Wednesday, May 8, 2013

ஒரு ஓட்டு சுந்தரேசன்

(செப்டம்பர் 2012, தீராநதி இதழில் வெளிவந்த சிறுகதை) 

ஆசை


'நான் இந்த எலக்ஷன்ல நிக்கப்போறன் மாப்புள்ள' என்று குண்டைத் தூக்கிப்போட்டார் சுந்தரேசன் மாமா.
'நெசமாத்தான் சொல்றீங்களா மாமா, இல்ல ஒங்களுக்குக் கிறுக்கு எதுவும் புடிச்சிப்போச்சா?'
'நெசமாத்தான் சொல்றன் மாப்புள்ள. இந்தத் தேர்தல்ல நான் நிக்கப்போறன், சுயேச்சை வேட்பாளரா' என்றார் மாமா.
'அத்தைக்குத் தெரிஞ்சிச்சுன்னா ஒங்கள வுட்டுட்டுத் தேடாதே மாமா. அத வுடுங்க அய்யாவுக்குத் தெரிஞ்சிச்சின்னா என்னல்ல ஒதைக்கப் போறாரு'

'மாப்புள்ள, நான் ஒரு சுதந்திர ஜீவி ஒன் அத்தயால எல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது. என்ன சொன்ன ஒன் அய்யாவா' என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா'என்று சிரித்துவிட்டுப் பின் தொடர்ந்தார் 'அங்கதான் இருக்கு மாப்புள்ள நான் எலக்ஷன்ல நிக்குற சூச்சமமே' என்று புதிர்போட்டார்.
'என்ன சொல்லுறீங்க மாமா'
'மாப்புள்ள நான் என்ன ங்கொப்பாரு மாதிரி வெவரமில்லாத ஆளா. யோசிக்காமயா செய்வன். இங்க பாரு மாப்புள்ள ஒங்க அய்யா பேரும் சுந்தரேசன், என் பேரும் சுந்தரேசன். அது மட்டுமில்லாம ரெண்டு பேரோட இனிஷியலும் 'பெ'தான். ஓட்டுப்போடுற பயலுவல்ல பாதிப்பேரு சின்னத்தப் பாத்தும் பாதி பேரு பேரப் பாத்தும்தான் ஓட்டுப்போடுவாங்க. அதிலயே பாதி ஓட்டு நம்மளுக்கு வந்துடும். எப்புடி' என்று சின்னக் குழந்தைபோல என் முகத்துக்கு முன்னே கையை மடக்கி ஆட்டிக் காட்டினார்.
    என்ன சொல்வதென்று தெரியாமல் அவரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
    சுந்தரேசன் மாமா எனக்கு ஒன்றுவிட்ட அத்தையைத்தான் கல்யாணம் பண்ணியிருந்தார். அத்தை அவளுடைய அப்பாவுக்கு ஒரே பெண். தமிழாசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஓரளவு வசதி. பெண்ணை விட்டுப் பிரிய மனமில்லாத அவளுடைய அப்பா வீட்டோடு மாப்பிள்ளையாக சுந்தரேசன் மாமாவையே கட்டிவைத்தார். சுந்தரேசன் மாமாவும் ஓரளவு வசதிதான். வசதி என்றால் அந்தக் காலத்தில் பண வசதியைக் குறிக்காது. நிலபுலன்களைத்தான் குறிக்கும். சுந்தரேசன் மாமாவுடைய அப்பா நிலத்திலிருந்து கிடைக்கும் காசைத் தன் மகனுடைய படிப்புக்காகச் செலவிட்டார். தன் பரம்பரையில் முதன்முறையாக ஒருத்தன் படிக்கிறான் என்பதில் அவருக்கு ஏக சந்தோஷம், அதனால் தாராளமாகவே செலவுசெய்தார். மாமாவும் நன்றாகத்தான் படித்தார். அந்தக் காலத்திலேயே பிஎஸ்ஸி கணிதம் படித்திருந்தார். மேற்கொண்டு படிப்பைத் தொடரப் போனபோது அவருக்கு மார்க்சிய சித்தாந்தத்தின் பரிச்சயம் ஏற்பட்டு படிப்புக்குப் பாதியிலேயே முழுக்குப்போட்டுவிட்டு தீவிர கம்யூனிஸ்டாகப் போய்விட்டார். பாதி நிலத்தை விற்றுப் படிக்க வைத்தோமே, இப்படி வேலைக்குப் போகாமல் பிள்ளை