர் சொல்லிவிட்டார். நான் அவரைத் தள்ளிக்கொண்டுபோய், ‘என்ன அசோக் எப்ப பார்த்தாலும் இப்படியே பண்ற. அந்தப் பொண்ணுக்கும் இங்கிலீஷ் தெரியும்என்று திட்டினேன். ‘சாரி, மகேந்திரன்என்று அவரும் மன்னிப்பு கேட்டார். அதேபோல் இப்போதுஜானியிலும். அசோக்குமாரைத் திட்டிவிட்டு இந்தப் பக்கம் வந்தேன். அதில் பெரிய விஷயம் என்னெவென்றால் அசோக்குமார் அடித்த கமெண்ட் தன் காதில் விழுந்தும் எதுவும் நடக்காததுபோல் அந்தப் பெண் அந்தக் காட்சியை அழகாக நடித்துக்கொடுத்ததுதான். படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்ததும் ரஜினி விடிய விடிய புலம்பித்தள்ளிவிட்டார். ‘அந்தப் பொண்ணோட நடிப்புக்கு முன்னால என்னால ஒண்ணும் பண்ண முடியல சார். ஹெல்ஃப்லெஸ்ஸா நின்னிட்டிருந்தேன்என்று புலம்பினார். ‘ஒண்ணும் பண்ண முடியாமல் நின்னதுதான் சார் அந்த சீனோட கிரேட்னஸ். அதுதான் இயல்பா வந்திருக்கு. உங்களுக்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்து ஸ்ரீதேவியுடன் போட்டிபோடுவது போல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்காது. நீங்க ஹெல்ப்லெஸ்ஸா நின்னுட்டிருக்கிறதுதான் அந்த சீனுக்குத் தேவை. அது இயல்பா, அட்டகாசமா வந்திருக்குஎன்று சொன்னேன். அப்படியும் ஒரு இடத்தில் ஸ்ரீதேவியைத் தாண்டிச் சென்றிருப்பார். ‘என்ன படபடான்னு கொஞ்ச நேரத்துல் என்னென்னமோ பேசிட்டிங்கஎன்று பேசும் இடம்தான் அது. விடிய விடிய ரஜினி புலம்பிக்கொண்டே இருந்தார். அந்த மாதிரி மனதைத் திறந்து அடுத்தவர்களைப் பாராட்டுவதில் ரஜினி மன்னன். ஸ்ரீதேவியைப் பொறுத்தவரை எதையும் மனதில் போட்டுக்கொள்ளாமல் தேவையானதை நடித்துக்கொடுத்தது ஒரு கலைஞருக்குரிய பக்குவத்தைக் காட்டியது. அதுதான் அவரின் மகத்துவம்.

அசோக்குமாருக்கு அந்தக் காட்சியில் திருப்தியில்லையோ?

காட்சியைப் பற்றிப் பிரச்சினை இல்லை. அவருக்கு மூக்குதான் பிரச்சினை. அறுவைச் சிகிச்சையின் மூலம் மூக்கின் தோற்றத்தை ஸ்ரீதேவி மாற்றியமைத்துக்கொண்டது அநேகமாக அசோக்குமார் அடித்த கமெண்டால்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்உண்மையில், ஸ்ரீதேவிக்கு அழகே அந்த மூக்குதான்.     

ஜானிபோன்ற படங்கள்தான் தமிழ் ரசிகர்களிடையே ஸ்ரீதேவிக்கு ஒரு தேவதை போன்ற அந்தஸ்தை ஏற்படுத்தின இல்லையா! ‘ஜானியைப் பற்றி ஸ்ரீதேவி எப்போதாவது குறிப்பிட்டிருக்கிறாரா?

