வடுவூர் ஏரி |
நான் பிறந்து வளர்ந்த ஊர் மன்னார்குடி என்றாலும் எனது சொந்த ஊர் மன்னார்குடியிலிருந்து 12 கி.மீ தூரத்திலிருக்கும் வடுவூர் புதுக்கோட்டைதான். வடுவூரைச் சுற்றி இருக்கும் புதுக்கோட்டை, தென்பாதி போன்ற ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம். வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு. சமீபத்தில் கூட விளையாட்டு கிராமம் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வடுவூரைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வடுவூரின் பெருமைகளைவிட அதன் சிறுமைகள் அதிகம் என்பதால் என் ஊரை நினைத்து என்னால் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியவில்லை.
எங்கள் ஊரின் வருங்கால கபடி அணிக்கு வாழ்த்துகள்! |
தீவிர சாதி உணர்வு கொண்டவர்களின் கிராமங்கள் என்பதற்கு முன்னுதாரணங்களாக வடுவூரைச் சுற்றியுள்ள ஊர்களைக் குறிப்பிடலாம். முக்குலத்தோர் என்பதில் அதிலும் கள்ளர் என்பதில் அதிலும் ஆர்சுத்தியார், கண்டியர், புள்ளவராயர், ஓந்திரியர் போன்ற வகையறா என்று அழைக்கப்படும் கள்ளர் சாதியின் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதிலும் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கூட பெருமிதம் உண்டு. தலித் மக்கள் இன்னும் முக்குலத்தோரின் அடிமைகள் போன்றுதான் இங்கே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். ஊரின் அமைப்பு இப்படித்தான்: ஊருக்கு வெளியே ‘பறையர்தெரு’ அதைத் தாண்டி உள்ளே சென்றால் கள்ளர்கள் வீடு. இரண்டே சாதி அடுக்குகள்தான். இங்குள்ள கள்ளர்கள் பலருக்கு வர்ணாசிரம முறையில் தங்களை விட உயர்த்தப்பட்ட சாதிகள் இருக்கின்றன என்பதே தெரியாது. தாங்கள்தான் உயர்ந்த சாதி என்றும் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்பதும்தான் எண்ணம். சிறுவர்களின் பேச்சில்கூட சாதித்திமிர் என்பது சர்வ சாதாரணமாக வெளிப்படும். (இந்தக் கட்டுரையில் நான் பயன்படுத்தும் சாதி குறித்த சில சொற்களுக்கு தலித் நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உதாரணம் காட்டும்போது அப்படியே காட்டினால்தான் சாதி வெறியின் தீவிரம் தெரியும் என்பதற்காகத்தான் அந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறேன்.) ஒரு பையன் அசிங்கமாகவும் அழுக்காகவும் சட்டை போட்டுக்கொண்டுவந்தால், ‘என்னடா பறப்பய மாதிரி வந்திருக்க’ என்று எத்தனையோ சிறுவர்கள் சொல்வதை என் சிறு வயதிலிருந்து நான் பார்த்துவந்திருக்கிறேன். ‘ஓயயும் ஒக்காளயும் போட்டு பறப்பய ஓக்க’ என்று அவர்கள் திட்டுவதைச் சர்வசாதாரணமாகக் கேட்கலாம். தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இளைஞர்கள் யாருடனாவது பேசினால் அல்லது பழகினால் அவ்வளவுதான், ‘பறப்பயலுடன் என்னடா பேச்சு’ என்பார்கள்.
என் சொந்தக்காரப் பையன் என் அண்ணனிடம் சொல்லிய ஒரு விஷயம் இது: ‘ஒரு நாள் டீக் குடிக்கப் போனேன். ஒக்கார எடம் இல்ல. பெஞ்சில ஒரு பறப் பய ஒக்காந்திருந்தான். என்னடா பறப் பயல ஒக்காந்திருக்கன்னு ஓங்கி ஒத விட்டன்’ என்று அந்தப் பையன் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு எனக்கு ரொம்பவும் கொதிப்பேறிவிட்டது. உதைவாங்கிய அந்தப் பையன் இந்த வாழ்க்கையை எவ்வளவு வெறுத்திருப்பான்? அவனது கோபத்தையும் சோகத்தையும் புரிந்துகொண்டு அவனுக்கு ஆறுதல் சொல்லக்கூடிய ஒருத்தராவது அவனுக்குக் கிடைத்திருப்பார்களா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.