தெக்கணாமுட்டியாக ஆகிவிட்டானே என்ற கவலையில் அவருடைய அப்பா மாரடைப்பு வந்து செத்துப்போனார். எந்த முதலாளிக்கும் கீழே நான் வேலை செய்ய மாட்டேன், யாரையும் எனக்குக் கீழே வேலை செய்ய விட மாட்டேன் என்று கொள்கை பேசி மாமா எந்த வேலைக்கும் போகாமல் நிலபுலன்களையெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக விற்று அந்தப் பணத்தைப் புத்தகங்கள் வாங்கவும் கட்சிப்பணிகளுக்காகவும் செலவிட்டார். அது மட்டுமல்லாமல் சென்னைக்குப் போய்த் தங்கி ஹிந்தி பிரச்சார சபாவில் ஹிந்தியும் மூலதனத்தை மூலத்திலேயே படிக்க வேண்டும் என்று மாக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மனும் கற்றுக்கொண்டார். பிள்ளை எப்போது பணம் கேட்டாலும் எதை விற்றாவது அம்மாக்காரி உடனே அவருக்குப் பணம் தந்துவிடுவாள். கொஞ்ச நாளில் அம்மாவும் போய்ச் சேர்ந்துவிட சுந்தரேசன் தனிக்கட்டை ஆனார். பிறகுதான் அவருக்குத் திருமணம் ஆயிற்று. ஆரம்பத்தில் அத்தைக்கும் அவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது. மாமா எல்லா ஜாதிக்காரர்களையும் சமமாகத் தன் வீட்டுக்குள் அழைத்து வரத் தொடங்கியதும்தான் எல்லாப் பிரச்சினையும் ஆரம்பமானது. உச்சக்கட்டமாக மாமாவை அத்தை விளக்கமாற்றால் அடித்துவிட்டாள். அது மட்டுமல்லாமல் இனிமேல் தாழ்த்தப்பட்டவர்கள் யாரையாவது வீட்டுக்குள் அழைத்துவந்தால் மாமாவை வீட்டை விட்டுத் துரத்திவிடுவேன் என்று வேறு சொல்லிவிட்டாள். அதற்கப்புறம் மாமா வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் சின்ன கொட்டகைபோல் கட்டிக்கொண்டு தன் புத்தகங்களையெல்லாம் அதில் வைத்துக்கொண்டார். பிற ஜாதிக்காரர்களையும், முக்கியமாக, தாழ்த்தப்பட்டவர்களையும் அந்த வீ்ட்டுக்கு வரச் சொல்லிதான் பேசுவார். சாப்பிட மட்டும்தான் வீட்டுக்குப் போவார். இதற்கிடையில் அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து அவர்கள் கல்லூரி போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். இரண்டு பயல்களும் அப்பனைத் துளிக்கூட மதிப்பதில்லை. மாமாவோ கட்சி நடத்தும் எந்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்திலும் முதல் ஆளாகக் கலந்துகொண்டு கைதாகிப் போவதும் தாத்தா அவரை வெளியில் எடுத்துவருவதுமாக இருந்தது. கொஞ்ச நாளுக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகள், முக்கியமாகக் கட்சி மேலிடத்தின் சர்வாதிகாரப் போக்கு அவருக்குப் பிடிக்காமல் போனதும் வெளிப்படையாகவே கட்சியை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். அவரைத் திரிபுவாதி என்று சொல்லிக் கட்சியிலிருந்து துரத்திவிட்டார்கள். இருந்தும் அவர் மனதளவில் ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்தார். இன்னமும் சொந்தக்காரர்களைத் தவிர யாரைப் பார்த்தாலும் காம்ரேட் என்றுதான் அழைப்பார்.
