Thursday, October 15, 2015

எச்சரிக்கை இந்தியா! உன் மீது அறம்பாடப்படுகிறது!


ஆசை

(அச்சு இதழ்கள் எதிலும் பிரசுரமாகாதது)

ஜெயமோகனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று ‘அறம்’. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

எழுத்தாளர் ஒருவர் பணக்காரப் பதிப்பகத்துக்காக நிறைய புத்தகங்கள் எழுதித்தருகிறார். அந்தப் புத்தகங்களுக்காகத் தனக்கு வர வேண்டிய தொகையைத் தேவை ஏற்படும்போது மொத்தமாக வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பெண்ணுக்குக் கல்யாணம். முதல் நாள் போய் அந்தப் பதிப்பக முதலாளியிடம் தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்கிறார். அந்த முதலாளியோ எல்லா பணத்தையும் ஏற்கெனவே பைசல் செய்தாகிவிட்டது என்று அடாவடியாகக் கூறி எழுத்தாளரைத் துரத்திவிடுகிறார். வயிறெரிந்துபோய் அந்த எழுத்தாளர் குடித்துவிட்டு நேராக அந்தப் பதிப்பக முதலாளியின் வீட்டுக்குச் செல்வார். அங்கே ஆச்சி இருப்பார். அந்த முதலாளி தன்னை இப்படி வயிற்றில் அடித்துவிட்டாரே என்று சொல்லி மண்ணை வாரித் தூற்றி ஒரு அறம் பாடி அதனை வாசலில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிடுவார். தன் வீட்டுக்கு வந்து இப்படி அறம் பாடிவிட்டுப் போய்விட்டாரே என்று திக்பிரமை பிடித்த ஆச்சி தன் கணவரின் பதிப்பகத்துக்கு வந்து அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை உடனே கொடுக்கச் சொல்கிறார். கணவர் முரண்டு பிடித்ததும் கொதிக்கும் வெயிலில் அப்படியே தார்ச்சாலையில் ஆச்சி உட்கார்ந்து சத்தியாகிரகம் செய்ய ஆரம்பிக்கிறார். தன் குலவிளக்கு இப்படி நடுத்தெருவில் உட்கார்ந்ததைப் பார்த்து அதிர்ந்துபோய் வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஏதோ தாமதமாகி இறுதியில் பணத்துடன் திரும்ப வருவார் பதிப்பக முதலாளி. வந்து ஆச்சியைத் தூக்கினால் வெயிலில் அவருடைய உடல் வெந்து தரையோடு ஒட்டிக்கொண்டி, சதை பிய்ந்துபோய்விடும். எழுத்தாளரை வீட்டுக்கு வரச்சொல்லும் ஆச்சி அவருக்கு சாப்பாடு போட்டு ஒரு பவுன் நகையும் கொடுத்து, அறம் பாடியதை விலக்கிக்கொள்ளச் சொல்வாள். அவரும் சந்தோஷமாக அறத்தை விலக்கிக்கொள்வார்.

இந்தக் கதையிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் ‘அறம் பாடுதல்’ என்றால் என்னவென்று. சத்தியத்தின் உச்சகட்ட ஆவேசத்தில் அடிவயிற்றிலிருந்து வரும் சொல் எரித்துவிடும் என்பது நம் கலாச்சாரத்தின் நம்பிக்கை. அதுவும் புலவர், எழுத்தாளரின் சொல்லுக்கு அப்படி ஒரு முக்கியத்துவம் நமது கலாச்சாரத்தில்.

நம் கலாச்சாரத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு, மகத்தான நம் கலாச்சாரத்தின் கடந்த கால மகத்துவத்தை மீட்பதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு நம் கலாச்சாரத்தின் மேற்கண்ட விஷயம் தெரிந்திருக்காது என்றுதான் நம்ப வேண்டியிருக்கிறது.

ஏனெனில் நாடு முழுவதும் அறம் பாடிக்கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். இவர்களில் கவிஞர்களும் அடக்கம். உண்மையில் அறம் பாடும் அனைவருமே கவிஞர்கள்தான். நாடு முழுக்க இப்படி எழுத்தாளர்கள் அறம்பாடிக்கொண்டிருப்பது இந்த அரசுக்கும் இந்திய கலாச்சாரத்தின் ஈடில்லா இணையில்லா பெருமையை மீட்கப் பிறப்பெடுத்திருக்கும் தேவதூதராக நம்பப்படுவருக்கும் அப்படி நம்புபவர்களுக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லையா? விபரீதமான ஏதோ ஒன்று நடப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா?

