Friday, March 8, 2024

தமிழ்ச் சமூகம் என்ற simulacrum - சாரு நிவேதிதா


(என்னுடைய ‘
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ கதை குறித்து சாரு நிவேதிதா தன் தளத்தில் எழுதிய அறிமுகம் இது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி - ஆசை)


Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று.

சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள தத்துவம் எனக்குக் கிடைத்த ஒரு ஆதாரமான கருவி. தத்துவம் இல்லையேல் நான் ஒரு வெட்டி எழுத்தாளனாக ஆகியிருப்பேன்.

ஆனால் தத்துவத்தின் துணையின்றியே சிருஷ்டிகரத்துவத்தின் உச்சம் தொட்ட போர்ஹேஸ் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நான் மறக்க மாட்டேன்.

போர்ஹேஸிடமிருந்துதான் பல பின்நவீனத்துவக் கோட்பாடுகளைப் பெற்றதாக ஜாக் தெரிதா போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நான் தத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வது எனக்கு மட்டும்தான். என் அமைப்பு அப்படி. மற்றவர்களுக்கும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், இங்கே எண்பதுகளில் தத்துவம் மற்றும் கோட்பாடுகள் பற்றிப் பேசிய அனைவருமே இலக்கியம் பற்றி எதுவுமே தெரியாத மொண்ணைகளாக இருந்தார்கள். ஏதேதோ ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகள் பற்றி நாலு மணி நேரம் பேசுவார்கள். கடைசியில் வைரமுத்து பாடலை உலகத் தரம் என்பார்கள். இவர்கள் சொல்லும் தத்துவத்தை எவன் நம்புவான்? தத்துவமே தேவையில்லை என்று சொல்லிவிட்டுப் போய் விடுவான்.

தத்துவம் தேவையில்லை என்று சொல்பவர்கள் பெரும்பாலும் இங்கே testimony literatureஐ மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். எது டெஸ்டிமனி இலக்கியம்? ஒருவர் நாலு ஆண்டுகள் நிலவறைக் கொட்டடியில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மீண்டு வந்து அவர் தன் அனுபவங்களை எழுதினால் அது டெஸ்டிமனி லிட்ரேச்சர். டெஸ்டிமனி லிட்ரேச்சர் உங்களைக் கண்ணீர் விட வைக்கும். திருடன் மணியன் பிள்ளை சுயசரிதை என்றாலும் அதுவும் டெஸ்டிமனி இலக்கியம்தான்.

ஆனால் டெஸ்டிமனி இலக்கியம் என்பது இலக்கியத்தில் கீழ்ப் படிநிலையில் இருப்பதுதான். அந்த அனுபவத்தைச் சொல்லி முடித்து விட்டால் அதோடு அவரது எழுத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.

ஒரு புதிய வாசகர் கேட்கலாம். ஜான் ஜெனேயும், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியும் தம் அனுபவங்களைத்தானே எழுதினார்கள்? அது டெஸ்டிமனி இலக்கியம் இல்லையா?

இல்லை. ஏனென்றால், அவர்கள் தம் அனுபவத்தைப் பொதுமைப்படுத்தி விட்டார்கள். தம்மையே அவர்கள் otherஆகப் பார்த்தார்கள். இலக்கிய நுண்மைகளையும், சிருஷ்டிகரத்தின் உச்சங்களையும், தாம் கண்ட தர்சனங்களையும் கொண்டு ஆகச் சிறந்த படைப்புகளை உருவாக்கினார்கள்.

தமிழில் சமகாலத்தில் எழுதப்படும் பெரும்பாலான படைப்புகள் டெஸ்டிமனி இலக்கியத்தில்தான் சேரும்.

அந்தத் தடையைத் தாண்ட வேண்டுமானால் உங்களுக்கு தத்துவம் தேவை. ஆனால் தர்சனமும் கனவும் ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும் இருந்தால் தத்துவம் தேவையில்லை. கவிஞர் ஆசை ஜான் பொத்ரியாவைப் படித்ததில்லை. அவருக்கு சிமுலாக்ரம் என்ற கோட்பாடு பரிச்சயம் இல்லை. ஆனால் அந்தக் கோட்பாட்டை அடியொற்றி ஒரு உலகத் தரமான சிறுகதையை எழுதியிருக்கிறார்.

Simulacrum என்றால் என்ன? ஜான் பொத்ரியா சொல்கிறார்: It is no longer a question of imitation, nor duplication, nor even parody. It is a question of substituting the signs of the real for the real.

ஆசையின் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் சிறுகதையைப் படித்தால் simulacrum பற்றியும், தமிழ்ச் சமூகத்தின் இயல்பு பற்றியும் புரிந்து கொள்ளலாம்.

கதையின் லிங்க்:

ஆசை: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – புதிய சிறுகதை (writerasai.blogspot.com)

**

சாரு நிவேதிதா தளத்தில் இந்த அறிமுகத்துக்கான லிங்க்: தமிழ்ச் சமூகம் என்ற simulacrum


No comments:

Post a Comment