    நான் எங்கள் கட்சியின் வட்டச் செயலாளராக இருந்தேன். அதனால் சுந்தரேசன் அய்யாவுடன் எனக்கு நல்ல பழக்கம். நான் ஓரளவுக்குப் படித்திருப்பதால் அவருக்கு என் மேல் மரியாதை. அவர் கட்சியில் கொஞ்ச நாளுக்கு முன்தான் சேர்ந்தார். பணபலம் அதிகம் என்பதால் சீக்கிரமே அவருக்கு தேர்தலுக்குச் சீட்டுக் கொடுத்துவிட்டார்கள். அவர் முதன்முறையாக எலக்ஷனில் நிற்கும் இந்த நேரத்தில் மாமா இப்படிக் கோமாளித்தனம் பண்ணுகிறாரே என்று எரிச்சல் ஏற்பட்டது. அய்யாவுக்குத் தெரிந்தால் கோபப்படுவார். எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
'சரி! பாத்துக்குங்க மாமா. அய்யாவப் பகச்சுக்கிட்டா அது நமக்கு நல்லதில்ல' என்றேன்.
'நான் போராளி மாப்புள்ள, எதுக்கும் பயப்பட மாட்டன், நீ கவலப்பட வேணாம்' என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.
    வேட்புமனு தாக்கல் செய்யும் நாளன்று மாமா கோவணம் கட்டிய வயசான ஒரு விவசாயக் கூலியைக் காசு கொடுத்துக் கூட அழைத்துவந்தார். அதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் ஏகக் களேபரமாகவிட்டது. சாட்சிக் கையெழுத்துக்கு ஆள் பற்றாமல் வெளியே டீக் கடைகளில் இருந்தவர்களையும் அந்தப் பக்கம் வந்தவர்களையும் மாமா கெஞ்சிக்கொண்டிருந்தார் 'காம்ரேட், என்னோடக் கொஞ்சம் வந்து கையழுத்துப் போடுறீங்களா. ஒங்கக் கையெழுத்து சமத்துவ பொதுவுடமைச் சமுதாயத்துக்கான முதலடியாகக் கூட இருக்கலாம். கொஞ்சம் வர்றீங்களா' என்று. சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்காக ஒரு பிச்சைக்காரரைப் போய் அழைத்தார் 'காம்ரேட்' என்று. அதற்கு அந்தப் பிச்சைக்காரன் 'சாமி எம்பேரு முருவங்க' என்றிருக்கிறான்.

    ஒருவழியாக மாமா வேட்புமனு தாக்கல்செய்துவிட்டார். மாமாதான் முதல் ஆள், பிறகுதான் அய்யாவும் பிற கட்சி வேட்பாளர்களும், மாமாவைப் பார்த்து முப்பது சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். வேட்பாளர்கள் அதிகமானதைப் பார்த்து அய்யா அதிர்ந்துபோய்விட்டார். சுயேட்சை வேட்பாளர்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளவர்களைக் கொஞ்சம் கவனித்து, அவர்களை வேட்புமனுக்களை வாபஸ் வாங்கச் செய்தார்.
    என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், 'ஒன் மாமனுக்கு எதுக்குய்யா இந்தத் தேவையில்லாத வேலை. இந்தா இந்த இருபதாயிரத்த அவன்ட்ட கொடுத்து வேட்புமனுவ வாபஸ் வாங்கிக்கச் சொல்லு' என்றார்.
    மாமாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தபோது, அவர் அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார், 'மாப்புள்ள ஒங்க அய்யா என்னை வாபஸ் வாங்கச் சொல்லிப் பணம் கொடுத்துருக்கார்னா என்ன அர்த்தம்? அவர் என்னப் பாத்துப் பயந்துட்டாருன்னுதானே அர்த்தம். இதுவே எனக்குப் பாதி வெற்றி    மாப்புள்ள' என்றார்.
    அவருடைய குணம் எனக்குத் தெரிந்ததால் அய்யாவிடம் போய்ப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டேன். 'வாங்கிக்கலன்னா அவனுக்குதான் நஷ்டம்' என்றார் அய்யா.
    வேட்புமனு வாபஸ் வாங்கும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. நான் மாமாவை இன்னொரு முறை போய்ப்பார்த்தேன்.
    'ஒழுங்கா சொல்றதக் கேளுங்க மாமா. அய்யா மோசமானவரு. எனக்காவ ஒங்களச் சும்மா வுடுறாரு. நான் வேணும்னா பேசி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கித்தர்றேன் மாமா, நீங்க வாபஸ் வாங்கிக்குங்க' என்றேன்.
    'மாப்புள்ள இது ஏதோ ஒரு வேட்பாளருக்கும் இன்னொரு வேட்பாளருக்கும் இடையில் நடக்கிற போராட்டம் இல்ல. வர்க்கப் போராட்டம். இதுல தோக்குறதும் ஜெயிக்கிறதும் முக்கியமில்ல. போராடுறதுதான் முக்கியம்' என்று ஏதேதோ பினாத்தினார்.
    'சரி இது திருந்துற கேசு இல்லை' என்று நினைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன்.
    வேட்புமனு வாபஸ் வாங்குவதற்கான தேதி நெருங்கியதுமே இரண்டு மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் அய்யா வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு சத்தமாகப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பிறகு அய்யா அவர்களைக் கூப்பிட்டுப் பேசி ஆளுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். அடுத்த நாளே அவர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிக்கொண்டனர்.
    இறுதிநாளுக்கு முதல்நாள் அய்யா வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து அவர் வீட்டுக்கு முன் நின்றுகொண்டு மாமா பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். நானும் ஏழெட்டுப் பேரும் அப்போது அய்யாவுடன் பேசிக்கொண்டிருந்தோம். வெளியே என்ன சத்தம் என்று வந்து பார்த்தபோது மாமா கையில் சிறிய ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு மரத்தடி நிழலில் இருந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார்.
    'செந்தமிழ் படித்த சேகுவேராவாம், கருப்பு காரல் மார்க்ஸாம், ஒரத்தநாட்டின் ஒமர் முக்தாராம் வணங்காமுடி வால்டேராம் மனிதாபிமானமுள்ள மண்டேலாவாம் உங்கள் வேட்பாளரான நான் உங்களைத் தேடி ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். மக்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன், இதுவரை எத்தனை பேருக்கு நீங்கள் ஓட்டு போட்டிருப்பீர்கள், எத்தனை பேர் உங்களை ஆண்டிருக்கிறார்கள். ஆனால் சமத்துவமான ஒரு சமுதாயம் மலர்ந்திருக்கிறதா. இவர்களை விட்டு விட்டு நாளை நீங்கள் வேறொருவரைத் தேர்ந்தெடுத்தாலும் இதே நிலைதான். இந்த நிலையைப் போக்கத்தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். நான் மட்டும் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாண்புமிகு பிரதமரிடம் பேசி ஒரத்தநாட்டுக்கு விமான நிலையம் கொண்டுவருவேன். ஆண்டைகள் மட்டும்தான் விமானத்தில் போக வேண்டுமா நாமெல்லாம் போகக் கூடாதா? இரண்டாவதாக, நிலக்கிழார்களிடமிருந்தும் நிலச்சுவான்தாரர்களிடமிருந்தும் நிலங்களைப் பறித்து நிலம் இல்லாதவர்களுக்குக் கொடுப்பேன்' என்று ஒழுங்காகப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று தாறுமாறாக எகிற ஆரம்பித்தார், 'நான் உங்களை ஒன்று கேட்கிறேன், என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் யாராவது மூலதனம் படித்திருக்கிறார்களா? யாருக்காவது மாக்கியவல்லியைத் தெரியுமா, தெரியாது பக்கத்து வீட்டுப் பாக்கியவல்லியைத்தான் தெரியும். யாருக்காவது ட்ராட்ஸ்கியைத் தெரியுமா? தெரியாது, விஸ்கியைத்தான் தெரியும். ஏய் சுந்தரேசா என்னைப் பார்த்துப் பயம் வந்தால் ஒழுங்காக வாபஸ் வாங்கிக்கொள், புரட்சிப் புயல் வருகிறது, புழுதியையெல்லாம் சுழற்றியடிக்க' அதுவரைச் சிரித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த அய்யா கடுப்பாகிவிட்டார். 'யோவ் அவன் மனசுல என்னய்யா நெனச்சுக்கிட்டிருக்கான், அவன ஒதக்காம வுடக் கூடாது' என்று ஆவேசமாக எழுந்தார். நான் அவரைச் சமாதனப்படுத்தி உட்கார வைத்துவிட்டு அவசரஅவசரமாகக் கீழே மாமாவிடம் ஓடி வந்தேன்.
