Thursday, March 7, 2024

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - புதிய சிறுகதை

நன்றி: wiki commons, வடிவமைப்பு: கே.சதீஷ்

ந்தக் கதையில் வரும் மனிதரை நான் சந்தித்தது 23 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது இந்தக் கதையை நான் எழுதியிருந்தால் அந்த அனுபவத்தின் மீதான, அந்த மனிதரின் மீதான, என் நினைவு மீதான நம்பிக்கை எனக்கு முழுதாக இருந்திருக்கும். இப்போது எனக்கு வெறும் குழப்பம் மட்டுமே மிஞ்சுவதால், தெளிவையல்ல குழப்பத்தையே என் வாசகர்களுக்கு நான் தர விரும்புவதால் இப்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதனை எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். எந்த அளவுக்கு நீங்கள் என்னை நம்பவில்லையோ அந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சி.

என்னை அறிந்த பலருக்கும் தெரியும், மன்னார்குடியிலிருந்து சென்னைக்குப் படிக்க வந்தவன் நான். இங்கே வந்த ஆண்டு 2001. அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலம் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கல்லூரியில் ஏதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியரைக் கவனிக்காமல், தெளிவாகத் தெரியும் வங்காள விரிகுடாவை அங்கிருந்தே பார்த்துக்கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். கூடுதலாக, அருகிலுள்ள விக்டோரியா விடுதியிலிருந்தும் காலையோ மாலையோ கடற்கரைக்கு வந்து சிறிது உலவலாம், உட்கார்ந்து காற்றுவாங்கலாம். மாநிலக் கல்லூரி, விக்டோரியா விடுதி இரண்டும் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்கள் என்பதால் அங்கே நடப்பதெல்லாம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்றும் நான் ஷேக்ஸ்பியர் காலத்துப் பார்வையாளன் என்றும் கற்பனை செய்துகொள்வேன்.

அப்படித்தான் ஒருநாள் ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து வெளியேறி விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு மாலையில் கடற்கரை சென்றேன்.

அங்கே மங்கிய ஒளியில் யாரும் உட்கார்ந்திராத ஒரு சிமெண்ட் பெஞ்ச் தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். இன்னொருவரும் அதை நோக்கி வருவது தெரிந்தது. நான் முந்தினால் அவர் வேறு திசைக்குச் சென்றுவிடுவார் என்று என் வேகத்தை அதிகரித்து அங்கே சென்று அமர்ந்தேன். அவர் தன் வேகத்தை அதிகரிக்கவில்லை, திசையையும் மாற்றவில்லை. நேரே இங்கேதான் வந்தார், அமர்ந்தார். எழுபது வயது மதிக்கத் தகுந்த முதியவர். என்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் உணர்ந்தேன், அவர் வந்தது சிமெண்ட் பெஞ்சை நோக்கியல்ல என்னை நோக்கியென்று. எப்படியோ நான் புறப்படும்போதே என் இலக்கு அவருக்குத் தெரிந்திருக்கிறது. தன் கதையை அவர் சொல்லிவிடுவாரோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தபோதே பேச ஆரம்பித்துவிட்டார்.

“ஏன் தம்பி ஒருமாதிரி நடுக்கத்தோட இருக்கிற மாதிரி இருக்கு. இந்த பீச்சுல அதலாம் கூடாது. ஃப்ரீயா உட்காருங்க. என்னை எங்கேயே பார்த்த மாதிரி இருந்திருக்கும், அதனாலதானே நடுக்கம். எனக்கும் இந்தக் கடற்கரையைப் பார்த்தா அப்படியொரு நடுக்கம்தான் வரும். ஆனா, இருவத்திரெண்டு வருஷமா இங்கேயேதான் இருக்கேன். உண்மையிலேயே நமக்குத் தெரியாத விசயங்களைப் பார்த்து நமக்கு நடுக்கம் கெடையாது. தெரிஞ்ச விசயங்களைப் பார்த்துதான் நடுக்கம். இல்லைன்னா தெரியாததுக்குள்ளேயும் தெரிஞ்சது ஏதாவது இருக்குமோன்னு நடுக்கம்” என்றார்.

“இல்லை, அதெல்லாம் இல்ல. சும்மாதான் உட்கார்ந்திருக்கேன். நான் கொஞ்சம் தனிமை விரும்பி அதான்” என்று சூசகமாகச் சொல்லிப் பார்த்தேன். ஏனென்றால் அவர் இருபத்திரண்டு ஆண்டுகளாக ஏதோ கதை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றும் அதற்கு இன்று என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்றும் எனக்குத் தோன்றியது.

“தம்பி உங்களைப் பார்த்தா இந்த ஊர் மாதிரி தெரியலையே” என்று கேட்டார்.

“ஆமாம், நான் தஞ்சாவூர் பக்கம்”

“அட நம்ம ஊர் பக்கம். அதான் எனக்கு சட்டுன்னு பேசணும்னு தோணிருக்கு. நானும் அந்தத் திக்குதான். ஆனா, இப்போ அப்படிச் சொல்ல முடியுமான்னு தெரியலை” என்று இழுத்தார்.

“ஏன்…” என்று கேட்க ஆரம்பித்துப் பின் வம்படியாக மாட்டிக்கொள்வதற்கு நானே வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன் என்று தோன்றியது.

“ஊர்லேருந்து தொலைஞ்சு வந்துடலாம் சரி. ஊரே தொலைஞ்சிடுச்சு தம்பி. சொன்னா நம்ப மாட்டீங்க” என்றார்.

இனி அவர் விட மாட்டார் என்பதாலும் எதிர்காலத்தில் அவர் ஏதோ விதத்தில் பயன்படுவார் என்று என் உள்ளுணர்வு கூறியதாலும் “அதெல்லாம் பிரச்சினை இல்லை, சொல்லுங்க” என்றேன்.

இப்போது வசமாக என் பக்கம் திரும்பி உட்கார்ந்துகொண்டார். இனி கதை அவர் குரலில்.

**

தஞ்சாவூர்ப் பக்கம் உள்ள தன்னரசு நாடுகளைச் சேர்ந்தது நம்ம கிராமம் தம்பி. அங்க அரசாங்கம், போலீஸு எல்லாம் கொஞ்சமாத்தான் எட்டிப்பார்க்க முடியும். நான் சொல்ற கதை எப்போ ஆரம்பிச்சிச்சின்னு எனக்கே தெரியாது. எனக்கு நிஹா தெரிஞ்சதிலருந்து உள்ள கதையைத்தான் என்னால சொல்ல முடியும்.

எங்க ஊருல ஒரு ராசா இருந்தாரு. அவரை ஜமீனு அளவுல பின்னாடி குறுக்கிட்டதா பேசிக்கிட்டாலும் அவரு ராசாதான். ராசபரம்பரைதான். அவங்க அப்பாரைல்லாம் நான் பார்த்திருக்கேன். வேட்டைக்குத் துப்பாக்கியைத் தூக்கிட்டுப் பரிவாரங்களோடப் போவாரு. நான் பெரியவனான காலங்கிறது ராசா மவன் சின்ன ராசாவோட காலம். பெரிய ராசா போனப்புறம் இவரை யாரும் சின்ன ராசான்னு கூப்புடுறது இல்லை. ராசான்னுதான் கூப்புடுவோம்.

இந்த ராசா காலத்துல அவரோட அதிகாரத்துக்குக் கீழ இருந்த கிராமங்கள்லாம் அடியோட மாறுனுச்சு. அதுக்குக் காரணம் அவர் கட்டின தியேட்டர்தான் தம்பி. எங்க ஊர்ல நடந்தது இந்த உலகத்துல வேற எங்கேயேயும் நடந்துருக்க வாய்ப்பே இல்லை. அதுக்கும் காரணாம் அந்த தியேட்டர்தான்.

எங்க ஊர்ல அவர் கட்டின தியேட்டர்ல ரெண்டு ஆட்டம்னா ராத்திரி ஆட்டத்தை ஊர்க்காரங்கள்ல நான் சொல்லப்போற விஷயத்தோட சம்பந்தப்பட்டவங்களை மட்டும் ஒரு வாரம் திரும்பத் திரும்பப் பார்க்க வைப்பாரு ராசா. காசு வாங்காமத்தான். அதுக்கு அப்புறம் ஒரு வாரமோ ஒரு மாசமோ, ராசாவுக்குப் புடிச்ச படம் வர்ற வரைக்குமோ அந்த கிராமமே அந்தப் படமா மாறிடும்.

என்ன புரியலையா தம்பி? படத்தில பார்த்ததெல்லாம் நிஜத்துல வரிசையா நடிப்போம். நடிப்போன்னு சொல்லக் கூடாது. வாழுவோம். தெனைக்கும் ஒரு ரீலு நடிப்போம். எம்.சி.ஆர். வேசத்துக்கு ஒரு ஆளு, சிவாசி வேசத்துக்கு ஒரு ஆளு, ஜெய்சங்கர், சிவகுமார், அசோகன், நம்பியார், நாகேசு, பாலையா, ரங்காராவு அப்படின்னு அத்தனை வேசங்களுக்கும் சுத்துப்பட்டுக் கிராமத்துல ஆட்களை ராசா உருவாக்கி வைச்சிருந்தாரு. சாவித்திரி, சரோசா தேவி, கே.ஆர். விசயா, தேவிகா, மனோகரம்மான்னு நடிகைகளுக்கும் பொண்ணுகளைத் தயார்பண்ணி வச்சிருந்தாரு.

படம் எங்கே நடக்கும்னு கேக்குறீங்களா? ஒரு காட்சி எந்த இடத்துல படத்துல வருதோ அதே மாதிரியான இடத்துலதான் தம்பி எங்க படம் நடக்கும். உரிமைக்குரல் படத்துல கல்யாண வளையோசை கொண்டு பாட்டைப் பார்த்திருப்பீங்க. தலைமேல எம்சியாருக்கு சாப்பாட்டுக் கூடை, இலையெல்லாம் வச்சிக்கிட்டு லதா நடந்து வருவால்ல. அதே மாதிரி எங்க ஊரு லதாவும் ஒரு வயவரப்புல சாப்பாட்டுக் கூடை, இலையெல்லாம் வச்சிக்கிட்டு வாயசைக்கிக்கிட்டு வருவா. பக்கத்துல ஸ்பீக்கர் செட்டுல பாட்டு ஓடும். பொன்னொன்று கண்டேன் பூவங்கு இல்லை பாட்டுன்னா ஆத்துல சிவாசி மாதிரியும் பாலாசி மாதிரியும் ரெண்டு பேரும் நீந்திக்கிட்டே வருவாங்க. கூடுமான வரைக்கும் படத்துல இருக்குற மாதிரி இடங்களை அங்கக்குள்ளே தேடிக்கண்டுபிடிச்சு ராசா எங்களை நடிக்க வைப்பாரு. ஏதாவது ராசா வர்ற மாதிரி கௌரவ ரோலு இருந்துச்சுன்னா மட்டும் ராசாவும் நடிப்பாரு.

படங்களுக்காக ரயில்வே டேசன் செட்டு, சின்னதா ஏரோப்பிளேன் டேசன், பஸ்டாண்டு செட்டு இதெல்லாம் ராசா நெரந்தரமா போட்டாரு. பீச்சுக்குப் பிரச்சினை இல்லை. ஏரி இருந்துச்சு. கரையில நல்லா மணலை கொட்டிவுட்டுட்டாரு. அங்கேதான் எண்ணிரண்டு பதினாறு பாட்டை சிவாசி பாடுவாரு. அதே ஏரி அமைதியான நதியினிலே பாட்டுல ஆறாவும் நடிக்கும். ஏரோப்பிளேன் டேசன் செட்டுலதான் உலகம் சுற்றும் வாலிபன்ல கடைசியா எம்.சி.ஆரு. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு லதாவோடயும் இன்னொருத்தியோடயும் போற சீனு. பஸ்ஸு ரயிலு ஏரோப்பிளேனு இதெல்லாம் உண்மையில வரலைன்னாலும் அவரால ஊரே ரொம்ப மாடர்னா ஆச்சு தம்பி. சும்மா சொல்லக் கூடாது, ரொம்பவும் தன்னிறைவோடதான் இருந்தோம்.

ஒரு பக்கம் எங்க ராசா எங்களை நல்லா பார்த்துக்கிட்டாலும் சமயத்துல ஈரோயினிகளைத் தூக்கிட்டுப் போயிடுவாரு. அவரு தூக்கிட்டுப் போனாரா, அவரைச் சொல்லிக்கிட்டு அவரு ஆளுங்க தூக்கிக்கிட்டுப் போனானுங்களான்னு தெரியலை தம்பி. உசுரோட திரும்ப அனுப்புனா போதும்னு நம்ப பொண்ணுங்க திரும்பி வரும். கை கழுத்துல ஏதாச்சும் நகை புதுசாக் கிடந்துச்சுன்னா ராசா வேலைன்னும் ஏதும் இல்லைன்னா ராசாவோட ஆளுங்க வேலைன்னும் நெனைச்சுக்கிட வேண்டியதுதான். ஆனா, கல்லுக்கொறத்திங்க அவளுக, வாயைத் தொறக்க மாட்டாளுக. அது மட்டுமில்லாம யாரும் வெளியூருக்குப் பொழைப்புக்காகவோ படிப்புக்காகவோ போக முடியாது தம்பி. சாயங்காலத்துக்குள்ள திரும்பலைன்னா மறுநாளு நம்ம வீட்டுல ஏதாவது கெட்டது நடந்திருக்கும். ஆனா ராசா மட்டும் சகல உலகத்துக்கும் சுத்திவந்துடுவாரு.

இதுல எங்களுக்குப் பெரிய பிரச்சினை என்னன்னா தம்பி எங்களுக்குச் சொந்தமா பேர்களே கிடையாது. ‘’தங்கப்பதக்கம்’ படத்தில ஒருத்தர் நடிக்கிறாருன்னா. அவர் ஒரு நாள் முழுக்க ‘என் பேரு எஸ்.பி.சௌத்ரி என் பேரு எஸ்.பி.சௌத்ரி’ அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கணும். அடுத்த படம் வர்றப்போ அடுத்த பேரு. பொறந்தப்ப ஒரு பேரு வச்சிருப்பாங்கதான், அதுவும் ஏதாவது சினிமா கதாநாயகன் பேரோ, சினிமாக் கதாபாத்திரம் பேரோ இருக்கும். அதுவும் காலப்போக்குல மறந்திருக்கும். எங்களுக்குன்னு நிலையா சாமி கிடையாது, குலதெய்வம் கிடையாது. ஒரு வாரம் நான் இந்து இன்னொரு வாரம் முஸ்லீமு அடுத்த வாரம் கிறிஸ்டீனு. எங்களுக்கு என்ன வரலாறுன்னே தெரியாது. பூர்வீகம் எதுனே தெரியாது தம்பி. நாளடைவுல சினிமாவுக்குள்ளேயே பொறந்துருக்கோமோன்னு சந்தேகம் வந்துடுச்சு.

பெரிய ராசா, அவரோட அப்பாரு, முப்பாட்டனார் காலத்திலருந்து இப்படித்தான் தம்பி. பெரிய ராசா பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, தியாகராச பாகவதர் இவங்களோட ரசிகர். ராசப் பரம்பரையில எல்லாரும் நாடகத்தை வச்சுப் பண்ணுனத இந்த ராசா சினிமாவ வச்சுப் பண்ணினாரு. எங்களை மீட்குறதுக்கு யாரும் வர மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தோம் தம்பி. யாருமே வரலை.

இப்பிடி இருக்கப்பதான் எம்.சி.ஆரு., சிவாசி காலமெல்லாம் கொஞ்சம் ஓஞ்சிபோயி கமலு, ரசினின்னு சின்னப் பசங்க வர ஆரம்பிச்சாங்க. எம்.ஜி.ஆரும் முதலமைச்சரா ஆயிட்டாரு இனிமே படம் நடிக்க மாட்டாருன்னு சொன்னாங்க. கடைசியா எங்க ஊர்ல எடுத்த எம்.சி.ஆர் படம், நாங்க நடிச்ச எம்.சி.ஆர். படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்தான். நான்தான் தம்பி எங்க ஊர்ல ‘அன்பே வா’வுலருந்து எம்.சி.ஆர். ‘நீரும் நெருப்பும்’ மாதிரி டபுள் ஆக்டிங்குல மட்டும் எம்.சி.ஆர் போட்டாவ ஒருத்தன் முகத்துல கட்டிக்கிட்டு நடிப்பான். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்னையும் ஒரு வகையில மீட்டுச்சுன்னுதான் சொல்லணும். அதுவரைக்கும் எம்.சி.ஆரா வாழ்ந்துட்டதால எனக்கு வேறெந்த கேரக்டரும் ராசா அதுக்கு அப்புறம் கொடுக்கலை. எம்.சி.ஆருக்கு சைடு ரோலு கௌரவப் பாத்திரம்லாம் கொடுக்க முடியாதுல்ல. அதுனால படம் நடக்கிறப்ப கூடமாட ஒத்தாசையா என்னை ராசா இருக்கச் சொன்னாரு. மத்த நேரத்துல வய வேலைங்க அது இதுன்னு இருக்கும்.

கொஞ்சகொஞ்சமா எங்க ஊர்ல கமலு ரசினியெல்லாம் உருவாக ஆரம்பிச்சாங்க தம்பி. சீதெவி மாதிரி ஒரு பொண்ணு அப்படியே இருக்கும். பதினாறு வயதினிலேயெல்லாம் நடிச்சோம். எங்க ஊர்க்காரங்களுக்கு எம்.சி.ஆர் சிவாசி படத்தையெல்லாம் நடிச்ச மாதிரி அவ்வளவு சுளுவா கமலு ரசினி படத்தெல்லாம் நடிக்க முடியலை தம்பி. அப்புறம் அவங்க படம்லாம் புதுடெக்னாலசியால்லாம் இருந்துச்சா ராசா தெணறுனாரு. கிராமத்துப் பின்னணி உள்ள படங்களா எடுத்தாரு. சிட்டுக்குருவி மாதிரி ரெண்டும் கலந்ததும் எடுத்தாரு. அவருக்கு செவப்பு ரோசாவை எங்களை வச்சி நடிக்கணும்னு ரொம்ப ஆசை. திரும்பத் திரும்ப எங்களுக்குப் போட்டுக்காட்டுனாரு. எங்களுக்கு வரவே இல்லை. ரொம்பக் கடுப்பாகி அதுல வர்ற கமலஹாசன் இங்கிலீசுல ஏதோ கத்துவாரே அதே மாதிரி திரும்பத் திரும்பக் கத்தினாரு. அப்புறம் செவப்பு ரோசாவை நாங்க நடிக்கவே இல்லை.

எங்களுக்கு விடிவு காலத்தை நாங்களாதான் தேடிக்கணும்னு நாங்க உணர்ந்தோம் தம்பி. அதுக்கு ஏத்தமாதிரி ராசாவும் உதிரிப்பூக்கள்னு ஒரு படத்தை தியேட்டர்ல எடுத்தாரு. ஒரு மாதிரி மெதுவா சோகமா இருக்கு, அது சரிப்பட்டு வராதுன்னு விட்டுட்டாரு போல. ஆனா என் மனசுல ஒரு திட்டம் உருவாச்சு. அன்னையிலருந்து ராசாவுக்குத் தெரியாமல் நாங்க உதிரிப்பூக்கள் படத்தை ஊருக்குள்ள நடிச்சிக்கிட்டு இருந்தோம். திட்டத்தை நிறைவேத்துறதுக்கு நாங்க குறிச்சி வச்ச நாளு வந்துச்சு தம்பி. ராத்திரி நேரத்துல நாங்க எல்லாரும் தீவட்டி ஏந்துக்கிட்டுக் கிளம்பிட்டோம். ராசாவுக்கு நல்லா நீச்சல் தெரியுங்கிறதால உதிரிப்பூக்கள் படத்துல வர்றது மாதிரி செய்ய முடியாதுல. அதுனால நெருப்பை எடுத்துக்கிட்டோம். என்னோட ரெண்டு பசங்க சின்னப் பசங்க. அவனுங்க கூட தீவட்டி ஏந்திக்கிட்டு வந்தானுவோ. ராசா வீட்டு வாசல்ல நின்னப்ப மேலே காவல் காத்துக்கிட்டுருந்த அடியாளுங்கள்லாம் என்ன விஷயம்னு கேட்டானுவோ. ராசாகிட்ட பேசணும் அப்படின்னோம். ராசா தூங்கிக்கிட்டு இருக்காரு நாளைக்குக் காலையில வாங்கன்னானுவோ. இல்லை இப்பவே பேசணும்னு சொன்னதும் பதறிப் போனானுவோ. கொஞ்ச நேரத்துல ராசாவே மேலே வந்தாரு. எல்லா சுச்சியிம் போட்டு லைட்டுல்லாம் பளபளன்னு எரிஞ்சிச்சு. என்னங்கடா இந்த நேரத்துல அப்புடின்னு அதட்டலா கேட்டார். உள்ள வந்து ஒங்க கிட்ட பேசணும் அப்படின்னோம். மொத தடவையா ராசா அப்படிங்கிற வார்த்தை இல்லாம நாங்க பேசுறத ராசாவும் உணர்ந்தாரு எங்களுக்கும் அது இயல்பா வந்துச்சு. அதுதான் ராசாவுக்குப் பயத்தை ஏற்படுத்திருக்கும்போல. பின்னாடி மறைச்சு வச்சிருந்த துப்பாக்கிய எடுத்தாரு. எங்களை நோக்கிக் குறிவைச்சாரு. அதுக்கு முன்னாடி எங்க ஆளுல ஒருத்தன் கையில் வச்சிருந்த கல்லை விட்டெறிஞ்சான் அது ராசா நெத்தியிலப் போய் அடிச்சிது. துப்பாக்கி அந்த உப்பரிகையிலருந்து கீழ விழுந்துச்சு. ராசா உள்ளே ஓடிட்டார். நாங்க வாசக் கதவை உடைச்சிக்கிட்டு உள்ளே பூந்துட்டோம். மேலேருந்து அடியாட்கள்லாம் சுட ஆரம்பிச்சுட்டாங்க. எங்க ஆள்கள்ல ரெண்டு மூணு பேரு அய்யோன்னு கீழயும் விழுந்துட்டானுவோ. அதுக்கு மேலே சுட முடியாதமாதிரி நாங்க பங்களாக்குள்ள பூந்துட்டோம்.

கரண்டு, ஃபோனு கனெக்‌ஷன் எல்லாத்தையும் அறுத்துட்டோம். சுத்துப்பட்டு ஊருலயே ஃபோனு கரண்ட்டுல்லாம் உள்ளவரு ராசாதான். அடுத்ததா கதவெல்லாம் தொறக்க முயற்சி பண்ணுனோம். தொறக்க முடியலை தம்பி. எல்லாம் பர்மா தேக்கு. நூறு எரநூறு வருசக் கதவுங்க. அதுனால எல்லாரும் மாடி வழியா ஏறி உள்ளே போற வழியைக் கண்டுபிடிச்சு உள்ளே போனோம். இவ்வளவு தூரமும் என் பசங்களும் வந்துருக்கானுவோன்னு அப்பத்தான் பாத்தேன் தம்பி. வரட்டும் இல்ல சாகட்டும். பேரு வரலாறு பூர்வம் இல்லாம வாழுறதுக்குச் செத்துப்போகலாம் அப்படின்னு நானும் விட்டுட்டோம். உள்ளே ஒரு இண்டு இடுக்கு விடாம தேடுனோம். எங்கயும் ஆப்புடல.

