Sunday, September 27, 2020

அதுவா அதுவா அதுவா எஸ்பிபி?ஆசை 

சுஜாதா ஒரு கட்டுரையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு உலகம் (குறிப்பாக, தமிழ்நாடு) வழக்கமான விதத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட சில விஷயங்களைப் பட்டியலிட்டிருப்பார். அதில் இதுவொன்று: ‘எஸ்பிபி வழக்கமாகப் பாடலுக்கிடையே சிரித்தார்’. அதைப் படித்தபோது ‘ஆமால்ல’ என்று தோன்றியது. சற்று கிளாஸிக் தொனி கொண்டிருந்த ஏசுதாஸின் குரலை சிறு வயதிலிருந்து அதிகம் ரசித்த மனதுக்கு சுஜாதாவின் வரியில் இருந்த விமர்சனம் பிடித்திருந்தது. எனினும் இளையராஜாவின் வழியாக எஸ்பிபி துரத்திக்கொண்டிருந்தார். ‘பருவமே புதிய பாட’லில் என்னுடன் ஓடினார்; ‘உறவெனும் புதிய வானில்’ என்னுடன் பறந்தார்; ‘ஸென்யோரீட்டா ஐ லவ் யூ’ என்று கூறவைத்தார்; சிறு வயதில் தெரு நிகழ்வில் ஆடுவதற்காகப் பின்னணியில் ‘மாங்குயிலே பூங்குயி’லாகக் கூவினார். இன்று சிறுவனான என் மகனைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடல் தேடும்போது ‘தேனே தென்பாண்டி மீனாக’த் துள்ளிவருகிறார். விடாப்பிடியானவர்தான் எஸ்பிபி. 

நான் பல முறை யோசித்ததுண்டு எஸ்பிபி ஏன் பாடலுக்கிடையில் சிரிக்கிறார் என்று? நயமான ரசிகர்கள் இதை வெறும் ‘ஜிகினா வேலை’, ‘ஜிமிக்ஸ்’ என்று கடந்துவிடுவார்களல்லவா? சிறு வயதில் பார்த்த ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று நினைவுக்கு வருகிறது. மேடையில் இசை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது; ஆனால், பாடகரைக் காணோம். திடீரென்று மக்களுக்கிடையிலிருந்து ‘புதிய வானம் புதிய பூமி’ என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒருவர் எழுந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி ஓடுகிறார். ஒருசில நொடிகள் அதிசயித்து வாயைப் பிளந்திருந்த மக்கள் அதன் பிறகு வெளிப்படுத்திய ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது. இது ஒரு நிகழ்வோடு பார்வையாளர்களையும் ஒரு அங்கமாக்கும் முயற்சி என்பதை பின்னாளில் மனம் விளங்கிக்கொண்டது. தெருக்கூத்தில் இதுபோன்ற உத்திகள் சகஜம். கலைக்கு ஒரு திறந்த தன்மையை வழங்கும் உத்தி இது. மியூஸிக் அகாடமியில் சஞ்சய் சுப்பிரமணியன் இப்படிச் செய்தால் மறுநாள் அதை ‘மகத்தான கலைஞனின் மலிவான உத்தி’ என்று ஆங்கில நாளிதழ்கள் எழுதும். 

எஸ்பிபி சிரித்தது, அழுதது எல்லாம் பாடலை உறைநிலையிலிருந்து நெகிழ்த்துவதற்கான உத்தி. ஜானகியும் இதைப் பின்பற்றியிருக்கிறார். இது பாடலிலிருந்து கைகள் முளைத்து, அதைக் கேட்கும் ரசிகரின் கைகளுடன் கோக்கும் முயற்சி. தங்கள் கலை வாழ்க்கையின் உச்சத்தில் அவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிலேயே அதிகம் கேட்கப்பட்ட குரல்கள் அவர்களுடையதுதான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். 

கவிஞர் இசை எஸ்.பி.பி.யின் பாடலொன்று தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘பரோட்டா மாஸ்டரின் கானம்’ என்ற கவிதையொன்று தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவிவருகிறது. அந்தக் கவிதை இதுதான்:  
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்
"மூக்கின் மேலே
மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே... "அதுவா?
என்று நீங்கள் கேட்க,
கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா.. ?
அதுவா... ?
அதுவா... ?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி ஸார்? 

எஸ்.பி.பி. குறிப்பிட்ட தரப்பினருக்கானவர் மட்டும் இல்லை; எல்லோருக்குமானவர் என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு அவருக்குக் குவியும் புகழாஞ்சலிகள் உணர்த்துகின்றன. எனினும், அவர் எல்லோருக்குமானவர் என்பதைவிட கொஞ்சம் கூடுதலாக, ‘அடுப்பில் கிடந்து கருகும்’ பரோட்டா மாஸ்டருக்கானவர் என்பதுதான் உண்மை; அதுவே எஸ்.பி.பி.க்குப் பெருமை. இந்தக் கவிதை எஸ்.பி.பி.யின் பார்வையைச் சென்றடைந்ததா என்பது தெரியவில்லை. அப்படி இல்லையென்றால், தன்னைப் பற்றிய மிகச் சிறந்த புகழாஞ்சலி ஒன்று இப்போதேனும் அவரைச் சென்றடையட்டும். 

 இப்போது சுஜாதாவின் குறிப்பையும் இசையின் கவிதையையும் நேரெதிராக வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘அதுவா…? அதுவா…? அதுவா…?’ என்று எஸ்.பி.பி.போல் சிரித்துக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் கேள்வி கேட்டபோது அந்த வழியாக சுஜாதா செல்கிறார் என்று கற்பனை செய்துகொள்வோம். ‘தமிழர்கள் பரோட்டா சுடும்போது ஒருவிதமாக ஆகிவிடுகிறார்கள்’ என்று கூட அவர் நகைச்சுவையாக எழுதியிருக்கலாம். 

சமீப ஆண்டுகளாக மனம் வெளிப்படையாக எஸ்.பி.பியுடன் சேர்ந்து சிரிக்கிறது. தான் பாடும்போது தன்னை எஸ்.பி.பியாக நினைத்துக்கொள்கிறது. எஸ்.பி.பியைவிட கூடுதலாக சிரிக்கிறது; அழுகிறது. எஸ்.பி.பி. சிரித்தார் என்பதற்காகத் தவறவிட்ட ‘பனி விழும் மலர் வனம்’, ‘விழியிலே மணி விழியில்’ போன்ற ரத்தினங்களை மனம் தன் கைகளில் உருட்டிவிளையாடுகிறது. 

எஸ்.பி.பி சார், இப்போது நீங்கள் ‘அதுவா அதுவா அதுவா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்கிறீர்கள்; உங்களுக்கு மறுகேள்வி கேட்கிறார் அந்த பரோட்டா மாஸ்டர்; எனக்கோ இரண்டையும் கேட்டுக்கொண்டே அந்த பரோட்டா மாஸ்டர் போட்ட பரோட்டாக்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது.

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 27-09-20 அன்று வெளியான, எஸ்பிபிக்கான அஞ்சலிக் கட்டுரையின் சற்று விரிவான வடிவம்)

1 comment: