முந்நூறு
மூவாயிரம் ராமாயணங்களில்
இதுவுமொன்று
மாற்று அண்டத்தில்
மாற்றுக் காலத்தில்
நிகழ்ந்தது
லங்காபுரி ராசாவின்
தர்மபத்தினியை
அயோத்தி ராசாவின்
படையணிகள்
தூக்கிச்சென்று
சிறைவைக்க
ஆங்கே
வெகுண்டெழுந்தாராம்
ராசா
பத்து சிரசுகளின்
இருபது விழிகள்
சினந்துபார்த்த
திசையெலாம்
பற்றியெரிகின்றன
விண்மீனாதிகள்
பதறியொளிகிறார்கள்
தேவாதிதேவ அசுர
கின்னர கிங்கரகணங்கள்
ஆங்கிருந்தே
பிடுங்கியெறிகிறார்
தன்னொவ்வொரு
சிரசாய்
மோதி
பெருநாசம்
ஒளிநாசம்
இமயம் பிடுங்கியதுபோல்
இறுதிச் சிரசைப்
பிய்த்தெறிந்தபோது
மோதி வெடித்துச் சிதறின
முந்நூறு
மூவாயிரம்
ராமாயணங்களின்
அண்டசராசரங்கள்
மிஞ்சியது
ஒற்றைப் பேரோலம்
'ஹே ராவண்'
அவ்வோலம்
இன்னுமொரு
அண்டத்தைப்
பிசைந்தெழுப்பப்
போதுமானதாக
இருந்தது
ராமாயணங்கள் ஏதும்
நிகழாத அண்டம்
திரும்பத் திரும்ப ராமாயணம்
அலுத்துப் போய்விட்டது
லங்காபுரி ராசாவுக்கு
-ஆசை
No comments:
Post a Comment