இந்திக்குப் போன பிறகும் நிறைய பேட்டிகளில்ஜானியைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘என்னோட கேரியர்லேயே சிறந்த நடிப்பு அதுதான்என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ‘ஜானிபடப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது கொடுத்த ஒரு பேட்டியில்கூடசார் பேக்-அப் சொன்னா எனக்கு ரொம்ப வருத்தமாயிடும். செட்டை விட்டுப் போறோமே, இனிமே நாளைக்கு வந்துதானே நடிக்க முடியும். அப்படின்னு அவரோட செட்டை விட்டுப் போறதுக்கே எனக்கு மனசு வராதுஎன்று ஸ்ரீதேவி சொல்லியிருக்கிறார். என்னுடைய செட் அப்படி ஒரு உயிரோட்டமான இடமாகவும் போலித்தனம் இல்லாத இடமாகவும் இருக்கும். இத்தனைக்கும் சீன் எடுக்காத சமயங்களில் வேறு எதையும் பற்றிப் பேச மாட்டோம். எடுக்கப் போகும் காட்சியில்தான் ஆழ்ந்துபோய் இருப்போம். பேக்-அப் சொல்லும் வரைக்கும் அப்படித்தான். திரைக்கலைஞர்களுக்கும் அதுதான் சௌகர்யமாக இருக்கும்.

மோகமுள்நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தீர்கள் அல்லவா

ஆம். ‘மோக முள்நாவலை நான் 9 தடவைக்கும் மேல் படித்திருக்கிறேன். பள்ளிப் பருவத்தில், கல்லூரிப் பருவத்தில், கல்யாணம் ஆனபோது, தந்தையாக ஆன பிறகு என்று வெவ்வேறு தருணங்களில் படித்திருக்கிறேன். 9-வது தடவை படித்து முடித்த பிறகுதான் அந்த நாவலின் விஸ்தீரணம் எனக்கு முழுமையாகப் புரிந்தது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு கதாபத்திரமும் எனக்குள் பதிந்துபோயின. அப்புறம் 10 நாட்கள் உட்கார்ந்து திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன். நடிகர்கள் தேர்வு எல்லாம் முடிந்து படமாக எடுக்கப் போனபோது தயாரிப்பாளர் குறுக்கே புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கிக் கடைசியில் அந்தப் படத்தை எடுக்க முடியாமலே போய்விட்டது. அதற்குப் பிறகுதான் ஞானராஜசேகரன் படமாக எடுத்தார்.

அந்தப் படத்தைப் பார்த்தீர்களா?

இல்லை. ‘மோக முள்ளை நான் படமாக்க நினைத்தபோது அசோக்குமார் வேறு படங்களில் பணிபுரிந்துகொண்டிருந்ததால் பி.சி. ஸ்ரீராமை அதற்கு ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுத்திருந்தேன். எனது படம் கைவிடப்பட்டு ஞானராஜசேகரன் படம் வந்தபோது, ‘சார், மோகமுள் படம் பாத்துட்டீங்களாஎன்று பி.சி. ஸ்ரீராம் என்னை அழைத்துக் கேட்டார். நான், ‘பார்க்க மாட்டேன்என்று சொன்னேன். அதற்கு அவர், ‘சார், நாம் காதலிச்ச பொண்ணு பக்கத்துத் தெருவுல நடக்குற கல்யாணத்துக்கு அவளோட புருஷனோட வந்துருந்தா அவள் நல்லா வாழ்றத போய்ப் பார்ப்போம் இல்லையா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘ நல்லா வாழ்ந்தா சரி. உதிரிப்பூக்கள் அஸ்வினி மாதிரி கொடுமைக்காரப் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, வத்தலும் தொத்தலுமா வந்து நின்னா நம்ம மனசு தாங்குமா? நம்மளால போய்ப் பார்க்க முடியுமா?’ என்று நான் பதிலுக்குக் கேட்டேன்.

எவ்வளவு பெரிய எழுத்தாளர் தி. ஜானகிராமன்! எனக்கு இப்போதும் கூட ஆசை விடவில்லை. எப்படியாவது அந்த நாவலைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

வேறு எந்தப் படைப்பைப் படமாக எடுக்க உங்களுக்கு ஆசை?