'மாமா, அத நிறுத்திட்டுக் கொஞ்சம் மேல வாங்களேன், அய்யா ஒங்களப் பாக்கணுங்குறாரு' என்றேன்.
'என்ன மாப்புள்ள என்னோட ஆவேச உரையப் பாத்து ஒங்க அய்யா மிரண்டுபோயிட்டாரா?' என்று நக்கலடித்தார் மாமா.
'அய்யோ, பேசாம என்னோட வாங்க மாமா, இல்லன்னா ஒங்களக் கொன்னுடுவார்' என்று கெஞ்சிக் கூத்தாடி அவரை மேல அழைத்துக்கொண்டு போனேன்.
அய்யாவைப் பார்த்தும் 'வணக்கம் காம்ரேட்' என்றார்.
'யோவ் காசு வாங்கத்தான வூட்டுக்கு முன்னாடி வந்து கத்துற, அப்புறம் எதுக்குய்யா காம்ரேடு மண்ணாங்கட்டின்னு கம்யூனிசம் வேற' என்று அய்யா பொரிந்தார்.
'மரியாதயாப் பேசுங்க காம்ரேட்'
'மரியாதயெல்லாம் கெடக்கட்டும், இந்த அம்பதாயிரத்த எடுத்துகிட்டுப் பேசாம ஓடிப்போயிடு. நாளக்குக் காலயில மொத வேலயா நீ வாபஸ் வாங்கிடனும்' என்றார் அய்யா.
'காம்ரேட் என்னை என்ன அவ்வளவு சாதாரணமா எட போட்டுட்டிங்க. ஒங்க பேரும் ஏன் பேரும் ஒண்ணு, இனிஷியலும் ஒண்ணு. எக்கச்சக்க ஓட்டு பிரியும். ஒரு அஞ்சு லச்சம் தந்தா நான் வாபஸ் வாங்கிடுறன்' என்றார் மாமா தெனாவெட்டாக, எனக்கோ பகீரென்றது.
'என்னது அஞ்சு லச்சமா? ஏய் நான் அடிச்சுக் கொல்லுறதுக்கு முன்னாடி இந்தக் கோமாளிய வெளியில தொரத்தி வுட்டுடுங்கடா' என்று எங்களை அதட்டினார்.
மாமாவைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு நான் வெளியே வந்தேன். 'என்ன மாமா இப்புடிச் சொதப்பிட்டிங்க? இனிம அய்யா பார்வயிலப் படாதீங்க, போயிடுங்க'
என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
    வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நாற்பது பேரில் பத்து பேர் வாபஸ் வாங்கிவிட்டார்கள். பத்து பேருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. நாங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். கிராமங்களில் எல்லா வீடுகளுக்கும் இலவசமாகக் குடம் கொடுத்தோம். பெண்களுக்குப் புடவை கொடுத்தோம். திரை கட்டி எங்கள் கட்சி நடிகர்கள் நடித்த படங்களைப் போட்டோம். ஆண்களுக்கு வேண்டிய அளவு சரக்கு வாங்கிக் கொடுத்தோம். திக்கு திசையெல்லாம் எங்கள் கொடியைப் பறக்க விட்டோம். மூலைமுடுக்கு விடாமல் போஸ்டர் ஒட்டினோம். பிரதான எதிர்க்கட்சியும் எங்களுக்குப் போட்டியாக மக்களை விழுந்துவிழுந்து கவனித்துக்கொண்டார்கள். இதற்கிடையில் மாமா நடந்தும் பேருந்தில் சென்றும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் மேல் இரக்கப்பட்டு பிற கட்சிக்காரர்கள் டீ, சாப்பாடு என்று வாங்கிக்கொடுப்பதும் உண்டு. இந்த நேரத்தில் மாமா ஒரு வேலை செய்தார். அய்யாவுக்காக ஒட்டிய போஸ்டரில் எல்லாம் இரவோடு இரவாக 'உங்கள் ஒட்டு பெ. சுந்தரேசனுக்கே' என்று இருப்பதை மட்டும் வைத்துவிட்டு சுற்றி உள்ள எங்கள் கட்சிச் சின்னம், எங்கள் தலைவர் புகைப்படம் போன்றவற்றைக் கோடு போட்டதுபோல் கிழித்து எறிந்துவிட்டார். பார்ப்பவர்களுக்கு 'உங்கள் ஓட்டு பெ. சுந்தரேசனுக்கே' என்பது மட்டும்தான் தெரியும். வேட்பாளர்மீது கைவைத்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால் அவரை அய்யா கடுமையாக மிரட்டிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.