அப்புறம் ஒரு சந்தேகம். இவ்வளவு செட்டு போடுறவரு ஒரு சுரங்கம் இல்லாமலேயா இருப்பாரு அப்படின்னு. பங்களாவோட அடித்தளத்துக்கு வந்து தேடிப்பார்த்தோம். அங்க நாலு அடியாளுங்க ஒரு பல்லுசக்கரத்தைச் சுத்திக்கிட்டுருந்தாங்க. கீழே குகைவாசல் மாதிரி திறந்து இருந்துச்சு. நாங்க கரண்ட கட் பண்ணுனதால சுச்சி போட முடியாம சக்கரத்தை சுத்தி மூடப் பாத்தவனுவோ எங்களப் பாத்ததும் தெகைச்சிப் போயி நின்னுட்டானுவோ. என்னோட ஓடியாந்தவனுங்க எல்லாரும் ஓன்னு கத்த ஆரம்பிச்சிட்டானுவோ. அது எங்க பாட்டன் முப்பாட்டனெல்லாம் சேர்ந்துகிட்டுக் கத்துன மாதிரி இருந்துச்சு. கீழ ராசா அவரோட குடும்பம் பயலுவோ வப்பாட்டிங்க அடியாளுங்க எல்லாரும் நடுங்கிக்கிட்டு இருந்தாங்க. அது சுரங்கம் மாதிரி இல்லை. பதுங்குற குகை. ராசா துப்பாக்கியால குறிவச்சுக்கிட்டே இருந்தவரு கீழே போட்டுட்டாரு. அவரு துப்பாக்கியக் கீழே போட்டது ஒரு சமிக்ஞை மாதிரியே இருந்துச்சு. அதுக்காகவே காத்திருந்த மாதிரி எல்லாரும் தீப்பந்தங்களை ராசாவைப் பார்த்து எறிஞ்சாங்க. ஒரே அலறல். அதுக்கப்பறம் அந்தத் தீப்பந்தமெல்லாம் நல்லா எரியணும்னு நெனைச்சாங்களோ என்னவோ தெரியலை எல்லாரும் போட்டுருந்த சட்டையெல்லாம் கழட்டி எறிய ஆரம்பிச்சாங்க. நானும் என் பசங்களும் மட்டும்தான் அப்படிச் செய்யலை. அப்புறம் ஹோன்னு ஒவ்வொருத்தனா அந்தப் பதுங்கு குகைக்குள்ள குதிக்க ஆரம்பிச்சானுவோ தம்பி. எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியலை. அவனுங்க குதிக்கிறப்போ வந்த சத்தத்துல அப்படியொரு ஆனந்தம் தம்பி. என் பசங்க கண்ணைப் பொத்திட்டேன். ஊர்க்காரங்க அத்தனை பேரும் குதிச்சிட்டாங்க. போயிடு போயிடு எங்க உசுரெல்லாம் எங்க மூச்செல்லாம் எடுத்துட்டுப் போயி உன் புள்ளைங்களுக்குக் கொடு. நம்ம பூர்வீகம் வரலாறு எல்லாத்தையும் கண்டுபிடி. இல்லன்னா உனக்கு இனிமேயாச்சும் புதுசா ஒரு பூர்வீகம் வரட்டும். அப்படின்னு சொல்லிட்டுக் கடைசியா ஒருத்தன் குதிச்சான்.

எனக்கு ஒண்ணும் புரியலை தம்பி. உதிரிப்பூக்கள் என்னுடைய திட்டமா ராசாவுடைய திட்டமான்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. தன்னோட முடிவும் கிராமத்தோட முடிவும் இப்படி இருக்கணும்னு ராசா திட்டம் போட்டுருக்காரோ. ஒரு கிராமத்தையும் தன் பரம்பரையையும் அழிச்சிக்கிட்டு இப்படி எரிஞ்சிக்கிட்டிருக்காரே அப்படின்னு அங்கேருந்து பசங்களைக் கூட்டிக்கிட்டுக் கெளம்பிட்டேன் தம்பி. நாங்க மூணு பேரும் கையில இருக்குற தீவட்டியால வழியெல்லாம் ஊரை எரிச்சிக்கிட்டே வந்தோம். பஸ்டாண்டு செட்டு, ரயில்வே டேசன் செட்டு, ஏரோப்ளேன் டேசன் செட்டு எல்லாத்தையும் எரிச்சோம். வீடு வயலு தோட்டம் தொரவு எல்லாத்தையும் எரிச்சோம் தம்பி. சொன்னா நம்ப மாட்டீங்க தம்பி ஏரியே எரிய ஆரம்பிச்சுடுச்சு. பெரிய கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி இருந்துச்சு.

அப்புடியே ஓடி வந்துட்டோம். எவ்வளவு தூரம் ஓடுனோம்னு தெரியலை. பசங்க களைச்சுப் போனதும் ஒரு சுமைதாங்கிக்கல்லுல ஒக்காந்தோம். பக்கத்துல பார்த்தா தம்பி உண்மையில நீங்க நம்ப மாட்டீங்க. ஒரு பப்பாளி மரம். இலையே இல்லை. ஆனா, கோயில் கோபுரம் மாதிரி உச்சிலேருந்து தரையில அடித்தண்டு வரைக்கும் பப்பாளி காச்சும் பழுத்தும் தொங்குது. ஒரு கோடி பப்பாளி இருக்கும் தம்பி. ஒவ்வொண்ணும் எவ்வளவு பெரிசு இருக்கும்கிறீங்க. பசங்க பசியோடு இருப்பானுவோன்னு ஒண்ணு பறிச்சுட்டுப் போய் ஒக்காந்தேன். அப்போ டிப்டாப்பா ஒருத்தர் வந்தார். என் கையில இருந்த பப்பாளியைப் புடுங்குனாரு. மரத்துக்கிட்ட போய் பால் வடிஞ்சிக்கிட்டிருந்த காம்புல அதை மறுபடியும் ஒட்ட வைச்சிட்டுப் போயிட்டாரு. என் பசங்க அந்தப் பப்பாளியைப் பாத்துக்கிட்டே தூங்கிட்டானுவோ. நான் விடிய விடிய அந்த மரத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தேன் தம்பி. என் ஊரு இல்லாம இன்னொரு ஊருல அதுதான் தம்பி எனக்கும் என் பசங்களுக்கும் மொத விடியக்காலம்பர. அப்பறம் தட்டுத்தடுமாறிப் பசங்களோட மெட்ராஸு வந்துட்டேன் தம்பி என்று முடித்தார்.

