Saturday, May 18, 2013

பறவைக் கூட்டில் மொழியின் முதல் சொல்

தேன்மொழி“ஒரு மொழியின் கடைசி மனிதன்
இறந்து போனான்
அந்த மொழியின் முதல் சொல்லைத்
தன் கூட்டில் அடைகாக்கிறது
ஒரு பறவை” (பக்கம்-6.)

    கொண்டலாத்தி தொகுப்பில் கவிஞர் ஆசை, பறவைக் கூட்டில் ஒளிந்திருக்கும், மனிதர்களுக்கான மொழிகளை, கவிதை வழியாக அறிமுகப் படுத்துகிறார்.
ஓவ்வொரு விடியற்பொழுதையும் பறவைகள் தாம் அழைத்து வருகின்றன. உலகையே எழுப்புவது  பறவைகள் தாம் என்று கூட படைப்பாளியால் நம்பமுடியும். விடிகாலையில் பறவைகளின் கூச்சல் அன்றைய பொழுதின் தேவைக்கான தமது மொழிகளைத் தூவிச் செல்கிறது. வேர்கள் அறியாத பூவின் வாசம் போல நம்மையறியாமலே பறவைகளிடம் நாம் கற்றுக் கொள்ளத் துவங்குகிறோம். பூக்கள் அறியாத வேர்களின்  துயரம் போல், பறவைகளின் துயரம் அங்கீகரிக்கப் படுவதில்லை. பறவைகளை மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கச் சொல்லி எதார்த்தத்திலும், எழுத்திலும் நாம் நிர்ப்பந்திக்கிறோம். வன்முறையை சமாதானத்தின் மூலம் நிகழ்த்தக் கூடியது மானுடம். ஒற்றை நோக்க கருத்திலேயே பறவைகளை பார்க்க கற்றுக் கொண்டது நம் போதாமை என்பதை ஒத்துக் கொள்ள வைக்கிறது இத்தொகுப்பு. பறவைகள் மனிதனின் எழுத்தை சிறகுகளால், அலகுகளால், பறத்தலால், மென் பஞ்சு வண்ண மயிர்களால், கூடுகளால், சிறைபடுதலால், விடுபடுதலால் , கொத்திக்  கொத்தி, கொஞ்சி முத்தமிட்டு அலங்கரிக்கின்றன . வெளிவராத பறவைகளின் கண்ணீரை நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை. பறவைகளின் வாழ்க்கை விதிகளை நம் எழுத்தால் சிறைப்பிடித்துவிட  முடியாது என்ற கம்பீரத்தில் அவை பறந்துக் கொண்டிருக்கின்றன. அவை பறந்து சென்ற பாதையின் சுவடுகளை தேடித்தேடி நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். பறவையை எழுத்தோடு மட்டும் எழுதிச்செல்லாமல், அதன் மொழிகளைக் கவர்ந்து வந்து வாழ்க்கையோடு பின்னலிட்டுப் பார்க்கும் ஒரு முயற்சிதான் ஆசையின் கொண்டலாத்தி.

    தையல் சிட்டின் கனம் தான்/இருக்கும்/இந்தக் கணம்/அதிர்ந்து கொண்டிருக்கிறது/அது/தையல் சிட்டு பறந்து சென்ற பின்/அதிரும் /இலைக்காம்பு போல/
 கணத்தை நீலமாக்கும் மீன்கொத்தி, விடியலை சற்றே நிறுத்தி வைக்கும் கரிச்சான், உலகின் ஒட்டுமொத்த பலவீனங்களின் துயரங்களின், இழப்புகளின் சாட்சியாய் நிற்கும் ஒற்றைக் கால் மைனா, பிரபஞ்சத்தின் கருந்துளை யென தேன் உறிஞ்சும் தேன்சிட்டு, விசிறிக் கொண்டை கொண்டலாத்தி யென, இன்னும் இன்னுமாய் பறவை கலைக் கொண்டுவந்த நம்முள் பறக்கவிடுகிறார்  கவிஞர்.

    நீ வரும்போதெல்லாம்/என்மேல் பதிந்திருக்கும் பெயரை/உறிஞ்சிக் குடித்துவிட/நாமிருவரும் ஒன்றாகிறோம்/ஏற்கனவே நாம் /ஒன்றாயிருப்பது போலவே
வயப்பட்டால் மட்டுமே வாழ்வை வாழ்ந்து தீர்க்க முடியும். ஆற்றோடு நீந்திப் பார்க்க முடியும், கடலினைப்  பிளந்து புகுந்து உள்சென்று வாழ்வை சுவாசிக்க முடியும், பறவையோடு பறக்க முடியும், பூக்  கரங்களால் தேன் உறிஞ்ச முடியும். பெயரைத்  தொலைத்தல் என்பது தன்னைத் தொலைத்தலாகும். தன்னைத்  தொலைக்கும் போது மட்டுமே இன்னும் பிறவற்றை அடைய முடிகிறது. அப்போது வாழ்வின் மீதொரு உற்சாக சவாரி செய்து விட்டுக் களைப்பின்றி அமர்ந்து புன்னகைக்க  முடிகிறது.

    இரவின் இருளில் கரைந்து போகும், ஒரு பறவையின் குரல் நமக்குள் விதவிதமான உணர்வுகளை ஊட்டுகிறது. குரலின் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்வது   படைப்பாளிகளுக்குச் சாத்தியமில்லை  அது பயம் கூடிய ஒற்றைச் சொல்லையோ, துயரம் தோய்ந்த ஒரு கவிதையையோ, விடியலை நோக்கிய பயண வரிகளையோ தராமல் போனதில்லை.  மழைக் கொத்தி (பக்கம் 28) கவிதையைப்  படிக்கும் மனங்கள் ஒரு மழைக்கொத்தியைப்  பிரசவிக்காமல் இருக்க முடியாது. மழைக்கொத்தி/உண்மைதான்/என்றுணர /நாம் அவளாக வேண்டும்/ இல்லை மழையாக வேண்டும்/அதுவும் இல்லையென்றால்/ மழைக்கொத்தி ஆகவேண்டும்.

    ஒவ்வொரு கவிதையை அணுகும் போதும்  நமக்கென ஒரு கவிதை உருவாவது தவிர்க்க முடியாதது. தொகுப்பினுள் பிரசுரமாயிருக்கும் அழகிய பறவைகளின் புகைப்படங்கள் தம்மை எழுதச் சொல்லி நம்மை வன்மம் இன்றி வற்புறுத்துகின்றன. “விரிக்கும் சிறகென் உலகு” எனும் ஆசையின் கவிதை வரிக்குள் நாம் இணைந்து கொள்ள முடிகிறது.

கொண்டலாத்தி
- கவிதைகள்
-ஆசை
க்ரியா , சென்னை


('கொண்டலாத்தி' கவிதைத் தொகுப்புக்கு மணற்கேணி இதழில் தேன்மொழி எழுதிய மதிப்புரை. இணைப்பு:http://manarkeni.blogspot.in/2011/07/blog-post_9598.html )

No comments:

Post a Comment