    பிரச்சாரமெல்லாம் முடிந்து தேர்தல் நாள் வந்தது. எங்கள் பூத்துக்கு எதிரே மரத்தடியில் மாமா நாற்காலி போட்டுக்கொண்டு, வருகிறவர்களுக்கெல்லாம் வணக்கம் வைத்து 'ஜன்னல்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய சின்னம் ஜன்னல். அவ்வப்போது நம் பூத்துக்கு வந்து டீ, காபி குடித்துக்கொண்டிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஓட்டு போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். தலை நிறைய எண்ணெய் தடவிக்கொண்டு வந்திருந்ததால் ஓட்டுப் போட்டு முடித்தவுடன் அவர்கள் விரலைத் தலையில் தடவி மையை அழித்துவிட்டார்கள். அவர்களுக்கு எங்கள் சொந்த ஊரிலும் ஓட்டு இருப்பதால் பணத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டேன்.
    நாங்கள் கார் மூலமாக, தெரிந்தவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்துகொண்டிருந்தோம். கள்ள ஓட்டும் தாராளமாகப் போய்க்கொண்டிருந்தது. புண்ணியகுடி ஐயப்பன் வந்தான்.
'என்னண்ணே ஏதாவது ஓட்டு போடணுமா?' என்று கேட்டான்.
'இன்னம் கொஞ்சம் சத்தமாக் கேளேன், கம்னட்டி கம்னட்டி' என்று திட்டிவிட்டு யாருடைய ஒட்டைப் போடச் சொல்லாம் என்று யோசித்தேன். பொதுவாக ஊரில் இல்லாதவர்களுடைய ஓட்டை அவர்களுடைய வீட்டினருடைய சம்மதத்துடனும் சம்மதமில்லாமலும் நாங்கள் ஆட்களை வைத்துப்போடுவோம். பக்கத்து வீட்டு செல்வம் கேரளா போய் இரண்டு வருடங்கள் ஆகியும் வரவில்லை. அவனுடைய வீட்டுக்காரர்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். சரி, அந்த ஓட்டையே போடச் சொல்லலாம் என்று விவரங்களைக் கொடுத்து அவனை அனுப்பினேன். கொஞ்ச நேரத்தில் ஆள் வந்தது, ஐயப்பன் மாட்டிக்கொண்டுவிட்டான் என்று. அவனை எப்படி மீட்டு வருவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மாமா என்னை நோக்கி வந்தார்.
'என்ன மாப்புள்ள ஐயப்பன் மாட்டிக்கிட்டானா?' என்று கேட்டார்.
'ஆமாம் மாமா, நீங்க போயி எப்புடியாச்சும் அவனக் கூட்டிக்கிட்டு வர்றீங்களா, ஒங்களுக்கு இல்லாத செல்வாக்கா?' என்று கேட்டேன்.