என் ஊர்க்கார இளைஞர்களில் நிறைய பேர் ஃபேஸ் புக்கில் இருக்கிறார்கள். அவர்களைக் கேட்கிறேன், மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் உதைவாங்கிய இளைஞனாக நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? முக்குலத்தோராக, கள்ளராகப் பிறப்பதுதான் வாழ்க்கையின் சாதனையா? நாம் ஒவ்வொருவரும் ஆயிரமாயிரம் அழுக்குகளை மனதிலும் உடலிலும் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும்போது எந்த வகையில் நம்மை உயர்ந்தவர்கள் என்றும் பிறரைத் தாழ்ந்தவர்கள் என்றும் நம்மால் கூறிக்கொள்ள முடியும். முக்குலத்தோர் இனத்தில் பிறந்த எல்லாரும் காந்தியா நெல்சன் மண்டேலவா அல்லது புத்தரா, பெருமைப்பட்டுக்கொள்ள? சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பவர் மட்டும்தான் உயர்ந்தவர். ஆனால் அப்படிப்பட்டவர் தன்னைப் பிறரை விட உயர்ந்தவராக நினைக்க மாட்டார். எவரொருவர் பிறரைத் தாழ்வாகவும் தன்னை உயர்வாகவும் நினைக்கிறாரோ அவரிடம் நல்ல சிந்தனைகளோ நல்ல நம்பிக்கைகளோ இருக்காது.
நகரங்களில் எல்லா சாதியினரும் கலந்து அடுத்தடுத்த வீடுகளில் வாழ்வதை நம்மால் காண முடியும். ஆனால் கிராமங்களில் அப்படி இருப்பதே இல்லை. அப்படி இருக்கும் கிராமம் ஒன்றைக் கூட நான் பார்த்ததே இல்லை. என் சொந்த ஊரில் ஒரு தலித் குடும்பமும் கள்ளர் குடும்பமும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசிப்பது என்பது எத்தனை நூற்றாண்டானாலும் சாத்தியமே இல்லாத ஒன்று. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆப்பிரிக்கர்கள் சம உரிமை பெற ஆரம்பித்து பல வருடங்களாகின்றன. ஒபாமா இந்த இடத்தை அடைவதற்கு முன் அவருடைய முன்னோர்களில் எத்தனை பேர் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் நம் நாட்டில் இது போன்ற மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியமே இல்லை.
தலித்களை முக்குலத்தோரும் பிற சாதியினரும் படுத்திய கொடுமைகளுக்குக் காலமெல்லாம் நாம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாலும் போதாது. எனக்கு சாதி, மத நம்பிக்கைகள் கிடையாது என்றாலும் என் அப்பன், மாமன், மச்சான், பாட்டன், முப்பாட்டன்களெல்லாம் தலித் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக, முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இதைப் படித்தால் என் சொந்தக்காரர்களுக்குக் கடுமையாகக் கோபம் வரும். அவர்களிடம் நான் கெஞ்சிக் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் தலித் மக்கள் ஒன்றும் ஆடுகளோ மாடுகளோ அல்ல, அவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். சக மனிதனை மனிதனாக நினையுங்கள்!
நம் நாட்டு மக்களிடைய மிக ஆழமாக ஊடுருவியிருக்கும் சாதிஉணர்வைப் பார்க்கும்போது தலித் மக்களுக்கு விடுதலை என்பது தற்போதைக்கு சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகள் கழித்தாவது மாற்றம் ஏற்படலாம். அப்படி மாற்றம் ஏற்படும்போது அவர்கள் திருப்பி அடிக்கும்படி நேரலாம். அப்போது பாதிக்கப்படப்போவது உங்கள் சந்ததியினர்தான் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன் என் மாமன்களே மச்சான்களே!
என் ஊர் விளையாட்டில் முன்னுதாரணமான ஊர் என்பதைவிட சாதிஒழிப்பில் முன்னுதாரணமான ஊர் என்று பத்திரிகையில் வெளிவந்தால்தான் எனக்கு உண்மையில் பெருமை. வடுவூரைச் சேர்ந்த இளைஞர்களே இதைச் சாதிக்கத் தயாரா நீங்கள்?
Hmmm...நெத்தியடி....