எனக்கு மோக முள் மட்டும்தான். எனக்கு அவரைப் போன்றவர்கள்தான் ஆசிரியர்கள். பிரம்மாண்டமாகவெல்லாம் எனக்குப் படமெடுக்கத் தெரியாது. மெல்லிய உணர்வுகள், நெகிழ்ச்சியான தருணங்கள் இதையெல்லாம் இயல்பாக எனக்குச் சொல்லத் தெரியும். நான் அவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கக் கற்றுக்கொடுத்தவை தி. ஜானகிராமனின் படைப்புகள். அழுக்கில் கூட அழகைப் பார்க்கக் கற்றுக்கொடுத்தவர் அவர். எப்போதுமே மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பார்ப்பதைவிட அவர்களின் அழகைப் பார்ப்பது சிறந்தது இல்லையா?

உங்கள் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் ஒரு படத்தை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தீர்கள் அல்லவா, அந்தப் படத்துக்கு என்னவாயிற்று?

நான் முன்பு தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டிருந்த காலத்திலேயே, ‘சார், நீங்க ஒரு படம் எடுத்துத் தந்தா நான் பொழைச்சுக்குவேன். நீங்க படம் பண்ணுறதா இருந்தா, எனக்கு ஃபைனான்ஸியர் பணம் தருவார்என்று சொல்லிக்கொண்டு சிலர் என்னிடம் வந்து கெஞ்சுவார்கள். நானும் அனுதாபப்பட்டு ஆரம்பித்துவிடுவேன். அப்புறம், ஃபைனான்ஸியர் முட்டுக்கட்டை போட, படம் கைவிடப்படும். அதேபோல்தான் இப்போதும் நடந்தது. எனது உதவி இயக்குநர் ஒருவர் அப்படிப்பட்ட தயாரிப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தார். அவர்மீது அனுதாபப்பட்டுப் படம் செய்ய ஒப்புக்கொண்டேன். அப்புறம் வழக்கம்போல ஆகிவிட, படம் கைவிடப்பட்டது. ஆனால், எனக்கு ரொம்பவும் பிடித்த கதை அது. நான் எழுதிய கதைதான். தற்போது எல்லாக் குடும்பங்களிலும் நடந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிய கதை. அது எல்லோருக்கும் எல்லா மொழிகளிலும் அது பொருத்தமாக இருக்கும்.

இந்தப் படத்தில் ஒரு தாத்தா கதாபாத்திரம் வருகிறது. அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்குப் பலரும் தயங்கினார்கள். அப்புறம் கதா நாயகியை மையமாகக் கொண்டு கதை முடிகிறதே என்றும் தயங்கினார்கள். ஒவ்வொருத்தரிடம் போய்க் கேட்டபோது கதை என்னிடம் முடிய வேண்டும் என்று சொன்னார்கள். அது தப்பு இல்லையா! கதை எங்கே முடியுமோ அங்கேதானே முடியும். அப்புறம் பிரகாஷ் ராஜ் வந்தார். அவர் அதுபோன்ற நிபந்தனைகளையெல்லாம் வைக்கவில்லை. படத்தை அவரே தயாரிப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து சத்தமே வரவில்லை. நானும் யாரிடமும் போய்க் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது என்று விட்டுவிட்டேன்.
எனக்கு எந்தத் திட்டமும் கிடையாது. எனக்கு எந்த விநியோகஸ்தரையும் தெரியாது. சினிமாவில் தாணு போன்ற ஒருசிலரைத்தான் எனக்குத் தெரியும். ஆரம்பத்திலிருந்தே யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க மாட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தக் குணத்தை திமிர், கர்வம் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம். என் சுபாவம் இது. இது என் தொழில் இல்லை என்று நினைக்கிறேன் நான். அதுதான் காரணம். கொஞ்சம் சமரசம் செய்து, கொஞ்சம் சாமர்த்தியத்துடன் நடந்துகொள்ளுங்களேன் என்று கேட்பார்கள். அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லிவிடுவேன். இந்த ஆண்டுக்குள் படம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.   