'என்ன மாப்புள்ள இப்புடிச் சொல்லிப்புட்ட, சுப்ரீம் கோர்ட்டாருந்தாலும் மீட்டுக்கிட்டு வந்துவருன் நான், அப்பேர்ப்பட்ட வாய் நம்மளுது' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மாமா.
    சற்று நேரத்தில் ஐயப்பனுடன் வந்தார்.
'என்ன மாமா பண்ணீங்க' என்று கேட்டேன்.
'அதான் சொன்னன்ல மாப்புள்ள சுப்ரீம் கோர்ட்டாருந்தாலும் நம்மகிட்ட நிக்க முடியாதுன்னு. நேராப் போனன். வெண்ணத் திருடுன கள்ளனாட்டம் முழிச்சிகிட்டு எஸ்பி பக்கத்துல இவன் நின்னுட்டுருந்தான். போய் என்னான்னு கேட்டேன், செல்வம் பேருல கள்ள ஓட்டு போட வந்தான், ஆனா செல்வத்தோட அப்பா அவன் ஊர்ல இல்லன்னு அப்பத்தான் எழுதிக்குடுத்துட்டுப் போயிருந்ததால மாட்டிக்கிட்டான்னு சொன்னாங்க. எஸ்பி புடியிலருந்து புடிச்சு இழுத்து இவன் பொடரியில பொளேர்னு ஒன்னு வச்சு, கள்ள ஓட்டா போடுற நாசுவாரி, என் கண்ணு முன்னாடி நிக்காத, ஓடுறா நாயேன்னன் ஓடிட்டான். எஸ்பி ஏண்ணே தொரத்தி வுட்டுட்டீங்க, அவன்மேல கேசப் போட்டு உள்ளத் தள்ளுணும்னு புடிச்சுவச்சிருந்தேன்னான். கள்ள ஓட்டுப் போட வந்த நாய எல்லாம் புடிச்சு உள்ள வச்சா, அடிக்கடி சிறைக்குப் போற என்ன மாதிரி போராளிக்கில்லாம் என்ன மதிப்பு அப்புடின்னு கேட்டேன். எஸ்பி வாய மூடிக்கிட்டான்' என்றார்.
    'அதுக்குதான் ஒங்கள அனுப்புனது மாமா. அது இருக்கட்டும் நீங்க ஓட்டுப்போடப் போகல?' என்று கேட்டேன்.
    'ஆத்துத்தண்ணியா மாப்புள அடிச்சுகிட்டுப் போறதுக்கு, கெணத்துத்தண்ணிதான. அதான் சாயங்காலம் போட்டுக்கலாம்னு இருக்கன். மொதல்ல மக்கள் ஓட்டுபோடட்டும்' என்றார்.
    சாயங்காலம் ஓட்டுப் போடச் சென்றவர் வாக்குச்சாவடியில் விவரங்களைச் சொல்லிவிட்டு விரலில் மை வாங்கிவிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு முத்திரையிடுவதற்காகத் தனியாகப் போய் நின்று வாக்குச்சீட்டைப் பிரித்துப்பார்த்தார். வாக்குச்சீட்டில் அய்யாவுக்கு இரண்டாவது இடத்தையும் மாமாவுக்குக் கடைசி இடத்தையும் கொடுத்திருந்தார்கள். வாக்குச் சீட்டில் தன் பெயரைப் பார்த்ததுமே மாமாவுக்கு ஒரு கணம் தலை சுற்றிவிட்டது. அவர் கண் முன்னே வயலில் கோவணம் கட்டிக்கொண்டு உழுத அவருடைய அப்பா, தாத்தா என்று பரம்பரை முழுவதும் வந்து நின்றார்கள். கண்களில் பளுக்கென்று நீர் சுரந்தது. எப்படியும் லட்சம் வாக்குச் சீட்டுக்களில் தன் பெயர் அடித்திருப்பார்கள் அல்லவா என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. நம் பரம்பரையில் யாராவது இப்படிச் சாதித்திருக்கிறார்களா என்று பெருமிதம் தோன்ற, வாக்குச் சீட்டில் முத்திரையிட்டு அதனை வாக்குப் பெட்டியில் போடுவதுபோல் பாவ்லா செய்துவிட்டு எப்படியோ அதனை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
    வந்து நேராக என்னிடம் காட்டினார். அதை என்னிடம் அவர் காட்டியபோது அவருக்குக் கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்டியது, தேம்ப ஆரம்பித்தார்.