ReplyDeleteI wish this share this in my Facebook(https://www.facebook.com/muthukumaran.veerasamy). can i
இன்று வரை நாங்களும் ஆதி திராவிட மக்களும் இங்கு ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றோம். எங்களுடைய விளையாட்டிலிருந்து கல்வி வரை நாங்களும் ஆதி திராவிட மக்களும் நண்பர்களாக ஒன்றாக தான் இருந்து வருகின்றோம். நீங்கள் எமது ஊரினை சிறுமைப்படுத்த முயல்வது கண்டிக்கதக்கது..........................
ReplyDeleteதயவு செய்து நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் கள்ளர் குலத்தில் உள்ள பட்டங்களை சாதிய உணர்வோடு பார்க்காமல் சரித்திர உணர்வோடு பாருங்கள் இந்திய தேசிய இராணுவத்தில் வீர, தீர செயல் புரிந்தமைக்கு வீர் சக்ரா போன்ற விருது பட்டங்கள் வழங்கப்படுகின்றன அதுப்போன்று தான் போரில் வெற்றி பெற்றமைக்கும், ஆளுமைக்கும் கிடைத்த பட்டங்களே இவைகள் இதனை வைத்து பெருமைகொள்வது இயல்பு. நாங்கள் இப்பட்டங்களை புறக்கணிக்க வேண்டுமென்றால் இந்திய இராணுவத்தினால் வழங்கப்பட்ட பட்டங்களை இராணுவ வீரர்களும் உதறிதள்ள வேண்டும்
ReplyDeleteஆசை தம்பி உங்களை சமத்துவவாதியாக காட்டிக்கொள்வ தை காட்டிலும்வெறும் பதிவோடு நிறுத்தாமல் உங்களுக்கு திருமணம் ஆகவில்லையென்றால் ஒரு தலித் பெண்ணையோ அல்லது ஒரு ஆதி திராவிட பெண்னையோ திருமணம் செய்துக்கொண்டு முதல் புரட்ச்சியினை தொடங்கசொல்லுங்களேன்.... இவ்வாறு செய்தால் முதல் வாழ்த்து என்னுடையதாகதான் இருக்கும்.
ReplyDeleteஉங்களுக்கு திருமணம் ஆகிவிட்தென்றால் உங்கள் மகனுக்கோ மகளுக்கோ ஒரு தலித் சமுதாயத்தினை சார்ந்த குடும்பத்தில் மண உறவு வைத்துக்கொள்ளுங்களேன் பார்ப்போம்
ReplyDeleteஇது சரியான விசயம்
Deleteமுக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்ததை பெருமையாக கருதாமல் இருந்தால் உடனே சாதியோ, மதமோ மாறி பதிவிடுங்கள்
ReplyDeleteபடிக்க வசதியில்லாத இரு தலித் மாணவர்களுக்கு தனது தனிப்பட்ட முயற்ச்சியின் மூலம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார் ஒரு முக்குலத்தினை சேர்ந்த பத்திரிக்கையாளர் அச்செய்தி தமிழ் நாடு முழுவதும் தெரிந்து அகில இந்திய எஸ்.சி. எஸ்.டி சங்கம் அந்த மாணவர்கள் படிக்க வசதி செய்து கொடுத்தது அந்த மாணவர்கள் எட-மேலையூர் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்தார்கள் தற்போது பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கின்றார்கள். அந்த பத்திரிக்கையாளர் வடுவூரினை சேர்ந்த திரு.ஜோ.மகேஸ்வரன் அவர்கள் இவர் முக்குலத்து சமுதாயமான கள்ளர் குலத்தினை சார்ந்தவர்......... சாதிகளை கடந்து வடுவூரார்கள் ஒற்றுமையாக தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம் என்பதற்க்கு இது ஒரு உதாரணம். நீங்கள் சொல்வதுப்போல் ஒருகாலத்தில் இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய நிலை வேறு
ReplyDeleteநீங்கள் புதுக்கோட்டை என்றால் உங்கள் முகவரியினை பதிவிடுங்கள்
ReplyDeleteபார்ப்பன ஆதிக்கத்தினை முதலில் ஒழித்ததே வடுவூர் தான்
ReplyDeleteDAMMMM.... I led an idiotic group here. My sincere apologies. BTW I am still and will stand with you in this regard.....
ReplyDelete-Raja AKA Muthukumaran