எங்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியான செய்திதான்
தெறிபடத்துக்குப் பிறகு மற்ற படங்களில் நடிக்கக் கூப்பிட்டார்களா?


ஆமாம், ஆரம்பித்துவிட்டார்கள். நான் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் பண்ண நினைக்கும் படத்தில் வரும் தாத்தா பாத்திரத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன். அந்தக் கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். அது நல்லதையே செய்யும் என்று நினைக்கிறேன்.

இன்றைய தமிழ்த் திரைப்படப் போக்கைக் கவனித்துக்கொண்டிருக்கிறீர்களாஉங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

தமிழ் சினிமா என்றில்லை இந்திய சினிமாவே போதுமான அளவு வளர்ச்சி பெறவில்லை என்றுதான் சொல்வேன்வடக்கிலாவது சில பரிசோதனை முயற்சிகள் செய்யப்படுகின்றனதெற்குதான் மோசம்எல்லாவற்றுக்கும் இலக்கியம் என்பது ரொம்பவும் முக்கியம்கேரளத்துடன் ஒப்பிடும்போது இங்கே இலக்கியம் என்பது அந்த அளவுக்கு இல்லைஒரு காலத்தில் வளமாக இருந்ததுஅதெல்லாம் இப்போது போய்விட்டதுஎதெற்கெடுத்தாலும் மேலை நாடுகளை உதாரணம் சொல்கிறோமல்லவாஅங்கே சினிமாவுக்குச் செல்வாக்கு இருப்பது போல நாடகங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறதுஇங்கே அப்படியாகேரளம்மேற்கு வங்கம்மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இலக்கியம்நாடகம் எல்லாம் நன்றாக இருப்பதால் அதன் விளைவாகத் திரைப்படமும் நன்றாக இருக்கிறதுஎப்போது இதையெல்லாம் நீங்கள் அடைத்துவிடுகிறீர்களோ அப்போது சாக்கடையில் அடைப்பு வந்ததுபோல்தான் ஆகிவிடும்.

திரைப்படங்களில் எத்தனையோ வகைகள் இருக்கின்றனநான் எடுத்ததுபோல் யதார்த்த பாணி திரைப்படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லைபாகுபலியும் எடுக்க வேண்டும்அவதாரும் எடுக்க வேண்டும்விளையாட்டு தொடர்பான திரைப்படமும் எடுக்க வேண்டும்திகில் படம்நகைச்சுவைப் படம்அறிவியல் புனைகதைப் படம்வரலாற்றுப் படம் என்று எத்தனை வகைகள் இருக்கின்ற அல்லவாஎல்லாவற்றையும் எடுங்கள்ஆனால்தனித்துவத்தோடு எடுங்கள்அசலாக எடுங்கள்திரைக்கதையில் இன்னும் பலம் பெறுங்கள்எந்தப் படத்தை எடுத்தாலும் ஐயோ அந்த கொரியப் படத்தின் காப்பிஅந்த ஹாலிவுட் படத்தின் காப்பிஏற்கெனவே வந்த தமிழ்ப் படத்தின் காப்பி என்பது போன்ற குற்றச்சாட்டுகளை நாம் கேள்விப்படுகிறோம்.