'என்ன மாமா இப்புடி லூசாட்டம் பண்ணிட்டு வந்து நிக்குறீங்க' என்று கேட்டன்.
மாமாவால் எதையும் பேச முடியவில்லை. தேம்பிக்கொண்டிருந்தார்.
    மூன்று நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதுபோல அய்யாவுக்கே வெற்றி. ஆனால் மாமா! அதுதான் பெரிய பரிதாபம். ஒரே ஒரு ஓட்டுதான் வாங்கியிருந்தார். மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் அவருடைய புகைப்படத்தைப் போட்டு 'ஒரே ஒரு ஓட்டு வாங்கி சாதனை' என்று போட்டிருந்தார்கள். வெற்றி பெற்ற அய்யா புகைப்படத்தைக்கூட அவ்வளவு பெரிதாகப் போடவில்லை. அதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், அந்தப் பகுதிக்கு வந்த தினத்தந்தியை மாமா ஒட்டுமொத்தமாக வாங்கி எல்லாருக்கும் இலவசமாகக் கொடுத்தார். தன் புகைப்படத்தைக் காட்டிக் காட்டி அதைக் கொடுத்தார்.
    அவர் மனது சங்கடப்படும் என்று நினைத்து ஓரிரு நாள் அவரைப் பார்க்காமலே இருந்தேன். பிறகு அவரிடம் மாட்டிக்கொண்டேன்.
அவர் என்னிடம் கேட்டார், 'மாப்புள்ள எனக்கு என்ன சந்தேகம்னா, தவறுதலாக் கூட பத்து பதினஞ்சு ஓட்டு கூட எப்புடி வுழுவாமப் போச்சு? ஒருவேள சீட்டுல கடசியா எம் பேரு இருந்தது காரணமா இருக்குமோ?' என்று கேட்டார்.
'இருக்கலாம் மாமா' என்றேன் நான் தர்மசங்கடத்துடன்.
'ஆமாம் மாப்புள்ள, நாந்தான் சீட்ட எடுத்துட்டு வந்துட்டேனே, அப்பறம் யாரு மாப்புள எனக்கு ஓட்டு போட்டுருப்பா?' என்று கேட்டார்.
அவரைச் சந்தோஷப்படுத்துவதற்காக 'நாந்தான் போட்டன் மாமா' என்றேன்.
'ஏய் புளுவாத மாப்புள'
'ஒப்புராண, நாந்தான் போட்டன் மாமா'
மாமா நம்பிவிட்டார். 'அப்புடியா மாப்புள' என்று என்னை அப்படியே கட்டிக்கொண்டார்.
என்னைக் கையோடு ஒயின் ஷாப்புக்குக் கூட்டிக்கொண்டுபோய், சரக்கு வாங்கிக்கொடுத்து, குடித்துக்கொண்டிருக்கும்போது என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தெல்லாம் அமர்க்களப்படுத்திவிட்டார்.
    அதற்கப்புறம் என்னிடம் கேட்ட கேள்வியைப் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் எல்லாரும் தாங்கள்தான் ஓட்டுப் போட்டதாகச் சொல்ல மாமாவுக்கு ஒரே குழப்பம். என்னுடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது. இருந்தாலும் சாவதற்குள் தனக்கு ஓட்டுப்போட்ட ஆளைக் கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்.
    இன்னொருமுறை அவரிடம் மாட்டிக்கொண்டபோது அவர் என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்றார். அங்கே கூடத்தில் புதிதாக மாட்டப்பட்டிருந்த, பெரிய புகைப்படம் ஒன்றை என்னிடம் காட்டினார்.
    அது வாக்குப் பெட்டியில் போடாமல் மாமா எடுத்துக்கொண்டு வந்த வாக்குச்சீட்டை பிரேம் செய்த புகைப்படம்.

No comments:

Post a Comment