கொடிமரம்டி என் தங்கம்
என்றார்
கொடிமரம் என்றால்
பூ பூக்குமா
காய் காய்க்குமா
பழம் பழுக்குமா
என்று கேட்டேன்
கண்டிப்பாய் என்றார்
நான் பறித்துக்கொள்ளலாமா
என்று கேட்டேன்
எல்லோரும் பறித்துக்கொள்ள வேண்டுமென்றுதான்
ஊர்ப்பொதுவில் நட்ட மரம்
நான் பிறந்தபோது இல்லை
உனக்கு இருக்கிறது
எவ்வளவு தாத்தா
எவ்வளவு ஆத்தா
இதை நடுவதற்குப்
படாதபாடு பட்டிருக்கிறார்கள் தெரியுமா
என்றார்
ஒரு மரம் நடுவது என்ன
அவ்வளவு பெரிய சிரமமா அப்பா
என்று கேட்டதற்கு
ஆமாம்
மரநிழலில் இளைப்பாறக்கூட
முடியாது என்றபோது
நம் ஒவ்வொருவரும்
சொந்தமாய் நட்டுக்கொள்ள
ஒரு மரம் தந்தார்களே சும்மாவா
மரம் நடுவது சிரமம்தான்
அதைவிடச் சிரமம்
நட்டமரம்
பட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது
அப்போதுதான்
மரம் உனக்குக் கனி தரும்
உனக்கான கனி
எல்லோருக்கும் இனிக்கும்
என்று சொல்லிவிட்டுக் கேட்டார்
உனக்கான கனியை
எல்லோருக்கும் இனிக்கச் செய்வாயா
அப்பா பேசியதும் புரியவில்லை
அதற்கு என்ன பதில் சொல்வதென்றும்
தெரியவில்லை
பேசியது மட்டும்
அழியாமல் நினைவில் இருக்கிறது
அதே மரத்திலிருந்து பறித்து
எல்லோருக்கும் கசப்பின் கனிகள்
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்று
என் வீட்டின் நடுவே
நட்டுவைத்திருக்கிறேன்
அப்பாவின் கேள்வியை
கசப்பிடம் தோற்ற
என் இனிப்பை
என் பிள்ளைகள்
வெல்லச் செய்வார்கள்
- ஆசை
15-08-23
No comments:
Post a Comment