“கேக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. பிரமிப்பாவும் இருக்கு. உங்க பேரு என்ன பெரியவரே?”

“சுந்தரபாண்டியன்தான் தம்பி. கடைசியா எம்.சி.ஆரும் நானும் நடிச்ச படமில்ல. அதே பேரு இருந்து போச்சு. அப்போ எம்.சி.ஆரு அண்ணா என் தெய்வம்னு ஒரு படம் நடிக்க ஆரம்பிச்சாருன்னும் அதைப் பாதியிலேயே விட்டுட்டாருன்னும் பின்னாடி பாக்கியராசு படத்தைப் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கிட்டேன் தம்பி. அந்தப் படம் வந்திருந்து நான் ஊருல இருந்திருந்தா என் பேரு ராசுவா இருந்திருக்கும். பாக்யராசோட அவசர போலீசு பாத்துட்டு நீ நினைச்சா மழையடிக்கணும் கையசச்சா காத்தடிக்கணும் கூடாது இந்தக் கருத்துன்னு பீச்சுல கொஞ்ச நாள் நானும் ஆடிப்பார்த்தேன். எல்லாரும் சிரிச்சாங்க. என்னடா மழை விட்டாலும் தூவானம் விடாதான்னு அதை விட்டுட்டேன்.”

“இங்கேதான் வந்துட்டீங்களே பேரை மாத்திக்க வேண்டியதுதானே.”

“பழக்கதோசத்துல சுந்தரபாண்டியன்னு சொல்லிட்டேன். அப்புறம் அதுவே நிலைச்சிடுச்சு. சரி பசங்களுக்காச்சும் புதுசா பேரு வைக்கலாம்னு ஒருத்தனுக்கு கார்த்தின்னும் ஒருத்தனுக்கு பிரபுன்னும் வச்சேன் தம்பி. பேரு வச்சதுக்குப் பிறகுதான் தம்பி கார்த்தி, பிரபு அப்படின்னு ரெண்டு பேரு நடிக்க வரானுவோ. எத்தனையோ சிவாசி படம் முத்துராமன் படம்லாம் ஊருல நடிச்சிருக்கோம். ஆனா அவங்க புள்ளைங்க பேரு தெரியாம இருந்துருக்கோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன் தம்பி. இனிமே மாத்த முடியாதுல்ல. அப்புடியே விட்டுட்டேன்.”

“அதுக்கப்புறம் ஊர்ப் பக்கம் போய்ப் பாத்தீங்களா” என்று கேட்டேன்.

    “இங்க வந்ததிலேருந்து ஒரே கெட்ட கனவு தம்பி. ஊரே கனவுல பேயா வந்து கேள்விப்பட்டிருக்கீங்களா தம்பி? எனக்கு வருது தம்பி. இங்கே வந்ததுக்கு அப்பறம் ஊரைப் பத்தி நான் எதுவும் கேள்விப்படவே இல்லை. ஒரு ஊரே எரிஞ்சிருக்கு அதைப் பத்தி பேப்பரு கீப்பருன்னு எதுலயும் போடலை போல. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னாலும் டீக்கடை சலூனுலல்லாம் பேப்பரைப் பொரட்டிப் பொரட்டிப் பார்ப்பேன். நம்ம ஊரு படம் போட்டுருக்கா, ராசா படம் போட்டிருக்கான்னு. ஒரு தகவல் இல்லை. அது நடந்து ஒரு பத்து வருசம் கழிச்சு நான் ஊரு பக்கம் போனேன் தம்பி. சூசகமா கவனிங்க ஊரு பக்கம்னுதான் சொன்னேன் ஊருக்குன்னு சொல்லலை. ஏன்னா அங்கே ஊரே இல்லே தம்பி. எனக்கு எங்க ஊரோட எல்லையெல்லாம் நல்லா அத்துப்படி. அந்த எல்லைகள்லாம் ஒண்ணாசேர்ந்து சுருங்கியிருக்கேயொழிய நடுவுல இருந்த ஊரைக் காணோம். எரிஞ்சாலும் அழிஞ்சாலும் மேல சாம்பலும் சிதிலமும் அடியில நிலமும் மிஞ்சுமுல்ல தம்பி. எதுவுமே இல்லை தம்பி. இல்ல கேக்குறேன் ஒரு ஊரே எப்படிக் காணாப் போகும். சுத்துப்பட்டு கிராமத்துல உள்ளவங்க கிட்டல்லாம் நான் கேட்டுப்பாத்தேன். என்னவிட வயசாளிங்க கூட அடங்கொப்புராண அப்படி ஒரு ஊரையோ ராசாவையோ கேள்விப்பட்டதில்லைன்னு சத்தியம் பண்ணுறானுவோ. நான் என் புள்ளைங்களுக்குப் பூர்வீக நிலம்னு எதைக் காமிப்பேன். அவனுங்க தலைமுறை அவனுங்க பூர்வீக நிலமுன்னு எதைத் தேடிவரும். ஒரே பெரக்கனையத்துப் போன மாதிரிதான் தம்பி பல வருஷமா இருக்கேன். ஆனா ஒண்ணு ராசாவோட திட்டம் உதிரிப்பூக்கள் படத்தோட நிக்கலை தம்பி. அதையும் தாண்டித் திட்டம் போட்டுருக்காரு. யாரு கண்டா நெருப்பு எங்க மூணு பேரு கண்ணையும் மறைச்ச பிறகு சுரங்கம் வழியாப் போயி வேறெங்கேயோ வாழ்ந்துக்கிட்டு இருக்காரோ, இல்லை சுரங்கத்துக்கு உள்ளேயே எல்லாரும் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்காங்களோ தெரியலை. நிச்சயம் உள்ள பெரிய செட்டுல்லாம் போட்டு வைக்கக் கூடிய ஆளுதான் அவரு” என்று சொல்லிவிட்டு “ஆனா ஒண்ணு தம்பி எங்க ஊரு சிவாசி, சிவக்குமாரு, செய்சங்கரு, ரசினி, கமலுல்லாம் போனாலும் எம்.சி.ஆர் மட்டும் இருக்காரு பாருங்க. அதுதான் தம்பி காலத்தோட மகிமை” என்றார் தொடர்ந்து விக்கியது போன்ற சிரிப்புடன்.