எழுத்தாளர்களை வஞ்சித்த, எழுத்தாளர்களை ஒடுக்கிய, எழுத்தாளர்களைக் கொன்ற எந்த நாடும் கலாச்சாரமும் மேல்நிலையை அடைந்ததில்லை என்பதைத் தங்களுடைய எதிரிகளாக அவர்கள் பாவிக்கும் கம்யூனிஸ நாடுகளிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் அவர்கள் தெரிந்துகொள்ளவில்லையா? ஸ்டாலினின் அரசாட்சியில் ஓசிப் மாண்டெல்ஸ்டாம் என்ற மகாகவி சித்ரவதை முகாமில் இறந்துபோகவில்லையா?  ஸ்டாலின் அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்ட தன் மகனைப் பார்ப்பதற்காக வரிசையில் மணிக்கணக்காகக் காத்திருந்த கவிதேவதை அன்னா அக்மதோவாவின் கண்ணீர், வரலாற்றில் இன்று ஸ்டாலினை எரித்துக்கொண்டிருக்கவில்லையா? எழுதி வைத்தால் அழிக்கப்பட்டுவிடும் என்று மனதில் திரும்பத் திரும்ப உருப்போட்டு தனது கவிதைகளை நண்பர்களிடமும் சொல்லி அவர்களையும் உருப்போட வைத்த அந்த தேவதைத் தாய் இன்று ஸ்டாலினின் கல்லறையின் மேல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள். அவள் அறம் பாடினாள். அவளைப் போன்ற ஏராளமான எழுத்தாளர்களும் அறம் பாடினார்கள். தற்கொலையால் அறம் பாடினார், நோபல் பரிசை வென்றும் அதை வாங்க முடியாமல் குருச்சேவ் அரசால் தடுக்கப்பட்ட போரிஸ் பாஸ்டர்நாக். இன்று சோவியத்தின் நிலை?

முதலாம் உலகப் போரில் லட்சக்கணக்கான  அர்மீனியர்களைக் கொன்று இனப் படுகொலை செய்த துருக்கி அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதிய துருக்கி எழுத்தாளன் ஓரான் பாமுக், அப்படிச் சொன்னதாலேயே மரண தண்டனை வரை சென்று, சர்வதேச எழுத்தாளர்களின் முயற்சியாலும், நோபல் விருது வழங்கப்பட்டதாலும் காப்பாற்றப்பட்டான். அவன் துருக்கிக்கு அறம் பாடியிருக்கிறான். இனப்படுகொலையை சங்கடமான ஒரு விஷயமாகக் கருதி வரலாற்றின் முழுச் சேற்றில் புதைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் அந்த சமூகத்தின் மனசாட்சியை நோக்கி அந்த எழுத்தாளன் அறம்பாடிவிட்டான். அதை நோபல் விருது மேலும் உரக்கத் தெரிவித்துவிட்டது உலகெங்கும். அவன் அறம் பாடியதன் நெருப்பு இனி துருக்கியை வரலாறு உள்ள மட்டும் எரித்துக்கொண்டே இருக்கும்.

அயத்துல்லா கோமேனி விதித்த பத்வாவால் இன்றுவரை உயிரபாயத்தில் திரிந்துகொண்டிருக்கும் சல்மான் ருஷ்டியும், வங்க தேசத்தில் விதிக்கப்பட்ட பத்வாவால் ஒவ்வொரு நாடாகத் தஞ்சம் புகுந்துகொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினும் அறம் பாடியதற்கு அந்தந்த தேசங்கள் வரலாற்றில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இவ்வளவு உதாரணங்களும் உங்கள் எதிரிகளாகவும், அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக நீங்கள் கருதும் கம்யூனிஸ தேசங்களிலிருந்தும், இஸ்லாமிய தேசங்களிலிருந்தும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இதற்குச் சளைக்காத உதாரணங்களைச் சமகால இந்தியா உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, சம கால வரலாற்றில் மனித உரிமைப் போராளியும் தமிழருமான ரஜனி திரணகமவின் படுகொலை விடுதலைப் புலிகளுக்கும், பத்திரிகையாளர் லசந்தாவின் படுகொலை ராஜபக்சேவுக்கும் அறம் பாடிக்கொண்டிருக்கவில்லையா?

‘தனக்குள் இருந்த எழுத்தாளன் இறந்துபோய்விட்டான்’ என்று ஒரு தமிழ் எழுத்தாளன் அறம்பாடினானே, அது உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் சந்தி சிரித்ததே! அப்போது நாம் என்ன செய்தோம்? என்ன சொன்னோம்? நம்மை ஒட்டுமொத்தமாக அந்த எழுத்தாளன் எரித்து பஸ்பமாக்கியிருப்பதுகூட உறைக்காமல் ‘சவுதி அரேபியாவிலோ பாகிஸ்தானிலோ அவர்களின் மதத்துக்கு எதிராக எழுதி உயிரோடு இருந்துவிட முடியுமா?’ என்று மாற்று உதாரணங்களை வைத்துக்கொண்டிருந்தோம். ஆக, நிச்சயமாக ஒன்று புலப்படுகிறது. நீங்கள் உங்கள் முன்னுதாரணமாக சவுதி அரேபியாவையும் பாகிஸ்தானையும்தான் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள்தான் உங்களுக்கு ஆதர்சம். அவர்களாவதுதான் உங்கள் லட்சியம்.