ஜனரஞ்சகத் திரைப்படங்களுக்கு நாம் சில சலுகைகளைக் கொடுத்துதான் ஆக வேண்டும்உலகெங்கும் அப்படித்தான் இருக்கிறதுஆர்னால்டுசில்வஸ்டோர் ஸ்டேலோன்ஜாக்கிசான் போன்றவர்களுக்கு எடுக்கும் படங்கள் அவர்களுக்கான ஒரு பேக்கேஜாக இருக்கும்அப்புறம் அனிமேஷன் படங்கள்எவ்வளவு அற்புதமான அனிமேஷன் படங்களெல்லாம் வந்திருக்கின்றனஇங்கே என்னென்னமோ கிராஃபிக்ஸ் எல்லாம் செய்கிறார்கள்ஒரு நல்ல அனிமேஷன் விளம்பரப் படம் கூட நம்மால் எடுக்க முடியவில்லையே.

பெரிய பட்ஜெட் படங்களெல்லாம் எடுக்கிறார்கள்சாண்டில்யனின் நாவல்களைக் கொண்டு எப்படியெல்லாம் படம் எடுக்கலாம்என்ன ஒரு வளமான இலக்கியம் அவருடையதுஉலகின் சிறந்த வரலாற்று நாவலாசிரியர்களில் அவரும் ஒருவர்அதையெல்லாம் எடுத்து யாராவது செய்ய வேண்டும்.

எனக்கு யார் மேலும் வருத்தமோகுறையோ இல்லைஅதற்கான உரிமையும் எனக்கு இல்லைஎன்னுடைய காம்பவுண்டு வேறு அவர்களுடைய காம்பவுண்டு வேறுஎன் உலகம் முற்றிலும் வேறுதூரத்திலிருந்து பார்த்து எனக்கென்று ஒரு மதிப்பீடு இருக்குமல்லவாஅதுதான் இப்போது நான் சொன்னதெல்லாம்அதை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லைஇந்தப் பிரச்சினைகளையெல்லாம் என்னால் தீர்க்க முடியுமென்றால் நான் பேசலாம்ஒரு பார்வையாளனாக என்னுடைய கருத்துகளை நான் நினைத்துக்கொள்கிறேன்நீங்கள் என்னைப் பேச வைக்கிறீர்கள்இதுதான் மகேந்திரனின் அபிப்பிராயம் என்பதுபோல் நாளைக்கு வெளியிட்டு எல்லோரையும் படிக்க வைத்துவிடுவீர்கள். ‘எதையும் செய்ய மாட்டீர்கள்ஆனால் அது சரியில்லை இது சரியில்லை என்று மட்டும் குறை சொல்வீர்கள்’ என்று நாளை எல்லோரும் என்னை சொல்லக் கூடும்நான் ஏதாவது செய்ய வேண்டும்அப்படிச் செய்யாத பட்சத்தில் பேசாமல் இருக்க வேண்டும்ஆகவேகுறைகூறவெல்லாம் உரிமை இல்லை.
     - நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்த நேர்காணலின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/FJMmrU 

6 comments:

  1. யதார்த்தமான பேட்டி. அருமையான கேள்விகள், ஆழமான மற்றும் நிதானமான பதில்கள். அவரது மறுமொழிகளில் பக்குவம் தெரிகிறது. அவரிடமிருந்து தொழில்நுட்பவல்லுநர்களும், கலைஞர்களும் கற்றுக்கொள்ளவேண்டியன நிறையவே இருக்கின்றன.

    ReplyDelete
  2. ஒரு வேளை பிசிஸ்ரீராம் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகேந்திரன் மோகமுள் படத்தைப் பார்த்திருந்தால், கண்டிப்பாக ஒரு கொலைக் குற்றவாளியாகி இருப்பார்.

    ReplyDelete
  3. Arumaiyana ninaivukalai avar solla nalla karuviyaga iruntha vungallu valthukkal

    ReplyDelete
  4. அருமை...

    ReplyDelete
  5. மிகச் சிறப்பான நேர் காணல்.
    உள்ளபடியே ஸ்ரீதேவியின் புதிய மூக்கு தான் அக்லி நோஸ் !!
    ஏராளமான சுவாரசியமான தகவல்கள்

    ReplyDelete