“கார்த்திக் பிரபுல்லாம் இருக்காங்களே” என்று கேட்டேன். இதைக் கேட்டுவிட்டு அமைதியில் ஆழ்ந்தார். என்ன பதில் சொல்வதென்று யோசிக்கிறாரா, அவர்கள் ஏன் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறாரா என்று தெரியவில்லை.       

அவரிடம் சொல்லிவிட்டு விடுதி நோக்கி நடந்தேன். வழியெல்லாம் ஒரே சிந்தனை. கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக அவர் காலத்தில் இடத்தில் இனி கண்டடைய முடியாத தன் பூர்வீகத்தைக் கதையில் உருவாக்கிக்கொண்டிருக்கிறாரோ?

இப்போது இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கும்போது அந்தப் பெரியவர் உயிரோடு இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தால் தொண்ணூறு வயதுக்கு மேலே இருக்கும். கார்த்திக் பிரபுவுக்கும் ஐம்பது வயது தாண்டியிருக்கலாம். அவர்களோ அவர்களின் எதிர்காலத் தலைமுறையினரோ இலக்கியம் படிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருந்து என் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பும் இருந்தால் அவர்களுக்கு ஒரு பெரும் உதவியாக நான் செய்யவிருப்பது, சொல்ல நினைப்பது இதுதான். உங்கள் பூர்வீக நிலத்தை நிஜமான இடத்தில் தேடி நீங்கள் ஏமாந்துபோக வேண்டாம். அது காலம், இடம் இரண்டிலிருந்தும் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. இதற்கு வேறு உபாயம்தான் உள்ளது. சினிமா பாட்டுப் புத்தகங்களின் பாணியில் சொல்வதென்றால் ‘மீதியை வெள்ளித்திரையில் காண்க’. ஆம், இப்போது கையகலத்துக்கும் வந்துவிட்டது. அதில் நீங்கள் எம்.ஜி.ஆர் படத்தையோ சிவாஜி படத்தையோ பழைய ரஜினி கமல் படத்தையோ பார்க்கும்போது நீங்கள் பார்ப்பது உங்கள் பூர்வீக நிலத்தையும் பூர்வீக நினைவுகளையும் என்று உணருங்கள். ஏதும் இல்லாதவர்களுக்குப் பூர்வீகத்தை அது ஒன்றே அளிக்கிறது.      

          -ஆசை


கீழ்க்கண்ட சிறுகதைகளையும் படிக்கத் தவறாதீர்கள்:

1. கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்?

2. கண்ணதாசனைத் தேடிய மறதி

 

 

 

2 comments:

  1. சிறப்பு

    ReplyDelete
  2. இலக்கியம், அரசியல், இசை, இன்ன பிற கலைகள் ஏதும் அறியாமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று ஓடிக் கொண்டு, தமிழ் சினிமா பார்ப்பது தான் உலகத்தின் உன்னத கலை அனுபவம் என்று பேய் பிடித்து ஆடிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் கதையில் வரும் பெயரே இல்லாத ஊர்
    அழிந்தது போல் தான் அழியும். சோழர்களின் வரலாற்றை ஆயிரத்தில் ஒருவனிலும் பொன்னியின் செல்வனிலும் தேடிக் கொண்டு, அதை அறிவதையே பெருமிதமாக எண்ணிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் மதுரையின் வரலாற்றை சுப்பிரமணியபுரத்திலும் ஜிகர்தண்டாவிலும் தான் தேடும். பின்லேடனைப் போட்டுத் தள்ள ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது கமல் தான் என்று ஆதாரத்துடன் நிறுவும். அற்புதமான கதை. படிக்கும் யாவரும் தற்போதைய மூடர் தமிழ் கூட்டத்தின் எதிர்காலத்தை எண்ணி, ஒரு நொடி நடுங்குரவே செய்வர்.

    ReplyDelete