ஏற்கெனவே நீங்கள் அந்த லட்சியத்தில் பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நம் அனைவரின் முகம் மீதும் இத்தனை எழுத்தாளர்கள் அறம்பாடி ஒட்டிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை ‘அவர்கள் இடதுசாரிகள். சீக்கியக் கலவரத்தின்போது என்ன செய்தார்கள்? ஜாலியன் வாலாபாக்கின்போது என்ன செய்தார்கள்? ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது என்ன செய்தார்கள்? உலகம் தோன்றியபோது என்ன செய்தார்கள்?’ இப்படி சமத்காரமாகக் கேள்வி கேட்டு மடக்கிக்கொண்டிருக்கிறோம் முகத்தின் மீது பாடப்பட்ட அறம், ஆறாவடுவாக மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.

இப்படிக் கேள்வி கேட்கும் நம்மை விட எவ்வளவோ செய்திருக்கிறார் நயன்தாரா ஷேகல். தனது உறவினரான இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையையே எதிர்த்து, வலதுசாரி அருண் ஷோரி உள்ளிட்ட பலருடன் கைகோத்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயண் தோற்றுவித்த மனித உரிமை அமைப்பான பியுசிஎல்லின் துணைத் தலைவராக நயன்தாரா இருந்தபோது 1984-ல் நடைபெற்ற சீக்கியப் படுகொலையை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்பட்டவர். படுகொலையை நிகழ்த்திய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரங்கள் சேகரித்து அளித்தவர். இப்போது, அதாவது மற்றுமொரு நெருக்கடி நிலையின்போது, தனது விருதைத் திருப்பியளித்திருக்கிறார். குஜராத் படுகொலை, ஒடிசாவில் கிறித்தவர்களுக்கெதிரான கலவரம், முஸாபர்நகர் கலவரம், தாத்ரி படுகொலை போன்றவற்றின்போது நாம் சிறு எதிர்ப்பையாவது வெளிப்படுத்திருக்கிறோமோ ஜீ? நமக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா ஜீ? இருந்தால் அது என்ன மதம், என்ன சாதி ஜீ?

காங்கிரஸ் ஆண்ட, ஆளும் மாநிலங்களில்தான் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் மாநிலங்களில் கொல்லப்பட்டாலும் கொலைகளுக்குப் பின் நின்ற சித்தாந்தம் இந்துத்துவம். அந்த இந்துத்துவம் பூதாகரமாக அதிகாரத்தில் இருக்கும் இந்தத் தருணத்தைவிட எதிர்ப்பைத் தெரிவிக்கப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருந்திருக்க முடியும்?



ஒரு முதிய பெண்மணி. மதிப்புக்குரிய எழுத்தாளர். காங்கிரஸை எதிர்த்த அளவுக்கு பாஜகவை கூட எதிர்க்காதவர். மிக அமைதியாகத் தொடங்கிவைத்திருக்கிறார் அறம்பாடுதல் நிகழ்வொன்றை. அதன் உக்கிரத்தில் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தாளராக தொடரோட்டமாக அறம்பாடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அதையெல்லாம் கேலிக்குள்ளாக்கி, அவர்கள் எலைட்டிஸ்ட், இடதுசாரிகள், மோடியின் வளர்ச்சி அரசைப் பிடிக்காதவர்கள், உள்நோக்கம் கொண்டவர்கள் என்று தூற்றிவாரிக்கொண்டிருக்கிறோம். அதை எழுத்தாளர்களே செய்துகொண்டிருப்பதுதான் இன்னும் விசேஷம். எச்சரிக்கை, ஒரு தேசத்தின் மீது அறம்பாடப்பட்டிருக்கிறது. அந்த அறத்தின் உக்கிரத்தில் வரலாற்றில் முதலில் பொசுங்கப்போகிறவர்கள் அப்படிக் கேலி பேசும், மவுனமாக இருக்கும் எழுத்தாளர்களேதான். ஏனெனில் சொல் என்பது அவ்வளவு உக்கிரமானது. அதைச் சொல்லாமல் அமைதி காத்தால் அது திருப்பி நம்மைப் பொசுக்கிவிடும். இது மூடநம்பிக்கையல்ல. வரலாற்று உண்மை! 

1 comment:

  1. அந்த அறத்தின் உக்கிரத்தில் வரலாற்றில் முதலில் பொசுங்கப்போகிறவர்கள் அப்படிக் கேலி பேசும், மவுனமாக இருக்கும் எழுத்தாளர்களேதான் என்பதை நினைக்கும்போது வேதனையே. இருந்தாலும் பாதிப்பு என்பது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும்தானே?

    ReplyDelete